Showing posts with label பாராவீட்டுக்கல்யாணம். Show all posts
Showing posts with label பாராவீட்டுக்கல்யாணம். Show all posts

22.10.10

பாரா சம்பாதித்த அன்பெலாம் ஒரே இடத்தில் குவிந்த மகா கல்யாணம்

முன்னமெல்லாம் அந்த ஊர்ப்பெயரைக் கேட்ட மாத்திரத்தில் கண்ணதாசனும்,ஜெமினிக்கனேசனும்,பத்மினியும்  நிழலாடுவது தவிர்க்கமுடியாததாகிப்போகும்.மண் சிவந்துகிடக்கும் காடுகள்,மணாவரி மனிதர்கள் புழுதிபறக்கும் சாலைகளோடு பார்த்த ஊர். இனி சிவகங்கை என்றால் அந்த பிம்பங்களெல்லாம் பின்னுக்குத்தள்ளப்பட்டு எங்கள் ப்ரிய பாரா வும் அவர் குடும்பமும் மட்டுமே முதலில் வந்து இடம்பிடிக்கும்.ஒரு ஊரால்,ஒரு இனத்தால்,ஒரு உத்தியோகத்தால் கூடுகிற தன்மைகளில் இருந்து பரிணாமாமெடுத்து வலையெழுத்தால் பிணைக்கப்பட்ட ஒரு வானவில் உருவாகியிருக்கிறது.எழுத்திலும் குரலிலும் ஸ்பரிசித்த மனிதர்கள் நேரில் பிரசன்னமாகும் போது ஏற்படும் கண்ணின் தகவமைதல் போன்ற கணத்தை   இதுவரை இலக்கியங்கள் எதுவும் பதிவு செய்திருக்கிறதா எனத்தெரியவில்லை.ஆனால் இது ஒரு புது அனுபவம்.

வலைப்பக்க சுயவிபரத்தில் இருக்கும் நிழற்படங்கள் ஒரு பக்க பரிமாணத்தைத்தான் காண்பிக்கும் என்பதை நேரில் பார்க்கையில் ஒருவருக்கொருவர் உற்சாகத்தோடு பகிர்ந்து கொண்ட நேரம்.ராஜசுந்தாராஜன் அண்ணா,மணிஜீ,ஜெரி ஈசானந்தா,கும்கி,மாது,அக்பர்,சிவஜிசங்கர்,செ.சரவணக்குமார் எல்லோரின் குரலும் மதுரை இறங்கும் போதே எனை அழைத்தது.எழுத்தால் மட்டுமே ஆன ஸ்னேகத்துக்கு மனதில் வரைந்து வைத்த ஓவியங்களை ஒப்பீட்டுப் பார்க்கப்போகிற ஒரு பரீட்சைக்கான ஆவல் அது. பேருந்தின் சக்கரத்துக்கு முன்னாடி, முன்னாடி ஓடிப்போய்  நின்று பிள்ளைக்குதூகலம் கொண்டது.சிவகங்கைப்பேருந்து நிலையத்தில் நடமாடும் மனிதர் முகத்திலெல்லாம் வரைந்து வைத்த ஓவியத்தை ஒட்டிப் பார்த்துக்கொண்டு கல்யாணவீட்டுக்குள் நுழைந்த போது பந்தி களைகட்ட ஆரம்பித்திருந்தது.

அந்த நேரத்தில் தானே சொந்தபந்தங்களை அழைத்து அருகில் இருத்தி நிழற்படம் எடுத்துக்கொள்வார்கள். அதுவும் நடந்து கொண்டிருந்தது.சாப்பிடாதாவர்கள் வெறும்வாயில் கதைபேச சாப்பிட்டவர்கள் வெற்றிலை வாயில் கதைபேசுகிற சாவகாசம் அலாதியானது.வருகிறவர்களை வரவேற்பதுவும்,புறப்படுகிறவர்களை வழியனுப்பவுமான தகப்பனுக்கான நேரம்.அப்போது  கடமை முடிந்தது என்றல்ல, கனவு கனிந்தது கல்யாணமாக என்கிற ஒரு அயற்சியும் சந்தோசமும் கலந்த பாட்டு ஒலிக்கும் முகத்தோடு  'பாரா' உட்கார்ந்திருந்தார்.ஒரு இளைஞன் வேஷ்டி சட்டை உடுத்திக்கொண்டு உட்கார்ந்திருந்த தோரணையில்.பொன்னோட அப்பா என்று தயங்க அது நான் தான் என்றார் நான் தான் காமராஜ் சொன்னதும் இழுத்து அணைத்துக் கொண்டார்.உடைந்து, உருகி உருவமற்றுக்காற்றில் மிதக்க காத்திருந்த நேரம்.குடும்பம் மொத்தத்தையும் கூப்பிட்டு  கூப்பிட்டு முகம் கான்பித்தார் எல்லோரின் முகத்திலும் என் குடும்பத்தின் சாயல் கிடடைத்தது.

சரவணனுடன் பேசிக்கொண்டிருந்த தோழர் பத்மாவிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசி விட்டு ஓடோ டிப்போய்
குழுமத்தில் ஐக்கியமாகிக்கொண்டேன்.தீவிர இலக்கியம்பேசாமல்,தீவிர அரசியல் பேசாமல் தீவிர அன்பைப்பகிர்ந்துகொண்டோ ம்.உள்ளுக்குள் கிடந்த சின்ன சின்ன தடங்கல்கள் கறையக்கொஞ்சம் திரவமும்,கொஞ்சம் பேச்சும் போதுமானதாக இருந்தது.பெண்ணோடு மாப்பிள்ளை உட்கார்ந்து பந்தி நடக்கும் நேரம் கிண்டலும் கேலியும்,சாப்படுமாக பரிமாறப்படுமே அந்த கடைசிப்பந்தியில் தான் பதிவர்களுக்கு இடம்போட்டுக்கொடுத்தார் பாரா.

அங்கிருந்து விடுதி அறைக்கு வந்ததும் வழக்கம்போல மாதவராஜ் ஆரம்பித்த வர்த்தைகளின் நுனி பிடித்துக்கொண்டு
சற்று இலக்கியம் அரசியல் அதோடு தூக்கம் மாலைவந்தது.மாலை துவங்கும் நேரத்தில் விடிகாலை ஆலமரத்து பறவைகளின் கீச்சல் சத்தத்தோடு ஒவ்வொருத்தராய்ப் புறப்பட்டார்கள்.பாரா அப்படியொரு ஆலமரமாய் கைவிரித்துச் சிரித்து அனுப்பிக்கொண்டிருந்தார்.அவரது மைத்துனர் முத்துராமலிங்கம் நிற்காத பம்பரமாய்  கல்யாண வீட்டின் ஒவ்வொரு அசைவிலும் பங்கெடுத்துக்கொண்டிருந்தவர்களில் முக்யமானவர்.

கல்யாணங்களின் எல்லாவிதமான லட்சணங்களோடுதான் நடந்தது என்றாலும் இந்தக்கலயாணத்துக்கு கூடுதல் சிறப்பொன்று உண்டு.வானலைகளினூடே வியாபித்த பாராவின் எழுத்தை நுகர்ந்த எல்லா அன்புள்ளங்களுக்கும் பாராவீட்டுக் கல்யாணச்சேதி போகும்.அவர் சம்பாதித்து வைத்த பிரியங்கள் கூடி பூச்சொரியும்.  தூரத்தேசத்திருந்தும் மனசார வழ்த்துகிற வைபோகமும் சேர்ந்து வாய்க்கபெற்ற இது நம் பிரிய பதிவர் வீட்டுக்கல்யாணம்.