30.7.10

அரசியலில் எளிமை- மொஹஞ்சொதரோ இடிபாடுகளில் கண்டெடுக்கலாம்.

மூன்று நாட்கள் மதுரையில் பனி நிமித்தமான பயிற்சி வகுப்பு நடக்கிறது.அங்கே வலைப்பதிவர் உயர் திரு சீனா

அவர்களைப்பார்க்கிற சந்தர்ப்பமும் சந்தோசமும் கிடைத்தது.வானலை வழியே தொடரும் முகந்தெரியாத நட்பை
சிலாகிக்கக் கிடைத்த அந்த ஒரு மணிநேரம் உன்னதமானது.அந்த மதுரை அதே மூன்றுநாட்கள் ஒரு பெரும் விழாவை எதிர்நோக்கி காத்திருந்தது.

முன்னாள் காவல்துறை மந்திரி கக்கனுக்கு நூற்றாண்டு விழா.மதுரையெங்கும் தேசியக்கொடி பறக்கிறது.திரும்பிய பக்கமெல்லாம் ப்ளக்ஸ் விளம்பரங்கள், தோரணங்கள், ஒலிபெருக்கி தூங்காநகர் விழாக்கோலம் அமளிதுமளிப்படுகிறது. அந்த திருவிழாக் கூட்டத்தில் கக்கன் தொலைந்து போய்விட்டார். ஆமாம் ஐம்பது ப்ளக்ஸுக்கு ஒன்றில் ஒரு மூலையில் வித்தியாசமான முகம் ஒன்று சிறியதாக இருக்கிறது.அதுதான் அமரர் கக்கன் என்று ஊகித்துக்கொள்கிற பொறுப்பை பார்வையாளர்களிடம் விட்டுவிட்டது காங்கிரஸ் கட்சி.

மற்றபடி விளம்பரங்களில் எல்லாம் மத்திய அமைச்சர்கள்,தொடங்கி உள்ளூர் வட்டசெயலாளர் வரை அழகழகாய் சிரித்தபடி போஸ் கொடுக்கிறார்கள். பரவாயில்லை மற்ற கட்சிகளை விட இங்கே மத்தியப்படுத்தப்பட்ட உட்கட்சி ஜனநாயகம் கடைப்பிடிக்கப்படுகிறது என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். ஒரு படத்தில் மகன் மேலேயிருக்கிறார் கீழே அப்பா படம் அதற்கு கீழே வாசகம். அது என்ன தெரியுமா ? 'கிங் மேக்கரே வருக வருக'.அந்த caption ஐ சிந்தித்த படைப்பாளியைச் சும்மா சொல்லக்கூடாது.மருந்துக்குக்கூட காமராஜர் உருவம் தென்படவில்லை.அவரது ரீமிக்ஸாக நாம் இன்றைய காங்கிரஸ் தலைவர்களைப் பார்த்துக்கொள்ளலாம்.சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் இது மறு உருவாக்கலின் காலம்.

இடையிடையே முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசரின் ப்ளக்ஸ் படமும் தென்பட்டது.பாஜாக தலைவரின் படத்தை ஏன் வைத்திருக்கிறார்கள் என்று கேட்டேன்.கூட வந்தவர் கூவேகொள்ளையே என்று சிரித்தார்.'சிரித்து முடித்துவிட்டு போய்ய்யா நீயும் உன் அரசியல் அறிவும்'.என்று இளக்காரமாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.ஏன் சிரித்தார்.தெரிந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்.

ஒரு டிராக்டரில் ஓலைக் குடிசை அமைத்து மதுரை மாநகரைச் சுற்ற விட்டு விட்டார்கள்.கக்கன் எளிமையானவராம்.மகாத்மாக் காந்தியை எளிமையானவராகக் காட்ட தினம் தினம் நாங்கள் பல ஆயிரம் ரூபாய்களை செலவு செய்யவேண்டியிருந்தது என்று அவரோடு சமகாலத்தில் ஆசிரமத்தில் இருந்த ஒரு காங்கிரஸ் தலைவர் சொல்லியிருக்கிறார்.அதுகூட மகாத்மா வாழும் காலத்தில்.இது மறதியெனும் புதைசேற்றில் அமிழ்ந்துபோன ஒரு சாமன்யத் தலைவரை எளிமையானவர் என்று சொல்ல அந்தக்கட்சிக்கு அவர் இறந்து ஒரு முப்பது ஆண்டுகள் தேவையாய் இருந்திருக்கிறது.அவர் இறந்தது டிசம்பர் மாதம் 1981 ஆம் ஆண்டு.

பால்யப்பருவத்திலேயே சுதந்திரப்போரில் ஈடுபட்டவர்.வெள்லையனே வெளியேறு இயக்கத்தில் பங்குகொண்டு கைதாகி அலிப்பூர் சிறையிலடைக்கப்பட்டவர்.சுதந்திரத்துக்கு முந்தைய தமிழகத்தில் வைத்தியநாதய்யரோடு ஆலயப்பிரவேசம் போய் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் ஒருவர் திரு கக்கன்.பாராளுமன்ற உறுப்பினராகவும்,காங்கிரஸ் கட்சித்தலைவராகவும் இருந்தவர்.பெருந்தலைவர் காமராஜருக்கு மிக நெருக்கமான நண்பர்.அவர் தோளில் கைபோட்டுப்பேசுகிற வாஞ்சைக்குறிய மனிதர்களில் கக்கனும் ஒருவர்.

இரண்டு இலாகாக்களுக்கு மந்திரியாய் இருந்தவர். ஒன்று போலீஸ் இலாக்கா,இன்னொன்று அப்போதைய மராமத்து இலாக்கா.அதாவது இப்போதைய பொதுப்பணித்துறை.பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் காமராஜரின் நிழல்போல தமிழகத்து குக்கிராமங்களுக்கு அலைந்து திரிந்தவர்.தென் தமிழகத்து அரசு ஆரம்பப்பள்ளிகள் அணைத்துக்கும் அடிக்கல் நாட்டியதும் திறந்துவைத்ததும் இந்த இணைபிரியா நண்பர் இருவர்தான்.இன்னும் கூடத் தூர்ந்து போன பள்ளிக் கட்டிடங்களில் அழியாத கல்விக்கனலை கக்கியபடிக்கிடக்கிறது கக்கனின் காமராஜரின் பெயர் பொறித்த சிறு கருங்கற்கள்.

பொதுப்பணித் துறை மந்திரியாயிருந்த போதுதான் மேட்டூ அணையும், வைகை அணையும் கட்டப்பட்டது. அந்தத்துறையில் இப்போது சம்பாதிக்கிற மாதிரி வேண்டாம். அன்று தமிழகம் முழுக்க கட்டப்பட்ட அரசுக்கட்டிடங்களில் சிந்திய சிமெண்டெடுத்து கட்டியிருந்தால் கூட இரண்டு பேரும் பெரும்பங்களாக்கள் கட்டியிருக்கலாம்.அதெல்லாம் பாவம் என்கிற கருத்தைப் பிடித்துக்கொண்டு வழ்ந்தவர் கக்கன். தன் அந்திமக் காலங்கள் வரையிலும் மதுரைக்கருகில் உள்ள தும்பைப்பட்டியில் அதே ஓலைக் குடிசையிலேதான் வாழ்ந்தார். இறுதிக்காலத்தில் நோய்வாய்ப் பட்டு யஸ்கின் அரசு மருத்துவமனையில் கேட்பாரற்றுக்கிடந்தார்.அங்கே கட்டில் கூடக் கிடைக்காமல் கீழே கோரப்பாய் விரித்துப் படுத்துக் கிடந்தார்.அதை எளிமை,தியாகம் என்ற வார்த்தைகளில் மூடி மறைப்பதுபோல திருட்டுத்தனம் ஏதுமில்லை.

ஆனால் கக்கன் சீந்துவாரில்லாமல் கிடந்ததைக் கேள்விப்பட்டு பதைபதைக்கிற மனிதாபிமானம் காங்கிரசின் பரம வைரியான திராவிடக்கட்சித் தலைவர் ஒருவரிடம் இருந்தது.ஆம் அது அந்நாளைய முதல்வர் உயர்திரு எம்ஜியார் அவர்கள்.அப்போதும் கூட தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இருந்தது.தலைவர்கள் இருந்தார்கள்.தேனாம்பேட்டையில் இருக்கும் மிகப்பெரிய கட்சி அலுவலகமும் இருந்தது.அனுமார் வால்போல நீண்டுகொண்டு போகும் வனிக வளாகமும் இருந்தது.எல்லாம் இருந்தும் கவனிப்பாரற்று போனார் அமரர் கக்கன்.தாங்கள் காற்றில் பறக்கவிட்டதை,தாங்கள் நிரந்தரமாகத் தொலைத்துவிட்டதை ஞாபகப்படுத்துகிற ஒரு உருவமாக மறியிருக்கிறார் அமரர் கக்கன் அவர்கள்.நடக்கட்டும் யாவாரம்.
 

இங்கும் அங்கும், பராக்குபார்த்தல்

சூப்பர் சிங்கர் 3 பிரம்மாண்டக்குரலுக்கான தேடுதல் வேட்டை துவங்கியிருக்கிறது.முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொது ஆளெடுப்பில் நீண்ட வரிசையில் பாட்டுப்பட்டாளம் காத்திருக்கிறது.பாத்ரூம் பாடகர்களில் இருந்து கைதேர்ந்த கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் வரை வரிசையில் நிற்கிறார்கள்.மாற்றுத்திறனாளி சரஸ்வதி தனது வசீகரக் குரலால் spot select ஆகிறார்.ஆடவர்களும்,இளம்பெண்களும் அதிக எண்ணிக்கையில் தெரிகிறார்கள்.பெரும்பாலும் IT துறை சார்ந்தவர்கள் வருவதை நம்மால் யூகிக்கமுடிகிறது.

கர்நாடக சங்கீதப் பாடகி சௌம்யா தேர்வு செய்கிற போது ஒரு இளைஞர் வருகிறார். அவரது பேர் கேட்கிறார். பேர் சொல்கிறார்.'நிஜம்மாவா, பயம்மா இருக்கு' என்று அபிநயத்தோடு சொல்லுகிறார் சௌம்யா.எதிர்
பார்த்தமாதிரியே அவர் சரியாகப் பாடாமல் தோற்றுத் திரும்புகிறார். அந்தப்பையன் பெயர் சதாம் உசேன்.லட்சக்கணக்கான உயிர்களை உறிஞ்சிக்குடித்த,பல நாடுகளைப் பொட்டல் காடாக்கிய ஜார்ஜ் புஷ்,ராஜபக்சே பெயர்களை அப்படிச் சொல்லுவாரா சௌம்யா ?.சொல்லலாம், சொல்லாமலும் போகலாம் அது அவரது உரிமை.பாடலை ஜட்ஜ் பண்ண வந்த இடத்தில் இந்த மாதிரியான கமெண்ட் கொஞ்சம் நெருடுகிறது.

பெயரில் என்னஅப்படி இருக்கிறது.'பெயர் வெறும் பேருக்கு,ஜாதிதான் பெயர்' என்கிற இளமைக் காலத்து கோபக் கவிதை ஞபகத்திற்கு வருகிறது.பேரசிரியர் ச.மாடாசமி பெயர்கள் குறித்து வேறு தகவல்களை முன்வைக்கிறார்.ரிக்சாக்காரர்களுக்கு,சலவைத்தொழிலளிகளுக்கு,பண்ணைக் கூலிக்காரர்களுக்கு,இப்படியான மக்களுக்கென்ற பிரத்யேகப்பெயர் இருக்கிறது.ஊடகங்கள் அவற்றை மிகத் துள்ளியமான நினைவுகளோடு அந்தந்த இடங்களில் பொருத்தி வைக்கும்.

சில கிராமங்களில் ஒரே குடும்பத்தில் பிறந்த ஐந்து பேருக்கும் ஒரே பெயர். கருப்பசாமி. கடக்குட்டி,சின்னவன்,நடுவுளவன்,பெரியவன்,மூத்தவன்.குடவோலையில் எல்லாப்பெயர்களும் ஒன்றாக இருப்பது மாதிரி,ஒரு ஒளிநாடாவில் எங்கு தொடங்கி எங்கு முடிந்தாலும் ஒரே ஒரு திரைப்படப்பாடல் பதிவு செய்து கொள்வது மாதிரி,ஒரு புது நோட்டுப் புத்தகத்தில் எல்லா பக்கங்களிலும் ஒரே பெயர் எழுதி வைக்கிற மாதிரி எல்லாமே அதுவாகி ஆக்ரமிக்கும் பிடிமானம்.ஒரு புகைப்படம் கூட எடுத்து மாட்டி அலங்கரிக்க முடியாத வீட்டிம் மூலை முடுக்கு எல்லாமே கருப்பனின் பெயர் ஒலிக்கவேண்டுமென்கிற வெறிதான் அது.சாதாரண ஜனங்களுக்கு பட்டும் படாமலும் இருக்கத்தெரியாது.அன்பென்றால் உயிரையும் கொடுப்பது, வம்பென்றால் உண்டு இல்லையென ஆக்குவது.

