30.8.09

இசை இரவு.........
அழுத்துகிற மன பாரத்தோடு சாலை கடக்கையில் தூரத்து தேநீர்க் கடையிலிருந்து கசிந்து வரும் மனதுக்கினிய பாடல்,சேவைக் கட்டணமில்லாமல் பாரம் குறைக்கும்.விடிகாலையில் எழுகிற போது கூவுகிற குயிலின் சத்தம் எதாதொருவடிவில் நாள் முழுக்க கூட வரும். தாள, லய ஓசை, பிசகினாலும் குழந்தையின் பாடல் முயற்சி கைதேர்ந்த இசைக்கலைஞனையும் கிறங்கடிக்கும்.


நீண்டதூர புகைவண்டிப் பயணத்தில், கண்மூடி பின்னோடும் நினைவுகளின் பாடலுக்கு தடதடக்கும் சக்கர ஓசை லயம் கூட்டும்.


களையெடுக்கையில் வெயிலுக்கு முதுகு காட்டிபடித்திருப்பாள் வாழ்க்கைப்பாட்டை எனது பாட்டி.இதோ இன்று கிராமிய இசைக்கலைஞன், கலை இலக்கிய இரவுகளின் இசைப்பயணி தோழன் " கரிசல் குயில்" கிருஷ்ணசாமி, மற்றும் திருவுடையான் இருவரின் இசைக்குறுந்தகடு வெளியீட்டுவிழா சாத்தூரில். கவிஞர், இசையமைப்பாளர் கங்கை அமரன் வெளியிடுகிறார். தஞ்சை கவிஞன் தனிக்கொடி பராட்டுகிறார். இன்று இரவு இசையால் ததும்பும் சாத்தூரில்.

28.8.09

ஜாக்கிரதையான திருடர்கள்.

உச்சி மத்தியானம்
உலக அழுக்குகளைசுமந்தபடி
கொல்லைப்புறத்தில்
தாள்பொறுக்கும் சிறுவனை,
பாத்திரங்கள் விற்க வந்து
முன்மரநிழலில்
இளைப்பாறும் முதியவரை,
முகவரி தெரியாமல்
கிராமநிர்வக அலுவலரைத்
தேடிவந்து திக்கிநிற்கும்
கிராமத்து தாயை,
கடைக்குப்போகும் மனைவியைக்
கடந்துபோகும்எவனோ ஒருவனை,

பார்த்த மாத்திரத்தில்
குலைக்கிறது சந்தேகநாய்,
வீட்டுக்குள்ளிருந்தே திருடும்
தொலைகாட்சிப் பெட்டிக்கு வாலாட்டியபடி.

26.8.09

பிணம் தின்னும் அரசு.

வாத்தைகளை நசுக்குகிற, ஈரக்கொலையை தடதடக்க விடுகிற, ஒரு முறை பார்த்துவிட்டால் நாள்கணக்கில் கருநிழலாகத்தொடர்கிற காட்சி. இன்று இரவு ஏழரை மணி ராஜ் தொலைக்காட்சியில். இனவெறி இலங்கை அரசின் ராணுவப்பிரதிநிதி ஒருவன், இரண்டு தமிழ் சிவிலியன்களை துகிலுரித்து ஒரு காட்டுப்புல்தரையில் வைத்து கொலை செய்கிற காட்சி.மனிதாபிமானம் மிச்சமிருக்கிற எவரையும் உலுக்கும் காட்சி. அதைப் பார்த்த எவரும் இனி இந்தப்பூமியை பூவுலகென்று சொல்லக் கூசுகிற காட்சி.


ஐநா சபை, செஞ்சிலுவைச் சங்கங்கள்,சார்க் அமைப்புகளையெல்லாம் அம்மணப்படுத்துகிற இந்த ஒளிக்காட்சிக்கு சர்வதேச உலகம் பதில்சொல்லியே தீரவேண்டும். மனித உயிர் இப்படி விளையாட்டுப் பொருளாவதை வெறும் காட்சியாகக் கடந்து போக சர்வதேச சமூகம் அனுமதிக்குமேயானால் அதைவிடக் கேவலமான செயல் ஏதுமில்லை.


I call the international humanitarians and Bloggers to keep a minute silence, to raise our solidarity voice against the inhuman state of violence of canibals govt.

25.8.09

சாலையோர உணர்வகம்.
மதுரையை விட்டுக்கிளம்பும்போது மணி பதினொன்றுக்குமேல் ஆகிவிட்டது. கண்ணனை அங்கிருந்து இழுத்துவராதகுறையாக அழைத்துவந்தோம். நேரம் ஆக ஆக கண்ணன் கூடுதல் அரசியல் பேசுவார் முழித்திருந்து கேட்டே ஆக வேண்டும். எனக்கோ முதன் முதலாக சென்னைக்கு காரில் போகிற ஆர்வம் அதிகமாக இருந்தது. நான் குடித்திருந்த பீரை அனாயசமாகச் சந்திக்கிற தைரியம் வந்துவிட்டது. இல்லையானால் திருச்சி, விழுப்புரம் விக்கிரவாண்டி மூத்திரக்கேண்டீனில் எல்லாம் இறங்கி தலைதெறிக்க ஓடவேண்டும். அந்தக்கார் ஒரு அரசுக்கு சொந்தமான கார். யாரோ ஒரு உயர் அதிகாரி மதுரை வந்து இறங்கிவிட்டு, காரை திரும்ப அணுப்பியிருப்பார் போலிருக்கிறது. திரும்புகிற வெற்று வாகனத்துக்கும் அதன் ஓட்டுனருக்கும் நாங்கள் துணைக்கு அழைக்கப்பட்டோம். மூன்று பேருக்குமான பஸ் கட்டணம் கொடுத்தால் போதும் என்று ஓட்டுனரும் இறக்க குணம் காட்டினார்.
வலிய வந்த இந்த சீதேவியின் தைரியத்தால்தான் கண்ணன் கூடுதல் சரக்கடித்துவிட்டு கூடுதல் அரசியலுக்குள் வந்துவிட்டார். மாது சில நேரம் அவருக்கு ஈடு கொடுத்து விவாதிப்பான் அப்போது நான் தூங்கிவிடுவேன்.சில சுவாரஸ்யமற்ற விசயங்களைப் பேசும்போது கஷ்டப்பட்டு தூங்கிவிடுவான்.
செல்வாவானால் எப்போதும் லேபர் லா, இண்டஸ்ற்றியல் டிஸ்ப்யூட் ஆக்ட், குறித்த நுணுக்கங்களயே பேசிக்கொண்டு வருவார். கோணங்கியோடு இருந்தால் ஒரு பாண்டசி நாவலை காட்சிப்படுத்திப் பார்த்தது போலிருக்கும். பிரகதீசோடும் தனிக்கொடியோடும் கவிதை பாடல்கள், ஹாஸ்யக்கதைகள் பேசியது, ஒரு நிலா நாளில் நானும் மாதுவும் எங்கள் பால்ய நாட்களை சென்சாரில்லாமல் ரிவைண்ட் செய்து பரிமாறிக்கொண்டது, ஒரு புது வருட முன்னிரவில் விடிய விடிய பாடல்கள் பாடிக்கொண்டிருந்ததெல்லாம் மதுவின் மீது மரியாதை கூட்டிய தருணம்.

