17.10.10

சீனச் சிறைகளும் பான்பராக் எச்சில் விடுதலைகளும்

இந்த வார 20.10.2010 ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை வந்திருக்கிறது.'சீனாவின் அமைதியைக்கெடுத்த அமைதிப்பரிசு'.திரு ஆரோக்கியவேல் எழுதியிருக்கிறார்.சீனக்கவிஞரும் தியானமென் எழுச்சியின் தலைவர்களில் ஒருவருமான கவிஞர் 'லியூ சியோபோ'வுக்கு கிடைத்த நோபல் விருதைப்பற்றியதான கட்டுரை அது.இந்தக்கால எழுத்துக்கள் தனித்து நிற்கின்றன.நோபல் விருது கிடைத்தது தெரியாமல் சிறக்குள்ளிருக்கும் லியூ வுக்கு அவரது மனைவி மூலம்,தகவல் சொல்லப்பட்டதாகவும்.தகவல் சொல்லப்போன மனைவி என்ன ஆனாள் என்று தெரியாமல் போனதாகவும் எழுதிக்கொண்டே வந்து 'உலகின் மிகப்பெரிய  சிறைக்குப்பெயர்தான் சீனாவோ' என்று முடிக்கிறார். நல்லா இருக்குல்ல ?. இந்த முடிவின் வார்த்தைகள் ஒரு கவிதைபோல வந்து விழுந்திருக்கிறது.அருமை ஆரோக்கியவேல்.

0

ஒரு நாடு அதன் மக்களுக்கு எதுவாக இருக்கவேண்டும்.சீனா உண்மையிலேயே சிறையா இந்தக்கேள்விகள் ஊடகங்களின் வழியாக நம்மை வந்து சற்று ஆட்டிவிட்டுப்போகிறது.இது ஒன்றும் புதியதல்ல.உள்ளூர் அரசியல் வாதிகள் தகரம் கண்டுபிடிப்பதற்குமுன்னமே உண்டியல் கண்டுபிடித்தவர்கள் என்று வசைபாடுவதும் அமெரிக்கா தனது இலக்கியங்கள் அணைத்தையும் பொதுவுடமைக்கு எதிராகாக்கூர்தீட்டி விடுவதும் புதிதல்ல.தனது காமிக்ஸ் கதைகள்தொடங்கி உலகு புகழ் ரா ரா ரஸ்புதீன் பாடல்கள் வரை ரஷ்யாவை எதிரியாக்கியிருக்கும் அமெரிக்கா.அதன் சாகச கதநாயகர்களான ஜேம்ஸ்பாண்டுகள் ஒத்தை ஆளாய் சீனாவுக்குள்,ரஷ்யாவுக்குள்,தென்கொரியாவுக்குள்,க்யூபாவுக்குள் புகுந்து அதகளப்படுத்தி ஜெயித்துவிட்டு கடல்வழியே நாயகியோடு சல்லாப பயணம் மேற்கொள்வார்கள்.

அவர்களது ஜனங்களை சிந்திக்கவிடாமல் செய்ய அங்கே அதுதான் மேம்படுத்தப்பட்டபோதை. நமக்குத்தான் நாட்டுப்போதைகள் அதிகம் கிடைக்கிறது. அவை யாவன என்று கேட்கறீர்களா?. ஒண்ணா ரெண்டா சொல்லுவதற்கு. சின்ன வயசில் கம்யூனிசம் என்றால் இருக்கிறவர்களிடம் வழிப்பறி செய்வது என்று சொன்ன உள்ளூர் காங்கிரஸ் தாத்தா முத்தையாவின் அறியாமைதான்  எனக்கான அறிமுகம்.என்னைப்போல 90 சதமான இந்தியர்களுக்கும் அடித்தட்டு ஜனக்களுக்கான அறிமுகம் அதுவாகத்தான் இன்னும் இருக்கும். அதுபோலத்தான் சீனாவும் ஒத்தைக்கண்ணன் அறிமுகம். இந்திய சீன எல்லைப்போரின் போது

'ஐ சக்க ஐ அரைப்படி நெய்;
சீனாக்காரன் தலையில
தீயப்பொருத்தி வை'

