Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

27.12.15

அவனைப் போக விடு


(கருப்புக் கவிதைகள் பக்கத்திலிருந்து
கருப்புக்காதல் வரிசை -
மொழிபெயர்ப்பு முயற்சி.)
..

நாம் சந்தித்துக்கொண்ட முதல்பொழுதிலேயே
உனை முடிவில்லாமல் அறிந்ததாய் உணர்ந்தேன்.
தனித்தினி நான் பயணிப்பதெப்படி நண்பனே ?
பரிமாறிக்கொண்ட ரகஸ்யங்களை விட்டு
தனித்துநான் பயனிப்பதெப்படி நண்பனே ?

சந்தோசங்களை விடவும் சண்டையில் நாம்
பரிமாறிதுதானே அதியற்புத உன்னதங்கள்.
ஆனந்தம்,களியாட்டம்,கண்ணீரென
எல்லாவற்றையும் சேர்ந்தே செலவழித்தோம்.

வாழ்வின் பரியந்தமும் புன்னகை கூடவரும்
யாரும் விரும்பாத நான் உன் அன்புக்கு பாத்திரமானதால்.
உனக்கான என் அன்பை,என்மரியாதையை, இடத்தை
எதற்காகவும் விட்டுக்கொடுக்கமுடியாது.
என்னில் அடியாழத்தில் இருக்கும் இவற்றால்
ஒருபோதும் உனைப்பிரிய முடியாது.

எனினும், இன்னொரு நான், மிதிபட்டநான்.
என்னால் நீ இழந்தவை போதும்
இது உன்னை ஒரு போதும் காயப்படுத்தக்கூடாது
என்பொருட்டு பேத உலகில் நீ இழந்தவை போதும்.

இருப்பினும் நீயெனக்கு எப்போதும் உன்னதம்.
உவர்ப்பிலும் நானுனக்கு சளிக்காத சந்தோசம்.
அதிமாக நேசித்தால் அருகிலிருந்து நேசிக்காதே
எங்கள் முதுமொழியை நான் முன்மொழிகிறேன்

மறந்துவிடாதே
நினைவுகள் அழியும் வரை
நானும் மறக்கமுடியாது
போய்வா....

கருப்புக்கவிதைகள்



 1

கருப்புக்காதல்
---------------------
கருப்புக்காதல்
தொகுப்பிலிருந்து
பெயரிடப்படாத
ஒரு கருப்புக்கவிஞனின்
வெறுப்புப்பாடல்

நன்றி.
black poems

0
நேர்த்தி ஒருபோதும் நேர்த்தி இல்லை,
உண்மை என்னவெனில்
நானெப்போதும் நேர்த்தி இல்லை.
தவறுகளால் கட்டமைக்கப்பட்டவன் நான்.

அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும்
அவர்களிலும் நேர்த்தியானவனாகவும்
சிகப்பே புதிய கருப்பாவது போல
வேற்றுமை தான் நிஜ உலகம்.

நான் எப்படி இருப்பதெனவும்
நான் யார்போல இருப்பதெனவும்
நான் மட்டுமே முடிவெடுக்கமுடியும்.

நான் பிறர்போல் நடிக்கமுடியாது
மன்னிக்கவும்
என்னிடம் இல்லாத நேர்த்தியை
இருக்கிறதென்று ஒருநாளும்
என்னால் நடிக்கவே முடியாது.
0

2

கடவுளுக்கும் பிடித்த நிறம்
------------------------------------------------

சத்தியமான உலக அழகி
இரவின் வண்ணம் குழைந்தவள்
சுருள்சுருளான கேசம் அணிந்தவள்
உயர்ந்த தோள்களும் தாழ்ந்த புன்னகையும் படைத்தவள்
அவள் தான்சானியாவிலிருந்து வருகிறாள்
அவளே ஆண்களின் ஆதித்தாய்.