இப்போது நான் தூங்கிவிட்டேன். கண்ணன் பேசுகிற கதை நாயகர்கள் என் கனவில் குணச்சித்திர வேடம் ஏற்றுக்கொண்டு கூடவந்தார்கள். இடையில் எதோ ஒரு இடத்தில் கார் நின்றிருக்க வேண்டும். அப்போது நான் அவளோடு ஒரு மல்லிகை வனத்தில் பேசிக்கொண்டிருந்தேன். கார் கிளம்பும்போது மல்லிகையோடு ஒல்ட் காஸ்க்கின் வாசனையும் சேர்ந்து வந்தது. அது கானாமல் போய் மீண்டும் நான் ஒரு குறுக்கீடற்ற கனவுக்குள் கிடந்தேன்.
நான் உலுக்கி எழுப்பப்பட்டபோது " வேண்டாம் இனி ஒரு சொட்டுக்கூட குடிக்கமாட்டான், பழமா? துக்கம் தான் அவனுக்கு எல்லாம்" என்று எனக்காகப் பேசியபடியே மாது கடந்து போனான்.

தூக்கம் கலைந்திருந்தது அது எதோ ஒரு ஊர். ஓட்டுனர் இறங்கி முகம் கழுவிக்கொண்டார், ஒரு சிகரெட் பற்றவைத்துக்கொண்டு இருட்டுப்பக்கம் போனார். அவர் திரும்பி வந்த போது ஒரு நடு வயதுக்காரர் அவரோடு பேசிக்கொண்டு வந்தார். நானும் இறங்கி இருட்டுக்குள் போனேன் அந்த நடு வயதுக்காரர் எனக்குப் பின்னால் வந்து " சார் இன்னும் கொஞ்சம் தள்ளிப்போங்க" என்று எனக்கு மிக அருகில் வந்து நின்றார். அப்றம் நீண்ட நாள் ஸ்நேகிதனைப்போல என்ன சார் ஒரு சொட்டு மழ கூட பேயலயே என்று சொல்லியபடியே சரக்கு வேணுமா கேட்டார், அப்டீன்னா, சாராயம்.இல்ல மயிலு வேணுமா சார், அப்டீன்னா..அவர் கெக்கலிட்டுசிரித்தார்.

எல்லாம் கலைந்து ஓடியது இப்போது. மாதுவும், கண்ணனும் திரும்பி வருகிற சத்தம் கேட்டது. அவர்களோடு இன்னொரு உருவம் தொடந்து வந்தது. மாது தப்பித்து ஓடிவருகிற நடையோடு வந்தான். நான் யூகித்தது போலவே அது ஒரு பெண்.பதினேழு வயதுக்கு மிகாத பெண். காருக்குள் தலையை நீட்டி " என்ன இந்த மாமா கெனாவுல இருக்காரா " என்னைப்பார்த்து கேட்டது. அவரத்தொந்தரவு பண்ணாத இங்க வா என்று கண்ணன் கூப்பீட்டார். மூர் மார்க்கெட்டில் ஆயத்த ஆடை வாங்குக்கிற தோரணையில் அந்தப்பெண்மனியோடு உரையாடிக்கொண்டிருந்தார். சில வார்த்தைகள் எங்களுக்கு புரியவில்லை. கண்ணா வாரயா இல்லயா மாது கண்டிப்பான குரலில் அதட்டி விட்டு லூசு லூசு தனக்குள் சொல்லிக்கொண்டான். அவர் அந்தப் பெண்ணைத் தவிர்த்துவிட்டு வந்து காரில் ஏறினார். அப்போது ஓட்டுனரின் தேனீர்க் குவளையில் பாதி மிச்சமிருந்தது.

அவள் ஓட்டுனர் பக்க கதவைத்திறந்து கொண்டு கண்ணனுக்கு எதிராக முகத்தை வைத்துக்கொண்டு பேசினாள். " பூரா ஒயின்ஷாப்பிலே காலி, காசில்லம்மா " " பிடிக்கலன்னு சொல்லுங்க, பொய்யி சொல்லாதீங்க மாமா" என்று சொன்னாள்." செரி காசு வாண்டா, நா அப்டீயே ஒங்ககூட கார்ல மெற்றாஸ் வாரன் " என்றாள். மாது தலையில் அடித்துக்கொண்டு. ஜன்னல் வழியே வெளியே பார்த்தான். ஓட்டுனர் வந்து வாகனத்தைக்கிளப்பினார். ஏதேதோ சொல்லிக்கொண்டு கடந்து போனவள் இன்னொரு லாரிக்காரனிடம் தன்னை மருமகளாக்கிக் கொண்டிருந்தாள். ஓட்டுனரும் கண்ணனும் இதுபோல வேறு வேறு கதைகளைப் பேசிக்கொண்டு வந்தனர். மாது ஜன்னல் பக்கம் வெறித்துப் பார்த்தபடி இருந்தான். விராலிமலை பெயர்ப்பலகை எங்களைக்கடந்து போனது.
இரவின் ஆடைகளை தூக்கி எறிந்து விட்டு சுத்தமாக அவள் தூங்குகிற பகலில் எப்படியும் ஒருவன் வருவான் இல்லையா ?. சத்தியமாய் அவனை மாமா என்று அழைக்கமாட்டாள்.

21.8.09

சவ்தார்க்குளம், சிங்காரக்குளம் - நிஜமும் புனைவுமான இரண்டு நீர்நிலைகள்
காற்றும் நீரும் வானும் நிலவும் பொதுவிலிருக்குது,
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது.


