27.10.13

பட்டு- நாவலின் விமரிசனமல்ல.



ராமநாதபுரத்தில் இருந்த போது ஒவ்வொன்றாய் வாங்கிப்படித்த புத்தகங்கள் இருபது தேறும். ஒவ்வொன்றாய் வாங்கத்தான் பையும் கையும் ஒத்துழைக் கிறது.அப்போதெல்லாம் அறைத்தோழர்கள்  எப்படி சார் படிக்க நேரம் கிடைக் கிறது உங்களுக்கு,என்று கேட்பார்கள்.நேரம் என்ன கடையிலா விற்கிறது ?, இல்லை மலைமுகடு களில் இருக்கிறதா ?.அரட்டையடிப்பதற்கான  காலங் களைப்போலத்தான், இந்த புத்தகம் மூலமாக அரட்டை அடிப்பதற்கும் லபிக் கிறது தேரம்.டிஸ்கவரி புக்பேலஸ் தோழர் வேடியப்பன் மூலமாக அணுப்பிய ஆறு புத்தகங் களில் இரண்டை முடித்தாகிவிட்டது.எங்கள் பாசத்துக்குறிய தொ.ப.வின் விடுபூக்களும்,அலெக்சாண்டர் பாரிக்கோவின் ‘பட்டு” நாவலும் பற்றிச்சொல்லியே ஆகவேண்டும்.

பட்டு, நல்ல கருஞ்சிவப்பு நிறத்தில் கையடக்கமான பக்கங்களிலும் கையடக் கமான விலையிலும் உருவாக் கப்பட்ட அழகிய நாவல்.ஒரு ராணுவ வீரணான ஹெர்வே ஜென்கர் பட்டுப்புழுக்களை ஜப்பானில் இருந்து வாங்கி பிரான்சில் உள்ள லாவில்டியூ என்கிற உள்ளூரில் விற்கும் வியாபாரியாக மாறிப்போகிறான்.அவனை அவனது அப்பா போட்டுவைத்திருந்த  ராணுவப் பெரும் பதவியெனும் கனவுப்பதையிலிருந்து ஒரு கொண்டையூசி வளை வாய் திருப்பி,கூட்டுப்புழுக்கள் சேகரிக்கும் ஜப்பான் பயணியாக்கியது பல்தொப்பியாதான்.

பிரான்சிலிருந்து கடல்மார்க்கமாக,ரயிலில்,குதிரையில் என மூன்று மாதங்கள் பயணம் செய்து மறு எல்லையில் இருக்கும் ஜப்பானை அடைகிறான். முட்டைகள் வாங்கிக்கொண்டு திரும்பி பிரான்ஸ் வருகிறான்.பட்டுமுட்டைகள் வாங்குகிற ஜப்பானில் ஹரா கீய் என்கிற ஜமீந்தாரின் இளம் மனைவியை காண்கிறான்.அவள் மீதான ஈர்ப்பு அவனை ஜப்பானை நோக்கி திரும்பத்திரும்ப பயணிக்க வைக்கிறது.

ஒருவருக்கொருவர் சந்கித்துக்கொள்ளாத இந்தக்காதல் கதையின் நடுவே பிரான்சின் தொழிற்புரட்சி, லூயிபாஸ்டரின் கண்டுபிடிப்புகள், ஜப்பானியப் போர் ஆகியவை சின்னச்சின்னத்தகவல்களாக வந்துபோகிறது.ஜப்பானிய மொழியில் எழுதிய அவளது கடிதத்தை எடுத்துக்கொண்டு பெரும்பயணம் செய்து திருமதி பிளான்சி என்கிற செக்ஸ் தொழிலாளி மூலம் மொழி பெயர்த்து அறிகிறான்.காலமாற்றத்தில் சூயஸ் காலவாய்திறக்கப்பட்டு,1884ல் செயற்கைப் பட்டுக்கான காப்புரிமைபெறப்பபட்டு ஜப்பான் கொள்முதல் செலவீனமாகிறது.இருப்பினும் அவனை அவள் கண்கள் இழுக்கிறது.

மீண்டும் ஷிராக்காவை அடைந்தபோது போரால் அது சிதலமடைந்து கிடந்தது. ஹரா கீயின் அரண்மனை வெறிச்சோடிக்கிடக்கிறது.ஆளரவமற்ற ஊரின் தனி மையில் இருந்த அவனைத்தேடி ஒரு சிறுவன் வருகிறான் அவனது அழைப்பை  ஏற்று நாட்கணக்காக அவன் பின்னாடி அழைந்து இறுதியில் ஹராகீயின் முகாமை அடைகிறான்.இந்த முறை வந்த ஜென்கரின் நோக்கத் தைப் புரிந்து கொள்கிறான் ஹராகீய்.அதானால் அவனைக் கூட்டிக் கொண்டு வந்த சிறுவனைக்கொல்கிறான்.