தேனின் நிறம்பெற்றவர்களே தேவதைகள்
அவர்கள் அலபாமாவினின்று வருகிறார்கள்
பசிய கண்களும் தடித்த அதரங்களும்
அகன்ற நாசியும் அதுபோன்றே இடையும் கொண்ட
அவர்கள் சூரியன் உறங்கும் போது
உருவெடுத்த வண்ணம் பூசியவர்கள்
அவர்களின் வளைவுகளை வடிக்கும் போது மட்டும்
கடவுளுக்கு கைநடுங்கவில்லை.

ஆகவே அழகிய கருப்புத்தான்
கடவுவுளுக்கு பிடித்த நிறம்

அழகிய கவிதையின் சொந்தக்காரி
ஆதி அழகின் சொந்தக்காரி

அன்புக்கருப்பி
-திமோத்தி.n.ஸ்டெல்லி







0
3



இது ஒரு கருப்புக்கவிதை.
ஆப்ரிக்க - அமேரிக்க கவிஞனின் வேதனை ஊற்றி எழுதப்பட்டவரிகள்.
கவிஞனின் பெயர் தெரியவில்லை.ஆனாலும் அந்த வலி
எல்லாக்கருப்பின மக்களின்பெயரையும் ஓங்கி உச்சரிக்கிறது

being a black at work place

எனது அன்பை பலஹீனமாக எடுத்துக்கொண்டார்கள்
எனது அமைதியை ஊமைத்தனமென்றார்கள்
எனது தனித்தன்மையை புரியாதபுதிரென்றார்கள்
எனது மொழியை வட்டாரவழக்கென்றார்கள்
எனது உறுதியை மூர்க்கமென்றார்கள்
எனது சிறிய தவறுகளுக்காக என்னை வீழ்த்தினார்கள்
எனது வெற்றியை விபத்தென்று உருவகப்படுத்தினார்கள்
எனது புத்திக்கூர்மையை என்வேலையாகக்குறுக்கினார்கள்
எனது கேள்விகளை என் அறியாமை என்று அறிவித்தார்கள்
எனது முன்னேற்றத்தை தகாதகுறுக்குவழி என்றார்கள்

19.4.12

எதைத் தேடுகிறது நீதியின் தராசு ? ( எஸ். வி. வேணுகோபாலன் )

கைக்குழந்தைகளும் பெண்களும்
அய்யகோ என்று
அலறிய சத்தம்
பெருகிய குருதி
சாதிய வெறியோடு
சாய்க்கப்பட்ட உடல்களும்
மாய்க்கப்பட்ட உயிர்களும்
எல்லாம் பொய் என்று அறிவிக்கப்படுகிறது
நீதியின் மேடையிலிருந்து

அடங்காத ஆண்டைகளின்
அடியாட்கள் கும்பல் வெளியேறுகிறது
வெற்றிப் புன்னகையோடு சிறைகளிலிருந்து

சாட்சியங்கள் போதவில்லையாம்

காலகாலமான வன்கொடுமைக்கும்
தீண்டாமைக்கும்
அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும்
உறைந்து போன இரத்தத்தின் மீதே
நிறைந்து பெருகும் புதிய குருதியும்
சரிந்த இதயங்களும்
குலைந்தே போன நம்பிக்கைகளும்
பற்றுறுதியும் இன்ன பிறவுமாய்
தேசத்தின் சேரிகளெங்கும்  
பரவி விரவி இருக்கும் காட்சிகளுக்குச்
சாட்சிகளாய்
கையாலாகாத அரசுகளே இருக்க

வேறெதைத் தேடுகிறது நீதியின் தராசு,
வெறித்துப் போன தெருக்களில்
பொறித்திருக்கும் சாதிய வன்மத்தின்
தடயங்களுக்குக் கண்களை மூடிக் கொண்டு ?

***********

1996 ஜூலை 11 அன்று பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் பெதானி தோலா என்ற கிராமத்தில் நிலச் சுவான்தார்களின் ரணவீர் சேனை என்றழைக்கப் படும் குண்டர்படை தலித் குடும்பங்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் பெண்கள், கைக் குழந்தைகள் உள்பட 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

 பெரிய முயற்சிகளுக்குப் பிறகு மறு நாள் பதிவு செயயப்பட்ட முதல் தகவல் அறிக்கை, நீண்ட நெடிய வழக்கு இவற்றுக்குப் பிறகு ஆரா செஷன்ஸ் நீதிமன்றம் மே 2010 ல் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனையும், மீதி இருபது பேருக்கு வெவ்வேறு கால அளவில்  சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கியிருந்தது.

