24.2.11

நெருங்கி வருகிறது புரட்சி.


இன்று நகரின் திருப்பங்கள்,ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதிகள்,குடிசை வீடுகள் நிறைந்த தெருக்கள் என எல்லா இடங்களிலும் கொடிகள் தோரணமாகி இருக்கின்றன.அதோ அந்தப்பறவை போல வாழவேண்டும்,நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடுராஜா நேரம் வரும் காத்திருந்து பாடு ராஜா என்கிற புரட்சிப் பாடல்கள் காதைக்கிழிக்கின்றன.நகரில் இருக்கிற எல்லாப் பெருந்தெய்வக் கோவில்களிலும் சிறப்பு வழிபாடும்,பொங்கலும் சுண்டலும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

கிராம,நகர,கிளை,தலைவர்கள் உற்ச்சாகமாகி விட்டார்கள்.கைமுதல் போட்டு புதுக்கடை திறக்கிற சந்தோசம் பொங்கி வழிகிறது அவர்களின் முகங்களில்.நெடுநாட்கள் காணாமல் போயிருந்த தமிழக இரண்டாம் புரட்சியின் பழய்ய முகம் தெருக்கெளெங்கும் சிரித்த முகத்தோடு திரும்பி வந்திருக்கிறது. தமிழகத்தின் முதலாம் புரட்சிமன்னர் கொடுத்த துருப்பிடித்திருந்த வாளை திரும்ப எடுத்து சானைபிடிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அந்த அலைவரிசையில் அவர்களின் தியாக வரலாறு உருக்கமான பின்னணிக்குரலில் காட்சியாகிக்கொண்டிருக்கிறது. இரண்டாயிரத்துக்குப்பிறகு பிறந்த குழந்தைகளும்,செவ்வாய்க்கிரகத்தில் இருந்து பூமிக்குவந்த மனிதர்களும் ’அவங்க ஏன் படுத்திருக்காங்க, ஜனங்க ஏன் வரிசையில் வந்து பாத்துட்டுப்போறாங்க ? என்று கேள்விகள் கேட்கிறார்கள். வரலாற்று ஆசிரியர்களிடம் தான் அதற்கான பதில்களெல்லாம் இருக்கிறது.

போன வாரம் ஒரு பொது விநியோகத் துறை ஊழியரைப்பார்த்தேன் ’ஸ்ஸ்ஸ்அப்பாட தெனந்தினம் நிறுத்துப்போட்டு பொஜம் எறங்கிப்போச்சு, இனி எண்ணி ரெண்டுமாசந்தான்,’  ‘ அதுக்குப்பிறகு?. ‘ ’அதுக்குப்பிறகு இந்த ஒத்த ரூவா அரிசி,நூறுநாள் வேலையெல்லாம் இருக்காது’ என்று சந்தோஷப்பட்டுக்கொண்டார். இதுபோல என்ன என்ன சந்தோஷமெலாம் மீண்டும் திரும்பப்போகிறதோ.

21.2.11

பினாயக்சென் விவகாரம்:ஊடகம்,ஜனநாயகம்,வெகுமக்கள்


வேலூர் சிஎம்சி மருத்துவக்கல்லூரி முதல் தர மாணவர்.அதே மருத்துவ மனையின்  நிர்வாகத்துக்கும், ஏழை எளிய நோயாளிகளுக்கும் ஒருசேர பிடித்துப்போன மக்கள் மருத்துவர்.ஜவஹர்லால் நேரு பலகலைக் கழகத்தின் மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் பொறுப்பு. இவை யாவும் அவரின் தாகத்தை அடக்க முடியவில்லை.அங்கிருந்து சட்டீஸ்கர்  டல்லி ரஜ்ஹாரா இரும்புச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு மருத்துவம் செய்யப்புறப்பட்டுப் போனார். அவருடன் அவரது மனைவி இலினாவும் பயணமானார். இயல்பிலேயே ஏழைகள் மீதும் விடுபட்ட ஜனங்கள் மீதும் அளவுகடந்த அக்கறை கொண்ட அவருக்கு சத்தீஸ்கர் மாநிலத்தின் ஆதிவாசிகள் மேல் அக்கறை வந்ததில் வியப்பேதும் இல்லை.

ஒரு கால் நூற்றாண்டுகளுக்கு மேல் எளிய மக்களுக்கு மருத்துவம் செய்வதை மட்டுமே லட்சியமாகக் கொண்ட அவருக்கு சிஎம்சி மருத்துவமனை இம்மாதிரியான பணிகளுக்கு அளிக்கப்படும் ’பால்ஹாரிஸன்’ விருது தருகிறது. 1981 ல் சத்தீஸ்கரில் பிரபலாமான தொழிற்சங்கத் தலைவர் சங்கர்குஹா நியோகியுடன் நட்பு உண்டாகி இரும்புச் சுரங்கத் தொழிலாளத் தோழர்களுக்கென பிரத்யேக மருத்துவமனை ”ஷாகித்தை” உருவாக்குகிறார். பின்னர் சுரங்க நிர்வாகமும் அடியாட்களும் இணைந்து  சங்கர்குஹா நியோகி யைக் கொலை செய்கிறது. அதற்கு நீதி கேட்டுத் தெருவில் இறங்கிய அப்பாவி மக்களைத் துப்பாக்கிக் குண்டுக்கு இறையாக்குகிறது அரசு.அதில் இறந்து போன, அங்கஹீனமான ஏழைகளுக்கும் தொழிலாளர்களுக்கும் உதவும் அமைப்பை நிறுவுவதிலும் சென் இணைந்துகொள்கிறார். இதன் தொடர்ச்சியாய் பியுசிஎல் அமைப்பின் மாநில பொறுப்பும்,அகில இந்திய பொறுப்பும் வருகிறது சென்னுக்கு.

உலகமயமாதலின் நேரடிக்கொடூரமாக இந்திய கனிமவளங்கள் அயல் முதலாளிகளுக்கும் உள்ளூர் முதலைகளுக்கும் தாரை வார்க்கப்படுகிறது. எந்தேசம் கொள்ளைபோகிறதே எனும் கோபம் ஆதிவாசிகளுக்கு வருகிறது.அதற்கு எதிராக எழும்பும் மக்கள் கிளர்ச்சியைத் தடுக்க சல்வாஜூடும் என்கிற எதிர்ப்புரட்சி அமைப்பு உருவாகிறது. சல்வாஜூடும் என்கிற கைக்கூலிகள் ஆதிவாசிகளல்லாத உயர் சமூகத்திலிருந்து தயாரிக்கபடுகிறார்கள்.வெறும் மூவாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்துக்கு பணியிலமர்த்தப்படும் அவர்கள் அரசாங்க உத்யோகஸ்தர்களாகிறார்கள்.
அது போக அவர்களுக்கு உள்ளூர் முதலாளிகள்,அவர்களின் எடுபிடிகளான காங்கிரஸ்,பாஜக,மற்றும் உள்ளூர் அரசியல் வாதிகளின் தார்மீக ஆதரவும் நிதி உதவியும் கிடைக்கிறது. அவுட்சோர்சிங் முறையில் ஜாதியப் பற்றை, முதலாளித்துவப் பற்றை உருவாக்கி அவர்களுக்கு வெறியூட்டுகிறது.

இப்படி அரசு மற்றும் ஆளும் எதிர்க்கட்சிகளின் செல்லப்பிள்ளைகளான அவர்கள் தேடுதல் வேட்டை என்கிற பெயரில் இந்த தேசத்தில் நடக்கும் வன்கொடுமைகள் மொத்தத்தையும் ஆதிவாசிகளின் மீது நிகழ்த்துகிறார்கள். குறிப்பாக ஆதிவாசிப் பெண்கள் மீது சொல்லக்கூசும் செயல்கள் நடந்தேறுகிறது. பியுசிஎல் அமைப்பின் மாநில பிரதிநிதி என்பதால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கரம் நீட்டுகிறார் பினாயக்சென். இதன்மூலம் இந்திய அதிகார,ஜாதிய,முதாலாளிகளின் கோபத்துக்கு ஆளாகிறார் மருத்துவர் சென். தன்னை ஆதரிக்கவேண்டும் அல்லது அடிபணியவேண்டும். இல்லாவிட்டால் ஏதாவதொருவழியில் தீர்த்துக்கட்டப்படுவாய்.இது அதிகார மையங்களின் விதி.அது சென் மீதும் செலுத்தப்படுகிறது. குறி வைக்கப் படுகிறார். வழக்கு ஜோடிக்கப்படுகிறது.பிடிபட்ட மாவோயிஸ்டுகளோடும், ஆதரவாளர்களோடும் தொடர்புபடுத்தி கதைதிரித்து வழக்கு  நடக்கிறது. வளமை போல் வழக்கின் தீர்ப்பு நீதிமன்றத்துக்கு வெளியே தீர்மானிக்கப் படுகிறது.

2007 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு மூன்று வருடம் நடக்கிறது. இடைப்பட்ட காலத்தில், அதாவது  2008 ஆம் ஆண்டு உலகசுகாதார நிறுவனம் அவருக்கு மனித உரிமைகளுக்கான  ‘ஜோனதன்மான் ‘ விருது கொடுத்து கௌரவிக்கிறது. உலகம் முழுவதும் இருக்கிற அறிவியல் அறிஞர்கள்,நோபல் விருதுபெற்றவர்களடங்கிய 22 பேர் குழு சென்னுக்காக பிரத்யேக கடிதம் ஒன்றை இந்திய ஆட்சியாளர்களுக்கு அனுப்புகிறது. இருந்தும் சென்ற 2010 டிசம்பர் மாதத்தில் அவரோடு மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறது செஷன்ஸ் நீதிமன்றம் ஒரு குறுகிய பிரதேசத்தில் மருத்துவ பணியாளராகவும்,ஜனநாயக ஆர்வலராகவும் இருந்த சென் இந்த தீர்ப்பின் மூலம் ஒடுக்கப்பட்ட இளைஞர்கள்,ஜனநாயக அமைப்புக்கள்,உலக அறிஞர்கள் தூக்கிப்பிடிக்கும் பதாகையாக மறிக்கொண்டிருக்கிறார்.

(நன்றி காலச்சுவடு பிப் 2011,பினாயக்சென்: ஜனநாயகவாதிக்கு இழைக்கப்பட்ட அநீதி: க.திருநாவுக்கரசு)

எத்தனை காட்சி ஊடகங்கள் இதை பொருட்படுத்தியது.எத்தனை அச்சு ஊடகங்கள் விலாவாரியாக, பத்திபதியாய் எழுதியது.எத்தனை டீக்கடை பெஞ்சுகளில் பேசுபொருளானது.எத்தனைபேர் இதை எழுதி ஹிட் வாங்கினார்கள்.

இந்த தேசம் எதைப் பேசுவது எதைப் புறந்தள்ளுவது என்கிற நுண்ணரசியலில் கெட்டிக்காரத்தனமாக நடந்துகொள்கிறது. காங்கிரஸ்  அல்லது  பாஜக -, திமுக அல்லது அதிமுக இந்த இரண்டில் ஏதாவதொன்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட அரசியலுக்கு நாம் ஜனநாயகம் என்றும் பேர் சூட்டிக்கொள்கிறோம்.உலகின் எந்த மூலையில் அநீதி நடந்தாலும்  அதைக்கண்டு பொங்குவாயானால் நீ என் தோழன் என்று சொன்னான் உலக புரட்சி நாயகன் சே.ஆனால் இங்கே கிடைக்கும் புரட்சிக் கருத்துக்கள் தன்வயப்பட்டவையாகவே இருக்கிறது. தீர்ப்பு வெளியாகி இரண்டு மாதங்களில் வெளியிலும் வலையிலும் சென்னைப்பற்றிய பிரமாதமான எந்தக்குறிப்பும் இல்லை. ஒருவருக்கு வழங்கப்பட்ட அநீதி ஒரு ஜாதிக்கு, ஒருகட்சிக்கு, ஒரு இயக்கத்துக்கு மட்டும் நடந்த அநீதியாக சுருக்கிப் பார்க்கிற வியாதி நீடிக்கிறது இங்கே.

