Showing posts with label அம்பேத்கர். Show all posts
Showing posts with label அம்பேத்கர். Show all posts

8.8.16

கொழுந்துவிட்டெரியும் உனா நெருப்பு.



மாட்டைத்தின்கிற நாங்கள் மாடுபோல அடிவாங்குகிறோம்
மனிதர்களைக்கொல்லும் நீங்கள் என்ன மனிதக்கறியா தின்கிறீர்கள்

மொத்த இந்திய தலித் கணக்கெடுப்பில் குஜராத் வெறும் 2.33 சதவீதம் மட்டுமே பங்குவகிக்கிறது, தலித்துக்களுக்கெதிரான வன்கொடுமைகள்  50 சதமானத்துக்குமேல் அங்குதான் தலைவிரித்தாடுகிறது.

மாட்டுத்தோல்வைத்திருந்ததாக பழிசுமத்தி நான்கு தலித் இளைஞர்கள் பொதுமக்கள் முன்னிலையில் தாக்கப்பட்ட விவகாரத்திற்கு எதிராக எழுந்த பொறி இப்போது தேசமெங்கும் பற்றிப்படர்கிறது.குஜராத் தலித்துகளுக்கு இது முதல் வலியல்ல.அதன் வரலாறு நெடுகிலும் ரணங்களும் அவமானங்களும்,வன்கொடுமைகளாய் சிதறிக்கிடக்கிறது. வர்ணாசிரமப்பாடுகளின் பின்புலத்தில் அசுத்தமானவர்களாக ஒதுக்கப்பட்ட தலித்துகள் சந்திக்கும் கொடுமைகள் ரத்தக்கண்ணீர் வரவழைப்பவை என்று சாடுகிறார் குஜராத் பகுதியின் தலித் மனித உரிமைப்போராளி, நவசர்ஜன் அமைப்பின் ஸ்தாபகர் மார்ட்டின் மக்வான்.
1986 ஆம் ஆண்டு தலித் கூலித்தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி நில உரிமைகேட்டும், கூலிச்சுரண்டலை எதிர்த்தும் போராட்டம் நடத்திய மார்ட்டின் மக்வானின்சக ஊழியர் 1986 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.தனது தோழனின் உயிரிழப்பை உரமாக்கி 1988 ஆம் ஆண்டு நவசர்ஜன் என்கிற அமைப்பை உருவாக்கினார் மக்வான்.

2012 ஆம் ஆண்டு சுரேந்திரநகர், தாங்கத் என்கிற ஊர் திருவிழாவில் கடைகள் போட தடைவிதித்த பார்வார்ட் ஜாதியினருக்கும்,தலித்துகளுக்கும் இடையே  மோதல் உருவானது. குஜராத் காவல் துறையின் துப்பாக்கிமுனைகள் தலித்துகளின் மார்பை மட்டுமே குறிவைத்தன.நான்கு தலித்துகள் அரசபயங்கரவாதத்துக்குப் பலியாகினார்கள்.அதற்கெதிராக தொடுக்கப்பட்ட வழக்கு இன்னமும் முடிந்தபாடில்லை.சாட்சிகள் கலைக்கப்பட்டதால் தீர்ப்பெழுத தினறுகிறது நீதிமன்றம். நீதித்துறையும் அரசாங்கமும் காட்டுகிற ஓரவஞ்சனையால் மதர்த்துப்போன ஆதிக்க மனோபாவம்தான் நடுத்தெருவில் கட்டிவைத்து உதைக்க ஊக்கம்கொடுக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கான தேசீய ஆணையம், மற்றும் தேசியகுற்றப்புலனாய்வு நிறுவணம் ஆகிவற்றின் அறிக்கைப்படி குஜராத்தில் வசிக்கும் தலித்துகளின் எண்ணிக்கை மொத்த இந்திய தலித்துகளில் வெறும் 2.33 சதவீதம் மட்டுமே. ஆனால் அவர்கள் மீது ஏவப்படும் வன்கொடுமை மொத்த இந்திய வன்கொடுமைகுற்ற எண்ணிக்கையில் பாதிக்குமேல் இருக்கிறது.எனில் குஜராத் என்ன மாதிரியான மாநிலம் என்பது தெளிவாகிறது. மாநிலம் முழுவதும் 1569 கிரமங்களில் திரட்டப்பட்ட98000 சாட்சியங்களின் ஊடாக,தீண்டாமையைத்தெரிந்துகொள்வோம் என்கிற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் 98 வகையான வன்கொடுமைகள் நிகழ்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆய்வில் சமர்ப்பிக்கப்பட்ட பாகுபாடுகளை சரிசெய்யாமல் மாநில அரசு அஹமதாபாத்திலுள்ள cept பல்கலைக்கழகத்தின் உதவியோடு அது ஒரு எதிர் ஆய்வுக்கு உத்தரவிட்டது. அந்தக் கண்துடைப்பு ஆய்வு தலித்துகள் வசிக்காத சில ஊர்களில் விசாரித்துவிட்டு தீண்டாமை என்கிற பேச்சுக்கே இடமில்லை என்று அறிக்கை சமர்ப்பித்து கோப்பை மூடிவிட்டது.
ஜாதிய அடிப்படையிலான துப்புறவு ஒழிக்க அரசியலமைப்புச்சட்டம் வலியுறுத்திய போதிலும் குஞராத்தில் அது அதிகரிக்கவே செய்கிறது.கல்வியின் வழியே வேலைவாய்ப்பு என்பது அங்கு அர்த்தமற்றதாகிப்போனது.தாழ்த்தப்பட்ட்வர்களுக்கு ஒதுக்கப்பட்ட 64000 பணியிடங்கள் நிறப்பப் படாமலே வீணடிக்கப்பட்டது. 54 சதமான அரசுப்பள்ளிகளில் தலித்த் மாணவர்களுக்கு தனி இருக்கை ஒதுக்கப்படும் அவலம் தொடர்கிறது.பெரும்பாலான பள்ளிகளில் தலித்குழந்தை கள் கழிப்பறைகளை கழுவ கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இப்படிக் கல்விக்கூடங்களில் கடைப் பிடிக்கப்படும் பாகுபாடுகளால் இடைநிற்றல் பெருகுகிறது.அதனால் மறுபடியும் சாதி சார்ந்த இழிதொழிலுக்கு போயே தீரவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது.

