18.4.10

அடையாளம்,ஒற்றுமை,விடுதலைக்கான போராட்டம். ( தலித் வரலாறு

வன்கொடுமைகளுக்கெதிரான கலகம்.

ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழமையானதும், இன்னும் புதுக்கருக்கு மாறாமல், இளமையோடிருப்பதுமானது என்று
கணக்கெடுத்தால் அது இந்திய தலித்துகளின் நிலைமை மட்டும்தான். ஆனால் அதற்கெதிரான காலகக்குரல்கள் எழுந்து தொடர்ந்துகொண்டிருக்கும் சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டுமுன் அவற்றை
மூன்றாகப்பிரிக்கலாம்.

1 ) வேதகாலம் - முகம்மதியர்காலம் ( கி மு 600 முதல் கி பி 1700 வரை )

2)  ஆங்கிலேய - மற்றும் கிறிஸ்துவ காலம் (  கி பி 1700 முதல் 1947 வரை )

3)  சுதந்திர காலம் ( 1947 முதல் இன்று வரை )

வேதங்களின் மேல் கேள்விகள் வைத்த முதல் புருஷர்கள்
----------------------------------------------
வேதகாலம் - முகம்மதியர்காலம்
பிராமணீய மேலாதிக்கத்தின் ஆணிவேரான வேதங்களின் மேல் கேள்விகளை வைத்து  ஆட்டத்தைத் துவக்கியவர்களில் முக்கியமானவர்கள் இரண்டுபேர். அந்த இருவரும் பிராமணர் அல்லாத சத்திரிய
குலத்து அரசர்கள். கி மு 540 முதல் 468 வரை ஆண்ட மஹாவீரர். அடைமொழி, பெயர், செயல் எல்லாவற்றுக்கும்மொரு பொருள் தந்த அந்த அரசன் தான் பிராம்ணர்களை எதிர்த்து ஜைன மதத்தை
நிறுவிய முதல் அரசன். முதன்முதலாக எழுந்த கலகக்குரலாக இருந்ததனால் அது ஆயிரமாண்டு வேதக்கருத்துக்களை எதிர்க்க போதிய வலுவும் கருத்தும் இல்லாது இருந்தது. அது மட்டுமல்லாமல் வேத
காலத்து ஜாதிய அடுக்குக்கு முறைக்கு மாற்றாக ஏதும் முன்வைக்க முடியமல் போனதால், அதற்குள்ளேயே அமுங்கிப்போனது.

அடுத்தவர் நிறுவனப்படுத்தப்பட்ட முதல் இந்திய மதத்தை தோற்றுவித்த கௌதம புத்தர்.
( கி மு 563 முதல் 483 வரை )

புத்த மதம் பெருவாரியான ஜனங்களால் ஆகர்ஷிக்கப்பட்டதால் ஒரு பெரும் மாற்றம் வர இருந்தது. கிராமங்களுக்குள்ளும், தொழிலாளர்களிடையிலும், பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களிடமும் தன் கருத்துக்களைச் சொல்ல நாடு முழுவதும் புத்தர் நடந்தார். அவர்போன இடமெல்லாம் பௌத்தம் பற்றிக்கொண்டது. ஆதலின் பல அரசர்களும் இதைப்பின்பற்ற நேர்ந்தது. ஆங்கிலப்பேரரசுக்கு முந்தைய பேரரசு ஒன்று உண்டு என்றால் அது அசோகப்பேரரசு மட்டுமே. மக்களை முதன்மைப்படுத்திய, சட்டங்களும், திட்டங்களும், ஆட்சி அமைப்பும் உறுவான  அந்தக்காலத்தைத்தான் வரலாறு களப்பிரர் காலம் என்று பதிவு செய்கிறது. பௌத்தர்களாக  சாமான்யர் பெருகியது கண்டு பொறுக்க முடியாத ஆரியர்கள் புத்த மததுக்குள் ஊடுறுவி கைப்பற்றி அதை மஹாயாணம், ஹீனயாணம் இரண்டாக்கினார்கள். வலுவிழந்த அதை சந்திரகுப்த மௌரியன் எனும் அரசன் சாணக்கியன் எனும் ராஜ தந்திரியின் யோசனைகள் அல்லது சூழ்ச்சியின் மூலம் அரசைக் கைப்பற்றி பௌத்த சகாபத்தத்தை மாற்றினார்கள். ஆட்சி அதிகாரம் கை மாறியதும் நாடு முழுவதிலுமுள்ள ஜைன, சமன புத்த துறவிகளை மொத்தம் மொத்தமாகக் கொன்றார்கள். கூட்டம் கூட்டமாக நாடு கடத்தப்பட்டார்கள்.  உயிர் பிழைக்கத் தப்பித்து நேபாளம் வழியே சீனாவுக்கும், தெற்கே கடல் வழியாக இலங்கைக்கும் போனவர்கள் அங்கே மதத்தை நிறுவினார்கள். மிச்சமூள்ள புத்த மதத்தவர்களை ஆரிய அரசர்கள் அடிமயாக்கினார்கள்.