மேல் முறையீட்டை அடுத்து,  ஏப்ரல் 16, 2012 அன்று  பாட்னா உயர்நீதிமன்றம்,  'குறைபாடுள்ள சாட்சியங்கள்' என்ற அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த
அத்தனை பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துவிட்டது.

 0
கவிதையும்,தகவலும்,கோபமும் 
தோழர். எஸ் . வி .வேணுகோபாலன்

15.4.12

இன்னும் கிடைக்கவில்லை வியர்வையின் விலை

வாகனங்களின் வயிற்றை நிரப்பும்
அதே அம்மாவின் வேலை
பெட்ரோல் மணக்கும்
சீருடைதரித்த பங்க் பெண்களுக்கு.

நூற்றுக்கணக்கில் நுழையும்
வாகன வகைகளில் தம்பி கேட்ட
சைக்கிளின் ஜாடை எதிலும் இல்லை.

பூழுவைக்கடந்து செல்லும் பாவனையில்
விரைந்து வந்து நிரப்பிப்போகும்
பெண் காவலரின் சீருடையில் மணக்கும்
சீமைச்செண்டு வாசனை.

வெறித்த பார்வைகளை உதறிவிட்டு
சுற்றிச்சுழலும் எண்களைத்தொடரும்
கண்களுக்குள் கிடக்கிறது ரொம்பப் பசியும்
கொஞ்சம் கொல்லபட்டி கருப்பசாமியின் நினைவும்.

முப்பதுநாளும் அலுத்து உறங்கிப்போகும் அம்மா
ஒண்ணாம்தேதிமட்டும் கொட்டக்கொட்ட முழித்திருப்பாள்.
அவளை அறிந்தே அருகில் போய் உட்காரும்
முதலாளியின் வசவுக்கு வாங்கிய சன்மாணம்.

எனவே இன்னும் கிடைக்கவில்லை
ஒருமாதம் சிந்திய வியர்வையின் விலை.

25.3.12

ஆக்கங்கெட்ட தமிழ்க்குருவி



விரட்டி விரட்டியடித்தாலும்
ஆளில்லா நேரம் பார்த்து
கூசாமல் வீடு நுழைகிறது
ரோசமில்லாத சாம்பக் குருவி.

அலகில் ஏந்தி வந்து போட்ட
ஐந்தாவது குச்சியையும்
ஒரு வீட்டை உடைக்கிற
வேதனையோடு வெளியே எறிந்தாச்சு.

ஆனாலும் அடம்பிடிக்கிறது
ஆக்கங்கெட்ட தமிழ்க்குருவி
வராண்டாவில் தொங்கும்
மின்விசிறியில் கூடுகட்ட.

23.3.12

பேருந்தைப்போட்டியிட்டு ஜெயிக்கும் நினைவுகள்.

அந்த விடிந்தும் விடியாத கருக்கலில்
திருமங்கலம் நுழையும் பேருந்து வெளிச்சத்தில்
மீசை பெருத்த போஸ்ட்டர்களைத் தாண்டி
நினைவு தேடும் ஷாஜகானின் சிரிப்பொலியை.

ஊருக்கு வரும் பகல் பொழுதுகளில்
முகத்துக்கு நேரே நீண்டு வெளேரெனச் சிரிக்கும்
உரித்த வெள்ளரிக்காயோடு கசியும்
காதுவளர்த்த பாட்டிகளின் வறுமை.

செழித்துக்கிடக்கும் சாலையோரத்து வேலிக்காடுகள்
கடக்கும் பொழுதெல்லாம் கயிறறுத்துக்கொண்டு
காட்டுக்குள் ஓடிமறைந்துகொள்ளும் இன்னொரு நான்.