11.7.16 அன்று உனா- மோட்டா சமிதியாலாவில் பசுத்தோலை வைத்திருந்ததாக் குற்றம் சுமத்தி நான்கு இளைஞர்களை பசுபாதுகாப்பு கமிட்டி இழுத்துவந்தது.சந்தடி மிகுந்த சந்தையின் நடுவில் ஒரு வாகனத்தின் முன் கட்டிவைத்து இரும்பு குழாய்களால் அடித்துக்கொடுமைப் படுத்தியிருக் கிறார்கள்.பார்வைபடும் தூரத்தில் காவல்நிலையம் வேறு இருந்திருக்கிறது. பசு ரட்சக சேனை என்கிற பெயரில் குஜராத்தில் சுமார் 200 குழுக்கள் உருவாகியிருக்கிறது. பிரபல கேடிகளும் ரவுடிகளும் உறுப்பினராக உள்ள இந்தக்குழுக்களுக்கு ஆளும் அரசின் ஆசி கிடைக்கிறது. அவர்கள் சிறுபான்மை மற்றும் தலித் மக்களின் மீது திட்டமிட்ட வன்முறைய பிரயோகிக்கிறார்கள். கொடுங்கோல் மன்னராட்சிக்காலத்தில் கூட கேள்விப்பட்டிராத இந்த வகைக்கொடுமை முகநூலில் காட்சிப்படுத்தப்பட்டதும் அதுவரை கனன்று கொண்டிருந்த கோபம் போராட்டமாகியிருக்கிறது.

ஜூலை 12 ஆம் தேதி உனாவில் தன்னெழுச்சியான போராட்டம் உருவாகி ஆர்ப்பாட்டம்.  கதவடைப்பு நிகழ்த்தப்பட்டது.அதன் பின்னர்அமரேலியில் நடந்த எதிர்ப்புபேரணி கலவரமாக மாறியது.மாநிலம் தழுவிய பந்த் நடத்தப்பட்டு குஜராத்தின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.
திங்களன்று 1500 பேர் கொண்ட தலித் போராட்டக்காரர்கள் இறந்து போன மாடுகளின் உடலை லாரிகளில் ஏற்றி வந்து தெருக்களில் வீசி எறிந்தார்கள். உங்கள் புனிதப்பசுக்களை நீங்களே எடுத்துப்புதையுங்கள் என்று கோஷமிட்டார்கள்.
சுரேந்தர்நகர்,அகமதாபாத்தை தொடர்ந்து இந்த அதிர்ச்சியளிக்கும் போராட்ட வடிவம் ஏனைய மாவட்டங்களுக்கும் பரவியது.
குஜராத் வன்கொடுமைகளுக்கெதிரான கோபம் 2004 ஆம் ஆண்டே கொப்பளித்திருக்கவேண்டும்
காவல்துறையின் அடக்குமுறையால் நீர்த்துப்போனது. செவ்வாய்க்கிழமை 16 பேர்களடங்கிய தலித் போராட்டக்குழு தர்கொலையை போராட்டவடிவமாக அறிவித்தது போராட்ட முடிவில் ஒருவர் இறந்துபோனார். இது ஜனநாயக இந்தியாவில் 2004 ஆம் ஆண்டு அதிர்வை ஏற்படுத்திய மணிப்பூர் பெண்களின் போராட்டத்திற்கு ஈடானது என்று தலித் போராளி மோவானி கூறுகிறார்.
இந்த இரண்டு நாள் எழுச்சி தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உதவித்தலவர் ராஹுல் காந்தியும்,டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜிரிவாலும் உனாவுக்கு புறப்படத்தயாரானார்கள்.அமெரிக்க பத்திரிகை தனது கடும்கண்டனத்தை பதிவுசெய்தது. உதறலெடுத்த குஜராத் அரசு உடனே நீதிவிசாரணைக்கு உத்தரவிட்டது,பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு லட்சம் உதவித் தொகையாக அறிவித்தது.கொழுந்துவிட்டு எரியும் போராட்டம் இந்த கொப்பளித்த நீரில் அணைந்துவிடவில்லை.

