29.4.09

இரு சக்கர வாகனத்தோடு இரண்டு சாகசப்படங்கள்








ஒரு திரைப்படம் உருவாக எத்தனை மனிதகள் காரணமாக இருக்கிறார்கள். கதை, திரைக்கதை, கதைவசனம், இப்படி நீண்டுகொண்டு போகிற உட்பிரிவுகள். இதை உருவாக்க அல்லது திரைப்படத்துக்கு ஏற்ப வடிவமைக்க கதைக் கலந்தாய்வு.தயாரிப்பாளர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், எடிட்டர்,கலை, சண்டை, நடனம், யப்பா இளைப்பு வருகிறது. இன்னும் நூற்றுக்கணக்கான தலைப்புகள் இருக்கிறது. அப்புறம் நடிகர், நடிகை இவற்றோடு உடல் உழைப்பாளர்களான உதவியாளர்கள். இப்படி ஆயிரக்கணக்கான மனிதர்களின் கூட்டு உழைப்பில் உருவாகிறது. ஆனால் அந்தப் படம் யாராவது ஒரு நடிகரின் கணக்கில் காசாகவும், கணக்கில் வராத கள்ளப் பணமாகவும் மாறிப்போவது மட்டுமல்லாமல், அதையே சாக்காக வைத்து அரசியலில் குதித்து நாறிப்போகவும் காரணமாகிறது. ஒரு வருடத்திற்கு நூறுபடங்கள் வந்து மனதிலும் திரை அரங்குகளிலும் நில்லாமல் ஓடிவிடுகிறது. தப்பித்தவறி ஒன்றிரண்டு நல்ல படங்கள் வந்து விட்டாலும் ஆடலும் பாடலும் இல்லாத இந்தியச்சினிமா பாவம் பண்னிய சினிமாவாகிவிடும்.
இந்த வியக்கியானங்களை எல்லாம் ஒரு வரியில் தூக்கி எறியும் வல்லமை கொண்ட காட்சி ஊடகமாக சில படங்கள் இருக்கின்றன. அவற்றில் இருசக்கர வாகனத்தை பின்புலமாகக் கொண்ட இரண்டு படங்கள்.



ஒன்று ' ரைடிங் சோலோ டு தெ டாப் ஆப் தெ வேர்ல்ட்' ஆவணப்படம்.


இரண்டு ' மோட்டர் சைக்கிள் டைரீஸ் ' எனும் ஸ்பானியத் திரைப்படம்.



மும்பையைச் சேர்ந்த முப்பத்திரண்டு வயதுக்கார கவுரவ் ஜெனி. தனது ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிளில் மினிடோர் வண்டியில் ஏற்றக்கூடிய அளவுக்கான பொருட்களோடு ( உணவு, உடை, கொட்டகை, பெட்ரோல், மற்றும்,வாகனப்பராமரிப்பு உபகரனங்களோடு, மருந்துகளும்) இமயமலையின் உச்சிக்கு தன்னந் தனியாகப் பயணமாகிறார். இது தான் ஆவணப்படத்தின் ஒரு வரிக்கதை. சுவாரஸ்யமில்லாமல் முன் நகரும் தார்ச் சாலையையும், நாற்கர சாலைத்திட்டத்தால் விறகாகிப்போன பழைய மரங்களையும் காட்சிப் படுத்திக்கொண்டு துவங்குகிறது பயணம். கொஞ்சம் கொஞ்சமாக உயரம் அதிகரிக்கும்போது சுவாரஸ்யமும் அதிகரிக்கிறது. நமக்கு இதுவரை காட்டப்படாத இமயமலையின் பகுதிகளை ஊடுறுவிக் கொண்டு காமிரா தொடர்கிறது. மனிதர் புழங்காத - கடவுளும் புழங்காத, சாதாரணப் பகுதிகள் வழியே வாகனம் முன்னேறுகிறது.


