அவள் பெயர் லட்சுமி,வயது பதினாறு இருக்கும். எழுபது சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றதற்கான சிறப்பு உதவித்தொகை கிடைத்திருந்தது அவளுக்கு. அந்த காசோலையை மாற்ற எங்கள் வங்கிக்கு வந்தாள்.கணிதத்திலும்
பௌதிகத்திலும் தொண்ணூறு சதவீத மதிப்பெண் வாங்கியிருந்தாள். மிகப்பெருமையாக இருந்தது. ஊக்கம் சொன்னேன். நல்ல கல்லூரியில் சேர் எதாவது ஆலோசனை சின்னச்சின்ன உதவிகேள் செய்யலாம் என்றேன் எல்லாவற்றுக்கும் மௌனத்தை அல்லது தலையாட்டுவதைப் பதிலாக்கி விட்டுப் போனாள். பணம் வந்ததும் எடுத்து அதை நிலையான வைப்புத்தொகையில் போடச்சொன்னாள் ஏன் என்று கேட்டதற்கு கண்ணில் ஒரு சொட்டு கண்ணீரை வைத்திருந்தாள்.
கூட வந்த ஒரு அம்மாவிடம் கேட்டதற்கு அப்பா படுத்த படுக்கை,அம்மா தீப்பெட்டி ஆபீசில் வேலை பார்க்கிறாள்,வீடு வாசல் இல்லாத கூலிச்சனங்கள் என்று சொல்லிவிட்டுப்போனது. மீண்டும் அந்தப் பெண்ணைக் கூப்பிட்டுப் பேசினேன். எங்கப்பாவ விட எனக்கு படிப்பு ஒண்ணும் பெரிசில்லை என்று சப்பென அறைந்து விட்டுப்போனாள்.அந்த அதிர்ர்சியிலிருந்து மீள்வதற்கு ஒரு ஆறு மத அவகாசம் கூடக்கொடுக்காமல் மீண்டும் ஒரு அதிர்ச்சியைகொண்டு வந்தாள். இப்போது அவளோடு ஒரு பதினெட்டு வயது வாலிபன்.அவளது கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு.
இது நமது கண்களுக்குத் தெரிந்தவை தெரியாத கதைகளோடு சாயங்காலம் பருத்தியை அடைந்த மாதிரி அடைத்துக் கொண்டு போகும் தீப்பெட்டி ஆபீஸ் வாகனத்துக்குள்ளிருந்து கழுத்தை நீட்டிக் கல்லூரிகளையும் அங்கு சுடிதாரோடு நிற்கும் பொறாமைகளையும் எறித்தபடிப் போகிறது நூற்றுக் கணக்கான அக்கினிக் குஞ்சுகளின் கண்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக ஜூன் மாதத்தில் இந்த பிரச்சினை அதிகரித்துகொண்டே இருக்கிறது. சாத்தூரில் ஆறு தமிழ் வழிப் பள்ளிகளும் ( அதில் இரண்டு பெண்களுக்கானது) இரண்டு ஆங்கில வழிப்பள்ளிகளும் இருக்கிறது. சுற்றியிருக்கிற கிரமத்துக் குழந்தைகள் குறிப்பாக வறிய குடும்பத்துப் பெண்குழந்தைகள் ஒன்பதாம் வகுப்பு சேர்வதென்பது குதிரைக் கொம்பாகவே ஆகிவிட்டது.ஆம் சென்ற வருடம் மட்டும் தகுதிகாண் தேர்வில் தோற்று விட்டதாகக் கூறி தேர்வெழுதிய நூற்றி எழுபது பிள்ளைகளில் நூற்றி ஐம்பது பிள்ளைகள் திருப்பி அனுப்பப்பட்டனர்.அவரவர் தங்கள் தகுதிக்கு ஏற்றபடி சிபாரிசுக்கு அலைந்து முட்டிமோதித் திகைத்து நிற்கிறார்கள்.
பள்ளிகளில் நல்ல ரிசல்ட் வேண்டும்,இதற்குமேல் இட வசதியில்லை,ஆசிரியர்கள் போதுமான அளவு இல்லை எனும் பதில் வருகிறது.இந்தத் தடை தாண்டிப் படிக்க நினைக்கும் பிள்ளைகள் கதி. தீப்பெட்டி,பட்டாசு ஆலைகளில் கிடைக்கிற குடும்ப வருமாணத்தில் படிக்க வைப்பது பெரும்பாடு. அதுவும் சாத்தூருக்கு பேருந்தில் அனுப்பிப்படிக்க வைப்பது அதைவிடப் பெரும்பாடு. இதில் இடறி விட்டால் மீண்டும் தீப்பெட்டி ஆபீஸ் எனும் அந்தப்பாழுங் கிணறு வாயைப்பிளந்து அவர்களை ஏந்திக் கொள்ளத் தயாராக இருக்கிறது. பத்தாயிரம் இருபதாயிரம் முன்பணத்தோடு.