அரசியல் சார்பற்ற தலித் இயக்கங்களும் அரசியல் கட்சிகளில் உள்ள தலித் பிரிவுகளும் ஒன்றிணைந்தன. பிஜேபி, காங்கிரஸ் ஆகிய தேசியக்கட்சிகளின் தலித் பிரிவுகள் கூட
தலித் போராட்டக்கூட்டணியில் அங்க வகிக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவானது.ஜுலை 25 ஆம் தேதி மாநிலம் முழுவதிலும் உள்ள அம்பேத்கர் சிலை முன்னால் கூடி இரண்டுமணிநேர அமைதிப்போராட்டம் நடத்த கூட்டணிஅறைகூவல் விடுத்தது.நாடெங்கிலும் உள்ள முற்போக்கு இயக்கங்களும்,அரசியல் கட்சிகளும் கண்டன அறிக்கையை காத்திரமாகப் பதிவுசெய்தன. பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்ப்பு வலுவாக எழுந்தது.முதல்வர் ஆனந்திபென் ராஜினாம செய்யநேர்ந்தது.

350 கிலோமீட்டர் தொலைவைக் கடக்கும் பேரணி ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டு ராஹுல்சர்மா தலைமையில் மூன்றாவது நாளாகப்பயணிக்கிறது. கயர்லாஞ்சி கொடூரத்திற்கு எதிராக உருவான தலித் எழுச்சியைவிடவும் கூடுதல் வீரியத்தோடு இந்த முறை களம் காணுகிறது கூட்டியக்கம்.

3.1.16

சமம்




சமம் என்பது துரதிஷ்டவசமானது.
சமம் என்ற சொல்லுக்கு இணையான
அல்லது மாற்றுச்சொல் காணக்கிடைக்கவில்லை.
சமம் என்பது அதே போல் அல்லது
அதற்கு இணையான என்று பொருள் கொள்ளலாம்.
இணையான என்பதை அளவை,தொகை,எண்ணிக்கை,
மதிப்பு,தரம்,பட்டம் என்ற மதிப்பீடுகளில் ஒப்பிடலாம்.
இந்த மதிப்பீடுகள் பௌதீக மற்றும் கணித இலக்கணங்களுக்கு வேண்டுமானால் துள்ளியப்படலாம் இந்த மதிப்பீடுகளை
மனித உயிர்களுக்கு ஒரு போதும் இலக்கணப்படுத்தமுடியாது.

14.4.12

சவ்தாக்குளத்தில் கெட்டிதட்டிப்போன சாக்கடை கலந்து கிடக்கிறது.


காற்றும் நீரும் வானும் நிலவும் பொதுவிலிருக்குது,
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது.

இப்படி ஒரு திரைப்படக்கவிஞன் பாடிவிட்டுப்போனான்.காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே என இன்னொரு திரைப்பாடலும் உண்டு. ஆனால்,கிழக்குப்பக்கத்தில் மட்டுமே தெரு வைத்துக்கொள்வதற்கு அனுமதிக் கப்பட்டார்கள் ஒரு பிரிவினர். காற்றுக்கூட அவர்களை முதலில் தீண்டக் கூடாது எனும் கற்பிதம் ஒளிந்திருக்கும் நடைமுறை அது. ஆறுகள் எல்லாமே கிழக்கு பக்கம் பாய்வதால் முதலில் குளிப்பவன் நானாக மட்டுமே இருக்க வேண்டும் எனும் பெரிய்ய மனசும் கூட இதற்குக் காரணமானது. இதை நீங்கள் india untouched என்கிற ஆவணப் படத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். 

