30.1.12

பராக்குப் பார்த்தல் அங்கும் இங்கும் - யேனம் தொழிலாளர் கிளர்ச்சி,மணிப்பூர் தேர்தல்

உத்திரப்பிரதேசத்தில் குசுப்போட்டாலும் அது தேசியப்பிரச்சினை யாகும். மணிப்பூர் போன்ற மாநிலங்களில் எவ்வளவு பெரிய சோகம் நிகழ்ந்தாலும் அது ஒருவரிச் செய்தியாகக் கூட இடம்பெறாது.இதுதான் இந்தியாவின் சன நாயகம்,பத்திரிகை அனுகுமுறை,ஊறிப்போன மந்தை நடைமுறை. வீட்டில் போரடித்து நேரம் போகவில்லை யென்றால் எதிர்கால பிரதமர் ராகுல் காந்தி உத்திரப்பிரதேசம் போய்விடுவார். அங்குபோய் நின்றுகொண்டு தான்  அரசி யல் படிப்பார். அதற்கு காரணமும் அங்கு உள்ள பாராளுமன்ற உறுப்பினர் களின் எண்ணிக்கை தான். ஏன் உத்திரப் பிரதேசம் ஏன் மணிப்பூர்.

இந்த இரண்டிலும் உள்ள பாராளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தான் இந்த ஒப்பீட்டுக்கு காரணம். உபியின் மொத்த பாராளுமன்ற  உறுப்பினர்கள் 80. மணிப்பூரின் மொத்த பா ம உ எண்ணிக்கை- 2. 1958 ஆம் வருடம் தொடங்கி இன்று வரை  மணிப் பூரில் கிட்டத்தட்ட  ஒரு மறைமுக ராணுவ ஆட்சி நடை பெறுகிறது. இந்த நிமிடம் வரை அங்கு அடக்குமுறையும், அதற்கெதிரான போராட்டங்களும் நடந்துகொண்டிருக்கிறது. அது பெரும்பாண்மையான இந்தி யர்களுக்கு தெரியாது.அது பெரும்பாண்மையான  படித் தவர்களுக்கு தெரி யாது.அது பெரும்பாண்மையான அரசியல்வாதிகளுக்கு தெரியவே தெரி யாது.தெரிந்துகொள் வதால் எந்த லாபமும் இல்லையென்கிற கணக்குத்தான் இதற்கெலாம்  மூலகாரணம்.

வெறும் 2 எம்பிக் கள் மட்டுமே இருக்கிற அதற்கென மெனக்கெட 63 வருடங் களாக நமது அரசுக்கு நேரமில்லை. தங்களின் வலி, வேதனை, கஷ்டம், ஆகியவற்றை கண்டு கொள்ளவில்லையே என்கிற ஆதங்கம் அவர்களுக்குள் இருக்கிறது. அந்த நேரத்தில் எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர் விலை எல்லோரும் இந்தியமக்கள் என்று  சொல்லு வதும். எல்லோரும் உடன் பிறந்தவர் என்று சொல்லுவதும்.,பாரத்மாதாகீ ஜே சொல்லுவதும் அர்த்தமில் லாததாகி விடும். ஒதுக்கி வைக்கப்பட்ட அந்த மாநிலம் தனது வெறுப்பை பல்வேறு வடிவங்களில் சொல்லிக் கொண்டிருக் கிறது. ஆயுதத்தின் மூலமா கவும் வெளி உலகுக்கு உணர்த்திக் கொண்டிருப்பதுதான் சமீபத்திய தேர்தலில் நடந்த வன்முறையும் அதில் பலியான ஆறு மனிதர்களும். ஜனநாயகத்தில் ஆட்சி அதிகாரம் பெரும்பாணமையால் தீர்மானிக்கப்படுகிறது. அதற்காக அந்த அரசு பெரும்பாண்மை மக்களுக்கு மட்டுமானது என அர்த்தமில்லை.

யேனம் என்கிற ஊர் புதுச்சேரி மாநிலத்துக்குச்சொந்தமானது. அங்கிருந்து கிட்டத்தட்ட எண்ணூறு கிலோ மீட்டருக்கு அப்பாலிருக்கிற அந்த ஊரைச்சுற்றி  கேரளா,ஆந்திரா,கர்நாடக எல்லைகள்தான். இது சனநாயகத்தின் இன்னொரு வியப்பு. ஏதாவதொரு மாநிலத்தோடு சேர்த்த்தால் என்ன கேடு வந்துவிடுமென்று  தெரிய  வில்லை. பழய்ய நடைமுறையைக்கைவிடாமல் பிரெஞ்சுக்காரார்கள் அடிமைப்படுத்தியிருந்த போது எப்படி இருந்ததோ அதே நிலைமை தான் இன்னும் நீடிக்கிறது.

அந்த யேனத்தில் இருக்கிற ரீஜென்சி செராமிக் டைல்ஸ்  நிறுவ ணத்தின் ஒப்பந்த ஊழியர்கள் ஒரு மாதகாலமாக போராடிவருகிறார்கள். போராட் டத்தில் ஈடுபட்ட தலைவர்களை போலீஸ் கைது செய்திருக்கிறது. கைதான வர்களில் முரளிமோகன் என்கிற தலைவர் கொலை செய்யப்பட்டிருக் கிறார். அதற்கெதிரான போராட்டம் வன்முறையாகி யிருக்கிறது. போலீஸ்காவலில் இறந்தவருக்கு மாரடைப்பாம் அதனால் இறந்துவிட்டாராம். வன்முறையில் நிறுவண அதிகாரி கொல்லப்பட்டது ஒரு குறிப்பிட்டவர்களின் தூண்டுதலால் நடந்த கொலையாம்.

எந்தக் காலத்திலும் செய்தி ஊடகங்கள் உழைப்பாளிகளுக்காகவும்,  அடித் தட்டு  மக்களுக்கு ஆதரவாகவும் செய்தி வெளியிடுவதில்லை. தாங்கள் விளம் பரப்படுத்தும் நடு நிலை என்கிற வார்த் தைக்காகவாவது உண்மையாக நடக்க வேண்டாமா? வளர்ந்து வரும் தகவல் தொழில் நுட்பம் தொழிலை அபிவிருத்தி பண்ணுவதோடு அது அடித் தட்டு மக்கள் வரைப்போய்ச் சேர்கிறது இந்த பிரக்ஞை  இல்லாமல் இன்னமும் இருட்டடிப்பு வேலைகளில் ஈடுபட முடி யாது. சூழ்சியும்,இருட்டடிப்பும்,வஞ்சகமும்,பாரபட்சமும் அதிகாரத்தின் ஆயுத மாக இருக்கும் போது, தெருவில் கிடக்கும் கல்லெல்லாம் உழைப்பவரின் ஆயுதமாகும்.

26.1.12

மருளாடியின் மேலிறங்கியவர்கள்

கருப்பு நிலாக் கதைகள் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிற சிறுகதை.மீள்பதிவு.

முக்குலாந்தக்கல்லில் இருந்து சாத்தூர் பேருந்து நிலையத்துக்கு கடைசிப் பஸ்ஸைப்பிடிப்பது போல ஒரு அவசர நடை நடந்துவிட்டு, அதே வேகத்தில் திரும்பி முக்குலாந்தக்கல்லுக்கு வரும் அவளைக் கவனிக்க யாருக்கும் நேரமில்லை. முகத்தில் பறவி இருக்கும் மஞ்சள், நெற்றியில் பதிந்திருக்கும் செந்துருக்கப் பொட்டுக்கும்  சம்பந்த மில்லாத கிராப் தலை.  நாலு அடி ஐந்தங்குள உயரம். அவளின் வயது மிஞ்சி மிஞ்சிப்போனால் இருபத்து  எட்டிருக் கலாம். ஆனால் நூறு வயது வாழ்ந்து கடந்து விட்ட கால முதிர்ச்சி அவளின் முகத்தில்  ஒட்டிக் கொண்டிருக்கிறது. சுற்றியிருக்கும் உலகத்தை அலட்சியப் படுத்துகிற அந்த பார்வையில் ஆயிரம் ஞானிகளின்  ஒளி குடிகொண்டிருக்கிறது.கடந்துபோன ஒரு நவீன வாகனத்துக்கார முதலாளியின் பார்வை இவள் பக்கம் திரும்பவில்லை. அது குறித்து அவளுக்குக் கவலை இல்லை. அந்த முதலாளி மாதிரியே நகரத்துப் பிரதானச் சாலையில் பல ஆண்கள் அவளைக் கடந்து போகிறார்கள். வெயில் சுள்ளென்று சுட்டெரிக்கிறது. செருப்பிலாத காலில் சாலையோரத்து மணல் ஒட்டிச்சிதற்கிறது. எல்லோர் பாதங்களையும் பதற வைக்கிற அந்தச்சூடு அவளை ஒன்றும் செய்யத்திராணியற்றுப் போனது.


காவல் நிலைய வாசலில் உட்கார்ந்திருந்த செவத்த வள்ளி இவளைக்கூப்பிட்டு ரெண்டு வெத்திலையையும் உடைத்த பாதி பான்பராக்கும் சேர்த்துக்கொடுக்கிறாள்.

