Showing posts with label ஜாதி. Show all posts
Showing posts with label ஜாதி. Show all posts

19.1.12

சொந்த வீட்டிலே ஒளிந்து வாழும் அந்தோணி.

                                              (  photo: anton- sattur )

குளிர்ந்து ரெண்டுநாள் ஆன அடுப்பையும்
விழுந்து காய்ந்துபோன கண்ணீர்த்துளிகளும்
வீடெங்கும் விரவிக்கிடக்கும் இல்லாமையும்
கயிற்றால் இழுத்துக்கட்டிய கதவு வீட்டையும்
ஒரு முப்பதுவருட வாழ்க்கையையும்
விட்டுவிட்டுக்கிளம்பினான் அந்தோணி.
ஒருசாக்குப்பையில் அடங்கிப்போன
சாமான்கள் உடன் எடுத்துக்கொண்டு.

பல்லாவரத்தில் கல்லுடைக்கப்போனவனுக்கு
பூர்வீக வீட்டை விடப்பெரிய குடிசை கிடைத்தது.
முற்றமும் கொல்லையுமாக விரிந்து கிடந்த வீடு
கொட்டாரத்தில்குச்சல் கட்டி குளிக்க
கழிக்கப் பழகிக்கொண்டது குடும்பம்.
முப்பது வருட வாழ்வில் முதல்முதலாக
முற்றத்தில் நட்டுவைத்தான் ஊரின் நினைவாக
ஒரே ஒரு சொந்த வேப்பங்கன்று.

பத்துவருடச் சம்பாத்தியத்தில் பரம்பரைக்
கூலி தொலைத்து பெட்டிக்கடை முதலாளியானான்
கடையைப்பூட்டும் போது கல்லாவையும்
கடையைத்திறந்திருக்கும் போது ஜாதியையும்
ஒளித்து வைத்து ஒரு தலைமறைவு வாழ்ந்தான்.

இரண்டு தலைமுறைக்கு முன்னாள்
ஊருக்குள் ஒளிந்து வாழ்ந்த
அம்மாசி என்கிற யோசியப்பும் இப்போது
சொந்த வீட்டுக்குள்ளே ஒளிந்து வாழும்
அந்தோணி என்கிற அந்தோணிநாடாரும்.
சொந்த தேசத்துக்குள் புலம் பெயர்ந்ததற்கு
சத்தியமாய் வேறுயாரும் காரணமில்லை

24.9.11

கொடியங்குளம்-தாமிரவரணி-பரமக்குடி...ஜனநாயகத் தலைகுனிவுகள்.


ராமநாதபுரத்தில் இருந்து வீடு திரும்பும்போது சக ஊழியர் ஒருவர் சீக்கிரம் பஸ்ஸப்பிடிச்சி ஊரு போயிருங்கப்பு எங்கனயாச்சும் பஸ்ஸ நிப்பாட்டிட்டா அவ்ளோதான் என்றார். பரமக்குடி அஞ்சு முக்குரோட்டில் வானுயர்ந்த ப்ளக்ஸ் பேனர் இருந்தது. மறுநாள் குருபூஜை என்பதால் கூடுதல் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தார்கள். காய்ச்சலுக்கு மாத்திரை வாங்கவந்தவர்களைக் கூட நிக்காத போ என விரட்டிக் கொண்டிருந்தார்கள். உடன்வந்த பயணிகள் உச்சுக்கொட்டி தங்களது அதிருப்தியை வெளிக்காட்டிக் கொண்டார்கள். அடுத்த நாள் கடை யிருக்காது கூட ரெண்டு பால் பாக்கெட் வாங்கிவச்சுக்கொங்க என்று அருகிலிருந்தவர் போனில் மனைவிக்கு எச்சரிக்கை செய்து கொண்டிருந்தார். அந்த உரையாடல்களோடு பரமக்குடி இயங்கிக்கொண்டிருந்தது.
சமூகம்,உலகம்,இந்தியா,ஜாதி,பரமக்குடி
ஒரு தெய்வநம்பிக்கை இல்லாதவனாக தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு ’குருபூஜை’ என்கிற சொல்லை நானும் வெறுக்கிறேன். ஆனால் சுற்றிலும் நடக்கிற நடப்புகள் தான் அடுத்த வீட்டுக்காரனை ஆட்டுவிக்கிறது. நமக்குப் பிடித்துப்போனால் யப்பா கூட்டம் ஜேஜேன்னு இருக்கும் என்று கொண்டாடுவோம். பிடிக்காவிட்டால் ஒரே கசகசப்பு தொந்தரவு தாங்கமுடியாது என்று சபிப்போம். இப்படியான  சிந்தனைகள் நமது சாதிய ரத்தத்தில் ஊறிப்போனவை. பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தலுக்காக நான்கைந்துமுறை அந்தப்பகுதிகளில் பயணித்து பேட்டிகளுடன் இருந்தபோது ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தலித்தல்லாத எல்லோரும் திரு.தொல்திருமாவளவன் அவர்களின் பெயர் சொல்லும் போது ஒருமையிலும் ஒவ்வாத முகத்துடனமே தங்களை நிரூபித்துக் கொண்டார்கள். எல்லாம் சகஜமாக இருந்ததாம் அவர் வந்துதான் சாதீய மோதல்களை உருவாக்கிவிட்டாராம். இதே கருத்தை ஒரு படிப்பறிவில்லாத கூலிக்கார ஆதிக்க சாதிக்காரர் தொடங்கி முற்றும் கற்ற கல்வியாளர் என்று சொல்லிக்கொள்கிறவர் வரை வைத்திருக்கிறார்கள். அதில் முற்போக்கு பிற்போக்கு எல்லாம் ஏதும் வித்தியாசம் இல்லை.

