31.8.10

ஒரு குறிக்கோளற்ற காலைப்பொழுதும்,ஒரு மரப்பாச்சியின் சித்திரமும்.

எழுவதும் படுக்கை நீள்வதுமானது அந்தந்த நேரத்தின் சோம்பேறித்தனத்தால் தீர்மனிக்கப்படுகிறது.ஒரு இரவு சந்தோசமானதாக நீள்கிற போது அந்த நான்காம் ஜாமத்துக் குருவியின் சத்தம் இளயராஜவின் இசையூடு இழையாக்கி எழுப்பிவிடும்.மூன்றாவது வீட்டில் குடியிருக்கும் வீ ஏ ஓ வின் சுற்றுச்சுவர்  இரும்புக்கதவு திறக்கும் ஓசை அந்ததெருவின் கவனத்தை ஈர்க்கிற ஓசையாகும்.அவரது மடிப்புக் குழையாத முழுக்கை வெள்ளைச் சட்டையின் நிறமும் தலைகுனிந்த படி கடந்துபோகும் நடையின் லயத்தில் இனம்தெரியாத சிநேகம் வரலாம் .முற்றத்து வாதா மரத்திலிருந்து உதிர்ந்து விழும் வாதாம்பழம் ஒரு குண்டு விழுகிற ஓசையாகி வாசலில் உருளும்.எதோவொரு வீட்டுக் கழிப்பரையில் ஊற்றும் தண்ணீரின் சத்தம் மழைக்கால ஓடைச்  சலசலப்பை நினைவு படுத்திவிட்டுப் போகும்.

மங்கிய இரவு விளக்கின் ஒளியில் ஆடை விலகித்தூங்கும் அவளின் முகத்தில் படருகிற ரோமக்கற்றைகளை மாலைச்சூரியனின் பொன்னிற கதிர்களோடு போட்டிக்கனுப்பலாம்.ஜன்னல் திறக்கும் போது வேலிச்செடிக்கருகில் நின்றபடி மலம் கழிக்கும் முதியவரின்மேல் கோபம் வராது கடந்தும் போகும்.இதே காற்றுத்தானே நேற்று சாயங்காலம் பைக்கில் வரும்போது மண்ணள்ளிக் கண்ணில் தூற்றியது என்கிற நினைப்பே வராமல் த்ரேகம் முவுக்க நீரூற்றித் துடைப்பது போல் தழுவிவிட்டுப்போகும் மாசுபடாத் தென்றலைச் சிலாகிக்கச்சொல்லும்.

நடைபயணம் போகவா கூகிளோடு பயணம் போகவா என்கிற கயிறிழுப்பில் எது ஜெயித்தாலும் சந்தோஷம் வரும்.ஓசைப்படாமல் பால்பாத்திரம் கழுவி ஒரே ஒரு கோப்பை தேநீர் தயாரிக்கத் தெரிந்தால் வாசற்படியில் உட்கார்ந்து சூட்டோ டு நிலவையும் காற்றையும் குருவியின் கீற்றையும் குழைத்துக் குடிக்கலாம். தொகுக்கப்பட்ட சிறுகதைத்தொகுதியின் எழுத்துப்பிழையை இன்றைக்காவது சரிசெய்ய வேண்டுமென்கிற தீர்மானம் பாராவின் கவிதையில் உடைந்தோ,பாலாண்ணாவின் நையாண்டியில் சிதறியோ திசை மாறலாம்.அழகே அழகு தேவதை என்கிற ஜேசுதாஸின் பாடலைத் தட்டிவிட்டுக் கேட்கிற ஆவல் தூங்குகிற யாரையும் இடர்படுத்தக்கூடாது என்கிற எச்சரிக்கையில் தோற்றுக்கூடப் போகலாம்.

கடந்துபோன ஒண்ணரை மணிநேரத்தில் உருப்படியாக ஏதும் செய்துவிடாதது தெரிந்தாலும் லாபம் நட்டம் பார்க்காத வாழ்க்கை.பச்சை நிற பால் பாக்கெட் கிடக்கிறது. தீக்கதிர் பேப்பரும்,போன் பில்லும்,சிலநேரம் தூரத்து நண்பர்களிடத்திலிருந்து வந்துசேரும் புதுப்புத்தகமும் விழுந்துகிடக்கிற அதே இரும்புக் கதவுப் பெட்டியில் வெள்ளி செவ்வாய்க் கிழமைகளில் மல்லிகையும் கதம்பமும் சுருண்டுகிடந்து  அது வாசலைக்கடக்கிற போதெல்லாம் சுகந்தம் வீசும்.

0

வழக்கமான மெதுநடையில் இன்னும் கூடுதல் மெதுவோடு வரும் அவள் கையில் டீத்தூள் இருக்கிறது.முகம் நிறைய்ய சஞ்சலம் அப்பிக்கிடக்கிறது. வந்ததும் அந்தப்பிள்ளை செத்துப்போச்சு என்று சொன்னாள்.சொன்னதும் சூழல்  அப்படியே வெக்கையாகிறது.

அவள், 

அந்தப்பிள்ளை பார்க்கிற நேரமெல்லாம் வியப்பைக்கொண்டு வந்து தருகிறவள்.ஒரு பெரிய மரப்பாச்சியைப் போல திருப்பிபார்க்கச் சொல்லுகிற சின்னக் கால்கள்,சின்ன முகம்,சின்ன பார்வை, சின்ன பேச்சு.பொதி சுமக்கிற பள்ளிப் பையை இழுத்துக்கொண்டு வாசலைக்கடந்து போவாள். அப்படிப் பார்த்துக் கொண்டிருந்தபோதே ஒருநாள் பட்டுச் சேலைஉடுத்திக் கொண்டு கடந்துபோனாள். மாறுவேடப் போட்டி பார்க்கிற ஆவல் தான் அவள் மேலிருந்தது  அதன் பிறகும் பொதியச் சுமந்து கொண்டே ஒன்றிரண்டாண்டு கடந்துபோயிருக்க கூடும். வளர்க்கிற கிடாயெல்லாம் வெட்டத்தான் என்கிற நினைப்பு வருகிற மாதிரி ஒரு நாள் அவளோடு ஒரு கனத்த ஆடவன் நடந்துபோனான்.சித்தப்பா வயசிருக்கும் அவனுக்கு. பளபளத்து காப்பிக்கலரில் தொங்கும் மாங்கொழுந்து இலைகளின் மேல் பாரக்கயிறு கட்டியது போல இருந்தது. காற்று வாங்கப்போய் கவிதை வாங்கி வரலாம், இவள் கழிவு வாங்கிவந்தாள். அப்போதும் கூட மரப்பாச்சியின் சிரிப்போடுதான் கடந்துபோனாள்.

ஒரு பகல்நேர பேருந்து பயணத்தில் பின்னிருக்கையிலிருந்து சிகரெட்டு நெடி வந்தது திரும்பிப் பார்த்தால் அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவன் புகை பிடித்துக்கொண்டிருந்தான். ஓடுகிற பேருந்தில் புகை பிடிக்கக் கூடதென்கிற
பொது விதியை அல்ல,சக மனிதனின் முகச்சுழிப்பை உதாசீனப்படுத்துகிற அவனோடு அந்தப் பிஞ்சுப்பெண் சிரித்த முகத்தோடுதான் உட்கார்ந் திருந்தாள்.இன்னொரு மாலை நேரத்தில் முழங்கை வரை வளையல் அடுக்கிக்கொண்டு கன்னக் கதுப்புகளில் துடைக்கப்படாத சந்தனத்தோடு வயிறு புடைக்க கடந்துபோனாள்.அப்போது தான் சின்னச் சஞ்சலத்தைப் பார்க்கமுடிந்தது. அவளின் எதிரே, அவளினும் வயது முதிர்ந்த,அவளினும் தேகம் பெருத்த மாணவி தோளில் பை மாட்டிக்கொண்டு கடந்து போனாள்.

பிறகந்த மரப்பச்சியின் கையில் இன்னொரு மரப்பாச்சி இருந்தது.அதோடு பேசிக்கொண்டு இரண்டு மழலைக் குரலாகக்கடந்து போய்க் கொண்டிருந்தாள். அந்த நாட்களில் தான் அவளைப் பற்றியும்,  அவள் குடும்பத்தைப் பற்றியும் என் மனைவி சொன்னாள்.அது இந்த தேசத்து கோடிக்கணக்கான விளிம்புப் பெண்களின் இன்னொரு கதை.அதன் பிறகான நாட்களிலெல்லாம் அவள் கடந்து போகும் போது, குருவி தலையில் பனங்காய் பழமொழி தான் நினைவுக்கு வரும்.அந்தக் குருவியும் முரட்டுக் கணவன் இல்லாத தனி நடைதான் நடந்துகொண்டிருந்தாள். அப்போதும் கூட அவள் முகத்தில் சிரிப்பு அழிக்கப்படாமல் இருந்தது. அது அந்த அடலசண்ட் வயதுக்கான சிரிப்பு. அப்படியே தங்கிப்போய் விட்டது  போல.

தற்கொலை முயற்சி செய்து பெருநகர் மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னபோது  நம்பவே முடியவில்லை. ஒரு மரப்பாச்சி எப்படித் தற்கொலை செய்துகொள்ளும் என்பதான நெருடல் கேள்விகள் முளைத்துப் பின் வழிமறிக்கும் அன்றாடங்களால் கருகிப்போய்விடும்.இதென்ன கொடுமை இந்தச் சின்ன வயசில் இப்படியொரு விரக்தி என்று கேட்டேன்.உலகத்துக்குத் தான் இன்று அவளது இறந்த நாள். உள்ள படிக்கு  அவளுடைய கல்யாண நாள் தான் இறந்தநாள் என்று சொன்னாள்.

29.8.10

பராக்குப் பார்த்தல்.

நேற்று ஜெயா தொலைக்காட்சியில் ஹரியுடன் நான் பார்க்க தேரம் கிடைத்தது.அல்லது தேடிப்போய் இசைக்கடியில் ஒளிந்து கொள்ள முடிந்தது. இசைக்கு சோர்வைத்,தனிமையை,நிராதரவை அழித்துப்போடுகிற வல்லமை உண்டு.ஆரம்பகால சன்தொலைக் காட்சியில் டாக்ஷோக்களில் அதகளப்படுத்திய ரெகோ,ஆனந்தகீதன்,நேருக்குநேர் ரபி வரிசையில் வந்தவர் ஜேம்ஸ்வசந்தன்.அவருக்குள் இப்படி ஒரு இசை ஆளுமை இருக்கிறது என்பதை இனங்கண்டு கொள்ள தமிழ்பரப்புக்கு பத்துவருடங்களுக்கு மேலாகிப்போனது.பாவம் இந்த வசந்தன் தான் ஒரு பல்பொருள் அங்காடிக்குள் நின்றுகொண்டு சோப்பு சீப்புக்களோடு போட்டி நடத்திப்பரிசு வழங்கிக் கொண்டிருந்தார்.அவரை ஒரு இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய சுப்ரமனியபுரமும், இயக்குனரும், கண்களிரண்டால் பாடலும் மைல்கற்கள்.