அந்தப்படு கொலைகளின் அதிர்விலிருந்து இந்திய தலித்துகள் மீள ஓராயிரம் ஆண்டுகள் ஆனது. ஆம் அதன் பின்னர் வந்த முஸ்லீம் ஆட்சிக்காலத்தில் தான் முதன் முறையாக தலித்துக்கள் ராஜ சேவகம் பண்ணுகிற சில காரியங்களுக்கும், அவர்களில் வீரமானவர்களென்று கண்டெடுக்கப்பட்டவர்களை சிப்பாய்களாகவும் சேர்க்கப்பட்டார்கள்.

இந்தியாவின் முதல் தலித் தளபதி " அம்ரித்நாக் மஹர் ". மராட்டிய மாநிலத்து முஸ்லீம் மன்னன் பேதரின் படையில் சிறந்த வீரனாக அறியப்பட்டான். அதன் பிறகுதான் 1129 ல் அங்குள்ள மஹர் இனத்தவர்களுக்கு 52
வகையான உரிமைகள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டது.இதே முஸ்லீம் ஆட்சிக் காலத்தில் கக்குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு நிகழ்வு '' சூவ்பி '' தத்துவம்.அது ஆண்டவன் படைப்பில் அணைவரும் சமம் எனும் கொள்கையைச் சொன்னது.

அதன் பின்னர் தோன்றிய " பக்தி மார்க்கம் "  தவம், வேள்வி, சமஸ்கிருத சுலோகம் ஆகியவற்றை நிராகரித்து,
பாடல், தியானம், சேவை ஆகியவற்றின் மூலம் கடவுளை அடையலாம் என்று ஒரு மாற்றுத் தத்துவத்தை முன்னிறுத்தியது. அதிருஸ்ட வசமாக அதை முன் மொழிந்தவர்களில் முக்கியமானவர்களாக தலித்துகள் இருந்தார்கள். அவர்களில் தென்னிந்தியாவின் புனித சொக்கமேலரும், துறவி கனகரும் மிக முக்கியமான தலித் துறவிகளாவார்கள்.

தமிழகத்தில் நந்தனாருக்கு இணையான அடயாளங்களோடு ஒப்பிடும் அவர்களிருவரும் பந்தர்ப்பூர் ஆலயத்துக்குள்ளும், உடுப்பி கிருஷ்ணர் ஆலயத்துக்குள்ளும் நுழையவிடாமல் தடுக்கப்பட்டார்கள்.
வட இந்தியாவில் துறவிகள் நம்தேவும், ரவிதாஸும், கபீர் தாஸரும் குறிப்பிடத்தக்கவர்கள்.

         கடவுள் முதலில் ஒளியைப்படைத்தார்,
         அந்த ஒளியிலிருந்து உலகம் பிறந்தது,
         எல்லா மணிதர்களும் கடவுளுக்கே சொந்தம்,
         இதில் யார் உயர்ந்தோர்? ஏன் தாழ்ந்தோர் ?

கபீர் தாஸரின் இந்தக்கேள்வியைத்தொடர்ந்து, சீக்கிய மத நிறுவனர் சுவாமி குருநானக் தலித்துகள் குறித்த முதல்
கேள்வியை வைக்கிறார்.

         கீழுக்கும் கீழான ஜாதி,
         இன்னும் அது கீழேயே இருக்கிறது,
         நானக் எப்போதும் அவர்களோடு இருப்பார்,
         அவருக்கு மேலும் இல்லை கீழும் இல்லை,
         உனது கருணை நிலத்தின் மீது விளைகிறது,
         அந்த மக்களின் உழைப்பால் அது பயிராகிறது.

கபீர் தாசரும், குருநானக்கும் அவர்களுக்காகப் பரிந்து பேசினாலும்கூட. உண்மையான கலகக் குரல் ஒடுக்கப்பட்டவர்களின் சொந்த வார்த்தைகளிலிருந்துதான் உண்மையான வலியின் வேதனை வெளிவந்தது.

         " உண்மையான வலியை அடிபட்டவனால் மட்டுமே உணரமுடியும் "

என்று பஞ்சாபியில் ஒரு பழமொழியிருக்கிறது. அந்த வலியோடு வந்த இரண்டு பேரின் வார்த்தகள்
பற்றிப்பேசலாம். நம்தேவ், ரவிதாசர். நம்தேவ், குருகிரந்த் சாஹிப் எனும் சீகிய பாடல்கள்  எழுதியவர். ஒரு இந்துக்கோவிலில் அவர் நுழைந்தபோது ஏற்பட்ட அவமானத்தைப் பாடிப் பதிவு செய்கிறார்.
        
         ஆனந்தமான மனநிலையில் ஆலயம் நுழைந்தேன்,
         ஐயா உன்னைத்தொழுவதற்கு,
         ஐயகோ ஆண்டவா என்னை எத்தித்தள்ளினார்கள்,
         வெளியில் விழுந்தேன்.
         நான் கீழானவனாம்.
         என்னைப் படைப்பதற்கு
         சலவைக்கரன் வீடுதானா கிடைத்தது உனக்கு ?