நீர் நிலைகளில் ஆடுமாடுகள் அனுமதிக்கப்பட்ட போதும் ஒருசரார் கடுமையாகத்தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.  சமீப காலம் வரை, அதாவது இருபதாம் நூற்றாண்டின் பாதிவரையில் குற்றாலத்தில் குளிக்க,பிற்படுத்தப் பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் அனுமதிக்கப்படவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சி தரும் வரலாற்றுச் சேதி.உலகஅதிசயங் களில் ஒன்றாக அறிவிக்கக் கோரி மின்னணு வாக்கு கோரப்பட்ட நமது பெருமை மிகு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழத்தப்பட்டவர்கள் மட்டுமல்ல பிற்படுத்தப் பட்டவர்களும் அனுமதிக்கப் படவில்லை. நுழைய முயன்ற மூக்க நாடார் நான்மாடக்கூடலின் ஒரு வாயிலில் வைத்துக் கழுத்தறுக்கப்பட்டார். எனவே புதிதாகப் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசு ஒரு முடிவெடுத்தது. சமுதாயக் கிணறுகள் என்கிற ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி நீர் நிலைகளை உருவாக்கிக் கொடுத்தது. இதையும் அம்பேத்கர்,பெரியார்  உட்பட பல சாதிமறுப்பாளர்கள் எதிர்த்தார்கள்.அதையும் மீறி சட்டம் செயல்பட்டது. தாழ்த்தப்பட்ட வர்களுக்கென்று ஏற்படுத் தப்பட்ட தனி நீர்நிலைகளில் இரவோடு இரவாக மனிதக் கழிவுகளை அள்ளிப்போட்ட சம்பவங்கள் நடந்தது. 

2006 ஆம் ஆண்டு பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தலில்போது ஆவணப்பட படப்பிடிப்புக்காகப் போயிருந்தோம். பேருந்துநிலையத்தில் கீழே கிடந்த ஒரு பெரிய கல்லில் இருந்து இரண்டடித்தூரம் ஒதுங்கியே நின்றதொரு கூட்டம். விசாரித்தபோது தாழ்த்தப்பட்டவர்கள் அந்தக்கல்லில் உட்கார்வது அங்கிருக் கிற கள்ளர்களின் பெருமைக்கு இழுக்கு என்ற எழுதப்படாத சட்டம் இருக் கிறது.  உத்தப்புரத்தில் இன்னும் கூட ஒரு பயணிகள் நிழற்குடை அமைக்க முடியாமல் சாதிய ஆதிக்கத்தின் கீழ் மண்டியிட்டுக் கிடக்கிறது ஜனநாயகம். கிராமங்களில் கட்டப்படும் பெரும்பாலான நிழற்குடைகள் இரவோடு இரவா கச்  சிதிலமடைந்து போவதற்கு ’கீழத்தெரு பயலுகள்ளாம் நமக்குச் சமதையா உக்காரவா’ என்கிற ஆதிக்க மனோபாவம் தவிர வேறுகாரணங்கள் இருக் கவே முடியாது. இதியத் தொண்மங்களில் மறைந்தும் புதைந்தும் கிடக்கும் அதிர்ச்சியும் அதிலிருந்து மீண்டெழுந்த ஆச்சரியமும் சொல்லப்படாத வரலாறுகளாகும்.

அப்படியொரு பிரபலமான இடம் மராட்டிய மாநிலத்தின் மஹத் எனும் நகரில் உள்ள சவ்தார் குளம். அது நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியமும் சுற்றுலா ஈர்ப்பும் கொண்ட நீர்நிலை. நீண்ட நெடுங்காலமாக தாழ்த்தப்பட்ட வர்கள் அதை நெருங்க அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்து ஒரு மாபெரும் போராட்டத்தை ஒருங்கி ணைத்தார் அம்பேத்கர். 1927 ஆம் ஆண்டு மார்ச் மதம் 20 ஆம் தேதி சுமார் பத்தாயிரம் தாழ்த்தப்பட்டவர்களைத் திரட்டி ஊர்வலமாக அழைத்துப்போனார். ஊர்வலத்துக்கு தடைகோரி நீதிமன்றத்தை நாடினார்கள், ஊர்வலத்தை குலைக்க மறைந்திருந்து கல்லெறிந்தார்கள், பின்னர் நேரடி யாகத் தாக்கினார்கள். என்றாலும் எதிர்த்தாக்குதல் ஏதும் இல்லாத சத்தியாக் கிரஹமாக முடிந்தது அந்தப்போராட்டம். சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்த காலத்தில் நடந்ததால் இரு கோடுகள் தத்துவத்தின் சிறு கோடாய்க் காணாமல் போனது சவ்தார் ஏரிச்சம்பவம் .