பாடல்களை அணுக்களாகப்பிரித்து கூறுபோடுகிற அந்த மூன்றுபேரையும் பார்த்தபிறகு எந்தப் பாடலையும் பாட நாக்கூசுகிறது.இந்த நிகழ்ச்சியில் பாடுகிற போட்டியாளர்கள் எல்லாமே வாலிபர்களாக இருப்பதனால் குறைகள் சொல்லுகிற அந்த மூன்றுபேர்மேலும் சித்ராசேச்சி மேல் வருகிற மாதிரிக் கோபம் வரவில்லை.எலிமினேசன் ரவுண்டின் பின்னணியில் ஒலிக்கிற சவுண்டு நம்மை கழிவிறக்கச் சூழலுக்கு இழுத்துக்கொண்டே போவதில் ஜெயா,சன் இரண்டுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.

போட்டியிலிருந்து வெளியேறுகிறவர்களுக்கு தேர்வாளார்கள் சொல்லும் திடவார்த்தைகள் மனித குல நாகரீகத்தின் உச்சம்.ஆனாலும் தோற்று வெளியேறுகிறவர்களின் அந்த நேரத்து மனநிலை கொடூரமானது.அது பின்னணி இசையில்லாமலே பார்வையாளர்களைக் கலங்கடிக்கும். நான் தகுதியற்றவள் தான். இந்தப்போட்டிக்கு வருவதற்கு முன்னாள் எனது குரல் திறந்ததாக இருந்ததில்லை என்பது எனக்குத்தெரியும். என்றாலும் போட்டியின் போது அதில் நிறைய்ய மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கிறேன்' என்று சொல்லிக்கொண்டு வரும்போதே அந்த அருணாப் பொண்ணுக்கு குரல் உடைகிறது.அப்போது அதை ஒரு நிகழ்ச்சியாகவோ,அந்தப்பெண் யாரோ ஒருத்தி என்றோ தப்பிக்கமுடியாமல் சோகத்துக்குள் நமது மனசும் சேர்ந்து சஞ்சலப்படுகிறது.

0

வடமாநிலத்திலும் தமிழைப்போல அத்திபூத்த  அபூர்வமாக நல்ல திரைப்படங்கள் வந்து போகும்.தாரே ஜமீன்பர்,லாகூன்,1947,போன்ற முயற்சிகளை மேற்கொண்ட சாக்லெட் நடிகன் அமீர் இந்த முறை விவசயிகள் தற்கொலையைப் பின்புலமாகக்கொண்ட ஒரு திரைப்படத்தைத் தந்திருக்கிறார்.பீப்லி (லைவ்).பீப்லி என்கிற குக்கிராமத்தில் விவச்சாயத்தை மட்டுமே நம்பிவாழ்கிற ஒரு குடும்பம் பட்ட கடனுக்காக வங்கியின் ஜப்திக்குள்ளாகிப் பின்னர்தற்கொலை முடிவுக்கு தயாரகிறது. செய்தி வெளியில் கசிந்து உள்ளூர் நிரூபர் மூலம் அது மும்பையை எட்டுகிறது. அங்கிருந்து இன்றைக்கிருக்கிற ப்பாப்புலர்  ஊடகங்கள் அணைத்தும் புழுதியைக் கிளப்பிக்கொண்டு பீப்லி கிராமத்தை கபளீகரம் செய்கிற பகட்டு சோகம்தான் மையக்கதை. கூகிள் விமர்சனங்கள் மூலம் பார்க்கவேண்டும் என்கிற ஆவலைத்தூண்டுகிற சினிமா இது.பாட்டுக்களும் உண்டாம். உடனடியாகப் பார்த்துவிடவேண்டும் இல்லையெனில் உன்னைப்போல் ஒருவன் மாதிரி தமிழ்படுத்தி கெட்டுப்போன கதையப் பார்த்து ஆஹா ஓகோ என்று புலகாங்கிதப்படநேரிடும்.

27.8.10

சகஜ மீட்பர்கள்

அந்தப் பகல்நேரச்சென்னைத் தொடர் வண்டியில் இடம் பிடித்துக் கொள்ள சிரமமில்லாமல் இருந்தது தம்பி அருணும்,முதலாளி செல்வாவும் நெல்லையிலிருந்தே வந்ததால் இது சாத்தியாகியது. முதலாளி செல்வா முதலாளி யில்லை. நம்ம ஒரு போதும் முதலாளியாகப் போவதில்லை நாமெல்லாம் ஆயுட்காலக் கடனாளிகள்,அதானாலயாக்கும் ஒருத்தருக்கொருத்தர் முதலாளின்னு சொல்லிக்கலாம் என்கிற அவரின் definition எனக்குப்பிடித்திருந்தது.பிறகென்ன ஒரு இருபது வருட காலமாக அவருக்கு நான் முதலாளி,எனக்கு அவர் முதலாளி.அவரைப்பற்றியதான ஒரு பெரும் பதிவுக்கு வாத்தைகளும்,விஷயங்களும் குவிந்துகிடக்கிறது அதைப் பின்னாட்களில் பகிர்ந்து கொள்ளலாம்.

வண்டி நகர்ந்த பின் டீ விர்கிறவர்கள்,வெள்ளரிக்காய் விற்கிறவர்கள் கடந்துபோய்க் கொண்டிருந்தார்கள்.மாதுவும் அருணும் இன்னொரு பெட்டிக்கு இடம் தேடிப் போய்விட்டார்கள். ஜூனியர் விகடனில் திருப்பூர் எம் எல் ஏ பழைய்ய தோழர் கோவிந்தசாமியின் பேட்டியைப் படிக்கச் சொல்லிக்கொடுத்தார்.படித்துப்பார்த்தேன் ஆளும் கட்சியின் ரகரகமான ஆட்டைகளில் அது ஒரு டைப்பாக இருந்தது.பெரும்பாலும் இதுமாதிரியான பொறணிப்பத்திரிகைகளை ஊர்மடத்து ஆண் பொறணி,ஓடைகுப்போகிற பெண்கள் பொறணியாகவே பார்க்கத்தோன்றும்.சில நேரம் அவசியமான செய்திகளும்கூட வரலாம்.

குழந்தைகள் பாட்டி இருக்கைக்கும்,தாயின் இருக்கைக்குமான இடைவெளிகளை ஆடுகளமாக்கிக் கொண்டு
அங்குமிங்கும் ஓடினார்கள்.துலுக்கபட்டி நிலையம் நெருங்கும்போது முதலாம் திருநங்கை வந்தார்.எல்லோரையும் தொட்டு சங்கோஜப் படவைத்து காசு வசூலித்தார்.அவரைப்பார்க்க உள்ளூர் நங்கைபோலத்தெரிந்தது எனது இருக்கைக்கு வந்ததும் ஒதுங்கிப்போய்விட்டார்.சற்றுநேரத்திற்கெல்லாம் இரண்டாவது நபரும் வந்தார்.தோள்பட்டையை உலுக்கி துட்டுக்கேட்டார்.இல்லையென எனச்சொன்னதற்கு

"நாங்கெல்லாம் பாவப்பட்ட பிறவிகள்,எங்களுக்கு காசுகொடுத்தா ஒங்களுக்கு புண்ணிய'மென்று சொன்னார்.

மனிதகளில் என்ன பவம் புண்ணியம் ஒங்கள நீங்களே ஏன் தாழ்த்திக்றீங்க

இருக்றதத்தான சொல்லமிடியும் இந்தப்பொழப்ப பாத்திகளா

நீங்களும் ஒழைக்கலாம்

'ஆமா ஆபீஸர் உத்தியோகமா காத்துக்கிட்டுருக்கு,அங்க பாருங்க ஒலகமே எங்கள ஒரு மாதிரியாப்பாக்கு ஒருத்தர் ரெண்டுபேரு யோக்கியமா இருந்தா ஒண்ணும் பண்ணமுடியாது,வந்துட்டாங்க'

படபடவென்று பேசியபடி அடுத்த இருக்கைக்குப்போய் கைதட்டிக்கொண்டு நின்றார்.ரயிலின் இரைச்சல்,பயணிகளின் பேச்சுச்சத்தம்,டீ விற்கிறவர்களின் பெருங்குரல் எல்லாம் ஒலியிழந்து மௌனத்துக்கு திர்ரும்பிக் கொண்டிருந்தது. ஒரு நிமிட நேர இறுக்கத்தை உடைத்துக்கொண்டு குழந்தைகள் ரயிலுக்குள் ரயில் ஓட்டிகொண்டிருந்தார்கள்.

26.8.10

மாநாடுகளினூடே துளிரும் கலையும், பாலை இசையில் கலங்கிய பால்பேதமும்.

அகில இந்திய மாநடுகளில் எல்லாம் பகல் பொழுதுகளில் அறிக்கைகள்,கோரிக்கைகள் விவாதங்களை ஈடுகட்டித் தாக்குப்பிடிப்பது பெரும் சவாலாக அமைந்துவிடும்.17 டிகிரிக்கும் குறைவான சீதோஷ்ணம் இருக்கையிலேயே தூக்கத்தைக் கொண்டுவந்து டோ ர்டெலிவரி செய்துவிட்டுப் போய்விடும். சிலநேரம் யாராவது உலுக்கிவிடுகிற மாதிரி சோகங்களை,போராட்டத்தை டமாரென்று பொட்டுவிட்டுப் போய் விடுவார்கள்.அது இன, மொழி எல்லைகளைத்தாண்டி வந்து இதயத்துக்கருகில் அமர்ந்துகொள்ளும்.அப்படி மேடையில் முழங்கிய தோழர்கள் அந்த மூன்று நாட்களில் எல்லோரையும் ஈர்த்துக்கொள்வார்.

ஒரு மாநாட்டின் சிறப்புபேச்சு,அதில் விரிவாகத்தருகிற உலகமயமாக்களின் பின் விளைவுகள், பக்கவிளைவுகள் எல்லாம் ஒரு சேர பார்வையாளர்களைத் தாக்கமுடிவதில்லை.ஆனால் எங்கள் தோழன் மறைந்து போன இசைப் பாடகன் சுகந்தனின் குரலில் 'அடகு போகுதடா' என்கிற பாடல் எதிர்க்கருத்துக் காரர்களையும் இழுத்துக்கொண்டு வந்து கூட்ட நடுவில் போட்டு கருத்தை மாற்றும் வல்லமை கொண்டதானது கலைவடிவம்.