இந்திய சமூகத்தில் வேரோடிக் கிடக்கும் எல்லாத் தவறுகளுக்கும் அடிநாதமாக இருப்பது சாதி மட்டும் தான் என்பதை இனங்கண்டு அதை வேரறுக்க கிளம்பிய தலைவர்கள் எல்லோரும் பகடி செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் புறந்தள்ளப் பட்டிருக்கிறார்கள் அல்லது சாதிய அடையாளம் கொடுத்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தியாவில் ஒரு கடவுள் அவதரிக்கவெண்டுமென்றால் கூட அவன்  மேல் சாதியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கிறது. சாத்தூருக்கு அருகிலே உள்ள ஓ.மேட்டுப்பட்டி என்கிற கிராமத்தில்  பகடை காளியம்மன் கோவில் என்று இருக்கிறது. சாமி இருக்கிறதா இல்லையா என்கிற விவாதத்துக்கு முன்னாள் இந்த மனிதன் தனது சாதியை எங்கெல்லாம் கொண்டுபோய் நிறுவி வைத்திருக்கிறான். பார்த்திபனூர் நுழைவுவாயிலில் பரளை என்று ஒருகிராமம் வரும் பத்தடி தூரத்தில் முஸ்லீம்பரளை என்று இன்னொரு கிராமம் வரும். அதே போலவே கடற்கரை கிறித்தவ புண்ணியத்தலமான உவரி போகும் போது, நாடார் உவரி என்று இன்னொரு ஊர் வரும்.

இப்படித்தான் இந்த தேசம் முழுக்க நானும் அவனும் ஒன்றில்லை என்கிற மூர்க்கமான குரலின் நடப்புகள் நிறுவப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு சின்னச் சின்ன பங்கம் வரும்போதெல்லாம் அரசுடன் கைகோர்த்துக் கொண்டு ஜாதி தனது கொடூர மரண தண்டனைத் தீர்ப்பை மிகச்சுலபமாக நிறைவேற்றிக் கொள்கிறது. இவை எதுவும் வேண்டாம், வாருங்கள் சீக்கியத்துக்கு என்று அழைத்துக் கொண்டு போனார்கள்.அங்கே சரியில்லை வாருங்கள் கிறித்தவத்துக்கு என்று  அழைக்க அங்கே ஓடினார்கள். அம்பேதகர் வந்து எல்லா வற்றையும் மறுதலித்து பௌத்த மதத்துக்கு  கூட்டிக் கொண்டு போனார். பின்னர் மீனாட்சிபுரங்களாவது நமக்கு பூரண மனித அடையாளம் தரும் என்று நம்பி ஓடினார்கள் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த ஓட்டத்தில் முன்னாடி வழிகாட்டியவர்களை அவர்களது தலைவர் களாக வரித்துக்கொண்டார்கள். ஆனால் பாருங்கள் இந்த தலித் சமூகம் தன்னை பெரும்பான்மை மக்களில் இருந்து ஒரு இம்மியளவு கூட வித்தியாசப்படுத்தாமல் அப்படியே அச்சு அசலாக அவர்களைக் நகலெடுத்துக் கொண்டுதான் வாழ்ந்து தொலைக்கிறது. அதில் ஒன்றுதான் இந்த குருபூஜை.

சமீபகாலங்களில் குருபூஜை கொண்டாடாத சாதிகளே இல்லையென ஆகிப்போனது. இப்போதெல்லாம் தமிழகத்தில் புதிய புதிய சுதந்திரப் போராட்ட வீரர்களும் புதிய புதிய மன்னர்களும் கொண்டாடப் பட்டுக்  கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகளுக்குக்கூட ஜாதிப்பெயிண்ட் பூசி தெருமுனையில் நிறுத்தி விட்டார்கள். அப்படிப் பூசிவிடுகின்ற கூட்டங்களில் இருந்து ஒரு போதும் தலைவர்கள் உருவாவதில்லை. அவர்களை காசுபோட்டு,லாரிபிடித்து ஒருங்கினைத்து மாநாடு நடத்தி தங்கள் தொழிலையும், கருப்புப் பணததையும் காப்பற்றிக்கொள்கிறார்கள். கூடவே சட்டசபைத் தேர்தலில் தங்களுக்கான தொகுதிகளை ஒதுக்கி அப்புறம் உல்லாசங்களையும் ஒதுக்கி கொள்கிற வியாபரம் பெருகிக்கிடக்கிறது.