இதையெல்லாம் இந்தக் கனிணி யுகத்தில் மீளப்பேசி முகஞ்சுழிக்க வைக்க வேண்டுமா எனும் கேள்வியும் வரும். நகரங்களில்  இருந்து கொஞ்சம் ஒதுங்கி விட்ட இது, இந்த சதுக்க பூதம் இன்னும் கிராமங்களில் புதுக்கருக்கு மாறாமல் வாழ்கிறது என்பதை வெகுமக்களோடு படித்தவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும். இருநூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்கள் இருக்கும் மாவட்டத்தில் இரண்டே இரண்டு ஊர்களில் மட்டுமே பொதுமயானம் இருக்கிறது என்று சென்ற ஆண்டு பணிநிறைவு பெற்ற ஒரு கிராம நிர்வாக அலுவலர் சொன்னார்.

முன்னமிருந்த அடக்குமுறைகள் அளவு இப்போதில்லை என்பதை ஏற்றுக் கொள்ள ஆங்காங்கே ஆதரவுக்கரங்கள் நீளுகின்றது. ஆனாலும் நாளுக்கு நாள் நடைபெறும் திண்ணியங்கள், மேலவளவுகள், கயர்லாஞ்சிகள், சென்ன கரம் பட்டிகள், இருஞ்சிறைகள்,பரமக்குடிகள் ஆதிக்கத்தின் இருப்பைச்  சொல் லுவதற்கு கொத்துக்கொத்தாய் உயிர்ப்பலி கோருகிறது.சாண்ஏறுகிற சதீய வழுக்குமரத்தில் கிலோமீட்டர்க் கணக்கில் பின்னுக்குப்போக வேண்டியிருக் கிறது. அந்த நேரமெல்லாம் அம்பேத்கர் வந்து நின்று என் மக்களை இன்னும் அதே நிலையில் விட்டுப் போகிறேனே என்று சொல்லிய இறுதி வார்த்தைகள்  திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

ஆகவே அவரது  தேவை இன்னும்  அதிகரிக்கிறது. அவரது செயல்பாட்டாலும் சிந்தனைகளாலும்,தியாகத்தாலும் கிடைத்த புரட்சியாளர் பட்டம் இன்னும் தீராத வன்கொடுமைகளின் பொருட்டு மேலும் மேலும் மதிப்பு மிக்கதாகிக் கொண்டிருக்கிறது.

6.12.11

’மனமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல’ (அண்ணல் அம்பேத்கர் நினைவுக்கு)


                                                        ( S.Radhakrishnan )

இந்தப் பதம் ஒரு நெடுங்கவிதையின் இடையில் வரும்.இதை எழுதிய கவிஞர் வலைமக்களால் பெரிதும் அறியப்பட்டவர்.அவன் தோழன் மாதவராஜ் .( தீராதபக்கங்கள்). அவன் எழுதிய இன்னொரு குருசேத்திரம் என்கிற கவிதையின் இடையில் தான் இந்தப்பதம் வரும். இது நாங்கள் நடத்திய அக்கினிக்குஞ்சு என்கிற கையெழுத்துப் பத்திரிகையில் தவிர வேறெங்கும் நாம் பார்க்க முடியாது. இருந்தும்  1984 ஆம் ஆண்டு வாசிக்கப்பட்ட கவிதையின் இடையில் வரும் இந்தச்சொல் ஏன் எனக்குப் பிடித்துப்போனது என்பதை முழுக் கவிதையையும் வாசித்தல் தான் புரியும்.அது ஒருபுறம் இருக்க மனம் இருந்தும் ஒருதாழம் பூவைப்போல ஒதுக்கிவைக்கப்பட்ட பலரில் பாபா சகேப் அம்பேத்கர் முதலானவர்.

அவர் குறித்த பல புத்தகங்கள் இருக்கிறது.இன்னும் வலையில் தேடினால் அதற்கதிகமாகவும் கூடப்படிக்கலாம்.ஆனால் அவரைப்பற்றிய சில அறிதான செய்திகளை எனது தாய்மாமனார் திரு எஸ்.ராதாகிருஷ்ணன் அவர்கள் சொல்லிக்கேட்கவேண்டும்.. அம்பேத்கரைவிட பெருந்தலைவர் காமராஜர் குறித்த அறிதான விஷயங்களை இடம் காலம் குறித்த துள்ளியத்தோடு தனது அலாதியான விமர்சனத்தையும் சேர்த்துச் சொல்லுவார். அப்படி ஒருமனிதர் அதுவும் பள்ளி ஆசிரியர் பொதுச் சமூகத்தில் இருந்தால் அவரைக்கொண்டாட சமூகம், அமைப்புகள் நான் நீ எனப் போட்டி போட்டுக்கொண்டு வந்திருக்கும். ஏனோ தெரியவில்லை இந்த ஐம்பத்தெட்டு வயதிலும் யாராலும் இனங்காணப் படாத மனிதராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரும் கூட இந்த மனமிருந்தும் ஒரு தாழம்பூவைப் போல என்கிற பதத்தின் பட்டியலின் கீழ்வருகிற ஒரு மனிதராவார். அவர் அம்பேத்கர் குறித்துச்சொன்ன ஒரு விஷயத்தை இங்கே இன்று பகிர்ந்து கொள்ளவேண்டும்.