இரவு நேரங்களில் நடக்கும் கலை நிகழ்வுகளில் மட்டும் நடு இரவுவரை கூட்டம்  கொட்டக்கொட்ட முழித்திருக்கும். கஞ்சி போட்டுத்தேய்த்த மடிப்புக்குழையாத உர்ர் அதிகாரிகள் கூட நெகிழ்ச்சியான உடல்மொழியோடு குதூகலிப்பார்கள்.பஞ்சாப் தோழர்களின் பாங்க்ரா,அஸ்ஸாமித் தோழர்களின் பிகு நடனம்,மலையாளிகளின் சேர்ந்திசை,என அந்தந்த மாநிலத்தின் கிராமியì கலைகளை பெருமித்தத்தோடு பங்கு வைத்துவிட்டுப் போவர்கள்.தமிழகத்தின் சார்பில் அப்படியேதும் கைவசம் இல்லாதது போல வெறும் பார்வையாளர்களாய் இருந்து விட்டு வருவோம்.அல்லது சினிமாப் பாடல்களுக்கு ஆடிவிட்டு வருவோம்.

இந்த முறை ராஜஸ்தானின் சிக்கார் நகரத்தில் பிப்ரவரி 21 முதல் 23 வரை நடந்த மாநாட்டு கலை நிகழ்வில் ராஜஸ்தான் நாடோடிகளின் மகுடி இசையும் நடனமும் அறிமுகமனது.அஸ்ஸாமில் எங்களை வியப்பிலும் சந்தோசத்திலும் முழுகவைத்த பிகு நடனத்துக்கு இணையானது இந்த ராஜஸ்தான் நாடோடி இசை.மகுடிக்கருவியின் சுரைக் குடுக்கையிலிருந்து நீள்கிற இரண்டு குழல் வித்தியாசமானதாக இருந்தது.ஷெனாய் இசைக்கு மிக அருகில் வைக்கக்கூடிய நாதம் அதிலிருந்து வழிகிறது.துள்ளிசை போலத் தோன்றினாலும் அதில் சோகம் அடிநாதமாக இருக்கும்.

இந்தியா முழுக்க பரவிக்கிடக்கும் கிராமிய இசைகளின் விதிப்படியே மெதுவாக ஆரம்பித்து இறுதியில் வேகமெடுக்கிற லாவகம்.அந்த இசைக்கு நடனமாட இரண்டு பெண்கள் வந்திருந்தார்கள்.ஒருவர் கறுப்பு நிறம் இன்னொருவர் கலர்.அந்த கறுப்பு  நிற நடனக்காரரின் அசைவுகள்,பறவையைப்போல கைகளை விரித்துக்கொண்டு மார்பைக் குலுக்கிய படி நகரும் போது இதயத்தில் கயிறு போட்டு இழுத்துக்கொண்டு போனது.நேரம் ஆக ஆக அவருக்குஉடல் முழுக்க வியர்வை கோட்டியது.ரோமக் கண்ணளவுகூட முகமலர்ச்சி மாறாமல் தொடர்ந்தார்.

உதட்டோ ரத்தில் பிதுங்குகிற மோனப் புன்னகை ஆடலின் முத்திரையா அல்லது,சற்று தூக்கிய தெத்துப்பல்லின் வசீகரமா என்கிற பட்டிமன்றம் ஆடலின் பக்கமே சாயும்.நழுவும் துப்பட்டாவையும்,முகம்படரும் கூந்தலையும் சரிசெய்கிற லாவகத்தில் ஆடலின் ஆகிருதி கூடிக்கொண்டே போனது.கூட்டத்துக்குள் வீசியெறியும் பார்வையின் சிதறல்களை கையில் விழுந்த சிதறுதேங்காய் போல,மஞ்ச நீராட்டில் த்ரேகத்தில் தெறிக்கிற சிலீர்த்துளிபோல ஏந்திப்பொத்திக்கொள்ளவைக்கும்.ஒரே மெட்டிலான அந்த இசையை மீண்டும் மீண்டும் இசைத்தபோதும் சுவைகுறையாது கடந்து போனது. குதூகலம் ஓய்ந்து  இறங்கி மேடைக்கு ஒதுக்குப்புறத்தில் போய் கருப்புநிற பாவாடை,கம்மீஸோடு அவர் பீடி பற்றவைத்த போதும் கூட அதே பரவசம் தொடர்ந்தது.

ஊர் விழாக்களில் நரிக்குறத்திக் கூத்தில், பெண் வேடமிட்டவர்கள், கட்டபொம்மு நாடகத்தில் வெள்ளையம்மா வேடமிட்ட சகமாணவன்,விடுதி விழாவில் சினிமாப்படலுக்கு ஆடிய பாலாண்டி,குணாவின் நெருக்கம், பாண்டுகுடியில் உரசியபடியே அலைந்த சுரேஷ் விட்டுசென்ற கோகுல் சாண்டலின் மணம், திருநங்கைகளின் பறவையாடும் கண்கள் என எல்லாவற்றையும் குழைத்துக் கொண்டு வந்து சேர்த்தது அந்த சிக்கார் இரவு.உருவப்பட்ட விலா எழும்பு அந்தரத்தில் நிற்க ஆதாமும் ஏவாளும் ஒரே சாயலில் மயங்கிக்கிடக்கிறார்கள்.

நாயனக்காரரோடும்,தவில்காரரோடும் தெருக்கூத்து ஸ்ரீபார்ட்டுக்கள் நடத்துகிற முகபாவங்களும் சேஷ்டைகளும் கதைக்குள் கதையாகத்தொடரும்.தனி ஆவர்த்தனத்தில் பம்பை மேளக்காரர் எல்லையைத்தாண்டிக் கிந்திக்கிந்தி  வந்து ஆட்டக்காரியின் எதிரில் நின்று நெருங்குகிற தருணங்கள் கலைகளுக்குள் இருக்கும் பிணைப்பை உறுதி செய்கிறவையாகும். பெரும்பாலும் ஆட்டக்காரர்களும் மேளக்காரர்களும் வேறு வேறு ஊராகவே இருப்பார்கள்.இருந்தும் அவர்களுக்குள் இருந்து தெறிக்கும் அன்னியோண்யம்,தாளத்துக்கும் பாட்டுக்கும்,ஆடலுக்குமான ஒருங்கிணைப்பு வியப்பானதாக இருக்கும்.

ஆனால் எங்கள் தோழர் பாவலர் ஓம் முத்துமாரி அப்படியில்லை. அவருக்கு தகரத்தொண்டை. அப்படியே உறுமலை திரித்து பேச்சாக்கினால் கிடைக்கும் வாக்கியங்கள் போலிருக்கும் அவரது குரல். எம் ஆர் ரந்தாவின் அடிக்குரலை நான்கைந்து மடங்காக்கி சேர்த்து வைத்த சுருதி.ஜிப்பாசட்டை,சிகப்புத் துண்டு,லேஞ்சிக் கொண்டை,பொக்கை வாய் அதில் பீடி வைக்கத் தோதுவான மடிப்பு விழுந்த உதடுகள். நக்கலும் நையாண்டியும்,ரெட்டை அர்த்தச் சொல்லாடல்களும் சேர்ந்து கிறக்கம் கொடுக்கிற அந்தக் கலையில் நடுவே சிகப்பு வர்ணத்தின் அடர்த்தியான குரலோடு மக்கள் பிரச்சினைகளைப் பாடும் மகத்தான கலைஞன்.ரெண்டாவது துவக்கத்தில் காதுவளத்து பாம்படம் தொங்க தலையைச் சிலுப்பிக்கொண்டு அவர் களம் புகுந்தால் ஜனம் ஆரவாரம் கொள்ளும். தன் மாராப்பை ஒதுக்கும் போது ஆங்காரமெடுத்த கிழவியொருத்தியின் ஏளனம் மையம் கொள்ளும் பார்வையாளர் பகுதியை நோக்கி.

25.8.10

வெப்பம் அடைகாக்கும் வீடு.

வெப்பம் குடித்து சினந்த மண்ணில்
மேகம் அனுப்பிய ஆறுதல் வரிகள்.
வருடாந்திரமாகப் புதைந்து கிடந்த
பசுமையின் விதைகள் சீரற்ற
மரகதப் பளிங்கெனப்பாவும் காடு.

எடுத்துக் கொண்ட தானே
மீளப்போர்த்தும் குளங்களின் அம்மணம்.
அங்கிருந்து தவளைகள் நிரப்பும் இசை இரவு.
வேலிப்புதருக்கும் வெட்டவெளிக்கும்
அலைந்து கதறும் பன்றிக்கூட்டம்.

வெளுத்த துணியிலிருந்து
கிளம்பும் புழுங்கல் சுவாசம்.
கருத்த மேனியெங்கும்
கொப்புளம் வெடிக்கும் தார்ச்சாலை.
கடக்கும் நத்தையும் ஓணானும்
நாயும் நசுங்கும்  நாற்கரச்சாலை.

அப்பாடவெனச்சொல்லி
ஓய்வெடுக்கும் குளிர்பதனப்பெட்டி.
அணைத்திலும் ஊடுறுவித்
தகிப்பை விரட்டும் அடைமழை.
விரட்டப்பட்ட வெப்பம்
தஞ்சம் புகுந்து கொள்ளும்
ஒரு கவிதையாய்.

0
மீள்பதிவு

23.8.10

தித்திக்கிற நாட்களை நினவுபடுத்துகிறவன்.

பதிவர் மாதவராஜை  அடர்த்தியாக்கினால் கிடைக்கும் ஓவிய உருவமாக இருப்பார்  ராஜ். மாதவராஜிடம் உன்னிப்பாகக் கவனித்தால் மட்டுமே கிடைக்கிற தெக்கத்தி வார்த்தைகள், ராஜின் சுவாசத்தில் கூடத் தெரிந்து மொத்தமாகக் குவிந்து கிடக்கும். நன்றாகப் பாடுவதும்,தொடர்ந்து விகடம் சொல்லி ஈர்ப்பதுவும் ராஜின் அக்மார்க் குணங்கள். எனது  இருசக்கர வாகனத்தை ராஜின் கடைக்குக் கீழே நிறுத்திவிட்டுத் தான் நென்மேனியி லிருந்த  வங்கிக் கிளைக்குப்போவேன்.அந்த மூன்று வருடங்களும் தினப்படிக்கு சாயங்காலம் ஒரு மணிநேரமாவது பேசிவிட்டுத்தான் வருவேன்.