ரவிதாசரின் தர்க்கம் அலாதியானது எனவே தான் மத்திய காலத்தில் தலித் குழுக்களால் அவரது பாடல் தெருத்தெருவாகப் பாடப்பட்டது. சீக்கியப்படல்களுக்குள் தலித் விடுதலைக்கான விதைகளைப்போட்ட அவரது
பாடல்கள். அந்த மக்களின் மனதில் தீ வளர்ந்தது. ஸ்ரீ குருகிரந்த் சாஹிப்பில் இடம் பெறும் இந்தப்பாடல் மிகப்பிரபலமானது.
          
          மேல்குடியென்று கருதும் மக்களே கவனியுங்கள்,
          நான் சக்கிலியன் என்பது நன்றாகத்தெரியும்.
          என் மனதும் பாடலும் எப்போதும் இறைவனோடே இருக்கும்.
          கங்கை நீரில் காய்ச்சினாலும்
          சாராயம் ஒருபோதும் புனிதமாகாது.
          பக்தன் எவனும் பருகவும் மாட்டான்.
          அசுத்தமான தார் மரங்கள் ஆண்டவனுக்காகாது,
          அதில் செதுக்கும் காகிதமும் அசுத்தமா?
          காகித்தில் எழுதப்பட்ட சுலோகம் சொல்லும் போது மட்டும்
          கைகூப்புகிறது தலை தாழ்கிறது.
          எனவே கனவான்களே எனது சக்கிலிய மக்கள்
          அடிபட்டவர்கள், அடக்கப்பட்டவர்கள், கட்டுண்டவர்கள்
          அவர்கள் இறந்த மிருகங்களின் உடலோடு
          " பனாரசை " ச் சுற்றி அலைகிறார்கள்.
          உனது சேவகன் ரவிதாஸ்
          உனது பேரால் அவர்களிடம் சேருகிறான்.

காலங்காலமாக அடக்கப்பட்டவர்களின் குமுறல் பக்தியின் மூலம் வெடிக்கிற இந்த தருணத்துக்காகக் காத்துக்கிடந்ததுபோல மக்கள் அதன்பால் ஈர்க்கப்படுகிறார்கள். எனவே வேதகாலத்தில் தொடங்கிய இந்த  குமுறல்கள் முஸ்லீம் காலத்தில், பக்திமார்க்கத்தாலும், சூவ்ப்பி தத்துவத்தாலும் ஒடுக்கப்பட்டவர்களிருக்கும் மூலை  முடுக்கெல்லம் வெளிச்சம் பாய்ச்சியது. இறைவன் முன்னால் எல்லோரும் சமம் என்கிற நிஜத்தை வெளிப்படையாக்கியது. ஒரு சின்ன தீக்கங்காக ஒரு அக்கினிக்குஞ்சாக விதைக்கப்பட்ட அது
ஒரு பெரும் மாற்றத்துக்கான  கேள்வியாகக் காத்துக்கிடக்கிறது. ஆரிய தத்துவங்களுக்கு எதிராக முளைத்தவர்களை அழிப்பது, அழிக்கமுடியாதவர்களை கேலிப்பொருளாக்குவது அவர்களின் நடைமுறைத்தந்திரமானது. எனவேதான் தங்களுக்கெதிராகக் கலகக்குரல் எழுப்பிய பஞ்சாப்பிகள் இப்போதும் மூளையில்லாதவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.

ஆங்கிலேயர் காலம்
----------------

பிளாசிப்போரும், பக்சர் யுத்தமும் நடைபெற்று ராணுவ அதிகாரம் கையில் கிடைக்கும்வரை ஆங்கில அரசாங்கத்தால் தலித்துகளின் நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன் பின்னர்
ஆங்கில ஆட்சிக்காலத்து ராணுவத்தில் தலித்துகளுக்கு அதிகமான முக்கியத்துவம் தரப்பட்டது. அவர்களுக்கெனத் தனியே இரண்டு பிரிவு ராணுவம் ஒதுக்கப்பட்டது. ஒரு கடற்படைப்பிரிவும் வழங்கப்பட்டது. அதே போல பெங்கால் ரெஜிமெண்டிலும், பஞ்சாப் ரெஜிமெண்டிலும் தலித்துகளுக்கென தனிப்பிரிவுகள் வழங்கப்பட்டன. இதுவே பின்னாட்களில் தலித்துகளின் விழிப்புணர்வுக்கு தூண்டுகோளாக இருந்தது. இந்தக்காலத்தில் தான் நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் தலித் தலித்தல்லாத தலைவர்கள் ஜாதிய மேலாதிக்கத்துக்கு எதிராக வலுவான சொற்களோடு
மக்களை எழுப்பி விட்டார்கள்.

ஆங்கில அரசாங்கம் இதே காலத்தில் மக்கள் தொடர்பு சாதனங்களான தபால் தந்தி, செய்தித்தாள், போக்குவரத்து புதிய நீதித்துறை, புதிய நிலச்சட்டம், புதிய கல்வித்திட்டம், மற்றும் தொழில் வளர்ச்சி ஆலைகள் நிறுவுதல் ஆகியவற்றை இந்தியப்பரப்பில் அறிமுகப்படுத்தினர். இதன் மூலம் கல்வியும்  புதிய புதிய கடவுள்களும் அறிமுகமாயின, ஆச்சரியத்தோடு தலித்துகள் வெளி உலகில் பயணப்பட்டனர். அப்போது தவிர்க்க முடியாத கேள்விகளும் எழுந்தன அவற்றுக்கான ஓவ்வொரு பதிலிலும் இயக்கங்கள் தோன்றின.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் அங்கங்கங்கே இயக்கங்கள் தோன்றின.