'' சீ கருமம், இதப்போயி '' என்று தட்டி விடுகிறாள்.
'' ம்ம்ம்ம்.. ரெம்பத்தா சுத்தக்காரி மாதிரி சிலுப்பிகிராத ''
'' ஏ... சொன்னாலுஞ் சொல்லாட்டாலு நா சுத்தக்காரி தா அந்த ஆத்தாவ செமக்கமில்ல ''
'' ஆமா இடிச்சிப்போட்ட பழய டேசன் கக்கூசக்கேட்டாச் சொல்லும் '' 
'' சீ நாத்தம் பிடிச்சவா ஓண்ட மனுசி பேசுவாளா ''
 
சுருக்கென்ற கோபத்தில் அங்கிருந்து நடையைக் கட்டினாள். ப்ரியா ஸ்டுடியோவுக்குள் நுழையும் போது யாரோ கேலி சொல்வது கேட்டும் கேட்காமலும் நுழைந்தாள். உள்ளே மாடன்,  அலங்காரிக்கப்பட்ட சின்னக்குழந்தையை மரப்பெஞ்சில் உட்கார வைத்து படம் பிடிக்க குனிந்து, குனிந்து வசம் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போதும் கூட அங்கிருக்கிற யாரும் அவளைக் கவனிக்கவில்லை. ஏதாவது பேச்சுக் கொடுத்தால் உட்கார்ந்துவிடும் அபாயம் உணர்ந்த, கம்ப்யூட்டர் முத்து, தீபா யாருமே அவளோடு பேசவில்லை எல்லோர் முகத்தையும்  பார்த்து விட்டு திரும்பவும் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். அந்தக்குறுகிய வாசலின் வழியே ஒருவாரத்திற்கு முன்னாள் படம் எடுத்த எஞ்சினியரிங் மாணவன் வர யோசித்து நின்றதைக் கவனித்த தீபா ''சச்சி கொஞ்சம் தள்ளிக்கோ'' சொல்லவும். அய்யய்யோ பிள்ளாண்டன் நிக்குதா உள்ளபோங்க சாமி என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தாள். அந்தக் கம்ப்யூட்டர் மாணவனும் எஞ்சினியரைவிடப் பெரிய பட்டம் கிடைத்த  சந்தோசத்தோடு சாமிப் பட்டத்தை ஏற்றுக்கொண்டு உள்ளே போனான்.

இது ஒரு அன்றாட  வாடிக்கை தான் என்றாலும் அந்த புகைப்பட நிலையத்தோடு சம்பந்தமில்லாத ஒரு பெண்  அங்கு வந்துபோகிற எல்லோரோடும் மிக இயல்பாகப் பேசுகிற லாவகம் கற்றுக் கொண்டதும், வியப்பானவை. இன்னும் சில சாவகாசமான பொழுதுகளில் புகைப்பட நிலையத்தின் நடுக்கூடத்தில் செந்தில், மாடன், சூரியா, இன்னும்சில இளவட்டங்கள் உட்கார்ந்திருக்க நடுவில் உட்கார்ந்து கொண்டு வலமை பேசிக்கொண்டிருப்பாள் சச்சி. அந்த சச்சி யார் என்கிற ஒரு கேள்வி புதிதாய் நுழைகிற எல்லோருக்குள்ளும் எழுந்து அடங்கும்.


சரஸ்வதி என்கிற சச்சி.


மேட்டமலையில் ஒரு ஒதுக்குப்புறத்தில் பத்து வீடுகளுக்கும் குறைவாக இருந்தது அந்தக் குடிசைகள். அதில் ஒரு குடிசையில்  நாள், பொழுது, நட்சத்திர தேதிகளுக்குள்ளும் பஞ்சாயத்து ஜனனப்பதிவேடுகளிலும் பிடிபடாமலும் பதிவாகாமலும் பிறந்த சரசுவுக்கு ஒரு குடும்பம் இருந்தது. ரெண்டு வேளைச்சோறு  சாப்பிடு வதற்கு ஊரின் ஒட்டு மொத்த அழுக்கைச் சரிசெய்ய வேண்டும்.  வெயிலோடும், புழுதியோடும், பசியோடும் கடந்துபோன பால்யப்பருவத்து பசுமை நினைவுகளில் மிக அறிதாக விளையாட்டும், மழையும், சில இனிப்பு களும் தவிர வேறு ஏதும் பிரமாதமாக இல்லை.  மானம் பார்த்த இந்த கந்தக பூமியில் விவசாயம் காய்ந்து போனது.  மத்தியில் ஆட்சி செய்த  ஜனதா அரசு தீப்பெட்டிக்கான உற்பத்தி வரியைக்குறைத்து, குடிசைத் தொழிலாக அறிவித்தது அந்த எழுபதுகளில்தான் பருத்தி, மிளகாய் விளைந்த கிராமங்களில் தீப்பெட்டிகள் முளைக்கத் தொடங்கியது. விவசாயம் செய்த பண்ணையார்கள் தீப்பெட்டி முதலாளிகளானார்கள். அபோது எல்லா பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பத்து குழந்தைகளைப் போலவே இலவசக்கல்வி, இலவச உணவு எலாவற்றையும் தாண்டிய வறுமையை எதிர்கொள்ள உழைக்கப்போகிறாள் சச்சி.


கட்டை அடுக்குவதற்கும், தீப்பெட்டி ஒட்டுவதற்கும் கச்சாப்பொருள்களை வீடுகளில் கொண்டுவந்து  கொடுத்து விட்டு, அதைத்தயாரித்து முடித்த பின்னால் எடுத்துக் கொள்வதற்குமான ஏற்பாடுகள் இருந்தது. ஆனால் அப்படி உட்கார்ந்து வேலை பார்க்கக்கூட இடவசதியில்லாத வீடுகளில் உள்ள பெண்களும், பெண் குழந்தைகளும் சிறிய, நடுத்தர, மற்றும் பெரிய தீபெட்டி ஆலைகளுக்கு உழைக்கப்போவார்கள். காமராஜர் மாவட்டத்து பெண்களின் சந்தோசம் துக்கம் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் கொட்டிக் குவிக்கப்பட்ட இடங்களாக தீப்பெட்டி ஆபீசுகள் மாறிக்கொண்டிருந்த காலம் அது.

ஒரே ஒரு ஆரம்பக் கல்வி நிலையம் இருக்கிற ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆபீசுகள் இருக்கிற வினோதம் உண்டு. புலர்ந்தும் புலராத இளங்காலையில் எழுந்து முகம் துடைத்து தீப்பெட்டி வாசத்துக்குள் நுழையும் அவர்கள் பொழுது சாயும் போதுதான் வீடு வரமுடியும். ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுமுறை. அன்றுதான் ஓடுகிறகிற பம்ப்செட் தேடி அலைவார்கள். மொத்தமிருக்கிற ரெண்டு அல்லது மூன்று ஜோடி உடைகளை துவைப்பார்கள், குளிப்பார்கள். பாதி கந்தக வாசமும் பாதி சோப்பு வாசமுமாக திங்கள் கிழமை வந்துவிடும். வீடு என்பது தூங்குவதற்கும் உணவு தயாரிப்பதற்குமான இடம் மட்டும் தான். மற்றபடி கனவு, காதல் துக்கம், சந்தோசம், சண்டை எல்லாவற்றையும் உள்ளடக்கிய உலகமாக தீப்பெட்டி ஆபீஸ் மட்டும் தான் இருக்கும்.


ரெண்டு பெண்களின் துணையோடு மத்தியான வேலைகளில் ஒருத்தி வீடு திரும்பினால், ஒரு கந்தகப்பூ மலர்ந்து விட்டது என்பது கோனார் நோட்ஸ் இல்லாமல் புரிகிற விசயமாகும். இதுகூட புரியாத சச்சிக்கு ராக் ரூம் இருட்டே இரவாகியது. பொதுவாக ஊர் சுத்தம் செய்யும் குடும்பத்து குழந்தைகளும் சுத்தம்செய்கிற வேலைக்கு நிர்ப்பந்திக்கப் படுவார்கள்.  எல்லோரும் போன பிறகு ''ஏத்தா சச்சி நீ இரு'' என்று  முதலாளி அவளை இருக்கச் சொன்னதற்கு அதுதான் காரணம் என்று நினைத்தாள். போகும் போது அலாதியாக கொஞ்சம்பணம் கிடைக்கலாம் என்னும் எதிர்பார்ப்பிமேல் மண் விழுந்தது. ராக் ரூமில் அந்த கணத்த எண்பது கிலோ உருவம் அவள் மேல் கிடந்தபோது அது காமம் என்று அறியாத பருவத்திலிருந்தாள்.