இலங்கை இடர்பாடுகள்மேல் வைத்திருக்கிற உக்கிரப் பார்வை உள்ளூர் கொடுமைகளில் பிசகுகிறது, பின்வாங்குகிறது வாளா விருக்கிறது.மீனவர் படு கொலைநடந்த அதே காலக் கட்டத்தில்தான் உத்தப்புரம் கோயில் நுழைவும், தாமரைக் குளம் தலித் வீடுகள் சூறையாடப்பட்டதும் நடந்தது.ஆராசா தலித் என்பதால் குறிவைக்கப்படுகிறார் என்று முதல்வர் சொன்னதும் உலகம் முழுக்க எள்ளி நகையாடப்படுகிறது. மிகச்சரி. தவறு செய்தவர்களுக்கு என்ன ஒதுக்கீடு வேண்டிக்கிடக்கிறது மிக மிகச் சரி.ஆனால் ஒரே ஊருக்குள் இருக்கிற சகோதர தமிழனை கோயிலுக்குள் அனுமதிக்க மறுக்கிறாயே தமிழா,தமிழக அரசே என்று ஒரு பலத்த குரல் எழும்பியிருக்கிறதா.2000 வருடங்களாக இப்படி ஒரு ஓங்காரக் குரல் ஒலிக்காதா என்று இந்திய தலித்துகளின் காதுகள் ஏக்கத்தில் இருக்கிற விஷயம் தெரியுமா ?

அது தெரிந்துகொள்கிற வரை புரட்சிக் கருத்துக்கள் தழல் வீரம் குன்றிப்போய் வெறும் சுயசொறிதல்களாக மட்டுமே நீடிக்கும்.பொங்குகிற கடல்மாதிரி,
பற்றி எரிகிற காடு மாதிரி, வானிடிந்து பேய்கிற பெருமழை மாதிரி புரட்சி எல்லோரையும்  ஏந்திக்கொள்ளவேண்டும். இதில் ஒதுக்கீடு கேட்பது நகைப்புக்குறியது. எனில்  ஒதுக்குவது ? அது புரட்சி என்கிற வார்த்தையைக் கொச்சைப்படுத்துவது.

19.2.11

வசியக்காரனும், அடுத்தவீட்டு செல்லப்பிராணிகளும்


செல்லப்பனுக்கு நாய்கள் என்றால்  ரொம்பப்பிடிக்கும் ஆனால் அவன் ஒரு போதும் நாய்கள் வளர்த்ததில்லை.அதற்கு ரெண்டுகாரணங்கள் இருக்கிறது.ஒன்று ரெண்டுவேளைக்கஞ்சி குடித்தாலே அது கடவுள் கொடுத்த கொடுப்பினையாகிற சொத்து சுகம். இருக்கிற கூரை வீட்டில் ஆள் படுக்கவே இடம் பத்தாமல் மடத்துக்கும் வேதக்கோயிலுக்கும் அலையவேண்டியிருக்கிறது. இதில் நாயை வைத்துக்கொண்டு காபந்து பண்ண எப்படி முடியும். ரெண்டு இந்த நாய் பூனை,ஆடு,கோழிகளுக்கு வீட்டு அடங்கல்,பட்டா, விஸ்தீரணம் தெரியாது.தவிரவும் பங்காளி வீட்டுக்கார செல்லையக்கொத்தன் ஒட்டி ஒறவாட்றானா, இல்ல ஏதாச்சும் குத்தங்கண்டு பிடிக்க காத்திருக்கிறானா என்பது கண்டு பிடிக்கமுடியாது. இருக்கிற பிரச்சினையில் சாயங்காலமும் ராத்திரியும் சண்டைபோட்டுக்கொண்டு அலைய முடியாது என்கிற தீர்மானத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பதில்லை.

ஆனால் செல்லப்பன் தெருவில் நடந்தால் ஊர்க்காட்டு நாய்கள் குதியாட்டம் போட்டுக்கொண்டு பின்னால் ஓடியாரும்.கையில் இருக்கிற சீனிக்கிழங்கு,சேவு,வட்டரொட்டி எதுவனாலும் பாதி பிச்சு போட்டுவிடுவான்.திண்ணையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது பக்கத்தில் ஒண்ணு எட்டத்தில் ஒண்ணு தூரத்தில் ஒண்ணு இப்படி எல்லை வகுத்துக்கொண்டு நிக்கும். ”‘சேடு ஓடுங்க சோத்து மணம் பிடிச்சுக்கிட்டு சொம்ம சேந்து வந்திருவீகளே பிள்ளைய ஒருவா திங்கவுடாம” என்று வெளக்கமாத்தக் கொண்டு அம்மா விராட்டுவாள். ஆனாலும் அப்படியே ஒரு எவ்வு எவ்வி  போக்குக் காட்டிவிட்டு நொடியில் திரும்பிவந்துவிடும் அத்தணை நாய்களும். ”ஆக்குனது காப்பிடி அதுல நாய்க்கு பங்குவச்சிட்டு அரவகுத்தோடு போயிருவான்,கிறுக்குப்பிள்ள” என்று சொல்லிக்கொண்டே தந்து பங்கில் கொஞ்சத்தை எடுத்து கொண்டு வந்து வட்டிலில் தட்டிவிட்டுப்போவாள்.

வாங்கி கொண்டு வந்து வீட்டில் கட்டி கொஞ்சநாள் கஞ்சி ஊத்திவளர்த்துவிட்டு பின்னாடி தெருவில் அலையவிடுவதுதான் ஊர்வழக்க
ம்.அந்த நன்றிக்கு நாய்கள் வீட்டுவாசலில் படுத்துக்கிடக்கும்.இப்படித்தான் கட்டத்தொரை வீட்டு  செவல நாய் செல்லப்பன் பினாடியே அலஞ்சது. நம்ம வீட்டு நாய் ஊராம்பின்னாடி சுத்துதேன்னு அவனுக்கு வெலம்முண்ணா வெலம்.அவங்கம்மாவோ ஊசிப்போன சோத்தக்கூட நாய்க்கு வைக்க மாட்டா,அதையும் கொண்டு போய் ஆட்டுக்கு வச்சிருவா.ஆட்ட வளத்தா துட்டுவரும் நாய வளத்தா ஊர்ச்சண்ட தான் வரும் என்கிற தத்துவக்காரி அவள்.அது செல்லப்பன் பின்னாடியே சுத்துவதற்கு செல்லப்பன் போடும் சோறுமட்டுமல்ல,அவன் கூட அலையும் போராப்போட்ட பொட்ட நாயும் காரணம்.ஊரெல்லையில் நின்றுகொண்டு விசில் அடித்தானென்றால் ஒட்டுமொத்த நாயும் கூடிவிடும்.கூட்டிக்கொண்டு காட்டுவழியே ஓடுவான்.தூரத்த்லிருந்து பார்த்தால் செல்லப்பன் நாய்போலாவான்.அவைகளெல்லாம் மனிதர்களாகும்.விசித்திரம் நிறைந்த கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். கையில் கிடைக்கிற பொருட்களைத்தூக்கி வீசுவான் அதை எடுத்துக்கொண்டு வந்து கொடுக்க அதுகளுக்குள் போட்டி வரும். ஆனாச்சண்டை வராதபடி பழக்கப்படுத்தியிருந்தான்.

நாய்களுக்குள்ளசண்டை வந்தாலே பிடிக்காத செல்லப்பன் மனுசங்களுக்குள் சண்டைவந்தா சும்மாருப்பானா. சீரங்காபுரத்துக்கும், இவிங்களுக்கும் சண்ட நெரு நெருன்னு வந்தது.காரணம் ரொம்பப்பெருசில்ல  ரேசங்கடை வரிசையில் ஊர்க்காரன் முந்திப் போயிட்டானாம் பின்னாடி வந்த சீரஙபபுரத்துக்காரன் களவாண்டு கஞ்சி குடிக்கிறவனெல்லாம் துட்டுக்குடுத்து ரேசன் அரிசி வாங்க வந்தா இப்பிடித்தான் என்று சொன்னானாம்.அது வாய்த்தகறாராகி,அடிபுடியாகி தீப்பத்திக்கொண்டது.அன்று சாயங்காலம் ஊரெல்லையில் அருவா, கம்பு,கோபம் துருத்திக்கொண்டு நிற்க சிந்திக்கிற மூளை செயலற்றுபோனது. செல்லப்பனுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. சமாதானம் சொன்னான்.”போடாப் பொண்டுகப் பெயலே, இனியும் சும்மா கெடந்தா நாமெல்லா சேல கெட்டிக்கிட்டு அலைய வேண்டியதுதா” என்று சாமியாடினான் சண்டியர் சல்வார்பட்டியான்.

பேசிக்கொண்டிருந்த செல்லப்பன் படாரென்று தரையில் விழுந்து கையைக்காலை வெட்டினான்,வாயைக்கோணலாக வைத்துக்கொண்டு எச்சிலை வெளியே தள்ளினான். ”ஏ சனங்கா செல்லப்பனுக்கு காக்கா வலிப்பு வந்திருச்சி” என்று யாரோ குரல் கொடுக்கவும்.கூட்டம் எதிர்த்திசைக்குத் திரும்பி செல்லப்பனை தூக்கிக்கொண்டு ஊருக்குள் ஓடியது.ரெண்டு பேர் அருவாளைகையில் கொடுத்தார்கள்.ஒருத்தன் ஓடிப்போய் சண்டு வத்தல் எடுத்துக்கொண்டு வந்து அடுப்புக்கங்கில் போட்டு புகைவரவைத்தான். ஒருத்தன் மாரியம்மன் கோயில் திண்ணீரெடுத்துவந்து போட்டுவிட்டான். அம்மக்காரி அழுது புலம்பினாள்.இப்படியே ஒரு ஒரு மணிநேரம் ஆனது. கூட்டத்தின் கோபம் குறைந்திருந்தது.”செரி பெரியாளுகள உட்டு நாயங்கேப்பொம்” என்று முடிவுக்கு வந்தார்கள்.”ராத்திரி இதென்னப்பா நம்ம வம்முசத்தில யாருக்குமில்லாத நோயி” ஒனக்கு என்று அம்மை கேட்டாள். சும்மா கெட எனக்கு வலிப்பு வரலன்னா ஊர்க்காரம் பூராம்ப் போயி போலீஸ்டேசன்ல காத்துக்கெடக்கனும்” என்றான்.கிறுக்குப்பெய புள்ள என்று சொல்லிக்கொண்டே கையில் இருந்த கொழம்புச் சட்டியைக் கொண்டு மண்டையில் இடித்து விட்டு அடுப்பைப்பார்க்கப்போனாள்.

கம்மாய்க்கு குளிக்கப்போகும் போது கூடவரும் நாய்களையும் தூக்கி தண்ணிக்குள் போடுவான்.முள்குத்தி கால்தாங்கும் நாய்களுக்கு மண்ணெண்னெய் ,ஊத்தியோ,மஞ்சப்பத்துப்போட்டோ வைத்தியம் பார்ப்பான்.பக்கத்தில் வந்ததும் அது உரசும் இவன் தலை தடவிக் கொடுப்பான் அப்படியே உடலை சுருக்கி அவனுக்கு மரியாதை செய்யும். நாய்களென்ன பேய்கள் கூட அண்டாத கட்டத்தொர,வீட்ல கோபம் வந்தாக்கூட நாயைக்கம்பெடுத்து விளாசுவான்.ஒருநாள் மிச்சம் வச்ச சோத்துத் தட்டில் வாய் வச்சு திண்ணதுன்னு அருவாளெடுத்து வீசி விட்டான்.நடு முதுகில் காயத்தோடு அலைந்தது.செல்லப்பன் தான் டீத்தூளும்,மஞ்சத்தூளும் கொழைச்சு முதுகில் போட்டுவுட்டான். பின்ன என்ன மயித்துக்கு கட்டத்தொர பின்னால அந்த நாய் அலையும்.