இதைத்தான் ராதாகிருஷ்ணன் மாமா இத்தனகோடிப்பேர்கள்ல இன்னொரு பேர் வைக்கலாமுங்றது கூடத்தெரியாத அப்பாவிச்சனங்க ஒரு பக்கம். ஒரே வீட்டில் பிறந்தவர்கள், இருக்கிற அத்தனைகட்சிக்கும் தலைவர்களாய் இருக்கிறமாதிரி வாழ்க்கையை வசப்படுத்திக்கிற வர்க்கம் இன்னொரு பக்கம் இருக்கு என்று சொல்லுவார்.

28.7.10

நா.வே.அருள், கவிதைகள்.

ஒரு, இருபதாண்டுகளுக்குமேல் கவிதைப்பரப்பில் புளங்கிவரும் ஒரு
கவிஞர். சில கவிதைத்தொகுப்புகளை மெளிதான குரலில் ஆனால் தீர்க்கமாக பதிந்து வைத்தவர்.ரொம்ப எளிமையன வார்த்தைகளில் நமக்கு சுட்டிக்காட்டிய வாழ்வின் அடிக்கோடிட்ட    கணங்கள்.சென்னைப்பெருநகரிலிருந்து சொன்ன கவிதைகள் இவை.
எங்கள் அன்புத்தோழன் நா.வே.அருள்.அவரின் ஆயுதம் தொகுப்பிலிருந்து மூன்று கவிதைகள்.

ஊசி வாங்கலையோ... ஊசி...
--------------------------------------
ஒரு வேட்டுச்சத்ததில்
பறவைகளின் அலறல்களால்
பயம் சிதறிக்கிடக்கும் தோப்புகள் எங்கும்..

குழந்தைகளை
மார்பில் ஏணைகட்டித் தூக்கிவரும்
இடையறாத இவர்களின் பயணம்
எப்போது முடிவுறும் ?

கயிறுகட்டித்தொங்கும் டப்பாவில்
காய்ந்து கிடக்கும்
உணவுப்பருக்கைகள்

பூனையை வேட்டையடிப்
புசித்து விடுகிறார்கள்
தானியக்கிடங்குகளிலோ
பெருச்சாளிகள்கடவுளின் ரத்தம்
------------------------

பயம் கவ்விய நானும்
பத்துவயது மகனும்
பூங்கா இருட்டுக்குள்
புகுந்து ஓடினோம்

மகனே
இரவுக்குள் பிடிபடலாம்
இன்றிரவு நாம்
பதுங்கும்
காட்டுப்புல்தான் கடவுள்

நிலவொளியில்
புல்நுனியில்
மின்னிய பனித்துளிகள் பார்த்த
மகன் கேட்டான்
"இது கடவுளின் ரத்தமோ"

சுற்றுலா
------------

அவன்காலில் இவன் கைகள்
இவன் கையில் அவன் கழுத்து
அவன் வாயில் இவன் மூக்கு
இவன் மூக்கில் அவன் விரல்கள்

வேறொன்றுமில்லை
இவர்கள் நகரப்பேருந்தில்
பயணம் செய்கிறார்கள்.0

22.7.10

ஒளிப்பாங்கண்டு

ஒளிந்து கொள்ள அறைகளில்லா
ஒரு பத்தி வீடு.
கதவிடுக்கில் பதுக்கி வைத்திருக்கும்
நமது சந்தோசமும்,
கள்ளமிலா பிள்ளைகளின் சாகசமும்.

கைவேலையாயிருக்கும் அவளுக்கு
ஒளித்து ஜெயிப்பதா
காட்டிக்கொடுத்து வெல்வதா எனும்
கயிறு இழுப்பில்
மூன்றாவது தீர்ப்பாய்க் குடும்பத்தைக்
கோர்த்து வைப்பாள்.

இப்போது அப்பா ஒளிந்து கொள்ள
அம்மாவின் நிழல்
வியர்வைப்பூவின் வாசம் வெளிச்சமிட
மூலை முடுக்கெல்லாம் பட்டுத்தெறிக்கும்
முன்னிரவு

பிள்ளையிடம் ஒளிந்து கண்ணாமூச்சியாடும்
பின்னிரவு.

அலுவல்,கோபம்,ஆற்றாமையாகிய
புறத்தின் வெப்பத்தை
தற்காலிகமாய் ஒழியக்கட்டும்
அகக்குளிர்ச்சி.

21.7.10

பிஞ்சிலே பழுத்தால்


பதின்மூன்று வயதில்
கார் பந்தயத்தில்
ஜெயித்த சிறுவனைச்சுற்றி
வெளிச்சமும் மின்னல்களும்.


ஏழு வயதில்
தினம் இருபது கட்டு
தீப்பெட்டி ஒட்டும்
சிறுவர் எல்லாம்
இன்னும் இருட்டுக்குள்.


கரிகாலன் அனாதையானால்
இளவயது அரசன்.
கருப்பசாமி அனாதையானால்
இளவயது பொறுக்கி.

20.7.10

அந்த நாள்.

வாலிபவயதில் சூடேறிய சமூகக் கோபத்தை இனங்கண்டு என்னை ஒரு தொழிற்சங்கவாதியாக மாற்ற முயற்சி செய்தார் ஆவணப்பட இயக்குனர்.பா.கிருஷ்ணகுமார்.சின்னவயதில் யாரையும் கேட்காமல் நானும் வேலவரும் தோளில் கைபோட்டபடி அந்த குக்கிராமத்து ஆரம்ப பாடசாலைக்குபோனது போலவே.நானும் மாதுவும் தோளில் கைபோட்டபடி அந்த வாசலுக்குள் நுழைந்தோம்.கோபம், சந்தோசம், அழுகை, கண்முழிப்பு, வேலை, பயணங்கள்,ஒளிந்து ஒளிந்து மதுக்குடிப்பது என எல்லாவற்றினூடாக இரண்டு விஷயங்கள் கெட்டிப்படுத்தப்பட்டது.மனிதாபிமானம் குழைத்த பொதுவுவுடமை மீது ஈடுபாடும்.அதன் கிரியா ஊக்கியான நட்பின் விஸ்தீரனத்தை கூடுதலாக்கிய பயணமும்.

28 வருடங்கள் வங்கி ஊழியனாக கழிந்த காலங்களின் சம்பளம் அழிக்கவியலா நட்பும் கொஞ்சம் இலக்கியமும் தான். அதை உரசிப்பார்க்கிற தருணமும் 20.7.2009 வந்தது.நானும் கொக்கரக்கோ வலைத்தளத்தின் பதிவர் அண்டோ கால்பர்ட்டும் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நாள் இது.எதையும் அறியாமல் துங்கிக்கொண்டிருந்த என் மனைவி,அடுத்த மாதம் சேரவிருந்த கல்லூரியின் கனவுடன் தூங்கிக்கொண்டிருந்த மகன் இருவரின் தூக்கத்தை கலைக்காமல் என்னை சஸ்பெண்ட் செய்த சேதி சொன்னார் அண்ணன் சோலை மாணிக்கம்.

அப்படியே எழுந்து சங்க அலுவலகம் போன என்னை தங்களின் செட்டைக்குள் மூன்றுநாட்கள் வைத்து அடைகாத்தார்கள். அந்த கதகதப்பை நினைத்தால் இன்னும் கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது.மாது,செல்வா,மணியண்ணா,சங்கரசீனி,சங்கர்,நாசர்,மணி,அருண் சோலை அண்ணா.எல்லோருக்கும் வீடு மனைவி மக்கள் அன்றாடக்கடமைகள் இருந்தது.அவை யாவற்றையும் சங்கத்தின் பொருட்டு ஒதுக்கிவைத்துவிட்டு எங்கள் இருவரைச்சுற்றி அன்புவேலி கட்டியிருந்தார்கள்.

அதுதான்,அந்த அன்புவேலிதான்.. ஆணவம், மமதை,அதிகாரத்திமிர்,ஓரவஞ்சனை,கொக்கரிப்பு எல்லாவற்றையும் சுக்குநூறாக்கியது. சங்கத்தின் ஒற்றுமை எங்களை நான்காம் நாளே இருக்கையில் மீள உட்காரவைத்தது.ஒரு சமூக ஈடுபாடுள்ள தொழிற்சங்கத்தின் நேர்மைத்திறனை ஓங்கி பிரகடனப்படுத்தும் நாட்களிள் அதுவும் ஒருநாள்.நினைவுகள் அழியாத சிறுகண்டன் அப்புவின் பாத்திரங்களில் பளபளக்கும் லட்சியத்தினூடே நட்பும் செழித்து வளரவில்லையா? அதுபோல எங்களிடமும் சொல்வதற்கு இந்த நாளிருக்கிறது.

19.7.10

ஆவிகள் இருக்கிறது. அடுப்பில், இட்லிச்சட்டியில்.


அனந்தபுரத்து வீடு திரைப்படத்தின் அறிமுகம் நேற்று சன் தொலைக் காட்சியில் நடந்தது.ஈரம் படத்தில் நடித்த அதே நந்தா தான் இந்தப்படத்திலும் கதாநாயகன்.இரண்டு படத்திலுமே கதை ஆவியைச்சுற்றி பின்னப்பட்டிருக்கும்.ஆவி இருக்கிறதா இல்லையா என்கிற தத்துவார்த்த கேள்விக்கு நான் இருக்கிறதென்றே பதில் சொல்லுவேன்.ஏனெனில் ஆவி நமது அன்றாடங்களில் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கிறது.எவ்வளவு இட்லி சாப்பிட்டிருக்கிறோம்.ஆவியில்லை என்றால் சாப்பிட்டதெல்லாம் போய்யாவியாகிவிடாத?.

ஆனால் பாருங்கள்,ஆவிப்படங்கள் எடுக்கிற எல்லா மொழி திரைப்படத்துக்கும் தந்திரக்காட்சிகள் வடிவமைக்கிற தொழில் நுட்பம் கைவரவேண்டும். இன்னொன்று பிரம்மாண்டமான வீடுகள்,பங்களாக்கள்,பெரிய பெரிய கதவுகள்,திரைச்சீலைகள் கட்டாயம் வேண்டும்.இதுவரை வந்த தமிழ் ஆங்கில,தெலுங்கு,இந்திப்படங்கள் எல்லாவற்றிலும் இதே இலக்கணம் பிசிறில்லாமல் வரையறுக்கப்பட்டிருக்கும்.சாதாரண குடிசை வீடுகளைச்சுற்றிப்படம் எடுக்க முடியாது.உங்கள் திரைப்பட அனுபவத்தை பின்னோக்கி கொண்டு போனால் யரும் இந்த இலக்கணத்தை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் இயல்பு இதற்கு நேரெதிரில் இருக்கிறது. பேய் பிடித்திருப்பதாக,அருள்வந்து ஆடுவதாக தங்களை கற்பிதப்படுத்திக்கொள்ளும் ஜனங்கள் எல்லாரும் கஞ்சிக்கில்லாத அடித்தட்டு மக்களாகவே இருக்கிறார்கள்.பிரபலமான அம்மன் கோவில்களில்,பிரபலமான அந்தோணியார்,மைக்கேலாண்டவர் கோவில்களில்,பிரபலாமான தமிழகத்து தர்ஹாக்களில் தங்கிக்கும்பிட கட்டாயம் ஒரு ஏற்பாடு இருக்கும். அங்கு வந்து வயனங்காக்கிற( residential worship) மக்களைப் பார்த்தவுடனேயே இந்தப் புள்ளி விபரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

கடவுளோ அல்லது பேயோ தங்களை இரண்டு வகையாக வெளிப்படுத்திக்கொள்கிறது. மேல்தட்டு மக்களிடம் ரொம்ப பதவிசாகவும் அடித்தட்டு மக்களிடம் அகோரியாகவும் அவதாரம் கொள்கிறது.இந்த இரட்டை வேஷம் போடுவது ஏனென்று தான் இன்னும் விளங்கவில்லை.ஒண்ணுந் தெரியாத காளியம்மா மதினியைப் பிடித்துக்கொண்டு 'நாந்தா கெனத்துல உழுந்து செத்துப்போன பால்ராஸ் வந்திருக்கேன்' என்று அழிச்சாட்டியம் பண்ணுகிறது. ஆனால் ஒரு நாள் ஒரு பொழுதாவது அம்பானி குடும்பத்திலோ,ஐஸ்வர்யாராய் குடும்பத்திலோ பேய் பிடித்து ஆட்டுவதில்லை.

பொருளாதார ரீதியான உத்திரவாதம் அற்றுபோன மக்களுக்கு பெரிய பிடிமானம் மனிதர்கள் மேலிருக்கிற பிரியமும் தெய்வங்களின் மேல் இருக்கிற நம்பிக்கையும் தான். இந்த இரண்டும் பொய்த்துப்போகிற போது மனம் பேதலித்துப் போகிறது.அடிகொப்புமில்லாமல் பிடி கொப்புமில்லாமல் எதிர்காலம் அந்தரத்தில் தொங்குகிறது. விஞ்ஞானம் இதை நரம்புத் தளர்ச்சி,மனப்பிறழ்வு,ஹிஸ்டீரியா என்று பெயரிடுகிறது.விஞ்ஞானத்தை காசுகொண்டு நெருங்கமுடியாத ஜனங்கள் 'பேய்க்கும் பாரு நோய்க்கும்பாரு' என்று நம்பிக்கைகளின் பின்னால் அலைகிறது.


சரி கதைக்கு வருவோம்.

