28.5.11

இரண்டு உலகம்


அந்த விடுதியின் ஜன்னல் வழியே பார்த்தால் அரசு மதுபானக்கடையின் பார் தெரியும்.ஓயாத சளச்சளப்பேச்சு சிலநேரம் பாட்டு சிலநேரம் சிரிப்பு அல்லது உரத்த குரலில் கெட்ட வார்த்தைகள் கேட்டுக்கொண்டே இருக்கும். ஒவ்வொரு சத்தம் முடியும் போதும் நாலைந்து சீசாக்கள் ஏற்கனவே குவித்துப் போட்ட காலி சீசாக்களோடு கலகலவெனச் சேர்ந்துகொள்ளும் சத்தம் கேட்கும்.

எட்டிப்பார்த்தால் மலைப்பாய் இருக்கும் அளவுக்கு மலைபோல் குவிந்து கிடக்கும்.காலிப்பாட்டில் மட்டும் விற்றால் ஒருநாளைக்கு ஆயிரக்கணக்கில் வருமாணம் வருமாம்.இரவு தூங்கிய பிறகும் பாட்டில்கள் குவிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

மறுநாள் காலையில் கீழ்பகுயில் புத்தம் புது காய்கறிகள் குவித்து பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள்.கொஞ்சம் தள்ளி நாலைந்து கிராமத்துப்பெண்கள் சின்னச்சின்ன கட்டுகளாக பச்சைப்புல்லைக் கட்டி
வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். ஒரு கட்டு இரண்டு  ரூபாய் அல்லது ஐந்தே வைத்துக்கொண்டாலும்  அந்த நாள் முழுக்க அவர்களுக்கு என்ன கிடைத்து விடப்போகிறது. பொறுக்க முடியாமல் கேட்டபோது நாப்பது ரூவா கெடைச்சாலே கடவுள் புண்ணியம் என்று சொன்னார்கள். ஒரே ஒரு கட்டிடத்தின் கீழே தான் இந்த ரெண்டும்.

26.5.11

தனக்கு தனக்கு என்றால்


நம்பமுடியாதவற்றைக் கனவுகளிலும்,அற்புதங்களைக் கதைகளின் மூலமாகவும்,நடக்கமுடியாதவற்றைக்கடவுளர்களின் மூலமாகவும் நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது உலகம்.பைபிளில் அப்படித்தான் கடல் கொந்தளிக்கும் மோயிசன் என்கிற மோசஸ் தனது கூட்டத்தாரோடு முழ்கிப்போவோமோ என்று தத்தளிப்பான்.கடவுளை நோக்கிக்கூப்பிடுவான்.உடனே இயேசுகிறிஸ்து பிரசன்னமாகி கையை நீட்டுவார்.கடல் அமைதியாகிப்போகும்.அப்புறம் அவர் கடல் மேல் நடந்து வருவார். இப்படித்தான் பைபிள் கூறும்.

அது அப்படிக்கூறியதாலே உலகம் தட்டையாக இருக்கிறதென்று  உலகம் நம்பிக்கொடிருந்தது. அது நம்பிக்கை.அப்படியில்லை அது உருண்டை என்று சொன்ன கலிலியோ கடவுள் மறுப்பாளனாகவும்,தெய்வ நிந்தனை செய்தவனாகவும் குற்றம் சுமத்தப்பட்டான் அது விஞ்ஞான வரலாறு.கொந்தளிக்கிற கடலை நிறுத்தவும் முடியாது.கடல்மேல் ச்சும்மா நடடைபயணம் போகிறமாதிரி மனிதரால் நடக்கவும் முடியாது. அது நிஜம். ஏன் முடியாது என்கிற சிந்தனைகள் கண்டுபிடிப்புகளாக மாறும்.அப்படிக்கடல் மேலே நடக்கிற மிதப்பை உண்டுபண்ணுகிற கடல்பாலங்கள் எது எது என்று பட்டியலிட முடியவில்லை.