”எப்பா செல்லப்பா நாப்பிராணி மேல இம்புட்டு ஆச வச்சிக்கிட்டு ஏ ஒரு குட்டிகூட வாங்கி வளக்கமாட்டிங்ற” என்று கேட்கும் மரியண்ணக் கிழவனுக்குச் சொல்ல அவனுக்கு ஒரு சேதி உண்டும்.ஏ தாத்தா மனுசப்பெய தான் வீடு,காடு,பணம் சாதின்னு பிரிச்சுப் பாக்கான் இந்த வாயில்லாப் பிராணிகளுக்கு அதுகெடயாது. அதுகளுக்குங்கொண்டு போய் நம்ம சாக்கடைய ஊட்டி வளக்கவா. ”இங்க பார்றா எங்கூருல கூல் குடிச்சி வளந்த பிள்ளைக்கு இருக்குற புத்தியெ” என்று சொல்லிக்கொண்டே மம்பட்டியை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு பெருமித்தத்தோடு கிளம்புவான் மரியண்ண கிழவன்.

18.2.11

அரசியலற்ற காமிரா பதிவு.


காட்டுக்குள் சும்மா நடந்து போனால் சூழல் அப்படியே இளகி இதமாகி மனது இலேசாகிவிடுகிறது.இந்த முறை தென்தமிழகத்தில்  மழை சக்க போடு. குளம் குட்டைகளில் நீரின்னும் வற்றாமல் கிடக்கிறது.தினம் கடந்து போகும் ஒரு குளத்தின் கரையில் வசிக்கும் இயற்கை வாசிகளில் ஒரு சில சாம்பிள். தம்பி ஆண்டன் தனது நுட்பம் குறைந்த காமிரா மூலம் பதிவு செய்த ரம்மியமான இயற்கை .

உச்சி மத்தியானம் வெது வெது நீருடன் டாலடிக்கும் வெள்ளிக் காசுகள்
.

தாத்தா தாத்தா பொடிகுடு.....வாங்க ஆளுக்கொன்று பிடுங்கி,தலைவெட்டிச்சிரிக்கலாம்.காலச்சக்கரத்தை நிறுத்திவிட்டு கல்மிஷமில்லாத உலகத்துக்குள் கிடக்கலாம்.


மூளையில் தீமூட்டும் ஒரு கவிதை. நாளங்களில் தேனோடும் ஒரு இசை.


எல்லாவற்றையும் பார்த்து கெக்கலிட்டுச்சிரிக்கும் மருதாணிப்பூ..


மயக்கும் மாலை ஆதவக் கதிர் நீரொடு கலந்து செய்யும் தங்கத்திவலைகள்


14.2.11

காதலினால் மானிடர்க்கு மீறல் உண்டாம்தனது கோட்டுக்குள் தனது வரம்புக்குள் வருகிற ஆண் பெண் ஈர்ப்புகளைக் காதலென்றும் அதற்குள் அடங்காதவற்றைக் கள்ளக்காதல் என்றும் தமிழ்ச்சமூகம் இலக்கணப்படுத்திக்கொண்டது. சினிமா அதை மெருகூட்டி,இன்று வரை பாதுகாத்துவருகிறது. அதே போலத் தொடுவது காமம் என்றும் தொடாமல் காதலிப்பது தெய்வீகம் என்றும் புதுப்புருடா வேறு இங்கு உருவாக்கி விடப்பட்டிருக்கிறது. கல்யாணம் வரையிலான காலம் மட்டுமே காதற்காலம் என்றும் சொல்லி அதற்குப்பிந்திய இந்திய அடிமை விலங்குக்குள் ஒரு பெண் தன்னைத்தானே பூட்டிக் கொள்ளுவதைச் சொல்லாமல் விட்டுவிடுகிறது. மேலை நாடுகளில் கதலில் உறவு பிரிவு என்றுதான் பேசப்படுகிறது.இங்கு மட்டும்தான் காதல் தோல்வி என்கிற ஒருசொல் கண்டுபிடிக்கப்பட்டிக்கிறது.எனில் காதல் எதனோடு போட்டி போடுகிறது.இங்கிருக்கிற சமூக ஏற்பாடுகள் மட்டுமே அதன் எதிரியாகிறது.

ஒரே ஜாதிக்குள்,ஒரே மத்தத்துக்குள் கூட எதிர்ப்புகள் வருகிறதே பின்ன எதுக்கு வீணாக சாதியை இழுக்கிறீர்கள் என்று லாஜிக் பேசலாம்.அந்த எதிர்ப்பினால் பெரும் சேதாரங்கள் ஏதும் நேர்வதில்லை. இங்கிருக்கிற அகமணமுறை எனும் ஏற்பாடுகளை மீறிப்பூகிற காதல் பூக்கள் குரூரமாக நசுக்கபட்ட கதைகள் கோடிக்கணக்கில் இருக்கும். அவைகள் தான் கிராமங்கள் தொறும் நடுகல்லாகவும், சுமை தாங்கிகளாகவும்,கன்னித் தெய்வங்களாகவும் இன்றும் நின்று கொண்டிருக்கின்றன.இவற்றொடு மல்லுக்கட்டியவர்கள் வரலாற்றிலும், இலக்கியத்திலும் ஒரு சேர இடம் பிடிக்கிறார்கள். காத்தவராயன்,மதுரைவீரன்,பொம்மக்கா திம்மக்கா,அம்பிகாபதி அமராவதி, ஆகியோரின் கதைகள் ஒரே நேரத்தில் இரண்டு சேதிகள் சொல்லுகின்றன. அது காதலின் மகத்துவம் சமூக அடுக்குகளைத்தாண்டும் என்பதும் தாண்டியவர்களுக்கான தண்டனை என்ன என இரண்டையும் அழுத்தமகச் சொல்லுகின்றன.

ஆயினும் ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் காதல் எதாவதொரு புது வழியில் புகுந்து தன்னை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும். ஓடை, வேலி கண்மாய், கடற்கரை, புகைவண்டி நிலையம் என மதிப்பு மிக்க இடங்கள் மட்டுமல்ல சில நேரம் மருத்துவமனை,சுடுகாடு, கழிப்பறை ஆகியவற்றைக்கூட அது தேர்ந்தெடுக்கும்.சோலைமணம், தென்றல்காற்று, நிலாவெளிச்சம் தேடி அலைந்தால் கரிமூட்டம் போடுகிற தோழர்களும், ஆடு பத்தும் அண்ணன்மார்களும் வீடுகட்டும் சித்தாள்களும் ஒருபோதும் காதல் செய்ய ஏலாது.

தலையை விரித்துப்போட்டு நாக்குத்துருத்தி ஆங்காரத்தோடு அப்பனைக்கூட அடெபுடே என்று சொல்லிப்பதறவைக்கும் அன்னபாக்கியம்,
ஒத்தவீட்டு மருதய்யாவின் உடுக்கடியில் ஆறிப்போவாள். நடுநிசியில் பேயோட்ட சவரட்ணைகள் செய்யப்படும்.தலையில் தூக்கிவைத்த கல்லோடு மந்தையிலிருந்து சுடுகாடு நோக்கி ஓடுவாள். உடுக்கையை கீழேவைத்துவிட்டு மருதய்யாவும் துரத்திக்கொண்டு ஓடுவார். பின்தொடர்ந்தால் பேய்பிடிக்கும் என வந்தவர் யாவரும் அங்கேயே தங்குவர். ரெண்டுபேரும் திரும்பி வரும்போது அன்னபாக்கியத்தைப் பிடித்திருந்த பேய் ஓடியிருக்கும்.அவள் முகத்தில் இன்னொரு நிலவும் குடியிருக்கும். இதை அம்பலப்படுத்தினால் சாமிக் குத்தமும் அதோடு சேர்ந்து சாதிக்குத்தமும் வந்து சேரும்.

காலந்தோறும் மீறல்கள் மீது ஒரு புது ஒளிவீசும். திருடித்திங்கிற மாங்காய்க்கு ருசி அதிகம். சுற்றிலும் மிரட்டுகின்ற அடக்குமுறைகளைத் தாண்டிக் குதித்து கொண்டு வந்துசேர்க்கிற முத்தம் கோஹினூர் வைரத்தைவிடவும் விலை மதிப்பற்றது. அதனால் தான் அந்த மஹாகவி அடடா, ஓ அடடா என்று கண்ணம்மாவின் மேல் உண்மத்தம் கொண்டான்.அத்தோடு நிற்காமல் ஆதலினால் காதல் செய்வீர் என்று கவிதைப் பிரகடனம் செய்தான்.

கொஞ்ச நாள் கோலிக் குண்டுகளைப் பைநிறையாப் போட்டுக்கொண்டு அலைந்தோம்.அப்புறம் அந்தப்பையில் தீப்பெட்டி படங்களை சேமித்துகொண்டு அலைந்தோம்.அந்தப்பைக்குள் அம்புலிமாமாவோடு சாண்டில்யன் வந்தபோது புத்தகக் கிறுக்கானோம். அதில் ஓடுகிற கருப்புவெள்ளை வரிகளில் தேவதைகள் விரட்டித் திரிந்தோம்.வாலிபம் கறைந்துபோது சம்பாத்தியத்துக்கொரு வேலையை,திகுதிகுவென பற்றி எறியும் கோபத்தோடு புரட்சியை,என தடம் கடந்து கடந்து இதோ இந்த வலை அலைக்கழிக்கிறது.

இப்படி வாழ்நாள் முழுக்க காதலிக்க கிடைக்கிற கருப்பொருள் அதிகம் இருந்தாலும் நினைக்க நினைக்க இனிக்கும் அவள் கண்கள், எப்போது பார்ப்போம் என்கிற ஏக்கம்,பார்ர்க்கும் போது தொடமறந்த தயக்கம்,தொட்டபோது உலகம் மறந்த மயக்கம் மட்டும் எல்லோரையும் திரும்பத்திரும்ப சுழன்றடிக்கும்.

12.2.11

விழா மேடையில் நட்ட மரம்.


ஆலோசனைக்கூட்டத்தில் விநாயகமூர்த்தி அரை மணிநேரம் பேசினார். எதிரில் உட்கார்ந்தவர்கள்  தூரலில் நனைந்திருந்தார்கள்.துடைத்தால் தலைவர் மனம் புண்படுமே என்று சித்திரப்பாவையின் அத்தகவடங்கியிருந்தார்கள் ஆலோசனை கேட்க வந்தவர்கள்.பேச்சு முழுவதும் மரங்களைப்பற்றியே இருந்தது. மரங்களின் மகத்துவம் குறித்து அவர் படித்துக்குறிப்பெடுத்த புத்தகங்கள் ஆறு ஏழு இருக்கும்.மகளிடம் சொல்லி வலையில் தேடி தரவிறக்கம் செய்த ஆறுபக்க செய்திகளைத் தமிழ்படுத்தித் தர சிங்கமுத்துவிடம் கொடுத்திருந்தார். அவற்றையெல்லாம் படித்து ஒரு ஆகச்சிறந்த கவிதை போல,இதுவரை எழுத்தாத சிறுகதைபோல மனதுமயக்குகிற ஒரு பனைமரக்காடே என்கிற பாடல்போல படைத்துவிடவேண்டும் என்கிற ஆசையில்தான் எல்லாவற்றையும் தனது சூட்கேசுக்குள் வைத்திருந்தார். எனினும் அதில் இரண்டு பாராக்கள் கூட அவரால் படிக்க முடியவில்லை.

