அவர் குறி சொல்லும் போது ரொம்பப் பயமாக இருக்கும். பற்களை நற நற வெனக்கடித்துக் கொண்டு கூரை முகட்டைப்பார்த்து தலையை ஒரு உலுக்கு உலுக்கி " தாயே சக்கம்மா என் கொட்டாரடி காத்த புண்ணியவதி தலமேல வந்திறங்கு அடங்காத கருப்பன், கம்பெடுத்தால் அரக்கன் அருவாள கீழபோட்டு கிட்டவாடா வெள்ளக்குதிர ஏறி வீச்சருவா கையிலேந்தி விளையாட ஓடிவாட சுடலமாடா அள்ளி முடிச்சு, ஆங்காரம் எறக்கி வச்சி ஈஸ்வரியே எந்தாயீ ஈசானமூலயில வந்து நில்லு தொட்டது தொலங்கும், தோட்டம் வச்சாக்காய்க்கும் எனப்பெத்த மகராசி முத்தரசி முன்னவாம்மா மார்மேலும் தோல்மேலும் தூக்கிவளத்து குருவுங்கொலையும் குடுத்த எங்கய்யா எல்லாத்தையு அடக்கி வையி " இரவு பத்து மணிக்கு சரணமுழக்கம் ஆரம்பிக்கும். எட்டு மணிக்கே ஊரடங்கிப்போகும் கிராமத்தில் குறிசொல்லும் ராசாச்சின்னயாவின் உடுக்கையடி கொலைப்பதற வைக்கும். இருந்தாலும் பூஜை முடிந்து திங்கப்போகும் தேங்காச்சில்லும் வாழைப்பழமும் பயத்தை ஓரங்கட்டும். குறிபார்க்க வருபவர் முதல்நாளே சொல்லிவிடவேண்டும். அன்றைக்கு காலையில் இருந்து பச்சைத்தண்ணி பல்லில் படாது விரதமிருப்பார். சாணிமெழுகி சாம்பிராணி புகையவிட்டு வீடு சுத்தப்படுத்த வேண்டும். அணைக்கரைப்பட்டி பொத்தையக்குடும்பனிடம் ரெண்டு பாட்டில் சாராயம் வாங்கிவைக்கச் சொல்லிவிடுவார். பூஜைசாமன்கள் எடுத்து அடுக்கிவைக்க, அருள்வந்து தடுமாறுவார் அப்போது தாங்கிப்பிடிக்க நான்கு எளவட்டங்கள் வேண்டும். பூஜை முடிந்துகொடுக்கும் கூவாத சேவலும் காசும் மறுநாளைக்கு அரிசிச்சோறும் கறிக்குழம்புமாகும். தாட்டிக்கமான சாதிக்காரர் வீடுகளுக்கு கடவுள்கள் கூட டோர்டெலிவரிதான். ராசாச்சின்னையா கீழ்ச்சாதி வேறு. சிலநேரம் வெளியூர் போய் குறிசொல்லுவார் லீவு நாட்களில் நானும் போவேன். பெத்துரெட்டிபட்டி ராமசாமி நாயக்கரின் வண்டிச்சக்கரம் காணாமல்போனது. அவர்கள் அதைச் சொல்லமல் விடுகதையை போல ஒரு பொருள் களவு போய்விட்டது குறி பார்க்கவேணுமென்று சொல்லி மூணு நாளாச்சு. அத்தனை சாமிகளுக்கும் சேர்ந்து முக்கி முக்கி உடுக்கடிச்சாலும் களவுபோன பொருள் என்னவெனக் கண்டுபிடிக்கமுடியாமல் திணறலெடுத்துவிட்டது ராசாச் சித்தப்பாவுக்கு. பெத்து ரெட்டிபட்டி, ஓடைப்பட்டி, கம்மாப்பட்டி, கரிசல்பட்டி, செவல்பட்டி, மேட்டுப்பட்டி, ஒத்தையால் போன்ற ஊர்கள் கரிசல் விவசாயம் பெருத்த நாயக்கமார்களின் ஊர்கள். இங்கு குறி தோத்துப் போனால் பிறகு வருசம் முழுக்க குண்டிவழியா வேர்வை வடிய கல்லுடைக்க, கருதறுக்க லோல் படவேண்டும். மூன்று தலை முறையாய் பார்த்த சோசியத் தொழில் கெட்டுப் போகும். இது அவருக்கு வாழ்வா சாவா பிரச்சினை. மூன்றாம் நாள் ஒரு பீடியைப்பத்த வைத்துக்கொண்டு காலாற நடந்து போய் படப்படியில் ஒண்ணுக்கிருந்தார். திரும்ப விறு விறுவென வந்தார். தீர்மானமாக உட்கார்ந்தார். ஒரு பத்துநிமிடம் காட்டப்பத்தி கரையப்பத்தி பாட்டுப் பாடினார், பிறகு '' யாரப்பாத்து சோதன பண்றீங்க இந்தச் சொடல மாடங்கிட்டயா வெளாட்டுக் காற்றீங்க ன்னு " ஒரு அதட்டுபோட்டார். " காணாமல் போனது வலது பக்க வண்டிச்சக்கரம், எடுத்துட்டுப் போன கொம்பனுக்கு மேல்திசையில ஊரு, மேலே ஏதுங் கேள்வி இருந்தாக் கேளு " சொல்லி முடித்ததும் ஆடிப்போனார் ராமாசாமி நாயக்கர். கூடப்போன நாங்களூம் ஆடிப்போனோம். ஊரு வந்து ஒரு வாரம் சாராயம்தான், வெடக்கோழி தான். ஆவல் அடங்காமல் ஒருநாள் கேட்டபோது,தொழில் ரகசியம் வெளியே சொல்லாதே என்ற பீடிகையோடு சொன்னார். வைக்கோல் படப்புக்கு மறுபக்கம் பேன் பார்த்துக் கொண்டிருந்த உள்ளூர்ப் பெண்களிருவர் பேசிக்கொண்டது அவரது காதில் விழுந்ததாம். " சாமி சுத்து சுத்து ண்ணுதா, செப்பும் வண்டிச்சக்கர ண்ட்டா செப்பும் " காலச்சக்கரத்தின் அடியில் சிக்கிக்கொண்டு நசிந்துபோனது விவசாயத்தொழில் மட்டுமல்ல, பண்ணையடிமை முறையும். தீப்பெட்டி ஆலையின் காவலராகிக்காலம் தள்ளும் ராசாசித்தப்பாவின் முகதைச்சுற்றி வட்டமிடும் பீடிப்புகையில் என்னநினைவுகள் மிதக்கும். இந்த வாரம் பங்குனிப் பொங்கலுக்கு ஊருக்குப் போகையில் ராசாச் சித்தப்பாவைப் பார்க்க வேண்டும். |
12.4.09
கொஞ்சம் பக்தி , நிறய்ய சமயோசிதம்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் தனது தமிழ்வீதி வலைப்பக்கத்தில் எழுதிய ’மரியாதை வருவதில்லை’ யில் வரும் கோட்டைச்சாமியைப் போல ராசாச் சித்தப்பாவும் ஒரு அதிசயமான மனிதர்தான். கிராமங்களில் இப்படிப்பட்ட அற்புதமான மனிதர்கள் காட்டுச்செடிகள் போல கவனிப்பாரற்று இருக்கிறார்கள். யார் யாருக்கோ டாக்டர் பட்டம் கொடுக்கும் பல்கலைக்கழகங்கள் இவர்களையெல்லாம் கண்டுகொள்வதில்லை.
Post a Comment