இழுத்துக்கொண்டு வந்து இருக்கையில் வைக்கிற
இளைராஜாவின் பாடல் வந்த சுவடு தெரியாமல்
அந்தரத்தில் மீளப்பறக்க வைக்கும் என்ன செய்ய ?

28.2.12

எப்போதேனும் நினைத்து வருந்தியிருக்கிறீர்களா ?( ஷாஜஹான் கவிதைகள் )

மிகச் சிறந்த கவிஞன்,மிகச்சிறந்த கதைசொல்லி,நெஞ்சுருக்கும் பேச்சாளன் நிஜமான பொதுவுடமைக்காரன்,ஆகச்சிறந்த ஹாஸ்யக்காரன். எல்லா வற்றையும் உள்ளடக்கிய சக மனிதன். தோழர் ஷாஜகானின் கவிதை இது.


எப்போதேனும் நினைத்து வருந்தியிருக்கிறீர்களா ?

நட்புக்கு நீங்கள் செய்த துரோகத்தை
நம்பிக்கைக்கு நீங்கள் செய்த அவமரியாதையை
அன்பில் மேல் நீங்கள் செலுத்திய வன்முறயை
தவிப்பின் மீது நீங்கள் விசிய அலட்சியத்தை
கலையின் மீது அள்ளிப்பூசிய பொய்மையை

வரலாற்றின் மேல் செய்த இருட்டடிப்பை
எளிமையின் மேல் கொட்டிக் கவிழ்த்த அதிகாரத்தை
உண்மையின் மேல் போர்த்திய அரசியலை
இயல்பின் மீதான மேலதிகாரத்தை
வெற்றிகளின் பேராலான தீரா வெறியை
தோல்விகளின் மீதான கேலிச் சிரிப்பை
கொல்லப்பட்டோர் பற்றிய அவதூறுகளை

சிறுமைப்பட்டோர் மீது காட்டாதிருந்த கனிவுக்கு
கனவுகள்மேல் காட்டிய ஆத்திரத்திற்கு
காலம் சகலத்தையும் மறக்கச்செய்யும்
கண்களில் கொட்டிய மணலாய் உறுத்தும்

இவை எதுபற்றியேனும் வருந்தியிருக்கிறீர்களா
எப்பொழுதேனும் ?
ஒரு பொழுதேனும் வருந்தியிருந்தால்
நீங்களும் மனிதன் என்னைப்போல

19.1.12

சொந்த வீட்டிலே ஒளிந்து வாழும் அந்தோணி.

                                              (  photo: anton- sattur )

குளிர்ந்து ரெண்டுநாள் ஆன அடுப்பையும்
விழுந்து காய்ந்துபோன கண்ணீர்த்துளிகளும்
வீடெங்கும் விரவிக்கிடக்கும் இல்லாமையும்
கயிற்றால் இழுத்துக்கட்டிய கதவு வீட்டையும்
ஒரு முப்பதுவருட வாழ்க்கையையும்
விட்டுவிட்டுக்கிளம்பினான் அந்தோணி.
ஒருசாக்குப்பையில் அடங்கிப்போன
சாமான்கள் உடன் எடுத்துக்கொண்டு.

பல்லாவரத்தில் கல்லுடைக்கப்போனவனுக்கு
பூர்வீக வீட்டை விடப்பெரிய குடிசை கிடைத்தது.
முற்றமும் கொல்லையுமாக விரிந்து கிடந்த வீடு
கொட்டாரத்தில்குச்சல் கட்டி குளிக்க
கழிக்கப் பழகிக்கொண்டது குடும்பம்.
முப்பது வருட வாழ்வில் முதல்முதலாக
முற்றத்தில் நட்டுவைத்தான் ஊரின் நினைவாக
ஒரே ஒரு சொந்த வேப்பங்கன்று.

பத்துவருடச் சம்பாத்தியத்தில் பரம்பரைக்
கூலி தொலைத்து பெட்டிக்கடை முதலாளியானான்
கடையைப்பூட்டும் போது கல்லாவையும்
கடையைத்திறந்திருக்கும் போது ஜாதியையும்
ஒளித்து வைத்து ஒரு தலைமறைவு வாழ்ந்தான்.