என்கிற தேசபக்தி ரைம் மூலம் சீனா அறிமுகமானது.பக்கத்து தெருக்காரனிடம் சண்டையென்றால் சொந்தத்
தெருக்கார ஈ, காக்கா, குஞ்சுகளும் எதிரிப்பட்டை பூசியே தீரவேண்டும்.இப்படியான சின்ன ஆனால் மிகப்பெரிய உளவியல் பாதிப்போடு தான் எல்லோரும் இயங்கவும் வேண்டும் இல்லையா ?.சமீபத்தில் சீனா பற்றிய தேடலில் கூகுலுக்கும் சீனாவுக்கும் ஏற்கனவே வாய்க்காத் தகறாராகிப்போனது தெரியவந்தது. அங்கே இருக்கிற பைடு டாட்காம் கூகுலுக்கு வியாபார எதிரியாகிப்போனதால் விக்கிப்பீடியாவில் சீனா பற்றிய தகவல் இல்லை. அதானாலாயே அது இரும்புத்திரை நாடு என்று சொல்லிவிடலாமா?.

ஒரு சராசரி சீனக்குடிமகனுக்கும்,பணக்கார சீனக்குடிமகனுக்கும் உள்ள வருமான இடைவெளி 362 டாலரிலிருந்து,1142 டாலர் என்று சொல்லுகிறது பிரிட்டிஷ் பத்திரிகை.அதுதான் மலைக்கும் மடுவுக்குமான இடைவெளியென்றும் சொல்லுகிறது. இதை ஒருநாளைக்கு நாப்பது ரூபாய் கூட கூலிகிடைக்காமல் திண்டாடும் என் 20 சதமான இந்தியர்களிடம் நான் எப்படி விளக்கிச் சொல்லமுடியும். 1979 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 'ஒரு குடும்பம் ஒரு குழந்தை' திட்டத்தால் 250 கோடி ஜனத்தொகை கட்டுப்படுத்தப்பட்டதாக அதுவே சொல்லுகிறது.நிலப்பரப்பிலும் மக்கட்தொகையிலும் நமக்கு நிகரான சீனாவின் தனிநபர் வருமாணம்,தனிநபர் சுகாதாரம் எல்லாம் திருப்தியளிக்கக்கூடிய அளவில் இருக்கிறது என்பதை யாரும் சொல்லுவதில்லை.  clean energy என்று சொல்லப்படுகிற இயற்கை எரிசக்தியை உபயோகிப்பதில் உலக நடுகளில் முதலிடத்தில்  சீனா நிற்கிறது என வாஷிங்டன் போஸ்ட் இதழ் சொல்லுகிறது.கட்டிடம்,காகிதம்,தீக்குச்சி போன்ற தளவாடங்களுக்கு மரத்தை வெட்டுவதில்லை என்கிற முடிவெடுத்ததால் தீப்பெட்டி தயாரிக்கும் பழய்ய தானியங்கி எந்திரங்கள் தென் தமிழ்நட்டுக்கு வந்திறங்கிக் கொண்டிருக்கின்றன.

அதை வாங்கப்போன ஒரு தீப்பெட்டித் தொழிலதிபர் வார்த்தைகளில் சொல்லுவதானால் 'அங்கே சோத்துக்கில்லாமல் வற்றிப்போன கண்களோடு எந்தமனிதனையும் பார்க்கமுடியாது.பிச்சைக்காரர்கள் மருந்துக்கு கூடக்கிடையாது' என்கிற கனிப்பு பாரபட்சமானதாக இருக்கமுடியாது.இது போதாதா வேறென்ன வேண்டும்.ஜனநாயகம் வேண்டுமாம், மதநம்பிக்கைக்கான விடுதலை வேண்டுமாம்.ஹப் புக்கு போக உரிமை வேண்டுமாம்.ஐயயிரம் ரூபாய்க்கு ரீபோக் ஷூ எடுக்க அனுமதி வேண்டுமாம்.5 டாலர் கொடுத்து காப்பிகுடிக்க விடுதலை வேண்டுமாம்,பொது இடங்களிலும்,தொடர்வண்டிகளிலும் பான்பராக் எச்சிலைத்துப்புகிற ஜனநாயகம் வேண்டுமாம்.தாய்ப்பால் தவிர இந்த பூமியின் அணைத்து படைப்புகள் மீதும் விலைப்பட்டியல் ஒட்டிவிடுகிற போட்டிவேண்டுமாம். அழிக்கவே முடியாத லஞ்சமும் ஜாதியும் பிணைந்துகிடக்கிற சௌஜன்யம் வேண்டுமாம். இதெல்லாம் கொடுக்காத சீனா ஒரு சிறையென்றால், சிறையே.