ஆனால் மன்னார் வளைகுடாவில் உள்ள பாம்பன் பாலம் நமக்குக் கைக்கெட்டுகிற தூரத்தில் இருக்கிறது. இரண்டுகிலோமீட்டர் தூரத்துக்கு ரயில் பாலம் பிரிட்டிஷ் அரசு கட்டியது.அதே இரண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு விடுதலை பெற்ற இந்திய அரசும் சிமெண்டுப்பாலம் கட்டிவைத்திருக்கிறது. அருகருகே இரண்டு அற்புதங்கள். மனிதன் செய்த இந்த அற்புதங்களின் உதவியோடுதான் அந்தக்கடவுளைத்தரிசிக்க சனம் கூட்டம் கூட்டமாக அலைமோதுகிறது. போகிற வழியில் வண்டியை நிறுத்தி அந்தப்பாலத்தில் கால்தடம் பதித்துவிட்டுத்தான் ராமர் பாதம் பார்க்கப்போகிறார்கள். மொதுமொதுவென முகம் வருடும் கடல் காற்றுக்குள் இயல்பைத் தொலைத்துவிட்டு சற்றுநேரம் கண்ணை மூடிச் சஞ்சாரம் செய்துவிட்டுப்போவது குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பொதுவானது.

அங்கே மூன்று முறை காலையில் நடைபயணம் போகும் வாய்ப்புக்கிடைத்தது.இருபக்க நடை மேடைகளுக்கு  அடியிலேதான், மின்சாரம்,தொலைபேசி குடிநீர் எல்லாம் குழாய் வழிப்பயணமாகிறது.ஒரு விடிகாலையில் நட்ட நடு பாலத்திலிருந்து தண்ணீர் ஒரு பனை உயரத்துக்கு பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தது.கடந்து போகிற வாகனங்கள் எல்லாம் நனைந்து நனைந்து கடந்துபோனது.நடைபயணம் போன நாங்கள் மூன்றுபேரும் வெளியூர்க்காரகள். எங்கு அலுவலகம் இருக்கிறது யாரிடம் சொல்லுவதெனத் தெரியவில்லை. உள்ளூர்க் காரர்களிடம் சொன்னோம்.பத்துமணிக்கு வருவார்கள் என்று சொல்லி விட்டுப்போனார்கள்.

இதுபோன்ற பொதுக்காரியங்களில் பதட்டப்படாமல் கடந்து போவதும் இல்லையேல் என்னைப்போல பதிவெழுதி புலம்புவதும் தான் தேசீய குணாம்சமாக நிலைத்துவிட்டது. இப்படி வேறு நாடுகளில் நடக்குமா என்பது தெரியவில்லை. தனது வீட்டு அடுப்படியில் எரிவாயு சிலிண்டரை மூடிவைத்தோமா என்கிற என்கிற சந்தேகம் வந்துவிட்டால் சிப்பந்திகளின் வேலையை இடைமறித்து வீட்டுக்கு அனுப்புகிற சிரத்தை இருக்கிற தேசத்தில் பொதுச்சொத்துக்கள் லீக்காகுவதை உடனடியாக கட்டுப்படுத்துகிற உந்துதல் இல்லாது போய்விடுகிறது. காரணம் அது குறித்த தொலைக்காட்சி விளம்பரங்கள் வருவதில்லை. அவனுகளெக்கென்ன கிறுக்கா பிடித்திருக்கிறது இப்படி வருமாணம் இல்லாத விளம்பரங்கள் செய்ய.

சமச்சீர் கல்வி முறையை கைவிட வேண்டாம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கோரிக்கைசமச்சீர் கல்வி முறையை கைவிட வேண்டாம் என்று தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம் வேண்டு கோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.கங்காதரன், பொதுச் செயலா ளர் எஸ்.துரைகண்ணு வெளி யிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

கடந்த ஆண்டு ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்பு களுக்கு அறிமுகப்படுத்தப் பட்டு இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப் படுவதாக இருந்த சமச்சீர் கல்வி முறையை பாடத்திட் டங்களில் தோற்கடிக்கப் பட்ட திமுக அரசாங்கம் செய்த சில தவறுகளை கார ணம் காட்டி நிறுத்தி வைப் பதாக தமிழக அரசாங்கம் மேற்கொண்டிருக்கிற முடிவு அதிர்ச்சியளிக்கிறது.

