31.5.09

மனிதாபிமானம் குறைந்த போன சர்வதேச சமூகம்
போருக்கு சம்பந்தமில்லாத ஏழாயிரம் அப்பாவிப் பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு இனத்தின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு லட்சக்கனக்கானோர் அகதி முகாமில் கொட்டிக் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். குடிநீர், கழிப்பிடம், சுகாதாரம் ஏதுமற்ற குப்பைக்கிடங்காக மாறியிருக்கிறது பேயரசின் அகதிகள் முகாம். பெண்களும் குழந்தைகளும் படும் அவஸ்தைகள் பட்டியலிடமுடியாத கொடூரங்கள். அகதிகளுக்காக பிற நாடுகளிலிருந்து குவியும் உதவிகள், லங்கா அரசின் பதுக்கலுக்குள் மறைந்துவிடுகிறது. கொடூரமான இந்தச் செய்திகள் எல்லாமே அரசின் கட்டுப்பட்டை மீறிக் கசிந்தவைகள். இன்னும் சர்வதேச பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளகள் அணுமதிக்கப்டாத இரும்புக் கோட்டையாக மாறியிருக்கிறது இலங்கை அரசின் அகதிகள் முகாம்.27.5.2009 அன்று ஜெனீவாவில் நடந்த மனித உரிமைகளுக்கான சிறப்புக் கூட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் கொண்டு வந்த மனித உரிமை மீறலுக்கெதிரான தீர்மானம். ராஜபக்சேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்ககோரிய மிகசரியான அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. சுவிட்சர்லாந்து முன்மொழிந்த இந்த தீர்மானம் இலங்கைப் பேரழிவு குறித்த ஒரு தீர்க்கமான மனிதாபிமான நடவடிக்கை. தீர்மானத்துக்கு ஆதரவாக ஒன்பது நாடுகளும், எதிராக 29 நாடுகளும் வாக்களித்திருக்கின்றன ஆறு நாடுகள் நடுநிலையில். தீர்மானத்து எதிராக வாக்களித்த நாடுகளில் இந்தியா, சீனா, பகிஸ்தான் முக்கியமானவையாகும்.


இதில் அதிர்ச்சி தரக்கூடிய விசயம் கியூபாவும் தீர்மானத்துக்கெதிராக வாக்களித்ததுதான். உலகம் முழுவதும் நடக்கிற விடுதலைக்கான போராட்டக்காரர்களின் நெஞ்சில் ஏற்றுகின்ற மானசீக இலச்சினை சேகுவாரா. அவன்தான் இந்த, நூற்றாண்டுக் கதாநாயகன். உலகத்தின் எந்த மூலையில் அநீதி நடந்தாலும் அந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் நீ தோழன் என்று சொன்ன சேகுவராவின் உக்கிரம் என்ன ஆனது?. '' வரலாறு என்னை விடுதலை செய்யும் '' என்று சிறைப் பிடிக்கப்பட்ட பிடல் காஸ்ட்ரோ நீதிமன்றத்தில் முழங்கிய சொற்பழிவு சர்வாதிகாரத்துக்கெதிரான குரலாக காலந்தோறும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் கியூப அரசு ராஜபக்சேயை ஆதரிப்பதால் பாடிஸ்டாவின் ஆவி கெக்கலிட்டுச் சிரிக்கிறது.இந்த அதிர்ச்சியிலிருந்து மீள மனிதாபிமானம் உள்ள எல்லோருக்கும் நீண்டகாலம் ஆகும்.

28.5.09

ஜனநாயகம் முற்றிப்போனால் முடியரசு
அழகிரி, தயாநிதிமாறன் பதவி ஏற்பு -

பார்வையாளர்களின் முன் வரிசயில் கலைஞர் குடும்பம்,

அகதா சங்மா பதவியேற்பு, பார்வையாளர் வரிசையில் சங்மா பூரிப்பு.


ராஹுல் காந்தி முன்வரிசயில் சோனியா காந்தி கள்ளச்சிரிப்பு.
நடிகர் மகன் நடிகர், டாக்டர் மகள் டாக்டர்

ஏமாளிஇந்தியர்களின் வாரிசுகளும் ஏமாளிகள்

நவீனப் போட்டி யுகத்திற்குள் வளரும் குலத்தொழில் முறை.

நல்லவேளை பெரியாரில்லை.

காதலில் ஜெயித்து வாழ்க்கையில் தோற்பது - ஷாஜஹானின் கவிதை
இந்தியாவில் மட்டும் தான் பரீட்சயில் தோற்றவர்களும், காதலில் தோற்றவகளும் தற்கொலை செய்துகொள்வதாக சர்வதேச தற்கொலைகளுக்கான ஆராய்ச்சிக் கனக்கெடுப்பு கூறுகிறது. கிட்டத்தட்ட அதுவும் உடன்கட்டை ஏறுவது போலொரு மூடப்பழக்கம் தான். இந்தக் காதல் இந்தியாவின் அலாதியான நடைமுறை. அது இல்லாத காவியம், காப்பியம், கவிதை ஏதும் இல்லை. இந்திய சினிமாவுக்கான மூல முதலும் அதுதான். காதல் என்கிற கதை கல்யாணத்தோடு முடிந்துபோகிறதான சித்தரிப்புகளால் அதற்குப்பிந்தைய வாழ்க்கை கேட்பாரற்றுப் போகிறது. சென்னை ஸ்டான்லி மருத்துவனையின் நரம்பியல் பிரிவில் தொண்ணூறு சதவீதத்துக்கு மேல் பான்பராக்கால் பாதிக்கப்பட்டவர்கள் ( victims ). அவர்களைப் பளபளக்கும் விளம்பரங்கள் மறைப்பதுபோல கவியங்கள் எல்லாமே காதலின் ஒரு பக்கத்தைச் சொல்லுகிறது. காதலில் ஜெயித்து வாழ்க்கையில் தோற்றுப் போனவர்களைப் பற்றிச்சொல்ல இங்கிருக்கும் ஆயிரம் வகையான அசமத்துவம் காரணமாகிறது. அந்த வலியை வெறும் நான்கு வரிகளில் சொல்லுகிறது எழுத்தாளர் ஷாஜஹானின் கவிதை.எத்தனயோ பூக்களிருந்தும்
எருக்கஞ்செடியின் மேல்
சுற்றி சுற்றி வந்தமரும்
வண்ணத்துப்பூச்சி நினவு படுத்துகிறது.


யார் சொல்லியும் கேளாமல்
சைக்கிள் கடைக்காரனைக்
கட்டிக்கொண்டு
காணாமல் போன வனிதாக்காவை.

