Showing posts with label சிவசேனை. Show all posts
Showing posts with label சிவசேனை. Show all posts

16.11.09

அறியாமையின் மூலதனத்தில் கட்டிய கோட்டைகள்


இந்திய விடுதலைக்குப் பின் பிராந்திய வாரி மாநிலங்கள் எனும் கொள்கை மாற்றப்பட்டு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டன. மஹாராஷ்ட்ரா ப்ரசிடென்சி மாநிலத்தில் இருந்த குஜராத்தும், மஹாரஷ்ற்றாவும் 1960 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகராக விளங்கிய அந்நாளைய பம்பாய் நகரின் பெருமுதலாளிகள்குஜராத்திகளாகவும், மார்வாரிகளாகவும் மட்டுமே இருந்தார்கள். தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்கள் தங்களை மூளை உழைப்புக்கு உட்படுத்திக்கொண்டு அதன் மூலம் தங்கள் இருப்பை நிலை நாட்டிக்கொண்டார்கள். அரசாங்க,தொழில் நிறுவண, அதிகாரத்தில் தென்னிந்தியர்களே பெருவாரியாக இருந்தார்கள். இதுவே அவர்களின் சொந்தங்களை வரவழைத்து அலுவலக பதவிகளில் இருத்திக்கொள்ள ஏதுவானதாக இருந்தது.


மும்பைவாசியான பாலசாஹேப் தாக்கரே எனும் கருத்துப்பட ஓவியர் குடியேற்ற வாசிகளை நையாண்டி செய்து மர்மிக் வார இதழில் படங்கள் வெளியிட்டதன் மூலம் பிரபலமனார். அந்த பிரபலத்தின் மூலதனத்தில் 1966 ஜூன் மாதம் 16 ஆம் தேதி சிவசேனைக் கட்சியை ஆரம்பித்தார். மண்ணின் மைந்தர்கள் கோஷத்தோடு துவக்கப்பட்ட இந்த இயக்கம் ஒரு கட்சியாகப் பரிணமிக்குமுன் கணக்கிலடங்கா வன்முறைகளை தென்னிந்தியர்கள் மீது பிரயோகித்தது. தென்னிந்தியர்களின்உணவுவிடுதிகளை கட்டாயமாக மராத்தியர்களுக்கு கைமாற்றியது.


அறுபதுகளில் பம்பாய் தொழில் நகரத்தின் தொழிலாளர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கம்யூனிஸ்டுகளை சீர்குழைக்க தொழிலதிபர்களும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியும் சிவசேனாவுடன் கூட்டு சேர்ந்தது. அடிப்படையில் இந்துத்துவ கொள்கைகளோடு கிளம்பிய சிவசேனாவுக்கு கம்யூனிஸ்டுகளை அழிப்பது லட்டு சாப்பிடுகிற மாதிரியான ஒப்பந்தமானது. 1970 ஆம் ஆண்டு தாதர் பகுதி சட்டமன்ற உறுப்பினர் கிஷன்தேசயைப் படுகொலை செய்யப்பட்டார். உலகமெங்கும் வலதுசாரிகளின்வளர்ச்சி பொதுவுடமை வாதிகளின் உயிர்ப்பலியினாலேயே நிர்மாணிக்கப்படுகிறது.


1995 தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்து வெற்றிபெற்றது. இந்த இடைப்பட்ட காலத்தில் சிவசேனைக் கட்சியில் சந்தோசங்களும், வெறுப்புகளும் மும்பை நகரத்தின் இயலபை மோசமாக உலுக்கியது. பால்தாக்கரேயின் மனைவி மீனாத்தாய் கேவலமாக சித்தரிக்கப்பட்டதாக புரளி கிளப்பி இரண்டு வாரங்கள் மராட்டியம் சிதைக்கப்பட்டது. 2005 ல் நாராயண் ரானே கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதைக் கண்டித்து பால்தாக்கரேயின் மருமகன் ராஜ் தாக்கரே '' மஹராஸ்ட்ர நவ நிர்மான் சேனா'' என்கிற புதுக்கட்சியை ஆரம்பித்தார். இரு பிரிவுகளும் பலமாக மோதிக்கொண்டன. இருப்பினும் தனியே வந்த ராஜ்தக்கரே அவர்களின் பிரதான விதை முதலான தமிழர், கம்யூனிஸ்ட், எதிர்ப்பை விட்டுக் கொடுக்கவில்லை.

