31.10.10

பாலிவுட்டில் தோண்டி எடுக்கப்படுகிறது, புதைபொருளாகிப்போன ஒருவலாறு.

                                                    Masterda Surya Sen 

ஒரு உண்மையான விடுதலை வரலாறு பாலிவுட்டில் படம்பிடிக்கப்படுகிறது.
மறைத்துவைக்கப்பட்ட செங்கொடிப் பதாகையின் நிழலும் முதன் முறையாக வெள்ளித்திறைக்கு வருகிறது.'க்கேலேங் ஹம் ஜீ ஜானு ஸே'(Khelein Hum Jee Jaan Sey) .'உணர்வோடும் உயிரோடும் விளையாடுவோமாக'. என்று அர்த்தமாம். ராஜசுந்தரராஜன் அண்ணாச்சிக்கு நன்றி.அசூதோஷ் கவாரிகர் இயக்கத்தில் அபிஷேக்கும்,தீபிகாவும் நடிக்கிறார்களாம். ஜாவேத் அக்தார் படல்களில் வந்தேமாத்ரம் புதியகுரலில் ஒலிக்கப்போகிறது.

பக்கிம் சந்த்ர சட்டர்ஜியின் கவிதை வந்தேமாத்ரம். அந்த ஒரு சொல் இந்தியா முழுமைக்கும் சொந்தமானதாக மாறிப்போனது.அப்போது விடுதலை முப்பதுகோடி மக்களின் பொதுப் பசியாகி இருந்தது.உயிர், உடமை, உற்றார், பெற்றோர், மேட்டிமை, கல்வி, கலவி, இளமை, கனவு, இயல்பு எல்லா வற்றையும் காவு கொடுத்துக் கிளம்பிய விடுதலை லட்சியம் சாதாரணமல்ல.
21 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இந்திய மண்ணில் எண்ணிலடங்காத விடுதலை விதைகள் பதுங்கிக்கிடந்தது.இந்தியன் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பதில் ரத்தம் கோரியபடிக் கிளம்பிய இயக்கங்கள் முளைத்த காலமது. எழுதப்பட்ட வரலாறுகளில்,பாடநூலில் சொல்லிக்கொடுக்கப்பட்ட மணப்பாடத் திட்டத்தில் காங்கிரஸ் மட்டுமே முன்நிறுத்தப்பட்டது.பல உண்மைப் போராட்டங்களின்  ரத்தகறைகள்,கலகங்கள் ஒதுக்கி  வைக்கப் பட்டன. அவற்றில் ஒன்று சிட்டகாங் எழுச்சி.

விடுதலைக்கு முந்திய இந்தியாவில் வங்காளத்தில் இருந்த ஒருங்கிணைந்த மாவட்டம் சிட்டகாங். மலை, ஆறு, கடல், இறுக்கமான வனம் என்கிற நிலவமைப்புகளைக்கொண்ட  பகுதி. தற்போதைய பங்களாதேஷின்
இரண்டாவது பெரிய துறைமுகமாக விளங்கும் நகரம் சிட்டகாங்.பிரிட்டிஷ் ஆதிக்கம் குவிந்து கிடந்த அந்த 1930 களில் பெரும் தகிப்புடன் கிளம்பிய பல விடுதலை போராட்டங்களில் சிட்டகாங் எழுச்சியும் ஒன்று.தோழர் சூரியா சென் தலைமையில் சுமார் 65 தோழர்கள் ஏந்திய துப்பாக்கிகளின் வெடிச்சத்தம் பிரிட்டிஷ் பேரரசை நிலைகுழையச்செய்த நாள் ஏப்ரல் 18, 1930.

பிரிட்டிஷ் பேரரசின் மூளையான 'ஐரோப்பிய க்ளப்பின்' உயர்மட்ட அலுவலகம் அமைந்திருந்த இடம் சிட்டகாங்.அங்குதான் பேரரசின் உயரதிகாரிகள் வாசம் செய்தார்கள்.அவர்களை மொத்தமாகத் தொலைத்துக் கட்டவும், தபால், தந்தி, புகைவண்டி போன்ற தொலைத் தொடர்பு வசதிகளை நிர்மூலமாக்கவும் திட்டமிடப்பட்டதுதான் சிட்டாகாங் எழுச்சி. இதை கொரில்லாத் தாக்குதல் என்று சொல்லுவார்கள். இது வியட்நாம் விடுதலையின் அடிமுழு ஆதாரம். இதில் பிரதிலதா வடேதர்,அம்பிகா சௌத்ரி,ஆகியோரோடு தோழர் கல்பனாதத்தும்  இருந்தார். ராணி மங்கம்மாள், ராணி லக்குமிபாய், கேப்டன் லட்சுமி போன்ற பெயர்களுக்கு இணையான இன்னொரு பெயர்
'கல்பனாதத்'.

திட்டமிட்டபடி  பத்துமணிக்கு துவங்கியது வீரவிடுதலையின் அணிவகுப்பு. முந்திட்டப்படி ராணுவத்தளவாடங்களை மட்டுமே அவர்களால் தகர்க்கமுடியவில்லை எஞ்சிய அணைத்தும் வெற்றியடைந்தது.பின்னர் ஓரிடத்தில் கூடி 'விடுதலை இந்தியா' என்கிற பிரகடத்தை முழங்கி தேசியக் கொடியேற்றிவிட்டு காட்டுக்குள் போனார்கள்.

ஒரிஜினல் வீரம், ஒரிஜினல் விடுதலை,  எதுவும் இந்தியாவில் நிலைக்க முடியாது என்ற விழுமியத்தின் எச்சம் தான் சிட்டாகாங் வீரர்கள் சிறைப் பிடிக்கப்பட்ட வரலாறு.பிடிபட்ட அந்த 65 பேர்கொண்ட' இந்திய விடுதலைப் படை' (indian revolution army)  யில் பதினான்கே வயதானதொரு வீரன் இருந்தான். பிடிபட்டவர்களில் மிக மிக இளவயதுக்காரன். வாழ்வியல் சுழற்சியின் அதியற்புதக் கனவுக் காலமான விளையாட்டுப் பருவத்தை தியாகம் செய்த தோழர் சுபோத்ராய்.கைதுசெய்யப்பட்டு 1940 ஆம் ஆண்டே  உயிரோடு விடுதலை அடைந்து 2006 ஆம் ஆண்டு வரை உயிரோடிருந்த தோழர் சுபோத்ராய்.பெரும்பாண்மை இந்தியர்களின் கவந்த்துக்கு வராத இந்தவரலாறு வெள்ளித்திரை மூலம் திரும்புகிறது.அது பெரிய சந்தோஷம்.

இந்த நிஜமான புரட்சிக்காரர்களின் செல்லுலாய்ட் பிம்பங்களாக வெளிவர இருக்கிறது 'க்கேலேங் ஹம் ஜீ ஜானு ஸே' ('கெலீன் ஹம் ஜீ  ஜான் சே').ஒரு கதை,ஒரு நாவல்,ஒரு உண்மைச் சம்பவம் திரைப்படமாகும்போது நீர்த்துபோகவும் சாத்திய மிருக்கிறது அடர்த்தி யாகவும் சாத்தியமிருக்கிறது.அது படைப்பாளியின் செய்நேர்த்தியைப் பொறுத்தது.

பொறுத்திருந்து பார்க்கலாம்.

29.10.10

நேற்று போல் இன்று இல்லை.

இரண்டு நாட்களாகப் பெரு மழை.முந்தாநாள் இரவு ஒன்பது மணிக்குத்துவங்கிய மழை குளிரையும் தவளைசத்தத்தையும் கொண்டுவந்தது.கூடவே பழைய்ய நினைவுகளையும்.ஒரே திசையில் உதித்தாலும் சூரியன் ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய்த் தெரிகிறான். இருப்பினும் பழய்ய நட்களின் நிறங்களையும்,வாசத்தயியும் உள்வைத்துக்கொண்டே விடிகிறது.அதுபோலவே மழையும்.எனக்கு மழைபார்க்கும்போதெல்லாம் தவறாது ரெண்டு நிகழ்வுகள் நிழலாடும்.ஒன்று பால்ய காலத்து மழை நாள்.இன்னொன்று பருவகாலத்து மழைநாள்.

தாத்தாவுக்கும் அய்யாவுக்கும் ஆகாது.அவர் திமுகவென்றால் இவர் அதிமுக.அது வேண்டாம் ஒரே குட்டையில் ஊறிய.அவர் மத்திய அரசென்றால் இவர் அருந்ததிராய்.ரெண்டு பேரும் பக்கத்தில் பக்கத்தில் நின்று ஒரு புகைப்படம் கூட்ட எடுத்ததில்லை.ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கிடையாது.பார்த்தால் சண்டையில்லாமல் முடியாது.ஆரம்பிச்சுட்டாங்கப்பா என்று சொல்லிவிட்டு பம்பரக்கட்டையைத்துக்கிகொண்டு ஓடிவிடுவதுதான் அப்போதைய புரிதலாக இருந்தது.ஆனால் அந்த ஐப்பசி மழைநாளில் சண்டை முற்றி வீடுக்குள் இருந்த சட்டி பானைகளைத்தூக்கி எறிந்தார் தாத்தா.ரோஷத்தோடு என்னைத் தரதர என இழுத்துக்கொண்டு கிளம்பினாள் அம்மா.கையை உதறிக்கொண்டு புத்தகப்பையை எடுக்க வீட்டுக்குள் போனேன். என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுத பாட்டியின் கண்ணீர் இன்னும் உடம்பிலிருந்து போகவில்லை.

ஒரு குட்டிச்சாக்கோடு ஊரெல்லைக்கு வந்தாகிவிட்டது.எங்காவது கண்காணாத இடத்துக்கு போவது என்கிற அம்மாவின் உறுதியை.என் கண்ணீரும் புத்தகப்பையும் தான் குழைத்துப்போட்டது.நான் சொன்ன இரண்டு காரணங்களுக்குப்பின்னாடி எனது நண்பர்கள் ஒளிந்திருந்தார்கள் என்பது நிஜம்.நெடுநேரம் நடுரோட்டில் நின்றுகொண்டிருந்தோம். எங்களை ஆற்றுப்படுத்தி பூட்டிக்கிடந்த கூரை வீட்டுச்சாவியைக் கொடுத்து இருக்க வைத்துவிட்டுப்போணாள் பூர்ணம்மாக் கெழவி. ஒண்டிக்கட்டையான அவளது மகன்கடன் தொல்லையில் ஓடிப்போனப்பிறகு வெறும் வீட்டை காத்துக்கிடந்தாள்.

இரவு எட்டு ஒன்பது மணியிருக்கும் பசி வயிறு முழுக்க பம்பரம் விளையாடியது.அம்மா குத்துக்காலிட்டு உட்கர்ந்து
ஒரு தீக்குச்சியால் தரையைக் கிளறிக்கொண்டிருந்தாள்.நான் ஒழுகிய கூரையின் தண்ணீரை வெங்கலக் கும்பாவில் பிடித்துக்கொண்டிருந்தேன்.  சொட்டு விழுகிற தண்ணீருக்கு அதிரும் வெங்கல ஓசைக்கென்ன தெரியும் பசியைப்பற்றி. சாக்குக்கோணியை மூடிக்கொண்டு ஒரு உருவம் வீட்டுக்குள் வந்தது தங்கராசு.ஒரு தூக்குச்சட்டியில் ரசஞ்சோறும், ஒரு மஞ்சப் பையில் நிலக்கடலையும் கொண்டுவந்து கொடுத்தான்.'நல்லவேளை நீ போயி ருவியோன்னு நெனச்சேன்'என்று சொன்ன அவன் கண்களின் கள்ளங் கபடமற்ற வாஞ்சை மட்டும் பிரகாசமாகத் தெரிந்தது.

கண்டுபிடித்துவிட்டாள் அம்மா. கடலை அவன் கொண்டுவந்தது.சோறு பாட்டி கொடுத்துவிட்டதென்று.அந்த இரவை கடலை வறுத்துத்தின்றே கழித்தோம்.அய்யா காலையில் எங்கோ போனவர் கொஞ்சம் பணத்தோடு வந்தார். சமையல் நடந்தது பசிக்கிற நேரம் மண்சட்டியில் சோறுபோட்டாள் அம்மா. வெங்கலக்கும்பாவை எங்கே என்று கேட்டேன்.'அதுதான் நீ திங்கிற சோறு' என்றாள் அம்மா.

இதோ இன்றும் மழை .நடு இரவு வரை பெய்திருக்கவேண்டும். என்னவெனத் தெரியவில்லை திடுமென நான்காம் சாமத்தில் முழித்துக்கொண்டேன்.  மழைநாளின் ஈரத்தை சுடச்சுடக் கொண்டாடிய வறுத்த கடலை.அம்மாவின் அழுதுவீங்கிய முகம்.தங்கராசுவின் கண்ணிலிருந்த வந்த கதிர்வீச்சு இவை யெல்லாம் சுழன்ரடித்தது.உட்கார்ந்து தேடினேன்.எதும் தட்டுப்படவில்லை. தங்கராசு கனவில் வந்திருக்கவேண்டும்.

28.10.10

எழுதப்படாத வாழ்க்கைக் குறிப்புகள்.(நீள்கதை)

அவள் பெயர் பொட்டத்தாய்.எண்ணெய்தேச்சு வழுவழுன்னு சீவிய தலைமுடி.ஆரஞ்சு,பச்சை,ஊதா,சிகப்பு கலரில் தான் சேலை உடுத்துவாள். அதுதானெ அப்பெல்லாம் கிடைக்கிற சேலைகள்.ஊரைச்சுத்தி பம்புசெட்டுக் கிணறுகள். டங்கு டங்குன்னு தரை அதிர்கிற மாதிரி நடந்து குளிக்கப்போவாள். மொளகா,பருத்தி,கடலைச்செடிகளுக்கு தண்ணி பாய்ச்சுகிற நேரம் தலையைக் குடுத்தால் குற்றாலம் ரொம்ப கிட்டக்க வந்த மாதிரி இருக்கும்.அப்பமெல்லாம் உருட்டு  மஞ்சள் கிழங்கில்லாமல் பொம்பளய்ங்க குளிக்க வரமாட்டாங்க. பொம்பளப்பிள்ளைங்க வந்துட்டா ஆண்களெல்லாம் கிணத்துக்குள் போய் குளிப்பார்கள்.கரண்டு நின்னுபோசின்னாலோ,இல்ல தண்ணிபாய்ச்சுறது  நின்னு  போச்சின்னாலோ.பொம்பளயாளுங்க தவதாயப்படனும்.எந்த நேரத்திலும் கரண்டு நின்னு போகும் அதானல பொம்பளைய்ங்க 'எலற்றிய நம்பி எலெ போடக்கூடதும்பாக'.ஆனா கனிமொலாளி சோப்பு
போட்டுட்டு தலையக்குடுக்கிற நேரம் பாத்து மோட்டார நிறுத்திருவார். ஈரத்துணியோட வந்து கெஞ்சனும்ல அதுக்கு.அவர சின்னப்புத்திக்கார மனுசன்னு சொல்லுவாக.கெடக்கட்டும்.