ராஜஸ்தானில், ராம்தாஸ் தோற்றுவித்த ராம்தேவ் பந்த் இயக்கம்  1726 - 1798
மத்திய இந்தியாவில், குரு காசிதாஸ் ஆரம்பித்த சத்நாமி இயக்கம் 1756 - 1850
ஆந்திரத்தில் நஸ்ரையா, தோற்றுவித்த நஸ்ரையா இயக்கம்       ... - 1825
வங்காளத்தில், நம்சூத்ர ஹரிச்சந்த் தோற்றுவித்த மத்னா இயக்கம்  811 - 1879
ஆகியவற்றைகுறிப்பிடலாம்.

ஆனால் இந்திய வரலாற்றைக் கடந்து செல்லுகிற வரலாற்றறிஞர்கள் எல்லோரும் அந்த 1857 ஆம் வருடத்தை நின்று நிதானித்துக் கடந்து செல்கிறார்கள். முதல் இந்திய சுதந்திரப்போர், கப்பற்படை எழுச்சி, சிப்பாய்கள் கலகம் இப்படியான பலபெயர்கள் கொண்டழைக்கப்படும் நிகழ்ச்சி நடந்த வருடம் அது. அடிமை இந்தியாவை ஒரு உலுக்கு உலுக்கிய நிகழ்ச்சி நடந்த ஆண்டு அது.  இந்தியாவில் சுதந்திரக்கனல் தீயாகப்பற்ற ஆரம்பித்தது. அதோடு கூடவே தலித்துகளின் விழிப்புணர்வும் போரட்ட எழுச்சியும் ஆரம்பமானதும் இதே கால கட்டத்தில்தான். 

அது ஒரு சிரிய பொறியால் உருவான காட்டுத்தீ. ராணுவ சிப்பாய் ஒருவன் தாகத்துக்கு தண்ணீர் கேட்டுப்போனான் போன இடம் ராணுவ கேண்டீன். கேட்டது ஒரு சிப்பாயிடம். அந்த சிப்பாய் தண்ணீர் தர மறுத்தான். மறுத்ததற்கான காரணம் இந்தியாவில் பிரசித்தமான காரணம். அவன் தொட்டுக் குடிக்கும் டம்ளரில் தீட்டுப் பட்டுவிடும் என்பது தான் அந்தக் காரணம். வழக்கம் போல தண்ணீர் கேட்டவன் திரும்பிப்போயிருந்தால் நிலைமை விபரீதமாகியிருக்காது. அவன் சொன்ன பதிலில் ஒரு கலகத்துக்கான ஆதி விதை இருந்தது. " உன் குலப்பெருமையை இன்னும் தக்கவைத்துக்கொள் கொஞ்ச நேரத்தில் ஆங்கிலப் பிரபு வருவான் வந்து துப்பாக்கியிலுள்ள பன்னிக் கொழுப்பைக்கடிக்கச் சொல்வான் அப்போது உன் குலப்பெருமை எங்கே போகிறது என்று பார்ப்போம் " என்று சொன்ன மறுகணம் அந்தச்செய்தி காட்டுத்தீபோல பரவிக் கலகம் வெடித்தது.

கலகம் ஓய்ந்த போது  இரண்டு பின்விளைவுகள் ஏற்பட்டது. ஒன்று உடனடியாக ஆட்சி அதிகாரம் பிரிட்டிஷ் மஹராணிக்குப்போனது. இரண்டு, பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு தலையீடாக் கொள்கையை உருவாக்கி அதை பாராளுமன்றத்தில் சட்டமாகக் கொண்டுவந்தது. அதன் படி " இந்தியாவின் மத ஜாதி விவகாரங்களுக்கு உரிய மரியாதை தருவது " என்று சொல்லுகிற அந்தச்சட்டம் ஜாதிய ஒடுக்குமுறைக்கு சாமரம் வீசுவதாக அமைந்தது. ஆங்கில அரசாங்காமும் கூட சம்பாதிக்க வந்த இடத்தில் நமக்கெதுக்கு வம்பு என்று ஒரு நிலை எடுத்தது. ஆனாலும் ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் கேட்கப்படாமல் இருந்த கேள்வியை ஒரு சாமன்ய சிப்பாய் கேட்டான். கேட்கமுடியும் என்று கதவுகளைத் திறந்து வைத்தான். எனவே தான் சுதந்திர வரலாற்றில் ஒரு பெரும் சலனத்தை
ஏற்படுத்திய அந்த சிப்பாய்க்கலகம் தலித் இயக்கங்களுக்கும் உந்து சக்தியாக இருந்தது.