சின்ன ஓடைப்பட்டியில்  வாலிபன் ஒருவன் கொடுத்த வன்கொடுமைப் புகாரை சரிசெய்யப் போகவேண்டியதாயிருந்தது. பர்ஸ்ட் அக்யூஸ்டாக சேர்க்கப்பட்டிருந்த கிளைக்கழகச் செயலாளர் அரிஸ்ட்டாட்டில் என்கிற நராயணசாமி விளாத்திகுளத்துக்கு ஓடிப்போய் நான்குநாட்கள் ஆகியிருந்தது.அங்கிருந்து தலைவருக்கு மணிக்கொருதரம் தொலைபேசியில் அழைத்து எப்படியவது முடிச்சி வச்சிருங்க தலைவரே என்று கெஞ்சிக்கொண்டிருந்தார்.செவல் பட்டி எங்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மகள் டாடா வயர்லெஸ் இண்டெர்நெட் கேட்டு நச்சரித்துக்கொண்டிருந்தாள். அரிஸ்ட்டாட்டில்  மனைவியிடம் செலவுக்கு பணம் வாங்கிக்கொள்ளச் சொல்லியிருந்தது அப்போதைக்குப் போதுமானதாக இருந்தது.ஒரு டாட்டா சுமோ எடுத்துக்கொண்டு சின்ன ஒடைப்பட்டிக்குப்போய் காலனியில் இறங்கி சொம்பில் தண்ணீர் வாங்கிக்குடித்தார்.கம்மங்கஞ்சி இருக்குதாம்மா என்று கேட்டார்.சனம் பூரித்துப்போயிருந்தது.இப்பெல்லாம் ஒரு ரூவா அரிசிதான் சாமி என்று மாரிக்கிழவி சொன்னது அவருக்குச்சாதகமாக இருந்தது.

செருப்படி பட்ட கருப்பசாமிக்கு தனது அரசியல் அனுபவத்தையெல்லாம் திரட்டி ஒரு ஆலோசனை சொன்னார்.அவன் ஏற்றுக்கொள்ளவில்லை.கூட வந்த கருப்பசாமியின் தூரத்துச்சொந்தக்காரனான மேட்டமலை கருணாகரனுக்கு கோபம் என்றால் கடுங்கோபம்.தலைவர் சொல்லியும் கேட்காத கருப்பசாமியை அடிக்கப்போய்விட்டான்.மறுநாள் கருணாகரன் இல்லாமல் காவல் நிலையம் போய் ஆய்வாளரிடம் சொல்லி ஒரு பொய்வழக்கு ஜோடிக்கச்சொல்லி அவருக்கும் டாட்டா சுமோவுக்கான பணம் வாங்கிக்கொடுத்தார்.அவர் சின்ன ஓடைப்பட்டிக்குப்போய் மூனு பேரை அள்ளிக்கொண்டுவந்து அடைத்துவிட்டார். இப்போது அந்தக் காலனிச் சனங்கள் தலவர் வீட்டு வாசலில் தவங்கிடந்தார்கள்.மூன்றாவது நாள் சமாதானம் பேசி முடித்துவைத்ததில் அரிஸ்ட்டாட்டிலுக்கு  ஒரு பத்தாயிரம்  செலவாகியிருந்தது. காலனிசனங்கள் அஞ்சு நாள் வேலைவெட்டிக்குபோகாமல் பட்டினிகிடந்தார்கள்.இந்த குழப்பத்தில் தலைவர் சேகரித்து வைத்த பேசு பொருள் படிக்கப்படாமல் குப்பையாகிப் போய்விட்டது.

அதற்குள்ளே தான் தாதரா இலைகளின் மகத்துவம் கிடந்தது.இலை,பூ,காய்,பழம்,விதை,வேர்,பட்டை,பிசின் என தன்னுள் உருவான 27 பாகங்களைப் பதுக்கி வைத்துக்கொண்டு கேட்கிற நேரமெல்லாம் அதை மக்கள் பயண்பாட்டுக்குத் தரும் மோஹ்வா மரங்களின் கதையும் அந்தக்குப்பைக்குள்ளே தான் கிடந்தது. ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களின் எழுதப்படாத குறிப்பும்.மனிதர்களைச் சந்ததி சந்ததிகளாக பார்த்துகதை சொன்ன புளியமரத்தின் கதையும். தூக்கில் இடும்போது தானே முறிந்து காப்பாற்றிவிடமாட்டோமா என்று கதறி அழுத கயத்தாத்துப் புளியமரத்தின் கண்ணீரும்,வெள்ளைக்காரனை எதிர்க்க காரணமான மருதுசகோதரர்களின் மரங்களின் சுற்றளவும் மட்கிப்போகாமல் அதர்குள்ளேதான் கிடந்தது.இனி கொஞ்ச நாளில் வீட்டுப்பக்கம் வரும் பழய்ய பேப்பர்காரரிரிடம் வீசைக்கு போய்ச்சேர்ந்துவிடும்.

ஆகவே கூட்டத்தில் துனீசியாவின் எழுச்சியைப்பற்றியும்,விலைவாசியின் கொடூரம் பற்றியும் எதிர்க்கட்சியின் அராஜகம் பற்றியுமாகப் பேசி  உலக அனுபவத்தை ஊறுகாய் இல்லாமல் ஊட்டினார்.பேச்சின் திசை ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்த இடத்துக்கும்திரும்பியது.அங்கிருந்து காடுகளுக்கும்
காடுகளில் இருக்கும் மரங்களுக்குமாகத்தாவித்தாவி வந்து கடைசியில் மரங்களை நடுவதே கட்சியின் லட்சியம் என்று முடித்தார்.கூட்டத்தின் கடைசியில் உட்கார்ந்திருந்த பூகோளன் கேட்டான்.நமது இயக்கம் கல்தோன்றி மண் தோன்றாக்காலத்து முந்தோன்றிய இயக்கம் திடீரென்று ஏனிந்த
மரங்களின் கரிசனம்.தலைவரின் முகம் இறுகிய நேரத்திலா அந்த குழல் விளக்கு அணைந்து எரியவேண்டும்.அடிப்படை உறுப்பினரெல்லாம் பூகோளனை முறைத்தார்கள்.இதென்ன சின்னப்பிள்ளத்தனமான கேள்வியெல்லாம் கேட்டுக்கிட்டு அதா,ஆள் பாத்து சேருங்கன்னு சொன்னோம். ரெண்டு கவிதையெழுதினவனையெல்லா கச்சியில சேத்தா இந்தக்கதிதான் என்று சாமியாடினார் மூத்த தடித்த அடிப்படை உறுப்பினர்.

அதற்குள் தலைவரின் முகம் சாந்த சொரூபமானது.புத்தன் பிறந்த உடனே போதிமரத்தடியில் உட்காரவில்லையே,பெண்ணும் ஆணும் கண்டநேரத்தில் கல்யாணம் செய்துகொள்ளவில்லையே அததற்கான காலம் இருக்கிறது நண்பரே என்று தொடங்கினார்.பிறகு உலகின் மிகச்சிறந்த மேற்கோள்களெல்லாம் வரிசைப்படுத்தினார் ஆனால் அடியில் பூகோளனை அளந்துகொண்டேயிருந்தார். நமது மாவட்ட இலக்கு இரண்டாயிரம் மரங்கள் தொகுதி வாரியாக எத்தனை மரங்கள் நட்டலாம்யார் யாருக்கு எத்தனை மரம் என்று பங்கீடு நடந்தது.எனக்கு தோது இல்லையே தலவரே  காலங்காலமாக நாங்கள் காங்க்ரீட் வீட்டிலேயே குடியிருந்து வருகிறோம்,மரம் நடத்த தோதான மண்ணும் நிலமும் இல்லையே தலவரே என்றார் கலியமூர்த்தி.அப்போது அவர் கண்கள் கலங்கியிருந்தது. மரம் நடவேண்டும் என்கிற உங்கள் இந்த ஆதங்கமே விழாவின் வெற்றி வீட்டுத்தொட்டியில்  நாலைந்து நடுங்கள் என்று ஆலோசனை வந்தது. ஆஹா ஆஹா அடிச்சாம் பாரு சிக்சரு தலைவர்னா தலைவர்தான், இப்படியாப்பட்ட தலைவர்களால்தான் இந்த இயக்கம் செழுமையடைகிறது இல்லையா என்று புழகாங்கிதப்பட்டார் மனிதநேயன்.பூகோளனின் முறைவந்தது சொல்லுங்க பூகோளன் நீங்க தான் இதற்குச்சரியான போர்வாள் எத்தனை நட்டுவீர்கள்.இருப்பது ஒரே ஒரு ஓட்டுவீடு நடக்கிற சர்க்கார் ரோடுதான் சொந்த நிலம் வேறில்லையே என்றான்.

புறம்போக்கு நிலத்தில் நடுங்கள் உங்களுக்கு ஐநூறு விழா மேடையில் அதற்குறிய பாராட்டும் பத்திரமும் முறையே வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். கூட்டம் ஆம் ஆம் என்று ஆரவாரித்தது,மேகங்கள் முழங்கின மின்னல் வெட்டியது. கூட்டம் இனிதே முடிந்தது.மகன் கேட்ட ஜியாமண்ட்ரி பாக்ஸ் ஞாபகம் வந்தது.வெளியே வந்த பூகோளன் தனது டீவிஎஸ் 50 எடுத்து உதைத்தான்.மழை வலுத்திருந்தது பூகோளனைக்கடந்து போன காரில் உட்கார்ந்திருந்த தலைவர் கேட்டார் யாரிவன் கொண்டப்ப நாயக்கன் பட்டி நம்ம கேளப்பருக்குச் சொந்தக்காரனா இல்ல கீழத்தெரு அதற்குப்பிறகான உரையாடல்கள் மட்டறுத்தலில் சிக்கிக்கொண்டு சிதைந்து கீழே விழுந்து சிதறிக்கிடந்தது.

பூகோளன் காலையில் வீஏ ஒ வீட்டுக்குப்போனான்.புறம்போக்கு நிலங்களின் பட்டியல் கேட்டான்.அவை எல்லாமே காலைக்கடன் கழிக்க அவனது தெருக்காரர்கள் போகிற இடமான ஓடை குளம்.அங்கேயே இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மரங்கள் இருந்தன. மஞ்சனத்தி வேலி வேம்பு பூவரசு புளி எல்லாம் ஒரு ஐநூறு இருக்கும் மீதமெல்லாம் வேலிச்செடி. வேலி மரமா செடியா என்கிற கேள்வி எழுந்தது.சாயங்காலம் ஆப்பீசுக்கு போனான்
நிலைய அதிகாரி போல அமர்ந்து கணக்குப் பார்த்துக்கொண்டிருந்த பொறுப்பாளரிடம் விஷயத்தைச் சொன்னான்.அவர் அங்கிருந்து தலைவருக்கு போன்போட்டார் அவர் என்ன சொன்னாரோ தெரியவில்லை இவர் பதிலில் இருந்து அதைக்கணிக்க முடியவில்லை.பூகோளண்ட பேசுறீங்ளா தம்பி இந்தாங்க தலைவர் ஒங்ககிட்ட பேசனுமாம்.குசலம் விசாரித்து விட்டு வேலிச்செடிகள் பற்றிய தனது விரிவுரையை ஆரம்பித்தார்.அது காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும், அது ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தது, அது அழிக்கப்படவேண்டியது என்று முடித்தார்.