அம்மா,அப்பாவை,நீச்சல் குளத்தோடு பங்களாவை,முப்போகம் விளையும் கிராமத்தை உதறித்தள்ளிவிட்டு சென்னைக்குப்போகும் பையன் கடனாளியாகி.கலங்கினார் பாலா என்று ஊர் திரும்புகிறார்.செத்துத்தெய்வமான அம்மாவும் அப்பாவும் ஆவியாக வந்து இவர்களுக்கு உதவுகிறார்கள் என்பது கதை.நீதி, அம்மா அப்பா என்பவர்கள் எவ்வளவு மகோன்னதமானவர்கள் என்பதை ஆவிகளின் மூலம் தெரிந்துகொள்வதுதான் நீதி. ஆவிகள் உதவுகிற ட்ரீட்மெண்ட் புதுசு என்கிற முலாம் பூசப்பட்ட வார்த்தைகளைக்கேட்கும் போது பட்டணத்தில் பூதம்,அதற்குமுந்தைய விட்டலாச்சாரியார்களின் ஆவிகள் சிரிக்கிற சத்தத்தை சன்னமாகக் கேட்கமுடிகிறது.

15.7.10

ரோஷக்காரி சின்னம்மாக்கிழவியும் ஒளிந்து பாடிய சங்கீதக்காரனும்.

தங்கையா வீட்டுக்கலயாணம் முடிந்து,பந்தி முடிந்து,மொய்க்கலயம் நிறஞ்சு அந்த ரெண்டு பத்தி வீட்டை புதுமாப்பிளை பெண்ணுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு ஊர்மடம் தேடிப் போய்விட்டார்கள்.ரேடியாச் செட்டு போடவந்த ஜானகிராம் சவுண்டு கண்ணன்ண்ணும்.மூடிவைத்துவிட்டு முடக்கிக்கொண்டார். எதுத்த வீட்டு கடவில் இருட்டில் ஒரு உருவம் பதுங்கிப் பதுங்கி நின்னது.ஒண்ணுக்கிருக்க வந்த கனகமணி சத்தம் போடவும் ஊர்கூடி பிடித்துவந்து வெளிச்சத்தில் பார்த்தால் சின்னம்மாக் கிழவி.களவாங்கிற வளசலுமில்ல,சுவர்தாண்டுகிற வயசுமில்ல பதுங்கி நிக்கவேண்டிய மர்மமென்ன என்று துருவித்துருவிக்கேட்டதில் 'எல்லாருந்தூங்குனாப்பெறகு எப்படியு குழாயுக்குள்ள இருந்து பாட்டுப்படிச்ச ஆம்பளயு பொம்பளயு எறங்கி வருவாகல்ல அதப்பாக்கத்தான் ஒளிஞ்சு நின்னேன் என்று சொன்னதற்குப்பிறகு ஊர் முழித்துக்கொண்டது.புதுமாப்பிளையும் பொண்ணும் தூங்கிவிட்டார்கள்.
கல்யாணவீடுகளில் படிக்கும் ஒலிபெருக்கி எங்கூர் மக்களுக்கு புரியாத புதிராகவே இருந்த காலம்.அண்ணாமலைக் கிழவனோ,முத்தையாக் கிழவனோ சொன்னால்தான் சரியென்று ஒத்துக் கொள்வார்கள். அவர்களிருவரும் தான் ஊர்நாடு போய்த்திரும்புகிறவர்கள். அண்ணாமலைக்கிழவன் ஐந்தாம் வகுப்பும், முத்தையாக்கிழவன்ஆறாம் வகுப்பும் தொட்டுவிட்டு வந்த படிப்பாளிகள்.ரெண்டு தலைமுறையாகவே முத்தையாக்கிழவன் குடும்பத்துக்கும் சின்னமாக்கிழவி குடும்பத்துக்கும் ஆகாது.பிரச்சினை ரொம்பப்பெரியது. வீட்டுக்கொட்டாரத்தில் நின்றிருந்த வேப்பமரம் யாருக்கென்கிற சண்டையில் விரிசலாகிப்போனது அடுத்தடுத்த வீடு ரெண்டும்.'முத்தையாகெழவன் அளந்து வுட்ற அறகொற லாப்பாண்ட கீல்னு கேக்க நா என்ன கேனச்சிறுக்கியா' என்று சொன்ன சின்னம்மாக் கெழவி ஒண்ணா நம்பர் ரோஷக்காரி.மண்டைக்குள்ளே தான் ஆளிருக்கு என்பது முத்தையாக்கிழவனின் வாதம்.இம்புட்டுக்கானு மண்டைக்குள்ள அத்தம்பெரிய ஆளு எப்படி இருப்பாக,குழாய்க்குள்ளதான் என்பது சின்னம்மாக்கிழவியின் சந்தேகம்.லாப்பாண்டு=law point
கீல்னு= சரியென்று ஒத்துக்கொள்ள.
வலசல்=பங்காளிகள் சம்பந்திகளடங்கியகுழு

கல்லெறியும் குரல்கள்.

கழுத்து தூளியில் தூங்கும் குழந்தையோடு
பேருந்து நிறுத்தத்தில் உறுமும்
கலைக்கூத்தாடிப் பெண்ணின் மேளச்சத்தம்.

தொலைக்காட்சி ஒலியை ஊடறுத்துக்கொண்டு
சமயற்கட்டுவரை ஓடிவரும் உப்புக்காரரின் அழைப்பும்

முன்மதிய நேரத்தில் தூரத்து வேலிச்செடியினின்று
தேடும் குயிற்பறவையின் கோரிக்கையும்

ஓரிடத்தில் நிற்காத பாதங்களோடு கழுத்துக்குன்ன
வாசல்வந்து பெயர் சொல்லி டீச்சரென்று கூவும்
கீரைக்காரம்மாவின் பரிவும்.

எஞ்சினீயர் கனவோடு கூட நிற்கும் மகனைக்காட்டி
வங்கிக்கடன் கேட்கும் ஏழைத்தகப்பனின் கண்களும்

உலுக்கிவிட்டுப்போகிறது சலனமற்ற மேற்பரப்பை
ஆண் பெண்,ஊர் நிறப்பேதங்களற்ற ஒரே சுரத்தில்.

14.7.10

இந்திய விடுதலையும், தலித் விடுதலையும்

அடையாளம்,ஒற்றுமை,விடுதலைக்கான தலித்துகளின் போராட்டம் எனும் நூலின் தமிழாக்கத்தின் ஒருபகுதி.
எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை
இந்தியா உலகிற்களிக்கும் - ஆம்
எல்லோரும்  ஓர்குலம் எல்லோரும் ஓரினம்
எல்லோரும் இந்திய மக்கள்
எல்லோரும் ஓர் நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லோரும்  இந்நாட்டு மன்னர்.பாரதியின் கனவோடு காத்துக்கிடந்தது காலம். அது கனிந்தது. அந்த ஆகஸ்ட் மாதம் பதினைந்தாம்
நாள் நள்ளிரவு பணிரண்டு மணிக்கு. ஏன் இரவு பணிரண்டு மணி எனக் கேட்டால் அர்த்தமுள்ள இந்து தத்துவத்திலிருந்து பக்கம் பக்கமாக மிட்டாய்க்கதைகள் வரலாம். எந்த வேதம் இந்திய மனிதர்களைப்பிரித்ததோ, எந்த வேதம் ஒரு பெருவாரியான ஜனங்களை ஊரை விட்டு விரட்டி புற ஜாதியினராக்கியதோ, எந்த வேதம் அதைக்கேட்ட பிற்படுத்தப் பட்டவர்கள் தலித்துக்கள் காதில் ஈயம் காய்ச்சி ஊற்றச் சொன்னதோ அதே வேதத்திலுள்ள ஆகம விதிப்படி தான் இந்த இந்தியாவுக்கு நள்ளிரவில் விடுதலைக்கான நாள் குறிக்கப்பட்டது.விடுதலைக் கப்புறம் நேரு தலைமையில் உருவான மத்திய அரசு இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்கியது. அதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான பாதுகாப்புக் குறித்து பல அடிப்படைச்சரத்துக்கள் இயற்றப்பட்டன.

15 வது ஷரத்து.
------------
மத இன ஜாதி மற்றும் பால் பாகுபாடுகளிலிருந்து விடுதலை அடைவதற்கான உரிமையை
வழங்குகிறது

16 வது ஷரத்து.
------------
தலித்துகளுக்கு சமுதாய மற்றும் கல்வியின் மூலம் கட்டாய வளர்ச்சி தேவை என்பதை வலியுறுத்துகிறது. அது மட்டுமில்லாமல் தீண்டாமையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் எனவலியுறுத்துகிறது. தீண்டாமைக்கொள்கையைக் கடைப்பிடிப்பது தண்டனைக்குறிய குற்றம் என்று வறையறுக்கிறது.   

23 வது ஷரத்து
------------
வேலைபார்க்கிற இடங்களில், பொருளாதரா ரீதியாக மட்டுமல்லமால், சமூக மேலான்மையால் நிர்ப்பந்தப்படுத்தப்படும் தலித்துகளுக்கு பாதுகாப்பளிக்கிறது. அதோடு மட்டுமில்லாது மத்திய மாநில அரசுகளில் சில குறிப்பிட்ட பதவிகளுக்கு நியமனம் செய்யும்போது இடஒதுக்கீடு அளிக்கிறது.

25 வது ஷரத்து
------------
இந்தியர் யாவரும் தங்களிஷ்டப்படி எந்த மதத்தையும் தேர்ந்தெடுத்து அதில் இணைந்துகொள்ளும்அடிப்படை உரிமை.

34 வது ஷரத்து
------------
பாராளூமன்ற, சட்டசபை , பஞ்சாயத்து தேர்தல்களில் அதிகாரப்பரவலுக்காக தலித்துக்கள் தேர்தலில் போட்டியிட இட ஒதுக்கீடு வழங்குகிறது.

46 வது ஷரத்து
------------
கல்வி மற்றும் பொருதார நிலைமகளில் தலித்துகளின் நிலைமயக் கவனித்து அவர்களின் வளர்ச்சிக்கு உதவ சிறப்புக் கண்கானிப்பு வேண்டுமென உறுதி செய்திருக்கிறது.இது தவிர மிகப்பிரபலமான பி சி ஆர் ( ப்ரொடெக்சன் ஆப் சிவில் ரைட்ஸ் ஆக்ட்- 1955 )பி சி ஆர் ஆர் சட்ட ம் ( 1977 ), வன்கொடுமைத்தடுப்புச்சட்டம் ( 1989 ) ஆகியவையும் இன்னும் இருக்கின்றன.

................... இந்த சட்டங்கள் பூராவும் அமலாகிப் பூர்த்தியடைந்திருந்தால் எப்போதோ கீழ் மேலென்ற நிலை மாறியிருக்கும். இந்தியா எந்தாய் நாடு இந்தியர் யாவரும் என் உடன்பிரந்தோரென்று சொல்லியபடி தெருக்களில் ஜாதி மத பேதம் மறந்து குழந்தைகள் ஓடித்திரிந்திருக்கும். ஆனால் இங்கே இன்னும் வாச்சாத்தி, மாஞ்சோலை, வீதிகளில் மிதிபட்டுக்கிடக்கிறது. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் நாற்காலிகளில்
இன்னும் இரண்டாயிர வருட முடைநாற்றம் உட்கார்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா கிராமக்குடிநீர் ஆதாரங்களிலும் கண்ணுக்குத்தெரிகிற கிருமிகளாக தடைச்சட்டம் இருக்கிறது. பெருநகரங்கள் நகரங்கள் நகரத்தை நோக்கி நகருகிற உர்கள் தவிர்த்த எல்லாகிராம டீக்கடைகளிலும் ஒரு ஓரத்தில் நின்று டீக்குடிப்பதை பார்த்தபடியே காலம் நகர்கிறது. நகராட்சி ஊழியத்துக்கு அருந்ததியர்தான் என்பதை மாற்றமுடியாது.

மாற்றம் இருக்கிறதா இல்லையா என்று கண்கானிக்ககூட இந்தியாவின் மூத்த குடிமகன் ஜனாதிபதிக்கு அதிக அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் ஒரு சிறப்பு அதிகாரியை நியமித்துக் கண்காணிக்கலாம் என்றும் சட்டம் வழி வகுக்கிறது. ஆனால் சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி ரஜேந்திர பிரசாத் அவர்கள் 1936 ஆம் ஆண்டு
காந்தியால் முன்மொழியப்பட்டு அம்பேத்கர் ஆதரவோடு கொண்டுவந்த பட்டியல் இனத்தவர்களின் பட்டியலுக்கு
ஒரு புது வியாக்கியானத்தைக் கொண்டுவந்தார் அதுதான் அரசியலில் மதத்தைக்கலக்குகிற முயற்சி. யார் யாரெல்லாம் பட்டியல் இனத்தவர் என்று சொல்லிவிட்டு அவர்களில் எவெரேனும் இந்து அல்லாத பிற மதத்தைத் தழுவினால் அவர்கள் ஷெடூல்டு இனத்தில் சேர்த்துக் கொள்ளப்படமாட்டார்கள் எனும் ஒரு சூழ்ச்சியை
இடைச்செறுகலாக, பிற்சேர்க்கையாக சேர்க்கிறார் இந்தியாவின் முதல் மூத்தகுடிமகன். இந்தச்சூழ்சியானது
இந்திய அடைப்படை உரிமைச்சட்டத்தின் 25 வது ஷரத்துக்கு நேர் எதிரானது எனப்பெரும் கலகக்குரல்கள்
கேட்டபின்னர்  மிகத் தாமதமாக இரண்டுமுறை சீர்திருத்தப்பட்டது 1956 ல் சீக்கியர் களையும், 1990 ல்
புத்த மதத்தையும் இந்த சட்டத்துக்குள் கொண்டுவந்தனர்.