மீண்டும் பிரான்சுக்கு பயணமாகிற வழியில் கூட்டுப்புழுக்கள் செத்துப்போய் பயணற்றதாகிவிடுகிறது.அதை அப்படியே கீழே கொட்டிவிட்டு ஊர்திரும்பி, வேறு தொழில்செய்கிறான்.அவனுக்கு ஒரு ஜப்பானிய மொழிக்கடிதம் வருகிறது அதை எடுத்துக்கொண்டு மீண்டும் பிளான்சியிடம் ஓடுகிறான். அது ஒரு நெடிய காதல் கடிதம்.அதன்பிறகு அவனது மனைவி ஹெலன் மரித்துப் போகிறாள்.அதன்பிறகு கடிதம் ஜப்பானில் இருந்து வரவில்லை என்பதை அறிந்து மீண்டும் பிளான்சியை சந்தேகித்து அவளிடம் போகிறான்.
கடிதத்தை எழுதியது உண்மையில் யாரென்று முடிப்பதுதான் நாவலின் பெரும் வெற்றி.

அது ஹெலன்.ஹென்கரின் காதல் மனைவி ஹெலன்.

ஒரு நெடிய சிறுகதை போல இழுத்துக்கொண்டு ஓடும் நாவலில் இன்னொரு வியப்பு இருக்கிறது.ஒரு பக்கம் மட்டுமே இருக்கிற அத்தியாயங்கள். அதை விட  வியப்பு வெறும் அரைப்ப்பக்கத்தோடு முடிந்து போகும் அத்தியாயங் களுமான அதிசயத்தை சும்மா விடுவார்களா.அது திரைப்படமாகியிருக்கிறது.

0

தமிழில்=சுகுமாரன்
விலை =ரூ.95
வெளியீடு= காலச்சுவடு
கிடைக்குமிடம்=டிஸ்கவரி புக்பேலஸும் 

3.7.13

தீவிரமாகும் தனிமையின் இசை.

நெடுநாட்களாகவே,புத்தகம்,இசை,சினிமா,தொலைக்காட்சி எனத்தொலைந்து கொண்டிருக்கிறது பொழுதுகள்.அம்மா வந்தாள் வாங்கி ரெண்டாவது தரம் வாசிக்க, புதிதாக தெரிகிறார் திஜா.ஊரெல்லாம் உன்பாட்டுத்தான் பாடலை பாடுகிற ஜேசுதாஸ் மிக நெருங்கி வந்து உட்கார்ந்து கொள்கிறார்.பின்னே ஆயிரம் தடவைகளுக்குமேலே கேட்டாகிவிட்டது.அதற்குவரும் ஊடிசை நெடுநாட்கள் பழகிய நண்பனின் வார்த்தைகளாக உருமாறுகிறது. கேணிக்
கரை வீதியில் இருக்கும் அந்த மேன்சனுக்கு அருகில் ஒருகுடும்பம் வடை போட்டு விற்றுக்கொண்டிருக்கும்.அவர்கள் அதிகாலை நான்குமணிக்கு எழுந்து பாத்திரங்களை உருட்டும் சத்தம் மறைந்துபோன தகப்பனாரை யாவகப்படுத்தும்.அந்த நேரத்துக்கு சரியாக ஒரு தெருப்பசுமாடு வந்து மாவு பிசைந்த தேக்சாவை தனது நாக்கால் வரக்,வரக்கென்று சுரண்டித்தின்கிற சத்தம் தினபடிக்கான சுப்ரபாதமாகும்.பிறகுதான் அந்த ஆக்காட்டிக்குருவியின் கிர்ரிக் சத்தம் கேட்கும்.

சின்னச்சின்ன அசைவுகளையும்,காய்கறி மார்க்கெட்டுக்கு அருகில் குவியும் குப்பைகளையும் அதனைதத் வறாமல் வந்து இல்லாமல் ஆக்கி விட்டுப் போகும் நகராட்சி சேவகர்களையும் ஊர்ந்து கவனிக்கும்படியாக்கிவிடுகிறது இந்த தனிமை. மார்க்கெட்டில் இருக்கும் சேகரண்ணன் கடை இனிப்பு போண்டாவும், அங்குவந்து அமர்ந்து ரெண்டு போண்டா சாப்பிட்டுவிட்டு பசியாறிப்போகும் காய்கறிவிற்கிற கிராமத்து பெண்களும் பரிமாறிக்கொள் ளாத தோழமையை கொடுத்துவிட்டுப்போகிறார்கள்.