இரண்டு தலைமுறைக்கு முன்னாள்
ஊருக்குள் ஒளிந்து வாழ்ந்த
அம்மாசி என்கிற யோசியப்பும் இப்போது
சொந்த வீட்டுக்குள்ளே ஒளிந்து வாழும்
அந்தோணி என்கிற அந்தோணிநாடாரும்.
சொந்த தேசத்துக்குள் புலம் பெயர்ந்ததற்கு
சத்தியமாய் வேறுயாரும் காரணமில்லை

3.1.12

456+456

ஆங்கிலப்பள்ளிகளில் சுதந்திரம் தொலைத்து
பொதிசுமக்கிறதாய் நானும்.
அரசுப்பள்ளிகள் போட்டிகள் நிறைந்த தொழில்
நுட்பத்துக்குதகுதியற்றதென நீயும்.
வேஷ்டி விலகி,கையிருப்புச்சிதறி
மதுக்கடை வாசற் புழுதியில் கிடப்பவனை
அருவருப்பாய்க்கடந்துபோகும் நீயும்
அடுத்தவனிடம் கைநீட்டி கையூட்டு
வாங்கிய பஞ்சுமெத்தையில் புரள்வதொரு
பொழப்பா என்று அவனும்.
சொறிவதும் சொறிவதைப்புகழ்வதுமே
பொதுஇலக்கியமென இவனும்.
அழுக்கையும் அழுது புலம்பும் கண்ணீரையும்
படியெடுப்பதே அழகியலற்ற எழுத்தென அவனும்
அவரவர்க்கிசைவாக திருப்புகிறது சுக்கானை.
அவரவர்க்கிசைவான கூட்டமும் கூடுகிறது.

2.1.12

விளம்பர முதல்வாதம்.

                                                        ( நிழற்படம் : ஆண்டனி-சாத்தூர்)

ஆடுகளத்தில் இறங்க
விளையாட்டுமட்டும்
தெரிந்திருந்தால் போதாது.

மேடு பள்ளத்தை சமப்படுத்த
வெறும் மண்வெட்டிகள்
மட்டும் கானாது.


கூட்டத்தோடு வேட்டைபோனால்
விளையவைத்து அறுத்தால்
பங்கு உண்டு அப்போது.
இல்லாதவற்றைக்கூறு போடும்
பங்குவர்த்தகம் இப்போது.

இலக்கிய,இலக்கணங்கனங்கள்
தகுதிதரம் கொண்டுதயாராகும்
வியாபாரிக்கு வெறும் சரக்குமட்டும்
கையிருந்தால் விற்காது

சரக்குமுறுக்கா
செட்டியார் முறுக்காவெனில்
விளம்பரமே எப்போதும் முறுக்கு

ஆடுகளத்தில் இறங்க
விளையாட்டுமட்டும்
தெரிந்திருந்தால் போதாது.

30.12.11

ஒரேதரம்....



தொலைக்காட்சி சிறந்த பத்து
மொக்கைசினிமாக்களை வரிசைப்படுத்தும்.
இந்தியா டுடே சிறந்த பத்து
கொள்ளைக்காரர்களை வரிசைப்படுத்தும்,
பத்திரிகைகள் சிறந்த பத்து
பரபரப்பை வரிசைப்படுத்தும்,
குமுதம் சிறந்த பத்து
தொடைகளை வரிசைப்படுத்தும்,
அரசியல்வாதி சிறந்த பத்து
சூட்கேசுகளை பத்திரப்படுத்துவார்,
அம்பானிகள் சிறந்த பத்து
தனியார் திட்டங்களை வரிசைப்படுத்துவார்கள்,
அன்னா ஹசாரே சிறந்த பத்து
உண்ணாவிரதப்பந்தலை வரிசைப்படுத்துவார்,
சமூக வலைத்தளம் கூட
பத்து வரிசையை பற்றிக்கொள்ளும்
இவையெல்லாம் சேர்ந்து
வஞ்சித்த மக்களுக்கு வஞ்சனையின்
எண்ணிக்கையும் தெரியாது அவற்றைத்
தரப்படுத்தவும் நேரமிருக்காது
அவர்களுக்கு ஒன்றுமட்டும் தெரியும்
மேற்சொன்ன எல்லாமே ஒரேதரம் என்று.