எதிர்க்க வலுவற்ற சமூகத்தில் பிறந்த அவளுக்கு அந்தக்கொடுமை கூட முதலாளிகளுக்கு செய்கிற ஒரு ஊழியமென்று  நினைத்திருந்தாள். அது போலவே பல முறை அது நடந்தது.  சாக்கடை சுமக்கிற, மலம் அள்ளுகிற, பொறுமையோடு சகித்துக்கொண்டாள். அதன் பின்னாள் முதலாளி மிளகாய்த் தோட்டத்துக்கு வேலைக்கு வரச்சொன்னார் அங்கேயும் கூட அவளுக்காக காமவெறி காத்துக்கிடந்தது. கால மாற்றமும் உடல் மாற்றமும் அவளுக்கும் கூட இச்சைகளை உண்டுபண்ணு கிற வேலையைக்காட்டியது. இப்போது முதலாளி எப்போது கூப்பிடுவார் என்கிற எண்ணம் உருவானது. அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று கந்தக வாசமும், கழிவு, குப்பை வாசமும் சூழ வேலை பார்க்கிற நிர்ப்பந்தம்அவளுக் கில்லாமல் போனது. இரண்டு அந்த வேலைகள் இல்லாத போதும் கூட அவளுக்குத் தேவையான  எல்லாம் கிடைத்தது.  மகள் கெட்டுப்போன சேதியைக் கடைசியில் தெரிந்துகொள்கிறவர்கள் பெற்றோர்கள் தான் என்பது கிராமத்து சொலவடை. கடைசியாகத் தெரிந்த போது அவள் கருவுற்றிருந்தாள்.

அடுத்த சாதிக்காரன் கிண்டல் பண்ணினால் கூட போட்டுத் தள்ளுகிற சமூகக் கட்டமைப்புள்ள இந்த பூமியில் ஒரு பெரிய பாலியல் பலாத்காரம் அதுவும் அறியாத வயசில் நடந்திருக்கிறது அதுகுறித்துக் கோபப்பட வேண்டிய குடும்பம், மாற்று யோசனை மட்டுமே யோசிக்க முடிந்தது. கருவைக்கலைக்க சொந்தக்காரர்கள் ஊருக்கு அனுப்பினார்கள்.  அங்கேயும் ஆண்டைகளும், ஆதிக்கமும் குறைவில்லாமல் இருந்தது. எனவே மிகக்குறுகிய காலத்தில் அவள் அங்கேயும் ஆதிக்க சாதிப்பையன்களுக்கும் பெரியவர்களுக்கும் பொழுது போக்க கிடைத்த சாவடிபோல், பாஞ்சாம்புலி போலாகிப்போனாள். மீண்டும் பழைய ஊருக்கு வந்த போது இருந்த கொஞ்ச நஞ்ச மானமாவது மிஞ்சட்டும் என்று பெற்றோர்களே பிராது கொடுத்து விபச்சார வழக்கில் சிறைக்கு அணுப்பினார்கள். சட்டி சுடுகிறது என்று தப்பித்துக் குதித்து அடுப்பில் விழுந்த கதையாகியது சச்சியின் பொழப்பு. சிறைவாசம் எழுந்துவரமுடியாத புதைகுழியானது. அங்கிருந்து வெளி வரும்போது ஒரு புடம் போட்ட தங்கமாக வருவாள், மறு வாழ்வு வாழ வைக்கலாம் என்ற இன்னொரு மூட நம்பிக்கையும் தகர்ந்து பெற்றோருக்கு. மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பினாள்.


1985 வருசம் முதல் 1990 வரை ஒரு ஐந்தாண்டுகள் நகரத்தின் பிரபலங்களில் ஒன்றாகிப்போனாள்.அவளைப் பற்றியதான தகவல்கள் எந்த சுவரொட்டியிலும், எந்த ஊடகத்திலும் விளம்பரப் படுத்தப் படவில்லை  எல்லோ ருக்கும் அவளைப்பற்றித் தெரிந்திருந்தது. அவளைக்கடந்து போகிற யாரும் எளிதில் தவிர்க்க முடியாத வசீகர தோற்றம், இருபத்து நான்கு மணிநேரமும் வாடாத வரம் வாங்கியது போலவே அவள் சடையேறும்  மல்லி கைப்பூ, என வளைய வளைய வந்தாள். அந்தக்காலத்தில்தான்  எம்ஜியார் இறந்துபோனார். அப்போது மூன்று நாட்கள் தமிழகத்து நகரங்கள் சகஜ வாழ்கை இழந்து வெறிச்சோடிக் கிடந்தன. ஜனங்கள் போக்கிடமில்லாமல் வீடுகளுக்குள் அடைந்துகிடந்தார்கள். கடைகள்  மூடிக்கிடந்தன. மூடிய கடைகளின் முதலாளி நான்கு பேர் ஒரு காரில் அவளை எங்கெங்கோ கூட்டிக்கொண்டு போனார்கள். அவர்களில் மூன்றுபேர் நல்ல குடிகாரர்கள்  அப்படி யான நேரங்களில் அவளும் குடிப்பது தவிர்க்க இயலாததாகிவிடும்.


குடிப்பழக்கம் ஒரு புது அனுபவமாகவும், தாங்கும் சக்திக்கான மாற்று மருந்தாகவும் அவளுக்கு அறிமுகமாகியது. அதை அறிமுகப்படுத்திய மாரிக்கிழவி சரக்குச் சாப்பிடுவது பார்க்கப் பார்க்கப் பொறாமையாக இருக்கும். சும்மா பச்சத்தண்ணி குடிக்கிற மாதிரிக்குடித்துவிட்டு ஒரு செருமல் கூட இல்லாமல் இயல்பாகிவிடுவாள். குடித்த சரக்கின் வாசனை தவிர குடித்ததற்க்கான் எந்த தடயமும் அவளிடம் இருக்காது. முதலில் கொமட்டிக்கொண்டு வந்தாலும் பின்னர் கொஞ்சநாளில் சச்சியும் பழகிக்கொண்டாள். அப்போது கேட்ட சரக்கு கேட்ட துணிமணி,வாரி யிறைக்கிற பித்துப்பிடித்த பணக்காரர்களாக அவள் பின்னாலே அலைந்தார்கள். ஆனால்  யாரிடமும் பணம் கேட்டு வாங்க வேண்டும் என்கிற யோசனை அப்போது அவளுக்குத் தோன்றவேயில்லை. இந்த உடல், அதன் வசீகரம், அதன் மேலுள்ள ஈர்ப்பு எல்லாம் ஒரு காலத்தில் அழிந்துபோகும். அப்போது வயிறும் வாழ்கையும்  வழி மறிக்குமே என்கிற தூரத்து சிந்தனை இல்லாதவளாக காலம் கடத்தினாள்.

நகரத்து பிரமுகர்களும் அவர்களது மகன்களும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் அவளைத் தேடி வந்துபோகிற நாட்களில்  அவளுக்கு கர்வம் கலந்த புன்னகை குடிகொண்டிருக்கும். அதை மாரிக்கிழவியிடம் சொல்லிச் சிரித்திருப்பாள். தன்னைக்கடந்து போகிற யாரும் உற்றுப்பார்த்தாலோ அசடு வழிந்தாலோ ''இங்கஎன்னதொறந்தா கெடக்கு நாரக்கருவாட்ட பூன பாக்குற மாறி பாக்கான்'' என்று எடுத்தெறிந்து பேசுவாள். பார்த்தவன் தூரத்தில் போனதும் கெக்கலிட்டுச்சிரிப்பாள். அப்போது இந்த உலகம் தன் காலுக்கு கீழே கிடக்கும் ஆங்காரத் தோடு அலை வாள். குண்டு மஞ்சள் அறைத்துக் குளிக்கிற போதும் வாசனைச்சோப்புப் போடுக் குளிக்கிறபோதும் அவளே ரசிக்கிற இளமை மீது இன்னும் கூடுதல் கர்வம் மேலோங்கும்.தெருவுக்குள் யாரேனும் நடத்தை பற்றிப்பேசினால் காளியாட்டம் ஆடி எதிராளியை நிலைகுலையச் செய்வாள். அந்தச் சொல் மீண்டும் ஒரு முறை தன்னை நோக்கி வராதபடி வேலி போட்டுக்கொள்கிற உத்தி அது.

ஒரு நாள் திருச்செந்தூர் முருகன் கோவில் காட்டேஜுக்கு கூட்டிக்கொண்டு போயிருந்தார்கள். மூன்று நான்கு பிரமுகர்களோடு இரவு குடியும் கூத்துமாகக் கழிந்தது. விடிகிற நேரம் மிகையான போதையில் தூங்கிப்போய் விட்டாள் கண்விழித்தபோது மீண்டும் இருட்டியிருந்தது. எவ்வளவு குடித்தோம் யார் யார் கூட இருந்தார்கள் என்கிற எதுவும் மனசில் இல்லை. ஊரின் மிகப்பெரிய புள்ளி ஒருவரின் மூஞ்சியில் காரித்துப்பியது மட்டும் நினைவிலிருந்தது. உடல் முழுக்க அடிபட்ட காயமும், நகப்பிராண்டல்களுமாக வலித்தது. அதோடு தலை வலியும், பசியும் கலந்த கிரக்கத்தில் நீண்ட நேரம் காத்திருந்தாள். உடன்  வந்த யாரும் இல்லை. முதல் நாள் இரவோடு இரவாக அவர்கள் ஊர்போய்ச் சேர்ந்துவிட்டார்கள். நெடுநேரம் அழுகையும் வேதனையுமாக உட்கார்ந் திருந்தாள். கைபிடித்தபடியே நடந்து வரும் அய்யாவும், மடிக்குள் வைத்து பேன்பார்க்கிற அம்மாவும், காரணமில் லாமல்  நினைவில் வந்து மீண்டும் மீண்டும் கண்ணீர் வந்தது.  அங்கிருந்து பேருந்து நிறுத்தம் வந்து சில பேரிடம் சொல்லிப் பணம் கேட்டாள் பலனில்லை. பிறகு ஒரு குதிரை வண்டிக்காரர் எந்தப்பிரதி உபகாரமும் இல்லாமல் அவளுக்கு சாப்பாடும், பஸ் செலவுக்குப்பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார். திருச்செந்தூரிலிருந்து திரும்பி வருகிற போது இவ்வளவு நாள் தேக்கி வைத்த வீராப்பும் வைராக்கியமும் உடைந்தது. அப்போது ஒரு ஆண் துணை தேவை என்று உணர்ந்தாள். அதுவும் தாட்டிக்கமான ஆண் துணை.