1991 அல்லது அதற்கு முந்தைய தேர்தலா என்று தெரியவில்லை வேட்பாளர்களின் சொத்துமதிப்பை இதே ஆனந்த விகடன் வெளியிட்டது. அதை மீண்டும் பொக்கிஷம் பகுதியில் போட்டுக் காண்பித்தால் இந்த விடுதலை பெற்ற ஜனநாயம் சம்பாதித்தது எவ்வளவு  என்று தெரிந்துகொள்ளலாம்.

19 comments:

ராம்ஜி_யாஹூ said...

விகடனின் தரம் எப்படியோ அதே போலதான் அதில் வரும் கட்டுரையும் இருக்கும். அதை போய் நீங்க முக்கியமானதாக எடுத்துக்கிட்டு.

Unknown said...

சீனாவைப்பற்றிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ உள்ளன.அதை நமது மீடியாக்கள் சொல்வதில்லையே!! மக்களை முட்டாள் ஆகுவதில்தானே இந்த மீடியாக்களும்,அரசியல்வாதிகளும் குறியாக உள்ளனர்.

லெமூரியன்... said...

முக்கியமான விஷயம் சொல்ல மறந்து விட்டீர்களே.....

வேலை விஷயமாக சமீபத்தில் பீஜிங் சென்று வந்தாள் என் தோழி ஒருத்தி
பெண்களுக்கான சுதந்திரம் அங்கு அதிகம் என்றாள்...
நள்ளிரவு காலாற நடக்க வேண்டும் போல இருந்தது என்று நகரத்தின் முக்கிய வீதிகளில்
நடந்து சென்றிருக்கிறாள்....ஒரு கள்ளமான பார்வை கூட தன மேல் விழவில்லை என்றாள்.

vinthaimanithan said...

உங்கள் கட்டுரை 'ஜனநாயகவாதி'களுக்கும், 'அறிவிசீவி'களுக்கும் செருப்பால் அடித்தமாதிரி இருக்கும் நிச்சயம்! ஆனால் தோழர்... ஒரு கம்யூனிஸ்ட்டாக சீனா பற்றிய விமர்சனங்களையும் நாம் விவாதப்படுத்தியாகவேண்டும் இல்லையா? ரஷ்யாவைப்போன்று, சீனா என்றுமே சர்வதேசப் பாட்டாளிவர்க்க ஒருமைப்பாட்டை ஆதரித்ததாக எனக்குத் தெரியவில்லை.

kashyapan said...

அற்புதமான இடுகை காமராஜ்! தர்க்கரீதியாக அணுகியுள்ளீர்கள். கொஞ்சம் காரம் சேர்த்திருக்கலாம். தினாமன் சதுக்கத்தில் நடந்த மாணவர்பொராட்டம் தொலைக்காட்சியில்காட்டினார்கள்.பீரங்க்கி வரும்.ஒற்றை மாணவன் அதன் முன்னால் நின்று தடுப்பான். பீரங்கி திசைமாறும் மாணவன் மீண்டும் ஓடி அதன் முன்னால் நிற்பான். மீண்டும் பீரங்கி திசைமாறும். பீரங்கி நின்றுவிடும்.மானவர்கள் பீரங்கி மேல் நிற்பார்கள் ,வெளியே வரும் ராணுவவீரனை மாணவர்கள் அடித்து நொறுக்குவார்கள்.ராணுவ வீரர் திருப்பித்தாக்க மாட்டார்அதனால் தான் அந்த ராணூவத்திற்கு பெயர் Peo[le"s Army . என்.டி.டி.வி யில் மீண்டும் மீண்டும் காட்டுவார்கள்.எனக்கு தொழில் நுணுக்கம் தெரியாது.அந்த காட்சியின் துண்டு கிடைத்தால் இந்த ஆரொக்கிய மற்ற வேலர்களுக்கு போட்டுக்காட்டுங்களேன---காஸ்யபன்.

rajasundararajan said...