பொட்டத்தாய் அப்பெல்லாம்  ஊற வச்ச துணிகளத் தூக்கிக்கிட்டு கெணத்துக்கு வந்திருவா.உள்ளே ஒரே ஆம்பளப்பயக கும்மரிச்சமாக் கெடக்கும்.ஏ சனங்கா சீக்கிரம் எந்திரிச்சு வாங்க கரண்டு நின்னு போச்சு நாங்ககுளிக்கனுமின்னு  கோரிக்கை வப்பா.ரெண்டு தரம் மூனுதரம் சொல்லிப்பாத்துட்டு.கிணத்து மேல இருந்து தண்ணிக்குள்ள டொம்முன்னு குதிப்பா.ஆம்பளப் பயக எல்லாரும் அடிச்சு புடிச்சு மேலேறி வந்துருவாங்க.உள்ளே பெத்த தகப்பனே குளிச்சாலும் இதா நெலம.இது சாம்பிள் தான் இன்னும் எவ்ளவோ இருக்கு.

சண்டியர் தொரப்பாண்டி அலறிப்புடிச்சி ஓடியகதை தெரியுமா.கெனத்துல குதிப்பா எங்க கூட வந்து கபடி ஆடச்சொல்லு பாப்பம்.கால் வழியா மோள்ற பொட்டச்சிக்கு திமிறப்பாருன்னு தொரப்பாண்டி சொன்னது பேச்சு வாக்குல அவா காதுல உளுந்து வாடா சண்டியரு வந்து வெளாடு பாப்பமின்னு வரிஞ்சு கட்டிட்டு வந்துட்டா.யார் சொல்லியுங்கேக்காம களத்துக்கு வந்து ஒத்தை யாளா நின்னப்ப,நம்ம தாடிக்கரா பெருமாளுதான்.என்னம்மா ஒரு பேச்சுக்கு சொன்னா பொட்டப்பிள்ள இப்டி ஆம்பள  கூட சரி மல்லுக்கு நிக்கியே சரிப்படுமான்னு மத்தியஸ்தம் பண்ண வந்தார். ஏஞ்சரிப்படாது சொல்லுங்க பெரியா ன்னு கேட்டா.முள்ளுமேலன்னு வாயெடுத்தார் நிப்பாட்டுங்க பெரிய்யா முள்ளுமேல வேட்டி விழுந்தாலும் அதே கெதிதான் என்றாள். வாய்க்குள்ளே எதோ முனுமுனுத்துக்கொண்டு இடத்தைக் காலி பண்ணிப் போய்விட்டார்.

பொட்டத்தாயின் சிநேகிதி பெரியதாய் வந்து ஏட்டி வாபிள்ள எதுக்கு நமக்கு வம்பு  என்று கடிந்து கூப்பிட்டாள்.பொம்பளய்ங்க கூட்டம் அலை மோதியது நேரம் ஆக ஆக வருவானென்று எதிர்பார்த்த தொரப்பாண்டியக் கானோம். தொரப்பாண்டி மட்டுமில்லை பொண்ணு பாக்கக்கூட அதுக்குப்பிறகு ஆம்பளைக வருவது குறைந்து போனது.ஊரின் உடம்பெல்லாம் வாயாகியது.வாய் ஓய்ந்து போக ஒரு வருஷம் ஓடிப்போனது.அந்த ஒரு வருஷ இடைவெளியில் சின்னக்கருப்பன் பொட்டத்தாயைப் புரிந்து கொண்டான்.பேய் பிடிச்சிருச்சு,பிள்ள பெறக்காது,அவ பொம்பளயில்ல என்கிற மூடநம்பிக்கைகள் பொட்டத்தாயின் மேலே கவிழ்ந்து கொண்டது.மகளுக்கு மாலை பூக்களெயே என்று மாரிகோயிலுக்கு வயனம் காக்கப்போனாள் அம்மக்காரி.பிள்ளையுந்தாயும் படுகிற வேதனையைத்தீர்க்க பொட்டத்தாயின் பாட்டிக்காரி ஒரு யோசனை சொன்னாள்.வீரணனுக்கு கட்டிப்போடு எல்லாஞ்சரியாப்போகுமென்றாள்.அதுக்கு நா அரளி வெதயக்குடிச்சிரலாம் என்று சொல்லி மறுத்து விட்டாள் பொட்டத்தாய்.

ஊர்த்தலைவர், தங்கிலியான்,ஜாதி சனம் எல்லாம் சொல்லியும் உடும்புப்பிடியாய் நின்றுவிட்டாள்.பொட்டத்தாயின் அம்மக்காரி அரளி வெதயக்குடிச்சதும் கலங்கிப்போனாள் பொட்டத்தாய்.அரளிவிதை அரைபட்டு மூத்த மலை பூத்தது.கார்த்திகை பதினஞ்சில் கல்யாணம் குறிச்சாச்சு.வீரணன் வீசையை முறுக்கிவிட்டுக்கொண்டான்.

'இன்னைக்கு இது போதும்'

26.10.10

ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா

இன்றைய்ய முக்கியச்செய்திகள்.

நமீதாவை காரில் கடத்த முயன்ற வாலிபர் கைது.

ராதா ரவி மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

14 வருடங்களுக்கு முன்னாள் தான் எழுதிய ஜூகிபா கதைத்திருட்டு தான் எந்திரன்.
கவிஞர், எழுத்தாளர் தமிழ்நாடன் போலீசில் புகார்.

இந்த மூன்று முக்கியச்செய்திகளும் பேப்பரில். ரஜினியின் அரசியல் பிரவேசம்-
இது எக்கச்சக்கமாக இண்ட்லியின் முன்னனியில்-

என்னென்ன செய்திகள் இந்த தமிழக மக்களைச் சென்று சேரவேண்டும் என்பதில் மிகக்கறாரான நடைமுறை
பின்பற்றப்பட்டு வருகிறது.ஊடகங்களும் தமிழ்சினிமா மாதிரியே பெருத்த மசாலாக்கலவையில் தான் செய்தி தயாரிக்கிறார்கள்.பேப்பர் இல்லாமல் கூட செய்திவரும் மசாலா இல்லாத செய்தித்தாள் கிடையவே கிடையாது.  நமீதா கடத்தப்பட்ட விவகாரம்.26 வயதான பெரியசமிக்கு இருந்த லட்சியத்துக்கு 50 க்கும் மேலாகிறது.1960 களிலேயே அஞ்சலிதேவி,பானுமதியம்மா போன்றவர்களின் மீது வெறிகொண்டலைந்த ரசிக மனோபாவம் இது.அதைக்குறையவிடாமல் பாதுகாப்பதில் இந்த ஊடகங்களுக்கு இருக்கும் தொழில் பக்தி அலாதியானது.கூட இருந்த நண்பர் சொன்னார் இந்தச்செய்தி பொய் என்று.நமீதாவை எப்படிக்காருக்குள் கடத்திக்கொண்டுபோயிருக்க முடியும் என்கிற நக்கலான கேள்விக்கென்ன பதில்.

எழுத்தாளர் தமிழ்நாடன் மேல் அனுதாபம் வருகிற செய்தி இது.என்னமோ தமிழ்நாட்டில் தயாரிக்கப்படுகிற சினிமாக்கள் எல்லாம் காப்புரிமைச்சட்டத்தை மதித்து உத்தரவு வாங்கிய பின் தொடங்கப்படுகிற மாதிரி நினைப்பு. இது எந்திரனுக்கு கொடுக்கப்படும் கொசுறு விளம்பரம் என்பதுதான் நிஜம்.சங்கர் இந்தியன் படம் எடுத்தவுடன்
இருந்த பத்துரூபாய்க்கும் பலகாரம் வாங்கித்தின்றுவிட்டு தாலுகா ஆபிசுக்குள் போனாராம் ஒரு சினிமாப் பைத்தியம்.எதுக்காக...லஞ்சம் கொடுக்காம சர்ட்டிபிகேட் வாங்குவதற்கு.இந்தியன் பட வெற்றிக்குப்பிறகு கமல்  அரசியலுக்கு  வருவாரா மாட்டாரா என்று புரளியைக் கிளப்பவில்லை.அந்த அரசியல் தான் என்னன்னு புரியல.

ஆனால் ஒவ்வொரு முறை ரஜினி படம் வெளிவந்து அடுத்தபட வேலைகள் துவங்கும் போதும் திட்டமிட்ட புரளி
யைக்கிளப்பி விட்டுவிடுகிறார்கள். பிஸினஸ் டாக்டிஸ்.எம்ஜியார் ஆட்சிக் காலத்திலிருந்து இப்படிப் புரளியைக் கேட்டுக் கேட்டு காது புளியந் தோப்பாகிவிட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து குற்றாலம் போனால் சிவகிரிப்பக்கம் ஒரு மலையின் மேல் சங்கர் அளவுக்கு பிரம்மாண்டமாய் ஏசுவருகிறார் என்று எழுதியிருக்கும்.அதற்கும் ரஜினியின் அரசியல் பிரசவ செய்திக்கும் எந்த வித்தியாசமுமில்லை.

எங்க ஊரு டவுன் பஸ்ஸை விட அதிக ஷண்டிங் அடித்த பெருமை இந்த லட்சிய வீரனுக்கு மட்டும் தான்
பொருந்தும்.கலைத்துறையின் மூலமாக இந்த தமிழ் மக்களுக்கு மானமும் ரோஷமும் வரவேண்டும் என்று
பாடுபட்ட ஒரு மிகப்பெரிய ஆளுமையின் மகன்.அப்பம்பேரக் கெடுக்கவந்தவன் என்று சொல்லுவது இதுதானோ? 

25.10.10

வாடியபயிரைக் கண்ட போதெல்லாம்

நல்ல ஏறு வெயிலில் உரக்கடைக்கு வந்திருந்தவருக்கு மயக்கம் வர, சரிந்து விழுந்திருக்கிறார்.மருத்துவமனைக்கு கொண்டுபோய்சேர்த்த பிறகு, உடம்பில் போதிய தெம்பு இல்லை என்று சொல்லி மூன்று பாட்டில் குளுக்கோஸ் ஏற்ற மருத்துவர்கள் சொன்னார்களாம்.முதல் பாட்டில் ஏற்றி முடிந்ததும் அவருக்கு நினைவு திரும்பிவிட்டது. எழுந்தவர் என்ன நடந்ததெனக் கேட்டிருக்கிறார். சொல்லியிருக்கிறார்கள்.கையிலிருந்து ஒரு டியூப் ஏறிப்போய் பாட்டிலில் சொருகியிருந்ததைப்பார்த்து அதை என்னவென்று கேட்டிருக்கிறார்.

'ஒடம்புல சத்தில்ல அதா க்ளுக்கோஸ் ஏத்துறாங்க' என்று சொன்னதும்.
'இன்னு எவ்ளோ நேரமாகும்'
'ரெண்டு பாட்டலு ஏத்தனு,ராத்திரியாகிரும், காலைல டாக்டர் வரணு,அதுக்குப்பெறகுதா வீட்டுக்குப்போகலா'
'ஐயய்யோ எம்பருத்திச்செடி என்னாகு,விடுங்க நாம்பொகணு'
பதறியவரை ஆற்றுப்படுத்தி உடல்நிலையை எடுத்துச்சொன்ன பிறகு அவர் ஒரு யோசனை சொன்னார்.
'டாக்டரக் கூப்பிடுங்க பில்லக் குடுத்திறலாம்'.
'புரியாத ஆளாயிருக்கீரே,குளுக்கொஸ் ஏறனுமில்ல'
'அதுக்கு ரெண்டு செம்புத்தண்ணி ஒடம்புக்குள்ள போறதுக்கு ரெண்டுநாளா? ஒரு ஏக்கர் தண்ணி பாய்ச்சவே ஒரு
 மணிநேரந்தா ஆகுது'
'அதுக்கு'
'குடுங்க ஒரே மடக்குல குடிச்சிட்டு தோட்டத்துக்குப்போகணு'
பக்கதில் படுத்திருந்த நோயாளிகளோட சேர்த்து மருத்துவமனையே குலுங்கிக்குலுங்கிசிரித்தது.
'அப்பிடியென்னய்யா,தோட்டத்துல இருக்கு பருத்திச்செடிதான'
'செடி பருத்திச்செடிதா,ஆனாக்க கரண்டு மத்தியானக்கரண்டுல்ல' என்றார்.

சோகையாய்ப்போன தன்னுடம்பைக்காட்டிலும்,தண்ணிரின்றி வாடும் பருத்திச் செடிக்கு பரிந்து கொண்டு பதறித் துடிக்கிற விவசாயி.அந்தப் பதற்றத்துக்குப் பின்னாடி அவரது குடும்பமும் வாழ்வும் என ஒரு சுயலாபமிருந்தாலும் கூடப் பருத்திச் செடியின் வாட்டம் அவரை வாட்டுகிறது.அதனால் தான் உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி எனும்
விவசாயி கோமணாண்டியாகிறான்.எதைப்பற்றியும் கவலைப்படாதவன் அரசியல் பிழைத்து கோபுரவாசியாகிறான்.

தீவுகளை இணைக்கும் பாலம்

வீடுகட்டிக் குடிவந்து ஒரு வருடம் ஆகியிருந்தது.கொல்லையில் வைத்த கறிவேப்பிலைச்செடி அந்தக் களிமண்ணிலிருந்து எழுந்துவரமுடியாமல் திணறிக்கொண்டிருந்தது. 'வச்சு ஒருவருஷமாகப்போகுது ரெண்டு இணுக்கு கூட விடமாட்டீங்குதே என்னங்க வேர்பிடிக்கலையோ' என்றாள். பத்து வருஷமாச்சு எனக்கே இந்த நகரத்தோடு ஒட்டமுடியவில்லை.இது ஊரிலிருந்து கொண்டுவந்தது.சின்ன முணியாண்டி சொல்லிக்கொண்டே தெருவில் கிடந்த மாட்டுச் சாணத்தை எடுத்துவந்து செடியின் தூருக்கடியில் போட்டான்.எரிவாயு அடுப்பு,கறிக்கோழி ,வேத்தாள் வந்தா உட்கார தனி அறை,ரிமோட்டில் இயங்கும் தொலைக்காட்சிப் பெட்டி,உள்ளூர் மெற்றிக்குலேசனில் பிள்ளைகள் படிப்பு,கண்ணைப்பறிக்காத கலரில் உடுப்புகள் என சுற்றுப்புறங்களை எல்லாம் பூசியபின்னும் இன்னும் உள்வீடு
கிராமத்து மண்சுவர் தேடியபடியே அலைகிறது.அந்த மத்தியதரக் குடியிருப்பில் இறுக்கிக்கட்டினாலும் மேக்க பாத்து இழுத்துக்கொண்டு ஓடுகிறது மனசு.