இப்படி ஒரு திரைப்படக்கவிஞன் பாடிவிட்டுப்போனான்.காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே என இன்னொரு திரைப்பாடலும் உண்டு. ஆனால், கிழக்குப்பக்கத்தில் மட்டுமே தெரு வைத்துக்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டார்கள் ஒரு பிரிவினர். காற்றுக்கூட அவர்களை முதலில் தீண்டக்கூடாது எனும் கற்பிதம் ஒளிந்திருக்கும் நடைமுறை அது. ஆறுகள் எல்லாமே கிழக்கு பக்கம் பாய்வதால் முதலில் குளிப்பவன் நானாக மட்டுமே இருக்கவேண்டும் எனும் பெரிய்ய்ய மனசும் கூட இதற்குக் காரணமானது. இதை நீங்கள் india untouched என்கிற ஆவணப்படத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
நீர் நிலைகளில் ஆடுமாடுகள் அனுமதிக்கப்பட்ட போதும் ஒருசரார் கடுமையாகத்தடுத்து நிறுத்தப்பட்டார்கள். சமீப காலம் வரை, அதாவது இருபதாம் நூற்றாண்டின் பாதிவரையில் குற்றாலத்தில் குளிக்க, பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் அனுமதிக்கப்படவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சி தரும் வரலாற்றுச் சேதி. உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவிக்கக்கோரி மின்னணு வாக்குகோரப்பட்ட நமது பெருமை மிகு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழத்தப்பட்டவர்கள் மட்டுமல்ல பிற்படுத்தப்பட்டவர்களும் அனுமதிக்கப்படவில்லை. நுழைய முயன்ற மூக்க நாடார் நான்மாடக்கூடலின் ஒரு வாயிலில் வைத்துக் கழுத்தறுக்கப்பட்டார். இதியத் தொண்மங்களில் மறைந்தும் புதைந்தும் கிடக்கும் அதிர்ச்சியும் அதிலிருந்து மீண்டெழுந்த ஆச்சரியமும் சொல்லப்படாத வரலாறுகளாகும்.
அப்படியொரு பிரபலமான இடம் மராட்டிய மாநிலத்தின் மஹத் எனும் நகரில் உள்ள சவ்தார் குளம். அது நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியமும் சுற்றுலா ஈர்ப்பும் கொண்ட நீர்நிலை. நீண்ட நெடுங்காலமாக தாழ்த்தப்பட்டவர்கள் அதை நெருங்க அனுமதிக்கப் படவில்லை. இதை எதிர்த்து ஒரு மாபெரும் போராட்டத்தை ஒருங்கிணைத்தார் அம்பேத்கர். 1927 ஆம் ஆண்டு மார்ச் மதம் 20 ஆம் தேதி சுமார் பத்தாயிரம் தாழ்த்தப்பட்டவர்களைத் திரட்டி ஊர்வலமாக அழைத்துப்போனார். ஊர்வலத்துக்கு தடைகோரி நீதிமன்றத்தை நாடினார்கள், ஊர்வலத்தை குலைக்க மறைந்திருந்து கல்லெறிந்தார்கள், பின்னர் நேரடியாகத் தாக்கினார்கள். என்றாலும் அசம்பாவிதம் ஏதும் -சத்தியாக்கிரஹமாக முடிந்தது அந்தப்போராட்டம். சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்த காலத்தில் நடந்ததால் இரு கோடுகள் தத்துவத்தின் சிறுகோடாய்க் காணாமல் போனது சவ்தார் ஏரிச்சம்பவம் .இதையெல்லாம் இந்தக் கனிணி யுகத்தில் மீளப்பேசி முகஞ்சுழிக்க வைக்கவேண்டுமா எனும் கேள்வியும் வரும். நகரங்களில் இருந்து கொஞ்சம் ஒதுங்கி விட்ட இது இன்னும் கிராமங்களில் புதுக்கருக்கு மாறாமல் வாழ்கிறது என்பதைவெகுமக்களோடு படித்தவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும். இதுபோன்ற தகவல்களைத் தெரிந்துகொண்டு அப்படியே எழுத்தாளர் பவா செல்லத்துரையின் சிங்காரக் குளத்தைப் படிக்கவேண்டும்.


0அந்த ஊரின் மதில்சுவருக்கு பின்னால் தழும்புகிற சிங்காரக்குளமும் அதில் கால் நனைக்க, கையில் அள்ளி இரண்டு மடக்கு நீர்குடிக்கிற ஆசை, அதே ஊரில் இருக்கிற இரண்டு தெருக்களின் யுகக்கனவாக இருக்கிறது. எளனித்தண்ணீர் குடித்துவிட்டு சிங்காரக்குளத்துத் தண்ணீரை ஒப்பிடும் தெருமக்கள், இந்திராக் காந்தியைப் பார்த்தது போல, காமராஜரைப் பார்த்தது போல குளத்தைப் பார்த்தவர் பெருமைப்படும் அறியாமையின் கதை இது. யார்க்கும் பொதுவெனும் பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீர் கூட உலக அதிசயங்களில் ஒன்றாகிப்போகிற அவலத்தைச் சொல்லுகிற சிறுகதை அது.

தெருவே திரண்டு போய் தண்ணீர் சுமந்துவர, நாடு பிடிக்கிற அரசர்கள் கூடத் தோற்றுப்போகும் வியூகங்களோடு உருவாகிறது ஒரு மீறல் திட்டம். வழக்கம் போலவே வாலிபப் பிராயத்தார் அதைத்தலைமை தாங்குகிறார்கள். ஊர்ச் சாவடியில், நடு இரவில் மிகுந்த கொரில்லா சிறத்தையோடு குசுகுசு வாத்தைகளில் மெருகேற்றப் படுகிறது திட்டம். பின்னர் இந்து கிறிஸ்தவப் பிரிவில் இந்தத்திட்டம் பிசுபிசுத்துப் போகிறது. அப்படியன தோல்விப் பொழுதில், ஒரு விடிகாலையில் தெருவை அதிரவைத்துவிட்டு மிதக்கிறாள் திட்டத்துக்கு முதலில் பேர்கொடுத்த அந்தத் தெருப் பெண் மல்லிகா. தலைமுறை தலைமுறையாய் கண்ட கனவினுக்கு உயிர்விலை கொடுத்து முடித்து வைக்கிறாள் மல்லிகா. அதிர்ச்சியும் சந்தோசமும் ஒரேதட்டில் கிடைக்கப்பெற்ற அவர்கள் தூக்குகிற மல்லிகாவின் உடல் தலைமுறைக் கனம் கனப்பாதானது சிங்காரக் குளம்.0


இந்தச் சிறுகதை இடம்பெற்றிருக்கும் " நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவரை '' என்கிற பவாசெல்லத்துரையின் தொகுப்பில் மலைமனிதர்கள், பென்சன் பெரியவர், அரிதாரம் கலையாத ஏழுமலை ஜமா என இன்னும் நிறைய்ய அரிய மனிதர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைக்கிறது. இது போக அன்பின் ஆகிருதியில் இந்த வையத்தை வசப்படுத்துகிற நட்பு அவரோடு குடிகொண்டிருக்கிறது. யாரும் பொறாமைப்படுகிற எழுத்து நடைபோலவே அவருக்கிருக்கிற நண்பர் பட்டாளமும் மிகப்பெரிது.இந்த தமிழுலகுக்கு கலை இலக்கிய இரவு என்னும் கொடையை வழங்கிய திருவண்ணாமலை ஜமாவின் இருபெரும் தாங்குதூண்கள் தோழர் கருணாவும்,பவாவும். தொண்ணூறுகளில் அவர்களைப்பற்றிய கதைகள் கேட்பதே ஒரு சுகானுபவம். அந்ததோழர்களில் ஒருவரான பவாவின் கதைகளை அறிய, நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவரை. பல அதிர வைக்கும் கதைகள் சுமக்கும் கருவரை.