எப்படியிருந்தபோதிலும் நசுக்கப்பட்டவர்களை அடையாளப் படுத்தும்போது கூட மத அளவுகோல் கொண்டு அளப்பது நவ நாகரீகக் கொடுமை. அதுவும் எந்த சனாதனத்தின் காலில் மிதிபட்டு நசுங்கினார்களோ அதே சனாதனத்தின் காலுக்கடியிலேயே விமோசனம் கிடைக்கும் எனும் குருட்டுத் கதையானது தலித்துக்களின் நிலைமை. எல்லா மதத்திலும் இருக்கிற தலித்துகளுக்கு ஒரே அடயாளம் கிடைக்க இருந்ததையும், அவர்களை  ஒன்று சேர விடாமலும் பிரித்தாளும் சூழ்சியை அதிகாரத்தின் துணையோடு அரங்கேற்றினார் ஹிந்து மஹாசபையின் தீவிர உறுப்பினர் ராஜேந்திர பிரசாத். அந்த அரங்கேற்றத்தின் எதிரொலியாக முஸ்லீம் தலித்துகளும் கிறிஸ்தவத் தலித்துகளும் இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் பிரகாரம் கிடைக்கிற அடிப்படை உரிமைகளை அனுபவிக்க இயலாத பிரிவினராயினர்.

நிலைமைகள் இப்படியிருந்த போதிலும் ஒரு சில நேர்மையான உயர் அதிகாரிகளும் அரிதாகவேனும் அவ்வப்போது
குறிஞ்சியாய் பூத்தார்கள். ஜனாதிபதியின் நேரடி  நியமனத்தால் வந்த  ஆனையாளர் L M ஸ்ரீகாந்த் அப்படிப்பட்ட ஒரு உயர் அதிகாரி. அவர் நியமிக்கப்பட்ட ஓராண்டுகாலத்தில் நடக்கிற ஒவ்வொரு பாராளுமன்ற கூட்டத்திலும்
தலித்துகளுக்காக, அவர்களைப் பாதுகாக்கிற சட்டங்கள் ஒழுங்காக நிறைவேறுகிறதா என்று சோதனை செய்ய,
நடவடிக்கை எடுக்க, அது குறித்த அறிக்கை சமர்ப்பிக்க, அவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.  
அவர் சமர்ப்பித்த அறிக்கை பரபரப்பானதும் மிகுந்த ஈர்ப்புத் தன்மை கொண்டதுமாகும். அது 1951 ஆம் ஆண்டில்
சமர்ப்பிக்கப்பட்டது. அதுவே தலித்துக்கள் குறித்த முதல் அறிக்கை.

-----------------------------------------------------------------------------------------
"இந்து சமூக ஏற்பாட்டில் ஜாதி என்பது ஒரு மனிதனின் அடயாளமாகவும்,  செய்யும் தொழிலுக்கான தகுதியாகவும்,கௌரவமகவும் வலிந்து திணிக்கப்பட்டு பின் கடைப்பிடிக்கப்படுகிறது. இது போலொரு வறட்டு நடைமுறை இந்தியாவைத்தவிர உலகின் வேறெந்த மூலையிலும் கிடையாது. தெருக்கூட்டுவது, சாக்கடை சுத்தம் செய்வது, தோல் பதனிடுவது, செருப்புத்தைப்பது, மலம் அள்ளுவது, பிற மனிதனின் அழுக்குத்துணிகள் வெளுப்பது போன்ற தொழில்கள் எல்லாம் மனிதனால் அவனது கைகளால் செய்யப்படுகிறது. இந்தத் தொழில்கள் யாவும் ஒரு சில ஜாதிகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்திய ஜனத்தொகையில் ஐந்து கோடிக்கு மேலிருக்கும்  அவர்கள் ஹரிஜனங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்."
"
அடக்குமுறயால் திணிக்கப்பட்ட இந்த பழக்கங்களால் அவர்கள் தங்கள் சுய மரியாதையை இழந்திருக்கிறார்கள்.
அவர்கள் அதற்குள்ளே நூற்றாண்டுகாலங்களாக உழன்றுகிடப்பதால், அது சாபமில்லை, அதை உடைத்துக்கொண்டு அவர்களால் வெளி வரமுடியும் என்பதை உணராதபடிக்கு அதிலே லயித்துக் கிடக்கிறார்கள். எனவே அவர்கள் பிறமனிதர்களோடு போட்டி போட்டு  தொழில்களிலோ ஆலைகளிலோ உழைக்கமுடியாத சோம்பேறிகளாக மாறீப்போகிறார்கள், அவர்கள் மூலையும் உடலும் சோர்ந்து போயிருக்கிறது. அதை விடக்கொடூரம் தங்கள் குழந்தைகளைக்கூட பள்ளிக்கூடம் அனுப்ப முடியாத ஊற்றுக்கண் அடக்கிறவர்களாக மாறுகிறார்கள்

 
-----------------------------------------------------------------------------------------
அறிக்கையின் இந்த வார்த்தைகள் இருண்டு கிடக்கும் தலித்துகளின் உள்ளார்ந்த இயல்புகளின் மேல் வெளிச்சம்
பாய்ச்சுகிறது. அது ஜாதீய மேலாதிக்கத்தால் நசுங்கிக்கிடக்கும் மனித விழிப்புணர்வைப்பற்றிப்பேசுகிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கூனிக்கிடக்கிற சமுகத்தின் முதுகெழும்புகளை நிமிர வைக்கும் மருத்துவம் குறித்து
யோசிக்க வேண்டிய நிர்ப்பந்ததில் இந்தியா இருப்பதைச்சுட்டிக்காடுகிறது. அது வெறும் காகிதச்சட்டங்களாலும்,
ஆணைகளாலும் தீர்மாணங்களாலும் பணமுடிப்புகளாலும்  நிவர்த்தி செய்யமுடியாத பீடை எனத்திட்டவட்டமாக குறிப்பிடுகிறார்.
  
ஒரே ஒரு மாற்று தானிருக்கிறது அது கல்வி.  அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி தர யோசிக்கிற போதே அவர்களின் உள்ளார்ந்த இயல்புகளை அலசி ஆராய்ந்து கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும். எனவும் தெளிவக
ஆரம்பிக்கிறார் LM ஸ்ரீகாந்த்.இதற்கெனப் பிரத்யேகமாக அவர் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அலைந்து திரிந்திருக்கிறார்.

28 வது அறிக்கை ( 1987 ) 
-------------------------------------
கிட்டத்தட்ட முப்பத்தாறு வருடங்கள் அந்த நாற்காலி ஒரு அருங் காட்சிப் பொருளாகவும், மாதம் பிறக்கிற போது
பணம் பட்டுவாடாப் பண்ணுகிற கல்லாப்பெட்டியாகவும் இருந்ததே தவிர குறிப்பிட்டுச் சொல்லுகிற மாதிரி ஒரு துரும்பைக்கூடத் தூக்கிப்போடத்தயாராயில்லை. எனவே 1987 ல் வெளியான 28 வது அறிக்கை கூடுதல் கவனம் பெறுகிறது. அதாவது இந்த அறிக்கை தயாரான 1980 வது ஆண்டு கணக்கெடுப்புப்படி சுதந்திரமும் கடுமையான சட்டங்களும் நடைமுறைக்கு வந்து நாற்பதாண்டுகள் கடந்த பின்னரும் நிலைமைகள் கிணற்றில் போட்ட கல்லாகவே இருந்தது.பொதுக்கிணற்றில் தண்ணீரெடுக்க முடியாத கொடும் நடைமுறைகள் கிராமங்களில் கொஞ்சமும் குறையாமல் இருந்தது. அது போலவே நகரங்களின் சேரிப்பகுதியில் குடியிருப்பவர்களின் நிலைமைகளும் நீடித்தது. அதுபோன்ற தீராக்கொடுமைகளின் பட்டியல் பற்றிப்பேசுகிறதுறது, அந்த 28 வது அறிக்கை.
 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தலித்துகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு சின்னசின்னக் கீற்றாக ஒளிர ஆரம்பிக்கிற இடங்களில் எல்லாம் அவர்கள் அடுத்தவர்களின் ஆறாத கோபத்திற்கு ஆளக நேர்ந்தது. அந்தக்கோபத்துக்கு விலையாக மொத்தம் மொத்தமாக உயிரும் உடமைகளும் தலித்துகளிடமிருந்து பறிபோயின. அவர்களின் பாதம் பதிந்து நிற்கிற ஒரு
தப்படி இடம்கூட அவர்களுக்கெனச் சொந்தமாக இல்லாத ஜீவராசிகளாக இருந்ததனால்,  உயிர் வாழ்தலின் நிர்ப்பந்தத்தால் அறிதலுக்கான முயற்சியையும் கைவிட நேர்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
வண்கொடுமைகளுக்கெதிரான இயலாமை, அவமானங்கள், இதர கொடுமைகள் என நீளும் பாடியல்கள், தங்கள் மிச்ச நாட்களுக்காக வாய்மூடிப் பொறுத்துக்கொண்டது போக, பதிவு செய்யப்பட்ட குற்றங்கள் தினசரி நாளிதழ்களில் இடம்பெறாத நாளேகிடையாது என்று சத்தியம் செய்து சொல்லலாம். அப்படி பதிவு செய்யப்பட்ட மிகக்கடுமையான குற்றங்கள் சராசரியாக வருடத்திற்கு 15000 என்று கணக்கிடப்படுகிறது.

1) தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் குறித்த தெளிவற்ற ஆவணங்களால் தீர்க்கப்படாத தாவாக்கள்.
2) வயிற்றுப்பாட்டுக்கு எட்டாத குறைந்த கூலி, அல்லது கூலியில்லாத உழைப்பினால் உருவாகும் மனக்கசப்பும்    பதற்றமும்.
3) தன்னெழுச்சியாக கிழம்பும் விழிப்புணர்வு ஆகியவைகளே அதற்கான காரணங்களாகச் சொல்லுகிறது.  
  
சுதந்திரத்துக்குப்பிறகான மொத்த கல்வி வளர்ச்சி 1961 ல் 24 சதவீதமாகவும், 1971 ல் 29.4 சதவீதமாகவும், 1981 ல் 36.2 ஆகவும் இருக்க தலித்துக்கள் 1981 ல் 21.4 சதவீதம் மட்டுமே எட்டமுடிந்திருக்கிறது.
மத்திய மாநில அரசுகளின் உயர் பதவிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவுக்கும் குறைவாகவே தலித்துகள் இருக்க முடிந்தது.வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து வேலைகிடைக்கப்பெற்றோர் கணக்கில் 1983-85 ஆண்டில் வெறும் எட்டு சதமானவர்கள் தான் தலித்துகள். கிட்டத்தட்ட பாதிக்கும் மேலான இட ஒதுக்கீடு செய்யப்பட்ட பணியிடங்கள் காலியிடங்காளாகவே கிடந்தன.

இப்படி புள்ளிவிவரங்களுக்குள் பயணமாகித்தான் தலித்துகளின் நிலைமையைச்சொல்ல வேண்டிய அவசியமில்லை.அது கதவையும், கண்ணையும் திறந்துபார்த்தவுடன் தென்படுகிற அன்றாட அவலங்கள்.

13.7.10

அடிமைத்தனம் பொறுத்துக்கொள்ளும் வரை அமைதியாகத்தான் தெரியும்.

ஊருக்குள் நுழைந்த போது ஆறு ஏழு காவலர் வாகனங்கள், இரண்டு அதிரடிப்படை வாகனங்கள் நின்றிருந்தது. ஊர் மடத்தில், வாகனத்தில் பாதையில் எங்கும் ஆணும் பெண்னுமாக காக்கிச்சட்டைகள் நிறைந்திருந்தது. தெருவுக்குள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இரண்டு மூன்று பெண்கள் இன்னும் அதிர்ச்சி மீளாத கண்களோடு உட்கார்ந்திருந்தனர். சென்ற முறை போனபோது கான்க்ரீட் சாலை போடப்பட்ட தெருக்களில் ஆங்காங்கே கம்பு, சோளம், கேழ்வரகுக்கதிர்கள் காயப்போடப்பட்டிருந்தது. இந்த முறை அந்தத் தெருவெங்கும் கற்கள் தாறுமாறாகக் கிடந்தது.  பெட்டிக்கடைகள், டீக்கடைகள் எல்லாமே பூட்டிக்கிடந்தது. மருந்துக்கூட ஒரு ஆணைப்பார்க்க முடியவில்லை. பெரும்பாலான வீடுகள் மண் சுவரால் கட்டப்பட்டு, மேல்கூரையாக தகர ஷீட் போடப்பட்டிருந்தன.