சனி ஞாயிறுகளில் வீட்டுக்கு வரும் அய்யாவை கட்டிலில் படுக்கச்சொன்னால் ஒரு போர்வையும் தலகாணியும் எடுத்துக்கொண்டு மெத்துக்குப்போய் விடுகிறார். அல்லது தாவாரத்திலே படுக்கிறார்.சுகமில்லாத ரெண்டு நாளில் இருநூறுதரம் ஊரைப்பற்றியே பேசுகிறார்.காட்டுப்பக்கம் போய் தும்பையும் துளசியும் பிடுங்கிக்கொண்டு வந்து கஷாயம் போட்டுக் குடிக்கிறார். வாங்கிய மாத்திரைகளை சாத்துரிலேயே போட்டுவிட்டு காய்ச்ச குறைவதற்குள் பஸ் ஏறிப்போய்விடுகிறார்.இப்படிக் கட்டுத்தறி அறுத்துக்கொண்டு போகும் சிலாக்கியம் அவரைப்போலவே நகரத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் வாய்த்து விடுகிறது. ஊருக்குப்போனால் மின்விசிறி தேடுதும், பம்புசெட்டுக்குப் போனால் வாய்க்காத் தண்ணீரில் குளிப்பதுவுமாக, விலகி இருத்தல் அவர்களின் வாடிக்கையாகிப்போகிறது.இந்த இரண்டுக்கும் நடுவில் இழுபடுகிற சின்ன முணியாண்டிக்கு தொலைத் தொடர்புத்துறையில் எழுத்தர் வேலை.

'மொதல்ல அதிகாரிகளுக்கு முன்னாடி இப்படி நெஞ்ச நிமித்திக்கிட்டு நிக்கக்கூடாது,அதப்படிச்சுக்கோ. அப்புறம்வேலையைப் படிச்சுக்கலாம்' என்று சொன்ன ராமநாதனை என்ன செய்வதென்று தெரியவில்லை.பத்துமணிக்கு ஆபீஸுன்னா பத்து நிமிஷத்துக்கு முன்னாடியே சீட்ல இருக்கணும்.அதிகாரி வந்தால் எழுந்திரிச்சு வணக்கம் சொல்லணும்.சரியா அஞ்சடிச்சதும் சீட்ட விட்டுப்போகக்கூடாது. வேல முடிஞ்சிருந்தாலும் ஒன் அவர் போக்கு காட்டிட்டு ஆறு மணிக்கு கிளம்பணும். பொளைக்கத்தெரியாத பிள்ளையார்க்கியே'. இது பொழப்பா. 'அதிகாரி தப்பா செஞ்சாலும் சொன்னாலும் சரின்னுட்டு அப்புறம் பத்து நிமிஷம் கழிச்சு பணிவா எனக்கு இப்படி ஒரு சந்தேகம் இருக்குன்னுதான் சொல்லணும்'. என்று அடுக்கிக்
கொண்டே போனான்.அலுவலக விதிமுறைகளிலும்,வேலைப் பிரிவினையிலும் இதெங்கும் சொல்லப்படவே இல்லையே என்றான் முணியாண்டி.'இது சரிப்படாது தம்பி'சலித்துக்கொண்டான் ராமநாதன்.

அவனது ஊரில் ஐநூறு தலக்கட்டில் இதே போல ஒரே ஒரு ஆள் இருந்தார். தாடிக்காரப் பெருமாளு. அவர்தான் ஆயிரம் நொறநாட்டியம் பேசுவார்.
சுற்றுச்சுவர்  இல்லாத தண்ணிக் கிணற்றில் வெள்ளத்தாயி தவறி விழுந்ததும் தெக்குத்தெரு சுப்பன் குதிச்சு தூக்கிட்டு வந்தார்.வெள்ளத்தாயோட உயிர் பற்றிக் கவலைப்படாமல் சுப்பன் விழுந்து குடிதண்ணி கெட்டுப்போசேன்னு வியாக்யானம் பண்ணியவர்.வெனயம் புடிச்ச மனுஷன் என்று ஊரே சொல்லும். இங்கே அதற்குப்பெயர் கன்னிங்.இந்த நகரம் முழுக்க தாடிக்கரப் பெருமாளு தான் அதிகம்.

ஒருநாள் நடு இரவில் தெருவில் ஒரு பலத்த சத்தம் கேட்டது எழுந்து ஓடிப்போய்க் கதவைத்திறந்து பார்த்தான்.பாட்டு டீச்சர் வீட்டில் திருடர்கள் வந்து கதவைத்திறக்கச் சொல்லி மிரட்டிக்கொண்டிருந்தார்கள். விசிலடித்து சத்தம் போட்டு போலீஸ் போலீசெனக் கத்தி,கையில் ஒரு கம்பெடுத்துக் கொண்டு நெருங்கினான்.தெரு முழித்துவிடும் அபாயம் உணர்ந்த திருடர்கள் ஓடிப்போனார்கள்.அவ்வளவு சத்தம் கேட்ட பிறகும் யார் வீட்டுக்கதவும் திறக்கவில்லை என்பது நூதனமாகத் தெரிந்தது இவனுக்கு.காலையில் பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் கூப்பிட்டு'சத்தம் வந்தா உடனே ஜன்னலைத் திறந்துதான் பாக்கனும் சார்,இல்லே அந்த வீடு தெறக்கலேன்னு ஒங்கவீட்டுக்குள்ளே நுழைஞ்சிட்டா'

'நுழைஞ்சா டீவிப்பெட்டி இருக்கு அதைத் தூக்கிக்கிட்டு போயிறுவான்,அதும் கூட ரிப்பேராகி ஒரு வருஷமாச்சு,செரி ஒங்க வீட்டுக்குள்ள புகுந்தாலும் இதே விதிதானா ' முனியாண்டி சொன்னதும் 'அப்ப நா வர்ரேன் சார் ' என்று இடத்தைக் காலிபண்ணினார்.ஒவ்வொரு வீடும் தனித்தனித் தீவாகித் தெரியும்.குழம்பு, துவையல்,ரசம்,பண்டங்கள் அந்தத்ந்த வீட்டுக்குள்ளேயே உற்பத்தியாகி அங்கேயே அழிந்துபோவதும் அல்லது அழுகிப்போவதுமான் துர்ப்பாக்கியம் நிரைந்தது இந்த குடியிருப்புக்கள் என்றுதான் நினைத்துக்கொண்டிருந்தான் முனியாண்டி.

காய்ச்சலோடு கிடந்த இன்னாசிமுத்து வாத்தியாரை துளசிச்செடியோடு மொத்தமாய் பார்க்கப்போன அந்த ரிடையர்டான கூட்டத்தைப் பார்க்கும் வரை.

22.10.10

பாரா சம்பாதித்த அன்பெலாம் ஒரே இடத்தில் குவிந்த மகா கல்யாணம்

முன்னமெல்லாம் அந்த ஊர்ப்பெயரைக் கேட்ட மாத்திரத்தில் கண்ணதாசனும்,ஜெமினிக்கனேசனும்,பத்மினியும்  நிழலாடுவது தவிர்க்கமுடியாததாகிப்போகும்.மண் சிவந்துகிடக்கும் காடுகள்,மணாவரி மனிதர்கள் புழுதிபறக்கும் சாலைகளோடு பார்த்த ஊர். இனி சிவகங்கை என்றால் அந்த பிம்பங்களெல்லாம் பின்னுக்குத்தள்ளப்பட்டு எங்கள் ப்ரிய பாரா வும் அவர் குடும்பமும் மட்டுமே முதலில் வந்து இடம்பிடிக்கும்.ஒரு ஊரால்,ஒரு இனத்தால்,ஒரு உத்தியோகத்தால் கூடுகிற தன்மைகளில் இருந்து பரிணாமாமெடுத்து வலையெழுத்தால் பிணைக்கப்பட்ட ஒரு வானவில் உருவாகியிருக்கிறது.எழுத்திலும் குரலிலும் ஸ்பரிசித்த மனிதர்கள் நேரில் பிரசன்னமாகும் போது ஏற்படும் கண்ணின் தகவமைதல் போன்ற கணத்தை   இதுவரை இலக்கியங்கள் எதுவும் பதிவு செய்திருக்கிறதா எனத்தெரியவில்லை.ஆனால் இது ஒரு புது அனுபவம்.

வலைப்பக்க சுயவிபரத்தில் இருக்கும் நிழற்படங்கள் ஒரு பக்க பரிமாணத்தைத்தான் காண்பிக்கும் என்பதை நேரில் பார்க்கையில் ஒருவருக்கொருவர் உற்சாகத்தோடு பகிர்ந்து கொண்ட நேரம்.ராஜசுந்தாராஜன் அண்ணா,மணிஜீ,ஜெரி ஈசானந்தா,கும்கி,மாது,அக்பர்,சிவஜிசங்கர்,செ.சரவணக்குமார் எல்லோரின் குரலும் மதுரை இறங்கும் போதே எனை அழைத்தது.எழுத்தால் மட்டுமே ஆன ஸ்னேகத்துக்கு மனதில் வரைந்து வைத்த ஓவியங்களை ஒப்பீட்டுப் பார்க்கப்போகிற ஒரு பரீட்சைக்கான ஆவல் அது. பேருந்தின் சக்கரத்துக்கு முன்னாடி, முன்னாடி ஓடிப்போய்  நின்று பிள்ளைக்குதூகலம் கொண்டது.சிவகங்கைப்பேருந்து நிலையத்தில் நடமாடும் மனிதர் முகத்திலெல்லாம் வரைந்து வைத்த ஓவியத்தை ஒட்டிப் பார்த்துக்கொண்டு கல்யாணவீட்டுக்குள் நுழைந்த போது பந்தி களைகட்ட ஆரம்பித்திருந்தது.

அந்த நேரத்தில் தானே சொந்தபந்தங்களை அழைத்து அருகில் இருத்தி நிழற்படம் எடுத்துக்கொள்வார்கள். அதுவும் நடந்து கொண்டிருந்தது.சாப்பிடாதாவர்கள் வெறும்வாயில் கதைபேச சாப்பிட்டவர்கள் வெற்றிலை வாயில் கதைபேசுகிற சாவகாசம் அலாதியானது.வருகிறவர்களை வரவேற்பதுவும்,புறப்படுகிறவர்களை வழியனுப்பவுமான தகப்பனுக்கான நேரம்.அப்போது  கடமை முடிந்தது என்றல்ல, கனவு கனிந்தது கல்யாணமாக என்கிற ஒரு அயற்சியும் சந்தோசமும் கலந்த பாட்டு ஒலிக்கும் முகத்தோடு  'பாரா' உட்கார்ந்திருந்தார்.ஒரு இளைஞன் வேஷ்டி சட்டை உடுத்திக்கொண்டு உட்கார்ந்திருந்த தோரணையில்.பொன்னோட அப்பா என்று தயங்க அது நான் தான் என்றார் நான் தான் காமராஜ் சொன்னதும் இழுத்து அணைத்துக் கொண்டார்.உடைந்து, உருகி உருவமற்றுக்காற்றில் மிதக்க காத்திருந்த நேரம்.குடும்பம் மொத்தத்தையும் கூப்பிட்டு  கூப்பிட்டு முகம் கான்பித்தார் எல்லோரின் முகத்திலும் என் குடும்பத்தின் சாயல் கிடடைத்தது.

சரவணனுடன் பேசிக்கொண்டிருந்த தோழர் பத்மாவிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசி விட்டு ஓடோ டிப்போய்
குழுமத்தில் ஐக்கியமாகிக்கொண்டேன்.தீவிர இலக்கியம்பேசாமல்,தீவிர அரசியல் பேசாமல் தீவிர அன்பைப்பகிர்ந்துகொண்டோ ம்.உள்ளுக்குள் கிடந்த சின்ன சின்ன தடங்கல்கள் கறையக்கொஞ்சம் திரவமும்,கொஞ்சம் பேச்சும் போதுமானதாக இருந்தது.பெண்ணோடு மாப்பிள்ளை உட்கார்ந்து பந்தி நடக்கும் நேரம் கிண்டலும் கேலியும்,சாப்படுமாக பரிமாறப்படுமே அந்த கடைசிப்பந்தியில் தான் பதிவர்களுக்கு இடம்போட்டுக்கொடுத்தார் பாரா.

அங்கிருந்து விடுதி அறைக்கு வந்ததும் வழக்கம்போல மாதவராஜ் ஆரம்பித்த வர்த்தைகளின் நுனி பிடித்துக்கொண்டு
சற்று இலக்கியம் அரசியல் அதோடு தூக்கம் மாலைவந்தது.மாலை துவங்கும் நேரத்தில் விடிகாலை ஆலமரத்து பறவைகளின் கீச்சல் சத்தத்தோடு ஒவ்வொருத்தராய்ப் புறப்பட்டார்கள்.பாரா அப்படியொரு ஆலமரமாய் கைவிரித்துச் சிரித்து அனுப்பிக்கொண்டிருந்தார்.அவரது மைத்துனர் முத்துராமலிங்கம் நிற்காத பம்பரமாய்  கல்யாண வீட்டின் ஒவ்வொரு அசைவிலும் பங்கெடுத்துக்கொண்டிருந்தவர்களில் முக்யமானவர்.

கல்யாணங்களின் எல்லாவிதமான லட்சணங்களோடுதான் நடந்தது என்றாலும் இந்தக்கலயாணத்துக்கு கூடுதல் சிறப்பொன்று உண்டு.வானலைகளினூடே வியாபித்த பாராவின் எழுத்தை நுகர்ந்த எல்லா அன்புள்ளங்களுக்கும் பாராவீட்டுக் கல்யாணச்சேதி போகும்.அவர் சம்பாதித்து வைத்த பிரியங்கள் கூடி பூச்சொரியும்.  தூரத்தேசத்திருந்தும் மனசார வழ்த்துகிற வைபோகமும் சேர்ந்து வாய்க்கபெற்ற இது நம் பிரிய பதிவர் வீட்டுக்கல்யாணம்.