ஆனால் இவைகளோடு தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவு தினத்தையும் வரலாற்றையும் எடைபோடமுடியாது. அவர் யார்,எங்கிருந்துவந்தார்,என்னசெய்தர்,எதற்ககாகக் கொலை செய்யப்பட்டார் என்கிற செய்தியை தெரிந்துகொள்ளவேண்டும். நாம் நமது சொந்த ஜாதி அடையாளத்தைக் கழற்றி வைத்து விட்டுப் படித்தோமேயானல் ஏனைய சாதிய மாநாடுகளுக்கும் அவரது நினைவு தினத்துக்குமான வித்தியாசம் புரியும்.

இன்னும் போராட்டக்களத்தில் இருக்கும் மணிப்பூர் மக்களின் கொதிநிலையை மேலேற்றி விட்டவர் தோழர் மனோரமா தேவி.  ராணுவச் சட்டம் afspa 1958 அமலானதால் அந்த இன மக்கள் சந்தித்த இன்னல்களை ஒன்று திரட்டியவர்.ஒரு தன்னார்வத் தொண்டர்.அந்த ஒரே காரணத்துக்காக அவர் கூட்டிக்கொண்டு போய் கற்பழித்து தெருவில் வீசியெறியப்பட்டார்.அன்றிலிருந்து இந்த நிமிடம் வரை அந்த பசுமையான மணிப்பூர் பிரதேசம் பற்றி எறிந்துகொண்டே இருக்கிறது.  இப்படித்தான் உலகமெங்கும் தியாகிகள் இனங்காணப்படுகிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு போரட்டக்காரர்தான் தியாகி இமானுவேல் சேகரன் அவரைக்கொண்டாடும் செப்டம்பர் 11 ஆம்நாள்.அது குருபூஜையல்ல. ஒரு தியாகியின் நினைவுதினம்.  ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தான் கற்ற கல்வி, பட்டறிவு இவற்றை செலவழித்தவர். படிப்பறிவில்லாமலும் அடிமை இருட்டிலும் கிடந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வெளிச்சம் கொண்டுவந்தவர். செருப்புப் போடக்கூடாது,நல்ல ஆடைகள் அணியக் கூடாது. படிக்கக்கூடாது,எதிர்த்துப் பேசக்கூடாது என்கிற அடக்குமுறை முதுகுளத்தூர் பகுதிகளில் அமலில் இருந்தது. விடுதலைக்குப் பிந்திய காங்கிரஸ் ஆட்சியும்,கிறித்தவ மதமும் இவற்றிலிருந்து தலித்துகளூக்கு விடுதலை கொடுத்தது. அதனாலேயே காங்கிரசுக்கு ஓட்டளிக்கக் கூடாது என்கிற மேல் அடக்குமுறையை ஏவி விட்டார்கள்.

அடங்ககமறுத்து தலித்துக்கள் எதிர்த்து நின்றார்கள். கலவரங்கள் வெடித்தது. அந்தக் கலவரங்களுக்கு முடிவுகட்ட அரசு அமைதிப் பேச்சு வார்த்தையை ஒருங்கிணைத்தது. காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து விடுதலைப் போராட்டத்தில் கலந்து சிறைசென்றவரும், பின்னர் ராணுவத்தில் பணியாற்றியவரும், திரும்பிவந்து தகப்பனார் ஆரம்பித்த தேவேந்திர வேளாளர் சங்கத்தை வழிநடத்தினார் ஒருவர். அவர் இம்மானுவேல் சேகரன்.  அந்த தலித் மக்களில் இருந்து மேலெழுந்து வந்து  அவர்களுக்கான மூன்று பிரதிநிதிகளில் ஒருவராக 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி நடந்த சமாதானக் கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.அதனாலேயே,அதாவது ஒரு தலித்தை தலைவனாக ஏற்றுக்கொள்ள முடியாத மறுநாள் 11.09.1957 ஆம் தேதி கொல்லப்படுகிறார்.

இப்படித்தான் இதே ரீதியில்தான் உலகெங்கிலும் உள்ள போராட்ட வரலாறுகள் காணக்கிடைக்கிறது. எனது சந்ததிகளுக்கு எம் பெருமைகளைச் சொல்லாதே நாம் சந்தித்த அவமானங்களைச்சொல், நாம்பட்ட வேதனைகளைச்சொல், நாம் சிந்திய ரத்தத்தைப் பற்றிச்சொல் அதிலிருந்து அவர்கள் புதிய வரலாறுகளை உருவாக்குவார்கள் என்கிற கோரிக்கைகளோடே நசுக்கப்பட்ட உலக சமூகம் காத்துக்கிடக்கிறது. இந்தியாவில் அதைச்சொல்லுகிற தலித்துகள் மட்டும் கலகக்காரர்களாக, பிரிவினைக்காரர்களாக, கலவரங்களைத் தூண்டுபவர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்களின் அணிதிரட்டல்கள் மூர்க்கத்தனமாக கையாளப்படுகிறது.  அவர்களின் கொண்டாட் டங்கள் மட்டும் அமைதிக்கு பங்கமென்கிற மாதிரி அரசாலும் ஊடகங்களாலும் திரித்துக் கூறப்படுகிறது. தோழர் ஜான்பாண்டியன் அப்படிச் சித்தரிக்கப் படுகிறவர்களில் ஒருவர். திரித்துக் கூறப்படுகிற ஒரு நிகழ்வு தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவுதினம்.

தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக இந்திய சமூகம் ஆர்ப்பாட்டம்,உண்ணாவிரதம்,சாலைமறியல் ஆகிவற்றை  நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதை எதிர்கொள்ள அரசு பேச்சு வார்த்தை நடத்துகிறது,கைதுசெய்கிறது. மிஞ்சி மிஞ்சிப்போனால் தடியடி நடத்தி அப்புறப்படுத்துகிறது. ராம் லீலா மைதானத்தில் கைதுசெய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்ட பாபா ராம்தேவுக்காக இந்தியா முழுமைக்கும் கொதித்து எழுந்ததுபோல பத்திரிகைகள் சித்தரித்தன. அன்னாஹசாரேவின் உண்ணா விரதத்துக்கு அனுமதிமறுக்கப்பட்ட போது இந்திய மேட்டிமை வாதிகள் ஜனநாயகம் செத்துவிட்டதென கூக்குரலிட்டது. நீதிமன்றம் தலையிட்டு உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட்டது.

அவற்றையெல்லாம் நேரலையாக இந்தியா பார்த்துக் கொண்டிருந்தது. நடந்து முடிந்து இன்னும் ஒருமாதம் கூட ஆகவில்லை.  ஆனால் ஒரு நூற்றி ஐம்பது கிராமத்தார்கள் சாலையில் உட்கார்ந்து மறியல் செய்ததற்கு துப்பாக்கி சூடு நடந்திருப்பது இந்திய சமூகத்தில் தலித் தல்லாதவர்  சந்தித்திராத  கொடுமை. சமாதானம் செய்திருக்கலாம், கைது செய்திருக்கலாம், கண்ணீர்ப் புகை வீசிக் கலைத்திருக் கலாம். அத்துணையிலும் ஆத்திரம் தீரவில்லையா  லத்திக்கம்பால் கூட அடி அடித்திருக்கலாம்.எதிரி நாட்டுப் படைகளைச் சுடுவது போல துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது காவல்துறை. அவ்வளவு ஆத்திரம் எங்கிருந்து வந்தது. நிராயுத பாணிகளான அப்பாவி களின் உயிரைப் பறிக்க உத்தரவு  கொடுத்தது யார் ?.

ஒரு மத்திய மந்திரியைச் செருப்பாலடித்தவனைக் கூட இழுத்துக் கொண்டுபோய் சிறையில்தான்  அடைத்தார்கள். நாடுகடந்து வந்து மும்பை தாஜ்விடுதியில் கண்மண் தெரியாமல் துப்பாக்கிச்சூடு நடத்திய கசாப் இன்னும் விசாரணைக் கைதியாகவே இருக்க, இந்த அதிரடித்துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான காரணம் தாழ்த்தப்பட்ட்வர்கள் என்பதால் மட்டுமே. இது போன்ற சாதி ஊர்வலங்களுக்கு கொடுக்கிற எச்சரிக்கையாக அரசு இதைச்செய்ததாம்.இருக்கிற அரசியல் அழுத்தங்களைத்திசைதிருப்ப அல்லது தமிழர்களை ஒன்றுசேரவிடாமல் தடுக்க எடுக்கப்பட்ட சாணக்கியத்தந்திரம் என்றெல்லாம் நோக்கர்கள் ஆராய்ச்சியில் இறங்குகிறார்கள். வேறெந்த சாதியின் ஊர்வலமும் இங்கே நடக்கவில்லையா ?எனில் இந்த தலித் மக்களின் ஏழு உயிர் என்ன சோதனைச்சாலைக்கு கொண்டு போகும் எலிகளின் உயிரைவிட மலிவானதா ?தாக்குண்டால் புழுக்கள் கூட தரைவிட்டுத்துள்ளி எழும் சாக்கடைப் புழுக்களா தலித் மக்கள் காரணமில்லாமல் நசுக்குவதற்கு.

ஒரு அரசுக்கே தலித் மக்கள் மீது கவிழ்ந்திருக்கும் குரோதத்தின் மிக வெளிப்படையான சாட்சிதான் இப்படியான படுகொலைகள். இது கொடியங்குளத்தில், தாமிரபரணியில் இப்போது பரமக்குடியில். இந்த அரசின் இமாலயத் தவறைச் சுட்டிக்காட்ட இப்போது மொத்த தமிழகமும் விரல் நீட்டியிருக்கவேண்டும்.  ஆழ்மனத்தில் தாண்டவமாடும் எக்காளத்தை முகத்தில் மறைக்க மௌனம் சாதிப்பதை நீண்ட நாள் மறைக்கமுடியாது. அதைக் கவனம் கொள்கிற பக்குவம் இங்கிருக்கும் இருபதுகோடிக்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வரும்.

