தனது 47 ஆம் வயது வரை வயிற்றுக்கும் கடிகாரத்துக்கும் இடையில் மல்லுக்கட்டிய மனிதராக குவியலுக்குள் கிடந்தவர்.கிடைத்த தொழிலில் எல்லாம் தன்னை இருத்திக்கொண்டு வாழ்வின் இடர்பாடுகளை நேரடியாகத்
தரிசித்தவர்.இளமைக்காலத்தை மரணத்தை எதிர்நோக்கியிருந்த பாட்டிதாத்தாவோடு உள்வாங்கிக்கொண்டவர். போர்ர்ச்சுக்கல் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினாராகத் தன்னை இணைத்துக் கொண்டவர்.படைப்பு சுதந்திரத்துக்கும் கட்சி ஒழுங்குக்கும் இடையில் நடக்கிற மாறாத விதி சரமாகோவின் உறுப்பினர் அட்டையை மீளப்பெற்றது.
இருந்தும் தன்னை சாகும் வரை ஒரு கம்யூனிஸ்டாகவும் பொதுவுடமைச்சிந்தனாவதியாகவும் நிலை நிறுத்திக்கொண்டவர்.தனது இருபத்துமூன்றாம் வயதில்'பாவத்தின் பூமி' என்கிற ஒரு முதல் ஒரு புதினத்தை எழுதிப்போட்டுவிட்டு திரும்பிப்பார்க்காமல் எழுத்தை விட்டுக்கடந்து போனவர்.ஒரு படைப்பாளியை, அவனது அவதானிப்பை,சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான அறச்சீற்றத்தால் இனம் காணக் காத்திருந்தது காலம். அதன் கருப்பு வெள்ளை வெளிப்பாடாக 'பல்தசாரவும் ப்ளிமுண்டாவும்' என்கிற நாவல் அச்சாகியது. அதுதான் உள் மற்றும் அயல் வாசகர்களை தன்பக்கம் ஒருசேரத் திரும்ப வைத்தது.ஒரு மாலுமியின் மெல்லிய காதலோடு புற உலகத்தின் மீதான பலத்த விமர்சனம் அந்த நாவல்.
அதைத்தொடர்ந்து வெளியான 'ரிக்கார்டோ ரேய்ஸ் இறந்த வருடம்' எனும் புதினம் உலக வாசகர்களின் கவனம் பெற்றது. 'ஏசு எழுதின சுவிசேஷம்'ஏசு கிறிஸ்து என்கிற மனிதனுக்குப்பின்னால் வீசிக்கொண்டிருந்த கற்பித வெளிச்சங்களை, மாய ஒளிவட்டத்தைத் துடைத்தது.மகதலேனா மரியாளின் கணவனாக, இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பனாக,தனது பாடுகளைச்சொல்லி இன்னொரு இயேசுவிடம் மன்றாடுகிறவனாக மீட்டெடுத்துக்கொடுத்தது மனித குமாரனை.
அந்தப் புதினத்தின் மீதான விமர்சனம்,மதபீடங்களின் கோபமாக மட்டும் மாறியது.சரமாகோவின் நவல் போர்ர்ச்சுக்கல்லில் தடை செய்யப்பட்டது.தேசப்பிரஷ்டத்துக்குள்ளாகி ஸ்பானியத்தீவுக்கூட்டத்திலுள்ள கோனாரியில் தஞ்சம் புகுந்து 18.7.2010 ல் அங்கேயே மடிந்தார்.மதம் எனும் நிறுவனம் ஆங்கிலத்தில்,போச்சிக்கீஸியில்,உருதுவில்,கோட்டோ வியத்தில் எந்த வடிவத்திலும் தன்னை விமர்சிக்க அனுமதித்ததில்லை என்பதற்கு சரமாகோ இன்னொரு ஆதாரம். 1998 ஆம் ஆண்டு அவருக்குக் கொடுக்கப்பட்ட இலக்கியத்துக்கான நோபல் விருது,இன்று உலகம் தழுவிய வாசகர்கள் கொடுக்கும் இறுதி அஞ்சலி,பத்துக்குமேல் ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட அவரது படைப்பாக்கங்கள் எல்லாம் ,நிழலைக் கொலை செய்த மேலாதிக்க நிறுவனங்களின் மேல் சாகாவரம் பெற்ற கேள்விகளைப் பாய்ச்சும் .
நன்றி ப்ரகோட்டி.ஆர்க்,காலச்சுவடு,விக்கிப்பீடியா.