பணக்கார தமிழகம், ஏழைத் தமிழகம் என நமது மாநிலம் இரண்டாகப் பிளவு பட்டிருக்கிறது. அரசாங் கத்தின் ஒவ்வொரு அசைவையும் பணக்காரத் தமிழகம் தன் பால் சாதகமாக்கிக் கொள்ள அயராது முயல்கிறது. அதன் காரணமாகவே அரசின் பொறுப்புகளில் இருந்த கல்வி பணக்காரர்கள் புகுந்து விளையாடும் கள்ளச்சந்தையின் சரக்காக மாறிவிட்டிருக்கிறது. கொள்ளை லாபம் ஈட்டுவதை கட்டுப்படுத்த முடி யாத அரசாங்கமே தமிழக அரசாங்கத்தையே மாற்றும் அளவு கல்வி வணிகர்கள் தலைக்கனம் பிடித்து அலை கிறார்கள். தமிழகத்தின் புதிய அரசாங்கம் எடுத் திருக்கிற முடிவை கல்வி வணிகர்கள் மட்டுமே வர வேற்றிருக்கிறார்கள் என் பதை தமிழக அரசாங்கம் ஆழமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஏழை பணக்காரன் என்ற வித்தியாசமின்றி அனை வரும் ஒரே மாதிரியான கல்வி முறையின் கீழ் பயில வேண்டும் என்ற நோக்கத் தோடு கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு அறி முகமான ஒரு திட்டத்தை சொத்தை காரணங்களைக் காட்டி அவசரகதியில் முடக்கிப்போட முயல்வது தமிழக அரசாங்கத்தை பணக் கார தமிழகத்தின் பக்கம் மட்டுமே தள்ளிவிடும்.

ஏழைகளுக்கு இலவச அரிசி; பணக்காரர்களுக்கு தரமான கல்வி வழங்குகிற முரண்பாடான அரசாங்க மாகத் தோற்றமளிப்பதில் இருந்து விடுபட்டு உண்மையான மக்கள்நல அரசாங்கமாகத் திகழ்ந்திட பாடத் திட்டத்தில் உள்ள சர்ச்சைக் குரிய பகுதிகளை நீக்கி விட்டு இந்த ஆண்டு முதலே சமச்சீர் கல்வித்திட்டத்தை தொடர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தீக்கதிர்-  நாளிதழ்


கொள்ளிவைக்கப் பிள்ளையில்ல 
குடிச்ச கஞ்சி கூட்டுலசேரல
ஊசிமேல தவமிருந்து 
ஒத்தப்பிள்ள பெத்தானாம்
பெத்த பிள்ளைக்கு பேச்சு வராம 
ஊர் ஊரா அலைஞ்சானாம்
போகாதா கோயிலில்ல 
கும்பிடாதசாமியில்ல
ஒரு நாத்தேவையில 
திருவாய் மலர்ந்தானாம் 
கொள்ளியோட பெறந்த பிள்ள
ஒன்னக்கொல்லாம விடமாட்டேன்னு
விக்குனானுமில்ல 
வெறச்சானுமில்ல தகப்பன்

24.5.11

ரயில் பயண அரசியல்.


