17.5.09

கொம்பு- சிறுகதை

ரொம்பவும் அவஸ்தைப்பட்டான். பட்டான் என்று சொல்லுதல் கூடாது, பட்டார். ஒரு கவச குண்டலத்தைப்போல அது எப்போதுமே அவரது தலையோடு ஒட்டியிருந்தது. படுக்கையிலும் கூட அது அவரோடே இருந்தது. இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஒரு கையால் அதைப்பிடித்துக் கொள்ளவேண்டியிருந்தது. இதனால் இரண்டு முறை கவனம் சிதறி, பயங்கரமான விபத்து நடக்கவேண்டிய அபாயம் கூட தப்பிப்போனது. உடனடியாக இரண்டு சக்கரவாகனத்திலேயே மதுரைக்குப்போய் தலைக்கவசம் போலொரு குல்லாயை ஆர்டர் செய்து வாங்கிவந்தார். அலுவலகத்தில் அதை அணிந்தபடியே இருந்தால் கோமாளியைப்பார்க்கிற மாதிரி பார்ப்பார்கள். அதனாலேயே அலுவலகத்திற்கு ஒன்று வாகனத்திற்கு ஒன்றென, இரண்டு வைத்துக்கொண்டு அதிலிருந்தும் சாமர்த்தியமாய் தப்பித்துக்கொண்டார்.
அப்படியொன்றும் அவருக்கு வழுக்கைத்தலைகூட கிடையாது. இந்த செப்டம்பர் இருபதோடு முப்பத்தி நான்கு வயது பூர்த்தியானாலும் அடர்த்தியான கத்தையான கோரை முடி. ஷாம்பு விளம்பரத்தில் நடிக்கிற அளவுக்கு கரு கரு கேசம். போகிற இடமெல்லாம் அவரது முடி பார்த்து பொறாமை மேலாகிற சக அதிகாரிகள், வெளிப்படையாகவே அதைச்சொனார்கள். அந்தப்பெருமையெல்லாம் தவிடு பொடியாகிற அளவுக்கு இப்படியொரு பிரச்சினை முளைத்தது. ஆமாம், முதன் முதலாய் அவரது மனைவிதான் அதைக்கண்டு பிடித்தார். அந்த அகால இரவில் '' இதென்ன இரண்டு கொம்பு மாதிரி'' என்று கேட்ட போது இருந்த நெருக்கமும் இறுக்கமும், அதை இரண்டாம் பட்சமாக்கியிருந்தது. ரொம்ப நாள் கழித்து ''அரிஸ்டோ கிராட்'' முடிதிருத்தும் நிலையத்தில் வெலுச்சாமியின் சீப்பில் நெருடியபோதுதான் முழு விபரீதம் உணர்ந்தார். வேலுச்சாமியின் அதிர்ச்சி இவருக்கு நெருட, '' அது மரு, மிச்ச மண் எங்க குடும்பத்துல எல்லாருக்கும் இப்டித்தான்'' என்று பார்ம்பரியப்பெருமை சொன்னார். மருத்துவரிடம் காட்டச்சொல்லி வேலுச்சாமி சிபாரிசு பண்ணியபோது, ''ஒரு மருத்துவர் பார்த்தாப்போதாதாப்பா'' என்று விகடம் சொல்லிவிட்டதாய் அவரே சிரித்துக்கொண்டார். அப்புறம் சீரியஸாக இதிகாசத்தில் சில பேரைச்சொல்லி அவர்களுக்கெல்லாம் கூட இருந்தது எனும் புது வியாக்கியாணம் சொன்னார். ஆளில்லா நேரம் பார்த்து திரும்பி வந்து, விசயம் வெளியே கசியவேண்டாமென்று கேட்டுக்கொண்டார். அப்போது அவரிடம் இருந்த குழைவு அவருக்கே அன்னியமாகப்பட்டது. அட ஆச்சரியம் அப்போது கொம்பு சுத்தமாக மறைந்திருந்தது. அதன் பிறகு பகலில் முடி திருத்துவதைத்தவிர்த்து இரவுகளை மட்டும் தேர்ந்தெடுத்தார். ஆக இந்த ரகசியம் உலகத்தில் ஒரு மூன்றாவது நபருக்கும் தெரிய நேர்ந்தது. அந்த ரகசிய எல்லைக்குள் மற்றுமொரு நபர் நுழையாதபடிக்கு கண்ணும் கருத்துமாய்க் காவலிருந்தார். அதற்கவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
பொது இடங்களில் நடமாடுவதைத்தவிர்த்தார். பஸ் பிரயாணம் அறவே ஒழித்தார். நூறு கிலோ மீட்டர் வரையிலான பயணங்களுக்குக்கூட இரு சக்கர வாகனமும், அதற்குமேலென்றால் வாடகைக் காருமென்றாகிப்போனது. சினிமா தியேட்டர் போகமுடியாததனால், பொழுதுபோக்கென்று ஒன்றுமே இல்லாமல் போனது. ஆனாலும், இப்போது ஹோம் தியேட்டர், வி சி டி என்ற விஞ்ஞான வளர்ச்சி அவருக்கென உருவானதுபோலானது. நண்பர்கள் பார்த்துப்பேசுவது திண்ணைப்பேச்சென ஒதுக்கிதள்ளினார். பால்ய நன்பர்கள் பார்த்து ஒதுங்கிப்போனார். அப்படியே தவிர்க்க முடியாமல் அவரகளோடு பேச நேர்ந்தால் அவரே முந்திக்கொண்டு ''சார்'' போட்டுப்பேசி