20.10.10

முகக்கவசம்

கேகே நகரின் ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தேன்.17 d யில் ஏறினால் நுங்கம்பாக்கத்திலிருக்கும் ஆசிரியர் தேர்வாணையத்துக்குப்போகலாம் என்று சொன்னார்கள்.வந்த பேருந்து நான் நின்றிருந்த இடத்தை நெருங்கி என்னை உரசுகிற மாதிரி வந்தது.பின்புறமாக ஒதுங்கினேன் எனது குதிகாலில் சக்கரத்தை மோதவிட்டு கொஞ்சம் விலக்கி மீண்டும் பயணத்துக்குத்தயாரானான் அந்த இரு சக்கர வாகனக்காரன். சிராய்த்து விட்டது குனிந்து பார்க்குமுன் வண்டியைக் கிளப்பிவிட்டான்.அவனுக்கு என்ன அவசரமோ,எப்படியான தலைபோகிற வேலை காத்துக்கொண்டிருக்கிறதோ,எந்த இலக்குநோக்கிய லட்சியப்பயணமோ தெரியவில்லை.தன்னால் அடிபட்டவன் ஒரு மனிதன் அவனிடம் ஒரு சாரி கேட்கலாம்,இல்லை கருணையோடு ஒரு பார்வை பார்க்கலாம். இது எதுவும் அனாவசியம் என்கிற வேகத்தை எட்டிப்பிடித்து நிறுத்தினேன்.வண்டியின் பின்பகுதியைப்பிடித்து இழுத்ததில் அவனுக்கு கொஞ்சம் கோபம்.நீங்கதான் பின்னாடி பாக்காம வந்தீங்க, தப்பு ஒங்க பேர்லதான் என்றான். என் தவறை ஒத்துக்கொள்கிறேன் மிகச்சரியான சென்னை வாசியான உன் முகத்தைப் பார்க்கவேண்டும் கழற்று உன் தலைக் கவசத்தை என்று சொன்னேன்.கழற்றாமல் விரைந்து சென்றுவிட்டான்.

18.10.10

பிரியப்பிரிய முறுக்கேறும் கயிறு

பயணம் ஏகும் பரபரப்பில்
கழற்றி எறிந்துவிட்டுபோன
மடிக்கப்படாத ஆடைகள்
துணைக்குவரும் யாருமற்ற நாட்கள்.

மின்மினியின் பிருஷ்ட வெளிச்சமும்
மங்கிப்போன ராத்திரி முழிப்பில் தேடலாம்
சிதறிக்கிடக்கும் சிணுங்கற் சொற்களையும்
சில கெட்டவார்த்தைகளையும்.

வணாந்திரத்தின் ஒருமைகளிலும் கூடப்
பின்தொடரும் கலைத்துவிடப்பட்ட தேனீக்களாய் 
நினைவுகளின் இரைச்சலும் அவ்வப்போது
சில பேடைகளின் ஒற்றைக் கரைச்சலும்.

தனித்து விடப்பட்ட
வீட்டில் ருசிக்கிறது
சொந்தத் தயாரிப்பில் தேனீர்,
மெகாத்தொடரின் பாட்டு,
உப்புக்குறைந்த சோறு,
நீ திரும்பும் நாட்களை
எண்ணும் கணக்கு
அப்புறம்
காமாசோமான்னு
இப்படி ஒரு கவிதை.

17.10.10

சீனச் சிறைகளும் பான்பராக் எச்சில் விடுதலைகளும்

இந்த வார 20.10.2010 ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.'சீனாவின் அமைதியைக்கெடுத்த அமைதிப்பரிசு'.திரு ஆரோக்கியவேல் எழுதியிருக்கிறார்.சீனக்கவிஞரும் தியானமென் எழுச்சியின் தலைவர்களில் ஒருவருமான கவிஞர் 'லியூ சியோபோ'வுக்கு கிடைத்த நோபல் விருதைப்பற்றியதான கட்டுரை அது.இந்தக்கால எழுத்துக்கள் தனித்து நிற்கின்றன.நோபல் விருது கிடைத்தது தெரியாமல் சிறக்குள்ளிருக்கும் லியூ வுக்கு அவரது மனைவி மூலம்,தகவல் சொல்லப்பட்டதாகவும்.தகவல் சொல்லப்போன மனைவி என்ன ஆனாள் என்று தெரியாமல் போனதாகவும் எழுதிக்கொண்டே வந்து 'உலகின் மிகப்பெரிய  சிறைக்குப்பெயர்தான் சீனாவோ' என்று முடிக்கிறார். நல்லா இருக்குல்ல ?. இந்த முடிவின் வார்த்தைகள் ஒரு கவிதைபோல வந்து விழுந்திருக்கிறது.அருமை ஆரோக்கியவேல்.

0

ஒரு நாடு அதன் மக்களுக்கு எதுவாக இருக்கவேண்டும்.சீனா உண்மையிலேயே சிறையா இந்தக்கேள்விகள் ஊடகங்களின் வழியாக நம்மை வந்து சற்று ஆட்டிவிட்டுப்போகிறது.இது ஒன்றும் புதியதல்ல.உள்ளூர் அரசியல் வாதிகள் தகரம் கண்டுபிடிப்பதற்குமுன்னமே உண்டியல் கண்டுபிடித்தவர்கள் என்று வசைபாடுவதும் அமெரிக்கா தனது இலக்கியங்கள் அணைத்தையும் பொதுவுடமைக்கு எதிராகாக்கூர்தீட்டி விடுவதும் புதிதல்ல.தனது காமிக்ஸ் கதைகள்தொடங்கி உலகு புகழ் ரா ரா ரஸ்புதீன் பாடல்கள் வரை ரஷ்யாவை எதிரியாக்கியிருக்கும் அமெரிக்கா.அதன் சாகச கதநாயகர்களான ஜேம்ஸ்பாண்டுகள் ஒத்தை ஆளாய் சீனாவுக்குள்,ரஷ்யாவுக்குள்,தென்கொரியாவுக்குள்,க்யூபாவுக்குள் புகுந்து அதகளப்படுத்தி ஜெயித்துவிட்டு கடல்வழியே நாயகியோடு சல்லாப பயணம் மேற்கொள்வார்கள்.

அவர்களது ஜனங்களை சிந்திக்கவிடாமல் செய்ய அங்கே அதுதான் மேம்படுத்தப்பட்டபோதை. நமக்குத்தான் நாட்டுப்போதைகள் அதிகம் கிடைக்கிறது. அவை யாவன என்று கேட்கறீர்களா?. ஒண்ணா ரெண்டா சொல்லுவதற்கு. சின்ன வயசில் கம்யூனிசம் என்றால் இருக்கிறவர்களிடம் வழிப்பறி செய்வது என்று சொன்ன உள்ளூர் காங்கிரஸ் தாத்தா முத்தையாவின் அறியாமைதான்  எனக்கான அறிமுகம்.என்னைப்போல 90 சதமான இந்தியர்களுக்கும் அடித்தட்டு ஜனக்களுக்கான அறிமுகம் அதுவாகத்தான் இன்னும் இருக்கும். அதுபோலத்தான் சீனாவும் ஒத்தைக்கண்ணன் அறிமுகம். இந்திய சீன எல்லைப்போரின் போது

'ஐ சக்க ஐ அரைப்படி நெய்;
சீனாக்காரன் தலையில
தீயப்பொருத்தி வை'

என்கிற தேசபக்தி ரைம் மூலம் சீனா அறிமுகமானது.பக்கத்து தெருக்காரனிடம் சண்டையென்றால் சொந்தத்
தெருக்கார ஈ, காக்கா, குஞ்சுகளும் எதிரிப்பட்டை பூசியே தீரவேண்டும்.இப்படியான சின்ன ஆனால் மிகப்பெரிய உளவியல் பாதிப்போடு தான் எல்லோரும் இயங்கவும் வேண்டும் இல்லையா ?.சமீபத்தில் சீனா பற்றிய தேடலில் கூகுலுக்கும் சீனாவுக்கும் ஏற்கனவே வாய்க்காத் தகறாராகிப்போனது தெரியவந்தது. அங்கே இருக்கிற பைடு டாட்காம் கூகுலுக்கு வியாபார எதிரியாகிப்போனதால் விக்கிப்பீடியாவில் சீனா பற்றிய தகவல் இல்லை. அதானாலாயே அது இரும்புத்திரை நாடு என்று சொல்லிவிடலாமா?.

ஒரு சராசரி சீனக்குடிமகனுக்கும்,பணக்கார சீனக்குடிமகனுக்கும் உள்ள வருமான இடைவெளி 362 டாலரிலிருந்து,1142 டாலர் என்று சொல்லுகிறது பிரிட்டிஷ் பத்திரிகை.அதுதான் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியென்றும் சொல்லுகிறது. இதை ஒருநாளைக்கு நாப்பது ரூபாய் கூட கூலிகிடைக்காமல் திண்டாடும் என் 20 சதமான இந்தியர்களிடம் நான் எப்படி விளக்கிச் சொல்லமுடியும். 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'ஒரு குடும்பம் ஒரு குழந்தை' திட்டத்தால் 250 கோடி ஜனத்தொகை கட்டுப்படுத்தப்பட்டதாக அதுவே சொல்லுகிறது.நிலப்பரப்பிலும் மக்கட்தொகையிலும் நமக்கு நிகரான சீனாவின் தனிநபர் வருமாணம்,தனிநபர் சுகாதாரம் எல்லாம் திருப்தியளிக்கக்கூடிய அளவில் இருக்கிறது என்பதை யாரும் சொல்லுவதில்லை.  clean energy என்று சொல்லப்படுகிற இயற்கை எரிசக்தியை உபயோகிப்பதில் உலக நடுகளில் முதலிடத்தில்  சீனா நிற்கிறது என வாஷிங்டன் போஸ்ட் இதழ் சொல்லுகிறது.கட்டிடம்,காகிதம்,தீக்குச்சி போன்ற தளவாடங்களுக்கு மரத்தை வெட்டுவதில்லை என்கிற முடிவெடுத்ததால் தீப்பெட்டி தயாரிக்கும் பழய்ய தானியங்கி எந்திரங்கள் தென் தமிழ்நட்டுக்கு வந்திறங்கிக் கொண்டிருக்கின்றன.

அதை வாங்கப்போன ஒரு தீப்பெட்டித் தொழிலதிபர் வார்த்தைகளில் சொல்லுவதானால் 'அங்கே சோத்துக்கில்லாமல் வற்றிப்போன கண்களோடு எந்தமனிதனையும் பார்க்கமுடியாது.பிச்சைக்காரர்கள் மருந்துக்கு கூடக்கிடையாது' என்கிற கனிப்பு பாரபட்சமானதாக இருக்கமுடியாது.இது போதாதா வேறென்ன வேண்டும்.ஜனநாயகம் வேண்டுமாம், மதநம்பிக்கைக்கான விடுதலை வேண்டுமாம்.ஹப் புக்கு போக உரிமை வேண்டுமாம்.ஐயயிரம் ரூபாய்க்கு ரீபோக் ஷூ எடுக்க அனுமதி வேண்டுமாம்.5 டாலர் கொடுத்து காப்பிகுடிக்க விடுதலை வேண்டுமாம்,பொது இடங்களிலும்,தொடர்வண்டிகளிலும் பான்பராக் எச்சிலைத்துப்புகிற ஜனநாயகம் வேண்டுமாம்.தாய்ப்பால் தவிர இந்த பூமியின் அணைத்து படைப்புகள் மீதும் விலைப்பட்டியல் ஒட்டிவிடுகிற போட்டிவேண்டுமாம். அழிக்கவே முடியாத லஞ்சமும் ஜாதியும் பிணைந்துகிடக்கிற சௌஜன்யம் வேண்டுமாம். இதெல்லாம் கொடுக்காத சீனா ஒரு சிறையென்றால், சிறையே.

1991 அல்லது அதற்கு முந்தைய தேர்தலா என்று தெரியவில்லை வேட்பாளர்களின் சொத்துமதிப்பை இதே ஆனந்த விகடன் வெளியிட்டது. அதை மீண்டும் பொக்கிஷம் பகுதியில் போட்டுக் காண்பித்தால் இந்த விடுதலை பெற்ற ஜனநாயம் சம்பாதித்தது எவ்வளவு  என்று தெரிந்துகொள்ளலாம்.

15.10.10

நினைவில் சலசலக்கும் பனங்காடு

ஆறுகச்சாமிக்கு வெத்திலைதான் உயிர். அந்த அழுக்கேறிப்போன கைவச்ச பனியனும், வெத்திலை வாயும் தான் அவரது அடயாளம். வெத்திலைக்காக அவர் வெள்ளியிலான டப்பாவோ, காடாத்துணியில் அடுக்கு வைத்துத்தைத்த சுருக்குப்பையோ, வைத்திருக்க வில்லை. அதுக்கான தேவையும் இல்லாமலே அவருக்கும் வெத்திலைக்குமான தொடுப்பிருந்தது. அவருக்கு முன்னாலுள்ள மண் கொப்பறையில் ததும்பத் ததும்ப கருத்த வெத்திலை நிறைந்திருக்கும். கொஞ்சம் தள்ளி அஞ்சரைப்பெட்டியில் கொட்டப்பாக்கு கிடக்கும். சுண்ணாம்பிருக்கிற தகர டப்பாவும், அங்குவிலாஸ் போயிலையும் கைக்கெட்டுகிற தூரத்திலேயே இருக்கும். மேல்பரப்புக்கு வந்து மீன்கள் வாய் பிளக்கிற மாதிரி வாயைத்திறந்து கொர் கொர் என தொண்டையிலிருந்து சத்தம் எழுப்பி வெத்திலைச்சாறை வாய்க்குள் தக்கவைத்துக் கொள்வார். தூங்குகிற நேரம் போக எந்நேரமும், கன்னத்தின் இடது பக்கம் சிலந்தி மாதிரி பொடப்பா இருக்கும். சாப்பிட,  வரக்காப்பி குடிக்க மட்டும் வெளியே வந்து வாய் கொப்பளிப்பார். அது தவிர நாள் முழுக்க சரப்பலகையிலே உட்கார்ந்திருப்பார்.

குத்துக்காலிட்டு, சம்மணம் கூட்டி, ஒருக்களிச்சு மாறி மாறி உட்கார்ந்து கொண்டு குண்டி காந்தலை தள்ளிப்போடுவார். கருங்காலி மரத்தாலான அந்தக் கல்லாப்பெட்டியில் அய்யாணார் கோயில் எண்ணச்சட்டி மாதிரி அழுக்கேறியிருக்கும். அதற்கு மேலே நீளவாக்கிலுள்ள கணக்கு நோட்டு இருக்கும். சாமுவேல் வாத்தியார், காலேஜ் மாடசாமி, பைபிளம்மா, பிரசண்டுசுந்தராசு, பேர்களில் தலைப்புபோட்டு  அவருக்கான தமிழில் ஊச்சி ஊச்சியாய் கணக்கெழுதியிருப்பார். காலேஜ் மாடசாமி பொண்டாட்டி வந்து புஸ்த்தகத்தை தூக்கி 'இதென்ன மொலாளி கக்கூசுல எழுதுற கெட்ட கெட்ட வார்த்தையெல்லாம் கணக்கு நோட்டுல எழுதிவச்சிருக்கீரு  எங்க மாமா பேரு அஞ்சந்தான'. என்று சொல்லுவது குறித்தெல்லாம் அவருக்கு கவலை கிடையாது. அதற்கவர் மீண்டும் மீன் வாயைப்பிளக்கிற மாதிரி சிரிப்பார். எதிரே நிற்கிரவர்கள் மீது செகப்பா தூறல் விழும். அவர் எழுதுகிற அ வுக்கு கு வுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாது.