ரோசாவே சின்ன ரோசாவே என்று ஆரம்பித்துவிட்டு பிறகு அதே மெட்டில் அமைந்த ஹிந்தி பாடலைப்பாடிக்கொண்டே அருகே வந்தான்.
அவன் கழுத்தில் தொங்கிய ஹார்மோனியப்பெட்டி ரயிலிறைச்சலைத்தாண்டி வந்து இசை பேசியது. அவனோடு செக்கச்செவேலென்ற சின்னப்பெண் கூட வந்தாள். அவளது கையில் இரண்டு வெள்ளை தகடுகள் இருந்தது அதை வைத்து தாளம் போட்டுக்கொண்டு வந்தாள்.உற்றுக்கவனித்த போதுதான் தெரிந்தது.அது அஸ்பெஸ்டாஸ் தகடுகளை உடைத்துச் செய்யப்பட்ட வாத்தியக்கருவி என்று.roadside stones are prolotariates weapen என்று படித்த பதம் நினைவுக்கு வந்தது.

ஹார்மோனியக்காரனைப் பார்த்து ஒரு பிராயாணி சொன்னார் கண்ணு தெரியலையோன்னு நெனச்சேன்,நல்லாத்தானே இருக்கு ஆளும் தெடமாத்தானே இருக்கான் ஒழைச்சுபிழைக்காலமில்ல” என்றார்.உடனே உடன் பயணித்தவர்கள் அது பற்றியே பேச ஆரம்பித்தார்கள்.
சற்று நேரத்துக்கெல்லாம் அவன் ஒரு தேசத்துரோக குற்றவாளிபோல புனையப்பட்டான்.புத்தகம் படித்துக்கொண்டு வந்த இன்னொரு பயணி மூடி வைத்துவிட்டுச்சொன்னார் ஆமா இன்போசியஸ் கம்பெனில டீம் லீடர் போஸ்ட் தர்ரேன்னாங்க இவந்தான் வேண்டமின்னு சொல்லிட்டு வந்து பிச்சையெடுக்கிறான்”  என்று சொல்லிவிட்டு மீண்டும் புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டார்.ஆளாலுக்கு ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

கொஞ்சநேரத்துக்கெல்லாம் அடுத்த நிறுத்தம் வந்தது புத்தகப்பிரயாணி எழுந்து போய்விட்டார்.திரும்பவும் மெல்ல சபை கலைகட்டியது.
குடிச்சிருப்பானோ,அதான் அப்படி கிருத்துருவமா பேசுறான்,ஆமாமா கவர்மெண்டே கடையத்தொறந்து ஊத்திக்கொடுத்தா இப்பிடித்தான் என்றார்கள்.அதுக்குத்தா அம்மா வைக்கபோகுதுல்ல ஆப்பு என்றார் இன்னொருவர்.அப்ப டாஸ்மாக்க மூடிருவாங்களா என்று கேட்டார்.
மாலை மலர்ல கேள்விக்குறி போட்டாச்சு என்றார்.அப்பாட தமிழ்நாடு இன்னிமே உருப்பட்டுரும் என்கிற நிம்மதிப்பெருமூச்சு வந்தது.
டாஸ்மாக்கை மூடிவிட்டு தனியாருக்கு ஏலம் விட்டுவிட்டால் தமிழர் நாட்டில் ஒருவனும் குடிக்கமாட்டானா என்றார் கூட வந்தவர்.
இப்போதும் கூட ஒரு சின்ன  மௌனம் இடைமறித்தது.

19.5.11

அழகர்சாமியின் குதிரையும், திருப்பூர் பனியன் கம்பெனிப் பெண்களும்.


ஒரு நூறு வருடங்களுக்கு முன்னாடி இந்தியாவின் போக்குவரத்தில் பெரும் பங்கு வகித்த வாகனம்.இன்னும் அலெக்சாண்டர், நெப்போலியன், சத்ரபதி சிவாஜி,ராஜாதேசிங்கு,ஊமைத்துரை,மாவீரன் திப்புசுல்தான்,சேகுவேரா ஆகிய பெயர்களோடு கூட வருகிற அவர்களின் உயிர்த் தோழன், இழு விசையையும், வேகத்தையும் கணக்கிடக்கிடைத்த பிராணி,சக்தி என்கிற சொல்லுக்கு வரையப் படும் ஓவியம் என அந்தக் குதிரைக்குத்தான் எத்தனை ஈப்புகள். அப்படித்தான் இந்த அழகர்சாமியின் குதிரையும் ஈர்த்தது. பரட்டைத் தலையோடும் கருத்த குள்ள உருவத்தோடும் ஒரு நாயகன், பாஸ்கர்சக்தி, இளையராஜா என அதன் மேல் ஈர்ப்பு வந்ததற்கு நிறைய்ய காரணங்கள் இருந்தது.கிராமங்களில் புதையுண்டு கிடக்கும் சொல்லப்படாத ஒரு கோடிக்கதைகளில் ஒரு கதையாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பை இன்னும் கூடுதலாக்கியது படம்.