22.12.11

சுடச்சுடத்தேநீர் மற்றும் அரசியல்


எல்லா நேரமும் குளிரும் பனியும் கவிழ்ந்திருக்கிறது.
தேநீர்க்கடைகளில் கூட்டம் குறைந்த பாடில்லை.
ஒருகுவளையின் கடைசி மிடறுகுடிக்குமுன்னே
ஆறிப்போகிறது சுடேற்றும் திரவம்.
ஒவ்வொரு மிடறு உள்ளே போகும் போதும்
வெளியேறுகிறது அவரவர்க்கான அரசியல் அறிவு.
ஞொம்மால இருக்குற சேட்டங்கடையெல்லாம் நொறுக்கணும்
என்கிறான் தமிழ்ப் பற்று மிகுந்த சுத்தத் தமிழன்.
சிங்கப்பூர்ல நம்மூர்க்காரன் ஒரு அமைச்சர் தெரியுமா
தொடை தட்டும் ஆண்ட பெருமைத் தமிழன்.
இதையெல்லாம் கேளாது பசிமிகுந்து வாய் பார்த்து
நெடுநேரம் கையேந்தி நிற்கிறான் ஒரு வறிய தமிழன்.
எதுவும் பேறாது என்று திரும்பும் அவன் குனிந்து
ஒரு எச்சில் சிகரெட்டை எடுத்து பற்றவைக்கிறான்
இப்போதைக்கு இதுபோதும்
வயிற்று எரிச்சலுக்கும் வாடைக்குளிருக்கும்.

2.12.11

மாற்றத்தைத் தடுக்கும் அரண்


எகிப்து தொடங்கி
வால்தெரு வரை
பற்றிப் படர்ந்த தீ,
என்தேசத்துக்குள்
நுழையவில்லை.
ஏனெனில்
அது மூன்று பக்கம்
ஜாதியாலும்
ஒரு பக்கம்
மதத்தாலும்
சூழப்பட்டிருக்கிறது.

26.10.11

அழுக்கில் குளிக்கப்போகும் மாற்றங்கள்


தமிழகத்து புரட்சியை அடுத்து வரும்
தலைத் தீபாவளி இது.
இருட்டிக்கொண்டுவருகிற
மேகத்தைப் பார்த்துச் சபிக்கிறது
மினரல்வாட்டர் வண்டிகாரனிடம்
குழையும் வீரத்தமிழகம்.
அவசர அவசரமாக மூட்டைகளில்
வெடிப்பார்சலைச் சுமந்துகொண்டு
அரசு அலுவலர் குடியிருப்புகள்
நோக்கிவிரைகிறது
அன்னா ஹசாரேயின்
இளைஞர்படை இருசக்கரவாகனங்கள்.
விடிகாலையிலே எழுந்து
ஒரு சுற்று மாற்றங்களைப்
பார்த்து வரக்கிளம்பினால்
வழியெங்கும் சிதறிக்கிடக்கிறது
வெடிகளடைத்த தமிழ்பாடநூல்  குப்பைகளும்,
வெறிகளடைத்த தமிழ் கலச்சாரக் குப்பிகளும்.
லக்கான் கோழிக்கடையில் நேற்றுவரை கிலோ 120
இன்னைக்குமட்டும் 150 ரூபாய்.
அரசியலும் சமயமுமாகச்சேர்ந்து
ஆயிரம் ஆயிரம் அழுக்கு
படிந்த சாக்கடைக்குள்
முழுகப்போகிறது எண்ணெய்தேய்த்தபடி.

16.10.11

கவிதையில்லை, கணக்கெடுப்பு.


என்பெயர் காத்தன் மகன் முத்தன்
நாங்கள் இப்படித்தான் பெயர்வைத்துக் கொள்ளமுடியும்.
என்ன பெயர் வைத்துக்கொண்டாலும்
என்தெருப்பெயரும் என் மூதாதையர் பெயரும்தான்
எங்களை முந்திக்கொல்லும்.

என்கதவிலக்கம் எதுவாக இருந்தென்ன
ஏழேழுதலைமுறையாய் எட்டிஉதைக்கப்பட்ட
எங்கள் வீட்டுகதவுகள் கவிழ்ந்துகிடக்கிறது.

எனது தொழிலா?  ஒண்ணுமில்லை
பொழப்பூன்னு சொல்லுங்க, சுத்தஞ்செய்றது
சம்பளமா அது மேஸ்த்திரி,பைனான்ஸ்காரர்
பிடுங்கியது போக போட்ட பிச்சை

கேஸ் ஸ்டவ்வா லந்துபண்ணாதிங்கசார்
தொலைக்காட்சிப்பெட்டியா இருக்கிறது
ஆனால் அது அது அரசாங்கத்துக்குச்சொந்தமானது
இருசக்கரவாகனமா இருக்கிறது
ஆனால் அது நகராட்சிக்குச்சொந்தமானது.

குழந்தைகளா அது ஏழெட்டுத்தேறும்
என்ன பண்ணுதுகளா, அதுகளுந்தான்.
.
நீங்கள் இந்த நாட்டுப்பிரஜை
ஓட்டளிப்பது உங்கள் ஜனநாய உரிமை
நீங்கள் நினைத்தவருக்கு
சுதந்திரமாக ஓட்டுப்போடலாம்.
.
எல்லாம் புரிந்தது  முத்தன் எனக்கு
இந்த பிரஜை,ஜனநாயகம், உரிமை, சுதந்திரம்
மட்டும் என்னவென்று தெரியாமல் போனது.
.
இதுவா ?
இது கவிதையில்லை
இந்த தேசம் என்மேல்
வீசியெறிந்த குப்பைகள்.

9.10.11

வேலிமுள் கிழித்த பழய்ய கோடுகள்



எப்போதும் எனக்காகத் தொங்கிக் கொண்டிருக்கும்
வீடு திரும்பிய அப்பனின் தூக்குச்சட்டிக்குள்
எதாவது சில எட்டாவது அதிசயங்கள்.

மஞ்சளும் பச்sசையுமாய் சில மிதுக்கம் பழம்
அரக்குக் கலரில் அரைப்படி எலந்தைப் பழம்
ஆகாய நிறத்தில் புள்ளிகள் நிறைந்த காடைமுட்டை
அம்மையின் முகத்தைகாணாமல் கத்தும் மைனாக்குஞ்சு

கிட்டிப் புல்லும் கவட்டைக் கம்பும்
ஆணியில்லாதபம்பரமும் கயிறு இல்லாத வில்லுமாக
எப்போதும் எனக்காகத் தொங்கிக் கொண்டிருக்கும்
விறகு வெட்டப்போன அப்பனின் தூக்குச்சட்டிக்குள்.

ஆனால் அம்மைக்கு மட்டுமே தெரியும்
அப்பனின் உடம்பெங்கும் எழுதிவைத்த
வேலிமுள் கிழித்த காயங்களின் வலியும்
வட்டிக்குகொடுத்த வைரமுத்துவின் வசவும்.

30.9.11

பிரிவினைப் பணிமனை ( கருத்தக் கவிதைகள் )




ப்ரைனாவின் அம்மா அழுதுகொண்டிருக்கிறாள்
பள்ளியிலிருந்து வீடுதிரும்பிய செல்லம்
தேம்பலோடு சோகம் கொண்டுவந்தாள்.

அவளது வகுப்பில் இரண்டு ப்ரைனாக்கள் உண்டாம்
ஆதலால் இவளைக் ’கருப்பு ப்ரைனா’ என
அழைப்பதன் மூலம் இனம் கண்டார்களாம்.