நேர்த்தி, சுத்தம், நேரம் தவறாமையோடு  மெல்லிதான ரசனைகள் மிகுந்த நண்பர் திரு ராஜ்.  'ஆயா ஹே சந்த்ரமா ராத்து ஆஜி'  என்று நான் பாடும் போது கூரை இடிந்து விழுகிற மாதிரி சிரித்துவிட்டு  'ஆயா இல்லை ஆதா'. 'ஆதாஹே சந்த்ரமா' என்றால் பாதியான நிலவே என்று பொருள் சொல்லுவார். முகம்மது ராபியின் நிலவுருகும் குரலை விகசித்தபடி நெடுநேரம் ஹிந்திப் பாடல் பாடுகிற நாட்களை நொறுக்கிப்போட்ட நாள் இது . இந்திய விமானப் படையிலிருந்து ஓய்வு பெற்று சாத்தூர் வந்த அந்த நான்கைந்து வருடங்கள் மௌனராகம் படத்தில் கார்த்திக் வந்துபோன காட்சிகள் போல கலகலப்பானவை. நினைவுகள் கனமாகப் பின்னிழுக்க மெலிதான சினிமாப் பாடல்கள் கேட்கிறது.

குட்டியின் நினைவுகளுக்கு.

22.8.10

தொயரம் (குழந்தை அடம்)

Can You Hear Me Now

Can you hear me now, I need to know
I’m growing weak and moving slow
Do you even know that I exist
Or am I the lowest on your list

donna - zambia


வாகனத்தின் ஒலிப்பான் மூன்று முறைக்குமேல் ஒலித்து ஓய்ந்துபோனது.தன்னிப்பானையோடு வாகனத்தைக்கடந்து போன நாகம்மாள் ஓட்டுனரைப்பர்த்துச் சபித்துக்கொண்டு போனாள். 'பொம்பளயப்பாத்துட்டா பூல் பூல்னு ஆரனடிச்சிருவான்,ரெண்டு நிமிசம் லேட்டாப்போனா என்னவா, அங்க போயி ராக்கெட்டா உடப்போறாங்க'க்ளீனர்ப்பையன் வண்டியைச்சுற்றி வந்து பார்த்தான்.அப்போது தான் வந்தமர்ந்த செல்லக்கண்ணு, தலை ஊசியைக்கடித்துப்பிளந்து முடிக்குள் சொருகினாள்.பவுடர் திட்டுத்திட்டா இருக்கு என்று சொல்லி மாரீஸ்வரி அவள் முகத்தைத் துடைத்துவிட்டாள்.

ஏ என்னத்தா சட்டி சுடுது சுடுசோறா,
ஆமா ராத்திரி பொங்கல,
எதுக்கு,
எல்லா எங்கய்யாவாலதான்,குடிச்சிட்டு ஒரே சண்டெ

இதற்குள் சாத்தூருக்கு கேட்கிற மாதிரி ஒலிப்பனை அமுக்கினான் ஓட்டுநர்.
எலே எங்கடா கிரகலட்சுமி இன்னுமா வரல,ரெண்டாம் நட சடயம்பட்டில எடுக்கனும்,ஓனர் நாற வசவு வைவார்டா'.


தூரத்தில் கிரகலட்சுமி ஓட்டமும் நடையுமாய் வந்துகொண்டிருந்தாள்.கையில் வைத்திருந்த கணக்குச்சிட்டை கீழே விழுந்தது,குனிந்து எடுத்தாள்.நிமிர்வதற்குள் வந்து அழுதுகொண்டே அவள் காலைக்  கட்டிக்கொண்டான் செல்லமகன் ஜீவா.அழுதழுது கண்கள் வீங்கியிருந்தது.

'நா...ஹ்ஹ்ஹ்..னும்..ஹ்ஹ்ஹ்.. வாரேன்...'
'இல்லடா, இன்னைக்கி சனிக்கெழமெ சம்பளம் வாங்கிட்டு,அம்மெ ஒனக்கு குட்டிக்காரும்,பூந்தியு வாங்கியாருவேனாம்'.

இந்த வார்த்தையில் சமாதானம் ஆகாத அவன் மீண்டும் பெருங்குரலெடுத்து அழுதான். அவனை தர தரவென இழுத்துக் கொஞ்சதூரம் கொண்டுபோய்  விட்டு விட்டு ஓடி வந்தாள்.அவன் இன்னொரு சந்துவழியே ஓடிவந்து
தீப்பெட்டியாபீஸ் வேன் கதவருகே நின்று அழுதான். புருசனை கெட்ட வார்த்தையில் திட்டினாள்.

'வந்தெ செனந்தீர வெளுத்துருவன் வெளுத்து'

என்று சொல்லி கீழே கிடந்த பருத்திமாரைக் கையிலெடுத்தாள்.பொறுமையிழந்த ஓட்டுனர் டமாரென்று கதவை சாத்திவிட்டு 'என்ன லெச்சுமி ஒன்னோட தெனோம் இதே ரோதனையா இருக்கு'கத்திக்கொண்டே மறுபக்கம் வந்தான்.அதற்குள் ஜீவாவுக்கு சுளீரென்று ஒரு அடி விழுந்திருந்தது.புழுதியில் புரண்டு துடிதுடித்து அழுதான்.

 துயரங்களின் போது குவியும் வெற்றிடம்  அந்த இடத்தை நிறைத்துக் கொண்டது. அருகில் நின்றிருந்த செவலை நாய் கூட தனது இயக்கத்தை மௌனமாக்கிக்கொண்டது.கடவுளே அசைத்தாலும் அசையாத மௌனம். அதையும் அவளே உடைத்தாள்


'செரின்னே நீங்க வண்டியெடுங்க இவெ இப்டித்தா தொயரங்கெட்டுவான்,சம்பளம்போச்சு'

என்று கண்கள் கலங்கினாள்.அதைப்பார்த்த ஓட்டுனருக்கு மனசு கஸ்டமாகியது.முகத்தைத் திருப்பிக்கொண்டான்.படாரென்று குனிந்து கீழே கிடந்த பையனைத் தூக்கிக்கொண்டு போய் ஓட்டுனர் இருக்கைக்குப் பக்கத்தில் உட்காரவைத்துவிட்டு 'ஏ லச்சுமி ஏறு போலாம்,எலே முத்து கதவச்சாத்து' சொல்லிவிட்டு வண்டியைக் கிளப்பினான்.

ஊர் முக்கு திரும்புகிற வரை விஸ்க் விஸ்க் என்று ஒலியெழுப்பிவாறு கேவிக்கொண்டு வந்தான்.க்ளீனர்ப்பையன் துண்டெடுத்து அவன் மூக்கைத் துடைத்துவிட்டான்.பாட்டுப்போட்டான்.குழந்தையின் அழுகை நின்று போனது. கடைசி இருக்கையில் இருந்த கிரகலட்சுமி அழுதுகொண்டிருந்தாள்.

21.8.10

சாமக்கோடாங்கி.

ஒற்றை நாயின் குறைப்புச்சத்தம் தூக்கத்தைக் கெடுக்கும். ஆளரவமற்ற நடு இரவில் காற்சலங்கைச்சத்தம் குலைநடுக்கும். ச்சூ ச்சூ வென நாய்களை அதட்டும் சத்தம் கேட்கும். கையில் இருக்கும் காண்டா விளக்கும் பெரிய மணியும் ஊருக்குள் சாமக்கோடாங்கி வந்துவிட்டாரென சங்கேத மொழியில் அறிவிக்கும். ஊரெல்லாம் முழித்தாலும் ஒரு வீட்டுக்கதவும் திறக்காது அடைந்துகிடக்கும். எதோவொரு மொழிபோலிருக்கும் தமிழில் குறிசொற்கள் இருக்கும். அந்த இரவை ஒரு அமானுஷ்யம் வந்து ஆக்ரமிக்கும்.

சாமக்கோடாங்கி பற்றி இன்னும் விடுபடாத புதிர்களை கிராமங்கள் அடைக்காக்கின்றன. அவர் நேராக சுடுகாட்டிலிருந்து தான் வருவார். மண்டையோடுகளில் மாந்த்ரீகம் செய்து அதை மாலையாக்கி அணிந்திருப்பார். அவர் ஊரில் நடமாடும்போது யாரும் எதிர்ப்படக்கூடது, அவர்கண்ணில் படுவது  மகாப்பாவம். தப்பித்தவறி யாரும் எதிர்ப்பட்டு விட்டாலோ ச்சூ ச்சூ வெனச் சொல்லிக்கொண்டு தன்னை மறைத்துக் கொள்வார்.  இப்படி ஊரிலுள்ள ஒட்டு மொத்த மக்களுக்குமான பூச்சாண்டியாக அவர் உருவகப்படுத்தப்படுவார். எதிர்க்கேள்வி கேட்கும் இளவட்டங்களை அதட்ட ஊரே ஒட்டுமொத்தமாக  திரண்டுவரும். வழிபடத் தகுந்தவராக இல்லாமல் வழிவிட்டு ஒதுங்குக்கிற ஒரு பயம் அவர்மேல் கவ்வி இருக்கும். காலபைரவன் என்னும் பெயர் கொண்ட சாமக்கோடாங்கி.

இந்த பயமும் அறியாமையும் மட்டும்தான் இன்னும் கூட கிராமங்களில் சாமக்கோடாங்கிகள் புழங்குவதற்கான சூழலை ஏற்படுத்தித்தருகிறது. ஒரு இருபத்தைந்து வருடம் வாழ்ந்த போது வந்துபோன சாமக்கோடாங்கிகள், நகர வாசம் வந்த பிறகு அவர்கள் ஒரு இரவைக்கூட அலைக்கழிக்க முயலவில்லை. இங்கே அலைக்கழிக்கப் படுவதற்கு வேறு வேறு காரணங்கள் ஆயிரம் இருக்கின்றன.

முழித்துக்கிடக்கும் ஜோடிகள் சபித்துக்கொள்ளும். முழித்துவிட்ட ஜோடிகள் வாழ்த்திக்கொள்ளும். இடம் மாறி வகையறாக்கள் பதட்டம் கொள்ளும். சிறுவர்களுக்கு பயமும் ஆர்வமும் முளைத்துக்கொள்ளும். ஒரு மனிதனின் வரவால் ஒரு இரவே தலை கீழாக்கப்படும். அந்த இரவின் ஒரு சிறு பகுதியை எடுத்துக்கொண்டு அவர் திரும்பிவிடுவார். அதற்குப்பிறகான இரவு இருள் கவிழ்ந்த பகலாகிவிடும்.

பகலில் திரும்ப வரும் போது, இரவில் அவர் சொன்ன அருள்வாக்குளின் பதவுறை பொழிப்புறை கேட்டுத்தெரிந்து கொள்வார்கள். பெரும்பாலும் கெட்டவைகள் எதிர்வரும் என்கிற எச்சரிக்கை மட்டுமே அவரது அருள் வாக்காக இருக்கும். அப்படி சொன்ன வீடுகள் அதற்கான பரிகாரம் செய்தே தீரவேண்டும். பசியும் வறுமையும் மிகுந்த அந்த மனிதன் பரிகாரப்பொருள்களை வாங்கிக்கொண்டு திரும்பிப்பாரமல் போய்விடுவார்.எதிர்முனையில் காத்திருக்கும் சாமக்கோடாங்கியின் குடும்பத்துக்கு கொஞ்ச நாள் பசியில்லாமல் கழியும்.