'எனக்கென்ன தாயி ஓங்க வீட்டுக்காரு மாறி காலேஜிப்படிப்பா கெட்டுப்போச்சு அந்தக்காலத்துல எங்கைய்யா பனைக்கி போயிட்டு வந்து பள்ளிக்கூடத்துக்கு கூட்டிப்போவாரு பிள்ளமாரு வீட்டுப்பிள்ளைகளெல்லாம் பெஞ்சில ஒக்காரும் நாங்க பின்னாடி தரையில அதுக்கும்  பின்னாடி ஒங்க தெருக்காரப்பிள்ளைக ஒக்காரனும், அதெல்லாம் படிப்பாம்மா' வெத்திலைச்சாறை கொர் கொர் என்று காறி வெளியில் வந்து செகப்பு உருண்டையாய் வெத்திலையைத்துப்பி விட்டு திரும்பவும் ஆரம்பிப்பார். அது இரண்டு தலைமுறைச்சரித்திரம்.

அந்தக் காலத்தில் ஆறுமுகச்சமியின் அய்யா இசக்கிமுத்து பனையேறுவதில் நாடறிந்த கெட்டிக்காரர். சுத்துப்பட்டியிலெல்லாம் "பனைக்கி இசக்கி" என்று சொலவடை சொல்லுகிற அளவுக்கு பெரிய வித்தைக்காரர். காலாக்கை இல்லாமல் நிமிசத்தில் பனையுச்சிக்குப் போவதும். கண்மூடி முழிக்குமுன்னே பதினிக்கலயத்தோடு கீழே நடப்பதுவும் பார்ப்பதற்கு கண்கட்டி வித்தை மாதிரி இருக்குமாம். சில நேரங்களில் அருகருகே இருக்கும் பனைகளில் ஒன்றிலிருந்து இறங்காமலே இன்னொரு மரத்துக்குத்தாவி விடுவதால் அவருக்கு ''மாயாவி'' ங்கிற பாட்டப்பெயரும் உண்டாம். அந்தக்காலத்தில் பனை ஏறத் துவங்குகிற எல்லாரும் அவருடைய காலைத் தொட்டுக்கும்பிட்டு விட்டுத்தான் பனையேறுவார்களாம். அதுமட்டுமில்லெ தெக்கத்தி கம்புக்கு அவராலாலேயே பேர் வருமளவுக்கு கம்பு விளையாட்டில் அவரே பல புதிய அடிகளையும் அடவுகளையும் உருவாக்கினார்.

அவர் கம்பு சுத்துவதைப்பார்க்க கொடுத்துவைக்கணும். கம்பைக்கையில் வாங்கி குருவணக்கம் சொல்லி தரைதொட்டுக் கும்பிடுகிற வரைதான் கம்பும் கையும் கண்ணுக்குத்தெரியும். சுத்த ஆரம்பித்ததும் காத்தைக்கிழிக்கிற சத்தம் மட்டுமே உய்ங் உய்ங் என்று கேட்டுக்கொண்டே இருக்குமாம். சில நேரங்களில் சுத்தியும் பத்து எளவட்டங்களை நிற்கச்சொல்லி அவர்களிடம் கல்குமியைக் கொடுத்து எரியச்சொல்வாராம். எல்லாக் கல்லும் கம்பில் பட்டு சிதறுமாம். அவரிடம் வெங்கலப் பூன்போட்ட பிரம்பு போக, சுருள் வாளும், மான் கொம்பும் கூட பள பளப்பாக இருக்குமாம். அந்தக் கதைகள் சொல்லிக் கொண்டிருக்கையில் அவர் கண்களுக்குள் ஒரு பனைக்கூட்டம் கிடந்து சலசலக்கும்.

சின்னப்பிராயத்தில் கஞ்சி கொண்டு போகும்போது ஒவ்வொரு பனைமரத்தையும் எண்ணிக்கொண்டே போவதும் கூட ஆறுமுகச்சாமியின் விளையாட்டுகளில் ஒன்று. முதல் முதலாக அய்யாவோடு பனைக்கூட்டத்துக்குள் நடக்கும்போது காத்தும் பனையோலைச் சலசலப்பும் எங்காவது ஒரு பனை மரத்திலிருந்து இன்னொரு பனையிலிருக்கிற ஆட்களோடு பேசுவது எல்லாமே அமானுஷ்யமாகத் தெரியும். ஒரு பயம் உண்டாகும். ஆனால் அய்யா பக்கத்திலிருப்பதால் அந்தப்பயம் தெரியாது. பழகிப்போன பிறகு பனைகளெல்லாம் சேக்காளி ஆகிப்போனது.  அந்தச்சலசலப்பு அவனைக் குசலம் விசாரிக்கிற மாதிரியே இருக்கும். அது அப்பாவின் சேக்காளிகள். அவருக்குப்பிடித்த அந்த மரத்துக்குப் பக்கத்தில் வந்ததும் கஞ்சிச் சட்டியை இறக்கி வைத்து விட்டு அன்னாந்து பாளைகளையும், நுங்குகளையும் பார்த்து பார்த்து தனக்குள்ளே பேசிக்கொள்வது. திரும்பி வரும் போது எக்குப்போடு ஆறடி ஏழடி ஏறி, பிறகு சறுக்கிக் கீழே விழுந்தது எல்லாம் ஆறுமுகச்சாமிக்கு நினைவுக்கு வந்து போகும்.

பனையோலைக் குச்சல் தான் வீடு. பனங்காய் வண்டியும், பனமட்டைச் செருப்பும் அய்யா செய்து கொடுப்பார். அந்த வீட்டில் எப்போதும் பதினி வாடையும் கருப்பட்டி வாசமும் அவர்களோடே குடியிருக்கும். பதினிக்காலம் போனபின்னால், பனம்பழம். ஒரே ஒரு பழம் கிடந்தாலும்கூட கனவிலும் கூட இனிக்கிற  வாசம் அந்தப் பிரதேசம் முழுக்க பரவியிருக்கும். அப்புறம் அவிச்ச பனங்கிழங்கு.  இப்படி திங்கவும், விளாத்திகுளம் சந்தையில் கொண்டுபோய் விற்கவுமாக வருசம் பூராவும்  அந்தப் பனைக் கூட்டம் அவர்களுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அய்யாவும்  வீடு திரும்புகிற போது பதினிக் கலயத்துக்குள்ளோ, கையிலோ பண்டமில்லாமல் வரமாட்டார். காலையில் பனங்காட்டுக்குப் போகிற அய்யாவோடு இனிப்பு வடைகள் எப்படி வந்தது என்கிற சந்தேகம் தனக்குப் பிள்ளைகள் பிறக்கிற வரை தீராமலே இருந்தது. ஊரில் சில பேர் வேம்பாத்து கருவாடு வாங்கி வடகாட்டுக்கு கொண்டுபோய் வித்துவிட்டு பணங்காசு வச்சுப் பிழைத்தார்கள். சிலர் விளாத்திகுளம், விருதுநகர், சிவகாசி, சாத்தூர்ப் பக்கம் போய் கடைகள் வைத்து கல்லுவீடு கட்டினார்கள். எப்போதாவது குல தெய்வம் கும்பிட வருகிற அவர்களைப்பார்த்து "எசக்கில்லாத பயலுவ கால்ல பெலமில்லாம தெராசுபிடிக்க ஆரம்பிச்சுட்டானுவ'' என்று சொல்லிக்காண்டு அவர்களை வம்பிழுப்பார். அப்போதெல்லாம் அவர்குடித்திருக்கிற கள்ளுத்தண்ணி வாசத்துக்கு பயந்துகொண்டு யாரும் அவருக்கு பதில்சொல்லாமல் விலகிப் போய்விடுவார்கள்.
ஆனால் தெக்காட்டிலிருந்து ரெண்டு பேர் சிலம்பு படிக்க வந்து ஒரு வாரம் தங்கினார்கள்.  அவர்களோடு அய்யாவும் நாகர்கோவில் பக்கம் போனார்.

 ஒரு நாள் இரண்டுநாள் அய்யா ஊரி இல்லாவிட்டால் கூட இரவுகளில் பனையோலைச் சத்தம் கேட்பதற்கு ரொம்பக் கர்ண கொடூரமாக இருக்கும். இப்போது அய்யா ஊரில் இல்லாமல் ஒரு வாரம் ஓடிவிட்டது. தனக்கு தின்பண்டங்களைப் பாதுகாத்துத் தருவதற்காகவே அய்யாவின் இடுப்பில் தொங்கும் பதினிக்கலயம், குச்சலின் மூலையில் மூளியாய்க் கிடந்தது. அந்த ஒரு வாரமும் சாராய வாடை இல்லாத வீடாகியது அவன் வீடு. ஒருவாரம் கழித்துத் திரும்பி வந்து அம்மையிடம் கொஞ்சம் பணம் கொடுத்துவிட்டு பனைத்தொழில் பார்க்கப்போவதாகச் சொல்லிவிட்டு மீண்டும் போனவரைப்பற்றி ஊருக்குள் கதைகள் மட்டும் தான் கிடைத்தது. அவர் ஆளே வரவில்லை. கொஞ்ச நாள் கழித்து போலீஸ் தேடி வந்தது அம்மாவிடம் துருவித்துருவி கேள்விகள் கேட்டது. அதிலிருந்து ஊரும் அவன் சோட்டுப்பிள்ளைகளும் அவனை வித்தியாசமாகப் பார்த்தது. அத்தோடு பள்ளிக்கூடத்துக்கும் அவருக்குமான உறவும் துண்டிக்கப்பாட்டது. அம்மா நாள் முழுக்க வீட்டுக்குள்ளே கிடந்தாள். சாப்பாடு தண்ணி யில்லாமல் வெளிரிப் போயிருந்தாள்.

சாத்தூர் பாக்கம் பந்துவார்பட்டியில் கடைவைத்திருந்த மாமா வந்தார். ஒரு சின்ன ரெங்குப்பெட்டிக்குள் துணிமணிகளையும் ஒரு குட்டிச்சாக்குக்குள் பாத்திர பண்டங்களையும் அடைத்துக்கொண்டு ரெண்டுபேரையும்  கூட்டிக்கொண்டு போனார். பஸ்டாப்புவரை வந்த  ஆறுமுகச்சாமி திரும்ப ஓடிப்போய் அய்யாவின் வெங்கலப்பூன் போட்ட ஊணு கம்பைத் தூக்கி வந்தான். அம்மையும் அதை வாங்கி ஆசையோடு தடவிக்கொடுத்தாள். மாமன் வெறிகொண்டு அனதக்கம்பைப் பிடுங்கித் தூர எறிந்தார். அய்யாவையே தூரத்தூக்கி எறிந்த மாதிரி வலித்தது. அந்த வலியோடு மாமன் சேத்துவிட்ட புளியமரத்துக் கடையில் சரக்கு மடிக்கும் கடைப்பையனாகச் சேர்ந்தார். சலசலக்கிற பனங்காடும், டவுசர் கிழிந்த சேக்காலிகளும், பரந்து கிடந்த வனாந்திரக்காடும், தாய் அடித்த வலியும், தந்தை கொடுத்த பண்டமும் ஒட்டுமொத்தமாய்க் கானாமல் போக, உப்பு புளி சீமைத்தண்ணி வாசத்துக்குள் விடிய விடிய அடைத்துவைக்கப்பட்டார்.

கருப்பையா வாத்தியார் வீட்டுக்கு சாமான் இறக்கி வைக்கப்போகும்போது ஏவீஸ்கூலின் இறைச்சல் தேவகீதமாகக் கேட்கும். ஒண்ணுக்கு ரெண்டுக்கு விடும்போது பிள்ளைக்கூட்டம் சக்கரைச் செட்டியாரிடம் சவ்வு மிட்டாய் வாங்கித்திங்கிற தருணம் பலநாள் கனவில் திரும்பத் திரும்ப வரும். சீனி மடிக்கிற தாளில் இருக்கும் படமும் கதையும் படிக்கிறபோதொரு நாள் பொடதியில் படீரென்று அறைவிழுந்தது.அந்தமாட்டுல அடிச்ச மொதலாளிகைய ஒடிச்சுப்பிட்டு ஓடிப்பிடலாமான்னு ஆத்திரம் பொங்கிய போதே, அதிகமாக நாலு அடி முதுகில் விழ, நெடுநேரம் அழுதுகிடந்தான். அந்த வாரம் வீட்டுக்குப்போய் இனி களையெடுத்தாவது கஞ்சி குடிப்பேன் எனக்கு சரக்குமடிக்கிற உத்தியோகம் வேண்டாமென்று தாயிடம் மன்றாடினான். மாமனிடமும் அடிபட்டதுதான் மிச்சம். அதுக்கு கடக்காரனிடம் அடிவாங்குவது தேவலையென்று திரும்பவும் கடைக்கு வந்தான். அன்று மூக்கநாடார் வஞ்ச வசவு ஏழு தலைமுறைக்குப் போதுமானதாக இருந்தது. கொஞ்ச நஞ்சம் இருந்த ரோசமும் மெல்ல மெல்ல கறைந்து போனதாக உணர்ந்தான். பிறகு கடையே கதியெனக் கிடந்தான்.  கையை ஊனிக் கரணம் பாய்ஞ்சி காலம் தள்ளினார். தனிக்கடை போடுமளவிற்கு வளர்ந்த போது ஒரு பொட்டிக்கடைக்கான சாமானுடன் மகள் தங்கத்தாயையும் கொடுத்தார். பந்துவார் பட்டியில் முன்னதாக ரெண்டு கடைகள் இருந்ததனால் சூரங்குடியில் கடை வைத்து பிள்ளைமார் தெருவில் வீடும் பார்த்து குடியேறி இருவது வருடம் ஓடிப்போனது.

ஆரம்பத்தில் அன்னாடம் சாப்பாட்டுக்கு மிஞ்சுவதே சிரமமா இருந்தது,  குடிச்சும் குடியாமலும் வெறும் வெத்திலையை அதக்கிக்கொண்டு பசியைத் தள்ளிப்போட்டு, தம் கட்டியே பழகிப்போக, ரெண்டே ரெண்டு வருசத்தில் முதலியார் செவக்காட்டை கிரயம் பண்ணும் அளவுக்கு யாவாரம் சூடு பிடித்தது. அந்தக் காலத்தில் தான் அவருக்கு அந்த எளப்பு நோய் கண்டது. சாத்தூர் டவுனாஸ்பத்திரிக்கு போய் வைத்தியம் பார்க்க
நேரமில்லை. கைவைத்தியம் தான். மஞ்சனத்திச் சாறு பிழிஞ்சு குடித்தார். லச்சகெட்டகீரை வதக்கி சாப்பிட்டார். சுக்கு  மிளகு திப்பிலி  கருப்பட்டி போட்டு லேகியம் பண்ணிக்கொடுத்தார் வைத்தியர். அது சாப்பிடும்போது தேவலையாக இருக்கும், பின்னாடி ஒரு வாரத்தில் மறுபடியும் அந்த எளப்பு வந்துவிடும். தோணுகால் வைத்தியர் வந்து காக்காக்கறி சப்பிடச் சொன்னார்.சாம்பாக்கமார் தெருப்பிள்ளைகளிடம் சொல்லி பிடித்து வந்த காக்காயைப் பார்த்து அலறியடித்து பந்துவார் பட்டிக்கு அப்பன் வீட்டுக்கு ஓடிவிட்டார் தங்கத்தாயம்மாள். அதுக்குப்பிறகு வெள்ளச்சியிடம் கொடுத்து மணக்க மணக்க சாறு குடித்தார்.