விடுவார். வீட்டில் அவருக்கென தனி அறை, தனி சோப்பு, சீப்பு. அந்தச்சீப்பில் இரண்டு இடங்களில் பல்லை ஒடித்து கொம்பில் படாதபடியான தொழில் நுட்பமும் செய்துகொண்டார். மனைவி குழந்தைகளிடம் நல்ல கனவராக பாசமுள்ள தகப்பனாக இருக்க நிறைய்ய கஷ்டப்பட்டார். ஒரு முறை குற்றாலம் போயிருந்தபோது, நகரிய தனி அதிகாரியிடம் தனது விசிட்டிங் கார்டைக்காண்பித்து தனியே பேச அனுமதி வாங்கினார். அவரும் அலுவலக கிளை திறக்க இடம் தேடி வந்திருபதாக நினைத்துக்கொண்டு பெப்சி குடிக்கக்கொடுத்து உபசரித்தார். தான் மட்டும் குளிப்பதற்கு ஏதாவது பிரத்யேக ஏற்பாடு பண்ண முடியுமாவெனக்கேட்டதும் அதிகாரி ஆடிப்போனார். மேலும் கீழும் பார்த்து விட்டு பயந்துப்போய் வழியனுப்பி வைத்தார். வேறு என்ன செய்ய குடும்பத்தாரை மட்டும் குளிக்கச்சொல்லி வேட்டிக்கை பார்த்து விட்டு, திரும்ப வந்து விடுதி அறையில் குளித்தார். சொந்த பந்தங்களின் வீடுகளுக்குப்போனால் போன காலோடு திரும்பி வந்தார். கூடப்பிறந்த அக்கா வீட்டுக்கிரஹப் பிரவேசத்திற்குப்போய் தலையைக்கான்பித்து விட்டுத்திரும்பியதால் மனுசரண்டாதவரானார்.
இந்தக்கால ஓட்டத்தில் அவருக்கு பதவி உயர்வும் கிடைத்தது. அலுவலகத்தில் அவருக்கென தனி கண்ணாடி அறையும், சுழல் நாற்காலியும், தனி தொலை பேசியும் ஒதுக்கப்பட்டது. இந்தக்கொம்பு பிரச்சினயை சமாளிக்க கடவுளே கொடுத்ததாக புளகாங்கிதப்பட்டு திருப்பதிக்குப்போய் வெள்ளியில் கொம்பு செய்து செலுத்திவிட்டு, மொட்டை போடாமல் திரும்பி வந்தார். பதவி உயர உயர கொம்பும்சேர்ந்து உயர்ந்தது. இப்போது தொப்பியின் உயரத்தை அதிகரிக்கவேண்டியதாயிற்று. ''அளவோடு இல்லாட்டி கொம்பு மாதிரித்தெரியும்'' கடைக்காரன் சொன்னபோது ''மைண்ட் யுவர் ஓன் பிசினஸ்'' சொல்லி அரட்டினார். இப்படியான புதிய பிரச்சினைகளும் பூதாகரமாக முளைத்தது. அவர் காது பட யாராவது யாரையாவது '' அவன் பெரிய கொம்பனா'' என்று சொன்னால் அதற்காக மூசு மூசென்று கோபப்படுவது, ''வரட்டும் அவனுக்கென்ன கொம்பா மொளச்சிருக்கு'' சொன்னால் அவரைத்தான் சொல்கிறார்களோ என்று ரொம்பவும் விசனப்படுவது அதிகமாகிக்கொண்டு போனது. எல்லாவற்றையும் விட அவரால் இரவு நேரங்களை கடத்துவது பெருங் கஷ்டமாகிக்கொண்டிருந்தது. ஆசையோடு மனைவி தலைகோத முடியாமல் தவித்தாள், இவருக்கும் மடிமீது தலைசாய்க்கிற சிலாக்கியமில்லாமல் போனது. ஒரு நாள் தூக்கத்தில் அவளின் மீது தலை பட அலறியடித்துக்கொண்டு எழுந்து அதோடு கட்டில் ரெண்டானது. அதற்கு முடிவு கட்டாமல் பக்கத்தில் வரவேண்டாமென்று கறாராகச்சொல்லிவிட பிரச்சினை தலைக்குமேல் போய்விட்டது.
இப்போது நான்காவது நபருக்கு தெரிய வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அமாம் ஒரு மாத விடுப்பெடுத்துக்கொண்டு சென்னை போனார்கள். சலிக்காய்ச்சலென்றால் கூட மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்குப்போய் ஒரு ஊசி போட்டுவிட்டு வந்தால் தான் அவருக்கு சரியாகும். ஆதலால் விஜயா, ராமச்சந்திரா, அப்பல்லோ என உயர்தர மருத்துவ மனைகளுக்கு மட்டுமே போனார். அறுத்தெடுத்துவிடுவது, ஆசிட் விட்டுக்கரைப்பது, மாத்திரையில் மட்டுப்படுத்துவது என இவர்கள் நினைத்தமாதிரி ஏதும் நடக்கவில்லை. எல்லா இடங்களிலும் ஆதியோடந்தமாய்க்கேட்டுவிட்டு மறுநாள் வரச்சொன்னார்கள். ஒரு நாள் மருத்துவருக்காக காத்திருக்கிற போது மருத்துவமனை சிப்பந்தி ஒருவன் வந்து பேச்சுக்கொடுத்தான் அவனோடு பேசுவதைத்தவிர்த்தார். அவனோடு மட்டுமல்ல வாழ்நாளில் அவர் காக்கி வெள்ளைச் சீருடையில் இருக்கிற