அவர் தனது மகனுக்காக ஒரு சான்றிதழ் வாங்க ஒரு வழக்குறைஞரிடம் போனாராம்.அங்கே வழக்கறிஞரின் நண்பர்களும் சொந்தங்களுமாக நான்கைந்து பேர் குழுமியிருந்தார்களாம். இவரைப்பார்த்ததும் இந்த அம்பேத்கர் என்னதான் செய்துவிட்டார் நாடு முழுக்க சிலைவைத்துக் கொண்டாடு மளவுக்கு என்று ஒருவர் கேட்டாராம் மற்றவர்களும் பகடி செய்து சிரித் தார்களாம். உடனே ’நான் ஒரு கையெழுத்து வாங்க வந்திருக்கிறேன் இந்த நேரத்தில் இப்படி ஒரு கேள்வி என்காதில் விழுகிறது,நான் பதில் சொன்னால் ஒருவேளை எனக்கு போட வேண்டிய கையெழுத்து கிடைக்காமல் போய் விடும் ஆனாலும் என்னிடம் கேட்கப்படாத இந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்லாமல் போக முடியாது’ என்று சொன்னதும் சரி அப்படி என்னதான் செய்தார் இந்த அம்பேத்கர் என்று கேட்டிருக்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவுக்கு வரிவடிவிலான சட்டம் ஒன்று தேவைப்பட்ட தொடக்க காலத்தில் அதை உருவாக்கு வதற்கான அரசியல் நிர்ணய சபையைக் கூட்டினார்கள்.அதன் தலைவராக முன்னாள் சனாதிபதி திரு ராஜேந்திரப் பிரசாத் நியமிக்கப்பட்டாராம். பின்னர் அந்த சபை நான்குமுறை கூடி யிருக்கிறது அதன் பின்னர் கூட சுதந்திர இந்தியாவில் நான்குபேர் கொண்ட குழு அமைக்கமுடியவில்லை. பிர்தமர்நேருவின் ஆலோசனைப்படி அதற்குத் தகுதியான ஒரே நபர் என்கிற நிணயசபையின் உறுப்பினர்கள் எல்லோரும் அம்பேத்கரைப்பார்க்க அவரது இல்லத்துக்குப் போனார்களாம். வரவேற்று உபசரித்து வருகையின் நோக்கம் கேட்ட அறிந்துகொண்ட அம்பேத்கர் ’உங்களுக்கு ஒரு இதிகாசம் தேவைப்படும் போதும் நாங்கள் அவசியமாக இருந்தோம்,ஒரு புராணம் தேவைப்படும் போதும் நாங்கள் அவசியமான வர்களாக இருந்தோம் இப்போது சட்டம் தேவைப்படுகிறது இப்போதும் கூட நாங்கள் தான் தேவைப்படுகிறோம்’ என்று சொல்லிவிட்டு அரசின் விருப்பத்துக்கு இணங்க சட்டக்குழுவின் தலைவராக இருக்க ஒத்துக் கொண்டார். அந்தக்குழுவில் அம்பேத்காருடன் இணைந்து பணிபுரிய சர். அல்லாடி கிருஷ்ணமூர்த்தி அய்யரும், டிடி.கிருஷ்ணமாச்சாரியும்,வங்கத்தின் நர்சிங்ராவும்,கேகே முன்ஷி,கனேஷ் மாவ்லாங்கர் ஆகியோர்...... நியமிக்கப் பட்டார்கள்.

அந்தகுழுவின் முதல் கூட்டம் மட்டுமே ஆறுபேருடன் நடந்தது. பொதுவாகவே இப்படியான அமைப்புக்களின் முதல்கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள் என்னவாக இருக்கும்.அலுவலகத்தை எங்கே வைத்துக்கொள்ளலாம்.
அலுவலக சாதனங்கள்,சப்பாடு,தேநீர் இவற்றை எங்கு இருந்து தருவித்துக் கொள்ளலாமென்கிற விடயங்கள் குறித்து மட்டுமே பேசியிருக்கமுடியும். அதன் பிறகு தனக்கு வயதுஆகிவிட்டது என ஒருவரும்,தான் மேலைநாடு போகிறேன் என்று இன்னொருவரும்,தனக்கு உடல்நிலைசரியில்லை என மூன்றாமவரும் அந்தக்குழுவில் இருந்து விலகிக்கொண்டார்களாம்.

குழுவுக்கான புதிய உறுப்பினர்களை நியமிக்கச் சொல்லிக் கேட்காமல் அம்பேத்கர் தனக்கிட்ட பணிகளை தன்னந்தனியே தொடங்கினார். அவர் குறிப்புகள் சொல்லசொல்ல அவரது உதவியாளர் அப்போதைக்கிருந்த அந்தக்கால ரெமிங்டன் தட்டச்சு எந்திரத்தில் அதை எழுத்துருவாக்க பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது.