சாயங்காளம் கலிக்கிண்டி, நடுவிலே குழி மதிச்சி காக்காக்கறி பரிமாறினாள். கையில் ஒட்டிக்கொண்ட கலியில் வெள்ளச்சியின்அன்பு கலந்திருந்ததைக் கண்டுபிடிக்க  வெகுகாலம் பிடிக்கவில்லை. பின்நாட்களில் காக்காய் தேடி பையன்கள் அலையாமல் பள்ளிக்கூடம் போனதால், காக்காய் கிடைப்பது குதிரைக் கொம்பானது. ஈரல் திண்ணாத் தேவலையாகும் என்று வெள்ளச்சி சொன்ன மாத்திரத்தில் ஓங்கரித்து வாந்தியெடுப்பது போல் பாவனை காட்டினார் ஆறுகச்சாமி. அதன்பிறகு ரொம்பநாள் தைப்பு வராமலும் வெள்ளச்சி வராமலும் காலம் நகர்ந்தது. பின்பனிகாலம் ஆரம்பித்த மாசி மாசத்திலொருநாள் கடை திறக்க காலையிலே வந்தவர் இளைப்பு வந்து சரப்பலகையோடு சாய்ந்துகிடந்தார். பக்கத்துவீட்டு மாரியப்பன் பொண்டாட்டி ஓடிவந்து கூச்சப்போட்டு சாம்பாக்கமார் தெருவே கூடியது வெந்நி கொடுத்து கால் கை தேய்த்து விட்டது சனம். அன்று பகல் பொழுதில் கடைக்கு வந்த எல்லோருமே ஆளாளுக்கு வைத்தியம் சொன்னார்கள் அவர்கள் சொன்ன வைத்தியம் வெள்ளச்சி சொன்ன வைத்தியமாக இருந்தது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை ஈரல் மருந்தாகியது. பிறகென்ன வாராவாரம் முதல் கூறு மொதலாளிக்கு என்று சொல்லும் அளவிற்கு கடக்கார ஆறுகச்சாமி மாரிப்போனார். தங்கத்தாயும் இப்போது  ஈரல் சமைக்கிற கைப் பக்குவம் கற்றுக்கொண்டார். இருந்தாலும் வெள்ளச்சி கையில் சுட்டுக்கொண்டு வரும் பொங்குக்கறியில் கிடைக்கிற ருசிக்கு இணையாக ஏதும் இருப்பதாகப் படவில்லை.பிடிக்காத பொம்பளை சிங்கப்பூர் செண்டு போட்டாக்கூட நாத்தமடிக்கும், பிடிச்சுப்போயிட்டா கம்புக்கூட்டு வாசம் கூட ஜவ்வாது வாசமாகும்.

ஆந்திராவுக்கு கல்லுடைக்கப்போன வெள்ளச்சி புருசன் அங்கிருக்கிற தார்ப்பாச்சா கட்டிய தெலுங்குக்காரியைச் சேகரம் சேத்துவச்சிக் கிட்டான் என்று ஊர் பேசியது. அது நெசமோ பொய்யோ தெரியவில்லை ஆனால் போன புருசன்  திரும்ப வரவேயில்லை. அவளும் எத்தனைநாள் மானத்தப் பாத்துக்கிட்டே படுத்துக்கிடப்பாள். ஆறுமுகச்சாமியும் ஒருவாச்ச அரிசிமூடை வெளியே கிடக்கு என்று சொல்லிக் கடையிலே படுத்துக்கொள்வார். அரசல் புரசலாக ரெண்டு முறை ஊர்க் கூட்டத்தில் பிராதாக தனக்கும் ஆறுகச்சாமிக்கும் தொடுப்பில்லை என்று பிள்ளையைப் போட்டுத் தாண்டினாள்.

''இருக்கிற ஆம்பிலைகளையெல்லாம் பொட்டப்பயகன்னு நெனச்சியா''

சொல்லிக்கொண்டே வெள்ளச்சியின் கொழுந்தனொருவன் அவள் தலை மயிர் பிடித்துக் கீழே தள்ளி நாலு மிதி மிதித்தான். ஏ பெரிய கொம்பனக் கெனக்கா பொட்டச்சியெ அடிக்கிறெ, ஊரு விட்டு ஊரு வந்து கை வச்ச கடக்காரனெ உக்கார வச்சிப் பேசிக்கிட்டு என்று கூட்டத்துக்குள்ளிருந்து யாரோ சொன்னதும் ஊர்க்கூட்டம் முடிவில்லாமல் கலையும் அளவுக்கு சளசளப்பானது. மறுநாளிலிருந்து ராத்திரி கடைபூட்டிப்போகும் ஆறுமுகச்சாமியை யாரோ பின்தொடருகிற மாதிரியே இருந்தது. அவரும் தைரியமாகத்தான் அலைந்தார். ஆனாலும் பொங்கல் அன்று எல்லோரும் களத்தில் சாமி பார்த்துக்கொண்டிருக்கையில் தெரு வெறிச்சோடியிருந்தது. தெரு விளக்கை அனைத்துவிட்டு நாலைந்துபேர் ஆறுமுகச்சாமியின் வீட்டில் கல்லெறிந்து ஓடினார்கள். அன்று இரவு ஆறுமுகச்சாமியின் வீடு விளக்கணைக்காமல் முழித்துக்கிடந்தது. மெட்ராசில் கடைப்பையனாக இருந்த மகன் வன்னியராஜ் வந்து   இருந்த நிலங்களை விற்றுக் காசாக்குவதில் மும்முரமாக இருந்தான். அவனுக்கு கடையைக்காலி பண்ணுவதனால் சென்னையில் தனியாக தொழில் பண்ண நிலம் விற்ற காசு உதவியது. ஊர்த் தலைவர் வந்து கண்ணீர் விடாத குறையாக போகவேண்டாமென்று மன்றாடினார், உரில் பாதிச்சனம் வந்து கண்கள் கலங்க ஆறுமுகச்சாமியைப் பார்த்துவிட்டுப் போனார்கள்.

ஒரு சனிக்கிழமை சாயங்காலம் சாத்தூர் போய் ரயிலேறிப்போனது அவரது குடும்பம். கொஞ்ச நாள் சம்பவங்களால் நினைவு கூறப்பட்டதும் நாளடைவில் சுருங்கிப்போனது. சந்தோசம் சண்டை வறுமை களியாட்டம் என மாறி மாறி ஒரு இறுபது வருடம் கடந்து போனது.  செதுக்கி மம்பட்டி சுத்தியல் கொண்டு தன்னை நெருங்கிய வறுமையைச் சமாளித்தாள்.  ஆனால் ஒவ்வொரு இரவையும் ரொம்பக்கடினப்பட்டுக் கடத்திவிட்டாள். இடையி ஒரு முறை ஊருக்கு வந்த வெள்ளச்சி புருசன் மகன்களை மனைவியை விடக் கூரைவீட்டை மட்டும் சுற்றிச்சுற்றி வந்தான் தரகரோடு வந்து விலை பேசியவனை மகன்கள் இருவரும் சேர்ந்து நடுத் தெருவில்போட்டு நாலு மொத்து மொத்தியதோடு ஓடிப்போனவன் ஊர் திரும்பவே இல்லை. இரண்டு பையன்களும் சொந்தமாக உழைக்க ஆரம்பித்துக் கூரை வீட்டை ஓட்டு வீடாக மாற்றினார்கள். நல்ல சாப்பாடும் துணிமணிகளும் மகன்களால் வந்து சேர்ந்தது. இருந்தும் இரவுகளில் நெடுநேரம் முழித்துக் கிடக்கிற தாயைக் காணச்சகிக்காமல் திண்ணையில் படுத்தார்கள்.

முத்து நகர் துரித வண்டியிலிருந்து இறங்கியதும் ஆறுகச்சாமிக்கு, ஜெயிலில் இருந்து வெளிவந்தது போலிருந்தது. சென்னை எக்மோர் ரயில் நிலையத்தைப் போல நிழல் கூரையும், தலைக்குமேல் தொங்குபாலமும் இருந்தது. தெரிந்த முகங்கள் ஏதும் தட்டுப்படவில்லை. தன்னோடு மூக்கநாடார் கடையில் சரக்குப்பையனாக இருந்த மாரிக்கனி தொந்தியைத் தூக்கமுடியாமல் நான்கு பேரோடு நடந்துவந்தார். அவருக்கு ஆறுகச்சாமி அடையாளம் தெரியவில்லை. பலசரக்குக் கடையில் ராத்திரி நேரங்களில் ஆறுகச்சாமி மேல் காலைப்போட்டுக்கொண்டு உறங்கிய நாட்களை எப்படி மறந்து போனான் என்ற நினைத்துக்கொண்டே நின்றார். தூரத்தில் போய் திரும்பிப்பார்த்துவிட்டு மீண்டும் நடைப்பயிற்சியைத் தொடங்கினார் மாரிக்கனி. எப்போது சூரங் குடியை மிதிப்போம் என்னும் குறு குறுப்பு சின்னப்பிள்ளையைப் போலக்  குதியாட்டம் போட்டது.

பேருந்தில் இறங்கி நடந்த போது பத்துப்பதினைந்து பேர் கூடவந்தார்கள்.எல்லாரும் எளவட்டங்களாக பள்ளிக்கூடப்பிள்ளைகளாக இருந்தார்கள். யாரும் அடையாளம் தெரியவில்லை.ஒரு சீருடை அணிந்த பெண்ணிடம் 'எம்மா யாரு மகா நீயி' என்று கேட்டார்.பேரைச்சொன்னதும் தனது யூகம் சரிதானென்று முடிவுசெய்துகொண்டார்.'தாத்தா நீங்க எந்தூரு,யாருவீட்டுக்குபோகனும்'.அவர் எந்த ஊரைச்சொல்லுவார். சென்னையையா,சூரங்குடியையா, இல்லை வேம்பாரையா.

'வெளியூரம்மா'.

முப்பது வருடங்கள் ஓடிப்போயிருந்தது. ஊர் பெரிதாகை இருந்தது. நேரே அவர் வாழ்ந்த அந்த வீட்டுக்குப்போனார். திண்ணையில் ஒரு தையல் மிஷின் இருந்தது. எதிர்த்த தாழ்வாரத்தில் ஒரு டிவீஎஸ் 50 நின்றிருந்தது. அங்குதான் எப்போதும் மூன்று பசுமாடுகள் வாலை ஆட்டிக்கொண்டு நிற்கும்.அவர்வந்தவுடன் கனைக்கும்.மூஸுமூஸு என்று மூச்சு விடும்.கண்ணை மூடிக்கொண்டு அந்த நாட்களை நினைத்துக்கொண்டார்.

அந்த வீட்டில் குடியிருந்த வீஏஓ மனைவி வந்து விசாரித்தாள்.சொன்னதும் அப்படியா என்று சொல்லிவிட்டு உள்ளே போவிட்டாள்.அந்த தெரு முழுக்க வேறு வேறு ஆட்கள் குடிவந்துவிட்டார்கள்.கடைசி வீட்டில் குடியிருந்த
கணேசபிள்ளையின் மனைவி வந்து வீட்டுக்கு கூப்பிட்டுக்கொண்டு போனாள்.ரெண்டு மணி நேரம் முப்பது வருடக்கதைகளைப்பேசித் தீராமல்  எம்மா செத்த அப்படியே ஊருக்குள்ள போய்ட்டு வாரன் என்று சொல்லிவிட்டு நடந்தார்.கடை இருந்த இடம் இடிக்கப்பட்டு வீடாகியிருந்தது. அவர் சோட்டு ஆட்களில் சிலர் வந்து பேசிவிட்டுப்போனார்கள்.வெள்ளச்சிப்பாட்டி வந்தது.வாங்க எப்ப வந்திக என்று கேட்டது.வீட்டுக்கு கூப்பிட்டுக்கொண்டு போனது.கூரை வீடு இப்போது ஓடு வேய்ந்து மின் விசிரியெல்லாம் இருந்தது.மகன்கள் ரெண்டு பேரும் அய்யா வாங்க என்று எழுந்தார்கள்.பக்கத்து வீட்டில் சேர்வாங்கி வந்து உட்கார வைத்தார்கள்.காப்பி கொடுத்தார்கள். குடித்துக்கொண்டே வீட்டை நோட்டம் விட்டார்.ஒரு மூலையில் குத்துப் பலகை கிடந்தது.கருங்காலி மரத்தாலான குத்துப்பலகை. அது அவரது குத்துப்பலகை.

உடம்பு சிலீரென்றது.

9.10.10

அங்கும் இங்கும் பராக்குபார்த்தல்.

லியு க்சியாபூ தியானமென் சதுக்க நிகழ்வுகளுக்காக கைதுசெய்யப்பட்டு பதினோரு வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் சீனக்கவிஞர்.அவருக்கு 2010 ஆம் ஆண்டுக்கான நோபல் விருதை அளிக்க சித்தமாக இருக்கிறது நார்வே நட்டின் நோபல் விருது அமைப்பு.சென்ற முறை இதே விருது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு வழங்கப்பட்டது.

இந்த அறிவிப்புக்கு சீன அரசு கடும் எதிர்ப்பைத்தெரிவித்து இருக்கிறது.க்சியாபூ வின் நெருங்கிய நண்பரான க்சியாயொன் லியாங்,மற்றும் நாவலாசிரியர் டேனி வெய் லியாங் இருவரும் அடிப்படை மனித உரிமைகளின் குரலுக்கான அங்கீகராம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். bbc தொலைகாட்சி நிறுவணத்தின் செய்தியாளர் ராச்சல்
ப்ரௌன் சீன எதிர்ப்பாளர்களைத் தேடித்தேடி கருத்து வெளியிட்டிருக்கிறார். உலக இலக்கிய அரங்கில் எதிரும் புதிருமான விவாதங்களை எழுப்பக் காத்திருக்கும் இந்த செய்தியை நேற்று வெளியிட்டிருக்கிறார் நோபல் அமைப்பின் தலைவர் தோர்ப் ஜொயென் ஜாக்லாண்ட்.