யாரோடும் பேசிப்பழக்கமில்லை. பேசினாலும், அலுவல நிமித்தமாக மட்டும் பேசுவார். அப்போது அவரது குரல் துருப்பிடித்த தகரத்தைத் தரையில் தேய்த்தது போலிருக்கும். முகத்தையும் சிடு சிடு வென வைத்துக்கொள்வார். இதெல்லாம் அவரது அறிவுலக ஆசான் சொல்லித்தந்தது. ஆசான் தான் அவருக்கு எல்லாம், அவர் சொன்னால் தான் காலையில் தேனீர் குடிப்பார். ஆசானும் நீங்க நினைக்கிற மாதிரியில்லை தமிழ் வாணனுக்கும் ஒரு படி மேல். எல்லாவற்றையும் எதிர்க் கோணத்திலிருந்தே பார்ப்பார். சிப்பந்திகள் உதவியாளர் யாருக்கும் அதிக இடங்குடுக்கப்படாது, இடங்குடுத்தால் ஏறி உட்காந்துக்குவானுக. மனைவி குழந்தைகளோடு கூட நெருங்கக்கூடாது. நெருங்கினால் வீக்னெஸ் தெரிந்துபோகும் . உனக்குக் கீழுள்ளவர்கள் உலக சாதனையோடு வந்தால் கூட மறந்தும் பாராட்டி விடக்கூடாது. அதை விடப்பெரிய விசயங்கள் குறித்துத்தான் பேச வேண்டும். இப்படியான அறிவுறைகளை அள்ளித்தெளிப்பார். அவையாவும் இவருக்கென அளவெடுத்துத்தைத்தது போலிருக்க, புளகாங்கிதப்பட்டுப்போவார். ஆசானை நினைக்கிறபோதெல்லாம் அவருக்கு பின்னால் ஒளிச்சக்கரம் ஒன்று சுற்றுவதாகத் தெரிந்தது. விட்டிருந்தால் அவரது படத்தைக்கூட பூஜை அறையில் வைத்திருப்பார்.அப்படிப்பட்ட ஆசானுக்குக்கூடத் தெரியாமல் சென்னை வந்திருந்தார். இதுவும் அவர் சொன்னதுதான்.எல்லவற்றையும் சந்தேகப்படு, எதையும் நம்பாதே, உனது எல்லாக் கதவுகளையும் திறக்காதே. நல்லதொரு விகடம் கேட்டாலும் வாய்விட்டுச்சிரிக்கக்கூடாது. இப்படி அவரிடம் ஒரு பெரும் பட்டியலிருக்கும். அதுதான் இவருக்கு வேதம். உன்னத மறை வேதப்படி கொம்பு மேட்டரை அவரிடமே மறைத்து விட்டார். இப்போது பாருங்கள் இந்தப்பாழாய்ப் போன சென்னையில் எல்லோரும் மிடுக்கானவர்களாகத்தெரிகிறார்கள், அதிகாரிகளையும் சிப்பந்திகளையும் பிரித்துப்பார்க்க முடியாமல் அவர் தவியாய் தவித்தார். யார் எப்படிப்போனாலென்ன இவருக்கு வேண்டியது உயர் ரகமருத்துவர்கள். அவர்கள் சென்னையில் நிறைய்யயிருந்தார்கள்.அவர்களெல்லாரும் ஒன்று கூடியிருந்த அந்த மண்டபத்துக்கு அழைக்கப்பட்டார் நடுநாயகமாக உட்கார்த்தி வைக்கப்பட்டார். தமிழ் தொலைக்காட்சிகளோடு ஸ்டார் டி வி க்காரர்களும் தினத்தந்தி முதல் நச்சினு இருக்கிற தமிழ் முரசு வரையிலான அனைத்து பிரபல பத்திரிகைகளும் வந்திருந்தது. நல்ல கொழுத்த தீனி காத்திருக்கிறது என்கிற நினைப்பில் எல்லாவற்றின் நாக்கினின்றும் எச்சில் ஒழுகிக்கொண்டிருந்தது. ஒனிடா டீவிக்கம்பெனிக்காரனுக்கு மிகப்பெரிய அதிசயப்பரிசு கிடைத்திருந்தது. அவசர அவசரமாகக் கூட்டப்பட்ட நிர்வாகாக்குழுவிலும், அட்வர்டைஸ்மெண்ட் டிபார்ட்மெண்டிலும் பிரதானப் பொருளாகப் பேசப்பட்டது. சன் தொலைக்காட்சிக் குழுமத்தின் அனைத்து மொழி பிரதிநிதிகளும் வந்திருந்தார்கள். பக்தி தொடர் எடுக்கிற இயக்குனர் பெருமக்கள் ஜென்ம சாபல்யமடைந்தது போல் காத்திருந்தார்கள். முறைப்படியான அறிமுகத்துக்குப்பின்னர் இவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது எல்லாப்பிரபலங்களிடமும் கேட்கப்படுகிற அதே கேள்விப்பட்டியல் தான். '' முடிதிருத்துபவருக்கு, உங்கள் மனைவிக்கு, தெரிவதற்கு முன்னாள் உங்களுக்கு முதன்முதலில் எப்பொழுது தெரிய வந்தது''நன்றாக யோசித்து நிறைய்ய அவகாசமெடுத்துக்கொண்டு சொன்னார்'' முதன் முதலாக ஆபீசருக்கான ட்ரெயினிங்கில் இருக்கும் போதுதான் கொம்பு வளருவதாக உணர்ந்தேன்''.( ஒரு வனதேவதையும் ரெண்டு பொன்வண்டுகளும் தொகுப்பு- 2005 )8 comments:

