சகோதரர் கோணங்கியின் கல்குதிரை கிடைத்தது. அவரது எழுத்துக்கள் குறித்து இருபதுவருடங்களுக்கு மேலான பயம் இன்னும் தெளிந்த பாடில்லை. ஆனாலும் அவரது கல்குதிரை இதழ்களில் வரும் சில எழுத்துக்கள் பிரம்மிப்பாக இருக்கும். அப்படித்தான் பிரம்மிக்க வைத்தவர் தோழர் மு.சுயம்புலிங்கம்.அதே போல இந்த வேனிற்கால இதழில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு கதை ச.விஜயலட்சுமியின் பாராசூட் மனிதர்கள் சிறுகதை. சென்னை நமக்கு கடற்கரையையும்,நெரிசலையும் ஆட்டோக்களையும்,சுடசுட சினிமா போஸ்டர்களையும், ரெங்கநாதன் தெருவையும்,பண்டிபஜாரையும் இன்னும் பல ஈர்ப்புகளை செய்துவைத்திருந்தாலும் அந்த எழும்பூர் ரயில் நிலையத்துக் கருகில் வசிக்கும் கூவம் நதிக்கரை மனிதர்கள் கட்டாயம் மனிதாபிமானமுள்ள யாரையும் ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு விடுவார்கள். அவர்கள் குறித்தான நமது மௌனக் கேள்விகளுக்கு ஒரு பகுதி விடை சொல்லுகிறது பாராசூட் மனிதர்கள்.
புத்தகங்கள் பற்றியென்பதனால் ராமநாதபுரம் புத்தகக்கடையில் நடந்த ஒரு உரையாடலைச்சொல்லாமல் இருக்கமுடியாது. அது ஒரு விரிவடைந்த பாடப்புத்தகங்கள் விற்கிற கடை. இது பள்ளிகள் ஆரம்பிக்கும் காலமாதலால் அங்கே ஒரு மாணவன் அவனின் பெற்றோர்கள் என்கிற கணக்குப்படி விலக இடமில்லாத கூட்டம். அங்குதான் கதைப்புத்தகங்களும் சிற்றிதழ்களும் கிடைக்கும் என்று நண்பர் சொன்னதை நம்பிக்கொண்டு போயிருந்தேன்.அவர் சொன்னதில் ஏதும் தவறும் இல்லை. பத்தடி அலமாரியில் எல்லாம் ரமணிச்சந்திரன் நாவல்கள், கண்ணதாசன் கட்டுரைப்புத்தகங்கள்,ராஜேஷ்குமார் போன்றவர்களின் படைப்புகள் அம்பாரமாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தது. நெடுநேரம் புத்தகங்களுக்கிடையில் ஊற்றுப்பர்த்துக்கொண்டிருந்த என்னிடம் சிப்பந்தி என்னவேண்டுமெனக்கேட்டார்.
சாண்டில்யன்,லேனா தமிழ்வாணன்,கண்ணதாசன் என சில புத்தகங்கள் பற்றி சின்னதாக அறிமுகமும் செய்துவைத்தார். அவை வேண்டாமென்று சொல்லிவிட்டு ஒரு சில புத்தகங்களைச் சொன்னேன் என்னை அவர் பார்த்த பார்வையை எப்படி விவரிப்பதென்று தெரியவில்லை. அங்கிருந்து வெளியேறி வர நகர்ந்த போது அப்பாவின் விரல்பற்றியிருந்த சிறுவன் ஜெயாமோகன் அப்படின்னா யாருப்பா என்று கேட்டான்.அவனைப்பார்த்தால் ஒரு சிபிஎஸ்இ பள்ளியின் மாணவனாக அல்லது குறைந்த பட்சம் அதிகபட்சம் பணம் கட்டிப்படிக்கும் ஆங்கிலப் பள்ளி மாணவனாகவாவது இருக்கவேண்டும். அவனது பொறுப்புள்ள அப்பா இப்படிச்சொன்னார் ''ஷி இஸ் எ ஸ்டோரி ரைட்டர்'' என்று. என்னை முறைத்துப் பார்த்த அந்தச் சிப்பந்தியே பரவாயில்லை எனத் திரும்பிப் பெருமிதத்தோடு பார்த்துவிட்டுவந்தேன்.