தியானமென் சதுக்கத்தில் பலியிடப்பட்ட உயிர்கள் விலைமதிப்பற்றவை.உலகமெங்கும் வாழும் மனிதர்களின் விடுதலை கோரிக்கை 1000 சதவீதம் நியாயமானது.சிறியதோ பெரியதோ அடக்குமுறை ரத்தவெறி கொண்டது.
எனினும் நடப்பை ஒப்பு நோக்குவது இப்போது தேவையாக இருக்கிறது.சுமார் 100 மேற்பட்ட படையெடுப்புளில் தனது ராணுவ பூட்சுக் கால்களால் அப்பாவி உயிர்களை நசுக்கியது.வெடிச் சத்தத்தாலும்,கருமருந்துப்புகையினாலும் மானுட அமைதியின் வாசம் சிதைந்து போனது. அந்த உலக ரவுடி அமெரிக்காவின் சுவடுகள் முழுக்க ரத்தத்தால் ஆனது. அதன் வழி நெடுகிலும் சிதறிக்கிடக்கும் எலும்புக்கூடுகளுக்கும், மீந்து வாழும் உயிர்கள் ஒவ்வொன்றும் இந்த நேரத்தில் கவனத்துக்கு வந்துபோகிறது.

0

ஊதித்தின்னும் விளையாட்டு

மீட்டுபவனின் லயிப்பிற்கேற்ப
இசைமுழக்கும் பறையொப்ப
தன்னுடல் கொழித்து முப்போகமீந்த
நிலமழித்து உமியை விதைத்தவர்கள்
சுருட்டிப்போகிறார்கள் தவசதானியங்களை.

நீரோவின் கதையை நினைவுகள் கிளர்த்தி
தொழிற்பூங்காவின் தந்தையென
பட்டமேற்கிறார் மன்னர்
அந்தப்பொட்டல் வெளி நின்று

ந.பெரியசாமி _புதுவிசை செப் 10


இன்னும் ஐந்து வருடங்களில் இந்திய தொழிலதிபர்களின் சொத்து மதிப்பு இரு மடங்காகக் கூடிவிடும் சாத்தியம் இருக்கிறது என்று உலக புள்ளி விபரம் கருத்து தெரிவித்திருக்கிறது.தற்போதைய மதிப்பான 3.5  ட்ரில்லியல் டாலரிலிருந்து 6.4 ட்ரில்லியனாக உயர்ந்துவிடுமாம்.

முன்னதாக நடிகர்கள் அரசியலுக்கு வருவது,கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் அரசியலுக்கு வருவது,விளம்பர நடிகர்கள் சினிமாவுக்கு வருவது,சினிமாக்காரர்கள் கிரிக்கெட் வீரர்களை விலைக்கு வாங்குவது போன்ற பண்டமாற்று முறைகள் நடந்துகொண்டிருந்ததல்லவா ?. இப்போது அதன் தொடர்கண்டுபிடிப்பாக கிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சின்
சினிமாவில் நடிக்க தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறாராம்.

0
சடுதியில் கடக்க முடியாத வலிமிகுந்த கவிதை ஒன்று

இடம் பெயர் முகாமிலிருந்து.

அந்தகாரத்தில் மூழ்கிப்போன
சாபமிட்ட இரவொன்றில்
நெற்றிப்பொட்டை எடுத்து
நிலத்தில் போட்டு மிதித்தேன்
...
...
...
...
முகாமின் முள்வேலியில்
விஷக்கள்ளிகள் மலரட்டும்
தந்தை பெயரறியாமல்
பிறக்கும் பிள்ளைகளுக்கு
முள்ளின் விஷம் உணர்த்தட்டும்.

சுபாஷ் திக்வெல்ல_ காலச்சுவடு.

8.10.10

எழுத்தின் கருப்பு வெள்ளைப் புகைப்படம்.

எண்பதுகளில் ஆரம்பித்த புதிய சினிமாக்கள்,புதிய எழுத்துக்கள், புதுக் கவிதைகள் என அங்காங்கே ஒரு இலக்கியப்பூக்களின் வாசம் நிறைந்த காடுபோல அந்தக்காலம் விசித்திரமானது. அப்போதுதான் தமிழகமெங்கும் தமுஎச வின் கலை இலக்கிய இரவுகள் மக்களின் மத்தியில் ஒரு இரவு நேரச்சலசலப்பை  உண்டு பண்ணிக் கொண்டிருந்தது.அப்போது தான் இந்த சன் குழுமத்தின் தொலைகாட்சி நட்ட நடு வீடுகளில் குப்பையும் அள்ளிக்கொட்ட ஆரம்பித்தது. அப்போதுதான் சத்தூர் தமுஎச நண்பர்களின் இலக்கியக் கனவால் விழுது என்கிற ஒரு பத்திரிகை வெளிவந்தது.தோழர் மாதவராஜ்,தோழர் ச.வெங்கடாசலம்,வீ.திருப்பதி,இன்னும் பல தோழர்களின் உழைப்போடு நடைபெற்றது அந்தப்பத்திரிகை.

சுமார் ஆறு அல்லது ஏழு இதழ்கள் மட்டுமே கொண்டுவரமுடிந்தது.டிரெடில் மெசின்,கையெழுத்து மூலம் படைப்புகள்,முழுக்கமுழுக்க தபால் மூலமான தகவல் பரிமாற்றம்,மூன்று ரூபாய் நண்கொடை,25 ரூபாய்க்கு விளம்பரம். இப்படி ஒரு பிரம்மிக்கும்படியான உள்கட்டமைப்பில் ஒரு இலக்கிய இதழ் கொண்டுவரமுடிந்த காலம் அது.ரொம்ப காலமில்லை வெறும் பதினைந்து வருடங்களுக்கு முன்னாடிதான். இதழ் தயாரிப்பில் 99 சதவீத  வேலை களையும் இழுத்துப் போட்டுக்கொண்டு ஆசிரியர் தோழர் மாதவராஜே பார்த்தார்.

கரிசல் மண்ணின் முன்னத்தி ஏர் ஐயா கிராவின் காயிதங்கள்,எங்கள் ஆசான் எஸ்.ஏ.பி.யின் கட்டுரைகள்எழுத்தறிவு இயக்கத்தின் பிரபலம் எழுத்தாளர் ச.மாடசாமியின் சொலவடைகள்,தோழர்கள் ச.தமிழ்செல்வன், ச.வெங்கடாசலம் ஆகியோரின் பங்களிப்பில் எழுத்தறிவு இயக்க மாணவர்களுடைய வாய்மொழிப் படைப்புகள் ஆகிய புதிய பதிவுகளை அறிமுகம் செய்தது விழுது இதழ்கள். அத்தோடு 'களத்து மேடு' என்னும் பகுதியும். அதில் தோழர் மாதவராஜோடு இணைந்து சமூக அரசியல் சினிமா குறித்த பத்திகளில் நானும்  அணில் பங்கு செய்தேன்.

அந்த இதழ்களில் ஒன்று புத்தகங்களுக்கு இடையில் கிடந்தது. எடுத்துப்புரட்டினால் ஒரு வாலிபக் குறுகுறுப்பும்,ஆர்வமும் புத்தகம் முழுக்க நிறைந்து கிடக்கிறது.ஒரு பழைய்ய போட்டோ வை எடுத்துவைத்துக் கொண்டவுடன் பின்னோடும் நினைவுகள் போன்றதிந்த புத்தகம். அப்போதைய பிரபல திரைப்படம் ஒன்றைப்பற்றி நாங்கள் கூட்டாய்ப் பேசிய பொறணி இது.

 0
'' கிட்டத்தட்ட எல்லோருமே பாரட்டி விட்டார்கள்.அதனாலேயே படம் பார்க்கவேண்டியதாயிற்று.தியேட்டருக்குள் இருட்டில் சீட் தேடி உட்கார்ந்தபோது'ஒரு பாட்டு போயிருச்சி' என்றார் ஒருவர்.'பரவால்லண்ணே என் இனிய தமிழ் மக்களேயும் போயிருச்சி' என்றார் இன்னொருவர்.சிரித்தார்கள்.

அண்ணன் தங்கை பாசம்...,தங்கை கல்யாணம்..,சம்பந்தகாரர் சண்டை...,பாசத்திற்கு வருகிற சோதனை,தாய்மார்களின் பெருமைகள், தங்கையின் மகளும் அண்ணனின் மகளும் காதலித்தல்,சம்பந்த காரர்களுக்காக  அவரவர் ஊர்க்காரர்கள் வெட்டிக்கொண்டு மோதல் கடைசியில் தங்கை, அண்ணன் மடியில் தாலியறுத்துக்கொண்டு உயிர் விடல்.பாரதிராஜா சொல்லும் நீதிவரிகள்.

கிழக்குச்சீமையிலே படம்.

சேவல் சண்டையிலிருந்து நெப்போலியனுக்குள் குரோதம் வளர்கிற காட்சி அப்படியொரு நேர்த்தியாக காட்டப்பட்டிருக்கிறது.அவமானம்,வீம்பு,பழிவாங்கும் உணர்ச்சியெல்லாம் கலவையாக முகத்தில் காட்டியிருக்கிறார்.அப்போது ராதிகாவோடு சேர்ந்து நாமும் பதைபதைத்துப் போகிறோம்.ஆனால் அவர்களின் சண்டைக்காக இரண்டு ஊர் படிப்படியாக திரண்டு எழுந்து ஒரு சின்னக்குசுச்சேத்திரப்போர் நிகழ்த்துவது எதார்த்தமல்ல.சிவனாண்டிக்கும் மாயண்டிக்கும் அந்த ஊர்க்காரர்கள் வேண்டுமானால் பகடைக்காயாக இருக்கலாம்.பாராதிராஜாவுக்கு இருந்திருக்கக்கூடாது.அண்ணன் தங்கை பாசம் உணர்த்த இனிய தமிழ்மக்களின் உயிர்தானா கிடைத்தது ?.

படைப்பாளி என்பவன் பாத்திரங்களை அதனதன் இயல்பான குணாம்சத்தோடு சித்தரிக்க வேண்டும்.ஒரு பாத்திரம் சிறப்பாக அமைவதற்கு மற்ற பாத்திரங்களை மட்டமாக்குவதோ படைப்பையே அறைகுறையாக்கி விடும். இந்தப்படத்தில் அது மாதிரி நிறய்ய டந்திருக்கிறது.நெப்பொலியன் சொந்த மகள் மேல் கூட பிரியமில்லாதிருப்பது எந்த வகைல் சேர்த்தி.அடுத்தது பாண்டியன் கேரக்டர்.படத்தின் மிக அற்புதமான பாத்திரம்.தமிழ்படவுலகில் இன்னும் தொடாத விஷயம்.காதலித்து மணந்த தன் அப்பாவுக்கும்,அம்மாவுக்கும் சமூகம் தராத அந்தஸ்தை எப்படியவது பெறனும் என்கிற வெறி கொண்ட மனிதன்னவனை கண்டமேனிக்கு குடிக்கவைத்து,ஜாலியாக பெண்களோடு புரளவைத்து காலில்போட்டு நசுக்கியே விட்டார்.இவை யவும் ராதிகாவின் பாத்திரத்தை உன்னதமாக உயர்த்த அவர் செய்த கோல்மால்.

மென்னக்கெட்டு கருவேல முள்ளை கதாநாயகி உடம்பில் குத்த வைத்து கதாநாயகனை எடுக்க வைத்து காதல் எரிச்சலைத்தான் தருகிறது.வடிவேலுவும் பரிசக்காரியும் பேசுவதும் குழைவதும் வாந்திவரச்செய்கிறது. AR.ரகுமான் கிராமத்து பின்னணியில் இசையமைக்க முயற்சி செய்திருக்கிறார். காதலித்த குற்றத்துக்காக தூக்கில் நெப்பொலியனின்.. இல்லை இல்லை எங்கள் கால்களே படம் முடிந்த பின்னும் நினைவில் உறுத்திக்கொண்டு இருக்கிறது.

அந்தக் கிழவிகளும்,அப்படியே அள்ளணும் போல இருக்கும் வத்தலக்குண்டு செம்மண்ணும்,இலையில்லாமல் நிக்கிற கருவேல மரங்களும்,சாணியும் சகதியுமான மாட்டுக்கொட்டடி,இடிந்சுவர்களோடு நிஜக்கிராமம் இவைகளே இப்படத்தின் நம்பிக்கையளிக்கக் கூடியவை.நல்ல தளம் ,நல்ல களம்,விஷயம் சொல்ல நிறைய்ய  இடம் எல்லாம் இருந்தும் ஒரு அருமையான சந்தர்ப்பத்தைக் கோட்டை விட்டிருக்கிறார்.''

4.10.10

விலகாத இருள்.

அனுகுண்டை வெடிக்கலாம்
வின்கலத்தை ஏவலாம்
நாற்கர சாலையமைக்கலாம்
ரக ரகமாக நூடுல்ஸ் சமைக்கலாம்
கணினி இறக்குமதி செய்யலாம்
வல்லுநர்களை ஏற்றுமதி செய்யலாம்
வல்லரசுக் கனவுகூட   நனவாகலாம்
இந்தியாஒளிர்கிறதென்று ஒலிபரப்பலாம்.


எனினும்....

அந்திக்கருக்கலில்,முந்திக்காலையில்
நடைபாதைகளில் நுழைகையில்
வாகன வெளிச்சம் கூச
பதறி எழுந்து தலைகுனியும்
கிராமத்து சகோதரிகளோடு
இன்னும் இருண்டேகிடக்கிறது
என் தேசத்தின் முகம்.

2.10.10

குழந்தையாக்குபவள்.

பதினைந்தாம் தேதி மின்சாரக் கட்டணம் செலுத்துகிற கூட்டம் போல எந்த நாளும் அமலி துமளிப்படும் வங்கிக்கிளை. சமாளிக்க ஒரே ஒரு பெண் ஊழியர் மட்டும் அல்லாடுகிற இடம். வருகிற ஐம்பது பேரும் ஒரே நேரத்தில் பணம் செலுத்தி அல்லது வாங்கி வெளியேறுகிற அவசரம் இருக்கும்.அதன் பொருட்டு பல வாய்த்தகராறு வரும்.சிப்பந்திகளோடு யாரும் சண்டையிட்டால் மேலாளராகப்பட்டவர் ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்.அதே நேரம் மேலாளரை யாரும் குத்தம் சொன்னால் 'நீங்கள்ளாம் இருந்து என்ன பிரயோசனம்' என்று செய்த வேலையைப் பாராட்டாமல் செய்யாத சின்ன சின்ன விடுதல்களுக்காக குய்யோமுறைய்யோ என்று கத்துவார். அதுக்குத்தான் சம்பளம் அளப்பதாக அசையாத நம்பிக்கை அவருக்குண்டு.

வேலை நெருக்கடி.வாடிக்கையாளர் நச்சரிப்பு எல்லாவற்றையும் இலகுவாக்கிக்கொள்ள முடியும்.அதற்கு பல உபாயங்கள் உண்டு. கோபப்படாத பதில்.சின்ன சின்ன விசாரிப்புகள்.நாங்களும் உங்க வீட்டு ஆட்கள் தான் என்கிற உரிமையை நீட்டுவது பல நேரம் பலனளிக்கும்.அல்லது தேவதை சூரியா வந்ததுபோல யாரவது பிரசன்னமானால் இறுக்கம் தளர்ந்து சிரிப்பு மேளமடிக்கும்.ஆனால் உடனிருந்து கொள்ளும் டேமேஜர்களைத்தான் சமாளிப்பது கஷ்டம்.