நடக்காமல் போன அழகரின் திருவிழாவோடு கதை தொடங்குகிறது. பாரதிராஜா தொடங்கி சுசீந்திரன் வரை இன்னும் நூறு தரம் காட்டினாலும் அலுக்காத காட்சிகள் அவை.சாமியாடி நாள்குறிப்பதில் தொடங்கி பந்தக்கால் நட்டு,வசூல் நடத்தி,வெள்ளையடித்து, மாவாட்டி,டெய்லரிடம் சட்டை அளவுகொடுத்து இப்படி ஒரு ஊர் திருவிழாவுக்குத்தயாராவது ரம்மியமான காட்சிகள்.அழகரின் வாகனமான மரக்குதிரை காணாமல் போகிற நேரத்தில் ஒரு நிஜக்குதிரை ஊருக்குள் வருவது வரை முதல் பாராவில் சொன்ன எதிர்பார்ப்பு அலுங்காமல் குலுங்காமல் இருக்கிறது.அதுவும் ஒரு லோடு லாரியில் வளர் இளம் பெண்களை அள்ளிப்போட்டுக்கொண்டு திருப்பூருக்கு கிளம்பும் காட்சி அப்படியே கலங்கடிக்கிறது. ஆஹா தமிழ்ச் சினிமாவுக்குள் ஒரு புதுரத்தம் புகுந்துவிட்டது என்று மனம் சந்தோஷப்படுகிறது.

அந்தச் சந்தோஷத்தை அப்படியே லாரியோடு ஏற்றிவிட்டு கதை குதிரை தெய்வகுத்தம்,மைச்சோஷியம் என்றும்,ஒரு கிராமத்துக்காதல் , குதிரைக்கு சொந்தக்காரன் வருகை,அவனால் ஏற்படும் குழப்பம்,அவனுக்கு ஒரு ப்ளாஷ் பேக் எனச்சிதறடிக்கப் படுகிறது. சொல்லப்பட்ட சம்பவங்கள் எல்லாமே தனித்தனியாய் பல சிறுகதைகளுக்கு  கருவாகும் காட்சிகள். இவற்றை யெல்லாம் இணைத்துக் கொண்டு அழுத்தமான கதை வரும் என்கிற எதிர்பார்ப்பு கடைசிவரை நமது கூடவே வருகிறது.இந்த தவிர்க்கமுடியாத எதிர்பார்ப்பு சுசீந்திரன் பாஸ்கர் சக்தி,மரணகானா ராமு,கந்தசாமி போன்ற தெரிந்த முகங்கள் இருப்பதானாலேதான். ஆனால்  எதையுமே முழுமையாகச் சொல்லி முடிக்காமல் விட்டுவிட்ட மாதிரி முடிந்து போகிறது.

கோடாங்கியின் மகளை ஊராட்சித்தலைவரின் மகன் காதலிப்பதும் அவர்கள் ஒளிந்து ஒளிந்து சினிமாவுக்குப்போவதும் அங்கே அலைகள் ஓய்வதில்லை படம் பார்ப்பதும் மிக மிக மேலோட்டமான காட்சிகள்.அதனால் தான் அவர்கள் இரண்டு பேரும் ஓடிப்போய் காவல் நிலையத்தில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். அந்தசெய்தியை கேட்ட ஊராட்சித்தலைவர் “ ஒரு தாழ்த்தப்பட்டவனின் மகளை எப்படி நான் மருமகளா ஏத்துக்கொள்ள முடியும் என்று கட்டுரையைப் படிப்பது போல வசனம் பேசுகிறார். ஒரு பூவைப் பிடுங்குவதுபோல் இவ்வளவு எளிமையானதா சுசீந்திரன் மேல் கீழ் கலப்புமணம்?.