27.5.09

இரண்டு எதிர்காலம்
அவனுக்கு வயது பதினாறு தான் இருக்கும். ஒரு சூட்கேஸ், ஒரு தூக்குப்பை, இன்னொரு சாப்பாட்டுப்பை வைத்திருந்தான். இரண்டு அலைபேசிகள் வைத்துக்கொண்டு நண்பர்களோடும் உறவினர்களோடும் பேசினான். தன்னோடு வந்த தாயிடம் மிகத்துள்ளியமான வார்த்தைகளில் பேசினான் சில நேரம் அறிவுரைகள் கூட. கொண்டு வந்த சிக்கன் நூடுல்ஸை சாப்பிட்டுவிட்டு உலகப்பதவிசாக கைகழுவித் துடைத்துக் கொண்டான். சென்னையச் சுற்றியுள்ள அத்தனை தொழில் நுட்பக் கல்லூரிகளின் பெயர், விலாசம், தரம், பாடங்களின் பட்டியல், அவர்கள் கறக்கும் நன்கொடைத்தொகை, அணைத்தயும்நுட்பமாகவே தாயிடமும், எதிர் இருக்கை மாணவனிடமும் விவரித்தான். அந்த பெட்டியில் இருந்த எல்லோரும் ஏதோ ஆங்கிலப்படம் பார்ப்பதுபோல அவனையே கவனித்தார்கள். அந்த இரவு நேரத்துரித வண்டியின் பெட்டிக்கு அவனே அன்றையகதை நாயகன். அந்த பிராயத்தில் தாங்கள் வழ்ந்த வாழ்கை எல்லோருக்கும் நிழலாடிப்போனது. டவுசர் கிழிந்த காலங்கள்.ஹிண்டு நாளிதழ் படித்துக்கொடிருந்த அவர் அரை மணிநேரம் பேசினார். கல்வி, பொருளாதாரம், சுகதாரம், தொழில் நுட்பத்தில் இந்தியா அசைக்க முடியாத இடத்தில் இருக்கிறது என்று புள்காங்கிதப்பட்டார். யப்பா என்ன வளர்ச்சி, மிராக்கிள் இன்னும் ஒன் ஆர் டூ இயர் நாம தான் வல்லரசு என்று குதித்தார்.நடு இரவில் இருப்புப்பாதை கோளாறு காரணமாக மூன்று மணிநேரத்தாமதம். மறுநாள் அதிகாலை முதல் காபி, காலைப்பலகாரம், கொய்யாப்பழம், முறுக்கு சுண்டல் நொறுக்குத் தீனிகளாக வந்துபோனது. கூடவே பிச்சைக்காரர்களும்.கணீர்க்குரலில் " கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே " பாடல் தூரத்தில் கேட்டது. ஒரு நுட்பமான பாடகியின் குரலோடு ஒப்பிட போட்டியிட அணைத்து குணாம்சங்களும் நிறைந்த அது நெருங்கிவந்தது. பின்னர் தான் தெரிந்தது. சுண்டியிழுக்கும் அந்த இசையின் சொந்தக்காரி ஒரு சிறுமி என்பது. அப்புறம் தனது மேல்சட்டையக் கழற்றி அந்தப் பெட்டியையே சுத்தம் செய்ய ஒருவன் வந்தான். " எப்பா சாம்பார் கொட்டிடுச்சு அத நல்லாத்தொட" என்று சொன்ன கனவான் வேலை முடித்துவிட்டு அவன் கை நீட்டும் போது ஹிண்டு பேப்பரின் ஆங்கில எழுத்துகளுக்குள் கானாமல் போனார். அவ்வளவு நேரமும் தனது அலைபேசியில் வீடியோ கேம் விலையாண்ட கதை நாயகன் ஜன்னலைத்திறக்க கிடந்து மல்லாடினான். " கொஞ்சம் ஒத்து சார் " என்று சொல்லிவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அதை திறந்து கொடுத்துவிட்டு அருவறுப்பு பார்வைகள் பின்தொடரக் கடந்துபோனான். அவனுக்கும் வயது பதினாறு தான் இருக்கும்.

26.5.09

பிழைக்கப்போன இடத்திலும் பிடித்து ஆட்டும்
சீக்கிய மதத்தின் மத குருவையும் இன்னும் பதினாறு பேர்களையும் அம்மதத்தின் இன்னொரு பிரிவினர் தாக்கியதில். குரு ராமானந்த் உட்பட இருவர் மரணம். இது நடந்தது இந்தியாவில் இல்லை ஆஸ்திரிய நாட்டிலுள்ள வியன்னாவில்.


இந்தியப் பெருமதங்களில் ஒன்றான சீக்கிய மதம் உருவ வழிபாட்டை நிராகரித்த மதம். பெண்ணுக்கு சம உரிமை கோரிய மதம். மனிதர்களுக்குள் பிரிவினையை நிராகரித்த மதம். தேசிய இனங்களில் அல்லது இனக்குழுக்களில் தங்களுக்கெனத் தனித்த அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டாவர்கள். ஆங்கிலேயரை எதிர்த்த போரில் வலுவான தழும்புகளையும், அடையாளங்களையும், பஹத்சிங் போன்ற ஆளுமைகளையும் கொண்ட இனக்குழு சீக்கிய இனக்குழு. ஆரம்பத்தில் ஒருங்கிணைந்து இந்து பழமை மூடக்கருத்துக்களை நிராகரித்த சீக்கியர்களூக்குள் எல்லா இந்துமயமாக்கப்பட்ட மதங்களைப்போல நாம்தாரி, நிரங்காரி, சர்தாரி, சிங் போன்ற பிரிவுகள் உண்டானது. அல்லது மருரூபமெடுத்தது. இன்னும் கடுகிப்பார்க்கப் போனால், ' ஜாதிய ' சீக்கியர்கள் ' மஜபாய் ' சீக்கியர்கள் என்ற மேல் கீழ் பிரிவுகளும் வலுவானது.கடல்தாண்டிக் கனிணி பரப்பப்போன எம் இந்திய சீக்கியர்கள் தங்கள் மத அடையாளங்களை உறுதிப்படுத்த அங்கேயும் குருத்துவாராவை உருவாக்கினார்கள். எல்லா மதமும் வரிவடிவில் மட்டும் உன்னதமானது. அதன் சாரமும் நடைமுறையும் பிரிவினைகளினாலேயே நிர்மானிக்கப்படுகிறது. குரு ரவிதாஸ் சபா என்னும் பிரிவு உருவானது. லண்டனில் 2005 டிசம்பரில் அந்தப்பிரிவின் தலைமை குருத்துவாரா அமைக்கப்பட்டது. ஜாதியஅதிகாரத்தை எதிர்த்த அவர்களை ஆறுபேர்கொண்ட எதிர்ப்பிரிவு தாக்கியிருக்கிறது. வியன்னாவில் நடந்த இந்த தாக்குதலின் எதிரொலியால் பஞ்சாப் மாநிலம் இன்று வன்முறையால் நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. அம்மாநில முதல்வர் திரு பாதல் நிலைமை கட்டுக்குள் இருக்கிறதென்று சொன்ன மறுகணம் மாண்புமிகு உள்துறை அமைச்சர் இல்லை என மறுப்புத் தெரிவிக்கிறார். ஜாதி அரசியலை கட்சி அரசியலாக்குகிற முயற்சி அது.தான்பிறந்த, தன்னைத் தெர்ந்தெடுத்த சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊஞ்சனைக் கிராமத்து தேர் அசைகிற ஓவ்வொரு வருடமும் இயல்பு வாழ்க்கை ஆட்டி அசைக்கப்படும். முன்னூற்றி அறுபத்து நான்கு நாட்கள் மழையிலும் வெயிலிலும் கேட்பாரற்றுக்கிடக்கிற அந்ததேர். புறாக்களும் குருவிகளும் வசிக்கிற அந்த தேர். ஒரு அரை கிலோ மீட்டர் திக்கித் திணறி நகர்வதற்கு சிறப்புக்கவல்படை, அயுதப்படை, அதிரடிப்படை என ஆயிரக்கணக்கில் காவலர்கள் குவிக்கப்படுவார்கள். ?.கர்நாடக நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திக்கொண்டுபோய் காட்டில் வைத்திருந்த சமயத்தில் அருப்புக்கோடைக்கு அருகில் உள்ள ஒருகிராமத்தில் ஒரு விளம்பரத் தட்டி கட்டப்பட்டிருந்தது. அதில் " எங்கள் ஜாதியைச் சேர்ந்த ராஜ்குமாரை கடத்தி சென்ற வீரப்பனை உடனடியாகக் கைது செய் " என்ற வாசகம் இருந்தது. நிறையக்குழப்பமாக இருந்தது." இப்படிக்கு .....மாணவரணி " என்றும் இருந்தது.?.கல்வி, பொருளாதாரம், சொகுசு எல்லாம் ஜாதியத்தழைகளையும் அறுத்தெடுக்கும் என்னும் அறிவுறுத்தலுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் இந்த சம்பவங்கள். எல்லா விஷவிருட்சத்துக்கும் ஒரே ஆணிவேர் ஜாதி. அதை அறுக்கிற கோடாரி இன்னும் செய்யப்படவே இல்லை அல்லது செம்மையாய் செயல்படவில்லை. விவேகானந்தர், ஜோதிபாபூலே, அம்பேத்கர், பெரியார்களும் தலைவர்களும், அறிஞர்களும்கலைஞர்களும் சேர்ந்து இஞ்ச் இஞ்சாய் உயர்த்திய பகுத்தறிவு, சமதர்மம், மனிதாபிமானம் எல்லாவற்றையும் ஒரே கலவரத்தில் பின்னுக்குத் தள்ளிவிட்டு கொக்கரிக்கிறது ஜாதியும் மதமும்.மீண்டும் மீண்டும் அதைத்தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வாளோடு கிளம்பவேண்டும்.