15.8.09

வெற்றியின் விளம்பரத்தை கலகமாக்கிய விளையாட்டு வீரன்.
ஒரு குத்தகை விவசாயினுடைய பதினோரு குழந்தைகளில் ஒருவன். நூற்றாண்டு அடிமைகளான ஆப்ரிக்க அமெரிக்க கருப்பின மக்களில் ஒருவன். அந்தப் புறக்கணிக்கப்பட்ட இனத்திலிருந்து வந்த ஜெஸ்ஸி ஓவன். 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் 100,200,400 மற்றும் 4x400 மீட்டர் ஓட்டங்களில் உலகசாதனை படைத்தான். நான்கு பதக்கங்களை அமெரிக்காவுக்கு வாங்கிக்கொடுத்தான். அந்த அமெரிக்கா அவனுக்கு இனவெறியைத் திருப்பிக்கொடுத்தது. ஒரு சமூகம், ஒரு அரசு கொடுத்த கருப்பு வெகுமதி அது.பரிசளிப்பு வைபவத்தில், விழா மேடையிலிருந்த ஜெர்மனியின் அதிபர் ஹிட்லரும், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டும் மேலைநாட்டு வழக்கப்படி கொடுக்கப்படவேண்டிய மரியாதையை நிராகரித்தார்கள். அதாவது கைகுலுக்குவதைத் தவிர்த்தார்கள். வாழ்வின் கொடிய தடைகளான வறுமை, மற்றும் பற்றாக்குறையால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டுக் கிடந்த தெருச்சிறுவன் எல்லாவற்றையும் தாண்டி உலக சாதனை படைத்தான். பரிதாபமாக இனவெறியால் உடனே தோற்கடிக்கப்பட்டான்.அதுமட்டுமல்ல தொடர்ந்து உள்நாட்டு பந்தயங்களில் சக பந்தய வீரர்கள் ஜெஸ்ஸியோடு போட்டியிட மறுத்தார்கள். இந்தப் புறக்கணிப்பால் நொந்துபோன ஜெஸ்ஸி ஓவன் மனிதர்களோடு போட்டி போடுவதில்லை எனும் புரட்சி முடிவை அறிவித்தான், அமலாக்கினான். ஆம் குதிரைகள் மற்றும் கார்களோடு போட்டியிட்டு ஓடினான். இனவெறிக்கு எதிராக ஒரு விளையாட்டு வீரனின் கலகமானது இந்த நிகழ்வு. நடைமுறைச் சாத்தியங்களற்ற இந்த சாகச அறிவிப்பை நெடுநாள் கடைப்பிடிக்க முடியாமல், வயிறு அவனை உடற்பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளனாக்கியது.ஆனால் அவன் ஆரம்பித்து வைத்த இந்த எதிர்ப்பும் கலகமும் வேர்பிடித்து முளைத்தது. அவன் தொடங்கிய தொடர் ஓட்டத்தில் டாமி ஸ்மித்தும், ஜான் கார்லோசும் இனைந்துகொண்டார்கள் ( 1968 ஒலிம்பிக்) . பின்னாளில் ஓவனுக்கு அமெரிக்க வரலாறு சிலையையும், தபால் தலையையும் செய்துகொடுத்தது. அது மட்டுமா பின்னாளில் ஒரு கருப்பினத்தவனை ஜனாதிபதியுமாக்கியது அமெரிக்கா.

சுதந்திரம் கொண்டாடுவதற்கு மட்டுமல்ல பாதுகாப்பதற்கும்
விடுதலை என்பது கடைப் பொருளல்ல, சிட்டுக்குருவிக்குள்ள சுதந்திரம் போல் விட்டு விடுதலையாவது சிரமம்.பொதுவிடுதலைக்குப் பின்னும் சில தனிவிடுதலைகள் தேவை என்பதே ஐந்தாண்டுத் திட்டங்கள், சட்டங்கள்.கடந்துபோயின பல பல ஐந்தாண்டுத்திட்டங்கள் இன்னும் எண்பதுகோடி இந்தியர்கள் இருந்த இடத்திலே இருப்பதுதான் கேடு.அதற்குக் காரணம். உலகமயம், தனியார்மயம், தாராளமயம்.
இந்தச் சிந்தனையாளர்கள் அன்றிருந்திருந்தால் போராட்டத்தைக் குத்தகைக்கு விட்டிருப்பார்கள். ஆனால், அப்படி வீரத்தை குத்தகை எடுக்க ஒரு முதலாளியும் வந்திருக்க முடியாது என்பதுதான் வரலாறு. ஆனால் கும்பினியின் அதிகாரத்தைக் குத்தகை எடுத்தவர்கள் இங்கு ஏராளம்.அவர்களே மறுரூபங்கொண்டு இப்போது விவசாய மானியத்தை வெட்டு, சுகாதாரத்தை தனியாருக்கு கொடு, கல்வியைக் கடையில்வை,தகுதியையும் திறமையையும் பீடத்தில் ஏற்று என்று சூத்திரம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.
தகுதியும் திறமையும் நிறைந்த களவானிகளுக்கு இங்கு எல்லாம் கிடைக்கிறது.
மந்திரி மகன் மந்திரி, டாகடர் மகன் டாக்டர், முதலாளி மகன் முதலாளி, நடிகன் மகன் நடிகன், கந்துவட்டிக்காரன் மகன் மீட்டர்வட்டிக்காரன், அவர்களுக்கு மட்டும் தகுதியும் திறமையும் தேவையில்லை.பண்ணையார்த்தனம்,காலனிஆதிக்கம்,முதலாளித்துவம்,ஏகாதிபத்தியம் எல்லாம் டிஜிட்டல் அரிதாரம் பூசிக்கொண்டு மறுபடி எழுகிறது.

புரிந்துகொள்ள சுதந்திர தினம் உதவவேண்டும்.

இதை ஸ்ரேயா சொல்லுமா?,
தொலைக்காட்சிக் குழுமங்கள் சொல்ல அனுமதிக்குமா?
ஐயாக்களே உங்கள் பட்டிமன்றத்தில் பைசல் பண்ணிச்சொல்லுங்கள்.


0


பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் -புவிபேணிவளர்த்திடும் ஈசன்மண்ணுக்குள்ளே சில மூடர் மாதரறிவைக் கெடுத்தார்.


எந்த நிறம் இருந்தாலும் அவையாவும் ஒருதரம் அன்றோஇந்த நிறம் சிறிதென்றும்-இஃதுஏற்றம் என்றும் சொல்லலாமோ.


0


கற்பினைக்கூட பொதுவில் வைக்கச்சொன்ன பாரதியின் நினைவுகளோடு எல்லோருக்கும் சுதந்திர வாழ்த்துக்கள்.

14.8.09

சுட்டெரிக்கும் வெயிலையும் வாழ்வின் ரசனை குளிராக்கும்
அடர்ந்த வேலிக்கருவேல மரங்களை ஊடறுத்துக் கொண்டு சென்ற மாட்டு வண்டிப்பாதையில் இரண்டு கிலோமீட்டர் பயணம். அப்போது வெயில் வெளியே சுட்டெரித்துக் கொண்டிருந்தது. வெட்டிக் குவிக்கப்பட்ட பல்வகை மரங்கள் அந்தஇடத்தில்ஒரு தோப்பு இருந்ததற்கான எச்சங்களை விட்டு வைத்திருந்தது. அந்த தோப்பை விலைபேசவந்தவருக்கு துனையாகப்போனோம்.சுற்றிலும் பட்டாசுக்கம்பெனிகள் முளைத்திருக்க அந்தக்காடு மட்டும் மனித நடமாட்டம் இல்லாமல் கிடந்தது. அங்கே ஒரு நாவல் விருட்சம் வானுயர விரிந்து கிடந்தது. ஒரு நான்குபேர் சேர்ந்து கட்டிப்பிடிக்கும் சுற்றளவு கொண்ட அந்த மரம் கிளிகளும் மைனாக்களும் குருவிகளும் இன்ன பிற பறவைகளும் வசிக்கிற இடமாக இருந்தது. ஆடிக்காற்றின் உக்கிரத்துக்கு ஈடுகொடுக்க அதன் கிளைகளிலிருந்து கருநீலக்கனிகள் உதிர்ந்து விழுந்தன.


