Showing posts with label வலையுலகம். Show all posts
Showing posts with label வலையுலகம். Show all posts

3.7.13

தீவிரமாகும் தனிமையின் இசை.

நெடுநாட்களாகவே,புத்தகம்,இசை,சினிமா,தொலைக்காட்சி எனத்தொலைந்து கொண்டிருக்கிறது பொழுதுகள்.அம்மா வந்தாள் வாங்கி ரெண்டாவது தரம் வாசிக்க, புதிதாக தெரிகிறார் திஜா.ஊரெல்லாம் உன்பாட்டுத்தான் பாடலை பாடுகிற ஜேசுதாஸ் மிக நெருங்கி வந்து உட்கார்ந்து கொள்கிறார்.பின்னே ஆயிரம் தடவைகளுக்குமேலே கேட்டாகிவிட்டது.அதற்குவரும் ஊடிசை நெடுநாட்கள் பழகிய நண்பனின் வார்த்தைகளாக உருமாறுகிறது. கேணிக்
கரை வீதியில் இருக்கும் அந்த மேன்சனுக்கு அருகில் ஒருகுடும்பம் வடை போட்டு விற்றுக்கொண்டிருக்கும்.அவர்கள் அதிகாலை நான்குமணிக்கு எழுந்து பாத்திரங்களை உருட்டும் சத்தம் மறைந்துபோன தகப்பனாரை யாவகப்படுத்தும்.அந்த நேரத்துக்கு சரியாக ஒரு தெருப்பசுமாடு வந்து மாவு பிசைந்த தேக்சாவை தனது நாக்கால் வரக்,வரக்கென்று சுரண்டித்தின்கிற சத்தம் தினபடிக்கான சுப்ரபாதமாகும்.பிறகுதான் அந்த ஆக்காட்டிக்குருவியின் கிர்ரிக் சத்தம் கேட்கும்.

சின்னச்சின்ன அசைவுகளையும்,காய்கறி மார்க்கெட்டுக்கு அருகில் குவியும் குப்பைகளையும் அதனைதத் வறாமல் வந்து இல்லாமல் ஆக்கி விட்டுப் போகும் நகராட்சி சேவகர்களையும் ஊர்ந்து கவனிக்கும்படியாக்கிவிடுகிறது இந்த தனிமை. மார்க்கெட்டில் இருக்கும் சேகரண்ணன் கடை இனிப்பு போண்டாவும், அங்குவந்து அமர்ந்து ரெண்டு போண்டா சாப்பிட்டுவிட்டு பசியாறிப்போகும் காய்கறிவிற்கிற கிராமத்து பெண்களும் பரிமாறிக்கொள் ளாத தோழமையை கொடுத்துவிட்டுப்போகிறார்கள்.

வரும் வழியில் அதிகாலை வேளை அடர்த்தியாய் பவுடர் அப்பிக்கொண்டு கிழிந்த சேலையால் முக்காடுபோட்டுக்கொண்டு வடநாட்டுப் பாஷையில் பிச்சைகேட்கிற வயதான பெண்மணியை ஊகிக்கமுடிகிறது.அவரது கம்புக் கூட்டில் அன்றைய நாளிதழ் இருப்பதைக்கவனிக்க முடிகிறது.ஆனால் வியாழக்கிழமை தவறாமல் ஒருபெட்டிக்கடையில் ஆனந்தவிகடன் வாங்கப் போகிற போது அந்த வடநாட்டுப்பெண் காசு கொடுத்து தமிழ் நாழிதழ் வாங்கியது எதற்காக.இந்தக் கேள்வி இதுவரை பார்த்த, படித்த, கேட்ட  திகில் கதைகளின் விடைகளையெல்லாம் தாண்டி தொக்கி நிற்கிறது.

தினம் கடந்து போகும் அரண்மனை வீதியில் தான் அரசியல் கூட்டங்கள் நடக்கும்.அதனருகில் தான் எதையும் அலட்சியப் படுத்தியபடி காய்கறிகளை கடைவிரித்து உட்கார்ந்திருக்கிற பெண்களிருப்பார்கள். அதற்கருகில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு முன்னாடி எந்த நேரமும் அரைப்போதையில் உட்கார்ந்து கொண்டு போவோர் வருவபவரை அளந்து கொண்டிருப்பவர்
என்ன வேலை செய்வார் அவர் குடும்பம் எங்கிருக்கும் என்கிற கேள்வியும் கூட விடைதராமல் கிடக்கிறது.

போன செவ்வாய்கிழமை தலைமைத்தபால் நிலையத்துக்கு  முன்னாடி மேடை போட்டு பெரிய பெரிய ஒலிபெருக்கிப் பெட்டி வைத்து பாட்டுப் போட்டுக்கொண்டிருந்தார்கள்.நாளை உலகை ஆளவேண்டும் உழைக்கும் கரங்களே பாட்டு.ஜேசுதாஸ், மெல்லிசை மன்னர்,கவிஞர்முத்துலிங்கம்( சரியா தெரியவில்லை) மூவரும் சேர்ந்து அந்தப்பகுதி முழுவதையும் வசியப்படுத்திக்கொண்டிருந்தார்கள். கொஞ்சம் நின்று வரிகளையும் இசையையும் கேட்டால் நாளைக்காலையிலேயே இந்த தேசம் முழுக்க பாட்டாளி மக்கள் கைக்க்கு வந்துவிடும் போன்ற குதியாட்டம் உருவாகும்.

அப்புறம் நேரம் ஆக ஆக வங்கி இருக்கும் வீதிமுழுவதும் விலையுயர்ந்த கார்கள் கட்சிக்கொடிகட்டிக்கொண்டு வந்து தெருவை நிறைத்தன.ஏதாவது பிறந்த நாள், நூறாவது நாள் கொண்டாட்டமாக இருக்கலாம் என்று நினைத்து வேலைக்குள் முங்கிப்போனது தேரம். ஒரு பத்தரை மணிக்கெல்லாம் ’விற்காதே விற்காதே என் எல் சி பங்குகளை விற்காதே’ என்ற கோஷம் கேட்டது. இப்படியான கோஷங்கள் இடதுசாரித்தொழிற்சங்கக்கங்களின் கூட்டங்களில்,அதன் ஏனைய அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்களில் மட்டும் தான் கேட்கமுடியும்.ஆடிப்போனேன் ஒருவேளை ஆளும் கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிக்காரர்கள் புகுந்துவிட்டார்களா என்று பதை பதைத்துப் போனேன். பிறகுதான் தெரிந்தது என் எல் சி பங்குகளை தனியாருக்கு விற்கக்கூடது என்று ஆளும் அண்ணா திமுக நடத்துகிற போராட்டம் என்று.ஓடம் ஒருநாள் வண்டியில் வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்
எனும் சொல் எவ்வளவு சத்தியமானது.

தனது தேர்ந்த திரக்கதைகளாலும்,செய்நேர்த்தி மிக்க பொதுவுடமைப் பாடல் களா லும் தமிழகத்து உழைக்கும் மக்களை மயக்கி வைத்திருந்த எம்ஜியாரின் உத்தி இனிமேல் செல்லுபடியாகாது. சனம் சினிமாவை விரட்டிவிட்டு சீரியல் களை கட்டிப்பிடித்து அழுதுகொண்டிருக்கிறது. அவர்களின் பக்கம் தான் இருக் கிறேன் என்று திசை திருப்ப இதுபோன்ற ஆர்ப்பாட்ட உத்திகளையும் ஒரு ஆளும் கட்சி கையாள வேண்டியது, இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தில் புதியது.

17.6.12

வலைஎழுத்தில் வரைந்த கோடுகள் உயிர்த்தபொழுது...

வலைஎழுத்தில்  வரைந்த கோடுகள் உயிர்த்தபொழுது...