இடைப்பட்ட காலத்தில் நிர்ணய சபையின் உறுப்பினர்கள் சனாதிபதி ராஜேந்திரப் பிரசாத்திடம் போய் ஒரு தேசத்தின் சட்டவடிவை உருவாக்க எப்படி ஒருதனிநபரைமட்டும் சார்ந்திருக்கமுடியும் என்று வாதிட்டு இருக்கிறார்கள். அவர்களின் முணுமுணுப்பை புறந்தள்ளிய சனாதிபதி அவருக்கு துணைக்கு  ஆள் தேவைப்பட்டால் அவரே கேட்டிருப்பார் நானாக வழியப்போய் ஆட்கள் நியமித்தால் அவரை என்னால் எதிர்கொள்ள முடியாது தவிரவும் அவரது திறமை பற்றி எங்களுக்குத்தெரியும் என்று சொல்லிவிட்டாராம்.

ஒன்றிரண்டல்ல பத்தொன்பது மாதங்கள் அல்லும்பகலும் தன்னந்தனியே கிடந்து உருவாக்கிய வரைவு சட்டமசோதாவை மிகச்சரியாக நவம்பர் 1949 ஆம் ஆண்டு 26 ஆம் தேதி நிர்ணயசபையின் கூட்டத்தில் சமர்ப்பித்தார் அம்பேத்கர். 95 திருத்தங்கள்,12 பட்டியல்கள், 22 தொகுதிகள்,448 ஆர்ட்டிகிள்ஸ், ஆகிய வற்றை உள்ளடக்கிய 117369 ஆங்கிலச் சொற்களினால் உருவாக்கப்பட்ட ஒருகணத்த கோப்பு அது.

அந்தக்கூட்டத்தில் இந்த சட்ட உருவாக்கலில் தனக்கு உறுதுணையாக இருந்த ஏனையோருக்கும் நன்றி தெரிவித்து அவர்களின் பங்களிப்பில் தான் இது சாத்தியமாகி யிருக்கிறது என்று உரையாற்றினாராம். கூட்டத்தில் ஆஜராகி யிருந்த ஏகே அய்யர் என்கிற அல்லாடி கிருஷ்ணமூர்த்தி உட்பட யாரும் ஏதும் சொல்லாமலிருந்தாலும்,டிடிகே அவர்கள் எழுந்து உண்மையில் இந்த சட்ட உருவாக்கலில் எங்களுக்கு  பங்கில்லாத போதும்கூட எங்கள் பெயரை இணைத்திருப்பது அம்பேத்கரின்  பெருந்தண்மையைக் காட்டுகிறது என்று சொன்னாராம்.

உண்மையான நடப்பு இப்படி இருக்க பத்திரிகையாளர் திரு சோ.ராமசாமி அவர்கள் எதாவது சட்டநுணுக்கங்கள் பற்றிச் சொல்லும்போது பெரும்பாலும் டாக்டர் டிடிகே அவர்களின் பெயரையும், சர்.அல்லாடிகிருஷ்ணமூர்த்தி அவர்களையும் மட்டும்தான் மேற்கோளிட்டு காட்டுவார்.

மிகப்பெரும் படிப்பாளி,மிகப்பெரும் எழுத்தாளர்,கல்வியாளர்,உலகின் அணைத்து மதங்கள் குறித்து நுணுக்கமாக கற்றறிந்த அவர்தான் இந்து மதம் குறித்த மிகப்பெரிய எதிர்க் கருத்தை வலுவாக முன்வைத்தார்.சுமார் 5000 பக்கங்கள் எழுதியிருக்கிற சாதனை இதுவரையில் யாராலும் எட்டப்பட முடியாதது. தான் முதலாக வெளியிட்ட இந்தியாவில் ஜாதிகள் எனும் புத்தகம் தொடங்கி 1956 ல் வெளியான புத்தமும் அவரது தம்மமும் எனும் புத்தகத்தோடு சுமார் 21 புத்தகங்களை அறிவுலகத்துக்குச் சமர்ப்பித்திருக்கிறார்.அவர் எழுதிய புத்தமும் தம்மமும்,ரைடில்ஸ் ஆப் ஹிண்டுயிஸம்,சூத்திரர்கள் யார், அனிஹி லேசன் ஆப் கேஸ்ட் ஆகியவை எவராலும் மறுதலிக்கமுடியாத பொக்கி ஷங்கள். இந்தியாவின் சமூகபொருளாதார அமைப்புக்குறித்த அவரது தீர்க்க மான மற்றும் ஆழமான கருத்தியல்கள் பொதுச்சமூகத்தால் புறந்தள்ளப் பட்டவை. சத்திய சோதனையும்,வேர்ல்டு ஆப் டிஸ்டனியும் தூக்கிவைத்துக் கொண்டாடப்படும் அளவுக்கு அம்பேத்கர் அறியப்படவில்லை. சுமார் 50000 புத்தகங்களை தனது சொந்தச்செலவில் வாங்கி நூலகமாக்கிய பெருமை வேறெந்த கல்வியாளருக்கும் கிடையாது.