சற்று நேரத் தயக்கத்துப் பின் நான்கு சக்கர வாகனத்து கதவுகள் திறந்து இறங்கி பழங்கள் பொறுக்கினோம். குனிந்து பொறுக்க பொறுக்க காலங்கள் உதிர்ந்து பள்ளிக்கூட நாட்கள் எங்களைத் தொற்றிக் கொண்டது. சுட்ட பழம் சுடாத பழம் என்ற பழமைகள் பேசிச்சிரித்தபடி வெயில் மறந்து போனது. கால்சராயைக் கழற்றிவிட்டு மரமேறத் தவித்தது பழய்ய கால்கள். சார் உக்காருங்க உதிர்த்து எடுத்து தாரோம் என்று சொன்ன தோட்டக் காவலரின் குரலை ஏற்றுக்கொள்ள மனம் தயாராக இல்லை.காட்டைச் சுற்றிகாட்ட முன் நடந்த அவரின் வேகம் எங்களுக்கு கட்டுபடியாகவில்லை. சிறிது நடந்த பின் கௌதாரிகளும், காடைகளும் மருண்டோடின. எங்களைக்கண்டதும் மேல்சட்டையில்லாத நாலைந்து சிறுவர்களும்கூட கலைந்து ஓடினார்கள். அவர்கள் கையில் பாலித்தீன் பைகளில் கருநீலக் கனிகள் கிடந்தன. அந்தப் பதட்ட ஓட்டம் இன்னும் பத்து வருடம் கழித்து இனிய நினைவுகளாவது தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஆடைக்குள்ளே வியர்வை நசநசத்தாலும் காட்சிகள் குளுமையாக இருந்தது.ஒரு புதரில் மயில்களிரண்டு ஒன்றையொன்று அலகுரசிக்கொண்டு காமம் செப்பக் கண்டோம். இன்னும் சிறிது தூரம் கடந்த பிறகு ஒரு வெற்றுச் சீசாவும் அதன் தோழமைப் பொருட்களும் கூட சிதறிக் கிடந்தது. அது ஒன்றும் புதிதல்ல சில மல்லிகைப் பூக்களும் அதனருகே காய்ந்து கிடந்தது. ரசனைக்காரன் எனச் சொல்லிவிட்டுக் கடந்துபோனார் சகபயணி.

10.8.09

பறிக்கப்பட்ட பதின்பருவத்து விளையாட்டுக்கள் சிதறிக்கிடக்கும் காடு.
( bank workers unity இதழுக்காக 12.01.2004 ல் எழுதியது.)


அப்போது நானும் நடராஜனும் கிழக்கு ராமநாதபுரக் கிராமமான பாண்டுகுடியில் தங்கியிருந்தோம். நடராஜன் வெள்ளையபுரம் கிளையில் மேலாளராக இருந்தார். வங்கிக்கிளைக்கு எதிரே மாடியில் தான் எங்கள் அறை. வேலை தவிர்த்த நேரங்களில் சீட்டு விளையாடுவதும்,சினிமாப் பார்ப்பதும்,புத்தகம் படிப்பதுவுமாக இருந்த காலங்கள் அவை. அப்புறம் இருக்கவே இருக்கிறது காதலுக்காக அலைவதும் அதைப் பற்றிப் பேசுவதுவுமான நேரங்கள். அந்த ஊதா நிற இன்லாண்ட் லட்டரை வாங்கி வைத்துக்கொண்டு கிழிக்கவும் முடியாமல் படிக்கவும் முடியாமல் தவித்த காலங்களை இனி கதைகள், சினிமா மூலமாகத்தான் சொல்லமுடியும், உணரமுடியும். இப்போது அந்த இடத்தை அலைபேசியும் குறுஞ்செய்தியும் அபகரித்துக்கொண்டது. இதோ இந்த கணினி என்பதுகூட சுஜாதாவின் எழுத்துக்கள் மூலமாக மட்டும் அறிமுகமாகியிருந்த காலம். ஜீனோ கதையெல்லாம் ஞாபகம் வருது.எங்களுக்கு அங்கே ஒரு சித்த மருத்துவர் நட்புக்கிடைத்திருந்தது. அவர் வீட்டில் இரண்டு ஒலிபெருக்கி பொருத்தப்பட்ட நேசனல் பானாசோனிக் டேப் ரிக்கார்டர் இருந்தது. அதில் இளையராஜா பாடல்கள் கேட்பதற்காக அங்கு போவோம். கவிதைபாடு குயிலே குயிலே பாட்டை ஸ்டீரியோவில் கேட்டுக்கொண்டே கண்ணை மூடி மிதக்கலாம். அவருக்கும் அவரது செவிலிக்கும் இடையிலான காதலில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்து வைத்த நாங்கள் இருவரும் அவருக்கு மிக நெருக்கமாகிப் போனோம். அவர்தான் அந்த நான்கு பேரை அவரது உறவினர்கள் எனச்சொல்லி எங்களுக்கு அறிமுகப்படுத்தினார்.எல்லோருமே பதினைந்து முதல் பதினெட்டு வயதுக்குட்பட்ட விடலைகள். ஆனால் அந்த வயதுக்குண்டான எந்த புறச்செயல்களும் துருதுருப்பும் இல்லாததை நாங்கள் முதலில் சங்கோஜம் என்று நினைத்தோம். நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு தலையாட்டுவதன் மூலமாக மட்டுமே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இரண்டாம் நாளில் சந்தேகம் ஊர்ஜிதமாகியது. அவர்கள் டெலோ அமைப்பின் ஆயுதம் தாங்கிய போராளிகள் என்பதை ஒத்துக்கொண்டார்கள். அப்போது அது ஒன்றும் குற்றச்செயலாக இருக்கவில்லை. பல ஞாயிற்றுக் கிழமைகளில் பச்சை ராணுவ லாரிகளில் வந்து ஆதரவும் நிதியும் திரட்டுவார்கள். அப்போது இபிஆரெல்எஃ., டெலோ, டெசொ,எல்டிடிஇ தவிர்த்து இன்னும் வேறு அமைப்புகளும் இருந்தது. அவர்கள் எல்லோருமே தமிழகத்தில் தங்குதடையில்லாமல் வந்துபோனார்கள். கூமாப்பட்டி மலையில்கூட அவர்களுக்கு கூடாரம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இருந்தாலும் அதை ரகசியமாக வைத்துக்கொண்டோம்.ஒருநாள் அவர்களை சுப்பையாபிள்ளை கடைக்கு சாப்பிட அழைத்துச் சென்றோம். நான்கு இட்லிகளுக்குமேல் ஏதும்வேண்டாம் என்று கறாராக மறுத்துவிட்டார்கள். ஓடுகிற பாம்பை மிதிக்கிற வயது, கல்லைத்தின்றாலும் செறிக்கிற காலம் அது. நீண்ட நேர நச்சரிப்புக்குப்பின் இப்படிச் சொன்னார்கள். இரண்டொரு நாளில் மீண்டும் காடு திரும்புவோம் அப்புறம் உணவென்பது கிடைக்கிற போது எடுக்கிற அரிய விசயமாகும். அதை இப்போது அதிகம் சாப்பிட்டால் காட்டிலும் இதே அளவு வயிறு கேட்பதற்கு வழிவகுக்கக்கூடாது என்று சொல்லிவிட்டுப் போனர்கள். பசிவந்திடப்பத்தும் பறந்து போகும், லட்சியம் அப்படியல்ல என்பதை அந்தச்சின்ன வயதுக்காரர்கள் சொல்லாமல் சொல்லிவிட்டுச் சென்றார்கள். அதன்பிறகான நாட்களில் வயிறு முட்டச்சாப்பிடுகிற நேரங்களில் எப்படியாவது அவர்கள் நினைப்பு வருவதைத் தவிர்க்க இயலவில்லை. பத்து வருடம் கழித்து சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வேறு நான்குபேர் குப்பியடித்து உயிர் மறுத்தபோது நாங்கள் மிக அருகிலிருந்த சம்பவம் நடக்கும் வரை.
ஒரு இருபதாண்டு கடந்து விட்டது.
பதுங்குகுழியிலோ,கடும்சண்டையிலோ,பிடிபட்டு சித்திரவதையிலோ இறக்காமல் உயிரோடிருப்பார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆனால் நிலைகுத்திய கண்களில், பாவாடை பறக்க ஓடிய பெண் சிநேகிதியின் உருவமோ, விளையாட்டுக்காகக் கொடுத்த முத்தமோ கடைசியாய் நின்றுபோயிருக்கலாம். அல்லது பேய்க்கதை கேட்ட இரவில் தாயின்மேல் கால்போட்டுத் தூங்கிய நாட்கள் நினைவில் வந்து போயிருக்கலாம். அவை கருமருந்து சிதறிக்கிடக்கிற அந்தக் காடுகளில் கட்டாயம் புதைந்து கிடக்கும், வலிமையாக.சண்டைகள் ஓய்ந்து நாடு திரும்பும் மக்கள் விறகொடிக்கவோ, விவசாயம் பண்ணவோ,கால்நடைகள் மேய்க்கவோ காட்டுக்குள் போகையில், மிதித்து விடாமல் கவனமாகக் கடந்து போகவேண்டும்