மூன்று மணிநேர பயணத்துக்கப்புறம் மாட்டுத்தாவணிப்பேருந்துக்கு வந்திறங் கும் பயணிகள் எல்லாம்  முண்டி யடித்துக்கொண்டு எங்குபோவார் களோ அங்கேதான் போனேன். மூன்று ரூபாய் சில்லறை கேட்டார். இங்கே மூன்று க்கு ஒன்று இலவசம்.அப்பாட. அதற்கப்புறம் வணிக வளாகத்துக்குள் மேல் கோடியில் இருந்து கீழ்கோடி வரை ஒரு நடை நடக்க எனக்குப் பிடிக்கும். வலது கைப்பக்கம் இறுகக்கட்டி இடையிடையே சிகப்பு வண்ண செயற்கைப்பூ வைத்து அழகுபடுத்தப்பட்டிருக்கும் மல்லிகையின் மணத்தை ஓசியில் நுகர்ந் தபடி போக மனசு கொஞ்சம் லாஞ்சனைப்படும்.நாத்தம் சகிக்க முடியாத இடத்தில் ஒண்ணுக்குபோவதற்கு மூன்று ரூபாய்தெண்டம் கொடுத்து விட்டு, இந்த மனம் மயக்கும் சுகந்தத்தை ஓசியில் நுகர்ந்து செல்கிறோமே என்கிற லாஞ்சனை வரும். எத்தனைமுறை கடந்து போயிருக்கிறேன் ஒருதரமாவது பத்துரூபாய்க்கு  வாங்கிவீட்டுக்கு கொண்டுபோக வேண்டுமென்கிற யோசனை வந்ததில்லை.

வழுவழுப்பான தரையில் சுருண்டு தூங்கும் பயணிகளையும் சாயங்காலம் ஏழுமணிக்கு ஆவிபறக்கிற பூரியைக் காட்டி சாப்பிட அழைக்கும் ஹோட்டல் காரரையும்,தோசைக்கல் சைசுக்கு சுட்டு வைத்திருக்கிற முறுக்கையும்  பார்த் துக்கொண்டே  கடந்து போனேன்.எங்கோ ஒரு மூலையில் இருந்து கொண்டு எச்சரிக்கை செய்து  கொண் டிருந்த காவல்துறை அன்பரின் குரலில் குழைத் துக்கொடுத்த பயத்தை, அவர் ஒலிக்கவிட்ட எம்ஜியார் பாட்டு அதிகரித்தது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதாம்.

வசலுக்கு வந்து சின்ன சொக்கிகுளம் போகிற பேருந்து எது என்று கேட்டேன். தப்பான பேருந்தில் ஏறி  பாதி வழியில் இறங்கி ஆட்டோ பிடித்து பிடிஆர் ஹாலுக்கு போகும்போது ஹாலின் முகப்பில் யாரும் இல்லாதது கண்டு பயந்து போனேன். காரணம் தோழர் பத்மாவின் நூல்வெளியீடு ஏழுமணிக்கு. நான் போனது  எழேமுக் காலுக்கு. ஒன்றல்ல இரண்டல்ல பல தடவை இப்படி நிகழ்ச்சி முடிந்தபிறகு போய் போன ஜோரில் திரும்பி வந்திருக்கிறேன். அதுவெல்லாம் சொந்த ஊரிலேயே. இது அதிக தூரம், சுமார் 112 கிமீ. இந்த முறையும் ஏமாந்து போனாயா என்று சோர்ந்து போனது மனது.காவலாளி ஓடிவந்து சார் ஃபங்க்சன் மேல நடக்கு என்று  சொன்னார். ஓடிப்போய் மேடையைப்  பார்த்தேன் மேடையில் பத்மா ஜாடையில் யாருமே இல்லை. மணப்பெண்ணும்  மண மகணும் இருக்க ஒரு ஓரத்தில் க்ளாரிநெட்டில் ஒரு கலைஞன் உயிரை  உருக்கிக் கொண்டிருந்தார். சினிமாவில் வருகிறமாதிரி கொஞ்சம் ஒரு 90 டிகிரி காமிராவை திருப்பினேன். பத்மா.அலைந்த கலைப்பு போய்விட்டது.

நூல் வெளியீட்டுவிழா என்றால் மேடையில் தான் நடக்குமென்கிற நடப்பை தகர்த்து நுழைவாயிலின் ஒரு  ஓரத் தில் தோழர் பத்மஜாவின் வெளியீட்டு விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. அங்கிருந்தவர்களில் பத்மாவும்  எழுத்தாளர் சக்திஜோதி மட்டுமே தெரிந்தவராக இருந்தார்கள். இன்னும் முடியலையே என்று கேட்டேன்  இனி மேதான், என்று சொல்லி, அங்கிருந்த வர்களை அறிமுகப்படுத்தினார்.கிட்டத்தட்ட எல்லோருமே எனக்கு முகநூல் வழியே பரிச்சயமான பெயர்களாகவே இருந்தது. தோழர் லட்சுமி சரவணக் குமார் முகநூல் படத்தில் பார்த்ததை விடவும், முதிர்ச்சியாகத் தெரிந்தார். பேச்சிலும் கூட. மணிஜீ, அகநாழிகை வாசுதேவன் ஆகியோரைத் தேடினேன் அவர்கள் வரத் தாமதமாகும் என்று பத்மா சொன்னார்கள்.

தங்கை தாரணி ப்ரியாவை அறிமுகப்படுத்தும் போது சந்தோஷமும் கூடவே வருத்தமும் சேர்ந்துவந்தது. நான் 2008 ல் ப்ளாக் ஆரம்பித்து எனக்குத்தெரிந்த தோழர்களைத் தாண்டிப்போய் நண்பர்கள் லிஸ்ட்டில் சேர்ந்த முதல் ப்ளாக் தாரணியுடையது.அதற்கப்புறம் கிட்டத்தட்ட ஒரு வருட வலைப் பரிச்சயம் இருந்தது அவரோடு. பின்னர் எனது பதிவுகளுக்கு கமெண்ட் போடுவார் அது பெரிதல்ல வாய்க்கு வாய் சாரி, வரிக்கு வரி அண்ணா என்று எழுதுவார் அதில் நான் லயித்துப் போயிருக்கிறேன். வெயிலின் அருமை நிழலில் தெரியும். அந்த தாரணியும் நானும் பக்கத்தில் பக்கத்தில் இருந்துகொண்டு ஒரு ஹலோக்கூட சொல்லாமல் இருந்திருக்கிறோம் என்பது வலை அறிமுகப்படுத்தியிருக்கிற ஒரு புதுவகையான உணர்வு. அப்புறம் சம்பிரதாயத்துக்கு இரண்டுவார்த்தை பேசிவிட்டு ஒதுங்கிக்கொண்டோம். அந்த நாள் முழுக்க திரும்பத்திரும்ப அது பற்றியே யோசிக்க வைத்தது.

31.8.11

எழுத முடியாமல் கழிந்துபோன நாட்களுக்கான சரிக்கட்டல்.


சாத்தூரிலிருந்து வேலிப் புதர்களைத் தாண்டி நான்கு மணிநேரம் பயணம் செய்து ராமநாதபுரம்.அங்கே ஐந்து இரவுகள் புத்தகங்கள் கொசு கொசுவர்த்தியோடு கழியும்.பகல்களை எல்லாம் வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொள்வார்கள்.அல்லது மனமுவந்து நானே கொடுத்து விடுவதுண்டு. சண்டையும், கோபங்களும், பேசாவிரதமும் நினைக்க நினைக்க இனிக்கிற தனிமை. அதுமட்டுமா இனிக்கிறது வெறும் வெங்காயம் கிள்ளிப்போட்டு மணக்க மணக்க இறக்கி வைக்கும் மொட்டைச்சாம்பார் இனிக்கிறது.அதன் ருசிதேடி நாக்கு நூற்றித் தொண்ணூற்றி எட்டு கிலோ மீட்டர்கள் நீளுகிறது.திங்கட்கிழமைக்காலை பேருந்து சத்தமும் பயண நினைவுகளும் எரிச்சலூட்ட சனிக்கிழமை அதே பேருந்தும் பயணமும் குதூகலம்தரும் இது ஒரு தவணை முறையிலான புலம் பெயர்தல். என் வாழ்நாளில் அதிகம் சண்டையிட்டுக்கொண்டது பேருந்து அரசுப்பேருந்து நடத்துநர்களிடம் தான்.இப்போதெல்லாம் அவர்களிடத்தில் கொஞ்சம் பரிவும் ஸ்நேகமும் வருகிறது.