இது பரனில் இருந்து எடுத்து துடைத்து வைத்த பதிவு.


17.8.10

அவரவர் பாடு.

பள்ளிக்கூடப் பையை
தோளில் சுமக்கிற
மகனைப் பார்த்தததும்
மனதுக்குள் நேந்துக்கிட்டாள்
மதுரவீரா எஞ்சாமி
என்னோட முடியட்டும்
இந்தச் சாக்கடை நாத்தம்.

திரைப்பட,அரசியல்,வியாபார
பிரபலங்கள் வேண்டினார்கள்
இறைவா சக்திகொடு
ஏழேழு தலைமுறைக்கும்
இப்படியே தொடரவென

கடவுள் வேடமிட்ட
பிச்சைக்காரார் நேர்ந்துகொண்டார்
இந்த வீட்டிலாவது கருணை
மிச்சமிருக்கவேண்டுமென்று.

கடவுள் வேண்டிக்கொண்டார்
'எப்பா சாமி மனுசா
என்ன விட்டுர்றா' வென்று

16.8.10

சுதந்திரம்,மழைநண்பர்கள்,வலைநண்பர்கள்.

நல்ல வேளை இந்த முறை  செயற்கைப் பற்று உடலெங்கும் புடைத்திருக்க விறைத்துக்கொண்டு கொத்தளத்திலிருந்து கொடியேற்றும்  ஆட்சியாளர்களைப் பார்க்கமுடியாமல் போனது.நாடு பற்றியும் மக்கள் பற்றியும் வடிக்கிற நீலிக்கண்ணீர் பட்டுத்தெரிக்கிற தொலக் காட்சியிலிருந்து தப்பித்தாகிவிட்டது.நடிக நடிகைகளின் சுதந்திரதின பேருரைகளில் மாட்டிக்கொளாமாலும்,சிறப்புத் திரைப்படம் சிறப்பு மானாட மயிலாட,சிறப்பு சொறிந்து விடுதல் எல்லாவற்றிலிருந்தும் தப்பித்தாலும்  அதித்தயாரித்து தருகிற அதே சென்னையில் தான் இருந்தேன்.befi(tn) ன் மாநிலச் செயற் குழுக் கூட்டம்.

மதுராந்தகத்தில் முழிக்கும் போது ஊதக்காத்து வீசியது.நிஜம்மாவே மழைதன் பெய்திருக்கிறது.இப்படி நாட்கள் சிறுவயதிலிருந்தே சொல்லில் வடிக்க முடியாத உணர்வுகளைக் கொண்டுவரும்.நமக்குத் தெரியாமல் மழைவந்து நனைத்துப் போட்டிருக்கிற முற்றம்.வழக்கமான காலைப்பொழுது போலல்லாமல் ஓசைகுறைந்து,அமைதியோடு குளிர் குழைந்திருக்கும் அந்தக்காலை அவ்வளவு அலாதியானது.அன்றைக்கு அம்மா போடுகிற வரக்காப்பியின் வாசமும் அதன் சூட்டுக்கும்,வெல்லக்கட்டி இனிப்புக்கும் இருக்கும் கிறாக்கி சொல்லிமாளாது. கொடியில் காயப்போட்ட டவுசர் சட்டை நனைந்திருந்தாலும் கூட ஒரு குதூகலம்கூட வரும். அதோடு கூட மனதுக்குப்பிடித்த வேலவரையும்,பவுலையும் கூட்டிக்கொண்டு காடுகளில் ஈரத்தடம் பதித்துக்கொண்டு நடப்போம்.மண்புழுக்களின் பயணத்தை,பாப்பாத்திப்பூச்சியின் பஞ்சு தேகத்தை,ரயில்பூச்சியின் மஞ்சள் கோடுகளை பார்த்தபடி கண்மாய் வரை போய்வரும் நாட்கள் இனிதானது.

அந்த நாட்களை மூஞ்சியிலடித்தபடி குளிர்காற்று முத்துநகர் வண்டியை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.

நாங்கள் ஐந்துபேர் எல்லாவிளையாட்டிலும் ஒரே பக்கம் கிடைத்தால் விளையாடுவது இல்லையானால் அப்படி விளையாட்டுக்களை தெரிவு செய்துகொள்வது தான் பழக்கமாக இருந்தது.குஸ்தி,ஓட்டப்பந்தயம் போன்ற எதிரெதிர் விளையாட்டுக்களை எங்களுக்குள் வராமல் பார்த்துக்கொள்வோம்.இருந்தாலும் ஒரு கேலிப்பேச்சில்,சினிமா விவாதத்தில்,கட்சிப்புரிதலில் விவாதம் வரும் சூடுபிடிக்கும்,அது தனிநபர் தூற்றுதலாக வரும் போது கலைந்து போவதும் மறு பொழுது விடியும் போது ஓடிப்போய் ஒன்றுசேர்ந்து கொள்வதுமான சகஜம் எவ்வளவு புனிதமானது.
சினிமாவுக்கு ப்போவதெனத் தீர்மானமாகும்.அதுவும் செகண்ட்ஷோ.எல்லோரும் ஒன்றாகப்படுக்கிற ஊர்மடத்துக்கோ வேதக்கோயிலுக்கு கொண்டுபோகிற கோரப்பாய்க்குள் சட்டையை மடித்து ஒளித்து வைத்திருப்போம். டிக்கெட்டோடு சேர்த்து சிகரெட்டுக்கும்,பட்டர் பன்னுக்கும் காசு தேத்த வேண்டும்.வள்ளிமுத்துவிடம் காசு இருக்காது.சோர்ந்து போவான்.உடனே எம்ஜி 'மாப்ள ஒரு ரூபா கொடு' என்று வாங்கிக்கொடுபோய் வெட்டுச்சீட்டில் உட்காருவான்.ஜெயிப்பான். ஊரே திரும்பிப்பார்க்கிற சத்ததில் கூச்சல் போட்டபடி சைக்கிள் பறக்கும் சாத்தூரை நோக்கி.

 அப்படித்தான் குற்றாலத்துக்கு சைக்கிளில் போகிற திட்டம் தயாரானது. சிறுகச்சிறுக காசு சேர்த்தோம்.எங்கம்மா ,எலுமிச்ச சாதமும்,காணப்பயறு துவையலும் செய்தால் ஊர்மணக்கும்.அரிசி மட்டும் பொதுச்செலவில் வாங்கித்தந்தோம்.ஓயாமல் செயின் கழண்டு கழுத்தறுக்கும் எம்ஜியின் சைக்கிளை கொண்டுபோய் ஜானகிராம் சைக்கிள் கம்பெனியில் சரி பண்ணினோம்.வள்ளிமுத்துவுக்கு சைக்கிள் இல்லை.கிளியம்பட்டிக்கு பஸ்ஸில் போய் தங்கச்சி மாப்பிள்ளையின் சைக்கிளை இரவல் வாங்கிக்கொண்டுவந்தான்.லூசுக்கருப்பசாமியிடம் கெஞ்சி அவனது காத்தடிக்கும் பம்பை வாங்கிக்கொண்டோ ம்.மாசிலாமணியின் வீட்டில் சுடலைசாமி கோயிலுக்குப்போனார்கள் அவன் வீட்டில் சண்டைபோட்டு குற்றாலத்துக்கு வருவதாக உறுதிசெய்துகொண்டான்.வேலவர் வீடு சம்சாரி வீடு அவனுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் மாடு குளுப்பட்டுவது.படப்பு சரிசெய்வது.தோட்டத்தில் அடுக்கிவைத்திருக்கும் பருத்திமாரை கொண்டுவந்து சேர்ப்பதென, பாடுகள் இருந்தது.அதை ஆளும்பேருமாக சனிக்கிழையே முடித்துக்கொடுத்தோம்.

தூரல் விழுகிற நேரமெல்லாம் குற்றாலப்பேச்சே எங்களோடு இருந்தது. அப்பவும் கூட வள்ளிமுத்து 'ஏ மாப்ள ஒரு டவுட்டு கேலிபண்ணாத அவ்ளோ தண்ணி, மல மேல எப்பிடி இருக்கும்' என்று வெள்ளந்தியாக்கேப்பான்.அதுக்கு பவுலு 'ஒங்கக்கா, தங்கச்சிமாரெல்லாம் கொடத்துல சுமந்துகொண்டுபோய் ராத்த்திரியோட ராத்திரியா ஊத்திட்டுவருவாளுக' என்று கேலி சொல்லுவான். சிரிப்போம்.விடிந்தால் ஞாயிற்றுக்கிழமை. அன்றுதான் போவதாகத்திட்டம்.சனிக்கிழமை இரவு அந்தோணியின் அய்யாவை பாம்புகடித்துவிட்டது. சாத்துர் ஆஸ்பத்திரியில் அபாயக் கட்டம் நீங்க ரெண்டு பொழுதாகலாம் என்று சொன்னார்கள்.சிரிப்பும் கேலியுமாக இருக்கும் அவன் கலங்கியிருந்தான்.நாங்கள் எல்லோரும் அவனோடு இருந்தோம்.ஆஸ்பத்திரி வராண்டாவில் ஊதக்காத்து அடித்தது. அதன் பிறகு நாங்கள் ஒன்றாகக் குற்றாலம் போகமுடியவில்லை.வேலைக்கு போய், வசதியாகி,நண்பர்களோடு குடும்பத்தோடு போகிற நேரமெல்லாம் போகமுடியாத குற்றாலமும்,நண்பர்களும் கண்ணுக்குள் அருவியாவார்கள்.

நகர நாட்கள் அப்படியில்லை. 1990 ல் என் ஜி ஓ காலணியில் இரவு முழுக்க வயிற்றுவலியால் துடித்துக்கொண்டிருந்த மனைவியோடும் கைக்குழந்தையோடும் திகைத்த போது பத்தாவது வீட்டிலிருந்து மெக்கானிக் முருகேசன் மனைவியோடு ஓடிவந்தார்.கைக்குழந்தையாயிருந்த சூரியாவை அவரது மனைவி பார்த்துக்கொள்ள என்னோடு கூட வந்தார்.எதுத்த வீட்டில்தான் குடியிருந்தார், சக சிப்பந்தி அலுவலக உறவு.மறுநாள் காலை பத்துமணிக்கு வங்கியில் வந்து 'குட்மார்னிங் தோழர் என்ன ராத்திரி வீட்டுல லைட் எரிஞ்சது, அப்பிடியா அக்காவுக்கா, வயித்து வலியா, ஐயய்யோ' என்று வார்த்தையில் சோகத்தைக் குழைத்துக்கொடுத்தார்.அப்புறம், வீட்டில் என்ன என்ன முதலுதவி மருந்துகள் வைத்திருக்கவேண்டுமென்கிற பட்டியலையும் சொன்னார்.நகரம் எப்படி தன்னை பிரச்சினைகளில் இருந்து தனிமைப்படுத்திக்கொள்ளும் என்பது கேள்வி ஞானமாய்த் தெரியும், ஆனால் அனுபவித்த முதல் சம்பவம் அது.

