Showing posts with label சிறுகதையோடுபயணம். Show all posts
Showing posts with label சிறுகதையோடுபயணம். Show all posts

9.6.10

மனசின் கடிவாளமற்ற பயணம்.



'ஒங்கப்பன மாதிரியே வளந்துட்டியேடா... அவம்லாடா சினிம நாடகம் கட்சிக் கூட்டம்னு அலைவான்.இந்த மேனா மினுக்கித்தனம் சோறு திங்க உதவாதுடா... எங்கூட கடயில வந்து இரு... ரெண்டே வருஷத்துல ஒன்னய இந்த ஊர்ருக்கே ராசாவாக்கி சிம்மாசனம் போட்டு ஒக்கார வக்கேன்...'என்று இப்போதும் திட்டுவார்.அதுவும் இந்த மழைக்குள் யாரோ சிநேகிதனைப் பார்க்க போனேன் என்று மனம் போன போக்கில் அலைகிறவனை  (மாமா) ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்.

பாவூர்சத்திரத்துக்குப் பக்கத்திலிருந்து கிளம்பி தூத்துக்குடிக்கு மழையோடும் தொட்டுக்கோ துடைச்சிக்கோ என்கிற அளவு காசோடும் போய் நனைந்து அலையும் மனிதனின் கதை.அந்த மழையோடு போய் அவன் சாதிக்க நினைத்தது எது தெரியுமா?. கல்லூரி நண்பன் கதிரேசனைப் பார்த்து நாலுவார்த்தை பேசி விட்டு வர நினைத்த அந்த சாதனைதான் வண்ணநிலவனின் 'மழை' ச்சிறுகதை. ஒரு மழை நாளில் முகம்தெரியாத மனிதர்களிடத்தில் விலாசம் தேடித்தெப்பலாக நனையும் அனுபவம் நம்மைச் சூழ்ந்துகொள்ளுகிற கதை இது.அந்த நேரத்தில் வரிசையாய் ஒவ்வொருத்தராய் வந்துபோகிறார்கள் பால்யத்திலும் பிராயத்திலும் தோளில் கைபோட்டலைந்த நண்பர்கள்.

பாடுசோலியில்லாமல் ஒரு நண்பனைப்பார்க்க மாத்திரம் இப்படி மெனக்கெடுவானா சாமான்ய மனிதன்.மெனெக்கெடுவது கவியுள்ளத்துக்கு மட்டும் சாத்தியம்.அங்கே வரவு செலவு தெரியாது, லாபம் நட்டம் நுழையாது பிரியங்கள் மட்டும் முறுக்கேறிக்கிடக்கும்.எந்த ஒரு துணைக்காரியமும் இல்லாமல் ஒரு நண்பனைப் பார்க்க மட்டுமே விடுப்பெடுத்து அலைந்திருக்கிறோமா என்கிற கேள்வி முள்ளாய்க் குத்துகிறது. அப்போதெல்லாம் அந்த மனுஷன் 'கோணங்கியை' நினைத்து நினைத்துப் பொறாமையாய் இருக்கும்.


கடல்புறத்தில் படித்து முடித்துவிட்டு.அந்த உப்புக்காத்தில், அலை இரைச்சலில்,கடலோர குடிசைக்குள் பவுலுப்பாட்டாவோடு தூங்க வைத்த வலுவான எழுத்து வண்ணநிலவனுடையது.அதை நானும் மாதுவும் கிறங்கிக் கிறங்கிப்பேசிக்கிடந்திருக்கிறோம் 42பி எல் எஃப் தெருவில்.ரஞ்சி,சாமிதாஸ்,பிலோமியின் பிரியங்களையும் கனவையும் அது கிடைக்காமல் போனபின் நிகழ்வை ஏற்றுக்கொண்டு பிரியம் மாறாமல் தொடரும் வாழ்க்கையையும் சிகரத்தில் ஏற்றிவைப்பார் வண்ணநிலவன். எண்பதுகளில் படித்த அந்த புதினத்தின் வாசனையை மணப்பாடு கடல்கிராமத்து மணலில் கால்வைக்கும் போது நீண்டமூச்சால் ள்ளிழுத்துக் கொண்டேன். அதன் பெருமைக்களைச் சொன்னபோது கூடவந்த வாண்டுகள் 'இங்க என்ன சினிமா எடுத்தாங்கப்பா ?' என்று கேட்டார்கள்.சினிமாவை விடவும் உன்னதமான இலக்கியம் இந்த மணல்துகள்களுக்குள் ஒட்டிக்கிடக்கிறது அது 'கடல்புரத்தில்' படித்தால் மட்டுமே உடனடியாக வெளிக்கிளம்பும் என்று சொன்னேன்.

இப்படித்தான் என் நணபர் நடராஜனோடு சுற்றுலாப்போகும் போது தஞ்சைப்பெரிய கோயிலில் வைத்து, இந்த ஏரியாவில் எனக்கொரு சொந்தக்காரர் இருக்கிறார் என்று சொன்னேன். அவரும் சீரியஸ்ஸாக யாரெனக்கேட்டார். எங்க ஒர்க் பன்றார் வீடெங்கெ இருக்கு என்றெல்லால் தொண தொணக்க ஆரம்பித்து விட்டார்.திஜா என்கிற தி.ஜானகிராமன் எழுத்தாளர் இப்போ இல்லை என்று சொன்னதும் அடிக்க வந்துவிட்டார்.

1987 ல் வெளிவந்த 'கதை அரங்கம்' மணிக்கதைகள் தொகுப்பை இன்று அதிகாலையில், மீளவாசிக்கத் தேரம் கிடைத்தது. அப்போது அலையலையாய் பழைய்ய நாட்கள் இடறியது.அந்த தொகுப்பிலேதான் சு.சமுத்திரம்,நாஞ்சில்நாடன்,பிரபஞ்சன்,பாலகுமாரன் கதைகளோடு  கிராவின் கதையும் பூமணியின் கதையும் இருக்கிறது.பாண்டிச்சேரியிலிருந்து இடைசெவலுக்கு வந்த பெரியவர் கிரா சாத்தூரில் மெனக்கெட்டு இறங்கி நாங்கள் தங்கியிருந்த 42 பி எல் எஃப் தெருவுக்கு வந்து பேசிக்கொண்டிருந்த நாள் பளிச்சென வந்துபோனது.'ஒருநாளாவது மெனக்கெட்டு நண்பன் தேடிப்போகவேண்டும்னே' இப்படிச்சொன்ன  தம்பி கார்த்தி  நீண்ட இடைவேளைக்கப்புறம் நேற்றிரவு என்னைத் தேடிவந்தது  நெருடுகிறது.பலநாட்கள் சங்கத்துக்காகவும்,கட்சிக்காகவும் விடுப்பெடுத்து அலைந்தேன் என்கிற சப்பைக்கட்டு ஒரு புறமிருந்தாலும் நணபர்களுக்காக மெனெக்கெடும் வேட்கை கனன்று கொண்டேஇருக்கிறது.