Showing posts with label எதிர்வினை. Show all posts
Showing posts with label எதிர்வினை. Show all posts

30.5.10

வலையுலகிலும் தொடரும் வன்கொடுமை.

அன்பிற்கினிய தோழர்களே....
வணக்கம்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் முடியப்போகிறது இந்த வலையுலகத்துக்கு வந்து. தயங்கித்தயங்கி உள்ளே வந்த என்னைத் தாங்கிப் பிடித்தவர்களின் பட்டியல் மிக நீளமானது.அவர்கள் எல்லோருக்குள்ளும்  ஊடுசரடாக ஓடுவது மனிதாபிமானம்.
 என்னோட,தோழன்,பாரா,ராகவன்,கதிர்,வானம்பாடி,நேசன்,கும்கி
(ரோஷக்காரன்),பாலாஜி,ஆடுமாடு,வெயிலான்,ரமேஷ்,சரவணர்கள்,harikaran,
இர்ஷாத்,சீமான்கனி,பெண்தோழர்கள்,முல்லை,அருணா,தாரணி,தீபா,
லாவண்யா,பத்மா,சுந்தரா,மதார்,மழை,முத்துலட்சுமி,கலகலப்ரியா,இப்படி இன்னும் நீண்டுகொண்டே போகும்..யாரும் விடுபட்டுப் போனதாக எண்ண வேண்டாம் எல்லோரிடத்திலும் அன்பிருக்கிறது.

இந்தவார நட்சத்திரமாக அறிவித்த தமிழ்மணம் குழுவுக்கும்.எனது வலைப் பக்கத்துக்கு வருகை தந்த அணைத்து நண்பர்களுக்கும்.எனது பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்ட ப்ரியமானவர்களுக்கும்,ஓரளவுக்கு சுமாராக இருந்த என் எழுத்தை தட்டிக்கொடுத்து ஊக்குவித்த எல்லோருக்கும் என் அன்பும் வணக்கமும்.நெஞ்சாந்த நன்றியும்.

ஆனால் ஒரு சின்ன நெருடலிருக்கிறது அதை இப்போது பகிர்ந்து கொள்ளாமல் போனால் வேறு சரியான நேரமில்லை.

எல்லோரிடத்திலும் எழுத்திருக்கிறது, சின்னச்சின்ன குறைகளோடு.அவை குறைகளில்லை எழுத்தின் படிகள்.அப்படித்தான். குற்றம் பார்க்கின் சுற்றமில்லை. நூறுசதவீதம் சுத்தமான எழுத்து படைப்பு என்பது நெட்டுருப்பண்ணும் மெக்கலே பரீட்சையில்கூட இல்லை. அப்படியிருக்கும் போது படைப்பில் அது சாந்தியமில்லை.சிலருக்குப் பிடிக்கலாம், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் பொதுவான நியாயம் என்ற ஒன்றிருக்கிறது.ஆண்களே சைக்கிள் ஓட்டாத காலத்தில், கடயத்தில், ஒரு பெண் சைக்கிள், ஓட்டியதைப்பாத்ததும் மஹா கவி பாரதிக்கு ஒரு பொறி வந்தது அதுவே மிகச்சிறந்த கவிதையாகவும் வந்தது. 'அக்கினிக்குஞ்சொன்று கண்டேன்'.

அதுபோலத்தான் வலையெழுத வந்தவர்களில் மிகையாகப் பெண்கள் வருகிற இந்த புது வரத்தை கையிலேந்திக் கொண்டாட வேண்டும். சின்னச் சின்னத் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் அதுதான் தன்னை எழுத்தாளன் என்று நிலை நிறுத்துகிற செயல். அதை விட்டு விட்டு விமர்சனங்களைத் தாங்க முடியாமல் பெண்களை ஆண் எனும் ஆங்காரத்திலும், வக்கிர மொழியிலும் வசைபாடுவதை ஒரு போதும் படைப்பென்றும், எழுத்தென்றும் கூறவே முடியாது.நான் எழுதுகிற எழுத்தை, படைப்பை எனது தாய், என் மனைவி,என் மகள் மட்டுமல்லாது பக்கத்து வீட்டுப்பெண்களும் படிக்கிற மாதிரி எழுதினால் மட்டுமே அது படைப்பு. அப்படியில்லாதவை காக்கூசில் வெளியேறும் அருவருப்பு.அதை எழுதுவது எல்லாம் தெரிந்த ஏகாம்பரக் கம்பனாக இருந்தாலும் கூட, அது பீச்சியடிக்கும் ப்ளஸ் அவுட் தண்ணீரில் அடித்துப் போகும்.