ஊருக்குப்போய் பஞ்சாயத்து தலைவரிடம்  விஷயத்தைச்சொன்னான்.அவர் மோவாயைச்சொறிந்தார்.அவருக்கும் அந்த புறம்போக்கு நிலத்தின் மேல் ஒரு கண்.அவரது தாத்தா பஞ்சாயத்து தலைவராக இருந்த போது அதில் நெடுநின்ற நாராயணப்பெருமாள் கோவில் கட்டவேண்டும் என்கிற முயற்சியை
பாலாக்கினார் அப்போதைய ஆர்பிஐ கட்சியின் தென்மாநிலப் பிரதிநிதி சீனிவாசன்.அதற்கு பக்கபலமாக இருந்தார் திராவிடக்கட்சி ரெங்கசாமி .அப்போது நடந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டார்.கழிப்பறை இல்லாத சனங்களுக்கு அதுதான் புகழிடம் அதையும் அபகரித்தால் அவர்கள் மூனு மைல் நடக்கவேண்டும் என்கிற கலவரக்குரல் சட்டமன்றம் வரை எட்டியது.தீர்ப்பு கோவிலுக்கு எதிராக வந்தது.அதோடு பெரியாரின் தொண்டர்களும்,ஆர்பிஐ யின் தொண்டர்களும் கிராமத்துக்கு வந்து வெற்றிவிழாக்கொண்டாடினார்கள்.அந்தக்கணக்கை நேர்செய்ய இது சரியான தருணமாக இருந்தது.ஆடு வலிய வந்து சிங்கத்திடம் செத்துப்போக தேதி கேட்டது.

பஞ்சாயத்து தலைவர் தனது சதுரங்க படுதாவை விரித்தார்.அதற்கு இணங்காதது போல நாடகம் ஆடினால் பூகோளன்  கட்சிக்காரர்களைக் கூப்பிட்டுக்கொண்டு வருவான் அவர்களிடமும் முரண்டுபிடித்து, பஞ்சாயத்தாகி  தோற்றுப்போவதுபோல ஜெயித்துவிடக் காய் நகர்த்தினார். அப்படியே நடந்தது.அன்றிரவு மரங்களை அப்புறப்படுத்த பஞ்சாயத்துச்செலவிலேயே எர்த்மூவர் கொண்டுவருவது,மறுநாள் வீட்டுக்கொரு ஆள் வந்து குழி பறிப்பது என முடிவானபோது.தங்களுக்குத் தாங்களே குழி பறிக்கிற இந்த விழா குறித்த சேதி காதுகேளாத மரத்திக்கிழவிக்கு எட்டவில்லை.அவள் மட்டுமே நெடுநின்ற பெருமாள் கோவில் கட்டுவது எடுத்த எடுப்பிலே நின்று போன வரலாறு தெரிந்தவள்.மறுநாள் கீழத்தெருவுக்குள் வந்த ரெங்கசாமியின் பேரன் வந்தார் இருக்கிற வேலி மறசலையும் தூர்வாரிவிட்டால் வெளிக்கிருக்க சாத்தூருக்கா போவீக என்று பத்தவைத்துவிட்டுப்போனார். பத்திக்கொண்டது,அதை ஊதிவிட அண்ணா திமுகவின் வார்டு மெம்பர் போதுமானவனாக இருந்தான்.இந்த பிரச்சினைகளை அறிந்த தலைவர் உடனடியாக தலையிட்டு அங்குமட்டும் மரம் நடவேண்டாமென்று உத்தரவுபோட்டுவிட்டார்.

விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்தது பூகோளன் பல கட்சிக்காரர்களின் காங்க்ரீட் வீடுகளில் கிடைத்த கையகல நிலத்தில்  குழிதோண்டிக் கொடுத்தான். வசூலுக்குப்போன பரிவாரவாத்தோடு தானும் அதீதி என்கிற மோஸ்தரோடு அலைந்தான்.நடுநிசி தாண்டியே வீட்டுக்கு வந்து படுத்தான்.
உறக்கம் வராத நேரத்தில் சில கவிதைகள் எழுதினான்.கவிதைகள் வராத நேரங்களில் மனையின் தூக்கத்தைக்கலைத்தான். கண்விழிக்கிற நேரம் பைக்கட்டுடன் தயாரக நிற்கும் மகனின் பார்வையை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை.தீபாவளிக்கு ஊருக்குப்போக வெண்டும் என்கிற மனைவியின் வேண்டுதலை அது தமிழ்ப்பண்டிகை இல்லை என்று நிராகரித்தான்.நாங்கொண்டாடல சாமி எங்கம்மா அப்பாவப்பாக்கணும் என்றாள்.
சாப்பாடு என்றான் ஒருநாளைக்கு ஒருதரம் தான வீட்டுல கைநனைக்கீங்க அந்த ஒருதரமும் ஓட்டல்லயே தீத்துக்கங்க என்றான். சாப்பாடு ஓட்டல்ல எல்லாமே ஓட்டல்ல கெடைக்காதே என்றான்.பைக்கடோடு நின்ற பையன் முழித்தான்.அவள் முறைத்தாள்.

சாயங்காலம் வண்டி ஏற்றி விட்டுவிட்டு அப்படியே சைக்கிளை அழுத்தி வசூலுக்குப்போனான்.என்ன பூகோளன் நீங்க இல்லாம வச்சூலே மந்தமா இருக்கு என்றான் வளவராயன்.நிஜமென்று நம்பினான்.என்ன கவிஞரக்காணோமின்னு செங்கக்காலவாசல் ஓனர் திருப்பதி கேட்டார்னே என்றான்
விஸ்வாமித்திரன்.அப்போதுதான் லேசாக உறைத்தது.வல்லபதாஸ் அந்த நேரம் பார்த்து பேச்சை திசை திருப்பினான்.நாள் நெருங்கியது.வசூலும் திட்டமிட்டதற்குமேலே ஆகியது.வாங்கா வானவேடிக்கை,வரவேற்பு வளையம்,தென்னை இலைத்தோரணம் என்று ஊர்திமிலோகப்பட்டது.
கூட்டத்தின் தேவை கருதி ஊர் ஓரமாக ஒரு காலி இடம் அரங்கமாகத் தேர்வானது.அரங்கத்துக்கு பசுமை அரங்கம் எனப்பேரிடப்பட்டது. ஆனால் அங்கே  மஞ்சனத்தி மரங்களும் வேலிகளும்  வளர்ந்து கிடந்தது. பந்தல் பரமசிவம் வந்து புல்டோசர் அமர்த்தி அவற்றைப்பிடுங்கி எறிந்தார்.அதிலிருந்த குருவிகளும் காகங்களும் பூச்சிகளும் எறும்புகளும் இடம்பெயர்ந்தன.மேடை இதுவரை இல்லாத மாதிரி வடிவமைக்க மூளையக்கசக்கினார்கள்.
ஒரு மரத்தை வரைந்தால் அழகாக இருக்குமென்று சொன்னார்கள்.வேண்டாம் ப்ளக்ஸ் போர்டில் வடிவமைத்தால் இன்னும் அழகாக இருக்கும் என்றார்கள். ஏன் ஒரு மரத்தையே கொண்டு வந்து நிறுத்தினால் என்ன என்று வல்லபதாஸ் சொன்னதும் எல்லோரும் அவனைக்கட்டி ஆரத் தழுவிக்கொண்டார்கள். அப்படியே ஆனது.

விழா நடக்க ஆரம்பித்ததும் கூட்டம் கூடியது.சென்னையில் இருந்து வந்த சினிமாப்பாடகர் இந்தியா என்பது ஆலமரம் என்று பாடினார் கேட்டு நெக்குருகிக்கொண்டிருந்தது கூட்டம்.நடுக்கூட்டத்தில் இருந்து ஒரு சித்த சுவாதீனமில்லாதவன்  இந்தியா எனபது....... என்று கெட்டவார்த்தையில் பாடினான். பெண்கள் படித்தவர்கள் முகஞ்சுழித்தார்கள் அவனை அப்புறப் படுத்தி க்கொண்டுபோய் வெட்டப்பட்ட வேலி, மஞ்சனத்திச்செடிகளோடு
கீழே தள்ளிவிட்டார்கள். தலைவர் மேடையில் 2000 ஆவது மரத்தை ஆரவாரத்துக்கு ஊடே முறைப்படி நட்டினார்.

11.2.11

பால்யத்தில் பிணைந்து விளைந்த பசியும் நட்பும் .


சென்னையில் நாங்கள் தங்கியிருந்த கேகே நகரிலிருந்து கரையான் சாவடிக்கு பயணம் செய்துகொண்டிருந்தேன்.பள்ளிக்கால நண்பனும் ஊர்காரனுமான அன்பழகனைப்பார்க்க. பேருந்து இரைச்சல் மங்கி நினைவுகள் பின்னோடி க்கொண்டிருந்தது.அரசினர் விடுதியின் புழுக்கள் நெளியும்  சோற்றைத் திண்ணப் பழகிக்கொண்ட என் முன்னாடி படிக்கிற வெறி அடர்ந்து கிடந்தது. ஊரிலிருந்து வந்து ஒன்பதாம் வகுப்புசேர்ந்த ஐந்துபேரில் மூன்று பேர் இடைநின்று போனார்கள். நானும் அன்பழகனும் மட்டும் மிஞ்சியிருந்தோம். திடீரென அவனுக்கு உடம்பு ஊதிக்கொண்டது.காய்ச்சல் விட்டு விட்டு அடித்தது. விடுதிக்காப்பாளர் என்னை அழைத்து அவனை ஊருக்கு கூட்டிக் கொண்டு போகச் சொன்னார்.

நடந்தே தான் வந்தோம். காய்ச்சல் இன்னும் உக்கிரமானதால் கைத்தாங்கலாக கூட்டிக்கொண்டு அரசினர் மருத்துவமனைக்குப் போனேன்.சீட்டு எழுதிவாங்கி ஊசி போடவைத்தேன்.பசிக்கிறதென்று சொன்னான் டீயும் பன்னும் வாங்கிக் கொடுத்தேன்.குடித்து முடித்த சடுதியில்  வாந்தியெடுத்தான். தனியே அவனை காபந்து பண்ண பயமாக இருந்தது.தாஸ் வாட்ச் ஆப்டிகல் வாசலில் சுருண்டு படுத்துக்கொண்டு இனி ஒரு அடிகூட நகர முடியாதென்றான். சண்டை போட்டேன்.அழுதான். போவோர் வருவோரெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டே போனார்கள். அதில் யாரும் தெரிந்தவர் இல்லை. அருகே செருப்புத் தைத்துக் கொண்டிருந்த தாத்தாவிடம் அவனைப் பார்க்கச் சொல்லிவிட்டு ஓடிப்போய் கலா சைக்கிள் கடையில் வாட்கைச் சைக்கிள் வாங்கிக்கொண்டு அழுத்தினேன்.