அதுவரை தாங்கள் சிந்திய ரத்தத்தை கணக்கெடுத்து வைத்துக்கொள்வார்கள்.

2.12.10

இதற்கு என்ன தலைப்பு வைக்க ?

ஒரு புதுமனை புகுவிழாவுக்குப் போயிருந்தேன்.வீட்டுக்குச் சொந்தக்காரர் நெருக்கமானவர் எனபதால் காலை மதியம் இரவு மூன்று வேளை சாப்படும் அங்கேதான்.மூன்று நேரமும் மூக்கை உறுத்தாத இயல்பான மணம்,வயிற்றை உறுத்தாத  நல்ல சாப்பாடு.சமையல்காரர் யார் என்று கேட்டேன். அறிமுகப் படுத்தி வைத்தார்கள். மணக்க மணக்க சமைத்தவர் சிரிக்கச் சிரிக்கப்பேசினார். இவ்வளவு அருமையா சமயல் பண்றீங்க ஏன் பெரிய்ய ஆர்டகள் எடுத்து செய்யக்கூடாது என்றேன். எல்லாம் பேர் ராசி தான் தோழர் என்றார்.என்னய்யா தோழர்னு சொல்றீங்க தோழர் வீட்டுக்கு சமைக்க வந்துருக்கீங்க நீங்களே ராசி மேல நம்பிக்கை வச்சிருக்கீங்க என்று கேட்டேன்.சிரித்துக்கொண்டே 'எம்பேரு அம்பேத்கார்' என்று சொல்லிவிட்டு கடந்துபோய்விட்டார்.

என்னக்குத் தெரிந்து இதுவரை எந்தப்பள்ளி ஆண்டு விழாவிலும் அம்பேத்கர் வேடமிட்டு  குழந்தை மாணவர்கள் மாறுவேடப்போட்டிக்கு வந்ததில்லை. லோகமான்ய பாலகங்காதர திலகரைக் கூடப் பார்த்திருக்கிறேன்.காரணம் பள்ளிகள் நடத்தப்படும் கல்வித் தந்தைகளால் அது அரசு பள்ளிகளா யிருந்தாலும் கூட அம்பேத்கர் ஒரு புரட்சிக்காரன் என்கிற பிம்பம் ஏற்படுத்தப்பட வில்லை.இதெல்லாம் எழுதப்பேச அயற்சிதான் வருகிறது. ஆனால் இந்த செய்தியைப்படிக்கும் போது நமக்கு என்ன நேர்கிறது ?.

தீக்கதிர் 02.12.10 தலையங்கம்.

//தலைக்கு குளித்ததால் ஈரம் உலர வேண்டும் என்பதற்காக இரட்டைச் சடை போடாமல் வந்த கோவை மாணவி ஹரிஹரசுதாவின் தலையை சுவற்றில் மோதியதோடு தலைமுடியையும் வெட்டி எறிந்துள்ளார் ஆசிரியர். விருதுநகர் மாவட் டம் திருத்தங்கல் பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர் கள்; தொடர்ந்து சாதிய ரீதியாக தாக்கப்படுகிறார் கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் ரோகிணி என்ற எல்.கே.ஜி மாணவி சக மாணவனை விளையாட்டின் போது கிள்ளி இருக்கிறாள். இதற்காக ஆசிரியர் ரோகிணியை தாக்கியதில் குழந்தை இறந்துவிட்டது. இதை மறைத்து தண்ணீர் தொட்டியில் வீசியிருக்கிறார்.

இவையெல்லாம் சில செய்திகளே. தேர்வு அட்டையால் மாணவனின் மண்டையை உடைத்த ஆசிரியர், ஆசிரியர் திட்டியதால் மாண வன் தற்கொலை, மாணவனை செவிடாக்கிய ஆசிரியர், வகுப்பறையில் அவமானப்படுத்தப்பட் டதால் எலி மருந்து சாப்பிட்ட மாணவி, தலைமை ஆசிரியரின் பாலியல் வக்கிரங்கள், தலித் மாண வர்கள் மீது தொடரும் தாக்குதல்கள் என 2008ஆம் ஆண்டு மட்டும் 21 நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. பதிவாகாதவை இன்னும் பல.//