அந்தக் காலங்களில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த அம்மாசி தான் அவளுக்கு துணையாளாகவந்தான். முதலாளி மார்கள் கூப்பிடும் இடத்துக்கு கூட்டிக்கொண்டு போவதற்கும். திரும்பக்கூப்பிட்டு வருவதற்கும் அவனுக்கு சரக்கும் சம்பளமும் உண்டு. அவள் வைக்காத விலை, அவள் கேட்காத பணம், இரண்டுமே மறை முகமாக அவனுக்குச் சாதகமாகியது. சச்சிக்கோ அது குறித்து  ஏதும் தெரியாது. ஆனால்  முதல் முதலில் அவளுக்காக ஒரு ஆண் மெனக்கிடுவதை, சாப்பாடு வாங்கித்தருவதை, டிக்கட் போட்டு கூட்டிப்போவதை. பயணங் களில் அருகிருந்து, தூங்கும் நேரங்களில் தோள் தருவதை ஒரு வித்தியாசமாக உணர்ந்தாள்.  காலம் கடந்து , காமம் கடந்து ஒரு சிநேகம் முளைக்கத் தொடங்கியது அப்போது தான் எல்லோருக்கும் வருகிற குடும்ப ஆசை அவளுக்கும் வந்து வந்து போனது. ஆனால் அம்மாசிக்கோ கல்யாணம் ஆகி வயசுக்கு வருகிற பருவத்தில் பெண்ணிருந்தது.

இந்தக்காலத்தில் பல முறை கருவேந்திக்கொண்டாள்,  அதைக்கலைக்க நாட்டு மருத்துவச்சிகளைத் தேடிப் போனாள். அப்போது மாரிக்கிழவிதான் அவளோடு கூட இருப்பாள்.எப்போதுமே துணையாக இருந்தவள் காசில்லாத நேரங்களில் ஒரு டீ வாங்கி பகிர்ந்து சாப்பிடுகிற ஒரே ஜீவன் அவளுக்கு மாரிக்கிழவிதான்.சில நேரம்  அம்மாசி வந்து செலவுக்கு பணம் தந்துவிட்டுப் போவான். அதிக கருக்கலைப்பினால் அதிக உதிரம் விரயமாகியது. அதிக உதிர விரயத்தால்  உடலில் பெலமில்லாமல் போனது. சாப்படும் சாராயமும், அம்மாசியின் தயவால் கிடைத்தது. ஒரு குற்ற வழக்கில் மூன்றுமாதம் சிறைக்குப்போன அம்மாசியில்லாத அந்த நாட்களில் தொழிலும் மந்தப்பட்டுப்போனது. அறைவயிற்றுக்கஞ்சிக்கு கூட அவதிப்பட்டாள். அப்போது நகரில் இவளுக்கு போட்டியாக இன்னும் சில பேர் அறிமுகமானர்கள்.

வேற்று ஊர்களில் இருந்து தருவிக்கப்பட்ட அவர்கள் தொழில் நிமித்தமாக இரவு வந்து  தங்கி பகல் திரும்புகிறவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு தனது போட்டிக்காரியைப் பார்க்க விடிய விடிய கிருஷ்ணன் கோயில் பஸ் நிறுத்தத்தில் காத்துக்கிடந்தாள். வாடிக்கையாகச் சவாரி செய்கிற ஆட்டோ  ஓட்டுநரிடம் அவள் எப்படியிருப்பாள் என்று கேட்டாள். நல்ல ஒசரம் நல்ல நெறம் என்று சொன்னதும் வதங்கிப்போனாள். மாரிக்கிழவியிடம் சொல்லிச் சொல்லி புளம்பிக்கொண்டேயிருந்தாள்.   வயித்துப்பாட்டுக்கு வேறு எதாவது செய்யென்று சொல்லிவிட்டு மாரிக்கிழவியும் செத்துப்போனாள். ''ஆமா அப்பனு ஆத்தாளு ரெண்டு தேட்டரு, ஒரு சாராயக்கடை, நாலு தீப்பெட்டியாபீசு உட்டுட்டு செத்துப்போனாகளாக்கு இந்தத்தொழில விட்டுட்டு வேற தொழில் பாக்க ?  திருப்பியு அந்தப் பீயள்ற பொழப்புத்தான  த்தூதூ....'' என்று காரித்துப்பி விட்டு விபச்சாரத்துக்குக் கிளம்பினாள்.

மிக உறுதியாக இனி சம்பாதிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினாள். ஆனால் அவளிடம் இருந்த ஒரே மூலதனமான அந்த இளமை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு கடந்து போய்க்கொண்டிருந்தது.  கிராக்கியில்லாத எந்தப்பொருளும் லாபம் சம்பாதிக்காது என்பதே வியாபார விதி. அந்த விதியின் பிரகாரம் அவள் மீண்டும் வயிற்றுப்பிழைப்புக்காக மட்டுமே சம்பாதிக்க முடிந்தது.  சீனி நாய்க்கர் புரோட்டாக்கடையில் காசைக்காட்டித்தான் சாப்பிட முடிந்தது. சில நாட்கள் அதுவும் இல்லாது பட்டினியாய்க் கழிந்தது. அம்மாசி வரும் வரை நாட்கள் நகருவது வேலிப்புதருக்குள் நடக்கிற மாதிரியே இருந்தது. அம்மாசி வந்தபிறகு மூன்று நாள் வீட்டில் சண்டை நாடந்ததாகவும் அங்கு அவனை வீட்டுக்குள் யாரும் சேர்க்க வில்லையென்றும்  சொல்லி  இவளிடம் வந்தான். ரெண்டு பேரும் சென்னைக்கு ரயிலேறிப்போனார்கள் அங்கு சரக்கு செல்லுபடியாகாமல், திரும்பி வந்து திருச்சியில் ஒரு புரோக்கர் மூலம் குறி சொல்லப் போவதாக விசா எடுத்து சிங்கப்பூர் அணுப்பி வைக்கப்பட்டாள்.

மூன்று மாதம் கழித்து கைநிறையப் பணத்தோடும் கொஞ்சம் உடல் தேறி மினு மினுப்பாகத் திரும்பி வந்தாள். சாத்தூரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு வாடகை வீடெடுத்து அங்கேயே அம்மாசியும் அவளும் வாழ்ந்தார்கள். பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட சேதியைச்சொல்லும் போது தான் அம்மாசி தன்னை அம்மனமாகக் காட்டினான்.  தனக்கு பிள்ளை பெறுவதற்கும் ரேசன் கார்டில் பேர் போடவும் ஊரில் ஏற்கனவே ஒரு குடும்பம் இருக்கிறது, நீ அதற்கு கிடையாது என்று சொல்லி விட்டான். அதற்குப்பிறகு  வாரிசு என்கிற வார்த்தை அவளை நிறையச் சிந்திக்க வைத்தது. ஆண்கள் சேத்தில் மிதித்து ஆத்தில் கால் கழுவுகிறவர்கள். அப்போதும் கூட மிதி படுகிற கேவலப் பொருளாகப் பெண்ணே இருக்கிறாள். இன்னுமொரு சேறு வேண்டாம் எனத்தீர்மானித்து ஒரு நாள் நடு இரவில் காட்டு வழியே இலக்கில்லாமல் நடந்துகொண்டிருந்தாள்  நடக்க எசக்கில்லாமல் கால்வலித்து இருக்கங்குடி மரியம்மாளே நீயே கதி என்று போய் கோயிலில் படுத்துவிட்டாள். 

மாசக்கணக்கில் அங்கேயே இருந்து கோயில் சோறு சாப்பிட்டு காலம் கழித்தாள். வெள்ளி செவ்வாய் விரத மிருந்து குறிசொல்ல ஆரம்பித்து விட்டாள். ஜனங்களின் முகங்களில் தெரிகிற சஞ்சலம் பார்த்து கொஞ்சம் போதாத காலம் என்றும், சந்தோசத்தைப்பார்த்து ஏறுகாலம் என்றும் அவளுக்குத் தெரிந்த வானசாஸ்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது தான் மனிதர்களின் முகத்தையும் கையையும் பார்க்கிறாள். இப்பொழுது தான் குடும்பம், உறவு விரிசல் பணம், வறுமை, ஆதிக்கம், சாதி எல்லாம் மெல்ல மெல்ல அறிமுகமாகிறது. அவளைக்கடந்து போகிற பத்து வயசுக்குழந்தை களைக் கூப்பிட்டுப் பேசவேண்டும் போல் சில நேரங்களில் ஆசை வருகிறது. பழைய இரவுகளில் பழக்கமான அந்த இளகிய ஆண் முகங்கள், இப்போதைய பகலில் மிக இறுக்கமாகத் தெரிகிறது. கோபம் தலைக்கேறி வாயில் கெட்டவார்த்தைகள் வருகிறது. ஆத்தா மேல் பாரத்தைப் போட்டுவிட்டு அடங்கிப்போகிறாள். முதலில் கொஞ்ச நாளாய்த் தூசன வார்த்தைகள் இல்லாத மொழி பழகு வதற்கு நிறையச் சங்கடப்பட்டாள். நெற்றி நிறைய திருநீரு பூசிக்கொண்ட முதல் நாள் திருநீரு ம்பக் கணமாகத் தெரிந்தது பழைய ரணங்களின் கணங்களை விட மிக மிக லேசாகிப்போனது. இப்போதும் கூட அவலைக்கடந்து போகிறவர்கள் பார்வை மையம் அவள் பக்கம் திரும்பிப் பின் கடந்து போகிறது.

