31.5.10

மிச்சமிருக்கிற நம்பிக்கை.

கேள்வி பலவுடையோர்,கேடிலா நல்லிசையோர்
மேலோரிருக்கின்றார் வெஞ்சினமேன் கொள்கிலரோ?
..
மண்டபம் நீர் கட்டியது,மாநிலத்தைக் கொள்ளவன்றோ ?
பெண்டிர் தமையுடையீர் பெண்களுடன் பிறந்தீர்,
..
பெண் பாவமன்றோ பெரியவசை கொள்ளீரோ?
கண் பார்க்கவேண்டு மெனக் கையெடுத்துக் கும்பிட்டாள்
..
அம்பு பட்ட மான்போல் அழுது துடி துடித்தாள்.
தேவி கரைந்திடுதல் கண்டே சிலமொழிகள்.

இது மிகநீண்ட வருடங்களுக்கு முன் மகாகவி பாரதி எழுதியது.
மகாகவிக்கும்,யுகங்கள் பழமையான திரௌபதைக்கும் மனிதர்கள்ளென்கிற
பந்தத்தைத்தவிர வேறெதுவும் இருக்கவாய்ப்பில்லை.
ஆனால் அவனது கோபம் மனிதாபிமானத்தை உலகுக்கு நினைவூட்டுவது.
உலகில் எங்கு அநியாயம் நடந்தாலும் அதைக்கண்டு கொதிக்கிற சேவுக்கும்
அவருக்கும் கட்சிரீதியாகக்கூட பந்தமில்லை.
அந்த பொதுத்தன்மை நிறைய்யத்தேவை இருக்கிற சூழல் இது.

கட்டிய கணவனே பெண்ணைத்தெருவில் போட்டு அடித்தால்
நீதிகேட்கும்  மனிதாபிமானம் இன்னும் நீடிக்கிறது.
அதுதான் வாழ்வின் சகலமுரண்களூடாகவும் ஒளிரும் நம்பிக்கை.
அதுதான் ஜீவிதத்தை முன்னிழுத்துச்செல்லும் கிரியா ஊக்கி.
அப்படியொரு அசலான ஜீவித நம்பிக்கையை முனவைக்கிற
பதிவர் செந்தழல் ரவியின் எழுத்து இந்த அதிகாலையில் என்னை
வெகுவாக உலுக்கிக் கவர்ந்தது.எல்லோரது மனசாட்சியையும்
லேசாகவேணும் அசைக்கும்.

மனிதாபிமானத்தை மீட்டெடுக்க இங்கே பதிவெழுதிய,
பதறிப்பின்னூட்டமிட்ட, படித்துச் சினங் கொண்ட
அணைத்து அன்புள்ளங்களுக்கும். நன்றி.

30.5.10

வலையுலகிலும் தொடரும் வன்கொடுமை.

அன்பிற்கினிய தோழர்களே....
வணக்கம்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் முடியப்போகிறது இந்த வலையுலகத்துக்கு வந்து. தயங்கித்தயங்கி உள்ளே வந்த என்னைத் தாங்கிப் பிடித்தவர்களின் பட்டியல் மிக நீளமானது.அவர்கள் எல்லோருக்குள்ளும்  ஊடுசரடாக ஓடுவது மனிதாபிமானம்.
 என்னோட,தோழன்,பாரா,ராகவன்,கதிர்,வானம்பாடி,நேசன்,கும்கி
(ரோஷக்காரன்),பாலாஜி,ஆடுமாடு,வெயிலான்,ரமேஷ்,சரவணர்கள்,harikaran,
இர்ஷாத்,சீமான்கனி,பெண்தோழர்கள்,முல்லை,அருணா,தாரணி,தீபா,
லாவண்யா,பத்மா,சுந்தரா,மதார்,மழை,முத்துலட்சுமி,கலகலப்ரியா,இப்படி இன்னும் நீண்டுகொண்டே போகும்..யாரும் விடுபட்டுப் போனதாக எண்ண வேண்டாம் எல்லோரிடத்திலும் அன்பிருக்கிறது.

இந்தவார நட்சத்திரமாக அறிவித்த தமிழ்மணம் குழுவுக்கும்.எனது வலைப் பக்கத்துக்கு வருகை தந்த அணைத்து நண்பர்களுக்கும்.எனது பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்ட ப்ரியமானவர்களுக்கும்,ஓரளவுக்கு சுமாராக இருந்த என் எழுத்தை தட்டிக்கொடுத்து ஊக்குவித்த எல்லோருக்கும் என் அன்பும் வணக்கமும்.நெஞ்சாந்த நன்றியும்.

ஆனால் ஒரு சின்ன நெருடலிருக்கிறது அதை இப்போது பகிர்ந்து கொள்ளாமல் போனால் வேறு சரியான நேரமில்லை.

எல்லோரிடத்திலும் எழுத்திருக்கிறது, சின்னச்சின்ன குறைகளோடு.அவை குறைகளில்லை எழுத்தின் படிகள்.அப்படித்தான். குற்றம் பார்க்கின் சுற்றமில்லை. நூறுசதவீதம் சுத்தமான எழுத்து படைப்பு என்பது நெட்டுருப்பண்ணும் மெக்கலே பரீட்சையில்கூட இல்லை. அப்படியிருக்கும் போது படைப்பில் அது சாந்தியமில்லை.சிலருக்குப் பிடிக்கலாம், சிலருக்குப் பிடிக்காமல் போகலாம். ஆனால் பொதுவான நியாயம் என்ற ஒன்றிருக்கிறது.ஆண்களே சைக்கிள் ஓட்டாத காலத்தில், கடயத்தில், ஒரு பெண் சைக்கிள், ஓட்டியதைப்பாத்ததும் மஹா கவி பாரதிக்கு ஒரு பொறி வந்தது அதுவே மிகச்சிறந்த கவிதையாகவும் வந்தது. 'அக்கினிக்குஞ்சொன்று கண்டேன்'.

அதுபோலத்தான் வலையெழுத வந்தவர்களில் மிகையாகப் பெண்கள் வருகிற இந்த புது வரத்தை கையிலேந்திக் கொண்டாட வேண்டும். சின்னச் சின்னத் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும் அதுதான் தன்னை எழுத்தாளன் என்று நிலை நிறுத்துகிற செயல். அதை விட்டு விட்டு விமர்சனங்களைத் தாங்க முடியாமல் பெண்களை ஆண் எனும் ஆங்காரத்திலும், வக்கிர மொழியிலும் வசைபாடுவதை ஒரு போதும் படைப்பென்றும், எழுத்தென்றும் கூறவே முடியாது.நான் எழுதுகிற எழுத்தை, படைப்பை எனது தாய், என் மனைவி,என் மகள் மட்டுமல்லாது பக்கத்து வீட்டுப்பெண்களும் படிக்கிற மாதிரி எழுதினால் மட்டுமே அது படைப்பு. அப்படியில்லாதவை காக்கூசில் வெளியேறும் அருவருப்பு.அதை எழுதுவது எல்லாம் தெரிந்த ஏகாம்பரக் கம்பனாக இருந்தாலும் கூட, அது பீச்சியடிக்கும் ப்ளஸ் அவுட் தண்ணீரில் அடித்துப் போகும்.

