சீக்கிய மதத்தின் மத குருவையும் இன்னும் பதினாறு பேர்களையும் அம்மதத்தின் இன்னொரு பிரிவினர் தாக்கியதில். குரு ராமானந்த் உட்பட இருவர் மரணம். இது நடந்தது இந்தியாவில் இல்லை ஆஸ்திரிய நாட்டிலுள்ள வியன்னாவில். இந்தியப் பெருமதங்களில் ஒன்றான சீக்கிய மதம் உருவ வழிபாட்டை நிராகரித்த மதம். பெண்ணுக்கு சம உரிமை கோரிய மதம். மனிதர்களுக்குள் பிரிவினையை நிராகரித்த மதம். தேசிய இனங்களில் அல்லது இனக்குழுக்களில் தங்களுக்கெனத் தனித்த அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டாவர்கள். ஆங்கிலேயரை எதிர்த்த போரில் வலுவான தழும்புகளையும், அடையாளங்களையும், பஹத்சிங் போன்ற ஆளுமைகளையும் கொண்ட இனக்குழு சீக்கிய இனக்குழு. ஆரம்பத்தில் ஒருங்கிணைந்து இந்து பழமை மூடக்கருத்துக்களை நிராகரித்த சீக்கியர்களூக்குள் எல்லா இந்துமயமாக்கப்பட்ட மதங்களைப்போல நாம்தாரி, நிரங்காரி, சர்தாரி, சிங் போன்ற பிரிவுகள் உண்டானது. அல்லது மருரூபமெடுத்தது. இன்னும் கடுகிப்பார்க்கப் போனால், ' ஜாதிய ' சீக்கியர்கள் ' மஜபாய் ' சீக்கியர்கள் என்ற மேல் கீழ் பிரிவுகளும் வலுவானது. கடல்தாண்டிக் கனிணி பரப்பப்போன எம் இந்திய சீக்கியர்கள் தங்கள் மத அடையாளங்களை உறுதிப்படுத்த அங்கேயும் குருத்துவாராவை உருவாக்கினார்கள். எல்லா மதமும் வரிவடிவில் மட்டும் உன்னதமானது. அதன் சாரமும் நடைமுறையும் பிரிவினைகளினாலேயே நிர்மானிக்கப்படுகிறது. குரு ரவிதாஸ் சபா என்னும் பிரிவு உருவானது. லண்டனில் 2005 டிசம்பரில் அந்தப்பிரிவின் தலைமை குருத்துவாரா அமைக்கப்பட்டது. ஜாதியஅதிகாரத்தை எதிர்த்த அவர்களை ஆறுபேர்கொண்ட எதிர்ப்பிரிவு தாக்கியிருக்கிறது. வியன்னாவில் நடந்த இந்த தாக்குதலின் எதிரொலியால் பஞ்சாப் மாநிலம் இன்று வன்முறையால் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. அம்மாநில முதல்வர் திரு பாதல் நிலைமை கட்டுக்குள் இருக்கிறதென்று சொன்ன மறுகணம் மாண்புமிகு உள்துறை அமைச்சர் இல்லை என மறுப்புத் தெரிவிக்கிறார். ஜாதி அரசியலை கட்சி அரசியலாக்குகிற முயற்சி அது. தான்பிறந்த, தன்னைத் தெர்ந்தெடுத்த சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊஞ்சனைக் கிராமத்து தேர் அசைகிற ஓவ்வொரு வருடமும் இயல்பு வாழ்க்கை ஆட்டி அசைக்கப்படும். முன்னூற்றி அறுபத்து நான்கு நாட்கள் மழையிலும் வெயிலிலும் கேட்பாரற்றுக்கிடக்கிற அந்ததேர். புறாக்களும் குருவிகளும் வசிக்கிற அந்த தேர். ஒரு அரை கிலோ மீட்டர் திக்கித் திணறி நகர்வதற்கு சிறப்புக்கவல்படை, அயுதப்படை, அதிரடிப்படை என ஆயிரக்கணக்கில் காவலர்கள் குவிக்கப்படுவார்கள். ?. கர்நாடக நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திக்கொண்டுபோய் காட்டில் வைத்திருந்த சமயத்தில் அருப்புக்கோடைக்கு அருகில் உள்ள ஒருகிராமத்தில் ஒரு விளம்பரத் தட்டி கட்டப்பட்டிருந்தது. அதில் " எங்கள் ஜாதியைச் சேர்ந்த ராஜ்குமாரை கடத்தி சென்ற வீரப்பனை உடனடியாகக் கைது செய் " என்ற வாசகம் இருந்தது. நிறையக்குழப்பமாக இருந்தது." இப்படிக்கு .....மாணவரணி " என்றும் இருந்தது.?. கல்வி, பொருளாதாரம், சொகுசு எல்லாம் ஜாதியத்தழைகளையும் அறுத்தெடுக்கும் என்னும் அறிவுறுத்தலுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இந்த சம்பவங்கள். எல்லா விஷவிருட்சத்துக்கும் ஒரே ஆணிவேர் ஜாதி. அதை அறுக்கிற கோடாரி இன்னும் செய்யப்படவே இல்லை அல்லது செம்மையாய் செயல்படவில்லை. விவேகானந்தர், ஜோதிபாபூலே, அம்பேத்கர், பெரியார்களும் தலைவர்களும், அறிஞர்களும்கலைஞர்களும் சேர்ந்து இஞ்ச் இஞ்சாய் உயர்த்திய பகுத்தறிவு, சமதர்மம், மனிதாபிமானம் எல்லாவற்றையும் ஒரே கலவரத்தில் பின்னுக்குத் தள்ளிவிட்டு கொக்கரிக்கிறது ஜாதியும் மதமும். மீண்டும் மீண்டும் அதைத்தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வாளோடு கிளம்பவேண்டும். |
26.5.09
பிழைக்கப்போன இடத்திலும் பிடித்து ஆட்டும்
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
அருமையான பதிவு.