தெருவின் ஆரம்பத்தில் அப்படிப்பட்ட ஒரு வீட்டுக்குள் நுழைந்த போது இரண்டு பிளாஸ்டிக் குடங்கள், ஒரு தகரப்பெட்டி, ஒரு சின்ன மரப்பெட்டி, ஒரு பழைய புகைப்படச் சட்டம், அவ்வளவுதான் கோழிக்கூட்டைப் போலுள்ள அந்த வீட்டின் மொத்த சொத்து. அவையெல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு சிதறிக்கிடந்தன. அடுத்த வீடு அங்கிருந்து ரொம்பத் தள்ளி இருந்தது. அங்கே சாகப்போகிற வயசில் ஒரு பாட்டி நின்று கொண்டிருந்தார்கள். அந்த வீட்டின் நிலையும் கதவும் சரிந்துகிடக்க வீட்டுக்குள் இரண்டு ஈயச்சட்டிகள் நெளிந்து கிடந்தது. சொந்தமென்று சொல்லிக்கொள்ள ஒரு பூனைக்குட்டி கூட இல்லாத அந்த மூதாட்டியின் எலிப்பொந்து போன்ற அந்த வீடு ஒரு தீவிர வாதியின் வீட்டைச் சூரையாடுவதைப் போல சூரையாடப்பட்டிருந்தது. விநோதமாக இருந்தது. அந்த வீடு தாக்கப்பட்டதற்கு என்ன காரணம் இருக்கும் என்று பலகோணத்தில் துருவித் துருவிக் கேட்டதில் எந்த அனுமானத்திற்கும் வரமுடியவில்லை. ஈரம் வீரம் ஏதுமற்ற குரூரம் மட்டுமே மிதமிஞ்சித்தெரிகிறது. பிரதானத்தெருவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் தாக்கப்பட்டிருந்தன. தேடுதல் வேட்டை என்கிற பெயரில் இது போல தாக்குதல் நடந்திருக்கலாம் என்று அது குறித்து விசாரித்த போது சொன்னார்கள். காவல் துறை தெருவுக்குள் வரும்போது எந்த ஒரு ஆணும் இல்லை என்று பதில் சொன்னார்கள்.

உத்தப்புரம் காலணிப்பகுதி, «ங்கு தான் 6.05.2008 அன்று தீண்டாமைச்சுவரின் ஒரு சிறு பகுதி இடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அறுபது வீடுகள் துவம்சப்படுத்தப்பட்டிருந்த பகுதியும் அதுதான். அங்குதான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதன்முதலாகக் கட்டப்பட்ட தலித்துகளின் ஒரு சில சிமிண்ட் வீடுகள் இருக்கின்றன. அங்குதான் கெட்டிப்படுத்தப்பட்ட தீண்டாமை குண்டழுக்கின் மீது கேள்விகளைப் பாய்ச்சுகிற இளைஞர்கள் இருக்கிறார்கள். அங்குதான் ஒரு வீடு விடாமல் காவல் துறையின் உயர்மிராண்டித்தனம் நுட்பமாக இன்னொரு முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.(மிருகங்களும், காட்டுமிராண்டிகளும் நேயம் மிகுந்தவர்கள் அவர்களை அக்கிரமங்களுக்கு உதாரணம் சொல்லுவது சூது நிரம்பிய சிந்தனை). மின்விசிரிகளின் இறக்கைகள் அடித்து நொறுக்கப்பட்டுக் கிடக்கிறது. கோíÌ மரக்கதவுகள் அரிவாள்கள் கொண்டு சிதைக்கப்பட்டிருக்கின்றன. தலைமுறையாய்க் கண்ட சின்னச்சின்னக் கனவுகள் சின்னாபின்னப் படுத்தப்படுக் கிடக்கிறது உத்தப்புரம்.

உத்தப்புரம் இன்று தீண்டாமைச் சுவரால் அறியப்படுகிறது.மேற்குத்தொடர்ச்சி மலை சூழ்ந்த அழகிய நிலப்பரப்புதான். கரும்பும் நெல்லும் விளைகிற வளமான பூமிதான். கலாசாரத்தொன்மை வாய்ந்த மண்ணும் மக்களும் நிறைந்த பூமிதான். எல்லாம் அவரவர் ஜாதிக்குள்ளும் அதிகபட்சம் அவர்களுக்கு இணையான சாதிக்குள்ளும் தான்.  தலித்துக்கநளைப்பொறுத்த மட்டில் ஏனைய எல்லாரும் மேலிருந்து கீழ்நோக்கித்தான் பார்க்கிறார்கள்.  அது கிட்டத்தட்ட எல்லா மேல் சாதியினரின் குழந்தைகளுக்கு சேனைத் தண்ணீரோடு சேர்த்துப் புகட்டப்படுகிறது.  தமிழகத்தில் பெருவரியானவர்கள் அங்கு நடக்கிற சாதிப்பிரச்சினை அப்பகுதியிலுள்ள கள்ளர்களுக்கும் தலித்துகளுக்கும் என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். விபரம் தெரிந்தவர்கள் என்று நம்பப்படுகிறவர்கள், எதோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலம்  கொண்டு கொடுத்து சௌஜன்னியமாக இருந்த  இரண்டு சாதிகளையும் அரசியல் ஆதாயத்துக்காக தூண்டிவிடுகிறார்கள் என்றொரு மூட நம்பிக்கையுடையவர்களாக  இருக்கிறார்கள். அவமானங்கள் சகித்துக்கொள்ளப்படும் வரை எல்லாம் சுமூகமாகத்தெரிகிறது.

 பள்ளிக்கூடம் விட்டுத்திரும்புகிற போது, நகரப்பேருந்தில், கூட்ட நெரிசலில், கைபட்டுவிட்டதற்காக கட்டி வைத்து அடித்த சமூகம் உத்தப்புரத்தில் அந்தச்செழுமையான வயல் வெளிகளில் செருக்கோடு வளர்ந்து கிடக்கிறது. தன்னையொத்த பள்ளி மாணவனை அண்ணே என்று சொன்னதற்காக வெகுண்டு எழுந்து "" நீ என்ன எங்கப்பனுக்கா பெறந்த என்னப்போயி அண்ணன்னு கூப்புடுற " என்று கட்டி வைத்து அடித்த கதைகள் பழங்கதைகள் அல்ல இதே கண்ணினி யுகத்தில் தான் நடந்துகொண்டிருக்கிறது.

ரணம் கோர்த்த வலிகள் நிறைந்த கதைகள் ஆயிரம் ஆயிரமாய் உத்தப்புரத்து தெருப்புழுதிகளில் கிடக்கிறது. இன்னும் சொல்லப்படாத அவமனச் சரித்திரங்கள் மண்ணின் அடிஆழத்தில் மக்கிப் போய்க்கிடக்கிறது.  கானாமல் போன ஆடு, மாடுகளைத் தேடி  தெருவுக்குள் நுழைகிற உத்தப்புரத்து தலித் அங்கிருக்கிற நாட்டாமையிடம் அனுமதி கேட்காமல் நுழையமுடியாது. கட்டணக் கழிப்பிடத்துக்குப் போகிற அவசர அனுமதியெல்லாம் அங்கே கிடையாது. அவர் தனது நாட்டாமைப் பெருமையை நிலை நாட்ட கால் மணி அல்லது அரை மணி நேரம் காக்க வைப்பார். அதற்கப்புறம் பூர்வாங்கமாக விசாரணை செய்துவிட்டுத்தான் அனுப்புவார். ஊர்மடத்தில் உட்கார்ந்து கொண்டு கீழ்சாதிக்காரனை விசாரிக்கிற வக்கிரம் எந்த ஊடகம் வழியாகவும் இதுவரை பதிவுசெய்யப்படவில்லை. அவையெல்லாம் சொல்லில் அடங்காத அவமனங்கள். அதற்கெல்லாம் அடங்கிப்போனப்பிறகும் கூட ஒரு வேளை அனுமதி கிடைக்கவில்லை என்றால் தனது மனைவியே கானாமல் போனாலும் திரும்பித்தான் வர வேண்டும்.

ஊர் எல்லையில் எழுமலை போகிற சாலையின் இடது பக்கத்தில், நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில், தலித்துகள் தெருவுக்கு போகிற வழியில் தான் செல்லியாரம்மன் கொழுவிருக்கிறாள். கோவிலுக்கு நாற்பது செண்ட் நிலத்தை விட்டுக்கொடுத்திருக்கிறது அரசு. அதற்கு அருகிலேதான் பேருந்து நிறுத்தம் ஆறுநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள்  வசிக்கிற பகுதிக்கென இன்னமும் பத்துக்கு ஆறு அடியில் ஒரு நிழற்குடை கட்ட முடியாத தெம்மாடியாகிப்போயிருக்கிறது அரசு. இப்டியாப்பட்ட அரசுகள் சேர்ந்து தான்  வாலைத் தூக்கிக்கொண்டு வல்லரசாகத் துடிக்கிறது.

கோவிலில் எங்களுக்கும் கும்பிடு பாத்தியதை இருக்கிறது என்று தலித்துகளில் சிலர் சொல்லிக்கொண்டிருந்தாலும். இப்பொழுது உடனடித்தேவை அங்கு ஒரு நிழற்குடை, அதற்குத்தடையாக இருக்கிறது செல்லியரம்மன் கோவில் மதில் சுவர். அந்த மதில் சுவரின் மறைவுக்குள்ளே தான் காலங்காலமாக தலித் பகுதியைச்சேர்ந்த சிறுவர்களும், இளைஞர்களும், ஆண்களும் கட்டிவைத்துச் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்கு வெள்ளையடிக்கிற போது சில இளைஞர்கள் இது பிரச்சினைக்குரிய இடம் இதில் வெள்ளை அடிக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதுகூடப் பொறுக்கமுடியாத உயராதிக்க வெறி, ஆயுதங்களோடும், நாட்டுவெடிகுண்டுகளோடும் ஆட்டம்போட்டிருக்கிறது. எதிர்த்து தாக்கியதைத் தாங்கமுடியத காவல்துறை நிர்வாகம் ஆதிக்க வெறியர்களோடு சேர்ந்து உத்தப்புரம் தலித் பகுதிக்குள் நடத்திய உயர்மிராண்டித்தனத்தின் மிகச்சுருக்கம் தான் மேற்சொன்னது.

சுவர் இடிக்கப்பட்டதிலிருந்து புதுப்புது பிரச்சினைகள் உருவாகி இருக்கிறது.திறந்துவிடப்பட்ட பாதைவழியே ஆட்டோ வில் போக்கக்கூடாது,இருசக்கரவாகனத்தில் போகக்கூடாது என்கிற புதிய சட்டங்கள் அமலில் இருக்கிறது.நாடாளுமனற உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜன் நிதியிலிருந்து தொகை ஒதுக்கி நிழற்குடை அமைக்க பரிந்துரைத்தபோதிலும் இன்னும் அங்கு நிழற்குடை அமைக்க முயற்சிகள் எடுக்கவில்லை. இடிக்கப்பட்டது வெறும் செங்கல்சுவர்தான். தீண்டாமை என்கிற உலகமகா சாபக்கேட்டுச் சுவர் இடிபடாமல் அப்படியே தொடர்கிறது.இது வரை ஏழு எட்டு முறை தாக்குதல் நடத்தியிருக்கிற அரசபயங்கரவாதம் ஒரே ஒருதிசையில் தான் பயனித்திருக்கிறது.தீண்டாமைக்கு எதிராக 26 வகையான சட்டப்பாதுகாப்பு இருக்கிறது.அது புதையுண்டு போன நாகரீகச்சின்னங்கள் போல வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கிறது.

இவைகளின் மேல் கேள்வி எழுப்பிய தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் தலைவர்களை,அறப்போராட்டம் நடத்திய பொதுமக்களை 12.7.1010 அன்று மதுரையில் தாக்கியிருக்கிறது அரசு.இதைத்தான் நாம் ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்

10.7.10

இருகண்குடி, வெயில் மனிதர்களின் கற்பனை நிழல். (300 வது பதிவு ).

வலையெழுதுகிறசாக்கில் நிறைய்ய  படிக்க முடிந்திருக்கிறது. வலையெழுதுகிறதாய் பேர்பண்ணிக் கொண்டு வீட்டில் நிறய்ய திட்டு வாங்க முடிந்திருக்கிறது.காலத்தையும்,காசையும் செலவழித்து பரஸ்பரம் விலைமதிக்க இயலாத அனுபவத்தையும்,காசுகொடுத்து வாங்கமுடியாத நண்பர் சேமிக்க முடிந்திருக்கிறது.

எழுதிக்கொண்டே வாசகனாகி வாசித்துக்கொண்டே எழுதி. உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திருக்காத சோம்பேறி, உலகம் சுற்றிய பயணியாக முடிந்திருக்கிறது.செழுமையான தேர்ந்த பதிவர்களின் எழுத்துக்களில் முதிர்ச்சியையும், சீமான்கனி, லெமூரியன்,சரவணக்குமார் ஆகியோரோடு பயணித்து வயதையும் குறைக்கமுடிந்திருக்கிறது.

நான் நன்றி சொல்லத்துவங்கினால் அந்தப்பட்டியல் ஒரு பெரிய பட்டாளமாகி விடும்.எனது பக்கத்துக்கு வரும் எல்லார்க்கும்,நான் படிக்கிற யாவர்க்கும், எனது எழுத்துப்பிழைகளைப் பொறுத்துக்கொண்டு உற்சாகப்படுத்திய அன்பர்க்கும்,தமிழிஷ்,தமிழ்மணம் குழுமங்களுக்கும் என் தோழனுக்கும் அன்புருகும் கண்ணீரால்...........

நன்றி.

 0

சரி , கூட நடங்க,  போவம்.