//“தேசிய ஆணையத்தின் வழிகாட்டல்கள் குறித்தும் குழந்தைகளையும் அவர்களது உரிமை களையும் பாதுகாப்பது குறித்தும் ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரும் தமது பள்ளி யில் அனைத்துப் பெற்றோர்களும் பங்கேற்கும் பேரவைக் கூட்டங்கள், அதேபோல் பள்ளிக் கல்விக்குழு அல்லது பெற்றோர்-ஆசிரியர் கழகக் கூட்டங்களை நடத்த வேண்டும்”. “உடல் ரீதி யான தண்டனைகள் தொடர்பாக வட்டார அள வில் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரி யர் கூட்டத்தைக் கூட்டி, மாநிலத்தின் அனைத்து பள் ளிகளிலும் குழந்தைகளுக்கு எதிரான எந்த வன் முறைச் செயல் நடந்தாலும் ஒட்டுமொத்தத்தில் சம்பந்தப்பட்ட பள்ளியின் மீது கடுமையான நட வடிக்கைகள் எடுக்க வேண்டும்” என வலியுறுத்தி, 2009, மே 26 அன்று ஆணையத்தின் தலைவர் சாந்தா சின்ஹா அனுப்பிய வழிகாட்டும் குறிப்பின்மீது அரசு ஏதேனும் உருப்படி யான நடவடிக்கை எடுத்ததா? நிகழ்ச்சிப் போக்குகளைப் பார்க்கும்போது அனைத்து வழிகாட்டு நெறிகளையும் அரசு தூக்கி எறிந்து விட்டதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.//

அதே தீக்கதிரில் ப.கவிதாகுமாரின் கட்டுரை ஒன்றும் இருக்கிறது.மதுரை வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த தனபாலின் மகள் ப்ரியங்காவை வகுப்பறையைச் சுத்தம் செய்யச் சொல்லி அந்த குப்பையைத் திங்க வைத்த ஆசிரியர் குறித்த பதிவும் இருக்கிறது.படிக்க முடியாதபடி அவலம் கண்களில் திரையிடுகிறது.நாம் எங்கே இருக்கிறோம்.

13.7.10

அடிமைத்தனம் பொறுத்துக்கொள்ளும் வரை அமைதியாகத்தான் தெரியும்.

ஊருக்குள் நுழைந்த போது ஆறு ஏழு காவலர் வாகனங்கள், இரண்டு அதிரடிப்படை வாகனங்கள் நின்றிருந்தது. ஊர் மடத்தில், வாகனத்தில் பாதையில் எங்கும் ஆணும் பெண்னுமாக காக்கிச்சட்டைகள் நிறைந்திருந்தது. தெருவுக்குள் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இரண்டு மூன்று பெண்கள் இன்னும் அதிர்ச்சி மீளாத கண்களோடு உட்கார்ந்திருந்தனர். சென்ற முறை போனபோது கான்க்ரீட் சாலை போடப்பட்ட தெருக்களில் ஆங்காங்கே கம்பு, சோளம், கேழ்வரகுக்கதிர்கள் காயப்போடப்பட்டிருந்தது. இந்த முறை அந்தத் தெருவெங்கும் கற்கள் தாறுமாறாகக் கிடந்தது.  பெட்டிக்கடைகள், டீக்கடைகள் எல்லாமே பூட்டிக்கிடந்தது. மருந்துக்கூட ஒரு ஆணைப்பார்க்க முடியவில்லை. பெரும்பாலான வீடுகள் மண் சுவரால் கட்டப்பட்டு, மேல்கூரையாக தகர ஷீட் போடப்பட்டிருந்தன.

தெருவின் ஆரம்பத்தில் அப்படிப்பட்ட ஒரு வீட்டுக்குள் நுழைந்த போது இரண்டு பிளாஸ்டிக் குடங்கள், ஒரு தகரப்பெட்டி, ஒரு சின்ன மரப்பெட்டி, ஒரு பழைய புகைப்படச் சட்டம், அவ்வளவுதான் கோழிக்கூட்டைப் போலுள்ள அந்த வீட்டின் மொத்த சொத்து. அவையெல்லாம் உடைத்து நொறுக்கப்பட்டு சிதறிக்கிடந்தன. அடுத்த வீடு அங்கிருந்து ரொம்பத் தள்ளி இருந்தது. அங்கே சாகப்போகிற வயசில் ஒரு பாட்டி நின்று கொண்டிருந்தார்கள். அந்த வீட்டின் நிலையும் கதவும் சரிந்துகிடக்க வீட்டுக்குள் இரண்டு ஈயச்சட்டிகள் நெளிந்து கிடந்தது. சொந்தமென்று சொல்லிக்கொள்ள ஒரு பூனைக்குட்டி கூட இல்லாத அந்த மூதாட்டியின் எலிப்பொந்து போன்ற அந்த வீடு ஒரு தீவிர வாதியின் வீட்டைச் சூரையாடுவதைப் போல சூரையாடப்பட்டிருந்தது. விநோதமாக இருந்தது. அந்த வீடு தாக்கப்பட்டதற்கு என்ன காரணம் இருக்கும் என்று பலகோணத்தில் துருவித் துருவிக் கேட்டதில் எந்த அனுமானத்திற்கும் வரமுடியவில்லை. ஈரம் வீரம் ஏதுமற்ற குரூரம் மட்டுமே மிதமிஞ்சித்தெரிகிறது. பிரதானத்தெருவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் தாக்கப்பட்டிருந்தன. தேடுதல் வேட்டை என்கிற பெயரில் இது போல தாக்குதல் நடந்திருக்கலாம் என்று அது குறித்து விசாரித்த போது சொன்னார்கள். காவல் துறை தெருவுக்குள் வரும்போது எந்த ஒரு ஆணும் இல்லை என்று பதில் சொன்னார்கள்.

