24.5.09

சதாத் ஹசன் மாண்டோ: பேரின வாதத்தின் ரத்தக் கவிச்சையைச் சொல்லும் கலைஞன்
ரொம்ப வருசத்துக்கு முன்னாடி இவரைப்பற்றி அடிக்கடி பேச்சு வரும். தோழர் எஸ்.ஏ.பி., பீகே, மாது, சவெ, எஸ்ரா, அப்புறம் மணிமாறன் ஆகியோர் பேசும்போது உடனிருந்திருக்கிறேன். ஆனால் அவரைப் படிக்கவேண்டுமென்கிற உந்துதல் அப்போதெல்லாம் வந்ததேயில்லை. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் விளைவால் ஏற்பட்ட நாசங்களை இவ்வளவு அழுத்தமாகச்சொன்ன எழுத்துக்கள் வேறு இல்லவே இல்லை. ஒரு பேரினம் கட்டுக்கடங்காமல் சிறுபாண்மையினர் மீது நடத்தும் கொடூரத்தை எந்த அளவுகோல் கொண்டும் அளக்கமுடியாது. அரசுசர்ந்த காவல், நீதி, எல்லாம் அங்கிகளைக் கழற்றிப் போட்டுவிட்டு அம்மனமாகும் நிகழ்ச்சிகள் வரலாறு முழுக்க விரிந்துகிடக்கிறது. சதாத் ஹசன் மாண்டோ. விவரிக்கவும் - படிக்கவும் கூசுகின்ற நிஜங்கள் அவரது பதிவுகளில் பரவிக்கிடக்கிறது.நாங்கள் ' இதுவேறு இதிகாசம் ' ஆவணப்படத்துக்கான பேட்டிகளைப்பதிவு செய்துகொண்டிருந்த போது மதுரை மாவட்டம் மேலவளவு கிரமத்துக்குப் போனோம். பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட ஏழு பேர் படுகொலை குறித்த பேட்டி. ஒளிப்பதிவாளர் ப்ரியா கார்த்தி பதிவு செய்துகொண்டிருந்தார் மாதவராஜும் நானும் பேட்டியெடுத்துக் கொண்டிருந்தோம். படுகொலைச் சம்பவத்தை தேதிவாரியா ஒருவர் சொன்னார். கொலை செய்து முடித்த பிறகு பிணங்களின் மேல் அவர்கள் செலுத்திய வன்முறை கற்பனைக்கு எட்டாதது. அதைக்கேட நாங்கள் இரண்டு பேரும் ஆடிப்போய் அந்த இடத்தைவிட்டு சற்றுத் தள்ளிப்போய் எங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டோம். இப்படியெல்லாம் நடக்குமா மனிதனை மனிதன் இவ்வளவு குரூரமாக கொலைசெய்வானா எனும் சந்தேகங்கள் வந்து போனது.ஆனால் சதாத் ஹசன் மாண்டோவின் தொகுப்பு அதையெல்லாம் விடக்குரூரமான பதிவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறது. 616 பக்கங்கள் கொண்ட' மாண்டோ படைப்புகள்' . அந்தத் தொகுப்பில் 21 கதைகள், 32 சொற்சித்திரங்கள், பாகிஸ்தான் அதிபர் ஜின்னா, சினிமாத்துறையில் தான் நெருக்கமாகப் பார்த்த நர்கீஸ், நூர்ஜஹான், அசோக்குமார் போன்றோர்களைப் பற்றிய ஒளிவு மறைவற்ற நினைவுக்குறிப்புகள் எல்லாம் அடங்கியிருக்கிறது. ' ஜில்லிட்டுபோன சதைப்பிண்டம் ' என்கிற சிறுகதை கலவர காலத்தில் கொள்ளையடிக்கப் போன ஐஷர் சிங்கின் அணுபவத்தைச் சொல்கிறது. பொருள்களைக் கொளையடித்துச் சலித்துப்போன அவன் அங்கிருந்த ஒரு பெண்ணைத் தூக்கிக்கொண்டு வருகிறான். அவளோடு உடலுறவு கொள்கிறான் இறந்து போனவள் என்று தெரிந்தபின்னும்.மிக நீண்ட கதைகளை விட பத்து வரியில் நச்சென்று குரூரத்தைப் பகடி செய்கிற சொற்சித்திரங்கள் அகோரமான மதவெறியை சின்னச் சின்ன துனுக்குகளில் தோலுரிக்கிறது, அதிலொன்று.