ஆயிரம் உண்டிங்கு ஜாதி அன்னியன் புகுதல் என்ன நீதி என்ற கேள்வியின் மேல் பரப்பில் சுதந்திரத்தீ பரவலாம்.ஏற்கனவே அடிமைப்பட்டுக்கிடக்கும் அவர்கள் பதிலுக்கு ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை எனப்பாடுவார்கள். அப்படியான தலித் குரல்கள் இந்தியாவின் எல்லாத்திசைகளிலிருந்தும் கிளம்பியது.

தமிழகத்தில் 1890 ஆம் ஆண்டு M.C.ராஜாவால் துவங்கப்பட்ட ஆதி திராவிட மஹாஜன சபை அரசாங்க வேலைகளுக்கான தகுதியில் தலித்துகளுக்கு சலுகை வழங்கவேண்டுமென்று கோரியது, அது 1894 ஆம் ஆண்டு அப்போதைய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.  பறையர் இனத்தை திராவிட நாட்டின் பூர்வகுடிகளாக ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆதி திராவிடர்கள் என்ற பெயர் மாற்றம் வேண்டுமென்று கோரியது.

1917 ஆம் ஆண்டு குரு ராமச்சந்திர ராவால் தொடங்கப்பட்ட ஆதி ஆந்திர மஹாஜன சபையும் இதே கோரிக்கையை முன்னிறுத்தி போராடியது. ஆந்திர தலித்துகளுக்கு கல்வி கற்கும் உரிமையை ஜில்லாபோர்டு, பஞ்சாயத்து, உறுப்பினர் பதவி, பொதுக்குளங்களில் தண்ணீர் எடுக்கு உரிமை ஆகியனவற்றைச்  சட்டமாக்கவேண்டும்மெனவும் கோரியது.
             
1912 ல் அனைத்து வங்க நம்சூத்ர சங்கம் 
1927 ல் K.கேளப்பன்., கிருஷ்ணன் ஆகியோரது தலைமையில் கேரளத்திலும்
1930 ல் கர்நாடகத்திலும்
1926 ல் மங்கோ ராம் தலைமையில் பஞ்சாபில் ஆதி தரம் எனும் இயக்கமும்.

குரு ரவிதாஸின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது.  சாமர், சூரா, சன்சிஸ், பாங்க்ரர்,
மற்றும் பில்ஸ் இனத்தவர்கள் மட்டுமே பூர்வகுடிகள் அவர்களுக்குள் எந்தவிதமான பேதமும் இல்லாதிருந்தது
என்று பிரகடனப்படுத்துகிறது.
1921 ல் உத்திரப்பிரதேசத்தில் சுவாமி அச்சுதானந்த்ஜி ( ஹீராலால் ) துவக்கிய ஆதி இந்து சபை அந்தக்காலத்தில் பிரபலமானது. அது பிராமண போதனைகள் எல்லாவற்றையும் முற்றிலும் நிராகரித்து அந்தந்த பகுதியில் உள்ள குலதெய்வங்களையும் காவல் தெய்வங்களையும் பிரதானப்படுத்துகிறது.
சாமர் தைவ சபா கேரளத்தில் உள்ள கிறிஸ்தவ மதத்தில் உயர் ஜாதி சிரியன் கிறிஸ்தவர்களால் ஒடுக்கப்படுவதை
எதிர்த்து ஒன்றாகத் திரட்டியது.

இந்தியப்பெருவெளியெங்கும் தலித் குமுரல்கள் கேள்விகளாக எழுந்து தமது சந்ததியினரையும், ஏனைய பரந்த சிந்தனையுள்ள மக்களையும் அதுகுறித்து விசனம் கொள்ள வைத்தது. ஆனால்  ஆங்கொன்றும் இங்கொன்றுமாக
சிதறிக்கிடந்த, இந்த குமுரல்களை இணைக்கிற மனிதராக  டாக்டர் அம்பேத்கர் புறப்பட்டார். கற்பி ஒன்றுசேர் போராடு என்ற மூன்று சொல்லால் இந்திய தலித் இயக்கங்களுக்கு உந்து சக்தியாக மாறினார்.
1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோவ் என்னும் ஊரில் பிறந்த அவர் 1919 ஆம் ஆண்டு தலித் இயக்கங்களில்
தன்னை இனைத்துக்கொண்டார். அன்றிலிருந்து தனது அந்திமக்காலம் வரை தனது வாழ்நாளை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே அர்ப்பணித்தார். 1931 ல் லனடன் மாநகரில் நடந்த வட்ட மேஜை மாநாடும், அங்கு அவர்
முன்னிறுத்திய இரட்டை வாக்குரிமை கோரிக்கையும் உலகம் உற்றுநோக்கிய வராலாற்று நிகழ்வுகளாகும். மஹாத்மாக் காந்தியின் உண்ணாவிரதத்தால் இரட்டை வாக்குரிமைக்கொரிக்கையைக் கைவிட்டு விட்டு அதற்குப்பதிலாக பாரளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அதிகப் பிரதிநிதித்துவம் பெறுமளவுக்கு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார்.