சென்ற வாரம் 20, 21, 22 தேதிகளில் சென்னையில் இருந்தேன்.சென்னையில் இருந்தது ஒன்றும் பெரிய தகவல் இல்லை.ஆனால் 21 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பதிவர்கள் ஐந்துபேர் சந்தித்துக் கொண்டதுதான் மகிழ்சித்தகவல்.ஐந்து பேரை ஒன்று சேரவைத்தார் தோழர் பத்மஜா.சென்னை டிஸ்கவரி புக்பேலஸில் வலசை இதழ் வெளியீடு நடந்து முடித்திருந்தார் கார்த்திகைப்பாண்டியன்.அங்கே ராஜ சுந்தரராஜண்ணா வையும் தோழர் விதூஷையும் மேவியையும் சந்தித்தோம். வலசை இதழ்களோடு கீரனூர் ஜாகீர் ராஜாவின் மூன்று நாவல்களும் வாங்கிக்கொண்டோம் சென்னை செல்லும்போதெலாம் சந்திக்க எண்ணித்திரும்பியது வானம்பாடிகள் பாலாண்ணா வைத்தான்.அவரால் டிஸ்கவரி புக்பேலஸ் அமைந்திருக்கும் கேகே நகருக்கு அலையமுடியாததாகையால் சென்னையின் குவிமையமான தி நகருக்குச் சென்றோம்.

ஒவ்வொரு எழுத்தும் அதன் வரி வழியே முகங்களைக் கற்பனையில் வரைந்து வைத்திருக்கும்.அந்த கற்பனை ஓவியத்தோடு நிஜ ஓவியத்தை ஒப்பிட்டுப் பார்க்கிற ஒரு போட்டி முடிவும் குறுகுறுப்பும் முன்னோடிச் செல்லும். பின் தங்கிப்போய்  முகங்கள் பார்க்கும் சந்தோஷம் தான் இந்த வலைப்பதிவர் சந்திப்பு. இன்னொரு வகையில் அந்த சந்திப்புகளும் பகிர்தலும் எழுதுவதற்கு உந்துதலாகவும் மாறும். சில நேரம் படித்ததும் எழுத்தத்தூண்டும் சில புத்தகங்களும் நல்ல எழுத்தும் கூட. அப்படி எழுதத்தூண்டிய புத்தகங்கள் வரிசையில்ஜாகீர் ராஜவின் மீன்காரத்தெரு. பிறகு விரிவாக எழுதலாம். ஆனால் உடனடியாகச்சொல்லவேண்டியது வலசையில் வந்திருக்கும் தோழர் பத்மஜாவின் நீச்சல்காரன்.

ஜான் சீவரின் மூலக்கதை எப்படியிருக்குமோ தெரியவில்லை ஆனால் அதை அப்படியே பிசிறில்லா தமிழ்ச்சிறுகதையாக்க முடிந்திருக்கிறது தோழர் பத்மாவால். ஒரு கனமான முடிவும் விறு விறுப்புக்கு பஞ்சம் வைக்காத சம்பவங்களும் மட்டுமே மொழிபெயர்ப்போடு பயணப்படவைக்கும். அதுதான் இதுவரையில் எனக்கிருந்த அனுபவம்.ஆனால் ஒரு சன்னமான படிமக்கதைபோல தோற்றமளிக்கும் நீச்சல்காரனை நீரோட்டம்போன்ற எழுத்தின் மூலம் படிக்க வைத்திருக்கிறார்.அதுவே அந்த இதழிலுள்ள ஏனைய மொழி பெயர்ப்புகளையும் வாசிக்க தூண்டுகிறது.

11.1.11

அன்புக்குப் பாத்திரமாவது

காணாமல்போன இரண்டாவதுகாலை
பிரிவின் இழப்பை உணரச்செய்தது
அது உலோகத்தால் செய்யப்பட்ட வஸ்துதான்
அது உருளை வடிவமான சில்வர் குவளைதான்

அதை அவள் டம்ளர் என்று சொல்வாள்
அம்மாவோ போனி என்று சொல்லும்
அது மதுவோடிருக்கையி க்ளாஸ் ஆகும்
கண்ணதாசன்கவிதையில் கிண்ணமாகும்

என்ன வேண்டுமானாலும் ஆகட்டும்
அது  எட்டுவருடம் என்னோடே இருக்கிறது.
எல்லாக்காலை நேரத்திலும்  ஆவிபறக்க
அது என்னோடே இனிப்பாய் இருக்கிறது.

அளவும் சுவையும் மாறினாலும்
சரிக்கட்டும் ப்ரியமும் பந்தமும் மாறாது.
பாத்திரக்கடையில் குட்டச்சியின் பெயர்
எண்களிலும் நாணயத்திலுமிருந்தது.

அரிசிப் பைக்குபின்னாடி ஒளிந்து கிடந்த
இரண்டு நாட்கள் என் தவிப்பை எடைபோட்டது.
திரும்பக்கிடைத்த மார்கழிக்காலையில்
என்கையில் குளிர் அந்தக்குட்டச்சியுடம்பில் அனல்.

என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொள்கிறேன்
399 முறை வலைமக்களின் அன்பிற்குப் பாத்திரமாகி
கிடந்திருக்கிறேன்.கடந்த ரெண்டு வருடங்கள் எனை அன்பால்
சூழ்ந்துகொண்ட வலைச்சொந்தங்களுக்கு என்னால்
பிரதி செய்ய அன்பே கையிருப்பாக இருக்கிறது.

நன்றி.

27.12.10

பராக்குப் பார்த்தல்

மதுரையிலிருந்து சாத்தூர் வந்த பேருந்துப் பயணம் ஒரு நட்பைக் கொடுக்கும் என நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.அப்போது கைப்பேசி புழக்கத்தில் இல்லை.தொலைபேசி கூட மேட்டிமை மிகுந்த சாதனமாக இருந்த காலம்.எனது விலாசத்தை நினைவுபடுத்தியபடி ஒரு நீலநிற உள்நாட்டுத் தபால் வந்தது.ஒரு தபால் வருவதுகூட பெரிய சேதியாக நடமாடும் எனது கிராமம்.அதன் ஊகங்கள் அது காதல் கடுதாசி என்றும், வேலைக்கான அழைப்பிதழ் என்றும் தத்தமக்கான கற்பனைகளை கதையாக்கின.பின்னர் நெடு நாள் நான் கடிதம் எழுத அவன் எழுத மைப்பேனாவின் முனை வழிப் பூத்தது அபூர்வ நட்பு .பேருந்தின் அடுத்த இருக்கையும் அவனது சில சொற்களும் மட்டுமே நிலாடிக் கொண்டிருந்தது.ஒரு நாள் நான் அவனைப் பார்க்க அந்த கோவில் பட்டிக்குப் போக முடிவானது.

