Showing posts with label சங்கீதம். Show all posts
Showing posts with label சங்கீதம். Show all posts

30.7.10

இங்கும் அங்கும், பராக்குபார்த்தல்

சூப்பர் சிங்கர் 3 பிரம்மாண்டக்குரலுக்கான தேடுதல் வேட்டை துவங்கியிருக்கிறது.முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொது ஆளெடுப்பில் நீண்ட வரிசையில் பாட்டுப்பட்டாளம் காத்திருக்கிறது.பாத்ரூம் பாடகர்களில் இருந்து கைதேர்ந்த கர்நாடக சங்கீதக் கலைஞர்கள் வரை வரிசையில் நிற்கிறார்கள்.மாற்றுத்திறனாளி சரஸ்வதி தனது வசீகரக் குரலால் spot select ஆகிறார்.ஆடவர்களும்,இளம்பெண்களும் அதிக எண்ணிக்கையில் தெரிகிறார்கள்.பெரும்பாலும் IT துறை சார்ந்தவர்கள் வருவதை நம்மால் யூகிக்கமுடிகிறது.

கர்நாடக சங்கீதப் பாடகி சௌம்யா தேர்வு செய்கிற போது ஒரு இளைஞர் வருகிறார். அவரது பேர் கேட்கிறார். பேர் சொல்கிறார்.'நிஜம்மாவா, பயம்மா இருக்கு' என்று அபிநயத்தோடு சொல்லுகிறார் சௌம்யா.எதிர்
பார்த்தமாதிரியே அவர் சரியாகப் பாடாமல் தோற்றுத் திரும்புகிறார். அந்தப்பையன் பெயர் சதாம் உசேன்.லட்சக்கணக்கான உயிர்களை உறிஞ்சிக்குடித்த,பல நாடுகளைப் பொட்டல் காடாக்கிய ஜார்ஜ் புஷ்,ராஜபக்சே பெயர்களை அப்படிச் சொல்லுவாரா சௌம்யா ?.சொல்லலாம், சொல்லாமலும் போகலாம் அது அவரது உரிமை.பாடலை ஜட்ஜ் பண்ண வந்த இடத்தில் இந்த மாதிரியான கமெண்ட் கொஞ்சம் நெருடுகிறது.

பெயரில் என்னஅப்படி இருக்கிறது.'பெயர் வெறும் பேருக்கு,ஜாதிதான் பெயர்' என்கிற இளமைக் காலத்து கோபக் கவிதை ஞபகத்திற்கு வருகிறது.பேரசிரியர் ச.மாடாசமி பெயர்கள் குறித்து வேறு தகவல்களை முன்வைக்கிறார்.ரிக்சாக்காரர்களுக்கு,சலவைத்தொழிலளிகளுக்கு,பண்ணைக் கூலிக்காரர்களுக்கு,இப்படியான மக்களுக்கென்ற பிரத்யேகப்பெயர் இருக்கிறது.ஊடகங்கள் அவற்றை மிகத் துள்ளியமான நினைவுகளோடு அந்தந்த இடங்களில் பொருத்தி வைக்கும்.

சில கிராமங்களில் ஒரே குடும்பத்தில் பிறந்த ஐந்து பேருக்கும் ஒரே பெயர். கருப்பசாமி. கடக்குட்டி,சின்னவன்,நடுவுளவன்,பெரியவன்,மூத்தவன்.குடவோலையில் எல்லாப்பெயர்களும் ஒன்றாக இருப்பது மாதிரி,ஒரு ஒளிநாடாவில் எங்கு தொடங்கி எங்கு முடிந்தாலும் ஒரே ஒரு திரைப்படப்பாடல் பதிவு செய்து கொள்வது மாதிரி,ஒரு புது நோட்டுப் புத்தகத்தில் எல்லா பக்கங்களிலும் ஒரே பெயர் எழுதி வைக்கிற மாதிரி எல்லாமே அதுவாகி ஆக்ரமிக்கும் பிடிமானம்.ஒரு புகைப்படம் கூட எடுத்து மாட்டி அலங்கரிக்க முடியாத வீட்டிம் மூலை முடுக்கு எல்லாமே கருப்பனின் பெயர் ஒலிக்கவேண்டுமென்கிற வெறிதான் அது.சாதாரண ஜனங்களுக்கு பட்டும் படாமலும் இருக்கத்தெரியாது.அன்பென்றால் உயிரையும் கொடுப்பது, வம்பென்றால் உண்டு இல்லையென ஆக்குவது.

இதைத்தான் ராதாகிருஷ்ணன் மாமா இத்தனகோடிப்பேர்கள்ல இன்னொரு பேர் வைக்கலாமுங்றது கூடத்தெரியாத அப்பாவிச்சனங்க ஒரு பக்கம். ஒரே வீட்டில் பிறந்தவர்கள், இருக்கிற அத்தனைகட்சிக்கும் தலைவர்களாய் இருக்கிறமாதிரி வாழ்க்கையை வசப்படுத்திக்கிற வர்க்கம் இன்னொரு பக்கம் இருக்கு என்று சொல்லுவார்.