இரண்டு நாள் புகை வண்டிப்பயணத்தில் எல்லோரும் நண்பர்களாகிவிட்டார்கள். எதிர் இருக்கைப்பெண் எனது மனைவியைஅண்ணியென கொண்டாடி அன்னியோன்யமாகினார். சிறுவர்கள் அந்த ரயிபெட்டியை உள்அரங்கம் ஆக்கிக்கொண்டு விளையாடினார்கள். தின்பண்டம் விற்கிறவர் வருகிறவரை பெரியவர்களைத் தொந்தரவு செய்வதில்லை. புனேக்கு முன்னாள் ஏழெட்டுக் குகைப்பாதையில் சந்தோசமான திகிலோடு கடந்துபோனோம் ரயிலிலிருந்து கீழே பார்த்தால் பள்ளத்தாக்கில் உழுது கொண்டிருக்கிற எருமை மாடுகள் எறும்புகள் போலத்தெரிந்தன. சில வயல்களில் மாடுகளுக்குப்பதில் பெண்கள் நுகத்தடி இழுத்துப்போனார்கள். புனே ரயில் நிலையம் தாண்டியதும் அவர்கள் ஒவ்வொரு பெட்டியாய் வந்தார்கள். கைதட்டும் ஓசையோடு கைநீட்டிக் கொண்டே கடந்து வந்தார்கள் எங்கள் பக்கம் வரும்போது நான் பணம் எடுக்கத் தாமதமாகியது அதுவரை எனது அருகில் அமர்ந்து தோளில் கைபோட்டாள் ஒருத்தி. கழிப்பறை சென்று திரும்பிய எனது மனைவிக்கு அதிர்ச்சி அடங்க வெகுநேரம் ஆனது. எதிர் இருக்கைப் பெண் ஐந்து நிமிடம் கழித்து அவர்கள் யார் என்பதைச் சொன்னார்கள். எங்களுக்கு அந்தப்பெட்டியில் கிடா மீசையோடு ஆறு ஏழு பேர் இருந்தார்கள். அவர்களோடு இரண்டு பென்களும் இருந்தார்கள். சென்னையிலிருந்து குடியும் கூத்தும் வம்புச்சண்டையுமாக களேபரப் படுத்திக்கொண்டு வந்த அவர்களை காவலர்கள் கூட ஒன்றும் செய்யவில்லை. அது ரயிலில் மது புகை உபயோகிப்பதைக் கண்டுகொள்ளாத காலம். அப்போது அவர்களுக்கு திருநங்கையர்கள் என்ற பெயரும் இல்லை. அவர்கள், அடுத்த பெட்டிக்குப் போனார்கள். எங்களுக்கு நடக்கப்போகிற சண்டை குறித்த ஆர்வம் அதிகமாகியது. நினைத்தது போலவே அடுத்த பெட்டியிலிருந்து கூச்சலும் கெட்ட வார்த்தைகளுமாக இருந்தது. சுற்றுப்புற சத்தங்களை விழுங்கும் கூச்சலால் அடுத்தடுத்த பெட்டியிலிருந்தும் வேடிக்கை பார்க்க வந்தார்கள். யாரும் எதிர்பாராதவிதமாக அந்த கூச்சல் நின்று அமைதியானது. தாதர்ல எறங்கு அப்றம் தெரியும் என்று சொல்லியபடி அவர்கள் அங்கிருந்து கடந்து போனார்கள். ஆவல் அடங்காமல் நான் அந்தப்பெட்டிப்பக்கம் போனேன்.அந்த பெட்டிய்லிருந்த மொத்தப் பயணிகளும் பேயறைந்ததுபோல உட்கார்ந்திருந்தார்கள். |
10.4.09
என்ன நடந்திருக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
//அந்த பெட்டிய்லிருந்த மொத்தப் பயணிகளும் பேயறைந்ததுபோல உட்கார்ந்திருந்தார்கள்.
ஏன்? என்ன ஆச்சு?
Post a Comment