மனிதகுல வரலாற்றில் எத்தனை கோடி வருடங்கள், எத்தனை கோடி விலங்குகள் எச்சமிட்டுப் போயிருக்கும். எங்காவது, ஏதாவது உயர்ந்த பிறப்பின் எச்சங்களுக்கு ஏதும் தடயமிருக்கிறதா நர்சிம்? நீங்கள் நம்பும் பிறப்பின் அடிப்படையில் எச்சமிட்ட உயர் பிறப்பின் எச்சங்கள் ஏதும் அருங்காட்சியகத்தில் இருக்கிறதா?.இருந்தால் கொண்டுவந்து வலையுலகுக்கு காண்பியுங்கள் அப்புறம் பூக்காரியின் பிறப்பு பற்றியும், இன்னபிற பிறப்புகள் பற்றியும் பேசலாம்.ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்  பிறப்பில் குறைந்தவர்கள் என்று நம்பும் யாரும் அடுத்தவர்களை இழிவாகப் பேசுவதில்லை.உங்கள் குடும்பத்திலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது ஒருபோதும் உங்களுக்கு ஞாபகம் வருவதில்லையா? உங்களுக்கென்ன மல்டிபிள் டிஸாடர்டர் சின்றோம் கோளாறு ஏதும் இருக்கிறதா?.

இன்னொரு 'கக்கூஸ்' கார்க்கி, 'குத்துங்க எசமான் குத்துங்க இந்தப்பொம்பளைங்க எல்லாமே இப்படித்தான் என்று பின்னூட்டமிட்டாராமே?.

நீங்கள் சரக்கடிப்பதை வாந்தியெடுப்பதை,விபச்சாரி வீட்டுக்குப்போய் உயிர்த்தரத்தில் உதை வாங்கியதைப் பதிவென்று சொல்லிப் பீத்தலாம்.பெண்கள் எழுதினால் என்ன வந்து குடையுது கார்க்கி.

பின்னூட்டமிடும்போது ஜாகிரதையாக எழுதவேண்டும்.நீங்கள் கண்ணாடி முன்னால் நின்று மீசையைச் சரிசெய்கிற நேரத்தில் பெண்கள் எதைவேண்டுமானாலும் சாதிப்பார்கள்.. அதில் பூக்காரன் பொண்டாட்டி கார்ப்பரேட் கம்பன் பொண்டாட்டி என்கிற பேதம் ஏதுமில்லை.அதில் நடு ரோடு,குளிரூட்டப்பட்ட அறை எல்லாம் இரண்டாம் பட்சம்.முன்னதாக தோழர் தீபாவை இழிவு படுத்திய ஆ'ண் பதிவர்களுக்கும்,இப்போது தோழர் சந்தணமுல்லையை unihilate பண்ணும் மூத்த பதிவர்களுக்கும் ஒன்று. இப்போது கூட உங்கள் சறுக்கலை சரிசெய்ய அவகாசம் இருக்கிறது.வேறு ஏதாவது இறுமாப்பு இருந்தால் இடிந்து விழும் ஜாக்கிரதை.

நண்பர்களே, தோழர்களே..

சித்திரக்கூடம் என்கிற வலைப்பக்கத்து  எழுத்தாளர் தோழர் சந்தணமுல்லையை.ஒரு பெண் என்பதற்காக, பூக்காரி என்கிற புனைவின் மூலமாக மிகக்கேவலமாக எழுதியிருக்கிறார் பதிவர் திரு.நர்சிம்.இது கண்ணகி பிறந்த நாடு. 'தேரா மன்னா'என்கிற சினம் தெறிக்கும் சொல்லெங்கும் தமிழ் எழுத்தில் விரவிக்கிடக்கிறது.அரசியலில்,சினிமாவில்,எம் சோதரத் தங்கைகள் தமிழீழத்தில்,ரேஷன்கடையில்,புலம்பெயர்நாடுகளில் இழிவு படுத்தும்போது துடிக்கிற கீபோர்டின் எழுத்துக்கள் இப்போதும் துடிக்கவேண்டும்.முதலில் கூரையேறிக் கோழி பிடிப்போம்.நமது கணினித்திரை ஊடாக வழிந்தோடும், இந்தச் சாக்கடையைச் சரிசெய்வோம்.மகாகவி பிடித்த எழுத்தாணியின் மறுரூபம் இந்த கீ போர்டின்  பொத்தான்கள்.

வெறுமனே,கும்மியடிப்பதற்கும்,சொரிந்துவிடுவதற்கும் உருவானதல்ல வலையெழுத்து என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.அதுதான் எழுத்துக்கு நாம் செய்கிற குறைந்தபட்ச மரியாதை.அங்கீகாரம்.

தோழர் தீபாவுக்கு வந்த முதல் ரோஷத்தின் நீட்சி இது. இன்னும் தொடரவேண்டும். தொடருங்கள்.

http://deepaneha.blogspot.com/2010/05/blog-post_30.html
http://mathavaraj.blogspot.com/2010/05/blog-post_30.html

பீரோ'க்ரேசி இன் இண்டியா.

அவர் ஆபீசராகப்பதவி உயர்வு வாங்குவதற்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே ஜகதலப்ரதாபன்,மேனேஜர் என்கிற ரப்பர் ஸ்டாம்பை செய்து பத்திரப்படுத்தியவர்.சொல்லியடிச்ச மாதிரி ஒன்னரை வருடத்தில் பதவி உயர்வை வாங்கிவிட்டார்.ஆங்கில வருடப்பிறப்பு,தமிழ் வருடப்பிறப்பு,தெலுங்கு வருடப்பிறப்புகளுக்கு எம்.டி வீட்டுக்குப்போவது. வீட்டில் ஆளில்லாவிட்டாலும் போட்டோ வின் காலில் விழுவது.காதலர் தினம் தவிர எல்லா தினங்களுக்கும்  எம்.டிக்கு வாழ்த்து அட்டை அனுப்புவது.காரைக்குடியி வசிக்கிற அவர் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருக்கும் நண்பருக்கு போன் பண்ணி பால்கோவா வாங்கி அதை கிப்ட் பார்சல் கட்டி எம்.டிக்கு  மீண்டும் அனுப்புவார்.ஸ்ட்ரைக் நடந்தால் போதும் அவருக்கு அப்படி ஒரு கொண்டாட்டம் முதல் நாளே ஓடிப்போய்
ஆபீஸில் படுத்துக்கொள்வார் அந்த நிமிஷத்திலிருந்து தலைமை அலுவலகத்துக்கு குறிப்பாக எம்.டி கேபினுக்கு நேரடி ரிப்போர்ட் கொடுப்பார். எம்.டியோடு போனில் பேசுகிற கறாராக எழுந்து நின்றுகொண்டே தான் பேசுவார்.அவ்வளவு மரியாதை.