வழிநெடுகரோமங்களடர்ந்த ஆடுகள், வரிகளடர்ந்த முகங்களோடு அவற்றின் மேய்ப்பர்கள். பனிமலை, புல்வெளி, அரிய தாவரங்கள், அக்வாகார்ட் இல்லாமலே சுத்தப் படுத்தப்பட்ட தெளிந்த நீர். மலை மனிதர்கள் அவர்களின் ஊரும் வீடும், மலைக்கடவுள்கள் அவர்களுக்கு மனிதர்கள் கட்டித்தந்த வீடுகளும். இப்படி உல்லாசமாக நீடிக்கிற பயணம் ஆயிரம் அடி உயரத்துக்கு மேலே போகும்போது பதைபதைப்பை உண்டாக்கும் சாகசமாக மாறுகிறது. கையிருப்பு பெட்ரோல் குறைவாக இருக்கும் போது, அடுத்த பெட்ரோல் பங்க் 350 கிலோ மீட்டர் எனும் தகவல் பலகை நமக்குள் நடுக்கத்தை உண்டு பண்ணுகிறது. பனிப்புயல், வரும்போது ஒரு கிராமத்து வீட்டில் தஞ்சம் புகுந்து. ஆம் ஒரு பெரிய பொந்து போலிருக்கும் வீட்டில் அவர்களோடு ரொட்டி சுட்டுத்தின்பது, அவர்களோடு திருவிழாக் கொண்டாடுவது என இன்னொரு கலாச்சாரமும் மக்களும் நம்முன்னால் வியப்பாக வந்து போகிறார்கள். 16000 அடியில் 80 சதவீத பிராண வாய்வு குறைவான பிரதேசத்தில், பூஜ்ஜியத்தை நெருங்க்குகிற வெப்பநிலையில் மூச்சு விடுவது சிரமமான கணங்களோடு பெட்ரோல் பற்றி எரியும் ஆற்றல் இழக்கிறது. முகமும் உடலும் கருத்துப்போக மௌண்டன் சிக் எனப்படுகிற நோய்க்கு ஆளகிறார் கௌரவ். அதோடு 305 கிலோ எடையுள்ள வாகனத்தைத் தள்ளிக்கொண்டு போகிற காட்சிகளுமாக தொடர்கிறது ஆவணப்படம்.சித்தரிக்கப்பட்ட மயிர்க்கூச்செரியும் திரைப்படங்களை தனது நிஜப்பதிவுகளால் புறங்கால் கொண்டு தள்ளிவிடுகிறது இந்தப்படம். மனித வாழ்வின் இயல்புகளான வீடு மனைவிமக்கள் அலுவலகம் கடிகாரம் நாட்காட்டி உயரதிகாரி அல்லது முதலாளி இப்படியான வளமைகளை உதறித்தள்ளிய சிட்டுக்குருவி நாட்களை இழந்து மீண்டும் மும்பைக்குப் போகிறேன். இனி வார நாட்கள், சனி ஞாயிறு எனும் சிறைக்குத்,திரும்புகிறேன் என்று சொல்லி முடிப்பார் கௌரவ் ஜெனி.



இதில் சொல்ல மறந்த ஒரு தகவல். தன்னந்தனியே பயணம் மட்டுமில்லை அந்தப்பயணத்தைத் தானே காட்சிப்படுத்திக் கொண்டதுதான் மிகப்பெரிய சாகசம். எதாவது ஒரு உயரமான திருப்பத்தில் அந்தத்,தானியங்கி காமிராவை இயக்கிவைத்து விட்டு அதன் பார்வை படுகிறவரை பயணமாகி நின்று மறுபடியும் அதே தொலைவு திரும்பவந்து காமிராவை எடுத்துப் போகவேண்டும். அதனால் அவரது பயண தூரம் இரண்டு மடங்காகிறது. ஒரு இடத்தில் குரங்கு காமிராவை கையிலலெடுத்து விடும் அந்தப்பதிவு காணாமல்போகும் இப்படி பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய தனிமனித சாகசம் ரைடிங் சோலோ டு தெ டாப் ஆப் தெ வெர்ல்ட். இயக்கம், பின்னனிக்குரல், எடிட்டிங் என எல்லாவற்றையும் தன் தலையில் போட்டுக்கொண்ட அவருக்கு இதுவரை ஒரு தேசிய விருது உட்பட 11 விருதுகள் மகுடமாகியிருக்கிறது.

5 comments:

na.jothi said...

ரைடிங் சோலோ டு தெ டாப் ஆப் தெ வேர்ல்ட்' படத்தின் லிங்க் எதுவும்
இருந்தா கொடுங்க சார்

வனம் said...

வணக்கம்
அட இந்த படத்த பார்க்கனுமே

முடிந்தால் அந்த மனிதரையும்
நன்றி
இராஜராஜன்

தமிழ். சரவணன் said...

ஐயா இந்த திரைப்படத்தை எங்கு காணலாம்... குறுந்தகடுகள் கிடைக்குமா? தெரியப்படுத்தவும்..

geevanathy said...

///,தானியங்கி காமிராவை இயக்கிவைத்து விட்டு அதன் பார்வை படுகிறவரை பயணமாகி நின்று மறுபடியும் அதே தொலைவு திரும்பவந்து காமிராவை எடுத்துப் போகவேண்டும்.///

வாசித்து முடித்ததும் படம்பார்க்கும் ஆவல் அதிகரித்திருக்கிறது.படத்தின் இணைய இணைப்பு கிடைக்குமா?

காமராஜ் said...

வாருங்கள்
புன்னகை,
ஜீவவராஜ்,
ராஜராஜன்
தமிழ் சரவணன்.. வணக்கம்
கருத்துக்கு நன்றிகள்.

இணைப்பு= //www.riding solo to the top of the world//