பதிலளிக்க முடியாத கேள்விகள்..
வாருங்கள் வண்ணத்துப்பூச்சியார், வணக்கம்.
வருகைக்கு நன்றி. நன்றிமட்டுமல்ல எனக்கு
நம்பிக்கை தருகிறது உங்கள் பின்னூட்டம்.
//எல்லா விஷவிருட்சத்துக்கும் ஒரே ஆணிவேர் ஜாதி. அதை அறுக்கிற கோடாரி இன்னும் செய்யப்படவே இல்லை அல்லது செம்மையாய் செயல்படவில்லை. //
உண்மைதான் நண்பா
சாதிச் சனியன் ஒழியும்நாள்தான் மனிதகுலத்துக்கு நிம்மதி.
'அரசியல் வியாதிகள்' சாதியை ஒழிக்க விடமாட்டாங்க என்பதுதான் கசப்பான உண்மை(-:
வாருங்கள் ஞானசேகரன் வணக்கம்.
கருத்துக்கு நன்றி.
வணக்கம் துளசிகோபால். உங்கள் வருகை
எனக்குப்பெரும் உவகை.
நன்றி தமிழர்ஸ்
அருமையான பதிவு.
நம் அரசியல்வாதிகள் அரசியலில் நிடிக்க ஜாதியை துருப்பு சீட்டாக பயன் புத்தி கொண்டிருக்கிறார்கள்
///உருவ வழிபாட்டை நிராகரித்த மதம். பெண்ணுக்கு சம உரிமை கோரிய மதம். மனிதர்களுக்குள் பிரிவினையை நிராகரித்த மதம்.
.......
மனிதாபிமானம் எல்லாவற்றையும் ஒரே கலவரத்தில் பின்னுக்குத் தள்ளிவிட்டு கொக்கரிக்கிறது ஜாதியும் மதமும்.
மீண்டும் மீண்டும் அதைத்தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வாளோடு கிளம்பவேண்டும்.///
அருமையான பதிவு.
காமராஜ்!
ஏசுனாதரை ஒரு மரவேலைசெய்யும் தச்சராகவும் மகாத்மா காந்தியை ஒரு செட்டியாராகவும் ஜைல்சிங்கை அவர் சார்ந்த ஒரு ஜாதியின் ஆளாகவும் (விஷ்வ கர்மா) பார்ப்பதோடல்லாமல் வால் போஸ்டர்களாகக்கூட (ஃப்ளெக்சில் வரவில்லையென்று நினைக்கிறேன்) பார்த்துப்பழகிவிட்டன நமது விழிகள். மணியரசன் சொல்லுவார் "ஒரு நிறுவனத்தின் கூட்டம் நடக்கிறது அதில் பணியாற்றும் நான்கு பேர் (அலுவலர்கள்)மேடையில் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒருவர் தலித்தாக அறியப்பட்டவர் இருக்கிராரென்று வைத்துக்கொள்ளுங்கள். பக்கத்தில் அமர்ந்திருக்கும் பாக்கி மூன்று பேரும் மனதால் இவன் நம்மைவிட குறைந்தவன்தானே என்று நினைத்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள்" இந்த நிலை மாறினால் ஒழிய தீண்டாமை ஒழியாது. படித்தவர்கள் மத்தியில் பொதுவாகவும் அப்பட்டமாகவும் நிலவும் உண்மை இதுவாகத்தான் இருக்கிறது. இதில் இங்கேயே இருந்து ஜக்கையனைக்கொன்றால் என்ன? வியன்னாவில் சென்று தேர சச்ச தலைவரைக்கொன்றால் என்ன? மதங்கள் இருக்கும் வரை ஜாதிகள் ஒழியாது
வேதனை தரும் சம்பவம்.
விளைவுகளை யோசிக்க முடியவில்லை.