கோவில்பட்டி போவதற்கான நாள் குறித்தது, அதற்கான பயணச்செலவு தயார் செய்தது,என்ன பேசிக்கொள்ள வேண்டும் என்று மனக் குறிப்பெழுதிக்கொண்டது,வீட்டாரிடம் எப்படி அறிமுகம் செய்துகொள்வது,அவர்களின் பேச்சையும் பார்வைகளையும்,அன்பையும் ஒருவேளை நிராகரிப்பையும் எப்படி எதிர்கொள்வது எனக்குறு குறுப்புடன் அலைந்த நாட்கள் அற்புதமானவை.

அப்படித்தான் ஈரோடு வலைப்பதிவர் சங்கமமும் என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தது.எதிர்பாரத ஒரு நிகழ்வால் அது நிராசையாகிப்போனது.ஆரம்பத்திலிருந்தே என்னை தொடர்புகொண்டு அழைத்த §¾¡Æ÷ கதிருக்கும், அன்பின் பாலாசிக்கும் என்ன பதில் சொல்வதெனத் தெரியவில்லை.இன்று காலை ஈரோட்டிலிருந்து தொடர்புகொண்டு என்னை அன்பால் திக்குமுக்காடச் செய்தார் சகோதரி மஹி கிரான்னி.அந்த அன்பும் இன்னும் முகமுகமாய் நான் பார்க்க ஆசைப்பட்ட வலைத்தோழர்களின் அன்பும் கடைசி நிமிடத்தில் தவற விட்ட புகைவ ண்டியாகைப் போனது.காலம் எங்காவது ஒரு புள்ளியில் அந்த வாய்ப்பைக்கொண்டு வந்துசேர்க்கும்.

முற்போக்கு இலக்கியங்களின் வழியே விளிம்புமக்களின் வாழ்வை காத்திரமாக முன்வைக்கிற அன்பிற்கினிய தோழர் ஆதாவன் தீட்சண்யாவின் தந்தையார் 26.12.10 அன்று மரணமடைந்துவிட்டார்.அங்கேயும் கூடப் போகமுடியாத சூழல்.முதல் தலைமுறையாக அரசுவேலைக்கு வருகிற கிராமத்துக்காரனின் அப்பா உடுத்துகிற தேய்த்த துணியும் வெள்ளைத்துண்டும் ஊருக்குள் அலாதியாகத் தெரியும்.பொட்டிக்கடை,சீட்டு விளையாடுகிற ஊர்மடம்,டீக்கடை பெஞ்ச்,பக்கத்தூர் டாஸ்மாக் கடை ஆகியவற்றில் அவர்களுக்கென தனிக்கவனிப்பு காத்திருக்கும்.அது கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கூட அந்தப் புழுதிபறக்கும் தெருக்களில் இருந்து அவர்களைப் பிரித்தெடுப்பது கடினம்.அங்கே அவர்களுக்கென ஒரு கையகல நிலம் இல்லாது போனாலும் கூட அந்த மண்ணிலே விதையுண்டு போகச் சித்தமாவார்கள்.தோழர் ஆதவன் அவரது தந்தையாரைப் பற்றிப் பேசுகிற போதெலாம் இப்படியான நினைவுகள் வந்துபோகும்.

3.12.10

வலையுலகின் மீது குவியும் நம்பிக்கை.

ஆங்கிலத்தில் தயாராகி ஹிந்திக்கு மொழி மாற்றம் செய்யப்பட்ட போதிலும் அந்த திரைப்படம் கவனம் பெறாமலே போய்விட்டது.தமிழுக்கு மொழிமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கிடப்பில் போடப்பட்டது.பின்னர்
தோழர் வழக்கறிஞர் சத்திய சந்திரன் தொடுத்த வழக்கினால் அம்பேத்கர் திரைப்படம் தமிழில் வருகிறது.அதுவும் சென்னையில் ஒரு சில திரையரங்குகளில் சடங்குக்கு திரையிட்டுவிட்டு மீண்டும் பூசனம்  பூக்கவிடுவதாக சித்தம் கொண்டிருக்கிறது வாழும் சமத்துவப் பெரியாரின் பரிவாரம்.

எதிரே சீறிப்பாய்ந்து வருகிற காரை 'எந்திரன்' மாதிரி கையிலே பிடித்து கரப்பான் பூச்சியைத்தூக்கிப் போடுகிற காட்சி அமைக்கப்பட்டால் கூட அம்பேத்கருக்கு அத்தனை திரையரங்கும் வழிவிடுமா என்பது சந்தேகம்.தமிழ்நாட்டில் எங்காவது ஒரு திரையரங்கு ஒரு தலித்துக்கோ,இல்லை ஒரு முற்போக்காளருக்கோ சொந்தமாக இருக்க வாய்ப்புமில்லை.ஐஸ்வர்யா ராயில்லை,ஆஸ்கார் விருதுவாங்கிய இசையமைப்பாளர் இல்லை.இன்னும் புரட்சியாளர் அம்பேத்கரை ஒரு சாராருக்கான அடையாளமாகவே தள்ளிவைத்துப் பார்க்கிறோம்.தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருக்கும் இயக்கங்கள் கூட இந்தப்படம் குறித்து ஏதும் பேசமலிருக்கிறது.

வெளியில் தமுஎச அம்பேத்கர் படத்தின் திரையிடலை  இயக்கமாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. முன்னதாக வலையுலகில் தோழர் மாதவராஜ்,உண்மைத்தமிழன்,திரை_ பறை கருணா ஆகியோர் இது குறித்து தங்களின் ஆதங்கங்களை பதிவு செய்திருக்கிறார்கள்.இன்று திரையிட இருக்கும் நிலையில் எந்த நாளிதழிலும் இது குறித்த செய்தியோ,விளம்பரமோ வரவில்லை.நண்பர்களே சமூகத்தில் தொடரும் ஒதுக்குதலின் நீட்சியாகவே இந்த திரைப்படத்தின் மீதான அனுகுமுறையையும் கருதவேண்டியிருக்கிறது. ஆகவே அம்பேத்கர் திரைப்படத்தின் விளம்பரத்தை நமது பக்கங்களில் பதிப்பதன் மூலம் வலை ஒரு மாற்று ஊடகம் என்பதை நிலை நிறுத்துவோம்.

வாருங்கள் ஊர்கூடித்தேர் இழுப்போம்.

26.11.10

எது கலாச்சாரம் ?, யார் அதை வடிவமைத்தார் ?

சின்னவயசில் கோழியச்சுற்றுகிற சேவலைப்பார்க்கும் போதெல்லாம் ஒரு கேள்வி எழும் இவை இரண்டும் எப்போது கல்யாணம் பண்னிக்கொண்டன என்று.தாய் பிற ஆடவனுடன் பேசும்போது சேலைத் தலைப்பை பிடித்து இழுத்து வீட்டுக்கு வா என்று அடம்பிடிக்காத குழந்தைகள் இருப்பதில்லை.அது என்ன வகையான பொஷெசிவ் என்று இனம் கண்டு பிடிக்க முடியாது.எழுத்து, சிந்தனை, செயல் எல்லாமே ஆண்வயப்பட்டதாகவே களத்திற்கு வருகிறது. கொஞ்சம் குறைய நிறைய்ய ஆணவத்தோடும் களமிறங்குகிறது.

