புகழ்பெற்ற முல்க்ராஜ் ஆனந்தின் சிறுகதை ஒன்றுண்டு. மக்கள் திரள் மேவுகிற வாரச் சந்தையில் ஒரு குழந்தை தனதுதாய் தந்தையோடு செல்லும். அப்போது அந்தச்சந்தையில் தான் பார்த்த அத்தனை பொருளையும் கேட்கும். தாயைத்தவற விட்டு விட்டு அழுது கொண்டிருக்கும். காவலர்கள் அவனை பாதுகாத்து அவனுக்கு விளையட்டுப் பொருள்களும் இனிப்பும் வாங்கித்தருவார்கள். எதுவும் வேண்டாம் எனக்கு அம்மா வேண்டும் எனச்சொல்லி அவன் அழுகையை நிறுத்தமாட்டான். விளையாட்டுக் காட்டுவார்கள் மீண்டும் மீண்டும் அழுகை பெரிதாகும். உன் ஊரெங்கிருக்கிறது, அதன் பெயரென்ன, அடையாளமென்ன எதுவும் அவனுக்குச் சொல்லத் தெரியாது. அம்மா அப்பா பெயர் எதுவும் தெரியாது. ஆனால் அவன் அம்மா மிக அழகாக இருப்பாள் என்கிற சின்ன க்ளூ மட்டும் தருவான். அந்த சந்தையில் இருக்கிற அத்துணை அழகிய பெண்களிடமும் அழைத்துப் போவார்கள். இல்லையென்று சொல்லிவிடுவான் இந்த தேடுதலில் பொழுது சாய்ந்து விடும்.அப்போது அவனை அழைத்துக்கொண்டு அலுவலகத்துக்கு திரும்புவார்கள். எதிரே ஒரு பெண் வருவாள் அவளைப் பார்த்ததும் குழந்தை காவலர் கையை உதறிவிட்டு அவளைப்போய் அணைத்துக்கொள்ளும். அவள் அவலட்சணமாக இருப்பதாக காவலர்கள் நினைத்துக் கொள்வார்கள். ஈடுபாடுதான் அழகு. அதற்கு அளவை கிடையாது. அது நிறம், வடிவம் சார்ந்ததக ஒப்புக் கொள்வதற்கில்லை. மங்கோலியர்களின் சராசரி உயரம் நான்கு அடி. ஆப்பிரிக்கர்களின் நிறம் ஆதிக்கருப்பு. அலெக்ஸ்ஹேலி சொல்லுவதைப் போல முடைநாற்றம் அடிக்கும் உரித்த கோழி மதிரி உலக வெள்ளையாய் இருக்கும், மேலைத் தேசத்தவரிடம் மருந்துக்கும் கருப்பில்லை தலைமுடி உட்படட. நீங்கள் கேலி செய்யும் கருப்பு என் கண்ணுக்குள் இருக்கிறது, நீங்கள் போற்றும் வெளுப்பு என் பாதத்தில் இருக்கிறதென்று எனது அண்ணன் மகள் சொல்லுவாள். இதுதான் அழகென்று நிர்ணயித்தால் அந்தந்த நிலப்பகுதியில் அழகிகள் இல்லையென்பதாக மாறக்கூடும். இந்தியாவில் இதம் என்பதைக் குளிரும் மேலை நாட்டில் இதம் என்பதை வெப்பமுமாக அவரவர் புரிந்து கொள்கிறார். இப்போது கூட சரக்கடிக்கிறபோது கடைப்பிடிக்கிற தினுசுகள் குறித்த வலைக் கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. எனது சிறுவயதில், அல்லது கிராமக் காலத்தில் இவள் அழகில்லை, இவன் அவலட்சணம் என்று தீர்மாணித்த இரண்டு பேரது சாயல் கொண்டவர்களை நான் சற்றேரக்குறைய பதினைந்தாண்டுகள் கழித்துப்பார்த்தேன். ரொம்ப வியப்பானது ஒருத்தி ஜெனிபர் லோபஸ், இன்னொருவன் பர்ஸ்ட் ப்ளாட் ராம்போ. அந்த இருவரின் சாயலிலும் எனக்கு நெருக்கமான இரண்டு பேர் இன்னும் இருக்கிறார்கள். இள்ளிக் கண்களும், பெரிய உதடும், சீரற்ற பற்களும், எடுப்பற்ற தனமும் ஆண் நடையுமாக இருந்த அவளை எங்கள் குழுவில் உள்ள ஒருவன் காதலித்த போது அழுகிற அளவிற்கு அவனைகேலி செய்திருக்கிறோம். ஆளாளுக்கு காதல் தோற்றுப்பின் வெவ்வேறு திசைகளில் பயணமானோம். அனால் அவன் அவளைக் காதலித்து மணமுடித்து இன்னும் சந்தோசம் மாறாத வாழ்க்கை வாழ்கிறான். டொக்குவிழுந்த கன்னம், நியான் விளக்கு கம்பத்தைப்போல மேல்கூன் விழுந்த உயரம், பேசுகிற போது பல வார்த்தைகள் கட்டுப்பாடில்லாமல் கீழே விழும். கோக்காலி யெனும் பட்டப்பெயர் கொண்ட காந்தன் மாதிரியே சில்வஸ்டர் ஸ்டெலன் இருப்பான். நிறைய்ய வருடம் கழித்து ஆங்கிலப்படங்கள் பார்க்க ஆரம்பித்து ஜெனிபரின் இரண்டு மூன்று படங்கள் தான் பார்த்திருப்பேன். அவளைப்பார்க்கிற போதெல்லாம் எங்களூர் சின்னத்தாயைப் பார்க்கிற நினைவுகள் தடைபடுவதில்லை. ஒரு நாள் எனது கிராமத்துக்குப் போனேன். காலாற நடப்பதாகச் சொல்லிக்கொண்டு அவள் வீட்டுப்பக்கம் போனேன் " வாங்கண்ணா எப்ப வந்தெக, மயினி பிள்ளகள்ளா வல்லயா "என்பதான கேள்விகள் என்னை இளக்கியது. வார்த்தைகளற்ற மன்னிப்புக்கடிதம் ஒன்று அவளுக்கு முன்னாள் கிடந்ததை அவள் அறிய இயலாது. ரசனைகள் மாறும், கற்பிதங்கள் மாறும், எல்லாம் மாறும். |