உத்தப்புரம் காலணிப்பகுதி, «ங்கு தான் 6.05.2008 அன்று தீண்டாமைச்சுவரின் ஒரு சிறு பகுதி இடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அறுபது வீடுகள் துவம்சப்படுத்தப்பட்டிருந்த பகுதியும் அதுதான். அங்குதான் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதன்முதலாகக் கட்டப்பட்ட தலித்துகளின் ஒரு சில சிமிண்ட் வீடுகள் இருக்கின்றன. அங்குதான் கெட்டிப்படுத்தப்பட்ட தீண்டாமை குண்டழுக்கின் மீது கேள்விகளைப் பாய்ச்சுகிற இளைஞர்கள் இருக்கிறார்கள். அங்குதான் ஒரு வீடு விடாமல் காவல் துறையின் உயர்மிராண்டித்தனம் நுட்பமாக இன்னொரு முறை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.(மிருகங்களும், காட்டுமிராண்டிகளும் நேயம் மிகுந்தவர்கள் அவர்களை அக்கிரமங்களுக்கு உதாரணம் சொல்லுவது சூது நிரம்பிய சிந்தனை). மின்விசிரிகளின் இறக்கைகள் அடித்து நொறுக்கப்பட்டுக் கிடக்கிறது. கோíÌ மரக்கதவுகள் அரிவாள்கள் கொண்டு சிதைக்கப்பட்டிருக்கின்றன. தலைமுறையாய்க் கண்ட சின்னச்சின்னக் கனவுகள் சின்னாபின்னப் படுத்தப்படுக் கிடக்கிறது உத்தப்புரம்.

உத்தப்புரம் இன்று தீண்டாமைச் சுவரால் அறியப்படுகிறது.மேற்குத்தொடர்ச்சி மலை சூழ்ந்த அழகிய நிலப்பரப்புதான். கரும்பும் நெல்லும் விளைகிற வளமான பூமிதான். கலாசாரத்தொன்மை வாய்ந்த மண்ணும் மக்களும் நிறைந்த பூமிதான். எல்லாம் அவரவர் ஜாதிக்குள்ளும் அதிகபட்சம் அவர்களுக்கு இணையான சாதிக்குள்ளும் தான்.  தலித்துக்கநளைப்பொறுத்த மட்டில் ஏனைய எல்லாரும் மேலிருந்து கீழ்நோக்கித்தான் பார்க்கிறார்கள்.  அது கிட்டத்தட்ட எல்லா மேல் சாதியினரின் குழந்தைகளுக்கு சேனைத் தண்ணீரோடு சேர்த்துப் புகட்டப்படுகிறது.  தமிழகத்தில் பெருவரியானவர்கள் அங்கு நடக்கிற சாதிப்பிரச்சினை அப்பகுதியிலுள்ள கள்ளர்களுக்கும் தலித்துகளுக்கும் என்று இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். விபரம் தெரிந்தவர்கள் என்று நம்பப்படுகிறவர்கள், எதோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகாலம்  கொண்டு கொடுத்து சௌஜன்னியமாக இருந்த  இரண்டு சாதிகளையும் அரசியல் ஆதாயத்துக்காக தூண்டிவிடுகிறார்கள் என்றொரு மூட நம்பிக்கையுடையவர்களாக  இருக்கிறார்கள். அவமானங்கள் சகித்துக்கொள்ளப்படும் வரை எல்லாம் சுமூகமாகத்தெரிகிறது.

 பள்ளிக்கூடம் விட்டுத்திரும்புகிற போது, நகரப்பேருந்தில், கூட்ட நெரிசலில், கைபட்டுவிட்டதற்காக கட்டி வைத்து அடித்த சமூகம் உத்தப்புரத்தில் அந்தச்செழுமையான வயல் வெளிகளில் செருக்கோடு வளர்ந்து கிடக்கிறது. தன்னையொத்த பள்ளி மாணவனை அண்ணே என்று சொன்னதற்காக வெகுண்டு எழுந்து "" நீ என்ன எங்கப்பனுக்கா பெறந்த என்னப்போயி அண்ணன்னு கூப்புடுற " என்று கட்டி வைத்து அடித்த கதைகள் பழங்கதைகள் அல்ல இதே கண்ணினி யுகத்தில் தான் நடந்துகொண்டிருக்கிறது.

