16.5.09

அடுத்த தேர்தல் வரை
இன்று மதியம் கிராமத்துக்குள் நுழையும்போதே சீமைச்சாராய வாடை தூக்கலாக இருந்தது. வெற்றிக்களிப்பில் இருந்தஎல்லோரும் அழகிரியை விடவும், ராகுல்காந்தியை விடவும் நூறு மடங்கு சந்தோசத்தில் இருந்தார்கள். டாஸ்மாக்கில் சரக்கெடுத்து வந்து விற்கிற பையனுக்கு இன்று மூன்று மடங்கு வருமானம். காரணம் இன்று டாஸ்மக் கடைகளுக்கு விடுமுறை. அதே போலத்தான் காந்தி பிறந்த நாளுக்கும் கடையில் விற்பதைவிட அதிக சரக்கு விற்கிறது. இதெல்லாம் இங்கே மட்டும் கிடைக்கிற ரொம்ப நூதனமான முரண். சில அலுவலகங்களில் விடுமுறையன்றும் ஜரூராக வேலை நடக்கும் பார்த்திருக்கிறீர்களா.

ஊருக்குபோகிற போதெல்லாம் என்னிடம் சரக்கடிக்க காசு கேட்கும் உறவினர்கள் இன்று கேட்கவில்லை அப்படி ஒன்றும் அவர்களின் பொருளாதாரம் கூடிப்போகவில்லை. ஐடி கட்டாதா, அல்லது சம்பளம் கூட்டித்தராத அல்லது பங்குபேரத்தில் கொள்ளையடித்த அல்லது வங்கிகளில் கடன் வாங்கி மஞ்சள் கடுதாசி கொடுத்து எமாற்றிய காசுகள் டெல்லியிலிருந்து கைமாறிக் கைமாறி விருதுநகர் மாவட்டத்துச் சிற்றூர் ஒன்றில் சீமைச்சாராயமாக நாறிக்கொண்டிருக்கிறது. எப்படியும் நாளை விடிவதற்குள் ஒரு சாத்தூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதியப்படும். ஒரு மாத காலம் பெண்டு பிள்ளைகள் பட்டினியாகும். மீண்டும் கந்துவட்டிக்கு கடன் வாங்குவார்கள்.

டைம்ஸ் நௌ, சிஎன்என், தொலைக்காட்சிகளில் கூட அரசியல் நோக்கர்கள் அதே சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கிறார்கள் இந்த இரண்டு நாளைக்கு பிரனாய் ராய், சர்தேசாய், போன்றோர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?.
அடுத்த ஐந்து வருடத்துக்கு தங்க நாற்கர சாலைகள், சிறப்பு பொருளாதார மண்டலம், ஒரு லட்சரூபாய் கார், ஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் என பளபளக்கும் திட்டங்கள் கட்டாயம் வரும். சுவிஸ் வங்கிகளில் வேறு வேறு பெயர்களில் இந்திய டெபாசிட்டுகள் சேரும்.
ஆனால் நாளைக்காலையில் யாராவது கூலி வேலைக்கு கூப்பிட மாட்டார்களா என்று காத்துக்கிடக்கப் போகிற அவர்களின் தூக்குச்சட்டியில் தொட்டுக்கொள்ள பட்டவத்தல் கூட இருக்காது.

10 comments:

கலையரசன் said...

பதிவு நன்று!
உணர்வுகள் தொடரட்டும்!!

அன்புடன் அருணா said...

ம்ம்ம்...தவிர்க்க முடியாத யதார்த்தம்!!
அன்புடன் அருணா

காமராஜ் said...

அருணா மேடம். கருத்துக்கு நன்றி

காமராஜ் said...

உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி
கலைஅரசன்.
கருத்துக்கும்.

லோகு said...

உண்மை,,,

****


உங்க பேரு இயற்பெயரா?? புனைப்பெயரா??

Joe said...

//
டைம்ஸ் நௌ, சிஎன்என், தொலைக்காட்சிகளில் கூட அரசியல் நோக்கர்கள் அதே சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கிறார்கள் இந்த இரண்டு நாளைக்கு பிரனாய் ராய், சர்தேசாய், போன்றோர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?.
//

சொன்னாத் தானே தெரியும்?!?

காமராஜ் said...

வாருங்கள் லோகு வணக்கம்.

இயற்பெயர்தான்.
இதென்ன புதுக்கதை.

காமராஜ் said...

வணக்கம் ஜோ. வருகைக்கும் கருத்துக்கும் மிக மிக நன்றி.
பொய்களில் மூணுவகை உண்டு, நம்பும்படியாக பொய்சொல்லுவது,
நமபமுடியாத அளவுக்கு பொய்சொல்லுவது, புள்ளிவிபரங்களோடு
பொய் சொல்லுவது. சொல்லவா ?

Joe said...

சம்பளம் எவ்வளவு தெரியுமா-ன்னு கேட்டுட்டு பதில் சொல்லாமே போய்ட்டீங்களே, அதைக் கேட்டேன் காமராஜ்.

காமராஜ் said...

வணக்கம் ஜோ.
நான்கேள்விப்பட்டவரையில் கிட்டத்தட்ட ஒருகோடி.
கள்ளக்கணக்கு, தப்பு, அதிகம் என்று சொல்லிக்குறைத்தால் கூட
இரண்டு வேளை மட்டும் சாப்பிட முடிகிற சாதாரண ஜனங்கள்
வாழுகிற இந்த நாட்டில். இது அநியா....யமான சம்பளம்.