நிரந்தர விடுமுறை

------------------------.


" அவனைப்பிடித்துக்கொள். தப்பவிடாதே"கொஞ்ச தூரம் துரத்தியபிறகு வேட்டையாடப்பட்டவன் அகப்பட்டுக்கொண்டான். அவன் குத்திக்கொலைசெய்யப்பட இருந்த தருணத்தில் நடுங்கிக்கொண்டே " தயவு செய்து என்னைக்கொலை செய்யாதீர்கள், தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்...நான் என் வீட்டிற்கு விடுமுறையில் போய்க்கொண்டிருக்கிறேன் " என்றான்.


0


இந்த காலத்தில் மாண்டோ வாசிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டிய மாபெரும் எழுத்தாளர். அழிவுகள் சுற்றிப்படர்கையில்நோவாவின் பேழையைப்போல் அங்காங்கே நம்பிக்கையின் குரல் மெலிதாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதை உரக்கச்சொல்கிற அத்தியாவசியம் இருக்கிறது. மேலவளவு படுகொலை நடந்த நகரப்பேருந்தில் எற்கனவே பயணம் செய்த கொலைசெய்தவகளின் ஜாதிக்காரப் பெண் தனது கால்களுக்கு இடையில் அந்தக் கண்டாங்கிச் சேலையின் மறைசலில் ஒரு உயிரை ஒளித்துவைத்து காப்பாற்றியதாகப் பின்னர் கேள்விப்பட்டோம். உயிர் உருவாக்குவதன் மகோன்னதமும் வலியும் உணர்ந்த பெண் எல்லாவற்றிலும் மேலானவள்.

4 comments:

எம்.எம்.அப்துல்லா said...

மனிதம் மட்டுமே போற்றிய மாபெரும் படைப்பாளி மாண்டோ.

காமராஜ் said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி
அப்துல்லா.

Venugopalan said...

அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறீர்கள் காமராஜ்.......
உங்கள் பழைய பதிவுகள் எல்லாவற்றையும் சனிக்கிழமையன்று வாசித்ததை நேற்று கோவில்பட்டியில் வைத்து உங்களிடம் சொல்லியிருந்தேன்.
இன்று மண்டோ பற்றிய உணர்ச்சிபூர்வமான பதிவினைப் படித்தேன். இலங்கை குறித்ததுமானதையும்தான். மண்டோ படைப்புகளை ஒருசேர வாசிக்கும் வாய்ப்பினை தமுஎச மாநாட்டு வெளியீடு வழங்கியது.....அது ஓர் அதிர்ச்சி வாசிப்பு அனுபவம்.
தொடருங்கள் காமராஜ்.....


எஸ் வி வேணுகோபாலன்

காமராஜ் said...

ஆஹா சந்தோசம், ரொம்ப சந்தோசம்...
வாருங்கள் எஸ்.வி.வி.. வலைப்பக்கத்துக்கு உங்கள்
வரவு நல்வரவாகட்டும். நீங்கள் எப்போதுமே
எனது கிரியா ஊக்கி. அல்லது தாய் காக்கை.
இனி துணிந்து பதிவு போடலாம் எப்படியும்
எனக்கு நீங்கள் பின்னூட்டம் போடுவீர்கள்.
நம்பிக்கை வந்துவிட்டது. ஆமா உங்கள்
வலைப்பக்கம் திறக்க மறுக்கிறதே ?