நம்மில் எத்தனை பேருக்கு காதல் பிடிக்கும்.இந்தக் கேள்விக்கு தயங்காமல் 99.99 சதம் ஆதரவுக்குரல் தான் வரும்.எத்தனை தகப்பன்களுக்கு காதலைப்பிடிக்கும்,அதுவும் பெண்ணைப்பெற்ற தகப்பன்களுக்கு?.மௌனம்,திசை திருப்பல் வியாக்கியானம் தான் வரும்.என் சொந்த தாய் மாமன் அவனுக்கு  என்னைவிட ஒரே ஒரு வயது
தான் அதிகம்.கல்லூரிக்காலத்தில் அவன் காதல் பிரசித்தமானது.ஒரு ஐந்துவருடம் ஊரில் அவன் பேச்சுத்தான் பேசப்படும்.அவனைக்காதலித்த பெண்னுக்கு அடி உதை. அப்புறம் பள்ளிக்குடம் கட்.அப்புறம் வீட்டைவிட்டு வெளியே போகும் சுதந்திரம் கட்.எல்லா வேலிகளில் இருந்தும் காதல்  ஒவ்வொரு முறையும் புதிய புதிய பாதைகளை உருவாக்கிக் கொடுக்கும். கொடுத்தது.காதலுக்கு ஆதரவான கோஷ்டி,எதிரான கோஷ்டி என ஊர் ரெண்டானது.இறுதியில் அந்தப்பெண்ணின் குடும்பம் ஊரைக்காலி பண்ணிக் கொண்டு  ஒரேயடியாக வெளியூர் போய்விட்டார்கள்.

ஆனல் அது இறுதியல்ல.போன இடத்தில் அவளுக்கு பேய் பிடித்துக்கொண்டது.பிடித்த பேயை விரட்ட ஸ்ரீவில்லிப்புத்தூர் கொண்டு போனார்கள்.இவனும் போனான்.'கள்ளம்பெருசா,காப்பாம்பெருசா'என்கிற சொலவடை முழுதாகப் புரிந்தது.பிறகு போலீஸ் டேஷன், அவனுக்கு ரிமாண்ட். அத்தோடு முடிந்து போனதென்று அவனும் அவளும் உட்பட ரெண்டு பக்கமும் ஒதுங்கிக் கொண்டார்கள்.ரெண்டு வருடம் கழித்து திடீரென ஒரு நாள்மாலையும் கழுத்துமாக வந்து நின்றார்கள். அலுத்துப்போன பெற்றோர்கள்,அதற்குமேல் ஏதும் செய்ய முடியதவர்களாக பெற்றோர்கள் ஒதுங்கிக்கொண்டார்கள்.பின் ஏற்றுக்கொண்டார்கள்.இது, இந்தக் கதை ரெண்டு ஜாதிகளுக்குள் இல்லை நண்பர்களே கவிஞர் மீராவின் கவிதையை போல செம்புலப்பெயநீர் சொந்தத்துக்குள். காவியத்தில்  காதலென்றால் கனிந்துருகும் மானிடம் நமது.அது இன்னொரு வீட்டில் நடக்கும் போது மட்டும்.

இருபது வருடங்கள் ஓடிப்போனது,என்னிடம் ஒரு பிராது வந்தது 'ஊரில் ஒரு பய நம்ம பொண்ணு பின்னால சுத்துறான் என்ன செய்யலாந் தம்பி' ஒரு பெரியவர் வந்து சொன்னார். யார் பொண்ணு என்கிற விபரம் கெட்டேன்.  சொன்னார்.தாய் தகப்பன் என்ன சொல்றாங்க என்று கேட்டேன். 'கொதிச்சுப் போயி  இருக்காங்க,கேசு குடுக்கலாமா ,ரெண்டு தட்டு தட்டி வுடலாமா ஒரு ரோசன சொல்லு' என்றார்.ஒன்னுஞ்செய்ய வேண்டாம் புருசனும் பொண்டாட்டி யையும் தனியா ஒக்காந்து அவுக எப்பிடிக்கல்யாணம் முடிச்சாங்கண்ணு யோசிக்கச் சொல்லுங்க, எல்லாஞ்சுமூகமா முடிஞ்சிரும் என்று சொன்னேன்.அதன் பிறகு 'மழையில்ல,தண்ணியில்ல,இந்த பொம்பள ஆச்சியில வெலவாசியப்பாரு ஒங்க கம்மூனிஸ்ட்காரங்க சொல்றது சர்த்தாம்பா' என்று அரசியல் பேசிவிட்டு போய்விட்டார்.தூது அனுப்பிய தாய் தகப்பன் தான் முதலில் சொன்ன காதலர்கள்.முன்பாதியில் கதநாயக, நாயகியாய் இருந்தவர்கள் பின்பாதியில் வில்லனாக மாறுகிற சகஜமான கதை இங்கு,ஏராளம்.

கேட்டால் 'எங்கள் காதல் தெய்வீகமானது,இதுக சும்மா டைம்பாசுக்கு கடல போடுதுக' என்று சொல்லுவார்கள்.காலங்காலமாக பெற்றோர்களின் வார்த்தைகள் மாறிவரும் கருத்து மாறாது. இந்தச்சாதாரணக் கதையை வலையுலகத்துக்குள் நுழைந்து அவர்கள் படிக்கப் போவதில்லை என்கிற தைர்யத்தில் எழுதிவிட்டேன்.ஆனால் யாரும் வெளியில்சொல்ல முடியாத காதல் கதைகள் கோடி கோடி கொட்டிக்கிடக்கிறது. அவை யாவும் கெட்டிப்படுத்தப்பட்ட சமூகச்சுவர்களின் மறுபக்கம் உருவாகும் இருட்டுக்குள் புதைந்து கிடக்கிறது.வண்ண வண்ணக்கோலங்கள் படம் பார்க்கிற யாருக்கும் அதில் எந்த விமர்சனமும் வராது உள்ளூர ரசிப்போம்.அந்தக் கதை மாந்தர்களுக்கு கிடைக்கிற காட்டு சுதந்திரத்தை ஒரு நாளாவது அனுபவிக்கவேண்டும் என்கிற ஆவல் வந்து போகும்.அது துஷ்யந்தனுக்கும் சாகுந்தலைக்குமென்றால் காவியமாகும்.நடப்பில் என்றால் கள்ளத்தனமாகும்.

இது சரியா தவறா என்கிற வாதம் ஒரு புறம் கிடக்கட்டும்.இந்த வாதமே தவறானது இல்லை ஒருதலைப்பட்சமானது என்று புரியலாம்.இங்கு நடப்பது மோனோ ஆக்டிங் மட்டுமே.ஏனெனில் காலங்காலமாக இங்கே வாதியும் பிரதிவாதியுமாக ஆண்களாகவே இருக்கிறோம்.'எலே ஊதாரிப்பெயலே நீ பெரிய சண்டியர்னு ஓண்ட அடங்கிப்போலடா,இந்த பச்சமண்ணுக தெருவுல அலையுமேங்குற கவலயிலதான் ஓண்ட சவண்டு போய்க்கெடக்கேன்' ஊரில் நடக்கிற புருசன் பொண்டாட்டி சண்டைகளில்,மிகச்சரளமாக வந்து விழும் வார்த்தைகளிவை.மாணாவாரிக் கிராமங்களின் தெருப்புழுதிகளில் வந்து விழுகிற இந்த வார்த்தைகள் பெரிய பெரிய வீடுகளின் அறைகளைத்தாண்டி வெளியே கேட்காமல் அமுங்கிப்போகலாம்.சொல்லிய வார்த்தைகளை விட சொல்லாத மௌனத்துக்கு சக்தி அதிகம்.அடங்கிப்போவது வெடித்துச் சிதறுவது இந்த இரண்டில் எது கலாச்சாரம் என்பதுதான் கேள்வி இப்போது ?

நண்பர்களே ஒரு தென்மாவட்டத்து குக்கிராமத்தில் இருந்து கொஞ்சம் நகர்ந்து சாத்தூருக்கு வந்த புரிதல் இது.சென்னைப் பெருநகர் வாழ்க்கை,வேகம்,நெரிசல் இவையெல்லாம் எனக்கு சர்க்கஸ் பார்க்கிற அனுபவம்தான்.அங்கிருந்து  கிளம்புகிற இந்த வாதத்தை முழுமையாக அறிய வலை ஒரு வெளியாகிறது. எனவே

உயர்திரு மருத்துவர் ருத்ரன்,
மதிப்பிற்குறிய மருத்துவர் ஷாலினி,
பாலாண்ணா (வானம்பாடிகள்),
யாராவது ஒரு பெண்பதிவர் 
மற்றும் மாதவராஜ்

ஆகியோர் விரிவாகப்பேசினால் தேவலாம்.

