18.4.09

எளிமை, எதிர்கொள்ள முடியாத ஆயுதம்








தூரத்திலிருந்து பார்க்கும்போது மதுரை சுரேஷ் மாதிரித் தெரிந்தது. சுரேஷுக்குப்பக்கத்தில் இன்னொரு தெரிந்த முகம். அவர் பசியடங்காமல் இன்னொரு பண் வாங்கிக்கொண்டிருந்தார். கசங்கிய வெள்ளை வேட்டி சட்டை. பசி தெரிக்கிற கருப்பு முகம். இந்த உலகம் மொத்தத்தையும் பார்த்துச் சிரிக்கிற ஜாடையில் ஒரு சாதாரண மனிதர். வேஷ்டி சட்டை உடுத்திய கருப்பு மனிதர் டீயும் பண்ணும் சாப்பிடுவது ஒரு செய்தியல்ல. அவர் ஒரு எம் எல் ஏ. என்பது தான் செய்தி. ஒருவேளை இது காமராஜர், கக்கன், ஜீவா காலமாக இருந்திருந்தால் ஆச்சரியப்படவோ, ஆதங்கப்படவோ அவசியமில்லை.



இப்போது நடப்பு என்ன. ஒரு நகர் மன்ற உறுப்பினர்கள் கழிப்பறைக்கு போனல் கூட ஏசி காரில் போகிறார். அவர் வீட்டைவிட்டு வெளியில் போகிற போதெல்லாம் போஸ்டர் அடிக்கிறார்கள். வாரத்தில் ரெண்டு நாள் ஐம்பது கிலோ மீட்டர் தள்ளியிருக்கிற தளவாய்புரம் போய் கண்ணாடிக்கடையில் காடைக்கறி சாப்பிடுகிறார். நிகழ் அரசியலில் எல்லோருமே அப்படித்தான். கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை எந்த எந்த ஹோட்டலில் என்ன சாப்பாடு பிரசித்தம் என்று பட்டியலிட பக்கத்தில் பி ஏ க்கள் வேண்டும். ஒரு தரம் பாட்டிலின் மூடியைத் திறக்க ஐயாயிரம் செலவாகிறது. பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கூட டாடா சுமோ இல்லாமல் பயணப்படுவதில்லை என்றாகிப்போன காலமிது. இவ்வளவு ஏன் சமத்துவத்தைப் பால பாடமாகக் கொண்டிருக்கும் தொழிற்சங்க அரங்கில்கூட ஆளுயர சுவரொட்டி ஒட்டுகிறார்கள். ஒரு எம் எல் ஏ வுக்கு அரசு அளித்திருக்கிற சலுகையைக்கூட தூக்கி எறிந்துவிட்டு மக்களோடு பயணிக்கிற தோழர் நன்மாறன். இந்த விளம்பரச் சூறாவளியின் நடுவிலும் ஒப்பனை கலையாத நிஜமாக.



அவரைப் பார்த்துக் கொண்டிருந்த மாதுவின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது. ஒரு கணத்த மௌனத்தோடு நேரம் நகன்றது. நாங்கள் திரும்பவும் அவரைப் பார்க்கும்போது பாதிப் பீடியைத் தூக்கி எறிய மனசில்லாமல் தூக்கி எறிந்துவிட்டு, புறப்பட இருந்த பேருந்தில் ஓடி வந்து ஏறுகிறார். அந்தக்கடைசி இருக்கையில் ஆறாவது ஆளாக உட்கார்ந்து சிரித்தபடியே கொஞ்சம் நகர்ந்து உட்காரச்சொல்லுகிறார்.மீதமுள்ள நான்கு பேரும் சலனமில்லாமல் உட்கார்ந்திருக்கிறார்கள்.



இப்பொழுதும் கூட மதுரை, மதுரையச்சுற்றியுள்ள ஏதாவது ஊர்களில் உண்ணாவிரதம், தர்ணா, மாநாடுகளில் சிரிக்கச் சிரிக்கப் பேசிவிட்டு பேருந்துகளிலே பயணம் செய்து கொண்டிருக்கிற அவரை நீங்கள் பார்க்கலாம். அவர்தான் இந்த 2006 ஆம் ஆண்டின் விநோத சட்டப்பேரவை உறுப்பினர் எளிமைப்போராளி...... தோழர் நன்மாறன். ஆம், உப்பு விற்க ஒரு கோடி செலவழிக்கிற இந்த டிஜிட்டல், விளம்பர யுகத்தில் தனித்து நிற்கிற அவரது எளிமைகூடப் போராட்டம் தான்.



கோபத்தின் உச்சியில் இருக்கும்போது கூட " நா அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன் " என்று பேசும் மேடை ஒழுக்கம் தெரிந்தவர். மூப்பின் விளிம்பில் இருக்கிற அவருக்கு பூஞ்சை உடம்பு. அவரை அரிவாள் கொண்டு தாக்கி மதுரை தனது வீரத்தை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டியிருக்கிறது. கண், காது, வாய் இவற்றோடு இதயமும் மூளையும் பொருத்தப்பட்ட குண்டர்களும் அவர்கள் கையிலிருக்கும் அரிவாள்களும் அறியாத அன்பும் சிரிப்பும் தோழர் நன்மாறனின் அழியாத சொத்து.


சன் தொலைக்காட்சியில் ஒரு சில வருடங்களுக்கு முன்னாள் திரும்பத்திரும்ப ஒளிபரப்பப்பட்டது ஒரு காட்சி. மூத்த தலைவர், நாங்கள் மதிக்கும் பராசக்திக் கலைஞர், இலக்கிய உலகின் பழுத்த பழம் கலைஞர் கருணாநிதி அவர்கள் கத்திய நெஞ்சைக் கவ்வும், அந்த கதறல் சத்தம் மீண்டும் கேட்கிறது.

3 comments:

குப்பன்.யாஹூ said...

azagiri groups cant win by money so now they r trying violence.

காமராஜ் said...

வணக்கம் குப்பன் சார்.
அது இரண்டு பக்கம் கூரானது.
எனக்குத் தெரிந்து இப்படி நபர்கள்.
கழிப்பறையில் கூட நிம்மதியாக
இருந்ததில்லை.

ஆதவன் said...

will see this election...