அவளது வீடு எது, அவளது  குடும்பம் எது அவளது கனவு எது, எதிர்காலம் எது என்று தெரியவில்லை. இந்த உலகத்தில் ஜனங்கள் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகிற இடங்கலுக்குள் தன்னை இருத்திக்கொள்ள நடந்து கொண்டிருக்கிறாள். வெள்ளி செவ்வாய்க்கு கருப்பசாமி வந்து அவள் மேலிறங்குவதாகவும், அந்தக்கருப்பசாமி யின் வார்த்தைகள் தான் அவளுக்கு அருள் வாக்கு எனவும் உலகத்துக்குச் சொல்லிக்கொண்டு இருக்கிறாள். தானொரு மானுடப்பிறவியல்ல சாதாரண மனுஷியல்ல என்னும் பிம்பம் ஒன்றை தானே உருவாக்கி அதை அவளே சித்திரமாக்குகிறாள். தொலைந்து போன பால்யகாலம், தொலைந்து போன இளமை, காதல்  எல்லா வற்றுக்கும்  அவள் மேல் விழுந்த பாறாங்கல் போன்ற சமூகம் என்பது அறியாமல் கருப்பசாமி என்னும் கற்பனை யோடு வாழ்கிறாள்.  கடந்த காலம் மேலெழும்பி வரும்போதெல்லாம் பழைய நினைவுகள் மேலெழும்புகிற நேரமெல்லாம் கிளம்பி சாத்தூர் நகரத்துக்கு வருவதும்,  ப்ரியா ஸ்டுடியோவில் உட்கார்ந்து பேசிச்சிரிப்பதும். அப்படியே எழுந்து பேருந்து நிலையத்துக்கு அவசர நடை நடப்பதுவும் அவளுக்கு ஆறுதலாக இருக்கிறது.

( நன்றி. புதுவிசை ஏப்- 2007 ) 
சிறுகதை

22.1.12

மதுவழிப்போதை தற்காலிகம்.

பெரும்பாலும் அந்த தேநீர்க்கடையின் வாசலில்தான் முடிவாகும்.அல்லது சில நேரம் தொலைபேசியின் வழியா கவும் அழைப்பிதழ் அனுப்பப்படும். ஒவ்வொருத்தராக வந்து இணைந்து கொள்ள ஒரு அரைமணிநேர காத்திருத் தலில்  கூட்டம் கூடி விடும்வார்கள். வீட்டைவிட்டுக் கிளம்பும் ஒரு மத்தியதர வர்க்க கணவனுக்கு யாரும் வெற்றித் திலகமிட்டு  வழியனுப்பு வதில்லை. அது மதுக்குடிக்கவா இல்லை விலைவாசிக்கெதிரான  ஆர்ப் பாட்டத்துக்கா என்பதில் பேதமிருக்காது. யூனியன் மீட்டிங்கா ? சத்தியா ஓட்டலுக்கா ? இந்த ரெண்டு  கேள்வி களுக்கும் ஒரே மாதிரியான எகத்தாளம் தான் இருக்கும். கனி ஓட்டலைத் தேர்ந்தெடுக்கிற வரையில் எங்கே கூடுவதென்கிற பிரச்சினை இரண்டாண்டுக்கு ஒருமுறை  விவாதப் பொருளாகும். கவிஒர்க்‌ஷாப், சங்கிலி ஸ்பேர்பர்ட்ஸ், ஆதிசக்தி எஸ்டிடி பூத் என்கிற இடங்கள் எல்லாம் இப்போது ஞாபகங்களாக மட்டும் வந்துபோக கனி ஓட்டல் மட்டுமே சந்திப்புகான மையமாகிப் போனது.

அதுபோலவே இந்த  இருபத்தைந்தாண்டுகளில் எத்தனையோ குடிமகன் களோடு உட்கார்ந்து  மதுவருந்தியாகி விட்டது. ஒருசினிமாக்காரன், ஒரு மிலிட்டரிக் காரன்,ஒரு துருக்கிதேசத்தான்,டெல்லி ரயிலில் சிகரெட்  புகைத் ததற்காகப் பிடித்துக்கொண்டுபோன  ரயில்வே போலீஸ்,பாட்டிலைத் திறந்த வுடன் அழுக ஆரம்பிக்கும் மனிதர் கள்,பாடுபவர்கள்,சண்டைபோடுவபவர்கள் என ரக ரகமானவர்களுடன் போதைப் பொழுதைப் பங்கிட்டுகொள்ள முடிந் திருக்கிறது. அது மட்டுமல்ல அவர்களின்  சமூகப் பொருளாதார தத்துவங் களையும் எதிர்கொள்ள  நேர்ந் திருக்கிறது. ’ஒக்காலி இந்தியாவுக்கு ராணுவ ஆட்சிதாய்யா லாயக்கு’ என்றோ சவுதி மாதிரிக் கடுமையான சட்டங்கள் கொண்டுவந்தாதான் நாடு உருப்படும் என்றோ கூறும் அவர்களின் முடிவு களை  எதிர்கொள்ள நேரிடும். அவர்களின் அசாத்திய  அறிவுத் திறனையும் அறிவியல் திறனையும்கூட வியக்க நேர்ந்துவிடும்.

கிழக்கு ராமநாதபுரத்து பாண்டுகுடியில் அம்மாசி என்கிற ஐம்பதுவயதுக்காரர் முதன்முதலில் காலிப்  பாட்டி லுக்குள் தீக்குச்சியை உரசிப்போட்டார்.அப்படிப் போட்டதும் குபீரென்று தீக்கிளம்பியது. அதைவிடக் குபீரென்று அவர்மீதான ஆச்சரியமும் பொங்கியது. எல்லோரும் வங்கி பற்று வரவு என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அவர் தலைத் துண்டைக் கையில் ஏந்தியபடி ஒரு ஓர மாக  நின்று பீடி குடித்துக் கொண்டிருந்தார். பின்னே  சினிமாப் பற்றி பேச்சு திரும்பியது.அப்புறம் அதுபாடலாக  பற்றிக் கொண்டது. அப்போது சொக்க லிங்கம் சார்தான் ’அம்மாசி நீ படிடா’ என்றார். பதினாறும் நிறையாத பருவ மங்கை என்கிற பாடலைப் பாடினார். குணாவுக்கு அப்போது  அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை என்கிற பாடலுக்கு நிகர் ஏதுமிலை  என்கிற கட்டுப்  பெட்டித் தனம்  மேலோங்கி யிருந்தது.  ஆனால் அவனுக்குப்பிடிக்காத அந்தபழய்ய  பாடலைக்க்கூட கூடுதல் ரம்மிய மாக்கினார் அம்மாசி. அதன் பிறகுதான் எனக்கு அப்படிப்பட்ட பழய்ய பாடல்களின் மேல் குணாவுக்கு அபார ஈர்ப்பு வந்தது. 

அவர் பாடி முடித்ததும் அந்த இடம்  ஒரு நிமிடம் மௌனத்தால் உறைந்து போனது. அவரது திறமையை அங்கீ கரிக்க  ஏற்றுக் கொண்டு பாராட்ட மதுவில் வழியும் சமத்துவம் கூட கொஞ்ச நேரம் கூசியது என்றே பொருள் கொள்ளலாம். நாகராஜுதான் 'பெய  நல்லாப் பாடுவான் ஆனா அவனுக்கு  குளிக்கிறது மட்டும் ஆகவே ஆகாது சார்வாள், பாருங்கோ துணி எவ்வளோ  அழுக்கா  போட்ருக்காண்ணு' என்று அவனது துதியை துவக்கி  வைப் பான். 'நாகராசு கோழி ரெடியாயிடுச்சான்னு பாத்துட்டுவா' என்று சொக்கலிங்கம் சார் சொல்லவும் நாகராஜு ’அம்மாசி போடா போய் சட்டுனு எடுத்துட்டுவா’ என்பார்.