அரை மணிநேரத்தில் ஊரில் இருந்தேன்.அவன் வீடு பூட்டிக் கிடந்தது.அவனது அம்மா காட்டுவேலைக்குப் போயிருந்தது. அவன் மாமவைத் தேடிக்கொண்டு போனேன்.அவரையும் காணவில்லை.அழுதேவிட்டேன்.வீட்டுக்குப் போகாமல் மறுபடியும் சைக்கிளை அழுத்தி சாத்தூருக்கு வந்து அவனைப்பார்த்தேன் ஆள் இல்லை. சுற்றிமுற்றிப் பார்த்தேன் செருப்புத்தைக்கிற தாத்தாவும் இல்லை. விடுதிக்குப்போனேன் அங்கேயும் இல்லை.மறுபடியும் அவனைத் தொலைத்த இடத்துக்கு வந்தேன்.தாத்தா இருந்தார் அவனைக் கூட்டிக்கொண்டு போய் ஊருக்கு பஸ் ஏற்றி விட்டு வந்ததாகச் சொன்னார். சைக்கிளை விடும்போது பத்துக்காசு குறைவாக இருந்தது. நாளைக்கு குடுங்க சூரங்குடி என்றார் கலா சைக்கிள் கடை ஓனர். திரும்ப நடந்து வரும்போது அநியாயத்துக்கு பசித்தது.விடுதியில் சாப்பாடு இருக்காது என்று நினைக்கும் போது பசி இன்னும் கூடியது. அரசினர் மருத்துவ மனைக்கு அருகில் வரும்போது தாத்தா ரோட்டை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்.அவரும் தனது ஒரே கையிருப்பை அவனுக்காக பேருந்துக்கு கொடுத்துவிட்டு அடுத்தபடி வரப்போகும் அறுந்து போன செருப்புக்காலுக்காக காத்திருந்தார். ’’பள்ளிக்கூடத்துப் பேராண்டி சாப்பிட்டியா ’’ என்று கேட்டார். ஆமாம் என்று சொல்லிவிட்டு நடந்தேன்.

காலங்கள் அவனை ஒரு டீக்கடை ஓனராகவும் என்னை வங்கி ஊழியனாகவும் உருமாற்றியிருந்தது.

பேருந்திலிருந்து இறங்கி கரையான் சாவடிக்குள் நடந்தேன். சின்னச் சின்ன ஒரு பத்தி வீடுகள்.வாசலில் பால் மாடு. எதோ சாத்தூர் ஆர் சி தெருவுக்குள் நடக்கிற மாதிரி இருந்தது. ஆற்றிக் கொண்டிருந்த தேநீர்க் குவளையைக் கீழே வைத்துவிட்டு ஓடிவந்து கையைப் பிடித்துக் கொண்டான். சாத்தூர்ச் சேவு கொண்டு போயிருந்தேன். கொறித்துக் கொண்டே நான்கு மணிநேரம் பின்னோக்கிப் பயணமானோம். அப்படியே எஸ்பிபி குரலில் பாடுவான்.கையெழுத்து அச்சுப் பதித்தது போல இருக்கும். படிக்கிற காலத்திலேயே பெயிண்டிங் வேலையெல்லாம் செய்வான். அவனைச்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சாத்தூர் வந்து பொங்கல் விழாவுக்கு வந்திருந்த எக்கோஸ் பாட்டுக் கச்சேரியில் கெஞ்சிக் கூத்தாடி ஒரு சான்ஸ் வாங்கிக் கொடுத்த கதையெல்லாம் பேசினோம்.

பேச்சுக்கு இடையில் இரண்டு முறை அவளைப் பற்றிப் பேசினான்.அவன் கிறுக்குப் பிடித்து அலைந்தபோதும்,அவனது அண்ணன்மார்கள் அவனை அடித்தபோதும் நான் அவனோடு இருந்தேன்.அதனால் நீண்ட காலம் அந்த வீட்டு மனிதர்கள் என்னோடு பேசுவதை நிறுத்திவிட்டார்கள். எனது கருப்பு நிலாக்கதைகள் அவனது கல்லாப்பெட்டிக்கு அருகில் இருந்தது.அவன் கை என் கையைப் பற்றிக்கொண்டே இருந்தது. எப்படி எழுத வந்தாய் என்று கேட்டான். ’’எல்லாம் நண்பர்களால் தான். நாம் ஐந்து பேர் பார்த்து சுற்றித்திரிந்த ஊரைப்பற்றி என்னோடு இருந்த நன்பர்கள் எழுத்தத் தூண்டினார்கள்’’ என்றேன். வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போனான். சின்ன வயசில் அவனது கண்களில் பளிச்சிடும் அதே ஒளியோடு அவன் மகள் வந்து வாங்க மாமா என்றாள். என்ன படிக்கிறே என்றேன். ஏரோநாட்டிகல் என்றாள். அவளுக்குச் சொல்ல என்னிடம் ஏதுமில்லை.எங்கள் இளமைக்காலத்து வறுமையைத்
தவிர.


10.2.11

தொலை தூரத்திலிருந்தும் துரத்தும் பசி.


பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில்தான் அவர்கள் வருவார்கள்.டீச்சர் ஆட்டுக்கு கொஞ்சம் கொழ ஒடிச்சிக்கிறோம் என்பார்கள்.நிமிர்ந்து  நிற்கும் அந்த வேப்பமர கிளைகள் மின்கம்பியில் தட்டுவதால் அதை வெட்டத்தருணம் பார்த்துக்கொண்டிருப்போம். அவர்களுக்கு கொடுக்கிறதாகப் பாவனை செய்துகொண்டு  வெட்டுகிற வேலையை மிச்சம் பிடிப்போம்.ஒடித்த வேப்பங்கிளைகளை அள்ளிச் சைக்கிளில் கட்டிக்கொண்டு எதோ செய்யாத தர்மம் பண்ணியவர்களைப் பார்ப்பது போலப் பார்த்துக்கொண்டே செல்வார்கள்.வெயிலடிக்க ஆரம்பித்த பிறகு அடிக்கடி வருகிறார்கள். இன்றும் ஒருவர் வந்தார். இந்தவாரம் இது மூன்றாவது ஆள்.

ஐயய்யோ வேண்டாமுன்னு சொல்லுங்க வெயில் நெருங்குது, நிழல்லில்லாமப் போயிரும்,ஒடிக்கிற கொழ கீழே செடிங்கமேல உழுது.அவர் பரிதாபமாக முழித்தார். நான் வீட்டுக்குள் வந்துவிட்டேன். அவர் பார்வையின் கெஞ்சலைத் தாங்க முடியாமல் வந்து கணினியில் ஒளிந்து கொண்டேன். அவள் அடுப்பில் காய் கறிகளோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்தாள். திடீரென கிளைகள் ஒடிந்துவிழும் சத்தம் கேட்டது.

எழுந்து போய் வெளியில் பார்த்தேன்.பின்னாடியே ஓடிவந்து ‘மனசு கேக்கல நாந்தான்  ஒடிச்சுக்கச் சொன்னேன்’ என்று சொன்னாள்.ஆடுக பட்டினியாக் கெடக்குமா,சொன்னாரு சொல்லிக்கொண்டிருக்கும் போதே குரல் தாழ்ந்தது. ’பாவம் வாயில்லாச் சீவனுக்காக ரெண்டு மைல் சைக்கிள் மித்திச்சு வார்றாரு பாவமாருந்திச்சு’ .இப்போது இவள் கண்களைப்பார்க்க முடியாமல் மீண்டும் இங்கே வந்துவிட்டேன்.

9.2.11

ஒரு புத்தகம், ஒரு புதிய வலைப்பக்கம்.
மதுரையைத் தாண்டி எங்கும் போயிருக்கவில்லை.வேலை கிடைத்து கிழக்கு ராமநாதபுர மாவட்டம் பாண்டுகுடியில் வேலை. 1984 ஆம் ஆண்டு ரமேஸ்வரத்தில் வங்கி நிர்வாகக்குழுக்கூட்டம்.அங்கேயே எங்கள் சங்கத்தின் சார்பில் எதுக்கடை போட்டோம் .தர்ணா.ஒரு இரவு ஒரு பகல் அங்கேயே தங்க நேர்ந்தது. எல்லோரும் மறுநாள் திரும்பினார்கள் நானும் வந்துவிட்டேன். இதில் ஒரு செய்தியுமில்லை. ஆனால் கடலுக்கும்,கோவிலுக்கும் போகாமல் திரும்பி வந்தேன் என்பது செய்தி.பாடத்தில் படித்த பாம்பன் பாலத்து வழியே கடலையும் அலைகளையும் பார்த்தபடி எந்த உறுத்தலும் திரும்பிவந்தேன்.

சென்ற மாதம் ரெண்டு முறை சென்னை போக நேர்ந்தும் புத்தகக் கண் காட்சிக்குப் போக முடியவில்லை.அது தான் உறுத்திக்கொண்டிருந்தது.
வருவேன் என்று தொயரங்கட்டிய பிறகும் ரெண்டு போடு போட்டு அனுப்பிவைத்துவிட்டு அம்மா அப்பா போன சாத்தூர் ஒத்தையடிப் பாதையைப்போல, அவர்கள் பார்த்த சிவாஜி படம் மாதிரி இந்த புத்தகக்கண்காட்சி ஏக்கமும் ஆர்வமும் உண்டுபண்ணியது. அதைச் சரிசெய்கிற மாதிரி தோழர் பத்மா அவர்கள் வாங்கி அனுப்பிய யோ.கர்ணனின் சிறுகதைப் புத்தகம் இன்று வந்து சேர்ந்திருக்கிறது.

நாங்கள் பேசுகிற தொழிற் சங்கம்,தமுஎச,இலக்கியம்,சினிமா இவற்றின் பின்னாடி ஒரு பெயர் ஒளிந்து கொண்டிருக்கும்.அந்தப் பெயர் தோழர் கிருஷ்ணகுமார்.பகலில் நிர்வாகத்தோடு மல்லுக்கு,சாயங்காலம் உறுப்பினர்களின் கடிதங்களுக்கு பதில்,இரவில் செயற்குழுவில் குடுமிபிடி
என்று நிற்காமல் ஓடும் கடிகாரத்தை நிறுத்தி ஆசுவாசமாய் ஒரு ஓவியம்,ஒரு கவிதை,ஒரு சினிமாப் பாட்டு, ஒருத்தரோட காதல் அனுபவம், ஒரு ஏ ஜோக் என்று ரம்மியப்படுத்துவார் கிருஷ்ணகுமார்.எந்த நேரமும் இளைஞர் பட்டாளம் சுத்திக்கிடக்கும். இதோ அவரது வலைப்பிரவேசம் ‘ உண்மை புதிதன்று ‘.படிக்கிற எல்லோருக்கும் எழுத்துக்களோடு அவரது கனத்த குரல் ஒலிக்கும்.8.2.11

புதிய பூதம் - எஸ்.பாண்ட், அடுத்த கற்றை


இந்தியாவில் ராக்கெட் ஏவுகிற ஒவ்வொரு முறையும் மெகா பட்ஜெட் தமிழ் சினிமா மாதிரி ஊரைக்கூட்டி விருந்து வைத்து,ஹோமம் வளர்த்து, முக்கியஸ்தர்களை கூப்பிடுப் புகழச்சொல்லி மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குவார்கள்.அந்த ராக்கெட் நாள் நட்சத்திரம் பார்த்துக்கிளம்பும்.ஆனால் நடத்திரத்துக்கு போய்ச்சேராது. கிளம்பி சிவகாசி ராக்கெட் போகிற தூரம் போய் பிறகு புசுக்கென கடலில் குதித்து விடும். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று குழம்பிப் போனதுண்டு.ஒரு நூத்திப் பத்துக்கோடி மனிதர்கள் இருக்கிற இந்தியாவிலிருந்து ஒழுங்காக ஒரு ராக்கெட் அனுப்ப 2000 வருஷம் பிடிக்கிறதே என்கிற கவலை வரும்.இதே போலத்தான் சர்வதேச விளையாட்டுக்கள், ஒலிம்பிக், கிரிக்கெட் சூது ஆகியவற்றிலும் குப்புற விழுந்து எழுந்து ’சிங்கம்டா’ என்று சொல்லிக்கொண்டே திரும்புவார்கள்.

