11.5.09

ஷாஜஹானின் கவிதை
இந்த இருபது வருட சிநேகிதத்தில் பல நூறு மணிநேரம் அவரோடு கழிந்திருக்கிறது. ஒரு சின்ன கணமேனும் அவரது முகத்தில் கோபத்தின் ரேகைகள் தெரிந்த ஞாபகங்கள் இல்லை. ஒருவேளை அவர் கோபப்படுகிறபோது நான் அவரோடுஇல்லாமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அவரைச்சுற்றி எப்போதும் சிரிப்பும் கிண்டலும் படர்ந்திருப்பதை யாரும் எளிதில் அவதானிக்கலாம்." அமுத மழையில் என் கவிதை நனைகிறது நிலவே வந்து குடை பிடி"எனும் கவிதை ஒருகாலத்தில் கலை இலக்கிய இரவு மேடைகளின் நிரந்தர இசைப்பாடலாக நனைந்து இருந்தது. கரிசல் குயில் கிருஷ்ணசாமியின் அல்லது சுகந்தனின் குரலில் அந்தக்காதல் கவிதை இசைப்பாடலாகும். அப்போது நடுசாமம்கூடப் அடர்த்தியான காதல் நினைவுகளைக் கொண்டுவந்து குழுமியிருக்கும் ஆயிரமாயிரம் ஜனத்திரளை ஆட்டிப்படைக்கும். அந்தக் கவிதை தோழர் ஷாஜஹான் எழுதியது என்பதைக் கேட்டபோது அவரது உயரம் எனக்குள் பலமடங்கானது.


எப்போதும் சுற்றியிருக்கிறவர்களைத்தன் பேச்சால் சிரிக்கவைக்கிற ஷாஜஹான் தனது மேடைப்பேச்சிலும், எழுத்திலும் ஆழ்மனதில் புதைந்துகிடக்கிற மனிதத்தைத்தட்டி எழுப்பிக் கண்கலங்கவைப்பார். அருப்புக்கோட்டை கலை இலக்கிய இரவு முடிந்து வந்து தூங்காத கணத்த கண்களோடு பேசிக்கிடந்த அடர்த்தியான நாளில், '' இன்னும் இயற்கை உபாதைகளுக்காக வேலிச்செடி மறைவுகளுக்காகவும், இருட்டுக்காகவும் காத்துக்கிடக்கிற பெண்களுக்காக இந்த அரசு என்ன செய்திருக்கிறது, அல்லது இலக்கியம் என்ன செய்திருக்கிறது '' எனச்சொல்லி முடித்தபோது எல்லோர் கண்களிலும் ஈரம் கோர்த்திருந்தது.அவர்தான் இலக்கிய உலகுக்கு கட்டாறு எனும் சிறுகதைத் தொகுதியைக் கொடுத்திருக்கிறார். அதன் மூலம் இதுவரை தமிழ்ச் சிறுகதைகள் புழங்காத பகுதிக்குள் அடிஎடுத்து வைக்கிறார். துருப்பிடிக்காத பழைய்ய காதல், ஓடிப்போன தாயின் வீட்டுக்குப்போகும் பழைய்ய மகன், அம்மிகொத்துகிற மனிதரிடமிருந்து கேட்கும் இயந்திரமயமாதலுக்கு எதிரான பட்டினிக்கேள்வி.. என்பதான பாமர ஜனங்களை அனுகும் அவரது கதையாடல்களில் தனது சமூகத்தின் சாயல் துளிக்கூட காணமுடியாததுதான் பெரிய முரணும் தனித்துவமும். '' ஏன் டீச்சர் எங்களைப் பெயிலாக்கினீங்க'' எனும் மொழி பெயர்ப்பு நூல் அவரது எழுத்தால் தழுக்கு கிடைத்த கொடை. பல புதிய கேள்விகளைப் பழய்ய கல்வித்திட்டத்தின் மேல் சவுக்கடியாக வைக்கிறது அது. எப்போதும் தொற்கடிக்கப்பட்டவர்களின் விடையற்ற கேள்விகளுக்கு எந்த கொம்பனும் பதில் சொல்லமுடியாது. குற்ற உணர்ச்சியோடு ஒதுங்கிப்போகிற சமூகத்தின் தோளில் அந்தக் கேள்விகள் ஏறிக்குடிகொள்ளும்.இந்த ' புதுவிசை ' இதழில் அவரது இரண்டு கவிதைகள் அதிலொன்று.


0
எதிரெதிர் அமர்ந்துசூதாடினோம்நானும் கடவுளும்.
உருண்ட பகடைகளில் அதிரகசிய வாய்களில் விழுங்கப்பட்டது ஒவ்வொன்றாய்.


பால்யம், இளமை, கனவு, இலட்சியம் எனகையிருப்பையெல்லாம்தோற்று எழுந்த என்னைதடுத்து அமர்த்தினார் கடவுள்.


'உன்னுள்ளே இருக்கும்.அந்த ஒற்றைக்கவிதையைப்பணயம் வை' என்றார்.
எழுதும் நாள் எதுவெனத்தெரியாது கவிதைபரம்பொருளையே கேட்டேன்.


'உன் கவிதை வரும் நாள்கவிதைக்கே வெளிச்சம்' என்றார்.ஆட்டம் முடிந்தபாடில்லை

4 comments:

sakthi said...

அழகாக‌
அருமையாக இயம்பி உள்ளீர்கள்

வாழ்த்துகள்

காமராஜ் said...

சக்தி வணக்கமுங்க, ரொம்ம்ம்ப நன்றிங்க.

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்ல பகிர்வு. நினைவலைகளை நன்றாக எழுத்தாக்கியுள்ளீங்க.

அன்புடன் அருணா said...

ரொம்ப நல்லா எழுதுறீங்க!!! ஒரே மூச்சில் படித்தேன்...
அன்புடன் அருணா