வரும் வழியில் அதிகாலை வேளை அடர்த்தியாய் பவுடர் அப்பிக்கொண்டு கிழிந்த சேலையால் முக்காடுபோட்டுக்கொண்டு வடநாட்டுப் பாஷையில் பிச்சைகேட்கிற வயதான பெண்மணியை ஊகிக்கமுடிகிறது.அவரது கம்புக் கூட்டில் அன்றைய நாளிதழ் இருப்பதைக்கவனிக்க முடிகிறது.ஆனால் வியாழக்கிழமை தவறாமல் ஒருபெட்டிக்கடையில் ஆனந்தவிகடன் வாங்கப் போகிற போது அந்த வடநாட்டுப்பெண் காசு கொடுத்து தமிழ் நாழிதழ் வாங்கியது எதற்காக.இந்தக் கேள்வி இதுவரை பார்த்த, படித்த, கேட்ட  திகில் கதைகளின் விடைகளையெல்லாம் தாண்டி தொக்கி நிற்கிறது.

தினம் கடந்து போகும் அரண்மனை வீதியில் தான் அரசியல் கூட்டங்கள் நடக்கும்.அதனருகில் தான் எதையும் அலட்சியப் படுத்தியபடி காய்கறிகளை கடைவிரித்து உட்கார்ந்திருக்கிற பெண்களிருப்பார்கள். அதற்கருகில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு முன்னாடி எந்த நேரமும் அரைப்போதையில் உட்கார்ந்து கொண்டு போவோர் வருவபவரை அளந்து கொண்டிருப்பவர்
என்ன வேலை செய்வார் அவர் குடும்பம் எங்கிருக்கும் என்கிற கேள்வியும் கூட விடைதராமல் கிடக்கிறது.

போன செவ்வாய்கிழமை தலைமைத்தபால் நிலையத்துக்கு  முன்னாடி மேடை போட்டு பெரிய பெரிய ஒலிபெருக்கிப் பெட்டி வைத்து பாட்டுப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே பாட்டு.ஜேசுதாஸ், மெல்லிசை மன்னர்,கவிஞர்முத்துலிங்கம்( சரியா தெரியவில்லை) மூவரும் சேர்ந்து அந்தப்பகுதி முழுவதையும் வசியப்படுத்திக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் நின்று வரிகளையும் இசையையும் கேட்டால் நாளைக்காலையிலேயே இந்த தேசம் முழுக்க பாட்டாளி மக்கள் கைக்க்கு வந்துவிடும் போன்ற குதியாட்டம் உருவாகும்.

அப்புறம் நேரம் ஆக ஆக வங்கி இருக்கும் வீதிமுழுவதும் விலையுயர்ந்த கார்கள் கட்சிக்கொடிகட்டிக்கொண்டு வந்து தெருவை நிறைத்தன.ஏதாவது பிறந்த நாள், நூறாவது நாள் கொண்டாட்டமாக இருக்கலாம் என்று நினைத்து வேலைக்குள் முங்கிப்போனது தேரம். ஒரு பத்தரை மணிக்கெல்லாம் ’விற்காதே விற்காதே என் எல் சி பங்குகளை விற்காதே’ என்ற கோஷம் கேட்டது. இப்படியான கோஷங்கள் இடதுசாரித்தொழிற்சங்கக்கங்களின் கூட்டங்களில்,அதன் ஏனைய அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்களில் மட்டும் தான் கேட்கமுடியும்.ஆடிப்போனேன் ஒருவேளை ஆளும் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிக்காரர்கள் புகுந்துவிட்டார்களா என்று பதை பதைத்துப் போனேன். பிறகுதான் தெரிந்தது என் எல் சி பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடது என்று ஆளும் அண்ணா திமுக நடத்துகிற போராட்டம் என்று.ஓடம் ஒருநாள் வண்டியில் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
எனும் சொல் எவ்வளவு சத்தியமானது.

தனது தேர்ந்த திரக்கதைகளாலும்,செய்நேர்த்தி மிக்க பொதுவுடமைப் பாடல் களா லும் தமிழகத்து உழைக்கும் மக்களை மயக்கி வைத்திருந்த எம்ஜியாரின் உத்தி இனிமேல் செல்லுபடியாகாது. சனம் சினிமாவை விரட்டிவிட்டு சீரியல் களை கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருக்கிறது. அவர்களின் பக்கம் தான் இருக் கிறேன் என்று திசை திருப்ப இதுபோன்ற ஆர்ப்பாட்ட உத்திகளையும் ஒரு ஆளும் கட்சி கையாள வேண்டியது, இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் புதியது.