0

ஆட்டுப்பண்ணையைத் தாண்டியதுமே பனை மரகூட்டமும், புளிய மரங்களும் தெரியும். அதுக்குள்ளேதான் கோவிலிருக்கிறது. ஓடுபாலத்தில் போகிறபோது வேலியும் மணலுமாய் நெளிந்து கிடக்கிற அர்ச்சுனா நதி தெரியும். வெம்பக்கோட்டை வழியாக சங்கர நத்தம் சாத்தூர் தாண்டி வரும் வைப்பாறும் அர்ச்சுனாநதியும் ஆலிங்கணமாகிப்பிரிகிற இடம் ஒரு தீவு மாதிரி இருக்கும். அங்கு தான் 'ஆத்துக்குள்ள அடகிடக்கும் அஞ்சு தல நாகம் அது ஆளக்கண்டா படமெடுக்கும் அம்மனோட சக்தி' என்கிற நாடோ டிப்பாடல் பெற்ற ஸ்தலம், கண்ணித்தெய்வம் இருக்கும் இருக்கங்குடி. வருசம்பூராவும் தண்ணீர் ஓடிச் செழிச்சிருந்தால் ஒரு வேளை இதுவும் திரிவேணி சங்கமம் போல இன்னொரு புண்ணிய ஸ்தலமாகியிருக்கும். கோயில்களுக்குள்லிருந்து தானே ஜாதியும் அரசியலும் ஆரம்பிக்கிறது.  இருக்கிறதா இல்லையா என்கிற விஞ்ஞானப் பிரதேசத்துக்குப் போகாமல், மக்கள் வளமையோடு பார்த்தால் இருக்கங்குடி ஒரு அடித்தட்டு மக்களின் ஆசுவாச பூமி.

அங்கு வருகிற எல்லோரும் ஏழைகள் தானென்று சொல்ல முடியாது. ஆனால் எல்லோருமொருகாலத்தில் ஏழைகளாயிருந்தவர்கள் தான் என்பதையும் வேறு பகட்டான கோயில்களுக்குள் அனுமதிக்கப்படாதவர்களும் தான் என்பது எந்த தொல்பொருள் ஆராய்ச்சிக்குள்ளும் போகாமல் காணக்கிடக்கும். அப்படியான மக்களைத்திரட்டி ஒன்றுகூட வைத்தவள் மாரியென்னும் நாட்டார் குல குறியீடு. அடங்கி அடங்கி காலம் நடத்திய மக்கள்  நாக்குத்துருத்தி, சூலம் ஏந்தி, பம்பை உடுக்கை உறுமிகளின் ஆங்காரச்  சுதியோடு ரண்ணங்கு ணண்டா, ரண்ணங்கு ணண்டா எனக்களம் இறங்கும் புறப்பாடு.

ஆடி வெள்ளி நடவுக்கு மழையாகி, இடைமாதங்களில் உழைப்பாகி உரமாகி, தைக்கடைசியில் அறுவடைக்கு வெயிலாகி ஊர் உராப்பொங்கும் பங்குனிப்பொங்கலாகிய மக்கள் விவசாயத் தோழி கருமாரி. சானியெடுக்கப்போனவளுக்கு சானிக்கூடைதூக்கமுடியாமல்போனதாம், சேதிகேட்டு ஊர்திரண்டு தோண்டியெடுத்த அதிசயம் தான் மாரியென்னும் கதையுண்டு. வாழ்வு வரண்டு போன பஞ்சகாலத்தில் தண்ணீர்குடித்தேனும் உயிர்வாழக் குடியானவர்கள் நாவரண்டு  தேடியலைந்த போது தோண்டக்கிடைத்த வாழ்வூற்று இருக்கங்குடி  எனும் கதைகள் எல்லாம் அந்தக்காலத்து விளம்பர யுக்தி.

புதிதாய் முளைக்கிற எல்லா நாட்டார் தெய்வங்களுக்குப் பின்னாலும் இப்படியொரு காரண கதையிருக்கும். அதில் ஒரு பாம்பு வந்து பேசும், ஒரு காராம் பசு வந்து தானாகப் பால்சுரக்கும், முயல் துரத்த நாயோடும், சுழன்றடிக்கும் சூறாவளிக்குள் பிரசன்னம் கிடைக்கும், ஓயாத அடைமழையை நிறுத்த ஒரு சீட்டுக்கிழியும் இப்படியான அதிசயங்களே கதைகளாகிப் பின்னிக்கிடக்கிற இந்த தேசத்து நாட்டார் தெய்வங்கள். அந்தக்கதைகள் எல்லாவற்றுக்குள்ளும் ஒடுக்கப்பட்ட உழைக்கிற மக்களின் ஏக்கம் மட்டுமே
ஒளிந்திருக்கும். தாளாத சோகத்தைச் சொல்லி அழ ஒரு அரூவ நண்பனாக, சந்தோசத்தைப்பொங்கிப் பகிர்ந்து கொள்ள உறவாகவும் நாட்டார் தெய்வங்கள்.
 
நத்தத்துப்பட்டி விலக்கில் பஸ் நிற்கிறபோது வெத்துக் கடாப்பெட்டிகளோடு பஸ்ஸிலிருந்து இறங்குகிற காய்கறி  விற்கிற  பெண்கள் கண்டக்டரை திட்டிக்கொண்டே இறங்குவார்கள். காது வளத்த நாரணம்மாக்கிழவி
' ஏ தம்பி கடகத்த செத்த எறக்கி விட்றேன்' கடைசி வார்த்தையை இழுத்துச் சொல்லும். அப்போதே பஸ்ஸிலிருந்து பாதிச்சனம் பொட்டி சட்டியைத்தூக்கி ரெடியாகி விடும்.

' ஏ புளியோதரைத் தூக்குச்சட்டியை எடுத்துக்கோ, அன்னா பாரு சூட்கேச மறந்துறாத, சின்னவனக்கையில பிடிச்சிக்கோ, ஏ இன்னாபாரு மூதி கோழ வடிச்சிக்கிட்டு தூங்குறா, ஏ  எந்திரி  கோயிலு வந்திருச்சில்லா''.

அந்த அரவிந்த் வண்டியிலிருந்து தூத்துக்குடிப்பாஷை அல்லோல கல்லோலப்படும்.
புளியமரக் கூட்டத்தை தாண்டியதும் டைவர் ரெம்ப ஸ்பீடா ஓட்டுவாரு, புளுதியைக்கிளப்பிக் கொண்டு வருகிற
பஸ்ஸை எதிர்கொண்டு காளையை அணைகிற வீரர்களைப்போல பஸ்ஸை விரட்டிக்கொண்டு ஐந்தாறு பெண்கள் ஓடுவார்கள்.  புதுசாப்பாக்கிற யாருக்கும் திக்கென்று அடித்துக்கொள்ளும். படிகளில் ஏறிக்கொண்டு அந்த
சாக்குப்பைக்காரண்ணன் எனக்கு, தாடிக்காரண்ணன் எனக்கு என்று கத்துவார்கள். அப்போது கூடவரும் மனைவி மார்களுக்கு லாஞ்சனையாக இருக்கும். கண்டக்டர் சஞ்சீவி படியிலிருந்து அவர்களை விரட்டுவார், பயணிகளைஇறங்கவிடாமல் மறிக்கிற பெண்களை திட்டுவார்.

'இந்தா, சஞ்சீவண்ணே ஓவரப்பேசாதீரும் ' என்று கண்டக்டர் மேல் பாய்வார்கள்.

அதற்குள் மீதிப்பேர் பயணிகளை வளைத்துக்கொண்டு போக அவர்களோடு மல்லுக்குப்போவார்கள்.

' சாக்குப்பைக்காரண்ணன எனக்கின்னு சொன்னமில்ல, நீ சிமிட்டிக்கிட்டு  இழுத்துக்கிட்டுப் போறே'

'அண்ணாச்சி நம்ம கடைக்கு வாங்க செருப்பு சாமானல்லாம் கடையிலே வச்சிக்கிடலாம், தேங்கா பழம், மாலையெல்லாம் நம்ம கடயிலே சல்லுசா வாங்கிக்கிடலாம்'

சொல்லி படக்குனு கையிலிருக்கிற பையைப்புடிங்கிக்கொண்டு விடு விடு வென நடப்பார்கள். பின்னால் மருங்கி, மருங்கி நடக்கிற வீட்டுக்காரியையும், தோளில் உட்கார்ந்து பலூன் கேட்கிற மகனையும் சரிக்கட்டிக்கொண்டு. துணிமணிப்பையை பறித்துக்கொண்டு முன்னாள் நடக்கிற பெண்ணையும் தொயந்து நடக்கணும். அப்போது ஏண்டா நேத்திக்கடன் போட்டொமென்றாகிப்போகும்.

'' எலா வெரசா நடந்தா ஙொப்ப வீட்டுச்சொத்தா போயிரும், அன்ன நடயில்லா நடக்கா ''
'' நா எதுக்கு அவ பின்னதா போறியள்ள ''

ஒரு பெரிய சண்டைக்கான ஆரம்ப வார்ததைகளை அள்ளி வீசுவாள், வந்த இடத்தில் சண்டை வேண்டாமென்று அடக்கிக்கொண்டு தோளில் உட்கார்ந்திருக்கிற பையனை இறக்கிவிட்டு பையைக்காப்பாத்த பின்னால் ஓடுகிற பக்தர்களும். அவர்களை ஒப்படைத்துவிட்டு தேங்காக்கடைக்காரர்களிடம் ஒரு கூடைக்கு ஒரு ரூபாய் வீதம் கமிசன் வாங்கிக்கொண்டு அடுத்த பஸ்ஸைப்பிடிக்கவும், ' சாக்குப்பைக்காரண்ணன் எனக்கு ' என்று சொல்லி அதிலிருந்து இறங்குகிற ஆள்பிடிக்க, திரும்பவும் பஸ் ஸ்டப்புக்கு ஓடுகிற பெண்களுமான எல்லாரும் சராசரிக்கும் கீழுள்ள மனிதர்களின் இஷ்டதெய்வம் இருக்கங்குடி மாரி.

பஸ்ஸில் வருபவர்கள் ரெண்டு பர்லாங் நடந்துதான் கோவிலுக்குப்போக வேண்டும். கார் வேனில் வருகிறவர்கள் மட்டும் நேராக ஆத்தா மடியில் இறங்கிகொள்வார்கள். அது மட்டுமில்லை அவர்களுக்காக கட்டண தரிசனம், தனி வரிசை, தங்கும் விடுதி எல்லாம் மற்ற கோவில்களைப்போலவே ஏற்பாடாகியிருக்கிறது. அதெல்லாமே இப்போ கொஞ்ச காலமாத்தான். மின்னயெல்லாம் அப்படிக்கிடையாது கூடார வண்டியில் பொம்பளைகளையும் சாமஞ்சட்டுகளையும் ஏத்திக்கிட்டு நேந்துவுட்ட கிடாயும் ஆம்பிளைகளும் வண்டிக்குபின்னால் நடப்பார்கள்.சாமத்துக்கு வண்டிகட்டினாக்க பத்து மைல் தொலைவிருக்கிற சுத்துப்பட்டுச்சனங்க பலப்பலவென விடிகிற போது கோவிலில் இருப்பார்கள். ஏதாவதொரு புளியமரத்து நிழலில் வண்டிய அவுத்துக்கட்டி குழிச்சு முடிச்சு கோவிலுக்குப்போயிட்டுவந்து கிடாவெட்டுவார்கள். பலூன்களும், ராஜன் ஐஸ் கம்பெனிச்சைக்கிள்களும், பணியாரக்காரப்பொம்பளைகளும், கொல்லபட்டி, சங்கராபுரம் பனையோலை விசிறிகளும். ஏழயிரம்பண்ணை காசி நாடர் கருப்பட்டி முட்டாய் சேவுக்கடையுமாக சிறுசுகள் அலையும்.

இருக்கங்குடி முழுக்க பனையோலைச்சத்தமும், பதினி வாசமும் நிறைந்திருக்கும். அப்பல்லாம் ஊருகள்ள எல்லாரும் குடிக்கமாட்டாங்க ஒண்ணு ரெண்டுபேர் குடிக்கிறவங்க இருப்பாங்க. அதுக்குன்னு ஆத்துக்குள்ள பட்டச்சாராயம், பழரசம், கிடைக்கும் ஆத்தத்தாண்டிப்போனா கள்ளுமுட்டி கிடைக்கும் அதெல்லாம் நாப்பதைத்தாண்டிய அரக்கிழடுகளுக்கான கிறக்கம். எளவட்டங்களும் கொமரிகளும் ஆத்துக்குள்ள போய் ஊத்துத்தோண்டி தண்னியெடுத்து வரப்போவார்கள். அப்போது வெயிலும் சுடுமணலும் அவர்களுக்கு இதமாக இருக்கும் அது எல்லாத்தையும் விடக்கிறக்கமானது. பசியெடுக்கிற சரியான நேரத்துக்கு கிடாக்கறியோடு பந்தி நடக்கும். செத்த துண்ட விரிச்சு கண்ணசரவும், வெயில்தாள ஓடிப்பிடிச்சு விளையாடவுமாக பொழுது ரம்மியமாகச் சாயும். மிச்சத்தொடையை மஞ்சத் தடவித் தொங்கவிட்டபடி கூடார வண்டிகிளம்ப சில மொட்டைத் தலைகளோடு ஊர்போய்ச் சேர்வார்கள்.

