மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் கடும் குடிநீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படும் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் முற்றுகை. இப்படியொரு செய்தி தீக்கதிர் நாளிதழில் வெளியானது. ஆனால் அது கட்டாயம் இருட்டடிக் கப்பட்டு விடும். பிரதான பத்திரிகைகள்,பிரதான காட்சி ஊடகங்கள் தங்களுக்கான செய்திகளின் தேடலை நித்யானந்தாக்களிடமும் நடிகைகளிடமும் மையப்படுத்தியிருக்கும்.
அதே வாடிப்பட்டியில் உள்ள சிறியதும் பெரியதுமான பெட்டிக்கடைதொடங்கி உணவு விடுதிவரையில் பெப்சி.கொக்கக்கோலா நிறுவணங்களின் பாட்டில்கள் லாரி லாரியாய் வந்திங்குகிறது.வீட்டு வாசலில் ஒரு கேன் முப்பது ரூபாய்க்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் கிடைக்கிறது.உள்நாட்டுத் தனியார்களுக்கும்,வெளிநாட்டுத் தனியார்களுக்கும், கிடைக்கும் இந்த தண்ணீர் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் அரசாங்கத்துக்குக் கிடைக்காமல் போவது தான் சூட்சுமம்.
பெப்சி நிறுவணத்தின் வியாபார மேலாளர் தங்கள் நிறுவணத்துக்கு போட்டியாக இந்திய நாட்டின் நீர்நிலைகளைத்தான் சுட்டிக்காட்டுகிறார்.அந்த இறுமாப்புப் பேட்டியை நமது வீரஞ்செறிந்த மக்கள் கண்டு கொள்ளாமல் கடந்து போகிறார்கள் என்பது வேதனைக்குரியதாகிறது. காற்றும்,வானும், கடலும்,நீரும் பொதுவிலில்லை என்பதை மெல்ல மெல்ல சமூகம் ஏற்றுக் கொள்ளத் தயாரகிவிட்டது.வல்லான் பொருள் குவிக்கும் சூத்திரங்கள் விளம்பர வெளிச்சத்தில் களைகட்டுகிறது.நீருக்காகப் போர்மூளுமாம்.அப்போது கூட நமக்கு தொலைக்காட்சிகள் வழியே மானாடும் மயிலாடும்.