ஜாதி குறித்த புரிதல்கள் இன்னும் சமூகத்திற்கு நிறைய வேண்டியிருக்கிறது என்றே நினைக்கிறேன். ‘ஜாதி மோசம்’ என்று அபிப்பிராயங்களைத் தாண்டி அது எப்படி ஒவ்வொருவருக்குள்ளும், ஒவ்வொரு சமூகத்திற்குள்ளும் வேர் பிடித்திருக்கிறது என்பதை ஆராயும் திறந்த மனம் வேண்டும். அதன் பலம் என்ன என்பதை அறிய வேண்டும். அதற்குரிய இடத்தில் இருந்து மனிதர்களை வெல்வதற்கு அப்போதுதான் வழி கிடைக்கும். இதுவரையிலான வரலாற்றில் சின்னச் சின்ன முயற்சிகளே நடந்திருக்கிறது என் வேண்டுமானால் சொல்லலாம்.
வாருங்கள் பிஸ்கோத்துப்பயல்( பெயரென்ன?)
உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
நன்றி ஜீவராஜ், எப்படியிருக்கிறீர்கள்.
காரியங்கள் எல்லாம் நிறைவேறிவிட்டதா?
அப்பாவுக்கு மீண்டும் என் அஞ்சலி.
அருமையாகச் சொன்னீர்கள் நாராயணன் யாவர்க்கும் பொதுவான
ஞானிகளயும், கடவுளர்களையும் சாதிச்மிழிக்குள்
அடைக்கிற வல்லமை இந்தியர்களுக்கு மட்டும் சொந்தமானது.
நன்றி அன்புத்தோழா
உடன்கட்டை ஏறுதல், பலதார மணம், பால்ய விவாகம்,
தொழு நோய், பெரியம்மை, அம்மிக்கல், ஆட்டுரல்
தாவணிப்பெண்கள், கைக்குத்தல் அரிசி, கம்மங்கஞ்சி
எல்லாம் கானாமல் போய் விடவில்லையா என் தோழனே ?.
அன்பு காமராஜ்
உணர்ச்சிகரமான பதிவென்றாலும், žக்கிய மதத்தின் உள்ளடக்கம் பற்றியெல்லாம் திரட்டித் தந்திருப்பது நடப்புகளின் மீதான சமூகப் பார்வையை இன்னும் கூராக்கி நோக்க உதவுகிறது.
சிறந்த பதிவு, காமராஜ்......ஊடகங்களுக்கு ஒரு செய்தியை மற்றொன்று உடைத்து முன்னுக்கு வருவதுதான் Breaking the News. அதன் பொருள் இந்தச் செய்தியை மீறும் அடுத்த செய்தி எங்கே என்பது தான் அவர்களது ஓட்டம். அவர்களுக்குத் தேவை, பரபரப்பூட்டும் நிகழ்வுகள், அருவருப்பூட்டும் பேச்சுக்கள், யார் யாரை காயப்படுத்துகிறார்கள் என்பதான தேடல்கள்...இவையே. நேற்று கைவிட்டு நழுவிப் போன ஒரு செய்தியின் சமூக பரிமாணத்தைக் குறித்தோ, அரசியல் நோக்கங்கள் பற்றியோ, சாதாரண மனிதர்க்கு அந்தச் செய்தியிலிருந்து என்ன கிடைக்கிறது என்பதெல்லாமோ அவற்றுக்குப் பொருட்டே இல்லை.
2. நாராயணன் எழுதியிருக்கும் பின்னூட்டம் குத்தி எடுக்கிறது மனசை. தமிழ்ச்செல்வன் உயிர்மையில் எழுதிய குறிப்பிட்டிருந்தார்: "அவங்க" என்று குறிப்பிட்ட சாதியாரைச் சொல்லும்போதே சொல்பவரிடம் எல்லாம் ஒன்றல்ல என்றிருக்கும் மனநிலையை வெளிச்சம் போட்டுவிடுகிறது என்று சுட்டிக் காட்டிக் குட்டியிருந்தார். நான் எல்லா இடத்திலும் சாப்பிடுவேன் என்று சொல்லிக் கொள்வது, வேற்றாள் பார்ப்பதில்லை என்பதாக வேண்டுமென்றே தொட்டுத் தொட்டுப் பேசிச் செல்வது போன்றவற்றின் பாசாங்குகள் தலித் மனநிலையின் மீது எத்தனை பெரிய வன்மத்தோடு பாய்கிறது என்பதையும் அவர் சொல்லியிருப்பார் அதில்.
சாதிய மனநிலையின் வேர்கள் படிப்பு, நடை, உடை பாவனைகளால் சற்றும் நசுங்கி விடாது இரை தேடி வரக் காத்து உள்ளே படுத்திருக்கிறது மலைப்பாம்பு போல நீண்டு.
எஸ் வி வேணுகோபாலன்
Post a Comment