ஒடுக்கப்பட்டவர்கள் அரசியல் சக்தியாக உருவெடுத்தால் மட்டுமே ஒட்டுமொத்த விடுதலை சாத்தியம் என்கிற கொள்கையில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அம்பேத்கர்  1936 ஆம் ஆண்டு சுதந்திரத்தொழிலாளர் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் 1942 ஆம் ஆண்டு அகில இந்திய பட்டியல் இனத்தவர் சங்கம் ( All India Scheduled Cast Federation= SCF ) ஒன்றை ஆரம்பித்தார். இந்தியாவில் அப்போது நிலவி வந்த சமூக பின்புலங்களைக்கருத்தில் கொண்டு அரசியல் அதிகாரம் பெறுவது ஒன்றே தலையாய நோக்கம் என்பதில் அவர் திடமாக இருந்தார்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவின் அரசியல் அதிகாரம் இந்துக்களுக்கும் முஸ்லீமகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களூக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கான பங்கினை சட்டபூர்வமக்கவேண்டும். இந்த மூன்று
சம பங்கான தூண்களின் மேலே தான்  எதிர்கால இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக வேண்டும். அப்படியோர் நிலைமை உருவாக நீங்களெல்லோரும் ஒரே கொடியின் கீழ் ஒன்றுபடவேண்டும். இதுவரை உங்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதற்கு,  ஒற்றுமையில்லாமல் இருந்தது ஒரு காரணமாகும். ஒன்றுபடுங்கள்
நமக்கான உரிமைகள் சர்வநிச்சயமாக வந்துசேரும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
SCF ன் கிளைகள் பஞ்சாப், உத்திரப்பிரதேசம், வங்காளம், மற்றும் மதராஸ் ஆகிய மாகாணங்களில் நிறுவனமாகி 1956 வரை செயலாற்றியது.

சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் அம்பேத்கர் சட்ட அமைச்சசராகப் பதவி வகித்தார். அரசியல் சாசன வரைவு குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சாசனம் தலித்துகளுக்கு வழங்கிய உரிமைகளின் பட்டியல் மிக நீளமானது. அதில் கணக்கிலடங்காத அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் குவிந்துகிடக்கிறது.  நிஜமான அக்கரையோடு அவை பின்பற்றப்பட்டிருக்குமானால்
தொடரும் வன்முறைகளும் கொடூரங்களும் இன்னும்கூட துப்புறவுக்கு தோட்டி என்கிற இழிகொடுமை  இல்லாது போயிருக்கும். ஆனால் சலுகைகளும் உரிமைகளும் அமல்படுத்துகிற அதிகாரம் தானாகவே உயர் ஜாதியினரின் கைகளுக்குப்போனதால், அது ஒரு காகிதப்பரிசாக மட்டிலும் இன்றளவும் தொடர்கிறது.
 
SCF ஐத் துவங்கிய பிறகு அம்பேத்கர் மக்கள் கல்வி சங்கத்தைத்துவங்கினார். அதனால் மராட்டிய மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகள் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. கற்பி ஒன்றுசேர் போராடு என்கிற கோசத்தை அவரது தொண்டர்களிடமும் ஏனைய தலித் இயக்கங்களிடமும் உரக்கச்சொனார். ஒடுக்கப்பட்டவர்களின் முழு விடுதலைதான் எல்லாவற்றிற்கும் மாற்று என்பதில் மிக உறுதியாக இருந்தார். அதனால்
தன்னால் சாத்தியப்பட்ட வரையிலும் கலகக்குரல் எழுப்பிக்கொண்டேயிருந்தார். 
ஒடுக்கப்பட்டவர்களின் மீது தொடர்கிற ஆதிக்கத்துக்கும், வன்கொடுமைகளுக்கும் காரணம் இந்து மத அடிப்படை
வாதம் என்பதில் எந்த கருத்து ஊசலாட்டமும் இல்லாதிருந்தார். அதனாலேயே 1956 ஆம் ஆண்டு தன் வாழ்நாழின் கடைசிக் கலகமாக  ஆயிரக்கணக்கான தொண்டர்களோடு புத்த மதத்தைத்தழுவினார்.
  
பின்னர் இந்தியத்தலித்துகளை ஒன்று திரட்டும் முயற்சியாக ''மக்கள் ஜனநாயகக் கட்சி'' என்ற ஒன்றை ஆரம்பித்தார்.பின்னர் அதன் பெயரை இந்தியக்குடியரசுக்கட்சி என்று மாற்றினார்.
கட்சியின் நிறுவனச் சாசனங்களை உருவாக்கி அதை ஏனைய தலித் தலைவர்களின் ஒப்புதலுக்காக சுற்றரிக்கையாக அனுப்பினார். அது ஒப்புதலாகி வருகிற வரை காலம் காத்திருக்கவில்லை. இந்திய நிலப்பரப்பில்
ஒடுக்கப்பட்டவர்களை செருப்போடு நடக்க, ஓரளவேனும் மனித அடையாளத்தோடு வாழவைக்கக் கனவுகண்ட கண்கள் அதே 1956 டிசம்பர் மாதம் நிலைகுத்தி நின்றது. சுதந்திர நாளின் பின்னிரவில் நிருபர்கள் நேருவிடம்
போனார்களாம் நேரு தூங்கிவிட்டாரென்று காவலாளி சொன்னாராம், ஜின்னாவின் வீட்டுக்காவலாளியும் அதே பதிலைச்சொன்னானாம், அம்பேத்கர் வீட்டு விளக்கு அணையாது எறிய அப்போதும் கண்விழித்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தாராம். நேருவும், ஜின்னாவும் தூங்கிப்போன இந்தப்பின்னிரவில் நீங்கள் மட்டும் ஏன் தூங்கவில்லை எநக்கேட்டதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலையாகிவிட்டது, ஆனால் தலித்துகளுக்கு  இன்னும் விடுதலை கிடைக்கவில்லை ஆதலால் நான் விழித்திருக்கிறேன். என்று சொன்னாராம். அப்படியான சிந்தனை கொண்டதானாலேயே அம்பேத்கர் தனக்கு முன்னும் பின்னும் போட்டியில்லாமல் சேரிகளெங்கும் சிலையாகியிருக்கிறார். 