24.5.09

சதாத் ஹசன் மாண்டோ: பேரின வாதத்தின் ரத்தக் கவிச்சையைச் சொல்லும் கலைஞன்
ரொம்ப வருசத்துக்கு முன்னாடி இவரைப்பற்றி அடிக்கடி பேச்சு வரும். தோழர் எஸ்.ஏ.பி., பீகே, மாது, சவெ, எஸ்ரா, அப்புறம் மணிமாறன் ஆகியோர் பேசும்போது உடனிருந்திருக்கிறேன். ஆனால் அவரைப் படிக்கவேண்டுமென்கிற உந்துதல் அப்போதெல்லாம் வந்ததேயில்லை. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் விளைவால் ஏற்பட்ட நாசங்களை இவ்வளவு அழுத்தமாகச்சொன்ன எழுத்துக்கள் வேறு இல்லவே இல்லை. ஒரு பேரினம் கட்டுக்கடங்காமல் சிறுபாண்மையினர் மீது நடத்தும் கொடூரத்தை எந்த அளவுகோல் கொண்டும் அளக்கமுடியாது. அரசுசர்ந்த காவல், நீதி, எல்லாம் அங்கிகளைக் கழற்றிப் போட்டுவிட்டு அம்மனமாகும் நிகழ்ச்சிகள் வரலாறு முழுக்க விரிந்துகிடக்கிறது. சதாத் ஹசன் மாண்டோ. விவரிக்கவும் - படிக்கவும் கூசுகின்ற நிஜங்கள் அவரது பதிவுகளில் பரவிக்கிடக்கிறது.நாங்கள் ' இதுவேறு இதிகாசம் ' ஆவணப்படத்துக்கான பேட்டிகளைப்பதிவு செய்துகொண்டிருந்த போது மதுரை மாவட்டம் மேலவளவு கிரமத்துக்குப் போனோம். பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட ஏழு பேர் படுகொலை குறித்த பேட்டி. ஒளிப்பதிவாளர் ப்ரியா கார்த்தி பதிவு செய்துகொண்டிருந்தார் மாதவராஜும் நானும் பேட்டியெடுத்துக் கொண்டிருந்தோம். படுகொலைச் சம்பவத்தை தேதிவாரியா ஒருவர் சொன்னார். கொலை செய்து முடித்த பிறகு பிணங்களின் மேல் அவர்கள் செலுத்திய வன்முறை கற்பனைக்கு எட்டாதது. அதைக்கேட நாங்கள் இரண்டு பேரும் ஆடிப்போய் அந்த இடத்தைவிட்டு சற்றுத் தள்ளிப்போய் எங்களை ஆசுவாசப் படுத்திக்கொண்டோம். இப்படியெல்லாம் நடக்குமா மனிதனை மனிதன் இவ்வளவு குரூரமாக கொலைசெய்வானா எனும் சந்தேகங்கள் வந்து போனது.ஆனால் சதாத் ஹசன் மாண்டோவின் தொகுப்பு அதையெல்லாம் விடக்குரூரமான பதிவுகளைச் சுமந்துகொண்டிருக்கிறது. 616 பக்கங்கள் கொண்ட' மாண்டோ படைப்புகள்' . அந்தத் தொகுப்பில் 21 கதைகள், 32 சொற்சித்திரங்கள், பாகிஸ்தான் அதிபர் ஜின்னா, சினிமாத்துறையில் தான் நெருக்கமாகப் பார்த்த நர்கீஸ், நூர்ஜஹான், அசோக்குமார் போன்றோர்களைப் பற்றிய ஒளிவு மறைவற்ற நினைவுக்குறிப்புகள் எல்லாம் அடங்கியிருக்கிறது. ' ஜில்லிட்டுபோன சதைப்பிண்டம் ' என்கிற சிறுகதை கலவர காலத்தில் கொள்ளையடிக்கப் போன ஐஷர் சிங்கின் அணுபவத்தைச் சொல்கிறது. பொருள்களைக் கொளையடித்துச் சலித்துப்போன அவன் அங்கிருந்த ஒரு பெண்ணைத் தூக்கிக்கொண்டு வருகிறான். அவளோடு உடலுறவு கொள்கிறான் இறந்து போனவள் என்று தெரிந்தபின்னும்.மிக நீண்ட கதைகளை விட பத்து வரியில் நச்சென்று குரூரத்தைப் பகடி செய்கிற சொற்சித்திரங்கள் அகோரமான மதவெறியை சின்னச் சின்ன துனுக்குகளில் தோலுரிக்கிறது, அதிலொன்று.


நிரந்தர விடுமுறை

------------------------.


" அவனைப்பிடித்துக்கொள். தப்பவிடாதே"கொஞ்ச தூரம் துரத்தியபிறகு வேட்டையாடப்பட்டவன் அகப்பட்டுக்கொண்டான். அவன் குத்திக்கொலைசெய்யப்பட இருந்த தருணத்தில் நடுங்கிக்கொண்டே " தயவு செய்து என்னைக்கொலை செய்யாதீர்கள், தயவு செய்து என்னை விட்டு விடுங்கள்...நான் என் வீட்டிற்கு விடுமுறையில் போய்க்கொண்டிருக்கிறேன் " என்றான்.


0


இந்த காலத்தில் மாண்டோ வாசிப்புக்கு உள்ளாக்கப்பட வேண்டிய மாபெரும் எழுத்தாளர். அழிவுகள் சுற்றிப்படர்கையில்நோவாவின் பேழையைப்போல் அங்காங்கே நம்பிக்கையின் குரல் மெலிதாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. அதை உரக்கச்சொல்கிற அத்தியாவசியம் இருக்கிறது. மேலவளவு படுகொலை நடந்த நகரப்பேருந்தில் எற்கனவே பயணம் செய்த கொலைசெய்தவகளின் ஜாதிக்காரப் பெண் தனது கால்களுக்கு இடையில் அந்தக் கண்டாங்கிச் சேலையின் மறைசலில் ஒரு உயிரை ஒளித்துவைத்து காப்பாற்றியதாகப் பின்னர் கேள்விப்பட்டோம். உயிர் உருவாக்குவதன் மகோன்னதமும் வலியும் உணர்ந்த பெண் எல்லாவற்றிலும் மேலானவள்.