பிறிதொரு நாள் நாகாராஜு இல்லாது குடிக்க  நேர்கை யில் குணா தனது பங்கை வாங்கி அம்மாசியிடம்  கொடுத்தான். வேண்டாமென்று சொல்லிக் கொண்டே வாங்கி ஒரே மடக்கில் குடித்து முடித்தார்.யாழென்றும் குழல் என்றும் சிலர் கூறுவார் எனை அறியாமல் எதிர்த்தோர்கள் எழுந்தோடுவார் என்கிற வரிக்கு முன்னாடி சரளி சொல்லவேண்டுமல்லவா அதை அட்சர  சுத்த மாகப் பாடினார். அம்மாசிக்கு அவ்வளவு நுணுக்கங்கள் கேள்வியின் வழியேதான் வசமாகியிருக்க வேண்டும். அன்று கிட்டத்தட்ட ஒரு ஜுகல் பந்தி நடத்திக் காட்டினார் அம்மாசி. அதிசயமென்னவென்றால் பந்தியில் அந்த மாதம் வெளிவந்த புதிய திரைப்படங்களின் பாடல்கள் கூட இருந்தது. மறுநாள் காலையில் இரண்டு ப்ளாஸ்டிக் குடங்களை  எடுத்துக் கொண்டு  உணவு விடுதிகளில்  கழனித் தண்ணீரை வாங்கி அவரது மாடுகளுக்கு கொண்டு போனார். அவர்கொண்டுபோன கழிவுதண்ணீருக்குள்ளேயே  சுர,லய நுணுக்கங்களோடு அவரது இசை அமிழ்ந்துபோனது.

21.1.12

பகடிகளில் கரைந்து போகும் இளைத்தவர் சோகம்

முடி திருத்தக் காத்திருக்கும் நேரங்கள் அலுப்பைத் தருவது போலவே  சுவாரஸ் யத்தையும் தரும். சலூன்காரரிட மான உரையாடலில் ஒரு வாடிக் கையாளர் அவரது முதலாளியைப் பற்றிச் சொன்ன தகவல்கள் இவை. இரண்டு மணிநேரம் போனதே தெரியவில்லை.

எங்க முதலாளி போனவாரம் முடிவெட்டக்கூப்பிட்டாரே போகலியா ?

போயிட்டாலும் உள்ள கூலியிலும் பத்து ரூவா ஆட்டயப்போட்டுட்டு குடுப்பாரு ?

பதினேழு வருசம் ஒழச்ச எனக்கே ரெண்டாயிரம் ஓவா குடுத்தாரு ஒனக்கு நல்லா நொட்டுனாரு

ரெண்டாயிரமா பொண்டாட்டி பூவாங்கிக் குடுக்க கூட காணாதே

பூ....வா,நல்லா வருது வாயில.கட்டுபடியாகல, அதா வெளியேறி, பெயிண்டடிக்க போயிட்டேன்

எப்படிய்யா மனசார ரெண்டாயிரந் தர்ராறு, கூட்டிக் கேக்கலயா

கேட்டேன்,இதுவே அதிகமாம். ஆனா வெளிநாட்டுல இருக்கிற மகனுக்கு மாசம் மூனுலட்சம் அது அவருக்கு பத்தலயாம். ஊருக்கு ஒரு நாயம் தனக்கொரு நாயம்.

ரெண்டு பயகல்ல அப்ப மாசம் ஆறுலட்சமா அவிங்க எப்டி

தெரியாதா வந்தவுடன இங்கவந்து  முடிவெட்டுவாய்ங்களே,எதுக்கு

எதுக்கு

அங்க வெட்னா அஞ்சாயிரம் ஆகுமாம் கெளம்புறதுக்கு ஆறுமாச முன்னாடியே முடிவளக்க ஆரம்பிச்சுருவானுக

இதென்ன கூத்தா இருக்கு

இன்னுங் கேளு வார வாரம் கறியெடுப்பாரே எவ்ளோ எடுப்பருன்ற

ஒருகிலோ

ம்ஹும்

அரைகிலோ,

ம்ஹும்

கா கிலோ

ம்ஹும்

நூறுகிராம் எடுப்பாரு

கொழம்பு வச்சா வாசன கூட வராதே,பேசாம மிலிட்டரி ஓட்டல் பக்கமா நின்னு வாசன பிடிக்லாமே ஓசியா 

ஏ பொறு இன்னும் முடிக்கல அந்தகொழம்பயும் சுண்ட வச்சு சுண்ட வச்சு மூனுநாள் தேத்துவாரு.

19.1.12

சல்மான்ருஷ்டியின் வருகையும் ஜெய்ப்பூர் இலக்கியத்திருவிழாவும்

எதிர்வரும் 20 ஆம் தேதி தொடக்கம் 24 ஆம் தேதிவரை ஜெய்ப்பூரில் நடக்க விருக்கும் ’ ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழா 2012 ’ ஆசியாவின் மிகப்பெரிய இலக்கியச் சந்திப்பு. இதில் பங்கேற்க உலகின் 100  இலக்கிய   ஆளுமை கள் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.சமூகத்தின் பிரதான நிகழ் பிரச்சினைகளின் மீதான  சொற்பொழி வுகள் மற்றும் நேர்காணல்கள்  ஒழுங்கமைக்கப் பட்டிருக்கின்றன.

எழுத்தாளர் பாமா,கவிஞர் சேரன்,கவிஞர் சச்சிதானந்தன்  குல்சார்,  ஜாவித்அக்தார், சல்மான்ருஸ்டி, கபில்சிபல், ஓம்ப்ரகாஷ்வால்மீகி ஆகிய தெரிந்த  பெயர் களும் பலதெரியாத பெயர்களுமான இலக்கிய உலகத்தை ஒன்றாகப் பார்க்கமுடிகிற நிகழ்வு இது. ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் அதிகமாகப்பங்குகொள்கிறார்கள். இதுதவிர இசைத்துறை,நாடகத்துறை,மற்றும் திரைத்துறை பிரமுகர்களும் பங்குகொள்கிறார்கள்.

இதுவரை நடந்த அகில உலக இலக்கியசந்திப்புகளில் 7000 பார்வையாளர்கள் வரை கலந்துகொண்டதாக புள்ளிவிபரம்  சொல்லு கிறது. இந்த முறை கூடுதலாக 2000 பார்வையாளர்களை எதிர்பார்க்கிறது.ஆனால் சால்மன் ருஷ்டி எழுதிய சாத்தானின் வேதம் கிட்டத்தட்ட ஒரு கால் நூற்றாண்டு கடந்தும் பூதாகரமாகிறது. மத உணர்வுகளைப்புண்படுத்திய சல்மான்ருஷ்டி இந்தியாவுக்குள் வரக்கூடாது என உபி மதவாத அமைப்பு கடுமையாக எதிர்க்கிறது. அவர் ஒரு இந்தியர் எனவே அவரது விசாவை முடக்கிவைக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை எனக்கைவிரிக்கிறது அரசு. ராஜஸ்தானை ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்வர் கெல்லாட் கைபிசைந்து கொண்டிருக்கிறார். இந்த எதிர்ப்பு எதிரும் புதிருமான பரபரப்பு விளம்பரத்தையும் புயல் வேகத்தில் அதிகரிக்கிறது.

இந்த விழாவின் ஆரம்ப நிகழ்வே பக்தி இலக்கியமும் இந்தியாவும் என்கிற தலைப்பிலிருந்துதான் துவங்குகிறது. இலக்கியம் மனிதனில் இருக்கிற கரடுதட்டிப்போனவைகளை உதிர்த்து இலகுவாக்குகிற விஞ்ஞானம். ஒரு தெருவில் இருந்து இன்னொரு தெருவுக்குள், ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குள் நுழையத்தடை சர்வ சாதாரண நிகழ்வாக இருக்கிற இந்த இந்தியக் கட்டமைப்பில் இது போன்ற தொரு செய்தி பெரிதாக எந்தத் தாக்கத்தையும் செய்துவிடப் போவதில்லை. ஆனாலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என எழுதிய  பூங்குன் றனாரரின் வரிகளும்,சாரே சகாஞ்சே அச்சா என்கிற சேர்ந்திசையும் மிகப்பெரும் இலக்கியாந்தஸ்து மிக்கவை. . தனது இறுதி ஊர்வலத்துக்காகக் கூட இந்தியாவுக்குள் நுழைய முடியாத ஓவியர் எம்.எஃப்.உசேனும் ஒரு மகாகலைஞன்.ஆனாலும் வரது ஆவிகூட இது மாதிரியான ஒதுக்குதலை ஒத்துக்கொள்ளாது.

சொந்த வீட்டிலே ஒளிந்து வாழும் அந்தோணி.

                                              (  photo: anton- sattur )

குளிர்ந்து ரெண்டுநாள் ஆன அடுப்பையும்
விழுந்து காய்ந்துபோன கண்ணீர்த்துளிகளும்
வீடெங்கும் விரவிக்கிடக்கும் இல்லாமையும்
கயிற்றால் இழுத்துக்கட்டிய கதவு வீட்டையும்
ஒரு முப்பதுவருட வாழ்க்கையையும்
விட்டுவிட்டுக்கிளம்பினான் அந்தோணி.
ஒருசாக்குப்பையில் அடங்கிப்போன
சாமான்கள் உடன் எடுத்துக்கொண்டு.

பல்லாவரத்தில் கல்லுடைக்கப்போனவனுக்கு
பூர்வீக வீட்டை விடப்பெரிய குடிசை கிடைத்தது.
முற்றமும் கொல்லையுமாக விரிந்து கிடந்த வீடு
கொட்டாரத்தில்குச்சல் கட்டி குளிக்க
கழிக்கப் பழகிக்கொண்டது குடும்பம்.
முப்பது வருட வாழ்வில் முதல்முதலாக
முற்றத்தில் நட்டுவைத்தான் ஊரின் நினைவாக
ஒரே ஒரு சொந்த வேப்பங்கன்று.