குவைத்தில், ஒரு சீனக் கம்பெனி ஒன்றுக்காக ஒன்றரை ஆண்டு காலம் பணியாற்றினேன். என்னோடு பணிபுரிந்த இளைய இஞ்ஜினியர்கள் ஒப்பீட்டளவில் பணக்காரத் தாய் தந்தையருக்குப் பிறந்தவர்களாக இருந்தார்கள். (முதிய இஞ்ஜினியர்கள் ஏழைத் தாய் தந்தையருக்குப் பிறந்தவர்களாகவும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏதாவது ஒரு மட்டத்து நிர்வாகத்தில் உள்ளவர்களாகவும் இருந்தார்கள்). ஆனால் மொத்தக் கணக்கில், அங்கு வந்திருந்த குழுவில் ஏழைக் குடுப்பத்தில் பிறந்தவர்களே அதிகம் இருந்தார்கள். "அது எப்படி?" என்று எனக்கு நண்பனாகிப் போன இளம் இஞ்ஜினியர் (வசதியுள்ள தாய் தந்தைக்குப் பிறந்தவன்) ஒருவனைக் கேட்டேன். "வெளிநாட்டுக்கு ஆள் அனுப்புகையில், ஏழைக் குடும்பங்களுக்கு வருமானம் வருகிறார்போல அங்கிருந்து ஆளெடுப்பதுதான் வழக்கம். சில இடைவெளிகளை நிரப்ப, அல்லது பயிற்சிக்கு வேண்டி வசதியுள்ள குடுப்பத்துப் பிள்ளைகளுக்கும் வாய்ப்புக் கிட்டும்" என்றான்.

சீன நிலைமை இந்திய இழிபாடுகளை ஒப்பிடச் சிறப்பாக இருக்கிறது என்பது இந்தியர்களாகிய நமக்குத் தெரியாவிட்டாலும் உலகுக்குத் தெரியும்.

இப்போது அதுவல்ல பிரச்சனை. அவர்கள் தங்களை, தங்கள் நாட்டை உயர்த்திக்கொள்ள - சந்தைக் கலாச்சாரத்தின் இலக்கணப் படி - பிறநாட்டைச் சுரண்டுகிறார்கள்தானே?

தன் பிள்ளைகளில் ஒருவனைப் பட்டினி போட்டு ஒருவன் தின்றுகொழுக்கவே அமெரிக்கா கொள்ளையடிக்கிறது என்றால், தன் பிள்ளைகளில் ஒருவனையும் பட்டினி போடாமல் ஊட்டுவதற்கே சீனா கொள்ளையடிக்கிறது என்பது ஒருவகையில் உசத்திதான். ஆனால் அது அவர்கள் பக்கம் நின்று பார்க்கையில். கொள்ளையடிக்கப் படுகிற இந்தியா, இலங்கை, அரபு நாடுகள் பக்கம் நின்று பார்க்கையில் இன்ன உசத்தி கண்டு வியந்தோத முடியுமா?

சந்தைக் கலாச்சாரத்துக்குள் வராத கம்யூனிஸம் சாத்தியமா, அதற்கு என்ன செய்யவேண்டும்? சொல்லுங்கள் தோழரே!

hariharan said...

நல்ல பதிவு...

இந்தியாவில் சீன எதிர்ப்பு என்பது வளர்க்கப்பட்டு வருகிறது, சில மாதங்களுக்கு முன்னர் சீன அச்சுறுத்தல் பற்றி மீடியாக்கள் செய்த அமளியை மத்திய அரசே கண்டித்தது.

இலங்கை விவகாரத்தில் சீனா எல்டிடியினரை ஒடுக்குவதற்கு ஆயுதங்கல் மூலம் உதவியதாக தமிழக்த்தில் செய்தி, இந்தியாவின் ஒரு இனமான தமிழ்மக்கள் அங்கு ஒடுக்கப்படுவதற்கு இந்தியா உதவியதை கண்டிக்காத தேச்பக்தர்கள் சீனாவை கண்டித்தார்கள்.