19.9.10

வலையுலகில் நுழையும் சிட்டுக்குருவி.

கரிசல்காட்டிலிருந்து  இன்னொரு வலைப்பதிவர்.
ஒரு இரண்டு ஆண்டுகள் வலைத்தளங்களைக்
கேலி செய்தபடி அதன் மீது ஒரு கண் வைத்திருந்த
தோழர் விமலன்

இன்றுமுதல் வலைத்தளத்திற்குள் காலடி
பதிக்கிறார். காக்காச்சோறு, தட்டாமாலை ஆகிய
தொகுப்புக்களின் ஆசிரியர்.தமுஎகச வின் விருதுநகர்
கிளைநிர்வாகி,தொழிற்சங்கவாதி இப்படி பன்முக
அடையாளம் கொண்ட தன்னை முன் நிறுத்த
ஆசைப்படாத குணாம்சம் கொண்ட தோழர்.
இதோ தனது கவிதையோடு வலையுலகில்
களம் இறங்குகிறார்.

வரவேற்போம்
சிட்டுக்குருவி தளத்தில்
தோழர் விமலனை.

31.5.10

மிச்சமிருக்கிற நம்பிக்கை.

கேள்வி பலவுடையோர்,கேடிலா நல்லிசையோர்
மேலோரிருக்கின்றார் வெஞ்சினமேன் கொள்கிலரோ?
..
மண்டபம் நீர் கட்டியது,மாநிலத்தைக் கொள்ளவன்றோ ?
பெண்டிர் தமையுடையீர் பெண்களுடன் பிறந்தீர்,
..
பெண் பாவமன்றோ பெரியவசை கொள்ளீரோ?
கண் பார்க்கவேண்டு மெனக் கையெடுத்துக் கும்பிட்டாள்
..
அம்பு பட்ட மான்போல் அழுது துடி துடித்தாள்.
தேவி கரைந்திடுதல் கண்டே சிலமொழிகள்.

இது மிகநீண்ட வருடங்களுக்கு முன் மகாகவி பாரதி எழுதியது.
மகாகவிக்கும்,யுகங்கள் பழமையான திரௌபதைக்கும் மனிதர்கள்ளென்கிற
பந்தத்தைத்தவிர வேறெதுவும் இருக்கவாய்ப்பில்லை.
ஆனால் அவனது கோபம் மனிதாபிமானத்தை உலகுக்கு நினைவூட்டுவது.
உலகில் எங்கு அநியாயம் நடந்தாலும் அதைக்கண்டு கொதிக்கிற சேவுக்கும்
அவருக்கும் கட்சிரீதியாகக்கூட பந்தமில்லை.
அந்த பொதுத்தன்மை நிறைய்யத்தேவை இருக்கிற சூழல் இது.

கட்டிய கணவனே பெண்ணைத்தெருவில் போட்டு அடித்தால்
நீதிகேட்கும்  மனிதாபிமானம் இன்னும் நீடிக்கிறது.
அதுதான் வாழ்வின் சகலமுரண்களூடாகவும் ஒளிரும் நம்பிக்கை.
அதுதான் ஜீவிதத்தை முன்னிழுத்துச்செல்லும் கிரியா ஊக்கி.
அப்படியொரு அசலான ஜீவித நம்பிக்கையை முனவைக்கிற
பதிவர் செந்தழல் ரவியின் எழுத்து இந்த அதிகாலையில் என்னை
வெகுவாக உலுக்கிக் கவர்ந்தது.எல்லோரது மனசாட்சியையும்
லேசாகவேணும் அசைக்கும்.

மனிதாபிமானத்தை மீட்டெடுக்க இங்கே பதிவெழுதிய,
பதறிப்பின்னூட்டமிட்ட, படித்துச் சினங் கொண்ட
அணைத்து அன்புள்ளங்களுக்கும். நன்றி.

30.5.10

வலையுலகிலும் தொடரும் வன்கொடுமை.

அன்பிற்கினிய தோழர்களே....
வணக்கம்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் முடியப்போகிறது இந்த வலையுலகத்துக்கு வந்து. தயங்கித்தயங்கி உள்ளே வந்த என்னைத் தாங்கிப் பிடித்தவர்களின் பட்டியல் மிக நீளமானது.அவர்கள் எல்லோருக்குள்ளும்  ஊடுசரடாக ஓடுவது மனிதாபிமானம்.
 என்னோட,தோழன்,பாரா,ராகவன்,கதிர்,வானம்பாடி,நேசன்,கும்கி
(ரோஷக்காரன்),பாலாஜி,ஆடுமாடு,வெயிலான்,ரமேஷ்,சரவணர்கள்,harikaran,
இர்ஷாத்,சீமான்கனி,பெண்தோழர்கள்,முல்லை,அருணா,தாரணி,தீபா,
லாவண்யா,பத்மா,சுந்தரா,மதார்,மழை,முத்துலட்சுமி,கலகலப்ரியா,இப்படி இன்னும் நீண்டுகொண்டே போகும்..யாரும் விடுபட்டுப் போனதாக எண்ண வேண்டாம் எல்லோரிடத்திலும் அன்பிருக்கிறது.

இந்தவார நட்சத்திரமாக அறிவித்த தமிழ்மணம் குழுவுக்கும்.எனது வலைப் பக்கத்துக்கு வருகை தந்த அணைத்து நண்பர்களுக்கும்.எனது பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்ட ப்ரியமானவர்களுக்கும்,ஓரளவுக்கு சுமாராக இருந்த என் எழுத்தை தட்டிக்கொடுத்து ஊக்குவித்த எல்லோருக்கும் என் அன்பும் வணக்கமும்.நெஞ்சாந்த நன்றியும்.

ஆனால் ஒரு சின்ன நெருடலிருக்கிறது அதை இப்போது பகிர்ந்து கொள்ளாமல் போனால் வேறு சரியான நேரமில்லை.

எல்லோரிடத்திலும் எழுத்திருக்கிறது, சின்னச்சின்ன குறைகளோடு.அவை குறைகளில்லை எழுத்தின் படிகள்.அப்படித்தான். குற்றம் பார்க்கின் சுற்றமில்லை. நூறுசதவீதம் சுத்தமான எழுத்து படைப்பு என்பது நெட்டுருப்பண்ணும் மெக்கலே பரீட்சையில்கூட இல்லை. அப்படியிருக்கும் போது படைப்பில் அது சாந்தியமில்லை.சிலருக்குப் பிடிக்கலாம், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் பொதுவான நியாயம் என்ற ஒன்றிருக்கிறது.ஆண்களே சைக்கிள் ஓட்டாத காலத்தில், கடயத்தில், ஒரு பெண் சைக்கிள், ஓட்டியதைப்பாத்ததும் மஹா கவி பாரதிக்கு ஒரு பொறி வந்தது அதுவே மிகச்சிறந்த கவிதையாகவும் வந்தது. 'அக்கினிக்குஞ்சொன்று கண்டேன்'.