பத்துவருடச் சம்பாத்தியத்தில் பரம்பரைக்
கூலி தொலைத்து பெட்டிக்கடை முதலாளியானான்
கடையைப்பூட்டும் போது கல்லாவையும்
கடையைத்திறந்திருக்கும் போது ஜாதியையும்
ஒளித்து வைத்து ஒரு தலைமறைவு வாழ்ந்தான்.

இரண்டு தலைமுறைக்கு முன்னாள்
ஊருக்குள் ஒளிந்து வாழ்ந்த
அம்மாசி என்கிற யோசியப்பும் இப்போது
சொந்த வீட்டுக்குள்ளே ஒளிந்து வாழும்
அந்தோணி என்கிற அந்தோணிநாடாரும்.
சொந்த தேசத்துக்குள் புலம் பெயர்ந்ததற்கு
சத்தியமாய் வேறுயாரும் காரணமில்லை

12.1.12

ரோஷத்தின் பெயர் வறுமைஅந்த விடிந்தும் விடியாத அதிகலையில் நகரத்தின் தார்ச்சாலையில் குத்துக் காலிட்டு உட்கார்ந்து கொண்டு இருப்பது யாரென்கிற சந்தேகம் வந்தது. கொஞ்சம் விலகி நடந்து அவரை உற்றுக் கவனித்தேன். புழுதிபடிந்த தார்ச் சாலையில் எதையோ தேடிக் கொண்டிருந்தார். நெருக்கமாகப் போனபோது கரிக்கட்டையையும் உடைந்த சாக்ப்பீசுகளுடன் ஓவியம் தீட்டுவது தெரிந்தது. கடந்து போக முடியவில்லை. சற்று  நின்று கவனித்தேன். என்னால் அந்தக் கோடுகள் இணைந்து உருவாக்கப்போகிற உருவத்தை உருவகிக்க முடிய வில்லை. அவ்வளவு நேரம் நின்றிருந்து விட்டு சும்மா போனால் நான் மனிதாபி மானியில்லை என்கிற மதர்ப்பு என் பைக்குள் துழாவி ஒரு ஐந்து ரூபாயோடு வெளியேறியது. குனிந்து கைகள் வரைந்து முடிந்த பகுதியில் வைத்து விட்டு நிமிர்ந்தேன். நடந்தேன் என்னை அழைத்தார் ‘பிடி உன் திமிர்ப்பிடித்த பணத்தை ’என்று மூஞ்சிக்கு நேரே வீசினார். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு காசை எடுத்துக் கொண்டு தொடர்ந்தேன்.

வயிற்றுப் பிழைப்பில் அதிகாலை நடந்தது எல்லாமே மறந்துபோயிருந்தது. கடன் வசூல்செய்யச்சொல்லி மேலாளர் ஒரு முகவரிகொடுத்தார் மூன்று மணிக்கு ஆரம்பித்து இறுதியில் நான் காலையில் நட்ந்துவந்த அதே வண்டிக் காரத் தெருவில் தான் அந்த கடைஇருந்தது. வண்டியை ஓட்டிக் கொண்டு போனபோது சாலையின் ஓரத்தில் கறுப்பு வெள்ளையில்  உருவம் இருந்தது. பாதி கிருஷ்ணரும் பாதி கிருஸ்துவுமான உருவம். கிருஸ்துவின் கண்களில் மட்டும் எப்போதும் வழியும் கருணைக்குப்பதில் உக்கிரம் இருந்தது.

சுற்றும் முற்றும் தேடினேன் எங்கும் அந்தக் கலைஞன் தெரியவில்லை. யாரும் அழுக்குச்சட்டை அணிந்து எதிர்ப்படும் எ3ல்லோரும் ஓவியராகவே தெரிந் தார்கள். காசு போட்டதற்கான அடையாளமும் இல்லை.

8.1.12

நக்கீரன் அலுவலகத்தில் எறியப்பட்ட கல்ஆயிரமாயிரம் ஆண்டு பழமையானது.

எதைச் செய்தியாக்குவது எதை இருட்டடிப்பு செய்வது என்பதில் ஒரு சாரார் இன்னும் காலம் கடந்த  விற்பன்னர் களாகவே இருக்கிறார்கள். செப் 11- 2011 ல் ஆறு தமிழர்கள் மன்னிக்கணும் ஆறு சக மனிதர்கள்  கொல்லப் பட்டார்கள். அப்போது தமிழகம் ஒரு கனத்த மௌனத்தோடு கடந்து போனது.இதே சமூக வலைத் தளத்தில் கூட அதைப்பற்றி பேசியவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய சில மனிதாபிகள் மட்டுமே. வாச்சாத்தி  வன்கொடுமை யின் தீர்ப்புகள் வெளியானபோது ஒரு கட்சிமட்டும் அதை செய்தியாக்கியது. அதனோடு  தொடர்புடை யவர்கள் அதுபற்றி எழுதினார்கள். அந்த தீர்ப்பு வெளியான கொஞ்சநாட்களுக்குள் விழுப்புரம் மாவட்ட  மலை மக்கள் அதே பானியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள்.

இவையாவும் தமிழகத்து மக்களின் மனிதாபிமானத்தை, இன உணர்வை, புரட்சிசெய்யும் வீரத்தை உசுப்பி விட முடிய வில்லை. தமிழகத்து செய்திக் கலாச்சாரத்துக்கு தீனி போட வும் முடியவில்லை. ஒரு மனிதர் மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று எழுதிய செய்தியால் தூங்கமுடியாத தமிழகம் கொதித்தெழுந்து வந்து பத்திரிகை அலுவலக த்தை சூறையாடுகிறது. ஆடிவிட்டுப் போகட்டும். ஆனால் என்று சும்மா இருக்க முடியாத  அறிவுத் தமிழகம் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது சரியா என்று எதிரும் புதிருமாக களத்தில் இறங்குகிறது.

இப்பொழுதல்ல இது வரலாற்று நெடுகிலும் கல்வெட்டுக்களால் எழுதப்பட்ட நமது வீரம். நாட்டில் பஞ்சம் பசி பட்டினி,கொலை கொள்ளை நடந்து கொண்டிருப்பதை அறியாத மன்னன் மனைவியின் கூந்தலில் மணம் எப்படி வந்தது என்று மோப்பம் பிடித்துக்கொண்டு அலைந்தான். அதை பட்டிமன்றப் பொருளாக்குவான். பொண்ணுபிறந்து கல்யாண வயதானால் மணம் முடித்து வைப்பதை விட்டுவிட்டு ஊரைக்கூட்டி போட்டிகள் நடாத்துவான்  புற நானூற்றுத் தமிழன். குடும்பம் நடத்த விளையாட்டும் வீரமும் தெரிந்திருந்தால் போதுமென்று நினைத்த அறிவுத் தமிழகம் அடித்துக்கொண்டு சாகும். உலகம் உருண்டை என்று கண்டுபிடித்துக்கொண்டு  விவாதித்துக் கொண் டிருக் கையில் இமயமலையில் கல்யாணக்கூட்டம்.கூட்டத்தின் சுமை தாங்காமல் தென்பகுதி தராசு போலத் தூக்கியது என்று சரடு விட்டுக் கொண்டலைந்தான். பரிணாமக் கண்டுபிடிப்புகள் தர்க்கமாகிக் கொண்டிருக் கையில் உயர்ந்த கடவுள் ஹரியா சிவனா என்று மயிர்பிளந்து மல்லுக்கட்டிக் கொண்டலைந்தான்.

இப்படித்தான் வெள்ளையன் வந்து அறுநூறு ஆண்டுகள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த போதும் பொழுது போனது. ஒட்டுமொத்த இந்தியாவும் அடிமையாகிக் கிடப்பதை மறந்து அவனவன் மொழி பெரிதா,சாதி பெரிதா சடங்குகள் பெரிதா என்று சண்டையிட்டுக் கொண்டலைந்தார்கள். அப்போதும் டவாலிகளில் இருந்து  ஜில்லாக் கலெக்டர்கள் வரை. சிப்பாய்களில் இருந்து ராணுவ உயரதிகாரிகள் வரை அவனுக்குச் சேவகம்  செய்யப் போட்டி கள் போட்டுக்கொண்டோம். அதற்கு நால்வகை வர்ணக் கோட்பாட்டை துணைக்கழைத்துக்கொண்டோம்.

நான் ஆரியன் எனக்குமட்டும்தான் எல்லாம் தெரியும் எனவே நான் ஆட்சியதிகாரத்துக்கு துணைநிற்கிறேன் என்னைத்தவிர வேறெவனும் அறிவாளியில்லை. நான் வைசியன் எனக்குமட்டுமே வியாபாரம் செய்யத் துப்பிருக் கிறது உனது நாட்டு பொருட்களை என்னிடம் கொடு, நானுனக்கு விற்றுத்தருகிறேன்.நான் சத்திரியன் எனக்கு மட்டுமே சண்டைபோடத்தெரியும் என்னை மட்டும் சிப்பாயாகச் சேர்த்துக்கொள் உனக்காக நான் என்  இந்திய மக்களைக் கொன்று குவிப்பேன் என்று மீசை முறுக்கிக்கொண்டு அலைந்தது இந்தியா.