அன்று மதிய வேளை இடைவேளையெல்லாம் எங்கள் வீட்டையும்,குழந்தைகளையும் பற்றிப்பேசிக்கொண்டே இருந்தார். அவர் போனப்பிறகு புதிதாக வந்த ஆபிஸர் மேடம் 'மனுச ரொம்பக்'கெட்டிக்காரன்,பேசிப்பேசியே பிள்ளப்பெற வச்சிருவான்' என்று சொன்னார்கள் சிரித்து கழித்தோம்.

அந்த நினவுகளோடே முத்து நகர் துரித வண்டியின் ஜன்னல் வழியோடியது தூரங்கள்.எல்லாம் தனிமையின் அழுத்தம்.அதை இப்படி நினைவுகளோடும் இன்னும் சில புத்தகங்களோடும் கடத்தவேண்டிய நிர்ப்பந்தம்.சனி இரவு வாங்கி வைத்திருந்த ஆனந்த விகடனில் தமிழ்ச் சினிமாவில் பாராவின் கவிதையை அச்சில் படித்துவிட்டுப் புரட்டும்போது 'தமிழ்ச் சினிமாவில்புதிய புலவர்கள்' என்கிற கட்டுரை இருந்தது.அசட்டையாக விட்டுவிடேன்.செங்கல் பட்டில் வண்டி நின்ற போது மணி 6.30 இன்னும் ஒரு மணிநேரம் ஆகும் என்று பக்கத்து இருக்கைக்காரர் சொன்னார்.மீண்டும் விகடனுக்குள் ஒளிந்து கொண்டேன்.புதிய புலவர்களின் புகைப்படத்தில் ஒரு தெரிந்த முகம்,ஆச்சரியம் ஆமாம் நமது 'ஆடுமாடு' பதிவர் ஏக்நாத். வம்சம், ஊலல்லா, உத்தமபுத்திரன் ஆகிய மூன்று படங்களுக்கு பாட்டெழுதி யிருக்கிறார். குற்றாலக் குளுமையோடும்,நேசமிக்க கால்நடைகளின் வாசத்தோடும், நிஜக்கிராம மக்களின் வலியோடும் இதையெல்லாம் குழைத் தோழமை வலிமையோடும் பாட்டுக்கள் வரும்.காத்திருக்கிறோம் தோழர் ஏக்நாத்.

14.8.10

ஊழல் மொய்க்கிற தேசம்.

எந்த ஊடகத்தைப் பார்த்தாலும் தலைப்புச்செய்திகள் இந்த தேசத்தை மூழ்கடித்துக்கொடிருக்கும் முடைநாற்றத்தைச்சொல்லும் சேதிகளாகவே இருக்கிறது.கேதன் தேசாய்,கில்,அமித்ஷா,செத்துப்போன ராஜீவ் காந்தி,போபால்,டௌ கெமிக்கல்,இப்படி இந்திய துனைக்கண்டத்தை ஆளும் அரசர்களும் அவர்களின் நேரடி ஏவலாட்களான உயர் அதிகாரிகளும்,அவர்களை இயக்குகிற பெருமுதலைகளும்  ஒருவருக்கொருவர் சளைத்தவரில்லை என்பதை நிரூபிக்க குற்ற விளையாட்டில் ஈடுபடுகிறார்கள். இதில் எதிர்க்கட்சி- ஆளும்கட்சி பேதமில்லாமல் எல்லோரும் ஜெயிக்கிறார்கள் தோற்றுப் போனது ஜனநாயகமும் அதைக் கட்டிக்காக்கும் மக்களும் தான்.

சென்ற வாரம் சிவகாசிக்கு அருகில் ஒரு வெடி விபத்து நடந்தது சட்டவிரோதமாக பட்டாசுதயாரித்தவர்களைப்பிடிக்கப்போன காவல் துறை மற்றும் வருவாய்த்துறை முதல் நிலை அதிகாரிகள் ஒன்பதுபேர் விபத்தில் சிக்கிக்கொண்டார்கள்.தேடுதல் வேட்டைக்குப்போனவர்கள் பலியான விபரங்களை முன்வைக்கும் செய்திகள் முரண்பாடுள்ளதாக இருக்கிறது.பத்திரிகைச் செய்திகளும் வாய்மொழிச் செய்திகளும் அரசு நிர்வாகத்தின் கையாலாகத்தன்மைக்கு மிகப்பெரிய உதாரணம்.

சிவகாசியைச் சுற்றி இருக்கும் கிராமங்களில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கும் தொழில் அமோகமாக நடைபெறுவது இன்றல்ல நேற்றல்ல.அதற்கு ஒரே காரணம் மோசமான கூலியும்,அமோகமான லாபமும் தான்.அதைக்கண்டு கொள்ளாத தொழிலாளர் நலத்துறை மட்டுமல்ல அந்தத் தொழிலைக் காபந்து பண்ணும் இன்னும் அதிகாமான துறைகளும் தான். பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழில் என்பது மத்திய கலால் துறை,மாநில விற்பனைவரித்துறை,வெடிபொருள் மற்றும் சுரங்கத்துறை,வருவாய்த்துறை,தொழில்துறை,மாசுகட்டுப்பாட்டுத்துறை என்கிற துறைகளின் கட்டுப்பட்டிலும்,கண்காணிப்பிலும் இயங்குகிறவை.ஆனால் அந்தந்த துறைகளின் கட்டுப்பட்டுத்திறமை என்ன என்பதை வருடா வருடம் நடக்கும் விபத்துக்கள் நாறடிக்கின்றன.

இது பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது மத்தியப்பிரதேசத்திலிருந்து இன்னொரு பூதம் கிளம்புகிறது.இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியான செய்தி இது.600 டன் வெடிபொருட்கள் காணவில்லை என்று கைபிசைகிறார் அதை ந்ர்வகிக்கும் நேர்மைமாறா உயர்திரு. உபாத்யாய்.அதோடு நில்லாது எனக்கு பொறுப்பில்லை என்கிறார்.எல்லாம் உண்மை.மக்கள் பொறுப்பில்லாமல் இருப்பதால் எல்லாமே இங்கு சாத்தியம்.
600 டன் வெடிபொருட்களுடன் 61 லாரிகள் மாயம்:தீவிரவாதிகள் கடத்தலா? சாகர், ஆக.13-

600 டன் வெடிபொருட் கள் ஏற்றப்பட்ட 61 லாரி களைக் காணவில்லை. இத னால் மத்தியப் பிரதேசத் தில் பரபரப்பு ஏற்பட்டுள் ளது. இவற்றை நக்சலைட்டு கள் கடத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலம் தோல்பூரில் உள்ள அரசு வெடிபொருள் கிட்டங்கியி லிருந்து இந்த வெடி பொருட்கள் ஏற்றிய லாரி கள் மத்தியப் பிரதேச மாநி லம் சாகர் மாவட்டத்தில் உள்ள கணேஷ் எக்ஸ் புளோ சிவ்ஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு அனுப்பப் பட்டன. மொத்தம் 61 லாரி களில் 600 டன்னுக்கும் மேற் பட்ட வெடிபொருட்கள் அதில் இருந்தன. ஆனால் இதுவரை ஒரு லாரி கூட வந்து சேரவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து வெடி பொருட்களை அனுப்பி வைத்த ராஜஸ்தான் எக்ஸ் புளோசிவ்ஸ் அன்ட் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பொது மேலாளர் உபாத் யாய் கூறுகையில், உரிய உரிமங்களுடன் வந்த லாரி களில்தான் இந்த வெடி பொருட்களை ஏற்றி அனுப்பி வைத்தோம். ஆனால் தற் போது ஒரு லாரி கூட வந்து சேரவில்லை என எங்களுக் குத் தகவல் வந்துள்ளது. ஆனால் இதற்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என்றார். இந்த லாரிகள் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை படிப்படியாக அனுப்பி வைக்கப்பட்ட வையாகும். அதில் டெட்ட னேட்டர்கள், ஜெலட்டின் குச்சிகள் இருந்தது.

இதில் அதிர்ச்சியூட்டும் செய்தி என்னவென்றால் சம்பந்தப்பட்ட கணேஷ் கெமிக்கல்ஸ் நிறுவனம் தற் போது பூட்டப்பட்டுள் ளது. அதன் உரிமமும் கடந்த மார்ச் மாதமே முடிவடைந்து விட்டதாம். பிறகு எப்படி இத்தனை டன் வெடி பொருட்களை அந்த நிறுவ னத்திற்கு அனுப்பினர் என் பது தெரியவில்லை. கணேஷ் வெடிபொருள் நிறு வனத்தின் உரிமையா ளர்களும் தலைமறைவாக உள்ளனர். இதனால் பாது காப்புப் படையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவர் கள் வெடிபொருட்களை நக்சலைட்கள் அல்லது தீவிரவாதிகள் கையில் ஒப்படைத்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு சூரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட டெட் டனேட்டர்கள், இதே தோல்பூர் பேக்டரியிலி ருந்துதான் டெலிவரி செய் யப்பட்டது என்பதால் 600 டன் வெடிபொருள் மாய மான சம்பவம்பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த பெண் சாமியார் பிரக்ஞா சிங் தாகூர் உள்ளிட்டவர் கள் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து சிறு பான்மை மக்கள் மீது பழி போட முயன்றனர்.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், இந்த பாணி யில் வெடிபொருட்கள் கடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள் ளது. இப்போது பெருமள வில் வெடிபொருட்கள் கடத்தப் பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

13.8.10

பொதுவுடமை எழுத்தின் மிகப்பெரிய ஆளுமை -ஜோஸ் சரமாகோ.

தனது 47 ஆம் வயது வரை வயிற்றுக்கும் கடிகாரத்துக்கும் இடையில் மல்லுக்கட்டிய மனிதராக குவியலுக்குள் கிடந்தவர்.கிடைத்த தொழிலில் எல்லாம் தன்னை இருத்திக்கொண்டு வாழ்வின் இடர்பாடுகளை நேரடியாகத்
தரிசித்தவர்.இளமைக்காலத்தை மரணத்தை எதிர்நோக்கியிருந்த பாட்டிதாத்தாவோடு உள்வாங்கிக்கொண்டவர். போர்ர்ச்சுக்கல் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினாராகத் தன்னை இணைத்துக் கொண்டவர்.படைப்பு சுதந்திரத்துக்கும் கட்சி ஒழுங்குக்கும் இடையில் நடக்கிற மாறாத விதி சரமாகோவின் உறுப்பினர் அட்டையை  மீளப்பெற்றது.