சீனாவைப்போல நாம் இரும்புத்திரை நாடல்ல ஆனால் வருகின்ற செய்தியெல்லாம் சீன எதிர்ப்பு பிரச்சாரம் தான். இந்தியாவில் ஒருவிதமான ‘ஜிங்கோயிசம்’ வளர்ந்து வருகிறது.

கதிரவன் said...

<<'தீப்பெட்டித் தொழிலதிபர் வார்த்தைகளில் சொல்லுவதானால் அங்கே சோத்துக்கில்லாமல் வற்றிப்போன கண்களோடு எந்தமனிதனையும் பார்க்கமுடியாது.பிச்சைக்காரர்கள் மருந்துக்கு கூடக்கிடையாது'>>

கம்யூனிசம் இல்லாத, வளர்ந்த பல நாடுகளிலும் இந்த நிலை தானே..

காமராஜ் said...

நன்றி ராம்ஜி.
ஆமாம் அது பர்பெக்ட் மசாலா. அதே புத்தகத்தில்
துணை முதல்வர் போய் கூவத்தை சுத்தப்படுத்த யோசனை கேட்டுவந்ததை பெருமையாக போட்டிருக்கிறார்கள். kishorebarathi

காமராஜ் said...

நந்தா ஆண்டாள்மகன் said...

//சீனாவைப்பற்றிய நல்ல விஷயங்கள் எவ்வளவோ உள்ளன.அதை நமது மீடியாக்கள் சொல்வதில்லையே!! மக்களை முட்டாள் ஆகுவதில்தானே இந்த மீடியாக்களும்,அரசியல்வாதிகளும் குறியாக உள்ளனர்.//

vநச்சின்னு சொன்னீங்க தோழரே

காமராஜ் said...

ஆஹா லெமூரியன் இது இன்னும் சிறப்பான செய்தியாக இருக்கிறது

காமராஜ் said...

விந்தை மனிதன் நீங்கள் சொல்லுவது மிகச்சரி.
சீனா செய்வதெல்லாம் சரியென்று சொல்லமுடியாது.சந்தைப்பொருளாதாரத்தில் இணைவது போன்ற மயக்கங்கள் அபாயமானது.

காமராஜ் said...

நன்றி தோழர் காஷ்யபன்

காமராஜ் said...

Blogger rajasundararajan said...

//தன் பிள்ளைகளில் ஒருவனைப் பட்டினி போட்டு ஒருவன் தின்றுகொழுக்கவே அமெரிக்கா கொள்ளையடிக்கிறது என்றால், தன் பிள்ளைகளில் ஒருவனையும் பட்டினி போடாமல் ஊட்டுவதற்கே சீனா கொள்ளையடிக்கிறது என்பது ஒருவகையில் உசத்திதான்.//

அழகான உவமை அண்ணா

a.

காமராஜ் said...

நன்றி தோழர் ஹரிகரன்,

காமராஜ் said...

எல்லோருக்கும் எல்லாம் கிடைத்துவிட்டால் கம்யூனிசம் தேவையில்லை. இப்போ அது பிரச்சினையில்லை கதிரவன். ரெண்டுகண்ணும் தெரியாத ஒருவர் ஒண்ணரைக்கண்ணனை கேலிசெய்வது எப்படியோ அப்படி சீனாவை சிறை என்று நாம் சொல்லுவது.

ஈரோடு கதிர் said...

எல்லாத்தையும் இலவசமா வாங்கவும், ஓட்டுப்போட காசு வாங்கவும்...

இதையும் பட்டியல்ல சேர்த்துக்குங்க

Mahi_Granny said...

சீனாவைப் பற்றி அறியத் தந்துள்ளீர்கள். புதிதாய். communisam என்றாலே காத தூரம் ஓடும்படி சொல்லி கொடுத்திருப்பார்கள் என நினைக்கிறேன். அதில் உள்ள நல்ல விசயங்கள் மறைக்கப்பட்டு இருக்கின்றது

Anonymous said...

சமீப காலமாக சீனாவைப் பற்றிய அவதூறுகள்திட்டமிட்டு பரப்பப்படுகின்றன,இது போன்ற கட்டுரையாளர்களின் எண்ணிக்கையும் குடியிருக்கிறதுதான்.