மனிதகுல வரலாற்றில் எத்தனை கோடி வருடங்கள், எத்தனை கோடி விலங்குகள் எச்சமிட்டுப் போயிருக்கும். எங்காவது, ஏதாவது உயர்ந்த பிறப்பின் எச்சங்களுக்கு ஏதும் தடயமிருக்கிறதா நர்சிம்? நீங்கள் நம்பும் பிறப்பின் அடிப்படையில் எச்சமிட்ட உயர் பிறப்பின் எச்சங்கள் ஏதும் அருங்காட்சியகத்தில் இருக்கிறதா?.இருந்தால் கொண்டுவந்து வலையுலகுக்கு காண்பியுங்கள் அப்புறம் பூக்காரியின் பிறப்பு பற்றியும், இன்னபிற பிறப்புகள் பற்றியும் பேசலாம்.ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்  பிறப்பில் குறைந்தவர்கள் என்று நம்பும் யாரும் அடுத்தவர்களை இழிவாகப் பேசுவதில்லை.உங்கள் குடும்பத்திலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது ஒருபோதும் உங்களுக்கு ஞாபகம் வருவதில்லையா? உங்களுக்கென்ன மல்டிபிள் டிஸாடர்டர் சின்றோம் கோளாறு ஏதும் இருக்கிறதா?.

இன்னொரு 'கக்கூஸ்' கார்க்கி, 'குத்துங்க எசமான் குத்துங்க இந்தப்பொம்பளைங்க எல்லாமே இப்படித்தான் என்று பின்னூட்டமிட்டாராமே?.

நீங்கள் சரக்கடிப்பதை வாந்தியெடுப்பதை,விபச்சாரி வீட்டுக்குப்போய் உயிர்த்தரத்தில் உதை வாங்கியதைப் பதிவென்று சொல்லிப் பீத்தலாம்.பெண்கள் எழுதினால் என்ன வந்து குடையுது கார்க்கி.

பின்னூட்டமிடும்போது ஜாகிரதையாக எழுதவேண்டும்.நீங்கள் கண்ணாடி முன்னால் நின்று மீசையைச் சரிசெய்கிற நேரத்தில் பெண்கள் எதைவேண்டுமானாலும் சாதிப்பார்கள்.. அதில் பூக்காரன் பொண்டாட்டி கார்ப்பரேட் கம்பன் பொண்டாட்டி என்கிற பேதம் ஏதுமில்லை.அதில் நடு ரோடு,குளிரூட்டப்பட்ட அறை எல்லாம் இரண்டாம் பட்சம்.



முன்னதாக தோழர் தீபாவை இழிவு படுத்திய ஆ'ண் பதிவர்களுக்கும்,இப்போது தோழர் சந்தணமுல்லையை unihilate பண்ணும் மூத்த பதிவர்களுக்கும் ஒன்று. இப்போது கூட உங்கள் சறுக்கலை சரிசெய்ய அவகாசம் இருக்கிறது.வேறு ஏதாவது இறுமாப்பு இருந்தால் இடிந்து விழும் ஜாக்கிரதை.

நண்பர்களே, தோழர்களே..

சித்திரக்கூடம் என்கிற வலைப்பக்கத்து  எழுத்தாளர் தோழர் சந்தணமுல்லையை.ஒரு பெண் என்பதற்காக, பூக்காரி என்கிற புனைவின் மூலமாக மிகக்கேவலமாக எழுதியிருக்கிறார் பதிவர் திரு.நர்சிம்.இது கண்ணகி பிறந்த நாடு. 'தேரா மன்னா'என்கிற சினம் தெறிக்கும் சொல்லெங்கும் தமிழ் எழுத்தில் விரவிக்கிடக்கிறது.அரசியலில்,சினிமாவில்,எம் சோதரத் தங்கைகள் தமிழீழத்தில்,ரேஷன்கடையில்,புலம்பெயர்நாடுகளில் இழிவு படுத்தும்போது துடிக்கிற கீபோர்டின் எழுத்துக்கள் இப்போதும் துடிக்கவேண்டும்.முதலில் கூரையேறிக் கோழி பிடிப்போம்.நமது கணினித்திரை ஊடாக வழிந்தோடும், இந்தச் சாக்கடையைச் சரிசெய்வோம்.மகாகவி பிடித்த எழுத்தாணியின் மறுரூபம் இந்த கீ போர்டின்  பொத்தான்கள்.

வெறுமனே,கும்மியடிப்பதற்கும்,சொரிந்துவிடுவதற்கும் உருவானதல்ல வலையெழுத்து என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.அதுதான் எழுத்துக்கு நாம் செய்கிற குறைந்தபட்ச மரியாதை.அங்கீகாரம்.

தோழர் தீபாவுக்கு வந்த முதல் ரோஷத்தின் நீட்சி இது. இன்னும் தொடரவேண்டும். தொடருங்கள்.

http://deepaneha.blogspot.com/2010/05/blog-post_30.html
http://mathavaraj.blogspot.com/2010/05/blog-post_30.html