இங்கே எதையும் ஒழுங்காக உண்மையாகச்சொல்லுவதில்லை.அவரவர் அவரவர்க்கான நியாயங்களோடும்,சார்புத்தன்மையோடும் அணுகுவதால் வரும் பிரச்சினை.இதோ இந்த வருடம் விக்ருதி வருடம் என்று சொன்னாலும் இந்தியாவுக்கு ஊழல் வருடம் என்றே சொல்லலாம். ஒன்றன் பின் ஒன்றாகபூதங்கள் கிளம்பியபடி இருக்கிறது.ஆதர்ஷ்,போபர்ஸ்,கொடநாடு என்கிற ஊழல் பெயர்களெல்லா வற்றையும் சிறியதக்கி விட்டு ஸ்பெக்ட்ரம் வந்தது. திருச்சி அளவுக்கே இருக்கும் ஒரு நாட்டைத்தேடி அங்கு கொண்டு போய் மூட்டை மூட்டையாய் இது பழய்ய அளவு, கற்றை கற்றையாய் குவித்திருக்கிறார்கள்.நேற்று அவர்களில் 15 சதனையாளரகளின் பெயர்கள் வெளியானது.அதையும் சிறியதாக்கிபடி கிளம்பியிருக்கிறது எஸ்.பேண்ட் அலைக்கற்றை ஊழல். இரண்டு லட்சம் கோடியாம்.

விக்ரம் என்கிற ஒரு தமிழ்சினிமா வந்தது.அந்தப்படத்தில் ஒரு ராக்கெட்டை தூக்கிக்கொண்டு வருவார்கள்.நாலே நாலு பேர் வந்து வழிமறித்து சின்னப்பிள்ளையிடம் கிலு கிலுப்பையைப்பறித்துக்கொள்வது போல ராக்கெட்டைப்பறித்துக்கொள்வார்கள்.அப்புறம் ஒரு ஹெலிகாப்டர் வந்து கோலிக்குஞ்சைத் தூக்குவது போல தூக்கிக்கொண்டு பறந்து போகும். அந்தப் படம் வந்த சமயத்தில்  பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ராக்கெட்டை எப்படி ஜஸ்ட் லைக் தட் தூக்கிச்செல்ல முடியும் என்கிற அறிவார்ந்த விமர்சனம் வந்தது.அந்த விமர்சனம் உண்மையும் கூட.அப்போது இந்தளவுக்கு நாட்டைத் தனியாருக்கு சோரம் போக விடவில்லை. இந்த 2011 ல் தனியார்களுக்கு குத்தகை விடப்பட்ட அரசு இலாகாக்கள் தான் இந்தியா என்று ஆகிப்போனது.
அதுதான் அந்த எம்.ஜி.சந்திரசேகர் 2 லட்சம் கோடியை இஸ்ரோவிலிருந்து கோழிக்குஞ்சைத் தூக்கிக்கொண்டு போவது போல் தூக்கிக்கொண்டு போயிருக்கிறார்.

இதில் என்ன கொடுமையென்றால் நடுத்தரவர்க்கமும் ,பணக்காரவர்க்கமுமான  20 சதமானம் போக எஞ்சியிருக்கிற எண்பது சதமான மக்களுக்கு இந்தச்செய்தி எதுவும் போய்ச்சேர்ந்து விடாதபடிக்கு மிகப்பெரிய ஊடுசுவர் ஒன்று எழுப்பப் பட்டிருக்கிறது.நமக்கு எப்படி உத்தப்புரம் சுவர்களைப்பற்றித் தெரியாதோ அதே போல அவர்களுக்கு இந்த ஊழல் மறிப்பு சுவர் பற்றியும் தெரியாது.இதை எப்படி அம்பலமாக்குவது என்பதை நுண் அறிவு படைத்த ஊடகங்கள் பார்த்துக்கொள்ளும்.மிகச்சரியாக தேர்தலுக்கு முந்தின இரவுதான் பூதங்கள் கிளம்புவது இந்தியாவின் விதி. வழக்கம்போலஅந்தச் சதுரங்க விதி அரங்கேறும்.

அப்போது இதுவெல்லாம் அம்பலமாகி இன்னொரு அரசாங்கம் வரும். அது ஜெயலலிதாவுக்கோ அல்லது அம்பானியின் பினாமிகளுக்கோ தான் பட்டா எழுதித்தரப்படும். அப்போது இதைவிடப்பெரிய எண்ணமுடியாத இலக்கங்களோடு ஒரு உழல் கிளம்பும். அதற்குள் அவர்கள் ஐந்தாண்டு ஆண்டு முடித்திருப்பார்கள்.

6.2.11

அக்கம் பக்கம் - பராக்குப்பார்த்தல்


ஆனந்தவிகடனில் 'ஆதவன் தீட்சண்யாவின்' சிறுகதை.

 இளம் வயதிலேயே துவங்கிவிடும் பெண் ஈர்ப்பின் குழப்பமான காலம் அந்த வளர் இளம் பருவம்.அந்த அழியாத கோலங்கள் எல்லோரையும் பிடித்து ஒரு ஆட்டு ஆட்டும்.கிராமங்களில் நுழையும் அழகிய பெண்களின் பின்னாடி ஒரு நூறு கதைகள் உருவாகும்.அதை ஒரு பத்தாவது படிக்கிற கிராமத்தானின் கண்ணாடி வழியே படம் பிடிக்கிற கதை. தவிட்டுக்கு வாங்கிய பிள்ளை சுசிலாக்காவை அழியாத கோலங்கள் ஷோபாவின் சாயலோடும்,ரோச்சாப்பூ ரவிக்கைக்காரி தீபாவின் சாயலோடும் அறிமுகப்படுத்தி அதைத்தாண்டி ஒரு முடிவைச் சொல்லுகிறது.எதிர்பாராத ஏவுதளத்திலிருந்து எகிப்தின் எழுச்சி.

எகிப்து தேசத்தின் எழுச்சி பிரமீடுகளின் உயரத்தைத்தாண்டி விட்டது.பத்து நாட்களுக்கு மேலாக கெய்ரோ வீதிகளில் நங்கூரமிட்டிருக்கிற சாதாரண ஜனங்களின் கோபம் விமர்சனத்திற்கானதல்ல வழிகாட்டுதலுக்கானது. பெயர் சொல்லக்கூடிய எந்த எதிர்க்கட்சிகளின் பின்புலமும் இல்லாமல் காட்டுப் பூக்களைப்போல வெடித்திருக்கிறது புரட்சி.கட்சிகள் இப்போது மக்களிடம் உறுப்பினர் அட்டை கோருகிற விந்தை நடக்கிறது.எழுத்தாளர் கோணங்கி சொன்னது போல புரட்சி எனும் ராக்கெட் கிளம்பியிருக்கிறது. எதிர்பாரத ஏவுதளத்திலிருந்து.ஹோஸ்னி முபாரக் பதவி விலகிவிட்டார்.
இந்த காட்டுப்பூக்களுக்குள் தொலைந்து திரும்பியிருக்கிறார் பதிவர் ராகவன். பணி நிமித்தம் கெய்ரோ சென்ற அவர் மக்கள் எழுச்சிக்குள் சிக்கிப் பின் வெளியேறியிருக்கிறார்.அந்த அனுபவத்தைச் சுடச்சுட எழுதினால் நல்லாருக்கும்.

நோய்நாடி நோய்முதல் நாடி.

சக்கரை நோய், மாரடைப்பு, புற்றுநோய் ஆகியவற்றின் கேந்திரப் பகுதியாக இந்தியா மாறிவருகிறதென்பதை உலக சுகாதார நிறுவணம் எச்சரித் திருக்கிறது. ஆகவே நூறு மாவட்டங்களில் இவற்றிற்கு எதிரான விழிப்புணர்வும்,மருத்துவமும் வழங்குகிற திட்டத்தை குலாம் நபி ஆசாத் துவக்கியிருக்கிறார்.சினிமா கல்வி அரசியல் ஆகியவற்றின் வழியே இந்த நோய்கள் பரப்பப்படுக்கிறது என்பதையும் பன்னாட்டு இந்நாட்டுக் கம்பெனி களில் அது ஊற்றெடுக்கிறது என்பதையும் சொல்லாத வரை இது இலை களுக்கான வைத்தியம் மட்டுமே.

ஒருபக்கம் அருவாப்படம்,  மறுபக்கம் பொம்மைப்படம்.

நேற்று காவலன் படம் கிடைத்தது.எதிர்பாரதாவிதமாகச் சந்தித்த நண்பர் ஒருவர் வலியக் கொடுத்தார்.வீட்டில் வந்து போட்டுப் பார்த்த பின்னாடிதான் தெரிந்தது, குப்பையில் போடவைத்திருந்ததை என்னிடம் கொடுத்திருக்கிறார் என்று.பொம்மைப்படம் விரும்பிப் பார்க்கிற எல்லோருக்கும் இந்தப்படம் பிடிக்கும்.அயல் நாட்டிலிருந்து வருகிற எல்லோரும் ,மதுரை மனிதர்களை அருவாளின் மறு ரூபமாகத்தான் பார்க்கிறார்கள்.மதுரையைப் பற்றிப் படம் எடுங்கடான்னா அருவாளைப்பத்தி படம் எடுக்கிறார்கள். அதில்லாவிட்டால் நாலு வேற்று மொழிப்படம்  இல்லை ஆங்கில எட்டு கார்ட்டூன் படங்கள் பார்த்து அதில் எலிக்கு கதாநாயகன் ,பூனைக்கு வில்லன் (அல்லது பிரகாஷ்ராஜ்) வேஷம் கட்டி களத்தில் இறக்கிவிட்டு விடுகிறார்கள். அதில் நடித்து முடித்த கையோடு ’இங்கே தொகுதிப்பங்கீடு பற்றிப்பேசப்படும்’ என்று போர்டு மாட்டிவிடுகிறார்கள்.தொப்புளைச்சுற்றி பம்பரம் விடுகிற, பிரமீடுகளைச் சுற்றி சுற்றி டூயட் பாடுகிற இவர்களின் கனவும் அரசியலும் வேறெப்படி இருக்கும்.

பெருமிதம்.

போன 26 ஆம் தேதி சானலைத் திருப்பும் போது ஒரு பேட்டி தட்டுப்பட்டது.  கதநாயகர் ஒருவர் பெருமிதப்பட்டுக் கொண்டிருந்தார். நார்வே  நாட்டுக்கு படப்பிடிப்புக்கு போனார்களாம்.அந்தப்படம் தான் நார்வேயில் டூயட் சாங்க் எடுத்த முதல் படமாம். நார்வே மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் ஒரே ஆச்சரியமாம்.இதுவரை ஆவணப்படம் எடுக்க வந்திருக்கிறார்கள்,சுற்றுலா வந்திருக் கிறார்கள், அரசுமுறைப் பயணமாக வந்திருக்கிறார்கள்,வாங்க விற்க வந்திருக்கிறார்கள் ஆனா டூயட் சாங் எடுப்பதற்காக வந்த மொதோ டீம் நீங்கதான் சார் என்றார்களாம். அதை சொல்லும்போது அவரது முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம்.ஊருக்குள்ள தப்பிவந்த கொரங்கப்பாத்த மாதிரிப்பார்த்திருக்கிறான் நார்வேக்காரன். அட வெங்காயம் இது கூடப்புரியலயா எத்தன வடிவேலு காமெடி நடிச்சிருக்கே, பார்த்திருக்கே. இந்தியாவின்,தமிழகத்தின் மானத்தைக்கூறுபோட்டு வித்துட்டு வந்ததைப் பெருமையாகப் பேசியபடி இருக்கிறது பாப்புலர் இலக்கியம். அதோடு கொண்டாடினான் குடியரசுத் தமிழன்.