இருந்தும் தன்னை சாகும் வரை ஒரு கம்யூனிஸ்டாகவும் பொதுவுடமைச்சிந்தனாவதியாகவும் நிலை  நிறுத்திக்கொண்டவர்.தனது இருபத்துமூன்றாம் வயதில்'பாவத்தின் பூமி' என்கிற ஒரு முதல் ஒரு புதினத்தை எழுதிப்போட்டுவிட்டு திரும்பிப்பார்க்காமல் எழுத்தை விட்டுக்கடந்து போனவர்.ஒரு படைப்பாளியை, அவனது அவதானிப்பை,சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான அறச்சீற்றத்தால் இனம் காணக் காத்திருந்தது காலம். அதன் கருப்பு வெள்ளை வெளிப்பாடாக 'பல்தசாரவும் ப்ளிமுண்டாவும்' என்கிற நாவல் அச்சாகியது. அதுதான் உள் மற்றும் அயல் வாசகர்களை  தன்பக்கம் ஒருசேரத் திரும்ப வைத்தது.ஒரு மாலுமியின் மெல்லிய காதலோடு புற உலகத்தின் மீதான பலத்த விமர்சனம் அந்த நாவல்.

அதைத்தொடர்ந்து வெளியான 'ரிக்கார்டோ  ரேய்ஸ் இறந்த வருடம்' எனும் புதினம் உலக வாசகர்களின் கவனம் பெற்றது.  'ஏசு எழுதின சுவிசேஷம்'ஏசு கிறிஸ்து என்கிற மனிதனுக்குப்பின்னால் வீசிக்கொண்டிருந்த கற்பித வெளிச்சங்களை, மாய ஒளிவட்டத்தைத் துடைத்தது.மகதலேனா மரியாளின் கணவனாக, இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாக,தனது பாடுகளைச்சொல்லி இன்னொரு இயேசுவிடம் மன்றாடுகிறவனாக மீட்டெடுத்துக்கொடுத்தது மனித குமாரனை.

அந்தப் புதினத்தின் மீதான விமர்சனம்,மதபீடங்களின் கோபமாக மட்டும் மாறியது.சரமாகோவின் நவல் போர்ர்ச்சுக்கல்லில் தடை செய்யப்பட்டது.தேசப்பிரஷ்டத்துக்குள்ளாகி ஸ்பானியத்தீவுக்கூட்டத்திலுள்ள கோனாரியில் தஞ்சம் புகுந்து 18.7.2010 ல் அங்கேயே மடிந்தார்.மதம் எனும் நிறுவனம் ஆங்கிலத்தில்,போச்சிக்கீஸியில்,உருதுவில்,கோட்டோ வியத்தில் எந்த வடிவத்திலும் தன்னை விமர்சிக்க அனுமதித்ததில்லை என்பதற்கு சரமாகோ இன்னொரு ஆதாரம். 1998 ஆம் ஆண்டு அவருக்குக் கொடுக்கப்பட்ட இலக்கியத்துக்கான நோபல் விருது,இன்று உலகம் தழுவிய வாசகர்கள் கொடுக்கும் இறுதி அஞ்சலி,பத்துக்குமேல் ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட அவரது படைப்பாக்கங்கள் எல்லாம் ,நிழலைக் கொலை செய்த மேலாதிக்க நிறுவனங்களின் மேல் சாகாவரம் பெற்ற கேள்விகளைப் பாய்ச்சும் .

நன்றி ப்ரகோட்டி.ஆர்க்,காலச்சுவடு,விக்கிப்பீடியா.

10.8.10

கருங்குயிலின் நாதத்தோடு ரெண்டுகவிதைகள்.

சொற்கள் அயற்சியூட்டும்.என்னடா எப்ப பார்த்தாலும் ஒரே அழுகையும் புலம்பலும் என்கிற வெறுப்பு வரும்.ஆனாலும் கண்ணில் தட்டுப்படுக்கிற போதெல்லாம்.அவர்கள் இன்னொரு முறை கூட ஆழ்ந்து பார்க்க அழைப்பார்கள். எறிநட்சத்திரத்தைப்பார்த்த கண்கள் உடனடியாக ஒரு பச்சை மரத்தைப் பார்க்கவேண்டுமென்கிற பழக்கம் இருக்கிறது.தொடர்ந்து கெட்டது நடக்கும் வீட்டில் வலிய ஒரு நல்ல காரியம் நடத்தவேண்டுமெகிற சாங்கியமும் இதே விதிப்படிதான். கறுப்பிலக்கியமும்  அதுபோலத்தான். விடுதலையின் நிறம் என்கிற நாவலைப்படித்துவிட்டு ஒரு மனிதன் பெண்களை பழைய்ய மாதிரிப் பார்க்கவே முடியாது.ஒரு யுகத்தின் ஆணாதிக்கப்பழிச்சொல் நம் மீது கவிழ்ந்தே தீரும்.

திருவாளர் ஃப்ளிண்ட் ஒரு ஜமீந்தார்.அவரே ஒரு மருத்துவர்.அவரே ஒரு கல்வியாளர்.அவரிடம் விலைக்கு விற்கப்பட்ட கறுப்புப்பெண்ணின் வாழ்க்கை கற்பனைகளுக்கப்பால் கொடூரமானது.பகலில் துன்புறுத்துவதும் இரவில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்குவதும் ஒருபோதும் சாதாரண மனநிலக்கு திரும்பவிடாது.படிக்க நேர்கிற போது குலை பதறும்.அதைவிட அதிர்ச்சி கட்டிய மனைவியின் அனுமதியோடு அடிமைகளை பெண்டாள்கிற காட்சிகள்.பிறக்கிற குழந்தைகளுக்கு இனிஷியல் கிடையாது. ஆண்குழந்தைகள் உடனடியாக நாய்க்கூட்டிகளைப்போல் கண் திறக்கும் முன்னரே விற்கப்படும்.பெண்குழந்தைகள் எஜமானர் வீட்டிலே வளரும்.அதை அனுமதிக்கிற எஜமானரின் நாக்கில் ரத்தக்கவிச்சையோடு ஏச்சிலூறும். ஆனாலும் அவர்களுக்கு இரவு-பகல்,வலி-சுகம்,பசி-படையல் எல்லாம் அந்த சிறைக்கூண்டுக்குள்ளே தான். அவர்கள் விரும்பும் வாசம்.அவர்கள் தேடும் கதகதப்பு.வேறிடத்தில் அடிமையாகிக்கிடக்கும்.

அப்படிப்பட்ட தேடலில் ஒரு கருங்குயிலின் நாதத்தோடு இரண்டு கவிதைகள்.
இதோ கறுப்புக்குரல்கள் கவிதைத் தொகுதியிலிருந்து இரண்டு கவிதைகள். காதல் கவிதைகள்.இங்கே,இந்தப்பசலையில் வலையல்களும் அணிகலன்கலும் கழண்டு விழவில்லை.காதல் குறித்து நாம் சேர்த்துவைத்திருக்கும் விழுமியங்கள் கழண்டு விழுகின்றன.


சாக்குப்போக்குகள்.

பசியோடிருக்கும் காரணத்தால்
என்னைப்பிரிந்து செல்கிறாயா நீ.
என்ன, உன் வயிற்றின் அடிமையா நீ.

உன்னைப்போர்த்திக்கொள்ள வேண்டி
என்னைப் பிரிந்து செல்கிறாயா நீ
என் படுக்கையில் போர்வை இல்லையா என்ன

தாகமெடுப்பதால் பிரிந்து செல்கிறாயா நீ
அப்படியெனில் எடுத்துக்கொள் என்மார்பகத்தை

அது பெருகி வழிகிறது உனக்காய்.
ஆசீர்வதிக்கப்பட்டது
நாம் சந்தித்துக்கொண்ட அந்த நாள்.

(எகிப்தியர்.)

0

உதவாக்கரைக் காதலன்


காற்றாலான கால்சராய்
புயலாலான பொத்தான்கள்
'ஷோ ஆ' மண்மெத்தை
'கோண்டரில்' எதுவும் மிச்சமில்லை.

இறைச்சி சுமக்கும் கழுதைப்புலி.
தோற்பட்டையொன்றால் நடத்தப்படுவது;
நெருப்பின் அடியிலே விட்டுவைக்கப்பட்டிருக்கும்
ஒரு கண்ணாடிக்கோப்பையிலான கொஞ்சம் நீர்;

அடுப்பில் வீசப்பட்ட நீரின் ஒரு படியளவு
மூடுபனியிலான குதிரை
மற்றும் ஒரு நிரம்பிய கடவுத்துறை;

எதற்கும் பயன்படாதவன்
யாருக்கும் உபயோகமற்றவன்;
எதனால் நான் காதல்வயப்பட்டிருக்கிறேன்
அவனையொத்த மனிதனிடம்.

(அம்ஹாரா)

9.8.10

அங்குமிங்கும் - பராக்குபார்த்தல்.

சரவனா ஸ்டோர் நெரிசலில் இருந்து தெரித்து வெளியே வந்தபோது எதிர்த்த சாரியில் ஒரு கிண்ணம் பப்பாளி துண்டுகள் வாங்கிச்சுவைத்தது ஆசுவாசமாக இருந்தது.தின்றுகொண்டிருக்கும்போதே கடைக்காரம்மாவின் பையன் வந்தான் ' இந்த மதியானத்துல தூங்குது பாருபா கடயாண்ட குந்திகினா பொயப்ப பாக்லாம்,தூங்குனா இன்னா ஆவுறது'என்று என்னிடம் தன் மகனைப்பற்றி புகார் செய்தாள்.அதற்கு அவன் சொன்னபதில் பப்பாளியை கசப்பாக்கியது.போட்டுவிட்டு நடையைக்கட்டினேன்.இல்லை பிதுங்கி பிதுங்கி வெளியேறினேன்.நடைபாதையெங்கும் வியாபாரிகள் கோலியாத்தை எதிர்க்கிற தாவீதின் குரலோடு சரவனா ஸ்டோ ரொடு மல்லுக்கு நின்றார்கள்.புல்லாங்குழல் இசைத்து விற்றுக்கொண்டிருந்த வடநாட்டு பையன் என் சட்டைப்பையில் பிதுங்கிய ரூபாய்த்தாளை பாதுகாக்கச்சொன்னான்.என்னை விட அந்த இருபது ரூபாயின் மதிப்பு அவனுக்குத்தான் அதிகம் தெரியும்.

