மூக்கைப் பொத்திக்கொண்டு
தன் பங்கு கழிவு சேர்க்கும்
கூவத்தின் தீராத நாற்றம்
தேசிய வாசனையானது.
கூவத்திலிருந்து ஒரு குவளை
சாக்கடையை அகற்றிவிட்டு
தேசிய நீரோட்டத்தை
தெளிந்த பன்னீராக்கியதாய்
திருப்திபடும் தேசம் எனது தேசம்
தெற்குக்கரை மோசம் என்று
வடக்குக்கரை வழக்குத்தொடர்கிறது.
வியாதி செய்யும் விந்தை மருத்துவம்
கறையைப்போக்க கறையே நிவாரணி.
இதோ...
உச்சக் கட்ட ஆட்டம் ஆரம்பம்
உனது எனது சுட்டு விரலில் கறைதடவ.
எரிகிற கொள்ளியில் எந்தக்கொள்ளி
சிறந்ததெனத்தேர்வு செய்ய நாள் வருகிறது.
வண்டியில்போய் வழியப்பலியாகும்
ஐந்து வருடத்தீபாவளி நெருங்குகிறது.