2008 அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்ற ரயில்வே சர்வீஸ் கமிசன் தேர்வெழுத வந்த பீகாரிகளையும், குஜராத்திகளையும் தேர்வு அரைக்கு வெளியே இழுத்துப் போட்டு அடித்தது எம் என் எஸ் கட்சி. சமீபத்திய தேர்தலில் வெற்றிபெற்ற சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் திரு ஆஸ்மி இந்தியில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட போது அவரை சட்டமன்றத்துக்கு உள்ளேயே தாக்கியது. எம் என் எஸ் கட்சி இப்போது பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகத்துக்கு ஒரு பகிரங்க கடிதம் எழுதி புது பூதத்தைக் கிளப்பியிருக்கிறது. நடைபெறவிருக்கும் 1100 எழுத்தர் பதவிக்கான தேர்வில் மராட்டியகர்களுக்கு மட்டும் வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும் என மிரட்டல் விடப்பட்டிருக்கிறது.


ஒரே நாடு ஒரே மதம் எனும் சொல்லும் கூட ஒரு தேர்தல் கால காரட் என்பதை அவர்கள் திட்டவட்டமாக நிரூபிக்கிறார்கள். அஸ்ஸாமில்,கர்நாடகாவில்,மும்பையில்,காவிரி,முல்லைப்பெரியாறு என தேசமெங்கும் தங்கள் மண்ணின் மைந்தர் கோஷங்களோடு கிளம்பியிருக்கிறது பிரதேச வெறிக்கூச்சல் பரிவாரங்கள்.


யாதும் ஊரே யவரும் கேளிர், திரைகடலோடியும் திரவியம் தேடு, கங்கை நதிப்புரத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறுகொள்வோம், சரே ஜகாசே அச்சா,இந்தூஸுத்தான் ஹமாரா, ஜனகனமங்கள தாயக ஜயகே, எனும் பாடல்களில் பொதிந்து கிடக்கும் உணர்வுகளைப் பிரித்தெரியும் இந்த வெறியின் பின்னால் அப்பட்டமான சுயலாபம் மட்டுமே பொதிந்து கிடக்கிறது. அதைச்சரி செய்யவோ தடுக்கவோ எந்த திட்டமும் இல்லாது வெற்றுடம்பாய் கிடக்கிறது சமகால அரசியல் . எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்க லாயக்கற்றுக் கைபிசைகிறது மத்திய அரசு. இது ஒரு புறம்.


ஆயிரமாயிரமாண்டு காலம் வஞ்சிக்கப்பட்ட உழைக்கும், பிற்படுத்தப்பட்ட, மலைவாழ், தாழ்த்தப்பட்ட ஜனங்களின் உயிர் வாழ்வாதாரமான கோரிக்கைகளை ஒட்டுமொத்த பலத்தைப் பிரயோகித்து அடக்குகிற சூது இன்னொரு புறமாக இருக்கிறது. இந்த இரட்டை அனுகுமுறைகளுக்குள் மறைந்திருக்கும் சூழ்ச்சியை அறியாத ஜனங்கள்தான் இன்னும் பாரதி சொன்னது போலகஞ்சி குடிப்பதற்கிலாமலும் அதன் காரணம் அறியாமலும் உழன்று கொண்டிருக்கிறார்கள். என்ன கொடுமை என்றால் அவர்கள்தான் என்பது சதம் இடம் அடைக்கிற இந்தியர்கள்.

நன்றி, விக்கிபீடியா,ஆனந்த் டெல்தும்டே( கயர்லாஞ்சி ),கூகுள் செய்தி