அவரது மறைவிற்குப்பின்னர் 1957 ஆம் ஆண்டு இந்தியக்குடியரசுக்கட்சி ஸ்தாபகமானது. அதில் பெரும்பாலான
ஒடுக்கப்பட்டவர்களின் தலைவர்கள் இடம்பெற்றிருந்தார்கள். உ பி, ம.பி, பஞ்சாப், மற்றும் மராட்டியம் ஆகிய
மாநிலங்களில் வலுவாக வேரூன்றிக் கிளை பரப்பிய அதன் வளர்ச்சியால் ஆளும் காங்கிரசுக்கு உதறல் எடுத்தது.
காங்கிரசின் பிரதான எதிர்க்கட்சியான ஜனசங்கத்தோடு கூட்டு சேர்ந்து விடுமோ எனும் அச்சத்தால் அப்போதைய  காக்கிரஸ் முதல்வர் Y.B. ஜவான் அவர்கள் RB கெய்க்வாட் என்கிற குடியரசுக்கட்சியின் தலைவரோடு நட்பு பாராட்டினார். அந்த நட்பினால் குடியரசுக்கட்சிக்கு இரண்டு அனுகூலங்கள் கிடைத்தது. இட ஒதுக்கீட்டில் புத்த மதத்தைத்தழுவிய தலித்துகளும் இணைத்துக்கொள்ளப்பட்டனர். நாக்பூரிலுள்ள " தீக்ஷா பூமி " என்னும் இடத்தில் அம்பேத்கர் ஆயிரக்கணக்கானவர்களோடு புத்த மதத்தைத்தழுவினார் அங்கே ஒரு நினைவிடம் அரசின் செலவில் அமைக்கப்பட்டது. அதனாலேயே RPI யோடு கூட்டணி அமைக்கிற அனுகூலம் காங்கிரசுக்கு கிடைத்தது.
கூட்டணியால் கட்சிக்குள் சர்ச்சை அதைத்தொடர்ந்து பிளவு. கூடணியை ஆதரித்த தலைவர்கள் DT ரூப்வேத்தும்
RD பந்தேரும் முறையே மந்திரியாகவும், பீகார் கவர்னாராகவும் ஆனார்கள்.

தேர்தல் ஜனநாயகக் கேலிக்கூத்துக்குள் கரைந்துபோன தலைவர்களின்மேல் மக்கள் வெறுப்புக்கொண்டார்கள்.
இதே காலத்தில் அமரிக்க ஆப்பிரிக்க கருப்பின விடுதலை இலக்கியங்கள் இந்தியாவுக்குள் பரவலாக வாசிக்கப்பட்டது அதன் கருத்துக்களால் ஆகர்ஷிக்கப்பட்ட மராட்டிய மாணவர்கள். கருப்பின விடுதலைக்கு பெரும்
பங்காற்றிய கருஞ்சிறுத்தை இயக்கத்தின் சாயலில் ஒரு புரட்சி இயக்கத்தை உருவாக்கினார்கள். அதற்கு இந்தியத் தலித் சிறுத்தைகள் எனப்பயெரிட்டனர். அந்த இயக்கம் கிராமங்களினூடாகச் சென்று அங்கே புரையோடிக்கிடக்கிற வன்கொடுமைக் குற்றங்களை உலகறியச்செய்தது. தலித் இலக்கியங்கள் சிறுகதைகளாக, கவிதைகளாக, தன் வரலாறாக வெளியாகி புற உலகின் கவனத்தைத் திருப்பியது இந்தக்காலத்தில்தான். உச்சக்கட்டமாக தேர்தல் புறக்கணிப்பைப் பிரகடனப்படுத்தியபோது அரசியல் அரங்கில் அந்த இயக்கம் ஒரு தனித்துவமான இடத்தைத் தக்கவைத்துக்கொண்டது. அவர்களின் அரசியல் சாசனப்பிரகடனம் கிட்டத்தட்ட மார்க்சீயச்சாயலில் இருந்ததால் அது கட்சிக்குள் விவாதங்களை ஏற்படுத்தியது. மெல்லத் தலைதூக்கிய கருத்துவேறுபாடுகளும் பதவி மோகமும் அந்த இயக்கத்தின் தீவிரத்தன்மையை நீர்த்துப்போகச்செய்தது.