அங்கிருந்து புத்தகம் வாங்கவேண்டுமென்கிற தீர்மானத்தில் பாரதி புத்தகாலயம் போனேன்.சென்னை தேனாம்பேட்டை சிக்னலுக்கெதிரே போகும் இளங்கோ சாலையில் அந்த புத்தகக்கடை இருக்கிறது.அங்கே வாங்கிய புத்தகங்கள் சிலவும் சுட்ட புத்தகங்கள் பலவும் என்னோட கையிருப்பு.கடையில் ஆறு புத்தகங்கள் சுடச்சுடக்கிடந்தது. லதா ராமகிருஷ்ணனின் மொழியாக்கத்திலும் தொகுப்பிலும் வந்த கருப்புக்குரல்கள் கவிதைத்தொகுப்பு,இலாவிசெண்ட் எழுதிய தமிழ் நிலமும் இனமும்,அப்புறம் இரா.முருகவேள் மொழிபெயர்த்த ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் மூன்றும் வாங்கினேன். சட்டைப்பயில் கணம் குறைந்தது.தெரிவுசெய்த மற்ற புத்தகங்களிடம் வாய்தா வாங்கிக்கொண்டு கிளம்பியாயிற்று.

அரசு விரைவுப்பேருந்தில் பயணம். வண்டி ஏறும்போது விக்கிரவாண்டி உணவு விடுதிக்கு போகக்கூடதென்று வேண்டிக்கொண்டேன்.அப்படியே உன்னால் முடியாது போனாலும் அந்தநேரம் பார்த்து உரக்கத்தையாவது கொடுத்துவிடு கடவுளே என்று துணைக்கோரிக்கையையும் வைத்தேன்.பலிக்கவில்லை.மூத்திர நெடியும்,கட்டாயக்குரலும் உலுக்கிப்போட எழுந்து கீழிறங்கிப்போனேன்.வயிறு இரைச்சல் தாங்க முடியவில்லை.ஒரு பட்டர் பண் போதுமென்று வாங்கினேன்.பரவாயில்லை எட்டுரூபாய்தான் தீட்டினான்.

வண்டி மீளக்கிளம்பியதும் அந்த தாய்லாந்துக்காரப் பயணி மீண்டும் சத்தமிட்டான்.'நீங்கள் இந்தியர்கள் எல்லோரும் மோசடிப்பேர்வழிகள்' என்று ஆங்கிலத்தில் உரக்கத் திட்டினான். பக்கத்து இருக்கையில் இருந்த ஐடி ஜோடி ஆங்கிலத்தையும் நாட்டுப்பற்றையும் எடுத்துக்கொண்டு எதிர் மல்லுக்குப் போனார்கள்.நீங்கள் இளைஞர்கள் பொறுப்பற்றவர்கள் அநீதியைக்கண்டு ஆத்திரம் கொள்ளத்தவறியவர்கள் என்று மீண்டும் கத்தினான்.'கூர்க்கா நல்ல மப்புல இருக்கான்' என்று பக்கத்துப்பயணி சொன்னார்.ஒருவேளை அவன் மதுக்கிறக்கத்தில் கூட இருக்கலாம்.
அவன் சொன்னதில் தவறேதும் இருப்பதாகப்படவில்லை.     

நேற்று களவானி படம் பார்த்தோம் திருட்டு விசிடியில் தான்.அது அயல் சினிமாவிடமிருந்து களவாங்காத மண்னின் கதை.ரெண்டு ஊர்.பகை. கொலை விழுகாத கதை.விமல் குழுவும்,கஞ்சாக் கருப்புவும் சேர்ந்து வயிற்றைப்புண்ணாக்குகிறார்கள்.எந்திரன்களை அடக்குகிற விசைப்பொத்தான்கள் இப்படியான நேர்மையான கதைகளில் தானிருக்கிறது என்று உரக்கச் சொல்லவேண்டும்.

6.8.10

நம்பிக்கையின் நாட்கள்.

அந்தப் பயணம் இன்னும் பாத ஒலிகளோடு கூடவே வருகிறது. சென்னைப்புகைமண்டலத்தின் துகள்கள் இன்னும் தேகமெங்கும் ஒட்டியிருக்கிறது.நாங்கள் தங்கியிருந்த BEFI guest house ன் இரவுப்பொழுதுகள் ஒரு மாணவர் விடுதியின் நாட்களைப் புதுப்பித்துக்கொடுத்தது.பெரு நகர உணவுவிடுதிக்களுக்குள் போய்த்திரும்பி வருவது பேய்பிடித்தது  போலாகிறது. அரிசியை விளைவித்த நிஜ விவசாயி ஒரு கவளம் பருக்கையைக் கூட தின்று திரும்பமாட்டார்.

இருந்தும் வாழ்க்கை அங்கே இருக்கிறது. ஜனங்கள் அங்கே குவிகிறார்கள்.தமிழகத்தின் தலைமை அங்கே இருக்கிறது.அவற்றைத் தீர்மானிக்கிற மினுமினுப்புகள் கூட அங்கே தான் இருக்கிறது.ஜாதி,மத,இன பேதம் மட்டுமல்ல அரசியல் பேதமற்ற ஒருங்கிணைப்பை ஒரே இடத்தில் குவிய வைக்கிற சினிமாவும் அங்கிருந்துதான் கிளம்புகிறது.

ஒரு  நூறு ஆண்டுகால சினிமாவினால் இங்கே ஐந்து முதல்வர்களைத்தயாரித்து தர முடிந்திருக்கிறது.ஆனால் அங்கிருந்து தரமான சினிமாவைப் பெறமுடிந்திருக்கிறதா என்கிற கேள்விக்கு தயங்கித் தயங்கித்தான் பட்டியலிட முடியும்.எல்லாப்படைப்புகளும் ஒருவித்தத்தில் அதனதன் இடத்தில் இருக்கிறது.என்கிற பெருந்தன்மையான கோணத்தில் அலசினால் கூட தமிழ்சினிமாப் படைப்புகள் எல்லாமே ஒரே வறையறைக்குள் இருப்பத்தாக சூடத்தில் சத்தியம் பண்ணிச் சொல்லலாம்.காதல்,குடும்ப செண்டிமெண்ட்,நல்லவன் வாழ்வான் என்கிற மூன்று ஊடு சரடை உருவி எடுத்து விட்டால் சினிமாவில் மிஞ்சுவது சில சொற்ப படைப்புகள் தான்.

அப்படி மிஞ்சுகிற படங்களில் சிலவற்றை இயக்குனர் மகேந்திரன் கொடுத்திருக்கிறார்.முள்ளும் மலரும்,உதிரிப்பூக்கள்,நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற திரைப்படங்கள் நமக்கு மட்டுமல்ல திரைத் துறையிலிருப்பவர்களுக்குக் கூட இன்னும் மலைப்பான படங்களாகவே இருக்கிறது.அப்படி மலைக்கவைக்கிற ஒரு படைப்பாளியின் அருகில் இருந்துகொண்டு சினிமா குறித்து பேசித் திரும்பியிருக்கிறோம்.

அவரைப்பற்றி பேசுகிற சாக்கில் இயக்குனர்கள் திரு பாலுமகேந்திரா,திரு ராதாமோகன்,திரு தாமிரா ஆகியோர்களிடமும் சமகால இலக்கியம் அரசியல் குறித்தும் பேசித் திரும்பியிருக்கிறோம்.இரண்டு காமிரா,மற்றும் உபகரணங்க ளோடு பெருநகரப்பேருந்தில் பயணம் செய்து சில நேரம் ஆட்டோ வில் பயணம் செய்து பிரபல சினிமாப் படைப்பாளிகளைப் பேட்டியெடுத்து திரும்பியது மலைப்பான விஷயம் தான்.பயணத்தின் நயமான பக்கங்களை தீராதபக்கங்களில் தோழன் மாது இதைப்பற்றி விரிவாக எழுதியிருக்கிறான்.

ஆனாலும் இன்னும் விடுபடமுடியாமல் அதற்குள்ளே அமிழ்ந்துபோன நிகழ்வொன்று உண்டு.அது ரெட்டைச்சுழி படத்தின் இயக்குனர் 'தாமிரா'வினுடனான சந்திப்பிலிருந்துதான். ஒரு பாலத்தின் சுவரில் அமர்ந்து கொண்டு தீவிர இலக்கியம் பேசுகிற மனிதனாக இன்னும் கூடத் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடிந்திருக்கிற அசலான கலைஞன்.அங்கிருந்து தோளில்கைபோட்டு அழைத்துக் கொண்டுபோய் வீட்டில் இருக்கிற தானுண்ணும் பதார்த்தங்களை பகிர்ந்து கொடுக்கிறார். ஒரு சிநேகிதனோடும் பசியோடும் அன்பைப் பழகிய நாட்களை மீட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் திரையுலகத்துக்கு.அவர் பேசிய போது கிழித்து எறியப்பட்ட தீக்குச்சிகள் இன்னும் கனன்று கொண்டிருக்கிறது.அது நம்பிக்கையின் ஜ்வாலையை அடைகாத்து வைத்திருக்கிறது.

தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்துக்கு எதிர்ச்சாலையில் தலைதெரிக்கும் வேகத்தில், நெரிசலில். முன் செல்லும் வாடகை சொகுசு உந்துவில் உரசி விழுகிறான் ஒரு இளைஞன்.அவனுக்கும் அவனது இருசக்கர வாகனத்துக்கும் பட்ட அடியும் வாகன இரைசலில் கானாமல் போகிறது.அதை அமுக்கி விட்டு சொகுசு உந்து வண்டியோட்டி பறித்த ஐநூறு ரூபாய்க்காக குரல் கொடுக்க யாருமற்ற அந்த எந்திரச்சூழலில். '..தா என்று கோப்பளிக்கிற ஆட்டோ க்காரரின் கோபத்தில் இருந்து கிளம்புகிற நம்பிக்கை.

பாண்டி பஜாருக்கு திரும்புகிற தெருவில் ஒரு பதாகை தொங்குகிறது. அதில் தனியார் வங்கிகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் சங்கம் என்கிற பெயர். அந்தப் பெயர் எந்த நம்பிக்கையை விதைக்கிறதோ அதே நம்பிக்கை.ஒரு ஆளும் வர்க்கத்தின் பிரதி நிதியாக இருந்துகொண்டு ஊழலுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கும் திரு உமா சங்கரின்  நம்பிக்கை எதுவோ அதே நம்பிக்கை.அப்படியான நம்பிக்கைதான் இந்த வியாபார சினிமா உலகத்துக்குள் தன்னை பொருத்திக்கொள்ள முடியாமல் போராடிய இயக்குனர் மகேந்திரனின் நம்பிக்கை. அவற்றை எல்லாம் சொல்ல ஒருநாள், ஒரு பதிவு போதாது.

இன்னும் நிறைய்ய பேசலாம்.