ஒருநாள் சுவாரஸ்யமாக யாருடனோ போனில் கதைபேசிக்கொண்டிருந்தார் பிரதாபன்.அது பகல் பதினொன்னே முக்கால் மணி.கால்மணிநேரம் பெசிக்கொண்டிருந்த பின் சரியாப் பண்ணிரெண்டு மணிக்கு மின்சாரம் மாற்றி விடுவார்கள்.அப்போது ஒரு அரை நிமிஷம் மின்தடை வரும். வந்தது. நம்ம ஜெகதலப்ரதாபன் படீரென்று கடுங்கோபத்தோடு அந்த லேண்ட் லைன் போனை வைத்துவிட்டு 'ச்சேய்,.. இந்த ஈபிக் காரெய்ங்கெ, எப்பப்பாத்தாலு இப்டித்தான் பொசுக்கு பொசுக்குன்னு நிப்பாட்டிப்புடுவாய்ங்கெ, ஒழுங்கா போனக்கூட பேசவிட மாட்டாய்ங்கெ' என்று அங்கலாய்த்தார்.உடன் வேலை பார்த்த க்ளார்க் 'கரண்டில்லாட்டாலும் போன் ஒர்க் பண்ணுமே சார்' என்று சொன்னதற்கு.'அது எனக்குத் தெரியும், இங்க நா மேனேஜரா நீ மேனேஜாரா' எனச்சொல்லி அடக்கிவிட்டார்.அதன்பிறகு 'தண்ணிக் குழாயில தண்ணீ நின்னுபோனாக் கூட போன் கட்டாயிரும் சார்' என்று கோரஸ் பாடினார்கள்.

எம்.டி யின் ஒண்ணுவிட்ட பெரியப்பா இறந்து போனதுக்கு எம்.டி மொட்டை போடவில்லை,அட ஏங்க இறந்தவரின் மகன் கூட மொட்டை போடவில்லை. ஆனால் நம்ப ஜெகதலப்ரதாபன் மொட்டை போட்டுவிட்டார் என்றால் பாருங்களேன்.ஜெககதலப்ரதாபன் ஒரு முறை  தலைமை அலுவலகத்துக்கு மாறுதல் விண்ணப்பம் அனுப்பினார்.As I am the only 'gent' member in my family,I have to look after my age old parents' என்று எழுதி அனுப்பினார்.அதற்குப்பிறகு அவரது விண்ணப்பம் உலகப் புகழ்பெற்றதாகிவிட்டது.அதற்கு அவர் என்ன சொன்னார் தெரியுமா.'ஆங்கிலம் என்பது வெள்ளைக்காரெய்ங்க பாஷை, நான் ஒரு  சுதந்திர இந்தியன்' என்று வசனம் பேசினார்.

தமிழில் அவரது பாண்டித்தியமும் பெயர் போனது.வராக் கடன்களுக்கு நினைவூட்டல் கடிதம் எழுத வேண்டும். கையால் தான் எழுத வேண்டும்.அப்பெல்லாம் கம்ப்யூட்டர் உள்ள வல்ல.அவர் அன்புள்ள ஐயா என்று எழுதுவதற்குப் பதிலாக அன்புள்ள 'ஜயா' எழுதுகிற பாண்டிதியம் கொண்டவர்.ஒருதரம் கோபக்கார சந்திரசேகரன் சண்டைக்கு வந்துவிட்டார்.'நான் லோன் வாங்கினா எனக்கு லட்டர் போடலாம் என் பொண்டாட்டிக்கு எப்படி நீ லட்டர்  போடலாம்' என்று அடிக்க அடிக்கப் போனார்.கூட வேலை பார்த்தவர்கள் பழைய்ய கோப்புகளை எடுத்து வந்து எல்லாக்'கடிதங்களையும் காண்பித்த பின் கடன்கார சந்திரசேகரன் விருட்டென்று திரும்பிப் போய்விட்டார். போனவர் அதே வேகத்தில் திரும்பிவந்து ஒரு ரெட்டைக்கோடு நோட்டை கொடுத்து தினம் உங்க மேனஜரை எழுதிப் பழகச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்,அவர் தமிழ் வாத்தியாராம்.   

29.5.10

ஆனியன் தோசையும், அடங்காத லட்சியமும்.'அடே காமராஸ் சைக்கிள எட்றா'
'காத்துக்கம்மியாருக்கு,டபுள்ஸ் தாங்காது'
'உருட்டு ஒத்தியால் போய் கண்ணன்னங்கடயில பஞ்சர் பாத்துருவம்'
'துட்டுல்ல'
'நொட்டி,ஏஞ்செலவப்பா'
'இங்கரு எம்ஜியார் படம் ஏதும் ஓடல ஒரு இங்லீஷ் படமும்,பாலச்சந்தர் படமுந்தா ஓடுது.பேசாம போயி மிளகாச்செடிக்கு தண்ணிபாச்சு போ'
'பாத்தயா ஒரு ஆபத்துக்கூட ஒதவமாட்டிங்கியே, படிச்சவம் புத்தியக்காமிக்கயெ,படத்துக்கில்லப்பா'

வள்ளிமுத்துவின் சோகம் என்னை யோசிக்க வைத்தது.இது ஒருவேளை வேலவர் கதையாக இருக்குமோ. அவனும் இப்படித்தான். ஒரு நாள் உடனே கிளம்பு புதூர் போயி டீக் குடிச்சிட்டு வருவோம் என்று கூப்பிட்டுக் கொண்டுபோய் சாத்தூருக்கு சைக்கிள் மிதிக்கவைத்து, ஞானதுரை ஆஸ்பத்திரிக்கு இழுத்துக்கொண்டு போய்விட்டான். தப்பு பண்ணது அவன். டாக்டர் பத்து நிமிசம் எனக்கு கிளாஸ் எடுத்தார்.அதுபோல எதாவது வில்லங்கமோ.