இனிமேலும்நான் கருப்பு ப்ரைனாவாக
இருக்கமாட்டேன் அடம்பிடித்தவளுக்காக.
ஏதும்செய்ய இயலாத அம்மாவும்
ஏசுவே நான் என்ன செய்வேன் என்று
நொந்துகொண்டு அழுதாள்

அப்புறம் அவளது பொம்மைகளையும்
கொஞ்சம் கருப்புக் கதைகளையும் தந்தேன்.
அவளுக்கு நான் வேறென்ன சொல்லமுடியும்.

ஐந்து வயதாகுமுன்னே குழந்தைகளுக்கு
சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது
கருப்பு என்பது நிறமல்லவாம்
அது எமது மக்களின் தோல் தானாம்.

= டாய் டெர்ரிக்கோட்

18.9.11

பெட்டிக்குள் சுருங்கிப்போன பிராயங்கள்.


அம்மையின் இடுப்பும்
அப்பன்காரனின் முதுகும்

வாசற் கதவும்
வள்ளிமுத்து தாத்தாவீட்டு
வண்டி மேக்காலும்

வானம் விரித்துப்போட்ட
படுதாவில் வரைந்த
மேகச்சித்திரங்களும்

பள்ளிக்கூடப்பெஞ்சும்
பார்வதியின் சடைக்குஞ்சமும்

மதியமழைநாளில்
காரைவீட்டு மொட்டைமாடிக்
குழாயிருந்துகொட்டும் குற்றாலமும்

வேலவர் பவுல் மாதுவென
சாயக்கிடைத்த தோள்களுமாய்
விளையாடக்கிடைத்த நாட்களை

ஈடுகட்டுமா
பொம்மைப்படங்களும்
போகோசானலும் ?

காட்ட்டுப்புழுதியில்
சுட்டுத்தின்ற
காடைமுட்டையின்
ருசியறியுமா
பீட்ஷா சகதிக்குள்
பிசைகின்ற விரல்கள்.

5.9.11

வற்றிய குளத்தில் கிணறு தோண்டும் கைகள்.


கேட்கலாம் என்று செதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு கேள்வி
பகிர்ந்து கொள்ள நினைவில் வைத்திருந்த ரயில் பயண அணுபவம்
பகிர்ந்துகொள்ளமுடியாமல் யாருக்கோ விற்றுப்போன மதுப்புட்டி

தோளில் சுற்றிக்கொள்ளலாம் என்று காத்திருந்த கைகள்
வெளிநாட்டு சிகெரெட்டைப்பார்க்கும் பொழுது கிளர்ந்தெழுந்த ஞாபகம்
எல்லாமே எழுதமுடியாத கவிதை போல பதுங்கிக்கிடக்கிறது

யாரோ அருகில் வந்து எடுத்துக்கொடுக்கிறார்கள்
உனது வியர்வை வாடையின் சாயலையும்
முதல்வரி எழுத கொஞ்சம் கவிதை நினைவுகளையும்.

19.6.11

சுருங்கும் உலகம்


வீட்டில் நாலுபேர்
வீதியில் இருபது வீடுகள்
பகுதியெங்கும் மனிதர்கள்
ஆங்காங்கே இரும்புக்கோபுரம்
எல்லோர் கையிலும் அலைபேசி
எப்போதும் பேசிக்கொண்டே
இருக்கிறது உலகம்.
தொலைதூரக் குரல்களில்
பொங்கிப் பிராவகம் எடுக்கிறது
அன்பும் சிரிப்பும்
சவுதியில் அடிக்கும் வெயிலின்
தகிப்பை உடனுக்குடன் தெரிய முடியும்
சென்னையில் பெய்யும் மழையின்
சத்தத்தை அப்படியே கேட்கமுடியும்
ஆனாலும்
இந்த இரண்டு வருடத்தில்
எதிர்வீட்டுக்காரரிடம்
பேசமுடிந்த வார்த்தைகள்
இரண்டே இரண்டு
கல்யாணம் வச்சிருக்கேன்

சந்தோசம் ’

அவசியம் வரணும்

சரி’