நட்ட நடு டெல்லியில் கணினி வளர்க்கும் மேட்டிமை காலத்தில் கதறக் கதற கீழ்சாதிக் கணவனை அவள் கண்முன்னே வெட்டிக் கொன்றதையும்.அதற்கு செத்துப்போன பையனினின் குடும்பம் பயந்துபோய் பதுங்கிக்கொள்ள அவள் நீதிமன்றத்துக்கு அலைந்ததையும், நீதிமன்றம் அதைக்கருணைக் கொலை என்று சொன்னது. சொல்லி இந்திய அரசியல் சட்டம்,மனிதாபிமானம்,இந்திய தண்டனைச்சட்டம், குற்றவியல் மற்றும் வன்கொடுமைச் சட்டங்களை கொலைசெய்தது எல்லாம் நடந்து ஆறுமாசம் கூட ஆகத நேரத்தில் இப்படிக் கதை சொல்வது மெகா சீரியல் முடிவுகள் மாதிரியே இருக்கிறது.

இப்படியே கதையை முடித்துவிடுகிறார்கள். உடனே அடடா அந்தக்குதிரை என்னாச்சு  என்று நமக்கு ஒரு கேள்வி எழுகிறது நமக்கு மட்டுமல்ல இயக்குநருக்கும் கூட.அதனால் தான் காவல் ஆய்வாளர் மூலம் கேள்வியை வைக்கிறார் அதற்கு ஊராட்சித் தலைவரின் மகன் அவன் இந்நேரம் சிட்டாய்ப் பறந்து ஊருக்குப் போயிருப்பான் என்று சொல்லி சந்தேகத்தை நிவர்த்தி செய்கிறார்.படம் முடிகிறது.

முடிந்த பிறகும் நம்மோடு கூடவரும் கேள்வி திருப்பூருக்கு பனியன் கம்பெனிக்கு வேலைக்குப்போன அந்தப்பெண்களைப் பற்றித்தான்.
அவர்கள் ஒவ்வொருவரிடத்திலும் ஒரு சொல்லப்படாத கதைகள் இருக்கிறது. அந்தக் கதைகளுக்குள்ளே சமகால அரசியல் இருக்கிறது.சமகால அரசியலை நடத்தும் தனியார்மயம்,தாராளமயம்,உலகமயம் பகிரங்க நிழலாய்: கருப்பு நிழலாய் கவிழ்ந்திருக்கிறது.

அந்த வளர் இளம் பெண்கள் உரத்துக்கேட்கிறார்கள்.
ஏன் சுசீந்திரன் சார் எங்களிடம் கதைகளைக்கேட்கவில்லையென்று.

18.5.11

தமிழகம் சந்தித்த மௌனப்புரட்சி.


                                                    (நிழற்படம் ஆண்டனி)

இந்தத்தேர்தல் முடிவுகள் ஒரு மௌனப் புரட்சியை உண்டு பண்ணியதாக முதிர்ச்சியான சிந்தனையாளர்கள் கூட கருத்து தெளிக்கிறார்கள்.
ஆனால் உண்மையில் இந்த நடவடிக்கை யானை போட்ட மாலைதான். கொடுமை என்னவென்றால் இன்னும் ஒரு அஞ்சு வருஷம் கழித்து இதே யானை இதே மாலையை அதே திமுகவுக்குத்தான் போடும்.அது என்ன செய்யும்.அத்தம்பெரிய்ய யானைக்கு பாவம் இள்ளிக்கண். ரெண்டே ரெண்டு உருவம் மட்டும் தான் தெரிகிறது.இந்த யானை அதுபாட்டுக்கு ஐஜேகே என்கிற இந்திய ஜனநாயகக்கட்சிக்கு மாலை போட்டுவிடுமோ என்று பதைபதைப்பில் காத்துக்கிடந்தேன்.பரவாயில்லை அது பழையபடி தெரிந்த தலைக்கே போட்டுவிட்டது.