'என்ன வள்ளிமுத்து நைட்டுல ஏது தண்ணிபாச்ச'
'ஏ இங்கரு ஒங்கள மாரிப்படிக்கல ஆனா ஒங்கள மாரி களவுசோலியெல்லாங்கிடயாது பாத்துக்கோ'
கொஞ்சம் டென்சனாகிவிட்டான்.அவனுக்கு எம்ஜியார்னா உயிர்.அவனுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கே அதாங்கெதி.அவனோட சைக்கிள் மட்கார்டு ரப்பர்ல எம்ஜியார்படம் வரைஞ்சு தரச்சொல்லி எங்கிட்டதாங்குடுத்தான்.
நானும் சாத்தூர் போய் ஓவியாலயா அண்ணாச்சிட்ட கேட்டேன். 'இந்த வேலையெல்லா வாங்குறதில்ல தம்பி' என்று சொல்லிவிட்டார்.திரும்பி வந்து மாசிலாமணி சுமாரா வரைவான் குடுத்து வாங்குனா என்னெத்தெ கண்ணையாவுக்கு எம்ஜியார் வேஷம் போட்ட மாதிரி இருந்தது.அதுக்கு கீழே ரெண்டு அ.தி.மு.க கொடி வரைஞ்சு சரிக்கட்டிட்டோ ம். ஒரு தடவ மாடர்ன் டெய்லர்ட்ட கூப்பிட்டுக் கொண்டு போய் சட்டையில் நாலுபை,கழுத்துப் பட்டைக்குப் பக்கத்தில் போலீஸ் வச்சிருக்கிற மாதிரி லூப் வைத்து தைப்பதற்கும் என்னைத்தான் கூப்பிட்டுக்கொண்டு போனான்.கிளியம்பட்டிக்கு அக்கா மக சடங்குக்கு போகும்போது ஒரு பேண்ட் கேட்டு என் உசுர எடுத்துட்டான்.

எது எப்பிடியோ ஒத்தையாலில் டீக்குடித்ததும் கட்டாயம் ரெண்டு பஞ்சுவச்ச சிகரெட் வாங்கித்தருவான்.
தேவி ஓட்டல்ல புரோட்டா வாங்கித்தருவான் நமக்கென்ன போவோம்.பழய்ய பாலம் வரைக்கும் அவன் மிதிக்கனும் டவுனுக்குள்ள நான்.இப்படி ஒரு ஒப்பந்தத்தோடே பயணப்பட்டோ ம்.சைக்கிள் சிட்டாப்பறந்தது.பழய்ய பாலம் வந்ததும் இறங்கி

'நேரா உடுப்பி ஓட்டலுக்கு உடு' என்றான்.
'எலே எங்களுக்கு தெரியாம பொண்ணு,கிண்ணு பாத்துட்டாங்களா'.
'தெரியாம வேலிக்காட்டுப்பக்கம் ஒதுங்குனாலே மறு நிமிஷம் ஒங்களுக்குத்தெரிஞ்சிரும் கல்யாணச்சோலியா தெரியாது ? மப்பு பண்ணாம ஓட்டு'

முக்குலாந்தக் கல்லில் இருந்த மணி ஏட்டு என்ன சினிமாவுக்கா என்று கேட்டார்,எதிரே வந்த முருகையா வணக்கம் சொன்னான்,சைக்கிளை நிப்பாட்டி உடுப்பி ஓட்டலுக்குள் நுழையும் போது கல்லாவிலிருந்த கண்ணன் சிரித்தான்.இதெல்லாம் கவனித்துக்கொண்டு வந்த வள்ளிமுத்து படிச்சவம் படிச்சவந்தாப்பா என்று சொன்னான்.

'எலே நீ என்ன வேணாலுஞ்ச்சாப்டு,எனக்கு மட்டு ரெண்டு  வெங்காயத்தோச வாங்கிக்குடு'
' வெங்காயம் நேரமாகும். அதுக்கு மின்ன இட்லி,கேசரி,வட,பூரி ஏது சாப்டரேளா'சர்வர் பொரிந்தார்.
அவன் முகத்தைப்பார்த்தேன்.நீ எதுன்னா சாப்டு எனக்கு ரெண்டு வெங்காயத்தோச என்றே சொன்னான்.
'பணம் எவ்வளவு வச்சிருக்க'
'நேத்து பருத்தி போட்ட ரூவாயில கொஞ்சம் உருவிட்டே' என்று சொல்லிக்கொண்டே ஒரு நூறு ரூபாய்த்தாளைக்காண்பித்தான்.

ஆச்சு,வெளியே வந்து திரும்ப ரெண்டு கோல்டு ப்ளேக் பில்டர் சிகரெட் வாங்கிக்கொடுத்தான்.அவனுக்கு பீடி வாங்கிக்கொண்டான்.'சைக்கிள எடு ஊருக்குப்போவம்' என்று சொன்னான்.வந்த வேலை  எதுவென்று கடைசிவரையும் சொல்லவில்லை. எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது.
பழய்ய பாலம் தாண்டியதும் சொன்னான்.

'ஒக்காலி ரெண்டு வருஷமா ஆசப்பட்டது, இன்னைக்குத்தா முடிஞ்சிருக்கு,எலே வெங்காயத்தோச சாப்டாச்சு,அடுத்தவாரம் ஆனியன் தோச சாப்டனும் அது எங்க கெடைக்கும்'

அப்பாவியாய்க் கேட்டான்.எனக்கு உள்ளிழுத்த சிகரெட்டுப்புகை புறையேறிக்கொண்டது.

0

ஊருக்குப்போயிருந்தேன், புதிதாய் வாங்கிய செல்போனில் ஆங்கிலமல்லாத வேறு ஏதோ எழுத்து வந்தது.திக்கு முக்காடிப் போனேன்.'எப்பா ஒரு பிள்ளையிருக்கு, செல்போன்ல என்னமெல்லாம் பண்ணுது அதக்கூப்பிடட்டுமா' அம்மா கேட்டது.மறுத்தேன். வீட்டுப்பக்கம் ரெண்டு பெண்கள் வந்தார்கள்.அதிலொரு பெண்ணிடம் செல்போனைக் கொடுத்தோம்.செட்டிங்ஸ்ல போய் லாங்வேஜ் மாற்றி ஆங்கிலத்தை மீட்டித்'தந்தாள்.அவள்தான் ஆயிரத்துக்கு'மேலே மார்க் வாங்கியதாக அம்மா சொல்லியது.கூப்பிட்டு விசாரித்தேன்.ஏழாயிரம்பண்ணையில் படிச்சதாம்.என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டேன்.கம்ப்யூட்டர் படிக்கப்போகிறேன் என்று சொல்லியது.யாருடய மகள் என்று கேட்டேன்.'ஆனியன்தோச' என்று சொல்லிவிட்டு ஒரு நமுட்டுச்சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்து போனாள்.