அதன் பின்னர் அம்பேத்கரால் துவக்கப்பட்ட அகில இந்திய சமதா சைனிக் தளம் என்கிற கட்சியை திரு பகவான்தாஸ் புனரமைத்தார். அவரே அம்பேத்கர் மிஷனரியையும் ஆரம்பித்தார். நாடெங்கிலும் உள்ள தலித்துகளை இனைக்க ஒருங்கினைந்த குடியரசுக்கட்சியை உருவாக்கினார்.

பிரகாஷ்ராவ் அம்பேத்கர் குடியரசுக்கட்சி ( பிரகாஷ் ) என்கிற கட்சியை ஆரம்பித்துப்பார்த்தார் அவர் பிற்படுத்தப்பட்ட்வர்களை அந்தக்கட்சியில் இணைக்கிற முயற்சியில் இறங்கினார்.

1980 ல் கன்ஷிராம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பகுஜன் சமாஜ்வாதிக்கட்சி 1990 தேர்தலில் இரண்டு பாராளுமன்ற இடங்களையும், 1993 ல் நடந்த உபி சட்டசபையில் முலாயம் சிங் யாதவுடன் சேர்ந்து 67 இடங்களைப்பிடித்தது. பின்னர் பாரதிய ஜனதாவுடன் கூட்டணியமைத்து   இந்தியாவின் முதல் தலித் முதல்வராக மாயவதி அமர்ந்ததும் அதன் பிறகான அரசியல் நாடகங்களும் நாடறிந்தவை

11 comments:

வானம்பாடிகள் said...

அருமையான தொகுப்பு சார். தென்னிந்தியாவில் நாராயணகுருவின் பங்களிப்பும் முக்கியமானது. http://www.muthukamalam.com/muthukamalam_katturai38.htm

சங்கர் said...

தலித் தலைவர்கள் ஆட்சியை பிடித்தது எல்லாம் சரி.... ஆனால் அவர்களுக்கும் பிராமண தலைவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆட்சி செய்வது மிகவும் கொடுமையான விசயம்...

காமராஜ் said...

அன்பின் வானம்பாடிகள் வந்தனம். இது மாதிரியான பதிவுகளில் பேச்சுக்களில் பொதுவாக ஒரு கனத்த மௌனம் மட்டுமே மிஞ்சும்.அதை உடைத்து முதல் பின்னூட்டமிட்ட உங்களுக்கு என் அன்பும் வணக்கமும்.

காமராஜ் said...

வாருங்கள் சங்கர்.நீங்கள் சொல்வது இருநூறு சதவீதம்
சரி.அதுதான் இங்கிருக்கும் மிகப்பெரும் சாபக்கேடு.

உயிரோடை said...

அண்ணா ஹெவி சப்ஜெட். :(

pavithrabalu said...

தோழரே

அருமையான பதிவு..

////பறைப்பிணம் பயணம் போக
தனிப்பாதை அமைக்கும்
அரசுக்குத் தெரியும்
ஓட்டுப்பெட்டி முன் தீண்டாமை பேசுதல்
மனிதத்தன்மையற்ற செயல் என்பது..////

என்றோ படித்த கவிதை நினைவுக்கு வருகிறது..

இன்னமும் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத வடிவங்களில் தீண்டாமை நிலவி வருகிறது என்பதே யதார்த்தம்...

காமராஜ் said...

அன்பின் லாவண்யா
ofcourse it is heavy,but it is very little sample from the miserable ocean.

காமராஜ் said...

வாங்க பவித்ரா பாலு.
மிக அருமையான கவிதை
படிக்க கொடுத்ததற்கு நன்றி

லெமூரியன்... said...

அருமையான தொகுப்பு அண்ணா....அன்று சிந்திய ரத்தத்திற்கு இன்று பலன் என்று பார்த்தால் சதவிகித அடிப்படையில் ஒன்றுமே இல்லை என்று ஆகிபோகிறது....பீகாரிலும் நாக்பூரிலும் நடக்கும் அடக்குமுறைகளை காணும்போது.....தமிழகத்திலும் உண்டென்றாலும்....ஒப்பீட்டளவில் குறைவு என்றே மனதை தேற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது....இன்னும் எவ்வளவு ஆண்டுகளுக்கு தலித் விடுதலை என்று போராடப் போகிறோமோ தெரியவில்லை...

i criticize periyar said...

I think you need many 101 courses to begin with.Buddhism declined on account of many factors including muslim invasion.Muslim invaders burnt the library in Nalanda.Today there is no Buddhism in (todays) Afganistan and Pakistan.Jainism flourished in many parts and Bhakthi movement emerged as a major challenge.There was no mass killing of followers of Janinism and Buddhism as written by you.Perhaps some commie might have 'manufactured' such 'facts'.
Jainism is still alive in India.
Jains dont consider themselves as Hindus.I hope soon you will write a history in which Bamian Buddha statues were destroyed by Advani
and Talibans would be potrayed as scientists who craked the human genome.There is not even a sentence about Ayyan Kali or Pandithar Ayotheedas in your blog post.Perhaps you have not heard about Jagjivan Ram or Swami Sahajananda or Narayana Guru.
Perhaps this is what your party teaches as 'dalit history'.

Uthaya Kumar said...

arumaiyaana inmaiyaana thakaval