இப்பல்லாம் பஸ்ஸிலிருந்து இறங்கும்போதே ஒரு காலு படியிலும், ஒருகாலு பிரியா ஒயின்ஸ் வாசல்லயும் இருக்கும். வேன் லாரி பிடிச்சு வர்ற கூட்டம் சாத்தூரிலே நிப்பாட்டி ஏத்திக்கிட்டு அறப்போதையில் கோவிலுக்க் வருவார்கள். வண்டியவுட்டு இறங்கியதும் ஒருகூட்டம் பிரிஞ்சு எதுத்து நடக்கும். ஆக்கி வச்ச ஆட்டுகரியத் திங்கக்குடுத்து வைக்காம வாயப்பிளாந்துக்கிட்டு ரோட்டுல கிடப்பவர்கள். ஊறுகாயில உப்புக் கூடிருச்சின்னு சண்டையிழுத்து அடி ஒதைபட்டு, இருக்கங்குடி போலீஸ் ஸ்டேசனுக்குப்போய் ரைட்டருக்கு அரிச்சுப்பெறக்கி ஐநூறத்தெண்டங்கெட்டி தலையக்கவுட்டுக்குள்ள போட்டுக்கிட்டு ஊர் திரும்புகிறவர்கள். இப்படி உழைக்கிற சனங்களின் சந்தோசத்தை பச்சைக்கலர் போர்டு மாட்டிய டாஸ்மாக்கும், மீதியை கருப்புக்கலர் டீவிப்பெட்டிகளும் பறித்துக்கொண்டன. 

பெருமாள் கோவிலில் அடிக்கிற மாதிரி நகராவும், மணிச்சத்தமும் க்ளாங் க்ளாங் என்று அடிக்க இடையிடையே குழவெச்சத்தமும் வந்துகொண்டிருந்தது. எலக்ற்றானிக் முறையில் வடிவமைக்கப்பட்ட அந்த மேலச்சத்தம் கருவரைக்குப்பக்கத்தில் இருந்து வருகிறது. மேளமடிக்கிற கருப்பசாமியும் அவர் மனைவி மூக்கமமாளும் கருவரைக்குப்பின்னாளிருக்கிற தூனுக்குப்பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு வெத்திலை போட்டுக்கொண்டிருந்தார்கள்.

'மாணிக்சந்த் வாங்கலையா ' கருப்பசாமி கேட்டார்.
' ஒனக்கு வந்த துட்டுல கோட்ரடிச்சிட்டு வருவெ, நாங்க மட்டும் ஒங்களுக்கு வக்கனையா பான் பராக் வாங்கி வக்கனுமாக்கும் ' கொமட்டுல இடிச்சு பொய்க் கோபங்காட்டினாள்.

'கோட்டரடிச்சிட்டு உள்ள ஒக்காந்து பான் பராக் போட்டா கோயிலு வெளங்கும்' இப்படிச்சொல்லிக்கொண்டு தக்காரின் உறவுக்காரன் திட்டிவிட்டுப்போனான்.

'சரி சாமி' என்று பம்மிக்கொண்டு பதில் சொல்லிவிட்டு ஆள் கடந்ததும்.
'ஆமா மூட்ட மூட்டயா அடிச்சி சொத்துச் சேத்தா மட்டும் வெளங்கிருமாக்கும்'

என்றபடிமூக்கம்மாள் குப்பைகளை ஒதுக்கினார்.

9.7.10

பிசிராந்தையையும் ஆண்டாளையும் விட.

கடல் மணலில் தொலைந்த
குண்டூசி  போல
காணாமல் போயிருந்தாள்
வனப்பேச்சி.

குறுக்கும் நெடுக்கும்
அலையும் அன்றாடங்களில்
அமிழ்ந்து போனது அவளின்
உருவமும் நினைவுகளும்.

பொங்கலும், கலவரமுமாக
நல்ல சினிமாவும்,
செல்லமுத்து பொறணியுமாக
பொழுதுகள் கறைந்தது.


இரு சக்கர வாகன விபத்து
ஒருமாதம் வீட்டோ டு கட்டிபோட்டது
எழுந்து நடந்தபோது இன்னும்
கொஞ்சம் மாறிப்போயிருந்தது.

ஒரு முன்மாலையில்
மரங்களில் கூவும் பட்சிகளோடு
சளச்சளச்சத்தம் கேட்டது
வந்தாள் வனப்பேச்சி.

வேலியும் கஞ்சாவும் கூட
வளரும் பூமியில
மனுசரு பொழைக்கவா
எடமில்ல எங்கேயோ கெடக்கேன்.

கீழ உழுந்திட்டிகாளாமில்ல
எனக்கேட்டுவிட்டு
சூதானமா இருங்க
சொல்லிவிட்டுப்போனாள்.

கடல் மணலோ ஆழ்கடலோ
நினைவுகள் அழிவதில்லை.

8.7.10

மரவட்டப் பூச்சியோடு ஒரு பேருந்துப் பயணம்.

பேருந்திலிருந்து பிதுங்கி படிகளில் தொங்கிக்கொண்டு பயணம் தொடர்ந்தது.புத்தகப் பைகளைத் தோளில் மாட்டமுடியாமலும்,கீழேவைக்கமுடியாமலும் அவஸ்தைப்பட்டார்கள் அரசுப்பள்ளிச் சிறுவர்கள்.இரண்டாவது நிறுத்தத்தில்
ஏறிய அந்த இருவரும் குழந்தைகளை இடித்துத் தள்ளிவிட்டு மத்திப்பகுதியில் வந்து நின்றுகொண்டார்கள்.வாசனைத் தைல நெடி பேருந்து முழுக்க கவ்வியது.தோளில் சாப்பாட்டுப்பை தொங்கியது,கழுத்தில் தொங்கிய தங்கச்சங்கிலிக்கு வழிவிட்டு மேல்சட்டையின் இரண்டுபொத்தான்களை கழற்றி விட்டிருந்தான்.தனியார் கம்பெனியிலோ அல்லது அரசு அலுவலகத்திலோ வேலைபார்க்கவேண்டும். சனி ஞாயிறு குற்றாலம் போய்வந்த கதையைப் பேசிக்கொண்டிருந்தார்கள்.மாப்ள சுமோவுக்கு கொடுத்த வாடகைக்கு ரூம் போட்டு இன்னும் ரெண்டு நாள் ஜாலியா இருந்திருக்கலாம் என்று கூடவந்தவன் சொன்னான். வண்டி என்னாச்சு என்று கேட்டான்.

ஹோண்டா சரியில்ல, குடுத்துட்டு பல்சர் வாங்கிருக்கன், நம்பர் வாங்க ஆர்ட்டிஓ ஆபீஸ் போயிருக்கு
சாத்தூருக்கா
இல்ல மாப்ள பெருசு அரவிந்துல இருக்குல்ல
எப்ப சேத்தீங்க
பத்து நாளாச்சு
ஒரு நாள்ள அனுப்பிருவாய்ங்களே
இது வேற கத, ஆப்பரேசனுக்கு இருபதாகும்னு சொன்னாய்ங்கெ எந்தம்பிங்க எவனு சரிப்பட்டு வரல
மொத்தத்தையு நம்ம தலைல மொளகரைக்க பாத்தா உடுவனா,இந்தா வாரன்னு எஸ்கேப்பாகி வந்துட்டன்
மூனு நாக்கழிச்சி வீட்லவந்து பஞ்சாயத்து,ஆளுக்கு அஞ்சி குடுத்தாய்ங்க நாளைக்கி ஆப்பரேசன் அதா போறன்.

அவர்களிருவரின் சத்தம் பேருந்து இரைச்சலைத்தாண்டி,நடத்துனரின் சத்தத்தைத்தாண்டி,அந்த பேருந்தில் பயணம் செய்த அறுபது எழுபது பேரின் மேல் கவிழ்ந்து கொண்டிருந்தது. கண்மாய்ச்சூரங்குடி பேருந்து நிறுத்தத்தில் அவர்கள் மூன்றுபேரும் ஏறினார்கள்.டர்க்கித்துண்டு போர்த்திய ஒரு காய்ச்சல்கார சிறுவன், தாய், அப்போதுதான் தோளில் போட்டிருந்த சட்டைய மாட்டியபடி தகப்பன்.படியில் தொங்கும் கூட்டத்தை விலக்கி காய்ச்சல்கார சிறுவனுக்கு ஏறமுடியவில்லை.அதற்குள் நடத்துனர் விசிலடித்துவிட்டார்.அய்யோ ஏம்பிள்ள கீழ நிக்கி என்று தாய் பதறவும் தகப்பன் நடத்துனரோடு மல்லுக்குப்போனான்.பத்தடி போய் வண்டி நின்று ஏற்றிக்கொண்ட பின்னும் தாயும் தகப்பனும் நடத்துனரை விடுவதாக இல்லை. மற்ற பயணிகள்சமாதானம் செய்தபிறகு பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்தவர்களிடம்  'எய்யா சாமி கொஞ்சம் எந்திரிங்க காச்சக்காரப்பய செத்த ஒக்காரட்டும் நெருப்பாக் கொதிக்கு' என்று கெஞ்சி அவனை உட்காரவைத்தார்கள்.பேருந்து முழுக்க விக்ஸின் வாசமும் பிள்ளைப்பாசமும் வியாபித்திருந்தது.தங்கச்சங்கிலி ஆசாமி கூட்டத்துக்குள் நகர்ந்து நகர்ந்து போய் காலியாய் இருந்த ஒரு இருக்கையில் உட்கார்ந்தான்,மரவட்டப்பூச்சி நகர்ந்ததுபோல்.

7.7.10

தேங்கிக்கிடந்த மந்தத்தை உடைப்பெடுத்த முழு அடைப்பு.

இந்த முழு அடைப்பைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும்.

முன்னமெல்லாம்,ஆளுங்கட்சி,எதிர்க் கட்சி, அடிக்கடி கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இந்த நிகழ்வில் பெரிதாய் ஏதும் தாக்கமிருக்காது.ஒன்றிரண்டு மாநிலங்கள் வெறிசோடிக்கிடக்க தமிழகம் அதுபாட்டுக்கு எனக்கென்னேன்னு இயல்பாக இருக்கும். ஆனால் இந்த முறை ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தபிறகும்,ஓசித்தொலைக் காட்சிப் பெட்டிவாங்கிக்கொண்டபிறகும்,அதில் செம்மொழி மாநாடுகளைப்பார்த்த பிறகும்,அரசு கடுமையாக எச்சரித்த பிறகும் மக்கள் மௌனமாக ஒரு எதிர்ப்பைப் பதிவாக்கி இருக்கிறார்கள்.தமிழகத்திலுள்ள அத்துணை நகரங்களிலும் தேர்வு நிலைப் பேரூராட்சிகளும் கூட கடைதிறக்காமல் சாத்திக்கிடந்தது கவனம் பெறக்கூடிய நிகழ்வு.வீட்டுக்குள்ளே ஈரத்துணியைச் சுத்திக்கிட்டு சுருண்டுகிடந்தால் தமிழர்களுக்கு எந்தச்செலவும் இல்லை.எழுந்து வெளியே வாசலுக்கு வந்தால்தான் எல்லா வினைகளும் வந்துசேரும்.அங்கே காற்றுக்கூட கல்லாப்பெட்டி வைத்துக்கொண்டு காத்திருக்கிறது துட்டுப்புடுங்க.

தொலைக்காட்சியை வெறும் ஊடகமாக கற்பிதம் செய்துகொள்வதைப்போலொரு முட்டாள்தனம் ஏதும் இல்லை.
அது கட்சிகளின் (காட்சிகளின் அல்ல) வழியே வில்லாததை எல்லாம் விற்றுத் தீர்க்கிற வியாபாரிகளின் ஊது குழலாகிப்போனது யருக்கும் தெரியாமல்.அரிசியில் கல்பொருக்குவதை விட்டுவிட்டு மணலுக்குள் அரிசிபொறுக்குகிறது தமிழகம்.விளம்பரம் நீக்கி செய்தி,விளம்பரம் நீக்கி,சினிமா,விளம்பரம் நீக்கி விமர்சனம் தேடுவது மணலுள் அரிசி பொறுக்குகிற விளையாட்டாகிவிடும்.

ஆமாம் நண்பர்களே..

நாளெல்லாம் தொலைக்காட்சி பார்க்கிற சனங்களின் மண்டைக்குள் ஏற்றப்படுவது விளம்பரப் படங்களும்,பொருட்களின் ஆடம்பரமும் தான் என்பதை கூர்ந்து கவனித்தே ஆகவேண்டும்.அங்கிருந்து தப்பித்து வெளியேறும் கனவான்கள் பளபளக்கிற பல்பொருள் அங்காடிகளுக்குள்ளும்,சாமான்யர்கள் பச்சைக்கலர் டாஸ்மாக்குக்குள்ளும் தொலைந்து போவதுதான் இயல்பாகிப்போனது.