சூரியா. முதலில் வரும்போது எனக்கு விசித்திரமாக இருந்தது.குற்றாலத்திலிருந்து பூச்செடிகள் கொண்டுவருவார்கள்அதில் ஒரு சாண் உயரமுள்ள ரோஜாச்செடியில் அழகான பட்டுரோஜாப்பூ பூத்திருக்கும் இல்லையா.? அதைப்பார்த்த உணர்விருந்தது சூரியாவைப்பார்க்க. மூன்றரை அடியிலிருந்து நாலடிக்குள் தான் உயரம் இருப்பாள்.ஐந்து படிக்கிற சிறுமியின் உயரம்.ஆனால் ஒரு இருபது வயது குமரியின் அடையாளங்கள்.ஒரு அரை மினியேச்சர் மாதிரி.சேமிப்புக் கணக்கு ஒன்று ஆரம்பிக்கவேண்டு மென்றாள். வயதென்ன வெனக்கேட்டேன்.

'ஆ...ங் எனக்கு இருபது வயசு.சின்னபிள்ளண்னு நெனச்சீங்களா?'

ரைம் சொல்லுகிற மாதிரியே இருந்தது.
'கணக்கு எதுக்கு'


'செக்கு வரும் அத மாத்தனுமில்ல,நா கோயம்முத்தூர் பக்கம் மில்லுல வேல பாத்தேன். சுமங்கலித்திட்டத்துல.
எல்லாம் பிடிச்சது போக 27 ஆயிரம் ரூபா வரும்'.
'27 ஆயிராமா அத வச்சு என்னசெய்வே'
'ஒங்களுக்கு சுமங்கலித்திட்டமுன்னா என்னான்னே தெரியாதா,அந்த பணத்த வச்சி நகை எடுக்கணும்,அவெ வந்து பத்துப் போடு இருபது போடுன்னு கேப்பாண்ல'
'யாரு ஒங்க தம்பியா'
'சார் கேலி பண்ணாதிக. புருஷங்காரன்'
இப்படி அவள் சொன்னதும் கிளை முழுக்க சிரித்தது. சிடுசிடு சிங்காரம் மேனேஜரும் அவரோடு மல்லுக்கட்டிய கடா மீசைப்பார்ட்டியும் கூட.
யாரும் நகரவில்லை யாரும் அவசரப்படுத்தவும் இல்லை.ரேசன் கார்டு,அடையாள அட்டைகளின் நகலெடுக்கப்போன அவளது சித்தி ஓடிவந்தார்.

'என்ன....இங்கெயும் வந்து வில்லடி வச்சுட்டயா'.

சித்தியும் கூட அதே மாதிரி,தில்லானா மோகனாம்பாள் மனோரமா மாதிரி இழுத்து இழுத்து பேசினார்.

'சும்மா கெட நா பேசுனா மில்லில மேனேஜரு,சூப்பர்வைசர் எல்லாரும் கூட்டமாவந்து கேட்டு ரசிப்பாங்க தெரியுமா'

என்று சொன்னாள்.தொடர்ந்து

'சார் இது எங்கம்மா இல்ல சித்தி,அம்ம கூடப்பொறந்தது,சத்துணவுல ஆயா வேல பாக்காங்க'
'சாப்பாடு போட்ற ஆயா இப்படி வந்துட்டா பிள்ளைக பசியல துடிக்காதா,
'சா...ர் பண்ணெண்டு மணிக்கே போட்டாச்சு தெரியும்..மா'
'ஆமா என்ன கொழம்பு'
'சாம்பாரு'
'கூட்டு'
'முட்டை'
'கலைஞர் முட்டயா  செரி ஒரு நாளைக்கு பத்து முட்ட கெடைக்குமா ஒங்களுக்கு'
'சத்துணவு டீச்சர்,எட்மாஸ்டர் எடுத்துக்கிட்டு மிச்சந்தா தருவாக,எங்களுக்கு அஞ்சி'
அதுக்குள்ள அவளது சித்தி இடைமறித்து
' லூசு லூசு இதெல்லாம் யாருசொல்லச்சொன்னா' 
 அதட்டினாள்

'ஒங்களுக்கு வேணுமா '
'அஞ்சு முட்ட ஒங்களுக்கே காணாதே'
'ஐயய்யோ ஒங்களுக்கு தெரியாதா நாங்க சைவப்பிள்ள சாப்பிட மாட்டோ ம்,ஆனா நாஞ்சாப்பிடுவே'
'இவ்ளோ வெவரமான பொண்ணு படிச்சிருக்கலாமில்ல தாயி'
 என்றேன்.

'சார் நா ப்ளஸ்டூ படிச்சே,
'அப்றம்'
'ஸ்கூல் ஆரம்பிச்சதுமே நிப்பாட்டிட்டு கோயமுத்தூர் போயிட்டேன்'
'எதுக்கு'
'அப்பா செத்துப் போச்சில்ல ஒங்களுக்குத்தெரியாதா'

என்று அதே தொணியில் சிரிப்புமாறாமல் சொன்னாள்.
கிளை மொத்தமும் உறைந்து போனது.அதற்குப்பிறகு அவள் ஏதேதொ சொல்லிக்கொண்டே இருந்தாள். யாரும் சிரிக்கவில்லை.அடுத்த முறை வரும்போது நேராக கேஷ் கவுண்டருக்கு போய் எட்டிப்பார்த்து விட்டு சோர்ந்து போய் வந்தாள்.என்னைத் தேடியிருக்க வெண்டும். அப்புறம் வெளியே இருந்ததைக்கண்டு பிடித்து


'இந்தார்க்காருல்ல'

என்றாள்.சம்பள நாளை விடச்சந்தோஷமாக இருந்தது.

யாரும் கடந்துபோகும் பசிய கானகம்.

தேன்மொழி கடாப்பெட்டியை எடுத்துக்கக்கத்தில் வைத்த போது கண்ணீர் முட்டிகொண்டு வந்தது."என்ன இழியிற,ஒன்னியென்ன மொட்டக்கெனத்துலயா தள்ளிவிட்டாக இப்பிடி இழிய்யிற"ஞானம்மா சொன்னதும் அய்யாவைப்பார்த்தாள்.அவர் கவுட்டுக்குள் தலையை வைத்துக்கொண்டு மூலையில் உட்கார்ந்திருந்தார்.அங்கிருந்து தலையை வெளியில் எடுத்துவைத்து அவள் கண்ணைப்பார்த்தார்.மள மளவெனக் கண்ணீர் உடைந்தோடியது.
"ஏ இங்கெ பாருடி,நெறகம்மாய்லருந்து கசிஞ்சமாரியில்ல உருக்குறா, தகப்பனும் மகளும்  ஒப்பாரி வைக்க இங்கென்ன மயானகண்டமா நடக்கு" .

விடிஞ்சா அறிவியல் பரீட்சை ஒரு நாள் உட்கார்ந்து படித்தால் கூட நாற்பது மதிப்பெண்ணாவது தேறாது.இல்லையென்றால் உட்கார்ந்து அடிஸ்கேலிலும்,உள்ளங்கையிலும் நுனுக்கி நுனுக்கி எழுதி வைக்கவேண்டும். அதுக்கு கூட நேரமில்லாமல் காட்டுக்குப்போ காட்டுக்குப்போ என்று காலையிலிருந்து ஒரே சண்டை.கடலை எடுக்கிற வரைக்கும் சாயங்காலமும் காலையிலும் அந்த செவக்காட்டுக்குள்ளே தான் கிடந்தாள். உடுத்தியிருக்கும் பச்சைக்கலர் பாவடை தாவணி அல்லது சுடிதார் அவளை வெளியே தெரியாபடி செடி கொடிகளோடு அலையும் வெட்டுக்கிளிகள் போலாக்கியது.கடலையும் எடுத்தாகிவிட்டது அது  களத்தில் காய்கிறது. இப்போ அந்த தட்டாஞ்செடி வேற வந்து படிப்புக்கு குறுக்குச்சால் போடுது. நெத்தெடுக்கப்போகனுமாம்.அய்யாவை நம்பிப்பலனில்லை.அவருக்கு இந்த ஊரில் புடிச்சது தெரிஞ்சது ரெண்டே ரெண்டு இடம். ஒண்ணு டாஸ்மாக் கடை இன்னொண்ணு சீட்டாட்ட மடம்.அத விட்டால் அம்மாவிடம் வசவு வாங்கியபடி இப்படிக் கவுட்டுக்குள் தலையை விட்டுக்கொண்டுதான் உட்கார்ந்திருப்பார்.

சதாகாலமும் அம்மாவிடமும் வசவும் சமயத்தில் அடிகூட வாங்கிக்கொண்டு இந்த மனுஷன் எப்படிக்காலம் தள்ளுகிறார் எனும் யோசனை அவளுக்கு வரும்.அதைவிட இன்னொரு சந்தேகம் பார்க்கிற நேரமெலாம் எலியும் பூனையுமாய் காட்சி கொடுக்கிற இவர்களுக்கு எப்படி ஏழுபிள்ளைகள் பிறந்தது.ஊரைப்போலவே அவளும் அவ்வப்போது மண்டயைக் கசக்கிக்கொள்வாள்.ஒரு பம்பு செட் தோட்டம் பத்து ஏக்கர் செவக்காடு எல்லாம் கண்ணெதிரே கரைந்து போய்க்கொண்டிருந்தது. அதன்பிறகுதான் அம்மா சுதாரித்துக்கொண்டு விவசாயத்தை கையிலெடுத்தாள்.அவளது நேரம் முதல் மூன்றும் பொட்டப்பிளைகள். இல்லையானால் எவனாது ஒருத்தனை படிப்பை நிறுத்தச்சொல்லி விவசாயம் பார்த்திருப்பாள்.இல்லை ஊர் வழக்கப்படி எட்டாம் வகுப்போடு நிறுத்திவிட்டு சென்னையில் கடைப்பையன் வேலைக்கு அனுப்பியிருப்பாள்.

தேன்மொழியின் படிப்புக்கும் எட்டாம் வகுப்பில் ஒரு சின்ன நில நடுக்கம்  வந்தது.அழுது கூச்சல் போட்டு காரியத்தைச் சாதித்து விட்டாள்.இந்த நினைப்போடு ஸ்ரீரெங்கபுரம் தாண்டி வந்தாள்.இப்போது பார்க்கிற இடமெல்லாம் பசேலென்று காடு விரிந்துகிடந்தது.நடந்துபோனாக்க குறுக்கால ஓடை வரும். அதுக்குப்பேரு வகுத்தோடை. உள்ளே ஆள் நடந்துபோனால் யருக்கும் தெரியாது.கூட்டமாக வந்தால் அழகாகத்தெரியும் தனியே வந்தால் பயமுறுத்தும் ஓடை.ரெண்டு பக்கமும் மொச்சி செடியும்,காட்டாமணக்கு செடியும் அடர்ந்து கிடக்கும்.அதுதான் ஆண்களுக்கான பொதுக்கழிப்பறை. தாண்டி கொஞ்ச தூரம் நடந்தால் பெரியப்பாவுடைய பம்புசெட்.பேச்சு வார்த்தை கிடையாது.தேன்மொழியிடம் மட்டும் பெரியப்பா, அண்ணன்மாரெல்லம் பேசிக்கொள்வார்கள்.அங்கே குளிக்கப்போனால் தோட்டக்காரர் வள்ளிமுத்து மிளகாய்செடிக்கு தண்ணி பாய்ச்சி முடிந்த பின்னாலும் கூட பம்புசெட்டை ஓடவிடுவார்.திரும்பிப்பார்த்தாள் யாரும் இல்லை.

இதோவந்துவிட்டது,குச்சல். காஞ்ச கடலைச்செடிகளையும்,மூன்று வேலிக்கம்புகளையும் வைத்து உருவாக்கிய தற்காலிக வீடு.காட்டு வீடு.அங்கு உட்கார்ந்து தான் பாடப்புத்தகம் படிப்பாள். மாடுகள்வரும் எழுந்துபோய் 
'ஏய் யாரு மாடு' என்று சத்தம்போடுவாள்.திரும்பவந்து உட்கார்ந்து தட்டாங்கல் ஆடுவாள்.அப்புறம் கண்னை மூடிக்கொண்டு அந்த குச்சல் வீட்டை வசந்தமண்டபமாக்கி கனவுகாñபாள்.சினிமாப்பட்டை முனகிக்கொள்வாள் அப்போதெல்லாம் மங்களான முகம் ஒன்று வந்துபோகும்.கடக்கரைச்சாமியின் முகம். அவன் இவளை எறெடுத்துப் பார்க்கமாட்டான்.அவனெப்போதும் பெரிய தீப்பெட்டியாபிஸ் வீட்டு மல்லிகாவையே பார்த்துக் கொண்டிருப்பான்.தூத்துக்குடியிலிருக்கும் மாமன் மகன் வசந்தக்கனியின் முகம் கூட சிலநேரம் வந்துபோகும்.

குச்சல் பக்கத்தில் வந்து பொத்தென்று கடாப்பெட்டியைப் போட்டு விட்டு பிஞ்சை கோடியில் இருக்கும் வரப்புக்கு போனாள்.சாரப்பாம்பு ஒன்று பதறியடித்து ஓடியது.வெலவெலத்துப்போய் கத்தினாள் அவள் குரலே அவளுக்கு அன்னியமாகத்தெரிந்தது.கண் முழித்துப் பார்க்கும்போது குச்சலுக்குள் படுத்திருந்தாள்.பக்கத்து ஊர் சிங்கராயர் நின்று கொண்டிருந்தான்.அதிலிருந்து அந்தக்காடு,பயந்த வகுத்தோடை, அங்கு முளைத்துக் கிடக்கும்முள்செடிகூட அழகாய்த்தெரிந்தது.ஊரில் 'ஆம்பளகெனக்கா என்னமா பண்டுவம் பாக்கா' என்றுபேசிக்கொண்டார்கள். 
கட்டாந் தரிசானப்பிறகும் கூட அங்கேபோக எதாவதொரு காரணம் வைத்துக்கொண்டாள். 'என்னடி வீடு தங்க மாட்டேங்கிற,காலுத்தரையில பாவ மாட்டங்குது' என்று கண்களை இடுக்கிக்கொண்டு அம்மா அடிக்கடி கேட்கிறாள்.அவளும் கூட  ஆட்டுக்கு கொலை ஒடிக்கப்போறேன் என்று தோட்டத்துக்கு அடிக்கடி வந்தவள் தானே.இதுபோல எத்தனை பார்த்திருக்கிறது அந்தக்காடு ?.