9.8.09

உள்ஒடுங்கிப் போன மகோன்னத மனிதர்களின் கதைகள் - " காட்டாறு "
மனசிருந்தால் புளிய இலையில் இரண்டுபேர் படுத்து தூங்கலாம் என்னும் இணக்கம் குறித்த பழமொழியை அறிமுகப்படுத்திய அன்புருகும் மனிதர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்து வளர்ச்சிகளில் தன்னைக் கறைத்துக்கொண்ட எழுத்துப் போராளி. மதுரை டவுன்ஹாலில் இருக்கும் பிரிட்டிஷ் பேக்கரியின் பெயர்ப் பலகையில் உள்ள பிரிட்டிஷ் கொடியினை அகற்றச் சொல்லிப் போராடிய, பற்றுதல் மிக்க முக்கியமானவர், எழுத்தாளர் ஷாஜஹான்.


விழக் காத்திருக்கும் பூக்களை, அல்லது தேனடையை உலுப்பிவிட்டு விட்டு ஒதுங்கிக்கொள்ளும் எழுத்து எங்கள் அன்புத்தோழர் ஷாஜஹானுடையது. பிரிவுத்துயரை அதன் மெலிதான வலியை கிளப்பிவிடும் வல்லமை மிக்க வார்த்தைகளோடு ஒரு கதை. அவரது காட்டாறு தொகுப்பிலுள்ள சிகரக்கதை " ஈன்ற பொழுது " .எண்பதுகளில் அதைப்படிக்கும் போது நேர்ந்த அதே அடக்கமுடியாத கண்ணீர் இப்போதும் கூட விழக்காத்திருக்கிறது.அந்தக்கதையில் பிரதானப் பாத்திரங்களாக வரும் சுந்தரேசன்,அவனது சகோதரி, ஓடிப்போன அம்மா, அம்மாவுக்குப் பிறந்த சாரதா, இவர்களில் யார்பக்கம் நின்றாலும் கண்ணீர் நம்மைக் கவ்விக் கொள்ளும். தனது பதினேழாவது வயதில் பெற்ற தாயை இன்னொரு ஆணின் வீட்டில் பார்க்கப்போகும் மகனின் உணர்வுகளாகட்டும். பார்த்த மகனை அடையாளம் தெரியாமல் திணறி, அடையாளம் கண்டபின் குற்ற உணச்சியில் அழுகிற தாயாகட்டும், சுந்தரேசன் பெயரைக்கேட்ட மாத்திரத்தில் அவனை அண்ணனாக ஏற்றுக்கொள்ளும் தங்கையாகட்டும், நெகிழ்ச்சியின் தூதுவர்களாகவே இருக்கிறார்கள். தாயைப் பார்க்கப்போகிற அவனது அலைபாய்கிற மனது, வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் வந்ததாலும் இந்த சமூகம் ஓடிப்போனவர்களுக்கு ஒதுக்கி வைத்திருக்கும் இடம், அதானாலே ஏற்படுகிற குறு குறுப்பு எல்லாம் எழுத்துக்களின் அடியில் கிடந்து வெளியேறும். வீட்டுக்கு வெளியிலிருந்து சார் எனக்கூப்பிட்டு விட்டுக் காத்திருக்கிற தருணங்கள் வாசகன் மனதில் பின்னணி இசையில்லாமலே சோகத்தைக் கொண்டு வந்துசேர்க்கும்.ஒரு வேளை அவளின் குடிகாரக் கணவனை மீளப் பார்த்திருந்தால் அகிலாவின் கம்பீரம் காட்சிப் படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், மகனைப் பார்த்ததும் நெகிழ்ந்து போய் தன்னை இந்த சமூக ஒதுக்கீட்டுக்குள் வலியக் குற்றவாளியாக்கிக் குறுகிப்போய் அழுகிறாள். அந்தப் புள்ளியில் தான், சில புள்ளிகளை இழந்து அகிலா நான்காவது இடத்துக்குத் தள்ளப்படுகிறாள். அடிக்கடி வந்துபோங்கண்ணே என்று சொல்லும் தங்கை பேருந்து நிறுத்தத்திற்கு வந்து பலகாரங்கள் கொடுப்பதும். வீட்டுக்கு வந்த சுந்தரேசன், சாரதாவிடம் '' அண்ணைக்கு பள்ளிக்கூடம் போகாமல் இருந்திருந்தால் அம்மா நம்மையும் கூட்டிக்கொண்டு போயிருப்பாங்க இல்லையா" என்று கேட்கிற கேள்வியில் ஷாஜஹான் அகிலாவின் மீறலுக்கு அடுத்த தலைமுறை வழியாக அங்கீகாரம் தருகிறார்.கதை ஆரம்பித்த புள்ளியிலிருந்து ஒரு எழுத்துக்கூட விலகமால் ஒரு கழிவிரக்கத்தைச் சுமந்தபடியே செல்லும். அவ்வளவு பெரிய உலகில்,ஊரில்,தெருவில் இலக்கு மாறாமல் ஒரு ஏவுகனை மதிரித் தாக்கும் உத்திதான் ஷாஜஹானின் வலிமை.இதே விதிப்படி இன்னொரு கதை அதுவும் எல்லோர் வாழ்விலும் கடக்கும் தருணம். தனது பழைய்ய கதலியை கணவனோடு சந்திக்கிற நிமிடங்கள் சிதறிச்சிதறி அடிக்கிற அலைகளாகும். அதுவும் ஒரு ரயில் பெட்டியில் எதிரெதிரே சந்திக்க நேர்வது உடைப்பைத்தடுக்க முடியாத கணங்களாகும். ஆம், அதைப் புரிந்துகொண்ட கணவன் எழுந்து தண்ணீர் பிடிக்கப்போவதுபோல பாவனையுடன் கீழிறங்கும் போது ஒரு மகோன்னத மனிதனாகிப்போகிறான் ' கடந்த காற்று ' சிறுகதையில்.இப்படியான உள் ஒடுங்கிப்போன மகோன்னத மனிதர்களை தனது கதைகளெங்கும் அறிமுகப்படுத்தும் மிகச்சிறந்த சிறுகதைத் தொகுப்பு ஜே.ஷாஜஹானின் "காட்டாறு".வெளியீடு: வம்சிபுக்ஸ்