சரி அதைவிடுங்கள் புரட்சி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால் தமிழகத்தில் பல பதவுறைகள், பலப்பல பொழிப்புறைகள் கிடைக்கின்றன. சிலநேரம் கழிப்பறையில் ஆண் பெண் வித்தியாசத்தைக் காட்ட படம் வரைந்து வைத்த மாதிரி ஆட்களையே கொடுவந்து முன்னால் நிறுத்தி வைத்து விடு கிறார்கள்.ஆனால் இந்த மௌனப்புரட்சி மௌனப்புரட்சி அப்படிங்கிறாங்களே அதுதான் ஒரே கொடைச்சலா இருந்தது.ஆர்வத்தில் அது என்னய்யா என்று கேட்டேன். 13 ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார் என்றார்கள்.அந்த நாளும் வந்தது.

சாயங்காலம் வரும் வழியெங்கும் மௌனப்புரட்சிக்கான அத்தாட்சி ஏதும் தென்படுகிறதா என்று தேடிக்கொண்டே வந்தேன்.அதே கருவக்காடு.அதே உச்சி வெயில். அதே அக்குவா பீனா.அதே தாசில்தார்.அதே போலீஸ்கார். அதே பத்திரப்பதிவு அலுவலகம்.அதே கந்துவட்டிக்காரன்.அதே கடை அதே விலை. இப்படி எதுவும் மாறவில்லை அப்படியப்படியேதான் தொடர்கிறது.

சலித்துப் போய் ஒதுங்கி நின்றேன்.சாக்கடை வாருகாலை முக்கி முக்கி அள்ளிக்கொண்டிருந்தார் ஒரு தோழர்.ஒங்களுக்கெல்லாம் துளுரு உட்டுப் போச்சிடா மத்தியானம் வேலைக்கு வரதப்பாரு......எனக்கெட்ட வார்த்தை கேட்டது. அதே திமிர் அதே வெள்ளைவேட்டி சட்டை. படீரென்று  பொறி தட்டியது வேஷ்டிக் கரையைப் பார்த்தேன் இடையில் வெள்ளைக்கோடு. ஆஹ்ஹா ஆமாம் மௌனப் புரட்சியைக்கண்டு பிடித்துவிட்டேன்.

அதன் பிறகு சுவர்கள்,கார்கள்,சைக்கிள்,ஆட்டோக்கள் என எல்லாவற்றிலும் புதுப்புது முகங்கள்.ஆமாம் அதே தான் மௌனபுரட்சி.வாழ்க மௌனப்புரட்சி.

6.5.11

பிரிவின் அணையுடைக்கும் ஒரு துளி உப்பு நீர்

ஒரு மாசிப் பின்னிறவில்
பாட்டியின் சேலைக்ககதப்பில்
கலககலக்கும் கோலிக்குண்டு கனவில்
துயிழ்ந்தவனை எழுப்ப ஏழவில்லை
வறுமைக்கும் பிரியத்துக்குமான இழுபறியில்.

ஊர் கடந்து தட்டப்பாறைக்குப் போன
அம்மா அப்பாவுக்கு, எதிர்த்து தட்டுப்பட்ட
ஏழு வயதுச் சிறார்களைப்பார்த்த பொழுதெலாம்
தொண்டைக்குழி அடைத்திருக்கும்.

சொல்லில் அடங்காதவற்றை மௌனத்தில்,
மௌனத்திலும் அடங்காதவற்றை நினைவுகளிலும்
நினைவுகளில் அடங்காதவற்றை ஒருதுளி உப்புநீர்
கட்டாயம் உடைத்திருக்கும்.