Showing posts with label அகிலஇந்தியமாநாடு. Show all posts
Showing posts with label அகிலஇந்தியமாநாடு. Show all posts

15.2.10

சுவர் இல்லாத சமுத்திர வீடாக,வரப்புகளே இல்லாத பெரும் வயலாக....

கேரளா மாநில கள்ளிக்கோட்டை மாநாட்டுக்குத்தான் முதன்முதலாகப் போனேன்.அப்போது கூட மாது என்கூடவரவில்லை எனக்கும் அவனுக்கும் அப்போது அறிமுகமில்லை.சாத்தூரிலிருந்து மூன்று வேன்களில் போனோம்.
அப்போதுகூட இதே போல ஒரு உஷ்ணமான சூழல்தான் இருந்தது. ஆம் அந்த போராட்டங்கலின் மூலமாக பாண்டியன் கிராம அவங்கி ஊழியர் சங்கம் மெல்ல மெல்ல எல்லைகள் தாண்டிப்பிரபலமானது.  இந்த வங்கியில் அப்போது வேலைபார்த்த எல்லோரும் முதல் தலைமுறையாக அரசுப்பணிக்கு வந்தவர்கள்.பெரும்பாலும் அடித்தட்டிலிருந்து வந்தவர்கள்.அவர்களிடம் தழல் வீரம் குறையாத கோபம் கனன்று கொண்டிருந்த காலம் அது.சூழ்ச்சி அரசியல் ஏதும் அறிமுகமாகத காலமுமாகவும் அது இருந்தது. அது எவ்வளவு பெரிய கொடுப்பினை. அதனாலேதான் நாங்கள் வங்கி அரங்கில் நினைத்துப் பார்க்கமுடியாத,44 நாள் வெலை நிறுத்தம் எனும் அசாத்தியத்தைச் சாத்தியமாக்கினோம். அப்போது அலுவலர் ஊழியர் எனும் பேதமிலா ஒரே சங்கமாக இருந்தோம். போராட்ட குரலெடுத்துப்பாடும் பா.கிருஷ்ணகுமார் என்கிற மகுடிக்காரனின் தலைமை இருந்தது. ஆறடி உயரமும்,
வசீகரிக்கிற குரலும்,தோளில் லாவகமாகப் புரளும் கைகளும்,எல்லாம் ஒருங்கிணைந்த தோழமையும் அவருக்கென அளவெடுத்து தைத்தது போல அமைந்தவை.

ஒரு காங்கிரஸ் குடும்பத்தின் பேரன்,ஒரு நிலச்சுவான்தார்,ஒருகவிஞன், ஆளுங்கட்சிக்காரன்,ஒரு தீவிர கம்யூனிஸ்ட்,ஒரு திமுக மொழிப்பற்றாளன்,ஒரு வலது கம்யூனிஸ்ட் எல்லோரையும் இணைக்கிற சரடும்,அதை இழுத்து கரைசேர்க்கிற வல்லமையுங்கொண்ட மனிதனாக பா.கிருஷ்ணகுமார் அந்தச்சங்கத்தை வழிநடத்தினார்.அவரையும் வழிநடத்த  ஒரு இசம் இருந்தது அப்போது யாருக்கும் தெரியாது.சினிமாக்கவிஞர் வைரமுத்து சொன்னது போலல்ல, நமுத்துக்கிடந்த லௌகீக வாழ்க்கையிலிருந்து உருவி வெளியிலெடுத்து எங்களை உஷ்ணக்காரர்களாக்கியது தோழர் பீ.கே கிழித்துப்போட்ட சில தீக்குச்சிகள்.அது பிழைக்கத்தெரியாதவர்கள் என்கிற இன்னொரு பட்டத்தையும் தூக்கி வைத்தது.

நாங்கள் தொழிற்சங்கவாதிகளாக மாறி இதோ ஒரு கால் நூற்றாண்டுகள் கடந்துபோய்விட்டது.நூற்றுக்கணக்கான செயற்குழுக்கூட்டங்கள்,பல போராட்டங்கள்,பேரணிகள்,வேலைநிறுத்தங்கள் என ஓடிக்கொண்டே இருக்கிற காலங்களை உற்சாகப்படுத்துகிற தருணாமாக இந்த மாநாடுகள்.''இலைகள் பிண்ணி இணைவதனால் ஏற்ற சேலை கிடைக்குது,வண்ணங்களின் கூட்டுறவால் வானவில் கண்பறிக்கு 'தெனும் பாடலின் சாறுகிடைக்கிற மாநாடுகள்.
காம்பவுண்ட் சுவர் இல்லாத சமுத்திர வீடாக,வரப்புகளே இல்லாத பெரும் வயலாக நிறைந்துகிடக்கும் தோழமையின் ருசி பருகும் நாட்கள் அந்த மாநாடுகள்.

எத்தனையோ அகில இந்திய மாநாடுகள் நடந்தபோதும் இயக்க ரீதியாகவும்,உணர்வுரீதியாகவும் ஒரு பெரிய மைல்கல்லாக விளங்குவது கட்டாக் மநாடுதான். இந்தியாவின் தென்கோடியிலிருந்து 48 பேர் கல்ந்துகொண்டோ ம்.எங்கள் ஓவியங்கள் அந்த மாநாடு முழுக்க பேசுபொருளானது.அப்போதுதான் 9 நாள் வேலை நிறுத்தம் நடத்தி வெற்றியோடு போனோம். இன்னும் சொல்ல நிறைய்ய இருக்கிறது. அதைவிட அழுத்தமானது  கட்டாக் நகர வீதியில் தேசம் முழுவதிலுமிருந்து வந்திருந்த ஆயிரக் கணக்கான தோழர்களின் பேரணியில்,இன்குலாப்,வொர்கெர்ஸ் யுனைட்டி, ஒக்கிலோ பாரதீய கிராமினா பேங்க் கர்மாச்சாரி சங்க்,எனும் கோஷங்களோடு கடந்து
போகையில் அவரவர் அவரவர் மொழியில் கோஷம் போடுகிற திருப்பம் வந்தது. மஹா கவி பாரதியின் பாடலைக் கோஷமாக்க வேண்டுமென மாதுவிடமும் கிருஷ்ணகுமாரிடமும் கேட்டேன். ஆஹா அதை நீயே போடு என்றார்கள்.