28.5.10

தந்தையர் காடெனும் போதினிலே.

எல்லாம் தயாராக இருந்தது பால் பானையில் மஞ்சள் கட்டலையே என்று அப்பா சொன்னதும் 'நேரம் ஆகுது 7.30 க்குள்ள அடுப்பு பத்தவைக்கணும்'என்று தமிழரசன் சொன்னார். 'மங்கள காரியம்டா மஞ்சள் கட்டணும்ல என்ன  சின்னப்பிள்ளவெளாட்டா இது, மங்களகரமான நாளப்பா'
'எதுக்கு வழக்காடிக்கிட்டு எடுங்க ரெண்டு மஞ்சத்துண்டு, நூல்ல கட்டிர்ரலாம்'
'தாத்தா வேஷ்டில இருக்கிற ப்ரைஸ் ஸ்லிப்ப கிழிக்கலையா'பேத்தி கிண்டலடித்தாள்.
'என்ன வேஷ்டி பெரிய்ய பட்டுவேஷ்டி'மருமகள் ஜீவரத்னம் ஏறிட்டுப்பார்த்தாள்.
'மைக்செட்காரர கொஞ்சம்  நேரத்துக்கு சவுண்டக் கொறைக்கச்சொல்லு'
'ஐயர் வரல்லயா'
'பத்திரிக்க வச்சிருக்கு வருவார்'ஆளாலுக்கு கட்டளைகளும்,ஏவல்களும்,ஓட்டமும் நடையுமாக அந்தப்புதுவீடுலாமளி துமளிப்பட்டது.ஊரிலிருந்து வந்தவர்கள்
'ஏ இங்க பாருவிள குளிக்கிற ரூம்ப. தண்ணி மழ பேய்ற மாதிரிக்கொட்டும்,சலங்கை ஒலில ஜெயப்ரதா குளிக்கும்ல அதும்மாதிரி.'
'கோயில்பட்டில எங்க மாமா வீட்லயு இப்டித்தான் கட்டிருக்காக'.

பால்ராஜிடம் சந்தணம் கறைக்கச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே  சூட டப்பா மறந்து போயிருந்தது. பால்ராஜைக்கூப்பிடுக்கொண்டே பின்னாடி நடந்து போன தமிழரசனுக்கு காந்தி மாமா வீட்டு வாசலில் அம்மா நிற்பது தெரிந்தது. இவனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டிருந்தது.தலையைக் கவிழ்த்திக்கொண்டே போய் சாக்குப்பைக்குள்
தேடினான்.
'ஏப்பா சூட டப்பாதான அப்பதயே ஒம்மக கிட்ட குடுத்தாச்சி, நல்லா சாமியெ நெனச்சிக்கிட்டு சந்தோசமா பத்தவையிங்கய்யா மனங்குளுரப்பொங்கும்'.வாசல் வரைக்கும் வந்தவன் திரும்பிப்போய் மடாரென்று தாயின் காலில் விழுந்தான்.'ஏய்யா, இங்கரு வேண்டாமுய்யா, கண்ணத் தொடச்சிக்கோ நல்ல நாளும்பொழுதுமா'
கந்திமாமா வீட்டுப்படியை விட்டு இறங்க மனசில்லை.கொஞ்ச தூரம் நடந்ததும் வேகமெடுத்து ஓடினான்.புதுவீட்டு வாசலில் எல்லாரும் இவனுக்காகக் காத்திருந்தது தெரிந்தது.
'கூறு கீறு இருக்காடா,இண்ணு ரெண்டு நிமிசந்தா இருக்கு,எல்லாத்தியு ரெடியா எடுத்து வச்சிருக்கணுமா இல்லியா '
'சும்மா எதுக்கெடுத்தாலு குதிக்காதிங்கய்யா,நா ஒத்தாளுதான,ஒமக்குத்தா யாரும் ஆகாது'
'நீ என்ன சொல்ற,சிரிக்கியுள்ள'.புது வீடு அதிர்ந்தது.வந்தவர்களின் முகங்கள் கொஞ்சம் வெளிறியது.ஆனால் வனுக்கு பழகிப்போயிருந்தது. 

இருபது வருடங்கள் ஓடிப்போயிருந்தது. சதா சண்டையும்,அடிதடியும் அழுகையுமாக கிடந்த அம்மா பக்கத்துவீட்டு பாக்கியத்தையிடம் வழிச்செலவுக்கு காசு வாங்கிக்கொண்டு ரயிலேறிப் போய்விட்டாள்.பள்ளிக்கூடத்திலிருந்து சாயங்காலம் வீடு திரும்பிய அவனுக்கு அம்மா ஊருக்குப்போனது தெரியவில்லை.சண்டைகளில்லாத வீடு கொஞ்சம் நிம்மதியைத் தந்தது.விளையாடிவிட்டு இரவு சாப்பிட வந்தபோது அப்பா புரோட்டாவும் சால்னாவும் வாங்கிவைத்திருந்தார்.காலையில் எழுந்திருக்கும்போதும் அடுப்பங்கரையில் சட்டியை உருட்டுகிற சத்தமில்லை.வீட்டுக்கும் வாசலுக்குமாக அலையும் அம்மாவின் புலம்பல்களும் இல்லை.வருசத்தில் இரண்டு மூன்று முறை காணாமல்போகும் அம்மா,வெள்ளை மீசைத்தாத்தாவோடு வந்து மூலையில் உட்கார்ந்திருப்பாள்.அப்பா ரெண்டு நாளுக்கு யாரோடும் பேசமாட்டார்.மூணாவது நாள் தாத்தாவுக்கும் சேர்த்து வசவு கிடைக்கும். அப்படிக் காணாமல்போன ஒரு நாளில் அம்மாவோடு போயிருந்தான் கேள்விப்பட்டு வந்த அப்பா பேருந்து நிலையத்தில் வைத்தே அம்மாவை கன்னத்திலடித்துவிட்டு தமிழரசனை இழுத்துக்கொண்டு வந்துவிட்டார்.அதிலிருந்து அம்மா இவனைக் கூட்டிக்கொண்டு போவதில்லை.பிறகு ஒரு மாசத்துக்கு ஓட்டல் சாப்பாடும் பாக்கியத்தை வீட்டுச்சாப்பாடும் தான்.