☼ வெயிலான் said...

கதையைப் படிச்சிட்டிருக்கும் போதே எனக்கே லேசா கொம்பு முளைச்ச மாதிரி இருந்தது.

அருமையான கதை.

ஆ.முத்துராமலிங்கம் said...

ரொம்ம நல்லா இருந்துச்சுங்க கதை.
படிக்க படிக்க சுவாரசியம் குறையல.

அன்புடன் அருணா said...

படித்து முடித்ததும் தலையை நன்றாகத் தடவிப் பார்த்துக் கொண்டேன்...
அன்புடன் அருணா

ஆ.ஞானசேகரன் said...

என்னையும் கவணித்து பின் தொடர்வதற்கு மிகவும் நன்றி... உங்களின்பக்கங்களும் சுவையுடன் இருக்கின்றது... இனி உங்கள் பக்கம் வருவேன்...

காமராஜ் said...

வணக்கம் வெயிலான் எப்படியிருக்கிறீர்கள்.
எல்லோருக்குள்ளும் பதுங்கிக்கிடக்கிற
ஒரு மெகா சைஸ் " நான் ". அதைச்
சரிசெய்கிறதுதானனெழுத்தின் வேலை.
கலைஞனின் வேலை.
ஒருகாலத்திலும் உங்களுக்கு வளரச்சான்ஸ் இல்லை.
வருகைக்கு நன்றி.

காமராஜ் said...

வணக்கம் முத்துராமலிங்கம் சார்
வருகைக்கு ரொம்ப நன்றி.

காமராஜ் said...

வாருங்கள் அருணா மேடம்.
சுய பரிசோதனை செய்கிற
எவருக்கும் கொம்பு வளராது.
கருத்துக்கு நன்றி

காமராஜ் said...

வாருங்கள் ஞானசேகரன்
உங்களதும் ஒரு பயனுள்ள பதிவுகளின்
வலைத்தளம். வருகைக்கு நன்றி