19 டி.எம்.சாரோன்,


திருவண்ணாமலை.606601.விலை:50 ரூ.6.8.09

சிறகுகளில் அக்கினி
பரீட்சை அட்டையைக்
கிரிக்கெட் மட்டையாக்கும்
அவனது கால்சராயின்
பின்புறம் வாழ்க்கையாய்க் கிழிந்திருக்கிறது.சமோசா விற்கிற சிறுவனின்
கல்லாப்பெட்டிஐந்து ஒரு ரூபாய்
நாணயங்களுக்கு ஏங்குகிறது.
அந்தப் பாத்திரத்தில் மீந்திருக்கும்
திண்ணாதபண்டங்கள்ஒவ்வொன்றும்
தண்டணையாய்க் கணக்கிறது.வீசியெறியப்பட்டு
வீதியில்தாள்பொறுக்கும்
இன்னொருவனுக்கோதாள்களற்ற
குப்பைகளே எதிர்ப்படுகிறது.கிழிசல்களையும், மிச்சங்களையும்,
குப்பைகளையும்தாண்டிக் குதிக்கிற
அவர்களின் கனவில்அப்துல் கலாமும்
ஐஐடியும் கைகோர்த்து வருவார்களா ?

3.8.09

ஆலிஸ் வாக்கரின் புதினம் - கலர் பர்ப்பிள் - ( color purple - 1982 )
( மிகச்சிறந்த கருப்பின எழுத்தாளரும், தீவிரப் பெண்ணியவாதியுமான ஆலிஸ் வாக்கர் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சொல்லமுடியாத துயரங்களை அனுபவித்த அமெரிக்க - ஆப்பிரிக்க கருப்பின அடிமைகளின் துயரார்ந்த வரிகளை எழுதியவர். ஈராக் யுத்தத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டவர். இஸ்ரேல் பாலஸ்தீன போரில் இன்றுவரை களத்திலிருக்கும் உலகப் பெண்கள் அமைப்பின் நிர்வாகி ஆலிஸ் வாக்கர்.வெள்ளை வீடுகளின் சமயலரையில் கிடந்து கருகிப்போன கருப்பின் அடிமைகளின் வாழ்க்கை ஒவ்வொன்றும் உலகை அதிரவைக்கிற கொடூரம். வெள்ளைக்காரத்தகப்பனே கணவனாகும் கருஞ்சோகம், பரவலாக உலகறியாதது. 1983 அம் ஆண்டு பெரும் விவாதத்துக்கு உள்ளாகி பின் புலிட்சர் விருது பெற்ற புதினம், கலர் பர்ப்பிள். முழுக்க முழுக்க ஒரு நாட்குறிப்பின் வடிவில் எழுதப்பட்டது இது. தன் வரலற்று எழுத்துக்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய இது போன்ற புதினங்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஓங்கிய குரலாகியது. பின்னர் உலகம் முழுவதும் விஸ்தரிக்கப்பாட்டது. பாலியல் சமத்துவதுக்கான போர் முரசாகாவும் இந்த எழுத்துக்கள் முன் நிறுத்தப்பட்டன. அதன் சுருக்கம் )0கல்வியறிவு இல்லாத ஏழைக் கருப்பு இனப்பெண் சீலி, தனது பதினான்காவது வயதில் மாற்றாந் தந்தையால் வல்லுறவுக்கு ஆளாகி கற்பமாகிறாள். பிறந்த இரண்டுகுழந்தைகள் காணாமல்போக அவர்களிருவரும் மாற்றாந் தந்தையால் கொல்லப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறாள். அவளது தங்கையான நிட்டியைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப் படுவதாகக் கூறி வரும் ஆடவனுடன் சீலிக்குக் கட்டாயத்திருமணம் சம்பவிக்கிறது. அவன் தான் மிஸ்டர் எக்ஸ்.மாற்றந்தந்தையோடு வழச்சகிக்காமல் வெளியேறி சீலியுடன் வந்து தங்கும் தங்கை நிட்டியை மயக்க முயற்சித்துத் தோற்றுப்போகிறான் மிஸ்டர் எக்ஸ். தோல்வியால் சினந்து அவளை வீட்டைவிட்டு வெளியேறச்சொல்லுகிறான் மிஸ்டர் எக்ஸ். அவளது அக்காளும் கூட இந்தச் சிறையிலிருந்து தப்பிப்போகக் கிடைத்த பாக்கியமாக எண்ணிக்கொண்டு போ என அறிவுரை கூறுகிறாள். அங்கிருந்து வெளியேறும் நிட்டி உள்ளூர் பாதிரி ஒருவரின் வீட்டு வேலைக்காக ஜார்ஜியா செல்கிறாள். கடிதம் மூலம் தொடர்கிற அன்பும் உறவும், நின்று போன கடிதங்களால் அறுந்து போகிறது. நிட்டியும் இறந்து போனதாக எண்ணிக் கொள்கிறாள் சீலி.மிஸ்டர் எக்ஸின் பழய்ய மகனான ஹார்போ சோபியாவைத் திருமணம் செய்து தந்தையோடு வந்து தங்குகிறான். மகனும் தந்தையும் இணைந்து சோபியாவைக் கொடுமைப் படுத்துகிறார்கள். சீலியைப்போலல்லாமல் அவள் அவர்களுடன் எதிர்த்துப் போராடுகிறாள், திருப்பி அடிக்கிறாள். அந்த ஊர் மேயர் தன் மனைவிக்கு தாதியாக வரும்படிக அழைக்க, அந்த நரகத்துக்கு நான் வாமாட்டேன் என மறுக்கிற அவளை மேயரின் மனைவி அடிக்கிறாள். திருப்பி அடித்த சோபியா குற்றவாளியாகி பனிரெண்டு வருட சிறைத்தண்டனைக்கு ஆளாகிறாள்.மிஸ்டர் எக்ஸின் நீண்ட நாள் காதலி பாப் இசைப்பாடகி ஷக் ஆவெரி, உடல் நலக் குறைவால் சீலியின் வீட்டில் வந்து தங்குகிறாள். சீலியின் துன்பத்துக்கு இறங்கி அவளுடன் சிநேகமாகிறாள். அது இன்னொரு பரிமாணத்தில் காதலாகிறது.முதன் முதலில் அன்பின் ருசியை உணரும் சீலி உன்னதமான உணர்வுகளால் ஆட்டுவிக்கப்படுகிறாள். மிஸ்டர் எக்ஸிடம் அவள்படும் அடி, உதைகளைத் தடுக்க அவள் அந்த வீட்டில் நீண்ட நாள் தங்க நேர்கிறது. மீண்டும் ஒரு இசைப்பயணம் சென்றுதிரும்பும் ஷக், க்ரேடி எனும் ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு திரும்புகிறாள். இதனால் கிடைத்த ஒரு ஆசுவாச உறவும் தட்டிப்பறிக்கப்பட்டதாக உனருகிறாள் சீலி.திரும்புகிற அவள் நிட்டியப் பற்றி விசாரிக்கிறாள். அவளிடம் இருந்து கடிதம் வருவது நின்று போனதால் நிட்டி இறந்து போயிருக்கக்கூடும் என்று சீலி கூறுகிறாள். மிஸ்டர் எக்ஸின் பெட்டியொன்றில் நிறைய்ய கடிதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தகவலை அப்போது ஷக் உடைக்கிறாள். கண்டுபிடிக்கப்பட்ட கடிதங்கலின் மூலம் பல புதிர்கள் உடைக்கப்படுகிறது. உள்ளூர் பாதிரித் தம்பதிகளுடன் கிறிஸ்தவ தொண்டுக்காக ஆப்ரிக்கா சென்று விட்டதாகவும். அவர்களின் இரண்டு ததுப்பிள்ளைகளும் உருவத்தில் நிட்டியைப்போலிருப்பதால் பாதிரியின் மனைவியின் சந்தேகம் அதிகமாகி, பின்னர் அவள் இறந்த பின் முறைப்படி நிட்டி பாதிரிக்கு மனைவியாகி சீலியின் குழந்தைகளுக்கு தாயுமாகிறாள்.