இப்படியே போகவர இருந்த அம்மா ஒரேயடியாக வரவில்லை.அம்மா எங்கே என்றுகேட்டால் இடுப்புவாறால் அடிவிழும்.அக்கா தலையெடுத்த பிறகு,அம்மாவின் நினைவு நிறையவே வந்தது.அக்கா வயதுக்கு வந்த பின்னாடி அவளைப்படிக்க அனுப்பவில்லை.பக்கத்துவீட்டு கன்னடக்காரனிடம் பேசினாளென்று அன்று அக்காளுக்குக் கிடைத்த அடி கொஞ்ச நஞ்சமல்ல.அம்மாவுக்காவது தாத்தா வீடிருந்தது.அக்கா எங்கே போவாள்.பண்டிகை நாட்களில் ராத்திரி துணிகளும்,பகலில் கசாப்பும் வாங்கிவந்து கொடுத்துவிட்டுப் போகிற அவருக்கென எடுத்துவைத்த சாப்பாடு மறுநாள் நாய்க்கு கொட்டவேண்டும்.அக்கா அப்பாவின் அதிகாரத்துக்கு வளைகிற மாதிரி வளர்க்கப்பட்டாள்.அப்பாவுக்கு சொந்த ஊர் நாகலாபுரம்.எட்டுப்படித்த அவருக்கு பெங்களூர் மில்லில் வேலை.அம்மாவுக்குச் சொந்த ஊர் கோவில்பட்டிக்கு அருகிலுள்ள வெங்கடாசலபுரம்.ஆனா,ஆவண்னா தெரியாத ஆட்டுக்காரக் குடும்பம்.  
தண்ணியப்போட்டுவிட்டு வந்து ஆடுமாடு பின்னால அலையிறவதான,என்று சொல்லிவிட்டு தொடர்ந்து கெட்டவார்த்தைகள் உபயோகப்படுத்துவார்.

அப்புறம் அக்காவின் சடங்குக்கு வந்திருந்த அம்மாவை வீட்டுக்குள் நுழைய விடவில்லை.அந்த மில் குடியிருப்பில் பத்துவீடு தள்ளியிருந்த ஒருவீட்டின் மூலையில் உட்கார்ந்திருந்த அம்மாவைப்பர்க்க அக்காவோடு போயிருந்த போது அக்காவின் தலையை வருடிக்கொண்டே அழுதது.ரெண்டு மூக்கிலும் மூக்குத்தி காது வளர்த்திருந்த அம்மாவை எட்டநின்றே பார்த்தான் தமிழரசன்.'எய்யா தம்ழு என்னய்யா படிக்கெ' என்று கேட்டபோது அந்த தமிழ்க் குடும்பம் 'அம்மாட்ட பேசு தமிழ்' என்று பந்தயத்தில் உற்சாகப்படுக்கிற தோரணையில் மொத்தமாய் சொன்னது.ஒங்கப்பா தேடுறார் என்று யாரோ சொல்ல அல்றிப்பிடித்துக்கொண்டு ஓடின  பொழுது பின்னர் அக்க கல்யாணம் வரைக்கும் குசுகுசுப்பேச்சானது. அக்கா பிள்ளைப்பேறுக்கு மமியா வீட்டுக்குபோகிறேனென்று சொல்லி வெங்கடாசலபுரம் போய்விட்டதை அறிந்த அப்பா அக்காவோடு பேசுவதையும் நிறுத்திவிட்டார்.

அப்போது சூலக்கரை ஐடிஐயில் மெக்கானிக் படித்துக்கொண்டிருந்தான்.லீவுக்கு வீட்டுக்குப்போனால் சமைக்கிற வேலை தலையில் விழும்.அக்கா இருந்து பூமணத்த அந்த வீடு மீண்டும் பீடிப்புகையும்,சாராய நெடியும் குடிகொண்ட வீடாகியது.லீவு நாட்களில் காலையிலேயே ரெண்டு தேரத்துக்கும் சேர்த்து ஆக்கிவைத்துவிட்டு.அங்கிருக்கிற மெக்கானிக் செட்டுக்குப் போய்விடுவான்.எப்போதாவது வருகிற அக்கா ஒருவாரம் தங்கியிருப்பாள் அவள் காலடியிலே கிடந்து ஒரு நாளைக்கு நாலைந்து தரம் தின்று தீர்ப்பான்.அத்தானுடனும்,பிள்ளைகளோடும் சினிமாவுக்குப்போய்,கப்பன் பார்க் போய் நாட்கள் திருவிழாவாகக் கழியும்.ஒரு மாசத்துக்கு வருகிற மாதிரி கொறிக்க சீடை,தொட்டுக்க ரெண்டுவகை ஊறுகாய்,காயப்போட்ட கறித்துண்டு எல்லாவற்றையும் எலிப்பொந்தில் சேர்த்துவைத்தமாதிரி சேர்த்துவைத்துவிட்டு போய்விடுவாள்.ரயிலடியில் இருந்து வரமனசில்லாமல், பெஞ்சிலேயே உட்கார்ந்துவிடுவான்.பார்க்கிற பெருவயதுப்பெண்களெல்லாம் தாயாய்த்தெரியும்.வீட்டுக்கு வந்தால் சாமிபடத்திலிருக்கும் பூவுக்கும் கூட மீசை வளர்ந்த மாதிரிதோன்றும்.கிட்டத்தட்ட அம்மா என்றொரு பிம்பம் இல்லாமலே போனது.அவள் வெங்கடாசலபுரத்தில் காட்டு வேலைகள் பார்த்துக்கொண்டு, ஆடுவளர்த்து உயிர் பிடித்துக்கொண்டிருந்தாள்.

சாத்தூரில் வீடு கட்டுவதானால் இருக்கிற பணத்தில் கொஞ்சம் கொடுக்கிறேன் என்று சொன்ன தகப்பனின் சொல்கேட்டு பெரிதாகவே கட்டினான்.ஒருவாரம் லீவுபோட்டு சாத்தூருக்கு வந்து காந்தி மாமா வீட்டில் தங்கி பத்திரிகை கொடுத்தான். முதல்நாள் ராத்திரி வந்த அப்பா அவ வல்லயே என்று கேட்டு சமாதானமாகிக்கொண்டார்.அவரைப் புதுவீட்டு மொட்டை மாடியிலேயே படுக்கவைத்தார்கள்.அம்மாவை அப்பாவுக்குத் தெரியாமல் காந்தி மாமா வீட்டில் ஒளித்து வைத்தார்கள்.காலை பால்காய்ச்சும் பரபரப்பில் தன்னந்தனியாக காந்தி மாமா வீட்டு போர்டிகோவில் இருந்து மகனின் புது வீட்டுத் திசை பார்த்துக்கொண்டிருந்தாள்.