ரணம் கோர்த்த வலிகள் நிறைந்த கதைகள் ஆயிரம் ஆயிரமாய் உத்தப்புரத்து தெருப்புழுதிகளில் கிடக்கிறது. இன்னும் சொல்லப்படாத அவமனச் சரித்திரங்கள் மண்ணின் அடிஆழத்தில் மக்கிப் போய்க்கிடக்கிறது.  கானாமல் போன ஆடு, மாடுகளைத் தேடி  தெருவுக்குள் நுழைகிற உத்தப்புரத்து தலித் அங்கிருக்கிற நாட்டாமையிடம் அனுமதி கேட்காமல் நுழையமுடியாது. கட்டணக் கழிப்பிடத்துக்குப் போகிற அவசர அனுமதியெல்லாம் அங்கே கிடையாது. அவர் தனது நாட்டாமைப் பெருமையை நிலை நாட்ட கால் மணி அல்லது அரை மணி நேரம் காக்க வைப்பார். அதற்கப்புறம் பூர்வாங்கமாக விசாரணை செய்துவிட்டுத்தான் அனுப்புவார். ஊர்மடத்தில் உட்கார்ந்து கொண்டு கீழ்சாதிக்காரனை விசாரிக்கிற வக்கிரம் எந்த ஊடகம் வழியாகவும் இதுவரை பதிவுசெய்யப்படவில்லை. அவையெல்லாம் சொல்லில் அடங்காத அவமனங்கள். அதற்கெல்லாம் அடங்கிப்போனப்பிறகும் கூட ஒரு வேளை அனுமதி கிடைக்கவில்லை என்றால் தனது மனைவியே கானாமல் போனாலும் திரும்பித்தான் வர வேண்டும்.

ஊர் எல்லையில் எழுமலை போகிற சாலையின் இடது பக்கத்தில், நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில், தலித்துகள் தெருவுக்கு போகிற வழியில் தான் செல்லியாரம்மன் கொழுவிருக்கிறாள். கோவிலுக்கு நாற்பது செண்ட் நிலத்தை விட்டுக்கொடுத்திருக்கிறது அரசு. அதற்கு அருகிலேதான் பேருந்து நிறுத்தம் ஆறுநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள்  வசிக்கிற பகுதிக்கென இன்னமும் பத்துக்கு ஆறு அடியில் ஒரு நிழற்குடை கட்ட முடியாத தெம்மாடியாகிப்போயிருக்கிறது அரசு. இப்டியாப்பட்ட அரசுகள் சேர்ந்து தான்  வாலைத் தூக்கிக்கொண்டு வல்லரசாகத் துடிக்கிறது.

கோவிலில் எங்களுக்கும் கும்பிடு பாத்தியதை இருக்கிறது என்று தலித்துகளில் சிலர் சொல்லிக்கொண்டிருந்தாலும். இப்பொழுது உடனடித்தேவை அங்கு ஒரு நிழற்குடை, அதற்குத்தடையாக இருக்கிறது செல்லியரம்மன் கோவில் மதில் சுவர். அந்த மதில் சுவரின் மறைவுக்குள்ளே தான் காலங்காலமாக தலித் பகுதியைச்சேர்ந்த சிறுவர்களும், இளைஞர்களும், ஆண்களும் கட்டிவைத்துச் சித்திரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதற்கு வெள்ளையடிக்கிற போது சில இளைஞர்கள் இது பிரச்சினைக்குரிய இடம் இதில் வெள்ளை அடிக்கக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். அதுகூடப் பொறுக்கமுடியாத உயராதிக்க வெறி, ஆயுதங்களோடும், நாட்டுவெடிகுண்டுகளோடும் ஆட்டம்போட்டிருக்கிறது. எதிர்த்து தாக்கியதைத் தாங்கமுடியத காவல்துறை நிர்வாகம் ஆதிக்க வெறியர்களோடு சேர்ந்து உத்தப்புரம் தலித் பகுதிக்குள் நடத்திய உயர்மிராண்டித்தனத்தின் மிகச்சுருக்கம் தான் மேற்சொன்னது.

சுவர் இடிக்கப்பட்டதிலிருந்து புதுப்புது பிரச்சினைகள் உருவாகி இருக்கிறது.திறந்துவிடப்பட்ட பாதைவழியே ஆட்டோ வில் போக்கக்கூடாது,இருசக்கரவாகனத்தில் போகக்கூடாது என்கிற புதிய சட்டங்கள் அமலில் இருக்கிறது.நாடாளுமனற உறுப்பினர் தோழர் டி.கே.ரங்கராஜன் நிதியிலிருந்து தொகை ஒதுக்கி நிழற்குடை அமைக்க பரிந்துரைத்தபோதிலும் இன்னும் அங்கு நிழற்குடை அமைக்க முயற்சிகள் எடுக்கவில்லை. இடிக்கப்பட்டது வெறும் செங்கல்சுவர்தான். தீண்டாமை என்கிற உலகமகா சாபக்கேட்டுச் சுவர் இடிபடாமல் அப்படியே தொடர்கிறது.இது வரை ஏழு எட்டு முறை தாக்குதல் நடத்தியிருக்கிற அரசபயங்கரவாதம் ஒரே ஒருதிசையில் தான் பயனித்திருக்கிறது.தீண்டாமைக்கு எதிராக 26 வகையான சட்டப்பாதுகாப்பு இருக்கிறது.அது புதையுண்டு போன நாகரீகச்சின்னங்கள் போல வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கிறது.

இவைகளின் மேல் கேள்வி எழுப்பிய தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் தலைவர்களை,அறப்போராட்டம் நடத்திய பொதுமக்களை 12.7.1010 அன்று மதுரையில் தாக்கியிருக்கிறது அரசு.இதைத்தான் நாம் ஜனநாயகம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம்