இன்று மதியம் ஜெயா( அப்படிச்சொல்லலாமா?) தொலைக்காட்சியில் ஒரு போட்டி நிகழ்ச்சி நடந்தது. சமயல் போட்டி.எது எதற்கெல்லாம் போட்டி வைக்கலாம் என்கிற வரையரை ஏதும் இல்லை.அது அவரவர்களின் சுதந்திரம். இருக்கிறவன் கொழுப்புக்கு போட்டிவைப்பான் இல்லாதவன் பசிக்கு போட்டிவைப்பான்.கொழுப்புக்கு நடக்கும் போட்டிகளில் நேரமும் பணமும் இன்னபிறவும் விரயமாகும்.இல்லாதவனுக்கு அப்படியில்லை.
நிகழ்சியில் நூடுல்ஸ் சமைத்துக்கொண்டுவந்த ஒரு இளம் யுவதியின் நூடுல்ஸ் நிராகரிக்கப்பட்டது உடனே அவள் கண்ணைப்பிழிந்து கொண்டு அழுதாள். மனசுக்கு கஷ்டமாக இருந்தது.
இப்படித்தான் சூப்பர் சிங்கர் ஜூனியர் போன்ற நிகழ்ச்சிகளிலும் சிறார்களைப் போட்டிக்கு இலக்காக்கி அவர்களுக்கு தோல்வியைப் பற்றிச்சொல்லிஅழவைத்து அதற்கு பின்னணி இசை அமைத்து காசாக்குகிறார்கள். ஒரு குழந்தையை இன்னொரு குழந்தையோடு ஒப்பீட்டுப் பேசக்கூட கூடாது என்று உளவியலார்கள் சொல்லு கிறார்கள். அது ஒரு புறமிருக்கட்டும். தோல்வியடைந்த இந்தக் குழந்தைகளின் இசைத் திறமையோடு புகழ்பெற்ற வாய்ப்பாட்டுக்காரர்கலைப் பாட வைத்தால் குழந்தைகள் தான் ஜெயிப்பார்கள். பித்துக்குளி முருகதாசின் தொண்டையையும்,ஏ.ஆர்.ரகுமானின் தொண்டையிலிருந்து வரும் பாடல்களுக்கும் லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கும்போது ஒரு குழந்தையின் பாட்டை நிராகரிப்பது கொடூரம். ஏன் கே.பாக்கியராஜையும், டீஆரையும் கொண்டாடுவத்ற்கு இங்கொரு கூட்டமே இருக்கிறதே.
குழலினிது யாழினிது என்ப தம்மக்கள் மழலைச்சொல் கேளாதவர். இந்த உலகம் தனது குழந்தையின் மழலையை கூடிநின்று கேட்டுக்குதூகலித்துக்கொண்டாடுகின்ற உலகம்.அதன் மொழிக்கு இலக்கணம் கிடையாது. அப்பாவைப் போடா என்று சொல்லும்,விருந்தினரை தொந்தி மாமா என்று சொல்லும்.ஏற்றுக்கொண்டு சிரிப்பதில்லை.இப்போது அது இல்லையா?. எல்லாம் மறந்துப்போய் நடுவர்கள் அப்போது ஒரு தத்துவம் சொல்லுவார்கள். போட்டியென்று வந்துவிட்டால் ஒருவர் தான் ஜெயிக்க வேண்டும் அதனால் நாங்கள் உங்களை நிராகரிக்கிறோம் என்று. இது போட்டி நடுவர்களின் தத்துவமல்ல.இது தான் இன்றைய உலகமயத்தின் பிரதான தத்துவம் . அது, தான் ஜெயிக்கவேண்டு மென்பத்தற்காக எதையும் தோற்கடிக் கும். குழந்தைத் தனத்தையும் சேர்த்து.
எல்லா விலையாட்டிலும் ஜெயிப்பது ஒருவராகவும் தோற்பது இன்னொருவராகவும் தான் இருக்கும். ஆனால் இந்த தாராள உலகமய விளையாட்டில் ஜெயிப்பது ஒருவராகவும் தோற்பது கோடிக் கணக்கிலும் பெருகிவருகிறது. வால்மார்ட் ஜெயிப்பதற்காக இந்தியா தோற்கிறது.விலைவாசி பஸ்கட்டணம் ஜெயிப்பதற்காக
தமிழ் மலையாள உணர்வுகள் பணயம் வைக்கப்படுகிறது.