'அது நொள்ள இது இல்லன்னு சொல்லத்தெரியுது பெத்த தாயி இல்லயே அதச்சொல்லத்தெரியுதா மனுசனுக்கு' என மனசுக்குள்ளே புழுங்கிக்கொண்டு பால்காய்ச்சினார்கள்.

27.5.10

பழனிமலைப் பயணம் - ஜனசமுத்திரத்தில் மூழ்குதல்

இந்த  இரண்டு மாத அவகாசத்தில் மூன்று முறை பழனி போக நேர்ந்தது.பழனி மலைகுறித்த கேள்வி ஞானத்தைக்காட்டிலும் சீர்காழி கோவிந்தராஜனின் இசைக்குரல் வழி அறிந்து கொண்டது ஏராளம்.முன்னமும் பல தடவை அந்தவழியாக பயணித்த போதும் மலையேறவில்லை.மலையேற முடிவு செய்து இழுவை ரயிலுக்காகக் காத்திருந்தோம்.நொடி நொடியாய் ஒண்ணரை மணிநேரம் கழிந்ததது.நின்ற இடத்திலிருந்து இரண்டடி கூட முன்னேற முடியவில்லை.இனி இந்த பெரும் வரிசையைக் கடந்து ரயிலேறி மேலேறி அங்கேயும் இரண்டுமணி நேரக் காத்திருப்பை மிஞ்யிருக்கும் பொழுதுக்குள் முடிக்கமுடியாது  என்று மலைத்துத் திரும்பினோம்.வருகிற போது இரண்டு நடைபாதைகள் இருப்பதாகவும் அதில் ஒன்று யானைப்பாதை கிட்டத்தட்ட சமவெளியில் நடக்கிற மாதிரித்தான் இருக்கும் எனவும் எங்களோடு திரும்பி வந்த ஒருவர் சொன்னார்.

முதன் முதலாக ஆறாம் அவகுப்பு படிக்கும் போது சித்தியின் கல்யாணத்துக்கு முக்கூட்டு மலை போனோம்.கல்யாணமும் பந்தியும் பிந்திப்போக மலை என்னை நிற்கவிடாது அழைத்தது.ஆறுபேர் பத்து நிமிடத்தில் உச்சிக்கு போய் விட்டோ ம்.பயமறியாப் பருவம்.தேடி வந்த பெற்றோர்கள் கொடுத்த அடிகளோடு நினைவிருக்கிறது முதல் மலையேற்றம்.

நானும் அவளும் சட்டென ஏறத்தொடங்கி, கிட்டத்தட்ட முக்கால் மணிநேரப்பயணத்தில் மலைமுகட்டுக்கு வந்துசேர்ந்தோம்.வழிநெடுக மனிதர்களின் உற்சாகமும், களைப்பும். ஆங்கங்கே போடப்பட்டிருக்கும் பட்டியல் கல்லில் உட்கார்ந்து ஆசுவாசப்படுத்திக் கொள்வதும் பிந்தியவர்கள் வரும் வரை காத்திருந்து கதைபேசி, புரணி பேசி,ஃபாண்டாக்குடித்து,இளசுகள் உரசி நகர்ந்த மனிதக் குவியலில் கேரளத்து பக்தர்களும் கணிசமாகக் கலந்திருந்தார்கள்.ஆவினன்குடியில் கல்யாணம் முடித்த ஜோடிகளில் ஒன்று கைகளை இறுகப் பற்றிக்கொண்டு மெலேறிவந்தது. ஒரு புரிதலுக்கான இடைவெளியில் மாப்பிள்ளை பெண்வீட்டார் தொடர்ந்து வந்தார்கள்.வெயிலும் நடையும் எல்லோர் மேலேயும் வியர்வையை அள்ளி ஊற்றியது.கிராமத்துச் சிறுவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒவ்வொரு வளைவையும் கடந்து போனார்கள்.மனிதர்கள் கூட்டமாக கூடிவிட்டால் சவால்களைச் சௌஜன்யமாக்கி விடுகிறார்கள்.இன்னும் கால்வாசி பாதை பாக்கி இருக்கும் போது ஒரு வளைவில் குளிர்பாணக்கடை வந்தது.கால்கள் கடும் வலியெடுத்ததால் இருவரும் ஒரு பத்து நிமிடம் உட்கார்ந்திருந்தோம்.

இன்னும் கொஞ்சம் உட்கார்ந்திருக்கலாம் என்று கால்கள் கெஞ்சுகிற போது ஒருவர் மூன்று அட்டைப்பெட்டிகள் நிறைய்ய குளிர்பாணப் பாட்டில்களை அடுக்கிச்சுமந்து கொண்டு வந்தார்.அவருக்காகக் காத்திருந்த ஒப்பந்தக்காரார் 'என்ன இவ்வளவு நேரமா' என்றார் 'கூட்டமா இருக்கு வேகமா ஏறமுடியல' 'சரி சரி கிளம்பு இன்னும் ரெண்டு நடை கொண்டுவரணும்'அந்த நடுவயது சுமை துக்கி விடுவிடுவெனக் கீழிறங்கிப் போனார்.தாண்டுகிற அவரது கால்களின் கெண்டைச் சதை மண்டைத் தண்டியாக இருந்தது.நான் கடவுள் திரைப்படமும் அதற்கு எதிரும்புதிருமாக வந்த வலை விமரிசனங்கள்,அப்போது கிடைத்த பழனி மலைத்தரவுகள் ஒவ்வொரு வளைவிலும் நினைவுக்கு வந்தது.ஆனால் அப்படிப் பிச்சை மாந்தர்கள் யாரும் தட்டுப்படவேயில்லை, அந்த ஏமாற்றம் சந்தோசமாக இருந்தது.

மலையுச்சியில் எதிர்பார்த்ததைவிட ஜனத்திரள் அதிகம்.இத்தனை மாந்தருக்கு ஒரு கோயில்போதாது என்ற டிஎம்மெஸ்சின் குரலும் ஞாபகத்திற்கு வந்தது.கூடவே எனது தகப்பனாரும் நினைவுக்கு வந்தார்.அப்படியொரு முருக பக்தர்.காலண்டர்,தீப்பெட்டி,கிழிந்த பேப்பர் எதில் முருகன் படமிருந்தாலும் கிழித்துக்கொண்டுவந்து சாமி படமாக்கிவிடுவார்.காட்டுக்கு விறகொடிக்கப்போகும் போதோ வேலைக்குப் போகும்போதோ மயிலிறகுகிடைத்தால் புதையல் கிடைத்த சந்தோசத்தில் கொண்டுவந்து கூரை முகட்டில் சொருகிவிடுவார் அவர்.ஊரில் நடக்கும் லோக்கல் கச்சேரிகளில் அவர் தான் முருக பக்திப் பாடல்கள் பாடவேண்டுமென்கிற எழுதாத விதியிருந்தது.ஒருமுறை அவரைக்கூட்டிக் கொண்டுவந்து காட்டவேண்டும்.