இதில் என்ன கொடுமை என்றால் அவன் கொண்டுவந்த துப்பாக்கி யாரைக்கொல்ல என்று தெரியாமல் அதன் தொழில் நுட்பத்தில் வியந்து மயங்கிக் கிடந்தான் தமிழன் உட்பட அணைத்து இந்தியனும்.அந்த துப்பாக்கியில் தடவும் கொழுப்பு எதிலிருந்து வந்தது என்று தெரியாமலே அறுநூறு வருடம் பிழைத்துச் செத்தான். இறுதியில் அதில் பன்றிக்கொழுப்பு தடவியிருக்கிறதென்று புரளி கிளப்பிய பிறகு ஒரு பிரிவினர் அடடா என்மதம் இழிவு படுத்தப்பட்டுவிட்டது என்றும். மாட்டுக் கொழுப்பு தடவி இருக்கிறதென்று சொன்ன பிறகு அடடா என் ஜாதி இழிவு படுத்தப்பட்டு விட்டது என இன்னொரு பிரிவும் கலகம் செய்ய ஆரம்பித்தது. சுதந்திரம் அடைந்த பிறகு அண்டை நாடுகளொடு சண்டைவேண்டாம் என்கிற பஞ்சசீலக்கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் உள்ளுக்குள் உள்ளுக்குள் நடக்கும் சாதிமதச்சண்டைகல் உரம்போட்டு வளர்க்கப்பட்டது.

வரலாறு திரும்புகிறது..

ஆம் இப்பொழுதும் கூட மாட்டுக்கறிப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கிறது. தோழர் சிந்தன் தனது முகநூலில் மாட்டுக்கறி உண்பது ஒரு சமூகத்தின் உணவு முறை என்கிறார். அது பெரிய்ய தகவல் பிழை. இருக்கிற இந்தியப் புலால் உணவுகளில் அது மலிவானது. வரலாற்று வழியான தகவல்களின்படி அது கற்காலத்தோடு மிகத் தொண்மை யானது. கால்நடைகள் பண்டையக் காலத்தில் சாமி கும்பிடுவதற்காக மட்டும் வளர்க்கப்பட்டது என்கிற குறிப்பு எந்தவரலாற்று சுவட்டிலும் இல்லை.வெறும் பாலுக்காகவும் அது கூட்டம் கூட்டமாக  வளர்க்கப் படவில்லை.அப்போது கெலாக்சும்,ஓட்சுக்கஞ்சியும்,நூடுல்சும் அப்போது உணவுப்பழக்கத்தில் இல்லை.
ஆகையால் ஆடு மாடுகள் உணவுக்காகவும்  தோலுக்காகவும், மயிருக் காகவும் மட்டுமே வளர்க்கப்பட்டது. மிகமுந்திய காலத்து யாகங்களில் மாடுகள்தான் யாககுண்டங்களில் பலியிடப்பட்டுப் பின்  பரிமாறப்  பட்டிருக்கிறது என்பது நமது தேவைக்காக மறைக்கப்பட்ட வரலாறு. ஒரு சமுதாய மக்கள் மட்டும்தான்  இதைச் சாப்பிடு கிறார்கள் என்பது பெரும் தவறு. சேரிமக்கள் உழைப்பில் விளைகிற எல்லாம் சேரிமக்கள் மட்டும் உண்பதில்லை. அது போலவே சேரிகளில் வெட்டப்படும் மாடுகள் சேரிகளுக்குமட்டும் உணாவாவதில்லை.

இந்தியாவில் மட்டுமல்ல உலக கணக்கெடுப்புகளில் கூட மனிதர்களுக்கிணையான ஜீவராசிகளில் மாடுமட்டும் தான் பெரிய ஜனத் தொகை. அதுபோலவே உலக புலால் உணவில் எண்பது சதமானத்துக்குமேல் பீஃப்  எனப் படுகிற மாட்டுக்கறியே. மாடு சாப்பிடுவதால் மட்டுமே உயர்வு தாழ்வு உண்டாகிறது என்றால் உலகமக்கள் தொகை அணைத்தும் கீழ்சமுதாயம் என்றாகிவிடுமா ?. உணவு முறையால் மேல் கீழ் என்பது வேதாந்திக்கப் படுவது எப்படியோ அதுபோல ஒரு சமுதாயம் மட்டுமே சாப்பிடுகிறதென்பதும் தவறு. ஆயிரக் கணக்கான தானி யங்கள் அழிந்து வெறும் ஒற்றை நெல்லே உணவானதுபோலவே இந்தியாவில் பலதரப்பட்ட புலால் உணவு வகைகளின் உபயோகமும் குறைந்து கறிக்கோழிக்கு மாறி வருகிறது.

அரிசியும் கறிக்கோழியும் திண்ண வக்கில் லாத ஜனத் தொகையை நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. ஏனெனில் அவர்கள் யாரும் கணினி முகநூல் வைத்திருக்கவில்லை. இதுபோன்ற விவாதங் களில் முற்போக்கு சிந்தனையாளர்கள் கூட முகஞ் சுழித்துக்கொண்டு தன்னை ஆட்டுக்கறி மட்டும் தின்னும் மேட்டுக்குடியாக பாவித்துக்கொள்வது தவிர்க்க இயலாததாகிறது. மாட்டைப்போலவே ஆடும்,கோழியும்,பன்றியும் வளர்த்து பின் உணவுக்காக கொல்லப்படுகிறது என்பதை இந்திய அறிவாளிகள் லாவகமாக மறந்துபோகிறார்கள். இந்த மறதி அதை உண்கிற ஜனத்தொகை ஜாஸ்த்தி என்பதால் ஆதலாலே அவை ஒஸ்த்தி வகையாக உருமாற்றம் அடைகிறது. இன்னும் ஒரு காரணம் பெரும்பான்மையைக் கைவைத்தால் எதிர்ப்பு வேறுவகையாக இருக்கும் என்கிற பயத்தாலும் கூட இருக்கலாம்.

கடைந்தெடுத்த முதலாளித்துவ நாடுகளினாலும் சரி ,இன்னும் க்ரீடத்தையும் பழம்பெருமையையும் தூக்கிப் பிடிக்கும் மன்னராட்சி நாடுகளிலும் கூடக்காணமுடியாத மிகப்பிற்போக்குத் தனமானது சாதீய அடுக்குமுறை. அதை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கிற பெரும்பான்மை நிறைந்த இந்தியாவில் இன்னும் ஒரு கோடி ஆண்டுகள் தாண்டினாலும் அறிவியல் பூர்வமான மாற்றம் கனவிலும் நிகழாது. ஆண்டுக்கு நூறு சாதிச் சண்டைகள் வேண்டுமானல் கட்டாயம்  நிகழும். எனில் நக்கீரன் அலுவலகத்தில் வீசப்பட்ட கல் ஆயிரமாயிரம் ஆண்டு பழமையானது. அது, சூது வாது வன்மம் குடிகொண்ட சாதியத்தாலானது.

3.1.12

456+456

ஆங்கிலப்பள்ளிகளில் சுதந்திரம் தொலைத்து
பொதிசுமக்கிறதாய் நானும்.
அரசுப்பள்ளிகள் போட்டிகள் நிறைந்த தொழில்
நுட்பத்துக்குதகுதியற்றதென நீயும்.
வேஷ்டி விலகி,கையிருப்புச்சிதறி
மதுக்கடை வாசற் புழுதியில் கிடப்பவனை
அருவருப்பாய்க்கடந்துபோகும் நீயும்
அடுத்தவனிடம் கைநீட்டி கையூட்டு
வாங்கிய பஞ்சுமெத்தையில் புரள்வதொரு
பொழப்பா என்று அவனும்.
சொறிவதும் சொறிவதைப்புகழ்வதுமே
பொதுஇலக்கியமென இவனும்.
அழுக்கையும் அழுது புலம்பும் கண்ணீரையும்
படியெடுப்பதே அழகியலற்ற எழுத்தென அவனும்
அவரவர்க்கிசைவாக திருப்புகிறது சுக்கானை.
அவரவர்க்கிசைவான கூட்டமும் கூடுகிறது.

2.1.12

விளம்பர முதல்வாதம்.

                                                        ( நிழற்படம் : ஆண்டனி-சாத்தூர்)

ஆடுகளத்தில் இறங்க
விளையாட்டுமட்டும்
தெரிந்திருந்தால் போதாது.

மேடு பள்ளத்தை சமப்படுத்த
வெறும் மண்வெட்டிகள்
மட்டும் கானாது.


கூட்டத்தோடு வேட்டைபோனால்
விளையவைத்து அறுத்தால்
பங்கு உண்டு அப்போது.
இல்லாதவற்றைக்கூறு போடும்
பங்குவர்த்தகம் இப்போது.

இலக்கிய,இலக்கணங்கனங்கள்
தகுதிதரம் கொண்டுதயாராகும்
வியாபாரிக்கு வெறும் சரக்குமட்டும்
கையிருந்தால் விற்காது

சரக்குமுறுக்கா
செட்டியார் முறுக்காவெனில்
விளம்பரமே எப்போதும் முறுக்கு

ஆடுகளத்தில் இறங்க
விளையாட்டுமட்டும்
தெரிந்திருந்தால் போதாது.