இந்தத் தகவல்களை உலக நடப்புகளோடும்,இன்றைய்ய செய்திகளோடும் ஒப்பிட்டுச் சொல்லிக்கொண்டே போவார் திருராதாகிருஷ்ணன் அவர்கள். அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளம் சத்தூரில் இருக்கிறது. அந்த பட்டாளம்  தேவி ஸ்டுடியோவிலோ,என் ஆர்கே சுவீட்ஸ் வாசலிலோ, இல்லை ஒரு தேநீர்க் கடையிலோ தினப்படிக்கு கூடும். மிகச்செறிவான அரசியல் சமூக, இலக்கிய,திரைப்படம் குறித்த விமர்சனக் கருத்துக்கள் பதிவுசெய்யப் படாமல் காற்றில் கறைந்து கொண்டே போகிறது. அவரிடம் அழியாத வாய்மொழிப் பொக்கிஷங்கள் தேங்கிக்கிடக்கிறது அதிலிருந்து கொஞ்சமாவது  எடுத்து பதிவு செய்ய ஆவலாக இருக்கிறது.எனவே இந்தநாளின் நடுப்பகலில் அவரைச் சந்தித்து அவரோடு பேசிக்கொண்டிருந்த தருணம் மிக முக்கியமானது.


         

3.12.10

வலையுலகின் மீது குவியும் நம்பிக்கை.

ஆங்கிலத்தில் தயாராகி ஹிந்திக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட போதிலும் அந்த திரைப்படம் கவனம் பெறாமலே போய்விட்டது.தமிழுக்கு மொழிமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.பின்னர்
தோழர் வழக்கறிஞர் சத்திய சந்திரன் தொடுத்த வழக்கினால் அம்பேத்கர் திரைப்படம் தமிழில் வருகிறது.அதுவும் சென்னையில் ஒரு சில திரையரங்குகளில் சடங்குக்கு திரையிட்டுவிட்டு மீண்டும் பூசனம்  பூக்கவிடுவதாக சித்தம் கொண்டிருக்கிறது வாழும் சமத்துவப் பெரியாரின் பரிவாரம்.

எதிரே சீறிப்பாய்ந்து வருகிற காரை 'எந்திரன்' மாதிரி கையிலே பிடித்து கரப்பான் பூச்சியைத்தூக்கிப் போடுகிற காட்சி அமைக்கப்பட்டால் கூட அம்பேத்கருக்கு அத்தனை திரையரங்கும் வழிவிடுமா என்பது சந்தேகம்.தமிழ்நாட்டில் எங்காவது ஒரு திரையரங்கு ஒரு தலித்துக்கோ,இல்லை ஒரு முற்போக்காளருக்கோ சொந்தமாக இருக்க வாய்ப்புமில்லை.ஐஸ்வர்யா ராயில்லை,ஆஸ்கார் விருதுவாங்கிய இசையமைப்பாளர் இல்லை.இன்னும் புரட்சியாளர் அம்பேத்கரை ஒரு சாராருக்கான அடையாளமாகவே தள்ளிவைத்துப் பார்க்கிறோம்.தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருக்கும் இயக்கங்கள் கூட இந்தப்படம் குறித்து ஏதும் பேசமலிருக்கிறது.

வெளியில் தமுஎச அம்பேத்கர் படத்தின் திரையிடலை  இயக்கமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. முன்னதாக வலையுலகில் தோழர் மாதவராஜ்,உண்மைத்தமிழன்,திரை_ பறை கருணா ஆகியோர் இது குறித்து தங்களின் ஆதங்கங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.இன்று திரையிட இருக்கும் நிலையில் எந்த நாளிதழிலும் இது குறித்த செய்தியோ,விளம்பரமோ வரவில்லை.நண்பர்களே சமூகத்தில் தொடரும் ஒதுக்குதலின் நீட்சியாகவே இந்த திரைப்படத்தின் மீதான அனுகுமுறையையும் கருதவேண்டியிருக்கிறது. ஆகவே அம்பேத்கர் திரைப்படத்தின் விளம்பரத்தை நமது பக்கங்களில் பதிப்பதன் மூலம் வலை ஒரு மாற்று ஊடகம் என்பதை நிலை நிறுத்துவோம்.

வாருங்கள் ஊர்கூடித்தேர் இழுப்போம்.