23.5.09

அமெரிக்காவும், அதைத்தழுவும் சிங்கள அரசும்
அன்று இரட்டைக்கோபுரம் தகர்ந்த போது உலகத்தின் கடைக்கோடி மனிதனும் பதறிபோனான். அப்போதைக்கு தீவிர வாதம் தவிர உலகில் எதுவும் பிரச்சினையில்லை என அமெரிக்கா உலகிற்கு கட்டளையிட்டது. அதே நேரத்தில் தான் ஈராக்கில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது அமெரிக்க ராணுவம். அப்புறம் ஒரு நாள் தாஜ் உல்லாச விடுதி தாக்கப்பட்டது. அப்போதும் கூட உலகம் பதை பதைத்தது. இந்த ஊடகங்கள் அதை வைத்து என்னென்ன வியாபாரமெல்லாம் பண்ணியது என்பதையும் சேர்த்து உலகம் பார்த்தது. பகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தாக்கப்பட்ட போதும், ஒரு ஒற்றை மனிதன் கர்நாடக - தமிழகக் காடுகளில் ஒளிந்தலைந்த போதும் தீவிரவாதம் எனும் பூச்சாண்டிக்கதையை இந்த ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பிவந்தது. நிஜப் பூச்சாண்டிகள் அந்த ஊடக வெளிசத்துக்குள் ஒளிந்துகொண்டார்கள்.எந்த ஒரு மனிதனும் பொழுதுபோகாமல் துப்பாக்கி தூக்குவதில்லை. ஆனால் அமெரிக்காவுக்கோ நிலைமை அப்படியில்லை எப்படியும் உற்பத்தியான உயிரெடுக்கும் ராணுவக்கருவிகளை விற்றுத் தீர்க்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. எந்த ஆங்கிலத்தொலைக்காட்சி அலைவரிசையைத் தெரிவுசெய்தாலும் துப்பாக்கி சண்டை ராணுவம் தொடர்பான சாகசச் சினிமாக்களைத்தான் சதா ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் அமெரிக்க மூளைகளிலும் ஊறிப்போன கலையும் கலாச்சாரமும். அமெரிக்கா தனது மூன்று நூறு ஆண்டுகால சரித்திரத்தில் படையெடுத்து அழித்த நாடுகளின் பட்டியலில் இடம்பெறாத நாடு இனிமேல் தான் உதயமாக வேண்டும்.இலங்கை இன்று கொண்டாட்டங்களில் இருக்கிறது. டைம்ஸ் நௌ பத்திரிகையின் இலங்கை செய்தியாளர் நாராயணன் ஆர்ப்பரிக்கும் சிங்கள இளைஞர்களோடு இணைந்துகொண்டு கருத்து திரட்டுகிறார். தமிழகத்தில் பத்திரிகையாளர் சோ ராமசாமி, வடநாட்டில் ராஜீவ் ஆதரவாளர்கள் என்று வெற்றியைக் கொண்டாடுகிறவர்களின் முகங்கள் மின்னுகின்றன. ராஜபக்சே முப்பத்தியிரண்டு பற்களும் அதைத்தாண்டி குழாய் வழியே ரத்தவெறிகொண்டு துடிக்கும் இதயமும் தெரிகிற அளவுக்கு வாயைப் பிளக்கிறார்.ஆனால் அகதிமுகாம்கள், சண்டை நடந்த வவுனியா, முள்ளிவாய்க்கால் பகுதிகளையும், மருத்துவமனைகளையும் பதிய மறுக்கிறது ஒளிப் படக்கருவிகள். கேட்பாரற்றுக்கிடக்கும் அங்ககீனமான மனிதர்கள் தமிழ் மனிதர்களின் ஈனக்குரல் எந்த ஊடகம் மூலமாகவும் ஒளிபரப்பப் படவில்லை. இலங்கை முழுவதும் விரவிக்கிடக்கும் எஞ்சிய தமிழ்ச்சமூகத்தின் கடைகள், வீடுகளோடு, பெண்டுகளும் சூரையாடப்படுவதான செய்திகள் கொதிப்பை உயர்த்துகிறது.


பரபரக்கிற போக்குவரத்து நெரிசலிலும் கூட முகம் தெரியாத சவ ஊர்வலத்துக்கு ஒதுங்கி நின்று மரியாதை செய்கிற மனித மனம். இந்த ரத்தவாடையையும், மனிதப்பேரழிவையும் எப்படிப் பொறுத்துக்கொள்கிறது என்பது விசித்திரமாக இருக்கிறது.சாம்ராஜ்ய வெறியில் கலிங்கத்தை வென்ற பேரரசன் அசோகன். சண்டைக்கு பிந்தைய போர்க்களத்துக் காட்சிகளால் மனம்பேதலித்து ஆசைகளை மறுதலித்தான். அப்புறம் பௌத்த மதம் தழுவினான். லட்சக்கணக்கான உயிர்களை கொன்று குவித்த பேரினவாத ராஜபக்சே, குருதிகுடித்த மயக்கத்தில் ஆடும் ராஜபக்சே எதைத் தழுவலாம்.