இப்படித்தான் ஒரு கவிதையை,ஒரு சிறுகதையை,சின்னச்சின்ன வேலைகளை அங்கீகரித்துப் பாராட்டுகிற மிகப்பெரும் பலம் மாதுவிடமும்,பீகேவிடமும் உண்டு.அது அவர்கள் இருவருக்கு மட்டுமல்ல அந்த இயக்கத்துக்கும் உறுப்பினர்களுக்கும் கிடைத்த பேறு. நான் கோஷம் போட்டேன் ஒட்டுமொத்த பேரணியையும் திரும்பிப்பார்க்கவைத்த பாடலாகியது அது.மராத்தி, பஞ்சாபி, குஜாரத்தி எனும் வெவ்வேறு மாநிலத் தோழர்கள் சூழ்ந்து கொண்டு எங்களோடு அச்சமில்லை,அச்சமில்லை,அச்சமென்பதில்லையே என்று இணைந்து கோஷமிட்டார்கள்.பசி,வறுமை,அடிமைத்தனம்,உழைப்பு எல்லாவற்றிற்கும் உலகம் முழுக்க இருக்கும் ஒரே மொழியாக,ஒரே இசையாக ஒன்றுசேர்ந்து ஒலித்தது உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை,அச்சமில்லையென்று.

சங்கச் சுற்றறிக்கையை,மாநாட்டு பேச்சை,எங்கள் போராட்டங்களை,அதன் வலிகளை இலக்கியமாக்கினோம் எதிர்ப்புகளுக்கிடையில். எங்களது அரட்டைகளை அர்த்தமுள்ளதாக்கினோம்.எல்லோருக்கும் பிடித்துப் போகிற
நிறமாகச் சிகப்பு நிறத்தை மாற்றும் அணில் முயற்சியைக் கையிலெடுத்தோம்.அகில இந்திய மாநாடுகளின் பயணங்களை கலகலப்பாக்க பாடுவதும், ஆடுவதும் பரஸ்பரம் உணவு, தண்ணீரைப் பறிமாறுவதுமான சந்தோசங்களை அந்த பெட்டி முழுக்கப் பரவவிடுவோம்.எப்படியாவது ஒரு ராணுவவீரர் சிக்கிவிடுவார் பிறகென்ன உற்சாகம் கரைபுரளும்.இடையில் கடந்துப்போகும் நிலம்,ஆறுகள், மனிதர்கள், பாஷைகள்,விறைப்போடு கவனிக்கவரும் ஆயுதமேந்திய காவலாளிகள்,வியாபாரிகள்,பிழைப்பேந்தி வருவோர் எல்லோருக்குள்ளும் லயம் மாறாமல் ஜிகுஜிகுவெனும் இசையும் எங்கள் ஸ்நேகமும் கலந்திருக்கும்.

இந்த இருபத்தைந்து வருடப் பயணத்தில் யாரோடும் சில்லறைச்சண்டை போட்டதில்லை என்பது இப்போது வந்து
எழுதச் சொல்லுகிற நினைவாகிறது.இடமிருந்தால் உட்காரவைப்போம் இல்லாவிட்டாலும் பகிர்ந்துகொள்வோம்,
ரயிலிலும் வாழ்விலும்.இந்த நினைவுகளோடே எங்கள் அகில இந்திய மாநாட்டுக்கான பயணம் இன்று தொடங்குக்கிறது.சென்ற கயா மாநாட்டில் மாது வந்தான், நாங்கள் இயக்கிய 'இரவுகள் உடையும் ஆவணப்படம்' திரையிடப்பட்டது,என்பது போன்றவை இல்லாத ஒரு பயணமாகிறது. இரண்டு வாரங்களுக்கு உச்சச்தாயியில் ஒலிக்கும் அவனது சுனாமிச்சிரிப்பைக் கேட்டகமுடியாது. இரண்டு வாரங்களுக்கு தொலைபேசி அழைப்பையும்,சில அன்புக் கட்டளைகளையும் வைத்துக்கொண்டு அவள் காத்திருப்பாள்.இரண்டுவாரங்கள் வலை நண்பர்களின்
எழுத்துக்களைப் படிக்க இயலாத இழப்பும் உடன் சேர்கிறது.

எனினும் வடகரைவேலனுக்குப் பிறகு இரண்டாவதாக ஒரு வலை நண்பரை நேரில் பார்க்கப்போகிறேன்.
நாக்பூரில் இருக்கும் முதுபெரும் தோழர் எழுத்தாளர் காஸ்யபன்  செவ்வணக்கம் சொல்ல ரயில் நிலையம்
வருகிறார்.எனினும் பயணம் எல்லாவற்றையும் சரிசெய்யும் புதிய அனுபவங்களைக் கொண்டு வந்துசேர்க்கும்.

அறிவினை விரிவுசெய்,
அகண்டமாக்கு,
விசாலப் பார்வையால்
விழுங்கு மக்களை,
அணைந்துகொள்,
மானிடசமுத்திரம்
நானென்று கூவு.