5.2.11

பின்நகர்தல்


எதையும் அந்தரத்தில் இருந்து பார்க்கிற கொடுப்பினை இல்லை.
குழந்தைகளைக் கண்டால் தன்னைச் சுருக்கிக்கொண்டு,
அவர்கள் மொழி பழகி அவர்களின் கவன் கல்லை யாசகம் கேட்கிற சிறுவனாகவே மாறிப்போகிற சமியாடி சன்னாசிக் கிழவனைப்போல ஆகத்தான் பிடிக்கிறது.
பிராயத்து நினைவுகள் மட்டுமே மேடாகி உயர்ந்து நிற்கிறபோது இயற்கையை மறுதலித்து பின் நகர்தல் வந்து சேர்கிறது.
எடுத்துவை சோத்தை எதுத்துப்பேசாதே என்கிற வார்த்தைகள் உருவாகும்போது நடுநிசிநினைவுகள் வந்து சடேரெனப்பொடதியில்
அடிக்கிறது.
எவ்வளவு கொடுத்தால் பொய்ச்சான்றிதழ் பெறலாம் என்றுகேட்டதும் கருவிழிக்குள் ஊடுறுவுகிற இளையமகனின் பார்வையில்
தவிடு பொடியாகிறது மேடைவார்த்தைகள்.அப்போது முன்வைத்த காலை பின்வைக்கிற பேடியாகிப் பெருமிதம் கொல்கிறேன்.
 

2.2.11

ராணுவ பீரங்கிகளில் இருந்து புறாக்கள் பறக்கும் தேசம்.


தாஹீர் சதுக்கம் மானிட சமுத்திரமாக மாறிக்கொண்டு வருகிறது. '' முபாரக் வேண்டாம் ஜனநாயகம் வேண்டும்'' என்கிற கோஷம் அலையின் உருமலோடு ஒலிக்கிறது.கெய்ரோவின் தெருக்களில் நைல் நதி பொங்கிப்பிராவகம் எடுத்தது போல ஊர்வலங்கள் நகர்ந்து வருகிறது.இந்து கிறித்தவன் என்கிற முபாரக்கின் பிரித்தாலும் சூழ்ச்சி நொறுங்கடிக்கப்பட்டு மாற்றத்திற்கான ஒற்றுமை எதிர்கொள்ளமுடியாத பேருழுச்சியாக மாறிப்போனது.’என் நாடு என் நாடு’ என்கிற தேசீய கீதம் போராட்டக்காரர்களின் சங்க நாதமாக எகிப்து முழுக்க ஒலித்துக்கொண்டிருக்கிறது.

ராணுவத்தின் சீருடைகளும் கவச வாகனங்களும் துப்பாக்கி முனைகளும் கூட தாங்கள் ஏவல் நாய்களில்லை ரத்தமும் மூளையும் உள்ள இந்த தேசத்தின் சொத்து என்பதை சொல்லிக் கொடுக்கின்றன. ராணுவத்தின் இந்த புது அடங்காமை எஞ்சிய உலகத்துக்கான வரலாறு காணாத செய்தி.

இனி எகிப்தின் பெயர் கேட்கும் போதெல்லாம் பிரமீடுடுகள் மாதிரி,நைல்நதி மாதிரி நாகரீகத்தின் தொட்டில் மாதிரி இந்த மக்கள் எழுச்சியும்
நினைவுக்கு வரும். அப்படியாப்பட்ட சூடான மக்கள்,சூது வாதுகளுக்கு இடம் தராத மக்கள்,  இந்த நிமிஷத்து எகிப்து மக்கள்.

இதோ எங்கள் தேசத்து நடுவன் உள்துறை மந்திரி மோடியின் கைகளைப் பிடித்துக்கொண்டு ’வாருங்கள் தீவிரவாததை ஒழிப்போம்’ என்று வசனம் பேசுகிறார். முன்பாதியில் ரவுடிகளாகவும் பின்பாதியில் கடமை உணர்ச்சி மிக்க காவலர்களாகவும் மாறுகிற திரைப்படங்கள் பார்க்கிற உணர்வுதான் மிஞ்சுகிறது. ஏனென்றால் நமது உள்துறை மந்திரி நல்ல தமிழரல்லவா ?

1.2.11

உத்தப்புரம், தாமரைக்குளம். வெட்ட வெட்டத் தழைக்கும் விஷச்செடிகள்.


திரும்புகிற திசையெலாம் கணினி வளர்ச்சியைத்தம்பட்டம் அடிக்கும் காட்சிகள். வாகன நெரிசலும்  மனித கூட்டமுமக தமிழகத்தின் தலை நகரம் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமுமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறது. நேற்று மஹாத்மா காந்தி  நினைவு தினம் ஒருபக்கம். இன்னொருபக்கம் உத்தப்புரம் முத்தாரம்மன் கோவில் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் ஆயிரக் கணக்கானோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்னும் சுதந்திரத்துக்கு முந்திய இந்தியாவை அலுங்காமல் குலுங்காமல் பாதுகாக்கிற பண்பாடு இருப்பதை இந்தச் செய்திகள் செவிட்டிலறைந்து உணர்த்துகின்றன.

இதே நாளில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழிக்கு அருகில் உள்ள தாமரைக்குளத்தில் இருந்த சுமார் 30 தலித் வீடுகளில் 23 வீடுகளை அடித்து நொறுக்கித் தரைமட்டமாக்கியிருக்கிறது அருகில் இருந்த தமிழ் இனம். இந்த செய்தி ஆளும்கட்சி எதிர்க்கட்சி நடுநிலை ஊடகங்கள் எதிலும் இடம்பெறாமல் பார்த்துக்கொண்டார்கள். எட்டுக்கோடியா பத்துக்கோடியா தெரியவில்லை. எம் தமிழர்களுக்கு மத்தியில் இருக்கிற எரியும் பிரச்சினைகளில் இந்த இடிப்பு பிரச்சினை எங்கே வெளிவரப்போகிறது.காரணம் என்னவாக இருந்து விடப்போகிறது. 1975 ஆம் ஆண்டு கூடக் கொஞ்சம் நெல் கேட்டார்கள் என்பதற்காக உயிரோடு வைத்து எரித்தார்கள். இப்போது சுவரொட்டி ஒட்டினர்களாம் அது பிரச்சினையாகி இருக்கிறது. இது சகஜம் தானே. ஆனால் என்ன சுவரோட்டி என்று கேட்டால் இன்னும் விநோதமாக இருக்கும். தமிழர் இறையாண்மை மாநாடாம். இதையெல்லாம் பேச உனக்கென்ன அருகதை இருக்கிறது என்கிற கொடூரமான கேள்விதான் இந்த 2011 ன் வெண்மணிச் சம்பவம்.

இதிகாசங்களிலும் வரலாறுகளிலும் ஒதுக்கப்பட்டவர்கள் தங்கள் நெஞ்சைப்பிளந்து பிளந்துதான் தங்களின் பற்றுதலை அறிவிக்கவேண்டிய கொடூரம் நீடிக்கிறது. ஆனாலும் கூட நானும் தமிழன் நீயும் தமிழனா என்கிற ஆன்ம விசாரணை சக தமிழர்களின் மத்தியில் நடந்து கொண்டே இருக்கிறது. இது உனக்கான வேலையில்லை கோரிக்கையில்லை என்பதை திட்டவட்டமாக சொல்லியிருக்கிறது தமிழ்ச்சமூகம்.

ஜாதி மத பிரதேச கல்வி கலாச்சார பொருளாதார வேறுபாடுகளைக் கடந்து கனகனவென எரிந்துகொண்டிருக்கிறது தலித்துகள் மீதான வெறுப்பு. இதுவேறு இதிகாசம் ஆவணப்படத்துக்காக பாப்பாப்பட்டி கீரிப்பட்டிக்கு ஆறுமுறை சென்ற போதும் உத்தப்புரம் ஆவணப் படத்துக்காக இரண்டு முறை சென்ற போதும் மிகத் துள்ளியமாக இந்த அதிர்வுகள் தெரிந்தது. குறிப்பாக திருமாவளவன் கிருஷ்ணசாமி  ஜக்கையன் என்கிற பெயர்களைக்கேட்ட மாத்திரத்திலேயே தலித்தல்லாதவர் முகத்தில் ஒரு  ஒவ்வாமை கொப்பளித்துவிடுகிறது. அவர்களின் பேச்சிலும் பேட்டியிலும் தெரிந்த இயல்பு ஒருகனம் ஸ்தம்பித்துப் பின்னர் தொடர்வதை அவதானிக்க முடிந்தது. நாங்க எப்போதும் போல சகஜாமாத்தா இருக்கோம் இவிங்க வந்துதா கலவரத்த உண்டு பண்றாய்ங்க என்று ஒரு சொல்லிக்கொண்டிருக்கும் போதே  ’எப்பா ஏ தோழரு ஒங்க கட்சிக்காரய்ங்க வந்துருக்காங்க’ என்று சொல்லுகிறார் ஒரு இருவத்தி எட்டு வயதுக்காரர் அறுபத்தெட்டு வயது முதியவரைப் பார்த்து. ஒரு வலிபர்  இன்னும் ஒருபடி மேலே போய் அந்தா பாருங்க ’அவிங்க தலித் அவிங்களையும் எங்களையும் ஒண்ணா நிக்க வச்சா கண்டு பிடிக்க முடியாது’ என்று சொன்னார்.ஆஹா அழகாகச்சொல்லுகிறானே அரிஸ்டாட்டில் என்று நினைத்தோம்.’அவிங்க போட்ற செருப்ப பாத்தீங்களா அவிங்க போட்ற பேண்ட பாத்தீங்களா எங்கள விட அவிங்கதான் நால்லாருக்காங்க’ என்று ஒரு போடு போட்டார்.

கழுதைகளும் நரிகளும் நாய்களும் வாசம் செய்கிற இடத்திலே தான் வசிக்கவேண்டும். கிழிந்த உதாவாத ஆடைகளைத்தான்  அணிய வேண்டும். இறந்தார்களில் எலும்புகளில் கோர்க்கப்பட்ட அணிகலன்களைத்தான் அணியவேண்டும். அவர்கள் கல்வி கற்கக்கூடாது. மீறிக் கற்பாரேயாகின் ஈயத்தைக் காய்ச்சி  அவர்கள் காதுகளில் ஊற்றவேண்டும். இது அனுலோமா பிரதிலோமாக்களுக்காக வரையறுக்கப்பட்ட மனுஸ்மிருதி. அந்த வாலிபர்களுக்கு மனுஸ்மிருதி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்கள் அதைப் படித்திருக்கவே முடியாது. எனினும் அதன் சாரம் இன்னும் அவர்களிடம் மிச்சமிருக்கிறதை அவர்களே அறிய வாய்ப்பில்லை.

வெண்மைப்புரட்சி பசுமைப்புரட்சி நீலப்புரட்சி குடும்பக் கட்டுப்பாடு தொழுநோய் ஒழிப்பு அம்மைநோய் ஒழிப்பு ஆகியவற்றில் இந்தியா எட்ட முடிந்ததை இந்த தீண்டாமை விஷயத்தில் மட்டும் முடியாமல் போனது ஏன் என்று முன்னாள் மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்திரு உதயச்சந்திரன் அவர்களின் பேட்டியின்போது கேட்டோம். அதற்கு அவர் 2000 வருட நோயை இருபது வருடங்களில் குணப்படுத்துவது கடினம் என்று சொன்னார்.
ஒரு ஆட்சியர் அப்படித்தான் கருத்துச் சொல்லமுடியும். அதை மீறிச்சொல்ல முடியாத கோடுகள் நிறைந்ததிந்த அமைப்பு. இது மேலோட்டமாக பார்க்கையில் கேட்கையில் துல்லியமான லாஜிக்காக தோன்றும். ஆனால் அது இயற்கையல்ல அது விஞ்ஞானம் அல்ல அது புரட்சிஅல்ல. மாற்றங்களின் குணாம்சம் அப்படிப்பட்டதும் அல்ல.