17.5.09

கொம்பு- சிறுகதை

ரொம்பவும் அவஸ்தைப்பட்டான். பட்டான் என்று சொல்லுதல் கூடாது, பட்டார். ஒரு கவச குண்டலத்தைப்போல அது எப்போதுமே அவரது தலையோடு ஒட்டியிருந்தது. படுக்கையிலும் கூட அது அவரோடே இருந்தது. இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது ஒரு கையால் அதைப்பிடித்துக் கொள்ளவேண்டியிருந்தது. இதனால் இரண்டு முறை கவனம் சிதறி, பயங்கரமான விபத்து நடக்கவேண்டிய அபாயம் கூட தப்பிப்போனது. உடனடியாக இரண்டு சக்கரவாகனத்திலேயே மதுரைக்குப்போய் தலைக்கவசம் போலொரு குல்லாயை ஆர்டர் செய்து வாங்கிவந்தார். அலுவலகத்தில் அதை அணிந்தபடியே இருந்தால் கோமாளியைப்பார்க்கிற மாதிரி பார்ப்பார்கள். அதனாலேயே அலுவலகத்திற்கு ஒன்று வாகனத்திற்கு ஒன்றென, இரண்டு வைத்துக்கொண்டு அதிலிருந்தும் சாமர்த்தியமாய் தப்பித்துக்கொண்டார்.
அப்படியொன்றும் அவருக்கு வழுக்கைத்தலைகூட கிடையாது. இந்த செப்டம்பர் இருபதோடு முப்பத்தி நான்கு வயது பூர்த்தியானாலும் அடர்த்தியான கத்தையான கோரை முடி. ஷாம்பு விளம்பரத்தில் நடிக்கிற அளவுக்கு கரு கரு கேசம். போகிற இடமெல்லாம் அவரது முடி பார்த்து பொறாமை மேலாகிற சக அதிகாரிகள், வெளிப்படையாகவே அதைச்சொனார்கள். அந்தப்பெருமையெல்லாம் தவிடு பொடியாகிற அளவுக்கு இப்படியொரு பிரச்சினை முளைத்தது. ஆமாம், முதன் முதலாய் அவரது மனைவிதான் அதைக்கண்டு பிடித்தார். அந்த அகால இரவில் '' இதென்ன இரண்டு கொம்பு மாதிரி'' என்று கேட்ட போது இருந்த நெருக்கமும் இறுக்கமும், அதை இரண்டாம் பட்சமாக்கியிருந்தது. ரொம்ப நாள் கழித்து ''அரிஸ்டோ கிராட்'' முடிதிருத்தும் நிலையத்தில் வெலுச்சாமியின் சீப்பில் நெருடியபோதுதான் முழு விபரீதம் உணர்ந்தார். வேலுச்சாமியின் அதிர்ச்சி இவருக்கு நெருட, '' அது மரு, மிச்ச மண் எங்க குடும்பத்துல எல்லாருக்கும் இப்டித்தான்'' என்று பார்ம்பரியப்பெருமை சொன்னார். மருத்துவரிடம் காட்டச்சொல்லி வேலுச்சாமி சிபாரிசு பண்ணியபோது, ''ஒரு மருத்துவர் பார்த்தாப்போதாதாப்பா'' என்று விகடம் சொல்லிவிட்டதாய் அவரே சிரித்துக்கொண்டார். அப்புறம் சீரியஸாக இதிகாசத்தில் சில பேரைச்சொல்லி அவர்களுக்கெல்லாம் கூட இருந்தது எனும் புது வியாக்கியாணம் சொன்னார். ஆளில்லா நேரம் பார்த்து திரும்பி வந்து, விசயம் வெளியே கசியவேண்டாமென்று கேட்டுக்கொண்டார். அப்போது அவரிடம் இருந்த குழைவு அவருக்கே அன்னியமாகப்பட்டது. அட ஆச்சரியம் அப்போது கொம்பு சுத்தமாக மறைந்திருந்தது. அதன் பிறகு பகலில் முடி திருத்துவதைத்தவிர்த்து இரவுகளை மட்டும் தேர்ந்தெடுத்தார். ஆக இந்த ரகசியம் உலகத்தில் ஒரு மூன்றாவது நபருக்கும் தெரிய நேர்ந்தது. அந்த ரகசிய எல்லைக்குள் மற்றுமொரு நபர் நுழையாதபடிக்கு கண்ணும் கருத்துமாய்க் காவலிருந்தார். அதற்கவர் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
பொது இடங்களில் நடமாடுவதைத்தவிர்த்தார். பஸ் பிரயாணம் அறவே ஒழித்தார். நூறு கிலோ மீட்டர் வரையிலான பயணங்களுக்குக்கூட இரு சக்கர வாகனமும், அதற்குமேலென்றால் வாடகைக் காருமென்றாகிப்போனது. சினிமா தியேட்டர் போகமுடியாததனால், பொழுதுபோக்கென்று ஒன்றுமே இல்லாமல் போனது. ஆனாலும், இப்போது ஹோம் தியேட்டர், வி சி டி என்ற விஞ்ஞான வளர்ச்சி அவருக்கென உருவானதுபோலானது. நண்பர்கள் பார்த்துப்பேசுவது திண்ணைப்பேச்சென ஒதுக்கிதள்ளினார். பால்ய நன்பர்கள் பார்த்து ஒதுங்கிப்போனார். அப்படியே தவிர்க்க முடியாமல் அவரகளோடு பேச நேர்ந்தால் அவரே முந்திக்கொண்டு ''சார்'' போட்டுப்பேசி விடுவார். வீட்டில் அவருக்கென தனி அறை, தனி சோப்பு, சீப்பு. அந்தச்சீப்பில் இரண்டு இடங்களில் பல்லை ஒடித்து கொம்பில் படாதபடியான தொழில் நுட்பமும் செய்துகொண்டார். மனைவி குழந்தைகளிடம் நல்ல கனவராக பாசமுள்ள தகப்பனாக இருக்க நிறைய்ய கஷ்டப்பட்டார். ஒரு முறை குற்றாலம் போயிருந்தபோது, நகரிய தனி அதிகாரியிடம் தனது விசிட்டிங் கார்டைக்காண்பித்து தனியே பேச அனுமதி வாங்கினார். அவரும் அலுவலக கிளை திறக்க இடம் தேடி வந்திருபதாக நினைத்துக்கொண்டு பெப்சி குடிக்கக்கொடுத்து உபசரித்தார். தான் மட்டும் குளிப்பதற்கு ஏதாவது பிரத்யேக ஏற்பாடு பண்ண முடியுமாவெனக்கேட்டதும் அதிகாரி ஆடிப்போனார். மேலும் கீழும் பார்த்து விட்டு பயந்துப்போய் வழியனுப்பி வைத்தார். வேறு என்ன செய்ய குடும்பத்தாரை மட்டும் குளிக்கச்சொல்லி வேட்டிக்கை பார்த்து விட்டு, திரும்ப வந்து விடுதி அறையில் குளித்தார். சொந்த பந்தங்களின் வீடுகளுக்குப்போனால் போன காலோடு திரும்பி வந்தார். கூடப்பிறந்த அக்கா வீட்டுக்கிரஹப் பிரவேசத்திற்குப்போய் தலையைக்கான்பித்து விட்டுத்திரும்பியதால் மனுசரண்டாதவரானார்.
இந்தக்கால ஓட்டத்தில் அவருக்கு பதவி உயர்வும் கிடைத்தது. அலுவலகத்தில் அவருக்கென தனி கண்ணாடி அறையும், சுழல் நாற்காலியும், தனி தொலை பேசியும் ஒதுக்கப்பட்டது. இந்தக்கொம்பு பிரச்சினயை சமாளிக்க கடவுளே கொடுத்ததாக புளகாங்கிதப்பட்டு திருப்பதிக்குப்போய் வெள்ளியில் கொம்பு செய்து செலுத்திவிட்டு, மொட்டை போடாமல் திரும்பி வந்தார். பதவி உயர உயர கொம்பும்சேர்ந்து உயர்ந்தது. இப்போது தொப்பியின் உயரத்தை அதிகரிக்கவேண்டியதாயிற்று. ''அளவோடு இல்லாட்டி கொம்பு மாதிரித்தெரியும்'' கடைக்காரன் சொன்னபோது ''மைண்ட் யுவர் ஓன் பிசினஸ்'' சொல்லி அரட்டினார். இப்படியான புதிய பிரச்சினைகளும் பூதாகரமாக முளைத்தது. அவர் காது பட யாராவது யாரையாவது '' அவன் பெரிய கொம்பனா'' என்று சொன்னால் அதற்காக மூசு மூசென்று கோபப்படுவது, ''வரட்டும் அவனுக்கென்ன கொம்பா மொளச்சிருக்கு'' சொன்னால் அவரைத்தான் சொல்கிறார்களோ என்று ரொம்பவும் விசனப்படுவது அதிகமாகிக்கொண்டு போனது. எல்லாவற்றையும் விட அவரால் இரவு நேரங்களை கடத்துவது பெருங் கஷ்டமாகிக்கொண்டிருந்தது. ஆசையோடு மனைவி தலைகோத முடியாமல் தவித்தாள், இவருக்கும் மடிமீது தலைசாய்க்கிற சிலாக்கியமில்லாமல் போனது. ஒரு நாள் தூக்கத்தில் அவளின் மீது தலை பட அலறியடித்துக்கொண்டு எழுந்து அதோடு கட்டில் ரெண்டானது. அதற்கு முடிவு கட்டாமல் பக்கத்தில் வரவேண்டாமென்று கறாராகச்சொல்லிவிட பிரச்சினை தலைக்குமேல் போய்விட்டது.
இப்போது நான்காவது நபருக்கு தெரிய வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. அமாம் ஒரு மாத விடுப்பெடுத்துக்கொண்டு சென்னை போனார்கள். சலிக்காய்ச்சலென்றால் கூட மதுரை அப்பல்லோ மருத்துவமனைக்குப்போய் ஒரு ஊசி போட்டுவிட்டு வந்தால் தான் அவருக்கு சரியாகும். ஆதலால் விஜயா, ராமச்சந்திரா, அப்பல்லோ என உயர்தர மருத்துவ மனைகளுக்கு மட்டுமே போனார். அறுத்தெடுத்துவிடுவது, ஆசிட் விட்டுக்கரைப்பது, மாத்திரையில் மட்டுப்படுத்துவது என இவர்கள் நினைத்தமாதிரி ஏதும் நடக்கவில்லை. எல்லா இடங்களிலும் ஆதியோடந்தமாய்க்கேட்டுவிட்டு மறுநாள் வரச்சொன்னார்கள். ஒரு நாள் மருத்துவருக்காக காத்திருக்கிற போது மருத்துவமனை சிப்பந்தி ஒருவன் வந்து பேச்சுக்கொடுத்தான் அவனோடு பேசுவதைத்தவிர்த்தார். அவனோடு மட்டுமல்ல வாழ்நாளில் அவர் காக்கி வெள்ளைச் சீருடையில் இருக்கிற யாரோடும் பேசிப்பழக்கமில்லை. பேசினாலும், அலுவல நிமித்தமாக மட்டும் பேசுவார். அப்போது அவரது குரல் துருப்பிடித்த தகரத்தைத் தரையில் தேய்த்தது போலிருக்கும். முகத்தையும் சிடு சிடு வென வைத்துக்கொள்வார். இதெல்லாம் அவரது அறிவுலக ஆசான் சொல்லித்தந்தது. ஆசான் தான் அவருக்கு எல்லாம், அவர் சொன்னால் தான் காலையில் தேனீர் குடிப்பார். ஆசானும் நீங்க நினைக்கிற மாதிரியில்லை தமிழ் வாணனுக்கும் ஒரு படி மேல். எல்லாவற்றையும் எதிர்க் கோணத்திலிருந்தே பார்ப்பார். சிப்பந்திகள் உதவியாளர் யாருக்கும் அதிக இடங்குடுக்கப்படாது, இடங்குடுத்தால் ஏறி உட்காந்துக்குவானுக. மனைவி குழந்தைகளோடு கூட நெருங்கக்கூடாது. நெருங்கினால் வீக்னெஸ் தெரிந்துபோகும் . உனக்குக் கீழுள்ளவர்கள் உலக சாதனையோடு வந்தால் கூட மறந்தும் பாராட்டி விடக்கூடாது. அதை விடப்பெரிய விசயங்கள் குறித்துத்தான் பேச வேண்டும். இப்படியான அறிவுறைகளை அள்ளித்தெளிப்பார். அவையாவும் இவருக்கென அளவெடுத்துத்தைத்தது போலிருக்க, புளகாங்கிதப்பட்டுப்போவார். ஆசானை நினைக்கிறபோதெல்லாம் அவருக்கு பின்னால் ஒளிச்சக்கரம் ஒன்று சுற்றுவதாகத் தெரிந்தது. விட்டிருந்தால் அவரது படத்தைக்கூட பூஜை அறையில் வைத்திருப்பார்.அப்படிப்பட்ட ஆசானுக்குக்கூடத் தெரியாமல் சென்னை வந்திருந்தார். இதுவும் அவர் சொன்னதுதான்.எல்லவற்றையும் சந்தேகப்படு, எதையும் நம்பாதே, உனது எல்லாக் கதவுகளையும் திறக்காதே. நல்லதொரு விகடம் கேட்டாலும் வாய்விட்டுச்சிரிக்கக்கூடாது. இப்படி அவரிடம் ஒரு பெரும் பட்டியலிருக்கும். அதுதான் இவருக்கு வேதம். உன்னத மறை வேதப்படி கொம்பு மேட்டரை அவரிடமே மறைத்து விட்டார். இப்போது பாருங்கள் இந்தப்பாழாய்ப் போன சென்னையில் எல்லோரும் மிடுக்கானவர்களாகத்தெரிகிறார்கள், அதிகாரிகளையும் சிப்பந்திகளையும் பிரித்துப்பார்க்க முடியாமல் அவர் தவியாய் தவித்தார். யார் எப்படிப்போனாலென்ன இவருக்கு வேண்டியது உயர் ரகமருத்துவர்கள். அவர்கள் சென்னையில் நிறைய்யயிருந்தார்கள்.அவர்களெல்லாரும் ஒன்று கூடியிருந்த அந்த மண்டபத்துக்கு அழைக்கப்பட்டார் நடுநாயகமாக உட்கார்த்தி வைக்கப்பட்டார். தமிழ் தொலைக்காட்சிகளோடு ஸ்டார் டி வி க்காரர்களும் தினத்தந்தி முதல் நச்சினு இருக்கிற தமிழ் முரசு வரையிலான அனைத்து பிரபல பத்திரிகைகளும் வந்திருந்தது. நல்ல கொழுத்த தீனி காத்திருக்கிறது என்கிற நினைப்பில் எல்லாவற்றின் நாக்கினின்றும் எச்சில் ஒழுகிக்கொண்டிருந்தது. ஒனிடா டீவிக்கம்பெனிக்காரனுக்கு மிகப்பெரிய அதிசயப்பரிசு கிடைத்திருந்தது. அவசர அவசரமாகக் கூட்டப்பட்ட நிர்வாகாக்குழுவிலும், அட்வர்டைஸ்மெண்ட் டிபார்ட்மெண்டிலும் பிரதானப் பொருளாகப் பேசப்பட்டது. சன் தொலைக்காட்சிக் குழுமத்தின் அனைத்து மொழி பிரதிநிதிகளும் வந்திருந்தார்கள். பக்தி தொடர் எடுக்கிற இயக்குனர் பெருமக்கள் ஜென்ம சாபல்யமடைந்தது போல் காத்திருந்தார்கள். முறைப்படியான அறிமுகத்துக்குப்பின்னர் இவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது எல்லாப்பிரபலங்களிடமும் கேட்கப்படுகிற அதே கேள்விப்பட்டியல் தான். '' முடிதிருத்துபவருக்கு, உங்கள் மனைவிக்கு, தெரிவதற்கு முன்னாள் உங்களுக்கு முதன்முதலில் எப்பொழுது தெரிய வந்தது''நன்றாக யோசித்து நிறைய்ய அவகாசமெடுத்துக்கொண்டு சொன்னார்'' முதன் முதலாக ஆபீசருக்கான ட்ரெயினிங்கில் இருக்கும் போதுதான் கொம்பு வளருவதாக உணர்ந்தேன்''.( ஒரு வனதேவதையும் ரெண்டு பொன்வண்டுகளும் தொகுப்பு- 2005 )16.5.09

அடுத்த தேர்தல் வரை
இன்று மதியம் கிராமத்துக்குள் நுழையும்போதே சீமைச்சாராய வாடை தூக்கலாக இருந்தது. வெற்றிக்களிப்பில் இருந்தஎல்லோரும் அழகிரியை விடவும், ராகுல்காந்தியை விடவும் நூறு மடங்கு சந்தோசத்தில் இருந்தார்கள். டாஸ்மாக்கில் சரக்கெடுத்து வந்து விற்கிற பையனுக்கு இன்று மூன்று மடங்கு வருமானம். காரணம் இன்று டாஸ்மக் கடைகளுக்கு விடுமுறை. அதே போலத்தான் காந்தி பிறந்த நாளுக்கும் கடையில் விற்பதைவிட அதிக சரக்கு விற்கிறது. இதெல்லாம் இங்கே மட்டும் கிடைக்கிற ரொம்ப நூதனமான முரண். சில அலுவலகங்களில் விடுமுறையன்றும் ஜரூராக வேலை நடக்கும் பார்த்திருக்கிறீர்களா.

ஊருக்குபோகிற போதெல்லாம் என்னிடம் சரக்கடிக்க காசு கேட்கும் உறவினர்கள் இன்று கேட்கவில்லை அப்படி ஒன்றும் அவர்களின் பொருளாதாரம் கூடிப்போகவில்லை. ஐடி கட்டாதா, அல்லது சம்பளம் கூட்டித்தராத அல்லது பங்குபேரத்தில் கொள்ளையடித்த அல்லது வங்கிகளில் கடன் வாங்கி மஞ்சள் கடுதாசி கொடுத்து எமாற்றிய காசுகள் டெல்லியிலிருந்து கைமாறிக் கைமாறி விருதுநகர் மாவட்டத்துச் சிற்றூர் ஒன்றில் சீமைச்சாராயமாக நாறிக்கொண்டிருக்கிறது. எப்படியும் நாளை விடிவதற்குள் ஒரு சாத்தூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதியப்படும். ஒரு மாத காலம் பெண்டு பிள்ளைகள் பட்டினியாகும். மீண்டும் கந்துவட்டிக்கு கடன் வாங்குவார்கள்.