அதுபோலத்தான் வலையெழுத வந்தவர்களில் மிகையாகப் பெண்கள் வருகிற இந்த புது வரத்தை கையிலேந்திக் கொண்டாட வேண்டும். சின்னச் சின்னத் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் அதுதான் தன்னை எழுத்தாளன் என்று நிலை நிறுத்துகிற செயல். அதை விட்டு விட்டு விமர்சனங்களைத் தாங்க முடியாமல் பெண்களை ஆண் எனும் ஆங்காரத்திலும், வக்கிர மொழியிலும் வசைபாடுவதை ஒரு போதும் படைப்பென்றும், எழுத்தென்றும் கூறவே முடியாது.நான் எழுதுகிற எழுத்தை, படைப்பை எனது தாய், என் மனைவி,என் மகள் மட்டுமல்லாது பக்கத்து வீட்டுப்பெண்களும் படிக்கிற மாதிரி எழுதினால் மட்டுமே அது படைப்பு. அப்படியில்லாதவை காக்கூசில் வெளியேறும் அருவருப்பு.அதை எழுதுவது எல்லாம் தெரிந்த ஏகாம்பரக் கம்பனாக இருந்தாலும் கூட, அது பீச்சியடிக்கும் ப்ளஸ் அவுட் தண்ணீரில் அடித்துப் போகும்.

மனிதகுல வரலாற்றில் எத்தனை கோடி வருடங்கள், எத்தனை கோடி விலங்குகள் எச்சமிட்டுப் போயிருக்கும். எங்காவது, ஏதாவது உயர்ந்த பிறப்பின் எச்சங்களுக்கு ஏதும் தடயமிருக்கிறதா நர்சிம்? நீங்கள் நம்பும் பிறப்பின் அடிப்படையில் எச்சமிட்ட உயர் பிறப்பின் எச்சங்கள் ஏதும் அருங்காட்சியகத்தில் இருக்கிறதா?.இருந்தால் கொண்டுவந்து வலையுலகுக்கு காண்பியுங்கள் அப்புறம் பூக்காரியின் பிறப்பு பற்றியும், இன்னபிற பிறப்புகள் பற்றியும் பேசலாம்.ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்  பிறப்பில் குறைந்தவர்கள் என்று நம்பும் யாரும் அடுத்தவர்களை இழிவாகப் பேசுவதில்லை.உங்கள் குடும்பத்திலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது ஒருபோதும் உங்களுக்கு ஞாபகம் வருவதில்லையா? உங்களுக்கென்ன மல்டிபிள் டிஸாடர்டர் சின்றோம் கோளாறு ஏதும் இருக்கிறதா?.

இன்னொரு 'கக்கூஸ்' கார்க்கி, 'குத்துங்க எசமான் குத்துங்க இந்தப்பொம்பளைங்க எல்லாமே இப்படித்தான் என்று பின்னூட்டமிட்டாராமே?.

நீங்கள் சரக்கடிப்பதை வாந்தியெடுப்பதை,விபச்சாரி வீட்டுக்குப்போய் உயிர்த்தரத்தில் உதை வாங்கியதைப் பதிவென்று சொல்லிப் பீத்தலாம்.பெண்கள் எழுதினால் என்ன வந்து குடையுது கார்க்கி.

பின்னூட்டமிடும்போது ஜாகிரதையாக எழுதவேண்டும்.நீங்கள் கண்ணாடி முன்னால் நின்று மீசையைச் சரிசெய்கிற நேரத்தில் பெண்கள் எதைவேண்டுமானாலும் சாதிப்பார்கள்.. அதில் பூக்காரன் பொண்டாட்டி கார்ப்பரேட் கம்பன் பொண்டாட்டி என்கிற பேதம் ஏதுமில்லை.அதில் நடு ரோடு,குளிரூட்டப்பட்ட அறை எல்லாம் இரண்டாம் பட்சம்.



முன்னதாக தோழர் தீபாவை இழிவு படுத்திய ஆ'ண் பதிவர்களுக்கும்,இப்போது தோழர் சந்தணமுல்லையை unihilate பண்ணும் மூத்த பதிவர்களுக்கும் ஒன்று. இப்போது கூட உங்கள் சறுக்கலை சரிசெய்ய அவகாசம் இருக்கிறது.வேறு ஏதாவது இறுமாப்பு இருந்தால் இடிந்து விழும் ஜாக்கிரதை.

நண்பர்களே, தோழர்களே..

சித்திரக்கூடம் என்கிற வலைப்பக்கத்து  எழுத்தாளர் தோழர் சந்தணமுல்லையை.ஒரு பெண் என்பதற்காக, பூக்காரி என்கிற புனைவின் மூலமாக மிகக்கேவலமாக எழுதியிருக்கிறார் பதிவர் திரு.நர்சிம்.இது கண்ணகி பிறந்த நாடு. 'தேரா மன்னா'என்கிற சினம் தெறிக்கும் சொல்லெங்கும் தமிழ் எழுத்தில் விரவிக்கிடக்கிறது.அரசியலில்,சினிமாவில்,எம் சோதரத் தங்கைகள் தமிழீழத்தில்,ரேஷன்கடையில்,புலம்பெயர்நாடுகளில் இழிவு படுத்தும்போது துடிக்கிற கீபோர்டின் எழுத்துக்கள் இப்போதும் துடிக்கவேண்டும்.முதலில் கூரையேறிக் கோழி பிடிப்போம்.நமது கணினித்திரை ஊடாக வழிந்தோடும், இந்தச் சாக்கடையைச் சரிசெய்வோம்.மகாகவி பிடித்த எழுத்தாணியின் மறுரூபம் இந்த கீ போர்டின்  பொத்தான்கள்.

வெறுமனே,கும்மியடிப்பதற்கும்,சொரிந்துவிடுவதற்கும் உருவானதல்ல வலையெழுத்து என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.அதுதான் எழுத்துக்கு நாம் செய்கிற குறைந்தபட்ச மரியாதை.அங்கீகாரம்.

தோழர் தீபாவுக்கு வந்த முதல் ரோஷத்தின் நீட்சி இது. இன்னும் தொடரவேண்டும். தொடருங்கள்.

http://deepaneha.blogspot.com/2010/05/blog-post_30.html
http://mathavaraj.blogspot.com/2010/05/blog-post_30.html

10.1.10

இடைவெளிகளை நிரப்பும் எழுத்தும் இலக்கியமும் .


ஆறுமாத காலப் போராட்டம் நிறைய்யக் கற்றுக் கொடுத்திருக்கிறது. கஷ்டகாலங்களில் அருகிருக்கும் தூய நட்புகள் இனம் காணப்பட்டிருக்கிறது. நிலமைகள் இன்னும் சீராக வில்லை.இதுவும் கடந்துபோகும்.

இடைப்பட்ட காலத்தில் வலைப்பக்கங்கள் பல படிகளைக் கடந்திருக்கிறது. ஆம், வலையெழுத்துக்களில் இருந்து. அகநாழிகை எனும் இதழ் உருவாகியிருக்கிறது. அதன் வெளியீடுகளாக அன்புத்தங்கை லாவண்யாவின் கவிதைத்திரட்டு
'நீர்க்கோல வாழ்வை நச்சி',
TKB.காந்தி - கூர்தலறம் ,
பாராவின் கருவேல நிழல்,
நர்சிம் - 'அய்யணார் கம்மா'

ஆகிய எழுத்துக்கள் அச்சேறி வந்திருக்கிறது. இது எழுத்துலகின் புதிய பரிமாணம்.

இதன் தொடர் நிகழ்வுகளாக  தீராதபக்கங்கள் மதவராஜ் தொகுத்துவழங்கிய

பெருவெளிச்சலனங்கள்,
மரப்பாச்சியின் சில ஆடைகள்,
கிளிஞ்சல்கள் பறக்கின்றன, மூன்று புத்தகங்களும்,
'குருவிகள் பறந்துவிட்டன பூனைகள் உட்கார்ந்திருக்கிறது'.

அவரது கட்டுரைத் தொகுப்பு ஒன்றும் வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கிறது.

கொக்கரக்கொ வலைப் பக்கதுப் பதிவர் மாப்பிள்ளை அண்டோ  கால்பர்ட்டுக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது.பதிவர் சார்பில் அவருக்கும் அவரது இல்லத் துணைக்கும் வாழ்த்துக்கள் சொல்லலாம்.

எல்லா இடங்களிலும் நல்லதும் கெட்டதும் விரிந்து கிடக்கிறது அதில் தொலைக்காட்சியும் விதிவிலக்கல்ல.
குரங்குகளின் வாழ்வு குறித்த ஆவணம் பார்க்கப் பார்க்க வியப்பளிக்கிறது. இயற்கையையும் இணை விலங்குகளையும் அணுகுகிற அவர்களின் உலகம் ஒரு நொடியில் நம்மை கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துப் போகிறது.தேங்காயை உரித்து உடைக்கிற நுட்பம்,புலிகளை விரட்டி ஓடவைக்கிற வீரமும்,நம்மை அசர வைக்கிறது.

நேற்றைய நாட்ஜியோவில்  இமயமலைப்பகுதியில் வழும் அப்பாசனிகள் எனும் மலை மனிதர்களைப்பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பானது. ரசாயன,தொழில்நுட்ப இடையூறுகள் இல்லாத சுத்தமான பழக்கவழக்கங்கள். இயற்கை சார்ந்த வாழ்வில் இம்மியளவும் பிசிறு தட்டாமல் தொடர்கிறது அந்த அப்பாசானியர்களின் நாகரிகம்.ஆறுவருடம் சேர்ந்து வாழ்ந்து மூன்று குழந்தைகளுக்கு பெற்றோரான பின்னர் ஒரு தம்பதிகளுக்கு திருமணம் நடக்கிறது.அவர்களின் வாழ்க்கையோடு எழுதப்படாத சமதர்மமும், மூங்கில்களும், பாலின பேதமில்லாத உழைப்பும் சந்தோசமும் பிணைந்து கிடக்கிறது.கல்யாணத்துக்கு  பரிசுப்பொருட்கள் வழங்காத அவர்கள், இறப்பை அப்படிக் கொண்டாடுகிறார்கள். போகும் போது கொண்டுபோவதற்கு சுற்றம் நட்பின் நினைவுகளும் சிலபரிசுப்பொருட்களும் இருக்கிறது அவர்களிடம். அதையும் சேர்த்துப் புதைக்கிறார்கள்.முகஞ்சுழிக்காமல் அவர்களோடு அமர்ந்து மாட்டுமாமிசம்,பன்றி மாமிசம்,பார்லிபியர் குடிக்கிற இந்தியப்பெண் ஆவணப்பட இயக்குனர் வெகுவாக பாராட்டுக்கு உகந்தவர்.

தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்கிற அந்தஸ்த்தை  லத்திகாசரண் பெற்றிருக்கிறார்.இப்போதிருக்கிற சூழலில் காவல் துறை குறித்த மக்களின் அருவருப்பான பார்வை விலகுவதற்கு ஒரு இம்மியளவு அவர் பாடுபட்டால் கூட போதும். ஏகபோகம் சிதைக்கப்படுகிறபோது, பொது தர்மம் வசப்படும்,அது பெண்களால் சாத்தியப்படும்.

12.9.09

வலையும் நானும் - ஒரு தொடர் பதிவு




அந்தப்பக்கம் போகாதே, போனாலும் உடனே திரும்பிவிடு, தாமதமானாலும் யாரோடும் சேராதே, உனக்கு கோஷ்டிவேண்டாம் இப்படியான வேப்ப மர உச்சிக் கதைகள் கேட்ட பின்னரும் நான் வந்துவிட்டேன். எனக்கு முன் யானை பார்த்தவர்கள் குருடர்கள் அல்லர். தன்னைப்போல் பிறரை நேசி, எதிராளியின் இடத்திலிருந்தும் யோசி. எனும் பதங்கள் கூட வர, இதோ ஒரு வருடம் ஓடிவிட்டது. திசைதெரியா தூரத்திலிருந்து அன்பெனும் அலை பொங்கிப் பெருகி இக வாழ்வின் கஷ்டங்களையெலாம் துடைத்தெறிகிறது எனது பக்கம்.


நான் இந்த வலைக்குள் நுழைந்த வரலாறு சொல்லவேண்டுமானால் உடனடியாக ஆத்திகனாய் மாறுவேன். ஆம், அன்பையும் நட்பையும், தோழமையையும் துதிக்கும் ஆத்திகனாக மாறுவேன். அவன் என் கடைவிரல் பற்றி நாங்கள் இணைந்து நடக்கத்துவங்கி இதோ இருபத்தைந்தாண்டுகள் பூர்த்தியாகிறது. என்னிடம் அரசியல், இலக்கியம், இசங்கள், பணச் சிலாக்கியம் இன்ன பிறவும் முன்வைத்து இறுதியில் நட்பையும் சேர்த்து வைத்து எதவதொன்றைத்தேர் என்றால் எல்லாவற்றையும் புறந்தள்ளி நான் நட்பை மட்டும் தேர்ந்துகொள்வேன். அது எனக்கு எல்லாம் தரும்.. ஜீபூம்பா. சென்ற வருடம் துண்டிக்கப் பட்டிருந்த இணைய இழையை கோர்த்துவிட்டு வலையை எனக்கு அறிமுகம் செய்துவைத்தான் தோழன் மாதவராஜ்.


சிறுகச் சிறுக 72 பேர் எனது பக்கத்தில் இணைந்திருக்க எண்ணவியலா அன்பும் நட்பும் குவிந்துகிடக்கிறது. வெளிப்பயணம் இல்லா போதுகளில் வலைப்பயணம் கொண்டு வந்து குவிக்கிறது செலவழிக்க இயலா பெரும்அறிவுத் திரவியத்தை. ஒரு பக்கம் சண்டை, வெறுப்பு, ஒதுக்குதல், கோஷ்டி என எல்லாம் இருப்பினும் வலைக்குள்ளும் மனிதர் இருக்கிறார். குறைந்தபட்ச இடைவெளியில் ரசனைகள் ஒத்துப்போகிற கூட்டம் சேர்கிறது. படிக்கப்படிக்க திருத்திக்கொண்டு பெரும் இடைவெளிகூட குறுகலாம். பிறந்ததிலிருந்தே கூடவந்த வெற்றுப் பிடிவாதங்கள் கூட மாறலாம். எல்லாம் கற்றலில் சாத்தியம். கற்றலிற் கேட்டல் நன்று, இங்கு அந்த இரண்டுமே உண்டு.


திக்கெட்டும் இருந்து இலவச நேரடித் தகவல் தரும் வலை மாந்தர் யாரும் புறந்தள்ள முடியாத தன்னூடகம்.(self media ). இதை புரிந்து கொள்ள வெளியார்க்கு காலமாகும். ஆகாமாலும் போகும் அதனாலென்ன ஆயிரம் பூக்கள் மலரும், மலர்ந்தே தீரும். அதுதான் பிரபல எழுத்தூடகங்கள் கூட வலைக்கெனப்பக்கம் ஒதுக்க நேர்கிறது. இந்த கைப்பேசி அல்லது அலைபேசியைக் கேளுங்கள் அது கண்டுபிடிக்கப்பட்ட போது அதற்கே தெரிந்திருக்காது இவ்வளவு வாடிக்கையாளர்களின் சட்டைப்பைக்குள் கிடப்போம் என்று. கலிலியோவுக்கு நேர்ந்த கதி தெரியுமா உலகம் உருண்டை எனச்சொல்லிவிட்டு சனாதன கிறிஸ்தவ மடத்தில் சாஸ்டங்கமாய்க் காலில் விழுந்த கலிலியோ.


எல்லாவற்றிலும் நன்மை தீமை, கூட்டல் கழித்தல், இரவு பகல், உண்டு. சதவிகிதம் தான் அதன் தன்மையை நிர்ணயிக்கிறது வாழ்க்கை போல. அது வலைக்கும் பொருந்தும் தக்கது நிற்கும் தகாதது வீழும்.