2.8.09

தடைகளையும் சுவர்களையும் தாண்டி இறுக்கமாகும் நிகரில்லா உறவு - நட்பு
விருதுநகர் மாவட்டத்து கிராமத்துப் புழுதியில் பிறந்து, அந்தப் புழுதியோடு வறுமையும் கலந்து வளர்ந்த எனது உலகம் நண்பர்களால் மட்டும் ஆனது. அங்கிருந்து தப்பித்தவறி நகரம் வந்து ஒரு நடுத்தர வர்க்கத்துக்குள் என்னை அடைத்துக் கொள்ளத்திணறிய போதும் எனது விரல்கள் பற்றி நடத்திக் கூட்டிக்கொண்டு போய் சில இசங்களையும் இயக்கங்களையும்இனம் காட்டியது. நீச்சல் பார்க்க காத்திருந்தவனைத் தள்ளி விட்டு, நீந்த கற்றுக்கொடுத்த நிர்ப்பந்தமும் அவர்களால் ஆனது. அப்புறம் இந்த எழுத்துக்குள்ளும் அதே விதிப்படியே நடந்து கொண்டிருக்கிறது. 1987 ல் எனது முதல் சிறுகதை வெளியன போது மிகத் தொலைவிலிருந்தும் கூட விழி உயர்த்திய எழுத்துலகத்தைப் பற்றியும் எனது, எழுத்தைப்பற்றியும் அறியாது இன்னும் வறுமையோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது எனது கிராமம்.பால்யம் பற்றி யோசிக்கக் கிடைக்கிற எல்லாத் தருணங்களிலும் அவர்கள் வருவார்கள். ஒரு அகாலவேளையில் மறைந்துபோன பவுல்சுந்தராஜ். புத்தகப்பைகளோடும் கனவுகளோடும் அலைந்துவிட்டு இப்போது மணல் லாரிகளில் லோடுமேனாக வானத்தை வெறித்து பார்த்தபடி காலம் கடத்தும் எம்ஜியார். என்னோடு கோழி திருடி, தேங்காய் திருடி, இப்போது சென்னைப் பெருநகர வீதிகளில் அதிகார மிடுக்கோடு காவலர் வாகனத்தில் வலம் வரும் உயரதிகாரி வேலவர். எனது எல்லாக்கனவுக் காலத்திலும் எதாவதொரு பெண்ணுருவில் கூடவரும் குணசேகரன்.புலம் பெயர்ந்தது போல ஒரு கடலோரக் கிராமத்துக்குப் போனபோது எனது பேச்சலர் அறையைப் பங்கு போட்டுக் கொண்ட நடராஜன். தொழிசங்கத்து உறுப்பினராக்குவதுபோல பாவனை காட்டி தான் சார்ந்த எல்லாவற்றிலும் எனக்கு உறுப்பினரட்டை வாங்க்கிக் கொடுத்து இப்போது உயரத்துக்குப்போய் என்னை மறந்துபோன கிருஷ்ணகுமார். இன்னும் என்னோடு நடந்துவரும் சோலைமாணிக்கம். மிகச்சரியாக 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலொருநாள் அறிமுகமாகமாகி இதோ இந்த நிமிடம் வரை என்னோடு அருகிருக்கும் என்னுயிர்த்தோழன் மாதவராஜ்.ஒரு தனிநபர் செஞ்சிலுவைச் சங்கமாக இருந்து நட்புக்காக தனது வாழ்நாள் செலவு செய்யும் எங்கள் முதலாளி செல்வகுமார் திலகராஜ். பை நிறய்ய வெற்றிலைக் கொடவுன் வைத்துக்கொண்டு வருகிற போவோர்க்கெல்லாம் சில்லறையாக அன்பை பரிமாறும் விஸ்வநாதன். இந்த எல்லா அடைமொழிகளையும் ஒன்றுகூட்டி வைத்திருக்கும் ஒளி ஓவியன் அன்புத்தம்பி ப்ரியாகார்த்தி. நானும் மாதுவும் என்கிருந்தோ வந்து சாத்தூரில் 42 b LF தெருவில் கைகோர்த்துக்கொண்டதுபோல இதோ இரண்டு இளைஞர்கள் எங்களின் நகல்களாக ஆண்டோவும், அருணும்.எழுத்து மறந்து கிடந்த காலத்தில் bank workers unity புத்தகத்தில் எனக்கு கடைசிப்பக்கம் ஒதுக்கித்தந்த svv. விசையின் எல்லா இதழ்களிலும் எனக்கான பக்கம் ஒதுக்கி எனது சோம்பேறித்தனத்தால் சோர்ந்து போகது காத்திருக்கும் அருமைத்தோழர் ஆதவன் தீட்சண்யா.சிரிப்பும் நக்கலுமாக இருந்தாலும் ஒரு சீரியஸ் நண்பனாக தொலைவிருக்கும் ஷாஜஹன்.இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பக்கமாக்கினாலும் எனது வாழ்க்கைப் புத்தகம் ஒரு தீராத கனத்த காவியமாகும் சாத்தியமிருக்கிறது. இந்த பட்டியலிலிருந்து ஒவ்வொன்றாக பதிந்து வைக்கமுடியாமல் போனாலும் ஒன்றிரண்டைச் சொல்லாமல் போனால் என் எழுத்துக்கு அர்த்தமில்லாமல் போகும்.இந்த நட்பு நாளில் அவர்களெல்லோரையும் சேர்த்துப்பார்க்க முடியாது. இந்த வலைஎழுத்துக்கள் மூலம் அவர்களை மொத்தமாக நினக்கிற சிலாக்கியம் கிடைத்திருக்கிறது.