டைம்ஸ் நௌ, சிஎன்என், தொலைக்காட்சிகளில் கூட அரசியல் நோக்கர்கள் அதே சந்தோசத்தில் துள்ளிக்குதிக்கிறார்கள் இந்த இரண்டு நாளைக்கு பிரனாய் ராய், சர்தேசாய், போன்றோர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?.
அடுத்த ஐந்து வருடத்துக்கு தங்க நாற்கர சாலைகள், சிறப்பு பொருளாதார மண்டலம், ஒரு லட்சரூபாய் கார், ஒரு ரூபாயில் இந்தியா முழுவதும் என பளபளக்கும் திட்டங்கள் கட்டாயம் வரும். சுவிஸ் வங்கிகளில் வேறு வேறு பெயர்களில் இந்திய டெபாசிட்டுகள் சேரும்.
ஆனால் நாளைக்காலையில் யாராவது கூலி வேலைக்கு கூப்பிட மாட்டார்களா என்று காத்துக்கிடக்கப் போகிற அவர்களின் தூக்குச்சட்டியில் தொட்டுக்கொள்ள பட்டவத்தல் கூட இருக்காது.

13.5.09

எதையும் தாண்டும் விஞ்ஞானம்.
அகோரப்பசியில் காத்திருக்கிறது

ஜனநாயகச்சுட்டுவிரல்கள்.


இரண்டே வகைப்பதார்த்தம் தான்

.இலை பரப்பிக்கிடக்கிறது.


ஒன்று விஷம் கலந்த சோறு

சோற்றில் கலந்த விஷம்.


அகம் புறம் இருள் ஒளி,

அகம் புறம் இருள் ஒளி, போனது

நன்மை தீமை ஹீரோ வில்லனனெனும்

நியதிகள் விலகி நிற்க,

போட்டியிலே கெட்டதும் கெட்டதும்.


மாது கோபப்படுவான்,

மாற்று இருக்கிறது எல்லாவற்றிற்கும்

அதுவே விஞ்ஞானம்..

11.5.09

அமைதிப்பூங்கா
இரும்புக் கம்பிகளுக்குபின்னால் இருக்கிற சிங்கம்எப்போது பச்சரிசிச்சோறும் பருப்புச் சாம்பாரும் தின்னக்கேட்டது.


பசித்துக் கிடக்கிற முதலைக்குகறி வெட்டிப் போடக் காவலர்கள் உண்டு.
அடங்காத சிறுத்தையின் உறுமலும் கர்ஜனையும்பஜகோவிந்தப் பஜனையில்லை.


அலுவலர்களுக்கு நுணுக்கம் தெரியும்வேலைக்காரர்களுக்கு விலங்குகளின்வேதனையும் புரியும்.


கம்பிக்கு வெளியே..


வறுமையைச் சொல்லத்தெரிந்த வாய்உதிரப்போக்கால் ஊமையானது.
மண்வெட்டுவது தாமதமானதென்றுமாரியக்காளைச் சாதிசொல்லித்திட்டுகிறான் சூப்பர்வைசர்.


வேலிகள் எப்போதும் அற்பமானவை.அடங்கிக் கிடக்கிற வரை எல்லாம் அமைதியாகத்தோன்றும்

ஷாஜஹானின் கவிதை
இந்த இருபது வருட சிநேகிதத்தில் பல நூறு மணிநேரம் அவரோடு கழிந்திருக்கிறது. ஒரு சின்ன கணமேனும் அவரது முகத்தில் கோபத்தின் ரேகைகள் தெரிந்த ஞாபகங்கள் இல்லை. ஒருவேளை அவர் கோபப்படுகிறபோது நான் அவரோடுஇல்லாமல் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அவரைச்சுற்றி எப்போதும் சிரிப்பும் கிண்டலும் படர்ந்திருப்பதை யாரும் எளிதில் அவதானிக்கலாம்." அமுத மழையில் என் கவிதை நனைகிறது நிலவே வந்து குடை பிடி"எனும் கவிதை ஒருகாலத்தில் கலை இலக்கிய இரவு மேடைகளின் நிரந்தர இசைப்பாடலாக நனைந்து இருந்தது. கரிசல் குயில் கிருஷ்ணசாமியின் அல்லது சுகந்தனின் குரலில் அந்தக்காதல் கவிதை இசைப்பாடலாகும். அப்போது நடுசாமம்கூடப் அடர்த்தியான காதல் நினைவுகளைக் கொண்டுவந்து குழுமியிருக்கும் ஆயிரமாயிரம் ஜனத்திரளை ஆட்டிப்படைக்கும். அந்தக் கவிதை தோழர் ஷாஜஹான் எழுதியது என்பதைக் கேட்டபோது அவரது உயரம் எனக்குள் பலமடங்கானது.


எப்போதும் சுற்றியிருக்கிறவர்களைத்தன் பேச்சால் சிரிக்கவைக்கிற ஷாஜஹான் தனது மேடைப்பேச்சிலும், எழுத்திலும் ஆழ்மனதில் புதைந்துகிடக்கிற மனிதத்தைத்தட்டி எழுப்பிக் கண்கலங்கவைப்பார். அருப்புக்கோட்டை கலை இலக்கிய இரவு முடிந்து வந்து தூங்காத கணத்த கண்களோடு பேசிக்கிடந்த அடர்த்தியான நாளில், '' இன்னும் இயற்கை உபாதைகளுக்காக வேலிச்செடி மறைவுகளுக்காகவும், இருட்டுக்காகவும் காத்துக்கிடக்கிற பெண்களுக்காக இந்த அரசு என்ன செய்திருக்கிறது, அல்லது இலக்கியம் என்ன செய்திருக்கிறது '' எனச்சொல்லி முடித்தபோது எல்லோர் கண்களிலும் ஈரம் கோர்த்திருந்தது.அவர்தான் இலக்கிய உலகுக்கு கட்டாறு எனும் சிறுகதைத் தொகுதியைக் கொடுத்திருக்கிறார். அதன் மூலம் இதுவரை தமிழ்ச் சிறுகதைகள் புழங்காத பகுதிக்குள் அடிஎடுத்து வைக்கிறார். துருப்பிடிக்காத பழைய்ய காதல், ஓடிப்போன தாயின் வீட்டுக்குப்போகும் பழைய்ய மகன், அம்மிகொத்துகிற மனிதரிடமிருந்து கேட்கும் இயந்திரமயமாதலுக்கு எதிரான பட்டினிக்கேள்வி.. என்பதான பாமர ஜனங்களை அனுகும் அவரது கதையாடல்களில் தனது சமூகத்தின் சாயல் துளிக்கூட காணமுடியாததுதான் பெரிய முரணும் தனித்துவமும். '' ஏன் டீச்சர் எங்களைப் பெயிலாக்கினீங்க'' எனும் மொழி பெயர்ப்பு நூல் அவரது எழுத்தால் தழுக்கு கிடைத்த கொடை. பல புதிய கேள்விகளைப் பழய்ய கல்வித்திட்டத்தின் மேல் சவுக்கடியாக வைக்கிறது அது. எப்போதும் தொற்கடிக்கப்பட்டவர்களின் விடையற்ற கேள்விகளுக்கு எந்த கொம்பனும் பதில் சொல்லமுடியாது. குற்ற உணர்ச்சியோடு ஒதுங்கிப்போகிற சமூகத்தின் தோளில் அந்தக் கேள்விகள் ஏறிக்குடிகொள்ளும்.இந்த ' புதுவிசை ' இதழில் அவரது இரண்டு கவிதைகள் அதிலொன்று.


0
எதிரெதிர் அமர்ந்துசூதாடினோம்நானும் கடவுளும்.
உருண்ட பகடைகளில் அதிரகசிய வாய்களில் விழுங்கப்பட்டது ஒவ்வொன்றாய்.


பால்யம், இளமை, கனவு, இலட்சியம் எனகையிருப்பையெல்லாம்தோற்று எழுந்த என்னைதடுத்து அமர்த்தினார் கடவுள்.


'உன்னுள்ளே இருக்கும்.அந்த ஒற்றைக்கவிதையைப்பணயம் வை' என்றார்.
எழுதும் நாள் எதுவெனத்தெரியாது கவிதைபரம்பொருளையே கேட்டேன்.