இப்படித்தொலைந்து போவது தெரிகிறபோதும்,மயங்கிக்கிடப்பது தெளிகிறபோதும்தான் துவரம்பருப்பு ஒருகிலோ 75 ரூபாய் என்பது சுள்ளென்று உறைக்கும்.தேசம் முழுக்க உறைத்ததால் தான் இந்த முழுஅடைப்பு கொஞ்சம் கலக்கத்தைக் கொடுத்திருக்கிறது.அதனால்தான் மாண்புமிகு முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் முழு அடைப்பைப்பற்றி சொந்தத் தொலைக்காட்சியில்  அடிக்கடி விளக்கம் அளிக்கிறார்.ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தது மிகப்பெரும் சாதனை என்பதை ஒத்துக்கொள்கிற அதே நேரத்தில்,அரிசி வெளியில் 45 ரூபாய்க்குமேல் விற்கப்படுவது வேதனை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.இதைப் பரவலாகப் பேசுகிற ஊடகம் இல்லை,இதைப்பரவலாகப் பேசுகிற அரசியல் இல்லை.காரணம் ஜாதிகளின் எண்ணிக்கையோடு போட்டிபோடுகிறது கட்சிகளின் எண்ணிக்கை.எல்லாச் சாதிக்காரர்களுக்கும் எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் வயிறு ஒரே மாதிரித்தான் இருக்கிறதென்பதைகேட்கிற பொதுக் காதுகள் குறைந்துபோயிருக்கிறது.

இந்த முழு அடைப்பை வாக்குச் சீட்டாக மாற்றுகிற உத்திகளோடுதான் கட்சிகள் களம் இறங்கும். மருத்துவம் முடிந்தபிறகும் தீராத தலைவலி அது.தலையணைகள் மாற்றப்படுவதால் தலைவலி தீராது என்பதை சோல்லிக்கொடுக்கிற பாடம் இந்தியாவில் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.கட்சிபேதமில்லாமல் மக்கள் கவனம் விலைவாசியின் பக்கம் திரும்பியிருக்கிறது.இது ஒரு சரியான திருப்புமுனை.

6.7.10

காடழிதலுக்கு எதிரான பொறி .ந.பேரியசாமியின் கவிதை.

தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு சிறு பத்திரிக்கையாக நெடுங்காலம் எதிர் நீச்சலடிக்கும்  செம்மலர் மாத இதழ்.

மேலண்மை பொன்னுசாமி, தமிழ்செல்வன், கந்தர்வன்,உதயசங்கர், ஷாஜகான், ஆதவன்,மாதவராஜ் போன்ற இலக்கிய ஆளுமைகளுக்கு களமும் தடமும் அமைத்துக்கொடுத்தது. சாமான்யக் குரல்களுக்கு ஒலிபெருக்கித்
தந்ததும் ஒளிவட்டமில்லாத நீங்களும் எழுதலாம் என்கிற உத்வேகம் கொடுக்கிற கிரியா ஊக்கியுமானது செம்மலர். அப்படி எழுத்தை எளிமைப்படுத்திய  சமகாலப்  பெரும் ஊக்கி இந்த வலைக்கு முன்னாள் விரல் பிடித்து நடத்திச்சென்ற செம்மலர் இதழில். தோழர் ந.பெரியசாமியின் கவிதை.கண்ணெதிரே நெருங்கி வரும் பேரிடர் இந்த
விவசாயம்  அழிதல்.  கட்டுரையாய்,கோஷமாய்,போராட்டமாய் பெரு தாக்கத்தை ஏற்படுத்த ஒரு சிறு கவிதையாய் ஒரு பாடலாய் மக்களுக்கு அறிமுகமாகிப்பதியச்செய்யும் பெருங்கைங்கர்யம் இந்த கவிதை.  


விரவும் கங்குகள்.

தட்டு நிறய்ய நாணயங்கள்
தொட்டுக்கொள்ள கிண்ணத்துள்
கலவையாகச் சில்லறைகள்
கூடவே ரூபாய்த் தாள்களின்
கரைசலைக் குடித்தாலும்
கால்வயிறு கொள்ளாது...

விலைச்சலைத் தரும் நிலம்
வெப்பமாகிக் கொண்டிருக்க
நினைவில் கொள்வோம்
எங்கள் தெருவில் மழைகொட்டியது
உங்கள் தெருவில் பெய்ததாவென
வினவும் காலம்
வெகு நெருக்கத்திலிருப்பதை.

ந.பெரியசாமி.

4.7.10

காட்சிப்பிழை

அவர் எங்கள் சங்கத்துக்கு ஜென்ம வைரி. எங்கள் சங்கமும் அவருக்கு நம்பியார். தெருவில் எதிரெதிர் பார்த்துக்கொண்டாலும் முகமன் சொல்லாத ஒரு உர்ர் மனதுக்குள் உருமும் வழக்கம் பல வருடங்கள் நீடித்திருந்தது.
ஆடுகளத்தில் பாடுபொருள் மாறிக்கொண்டே வந்தது.சின்னவயது விளையாட்டைப் போல  பம்பரம், கோலி, கிட்டிப்புல், சாமியாடி, கள்ளம் போலீஸ்,சினிமா எனப் பருவங்களின் மாற்றத்தில் ஒன்றையொன்று மறக்கச்செய்தது. பிரச்சினைக்கான காரணங்கள் பழசாய்ப் போனது. அதுபோலத்தான் அவரும் நானும் ஒரு வார காலம் ஒரே கிளையில் பணிபுரியும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.மூன்றாம் நாள் எனக்காக பேருந்தில் இடம் போட்டுக்காத்திருந்தார்.  அன்றே  மதியம் சாப்பிடும் போது அவர் கொண்டு வந்த புளிக்காய்ச்சலையும்,அவியலையும் ஊட்டிவிடாத  குறையாக தட்டில் வைத்து நெகிழவைத்தார்.

நிகழ் அரசியல்,சினிமா,விலைவாசி,பணிச்சுமை கூடுதல் குறித்து போகும்போதும் வரும்போதும் பேசிக்கொண்டே
நெருங்கிப்போனோம்.ஆறாம் நாள் 'சில பழய்ய நினைவுகள் தித்திக்கிறது சில கசக்கிறது இல்லையா தம்பி என்று சொல்லி என் கண்ணுக்குள் பார்த்தார்.அன்று மாலை நானும் அவரும் மட்டும் தனித்திருந்தோம்.வழக்கமாக வரவேண்டிய பேருந்து பழுதானதால் ஒரு மணிநேரம் அலுவலகத்திலேயே காத்திருக்க நேந்தது.எதிர்த்தகடையில் ரெண்டு காபி கொண்டுவரச் சொல்லிவிட்டு வந்தார்.அந்த நேரம் தனித்திருந்த நான் சுவர்ணலதா பாடிய 'மாலையில் யாரோ மனதோடு பேச' என்கிற பாடலைப் பாடிக்கொண்டிருந்தேன் வந்தவர் அரவமில்லாமல் வாசலிலேயே காத்திருந்து கேட்டுவிட்டு முடிந்ததும் ஓடிவந்து கையப்பிடித்துக் கொண்டார்

'இவ்ளோ அழகாப்படுவியா தம்பி அதும் இந்தப்பாட்டு எனக்கும் அப்பிடிப்பிடிக்கும்'

என்று சொல்லிவிட்டு.பிடித்த பாடல் வரிகள் பிடித்த பாடகர்கள்,பிடித்த இசை அமைப்பாளர்கள் சொல்லிக்கொண்டே இருந்தார். நானும் சுமாராகப்பாடுவேன் எனச்சொல்லிவிட்டு அதேபாட்டை மனதொன்றிப்பாடினார்.என் எதிரிக்கும் ரசனையிருக்கும் என்கிற புரிதல் வர முப்பதாண்டுகள் கடந்துபோயிருந்தது.

நானாகவே வரைந்திருந்த அவரின் கரடுமுரடான ஜென்ம வைரியின் சித்திரம் மறைந்து போய் மிகமெல்லிய தென்றலாக நெருங்கிவந்தார்.எனக்கு பிடிக்காமல் இருந்த காபியின் மணம் இப்போது ஈர்க்கிற மணமும் கூடுதல் சுவையும் தந்தது.

1.7.10

பாட்டுக்காரி தங்கலச்சுமி.

பாட்டெனக்கு கிறுக்கு.ஒற்றைக்கை நெரிசலில் பேருந்தில் நிற்கையில்கூட பேருந்துக் கூரையில் தாளம் போடவைக்கும் இந்தச் சினிமாப் பாட்டுக்கள்.அடுத்து நிற்கும் விடலைப்பெண் முறைத்த பிறகும் கால்கள் தரைதட்டி சுதி சேர்க்கும்.தானியங்கி எந்திரத்தோடு போட்டி போட்டு பணம் எண்ணும் காசாளன் எனக்கு எதிர்க்கடையில் இசைக்கும் இளையராஜாவின் புல்லாங்குழல் கேடு விளைவிக்கும். எண்ணுதல் இடற முன்னப்பின்னக்கூடும் பணத்தாள்கள்.அன்று கூட என்னோடு மல்லுக்கு நின்றவனின் அலைபேசியில் ஒலித்த சிறுபொன்மணி அசையும் பாடலில் கறைந்து கோபம் குறைந்து போனது. கேதவீட்டின் முன்பந்தலில் இணையும் பம்பை மேலத்தின் வேகமும் முகாரிப்பாடலின் சோகமும் என்னை அனுதாபம் மறக்கச்செய்யும்.

அந்த மனநலக்கப்பகத்தில் கூட ஒருவர் தோளில் ஒருவர் சாய்ந்து சோகம் குறைத்துக் கொண்டிருந்தார்கள்.ராப்பகலாக் கண் முழிச்சி படிச்ச மாணவன் மதிப்பெண் குறைந்ததால் பிறழ்ந்து போனான் எஞ்சினியர் கனவிலிருந்து.
எந்த நேரமும் பேனாவும் கையுமாக உட்கார்ந்து கிறுக்கிக்கொண்டிருக்கும்ப அவனது பெற்றோரின் கண்களின்னாழத்தில் கிடக்கிறது இறை நம்பிக்கையும் மருத்துவ நம்பிக்கையும் குழைந்து.தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட அரசாங்க ஊழியன் சோறுதண்ணி ஏதும் கேட்கவில்லை அவனுக்கு ஒரு நாற்காலி இருந்தால் மட்டும் போதும் அதை கழிப்பறைபோகும்போது கூட கூடக்கொண்டுபோவான்.பிள்ளையில்லாதவள்,கணவனால் கைவிடப்பட்டவள் என்று பெண்கள் தான் பெரும்பகுதி இருந்தார்கள்.ஒவ்வொருவருடைய பெற்றோரும் பாதுகாவலரும் அடுத்தவர் சோகத்தின் கணத்தை எடைபோட்டு தங்களை இலகுவாக்கிக்கொண்டார்கள்.

அப்படித்தான் வந்தாள் தங்கலட்சுமி 'மதியச்சாப்பாடு வாங்கணும்லா என் ஏனத்தக் காங்கல  ஒங்க ஏனத்த செத்த கடங்குடுங்க சாத்தூர் பாட்டி'.வல்லநாட்டுப் பக்கத்துல ஏதோ சின்னக் கிராமம். தங்கலச்சுமி வந்ததும் எல்லோரும் குஷியாகிவிட்டார்கள்.ஒவ்வொருத்தரும் ஏட்டி இங்க வா,ஏட்டி சாந்திப்பாக்கு ரெண்டு இனுக்கு தாயேன்,இன்னைக்கு பூரா ரஜினி பாட்டுத்தான்,ஏட்டி கோழி பிடிச்ச கதபோடேன் ஆளாளுக்கு அவளை தங்கள்கிருக்கைக்கு அழைத்தார்கள்.'என்னப்பாத்தா ஒங்களுக்கு கிறுக்கச்சியாத் தெரியுதாக்கும் காங்கவுட மாட்டிக்கியவ' என்று சொல்லிவிட்டு வெடுக்கெனத் திரும்பிப்போனாள்.

வந்துருவா பாருங்க என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே பிரசன்னமானாள். 'சார் எனக்கு அஞ்சு சாந்திப்பாக்கு தருவியளா நாம் பாடுதன்' என்று கேட்டாள்.'சரி சொல்லுங்க சரி சொல்லுங்க' என பக்கத்திலிருந்தவர்கள் என்னை அந்த குழாமுக்குள் இழுத்துவிட்டார்கள்.அத்தனையும் காதல் தோல்விப் பாடல்கள், காதலின் தீபமொன்று ஏற்றினாளே,உச்சி வகிடெடுத்து பிச்சிப்பூ வச்சகிளி.நோயாளி பார்வையாளர்கள்,தாதிப்பெண்கள் எல்லோரும் கேட்டுக்கிறங்கிக் கொண்டிருந்தார்கள்.கடைசியாய் 'ஒத்தையடிப்பாதையில ஊருசனம் போகயில' என்கிற பாட்டைப் படிக்கும்போது பொல பொலவென அவள் கண்ணிலிருந்து உப்புச்சரம் உதிர்ந்தது.'எனக்கு சாந்திப்பாக்கும் வேண்டாம் ஒரு நோனியும் வேண்டா' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து விடுவிடுவென நடந்து மறைந்தாள்.

உருகி உருகிக் காதலித்தவன் இன்னொருத்தியைக் கல்யாணம் பண்ணிக்கொண்டானாம்.இவள் காட்டுவேலை சித்தாள் வேலை பார்க்கும் பொழப்புக்காரி.அவன் அவளைவிடவும் கொஞ்சம் ஒசத்தியாம்.இப்படி மேலோட்டமான காரணக்கதைகளையும், சொல்லாத காரணங்களையும் வயிறு சொல்லுகிறது.அவள் கூட வளரும் இன்னொரு உயிரும்.