'உன் கவிதை வரும் நாள்கவிதைக்கே வெளிச்சம்' என்றார்.ஆட்டம் முடிந்தபாடில்லை

7.5.09

ஒதுங்கி நிற்கும் தீர்ப்பின் வரிகள்

ஐஸ்காரனின் அழைப்பிலும்,
இடைவிடாத மழை நேரத்திலும்,
காற்றில்லாத மொட்டை வெயிலிலும்,
நேற்றிரவின் காமக்கனவிலும்,
கழிப்பறையின் காத்திருத்தலிலும்நீக்கமற
வந்து நிற்பதுன் நிழல்.பட்டிமன்றம் முடிந்தாலும்
சரியெனவும் தவறெனவும்
தீர்க்கப்படாத தாவாவாய்
நிலுவையில் நிற்கிறதுன் அன்பு.


.
எடைக்கல்லையும்
தராசுத்தட்டையும்தூக்கியெரிந்த பின்பு
நடந்ததுநம் கொடுக்கல் வாங்கல்.
அப்போதிருந்துகானாமல் போனது
தீர்ப்பின் வரிகள்.

புலம் பெயர்ந்த படைப்பாளியின் குரல்
ஒரு கால் நூற்றாண்டுகளுக்கு மேலான இனப் பிரச்சினை. ஒருகால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இரண்டு தேசத்துக்கு தீனி போடும் அரசியல். ஈடுகட்ட முடியாத இழப்புகள். கனவிலும் கூட வந்து தொலையும் வெடிகுண்டுச் சத்தம். சொந்த மண்ணை தொலைத்து விட்டு வேற்று நாடுகளில் தஞ்சம் புகுந்த அவலம். இந்தியாவில் ஒரு தலைமுறையே அகதித் தமிழர்களாக தகரக் குடிசைகளில் தாழ்ந்து கிடக்கும் அவலமெனத் தொடர்கிறது இலங்கைத் தமிழர் வாழ்வு. இந்த மாத புதுவிசையில் ஜெர்மனியில் புலம் பெயர்ந்து வாழும் மொழிபெயர்ப்பாளர் நடராசா சுசீந்திரனின் நேர்கானல் பதிவாகியிருக்கிறது. வலையுலகத்திற்கு இப்பதிவின் மூலம் இணைக்கப்படுகிறது

2.5.09

தேர்தல் காமெடிகள்
தென்னை மரத்தில் ஏறிய திருடனைப் பார்த்துவிட்ட தோட்டக்காரன் கேட்டான்.
" எவண்டா அது, அங்க என்னடா பன்றே " திருடன் பதில் சொன்னான் " நாந்தாண்ணே, புல்லுப் புடுங்கப்போறேன்"வெறும் கையோடு இறங்கிய திருடனைப் பார்த்துக் கேட்டான் என்னடா எறங்குறே " அங்க புல்லுக் கெடைக்கல அதா திரும்பிட்டேன் " ன்னு திருடன் சொன்னானாம்.
மதுரை பெரியார் நிலையத்திலிருந்து காலையில் திருப்பரங்குன்றத்துக்கு போனோம். பதினைந்து ரூபாய் கொடுத்து ரெண்டு டிக்கெட் கேட்டோம். ரெண்டு டிக்கெட்டோடு திருப்பி ஒன்பது ரூபாயும் கொடுத்தார். என்னசார் மீதிச் சில்லறை ஜாஸ்தி கொடுத்திட்டீங்கன்னு சொன்னதற்கு இல்ல சார் சரிதான் என்று சொன்னார், அந்த தாழ் தள சொகுசு பேருந்துநடத்துனர். எப்ரல் முப்பதாம் தேதி முதல் தமிழகம் முழுக்க பேருந்துக் ட்டணங்கள் குறைக்கப் பட்டுவிட்டது. அரசு கட்டணம்குறைக்கப்படவில்லை என அறிக்கை விடுகிறது.இது பரவாயில்லங்க. ஈழத் தமிழ்நாடு ஒன்றே எனது தாரக மந்திரம் என்று காங்கிரசும், அண்ணா திமுக வும் சொல்லுகின்றன. தேர்தல் முடிந்தவுடன் இந்திய நதிகள் அணைத்தையும் இணைக்க ஆளாளுக்கு பிவிசி குழாய்களை எடுத்து தயாராக வைத்திருக்கிறார்கள். சாத்தூரில் காங்கிரஸ் கட்சி மேடையில் ஒருவர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உடனே சேது சமுத்திரத் திட்டத்தை உடனே அமல் படுத்தும் என்று வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருந்தார். ஆமா இது வரை இந்தியாவை ஜார்ஜ் புஷ்ஷா ஆண்டு கொண்டிருந்தார் ?. இந்த ஒரு முறை எனக்கு சான்ஸ் கொடுங்க என்று இன்னொருவர் கேட்கிறார். இது என்ன நடகக் கம்பெனியா ? சினிமாக்கம்பெனியா ?வாக்காளர்களுக்கு மூளை இருந்த இடத்தில், டீவி, சினிமா, மட்டும் இருக்கிறதென நினைக்கிற அரசியல் கட்சிகள்.இந்த வார ஜூனியர் விகடனில் முக்கியமான வேட்பாளர்களின் தனிநபர் சொத்து பட்டியல் பார்த்தேன். போன தேர்தலில் கட்சியில்லாமல் நிதிப்பொறுப்பு எடுத்துக்கொண்ட ஜனநாயகச் சிற்பி ப.சிதமபரத்துக்கு 17 கோடி. இப்போது 27 கோடி சொத்து. இது கணக்கில் வந்தது. இதே போல ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு கோடி தொடங்கி 20 கோடி வரை உழைத்து உயர்த்தியிருக்கிறார்கள் தங்களின் சொத்துக்களை. மனைவி, மக்கள், உறவினர் பேரில் இருக்கும் பினாமி சொத்துக்கள் நீங்களாக. இதுதான் கலப்பு பொருளாதாரக் கொள்கை கொண்ட இந்திய ஜனநாயகத்தின் நிலைமை.நாற்பது கோடிப் பேருக்குமேல் இரண்டு வேளைச் சாப்பாடு மட்டும் சாப்பிடும் இந்தியார்களுக்கு மேலே சொன்ன சொலவடைகள் மட்டும்தான் சொத்து.

வலியறியும் வலி
கோணிப்பையில் சேர்த்துக்கட்டிய

சோத்துப்பானையும் சாப்பட்டுத்தட்டும்

பூதக்கணம் கணத்தது.

வழிச் செலவுக்காக விற்றபோது

கோழிகளின் கேரல் சத்தம்

உயிரைப்புடுங்கியது.

பக்கத்துவீட்டு லட்சுமிச் சித்தி

எனைக் கட்டிப் பிடித்தபோது

முகம் திருப்பிய அம்மா, உடல்குலுங்கினாள்.


ஊரெல்லையில், கருக்கிருட்டில்
சாமிகும்பிடாத அய்யா, கிழவனார் கோயிலில்

நெடுஞ்சாங்கிடையாக விழுந்து எழுந்தார்.

திரும்பி வரமுடியும் என்கிற நம்பிக்கை இருந்தும்

கால்கள் இடறியது.

திருப்பித் தரமுடியாத

கடனுக்குப் பயந்துஊரைக்காலி செய்த

நினைவுகள் நெறிஞ்சி முள்ளாய் இடறுகிறதே.


வெடிகுண்டின் வெளிச்சத்தில்

மிச்ச உயிர் தேடிக் கிடைகாமல்

கொடுவாள் கொண்டு கீறிய நினவுகளோடு

தமிழ்மணலில் பதிந்து விட்ட ஒவ்வொரு தடத்திலும்

புதைந்து கிடக்கிறது புலம்பெயர்தலின்

உக்கிரமான வலியும் ரணமும்.