பிரகாரம் திறக்க ஒரு மணிநேரம் காத்திருக்க வேண்டுமாம். மலையைசுற்றினோம்.நாலா பக்கமும் பசிய பள்ளத்தாக்குகள் செழித்திருக்க திரும்புகிற பக்கமெல்லாம் மலைகள் தெரிந்தது.வீடுகள்,ஓடைகள்,மரங்கள் புள்ளிகளாக,கோடுகளாக,செடிகளாக காட்சிப்பிழை தரும் உயரம். அவ்வளவு உயரத்தில் நின்று கொண்டு எதுவும் வேண்டாம் என்கிற துணிச்சல் வந்ததெப்படி முருகனுக்கு.தனித்திருக்கப் போனவரை இவ்வளவு ஜனத்திரள் தேடிப்போவதும்,போகிற சாக்கில் தங்களின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ளவுமான ஒரு உயரமான ஆசுவாசத்தளம்.
இப்போதும் கூட அந்த சுமைத்தொழிலாளி ஜிங்கு ஜிங்கென மூன்று அட்டைப் பெட்டிகளை சுமந்து கொண்டு ஏறிக்கொண்டிருந்தார்.கீழிறங்கும் போதும் அதே பட்டியல் கல் பலகையில் வேறு வேறு மனிதர்கள் அமர்ந்து கொண்டு விடுபட்டுப்போன லௌகீகங்களைத் தொடர்ந்தார்கள்.சினம் தனிந்த கோபக்காரன் எப்போதோ மக்களோடு இறங்கியிருக்கக் கூடும். மிச்சமிருப்பது முருகப்பெருமான் மட்டுமே.

26.5.10

மருளாடியின் மேலிறங்கியவர்கள்

முக்குலாந்தக்கல்லில் இருந்து சாத்தூர் பேருந்து நிலையத்துக்கு கடைசிப் பஸ்ஸைப்பிடிப்பது போல ஒரு அவசர நடை நடந்துவிட்டு, அதே வேகத்தில் திரும்பி முக்குலாந்தக்கல்லுக்கு வரும் அவளைக் கவனிக்க யாருக்கும் நேரமில்லை. முகத்தில் பறவி இருக்கும் மஞ்சள், நெற்றியில் பதிந்திருக்கும் செந்துருக்கப்பொட்டுக்கும் சம்பந்தமில்லாத கிராப் தலை. நாலு அடி ஐந்தங்குள உயரம். அவளின் வயது மிஞ்சி மிஞ்சிப்போனால் இருபத்து எட்டிருக்கலாம். ஆனால் நூறு வயது வாழ்ந்து கடந்து விட்ட கால முதிர்ச்சி அவளின் முகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது. சுற்றியிருக்கும் உலகத்தை அலட்சியப் படுத்துகிற அந்த பார்வையில் ஆயிரம் ஞானிகளின் ஒளி குடிகொண்டிருக்கிறது.கடந்துபோன ஒரு நவீன வாகனத்துக்கார முதலாளியின் பார்வை இவள் பக்கம் திரும்பவில்லை. அது குறித்து அவளுக்குக் கவலை இல்லை. அந்த முதலாளி மாதிரியே நகரத்துப் பிரதானச் சாலையில் பல ஆண்கள் அவளைக் கடந்து போகிறார்கள். வெயில் சுள்ளென்று சுட்டெரிக்கிறது. செருப்பிலாத காலில் சாலையோரத்து மணல் ஒட்டிச்சிதற்கிறது. எல்லோர் பாதங்களையும் பதற வைக்கிற அந்தச்சூடு அவளை ஒன்றும் செய்யத்திராணியற்றுப் போனது.
 
காவல் நிலைய வாசலில் உட்கார்ந்திருந்த செவத்த வள்ளி இவளைக்கூப்பிட்டு ரெண்டு வெத்திலையையும் உடைத்த பாதி பான்பராக்கும் சேர்த்துக்கொடுக்கிறாள்.


'' சீ கருமம், இதப்போயி '' என்று தட்டி விடுகிறாள்.

'' ம்ம்ம்ம்.. ரெம்பத்தா சுத்தக்காரி மாதிரி சிலுப்பிகிராத ''

'' ஏ... சொன்னாலுஞ் சொல்லாட்டாலு நா சுத்தக்காரி தா அந்த ஆத்தாவ செமக்கமில்ல ''

'' ஆமா இடிச்சிப்போட்ட பழய டேசன் கக்கூசக்கேட்டாச் சொல்லும் ''

'' சீ நாத்தம் பிடிச்சவா ஓண்ட மனுசி பேசுவாளா ''

சுருக்கென்ற கோபத்தில் அங்கிருந்து நடையைக்கட்டினாள். ப்ரியா ஸ்டுடியோவுக்குள் நுழையும் போது யாரோ கேலி சொல்வது கேட்டும் கேட்காமலும் நுழைந்தாள். உள்ளே மாடன், அலங்காரிக்கப்பட்ட சின்னக்குழந்தையை மரப்பெஞ்சில் உட்கார வைத்து படம் பிடிக்க குனிந்து, குனிந்து வசம் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போதும் கூட அங்கிருக்கிற யாரும் அவளைக் கவனிக்கவில்லை. ஏதாவது பேச்சுக் கொடுத்தால் உட்கார்ந்துவிடும் அபாயம் உணர்ந்த, கம்ப்யூட்டர் முத்து, தீபா யாருமே அவளோடு பேசவில்லை எல்லோர் முகத்தையும் பார்த்துவிட்டு திரும்பவும் அங்கேயே நின்று கொண்டிருந்தாள். அந்தக்குறுகிய வாசலின் வழியே ஒருவாரத்திற்கு முன்னாள் படம் எடுத்த எஞ்சினியரிங் மாணவன் வர யோசித்து நின்றதைக் கவனித்த தீபா ''சச்சி கொஞ்சம் தள்ளிக்கோ'' சொல்லவும். அய்யய்யோ பிள்ளாண்டன் நிக்குதா உள்ளபோங்க சாமி என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தாள். அந்தக் கம்ப்யூட்டர் மாணவனும் எஞ்சினியரைவிடப் பெரிய பட்டம் கிடைத்த சந்தோசத்தோடு சாமிப் பட்டத்தை ஏற்றுக்கொண்டு உள்ளே போனான். இது ஒரு அன்றாட வாடிக்கை தான் என்றாலும் அந்த புகைப்பட நிலையத்தோடு சம்பந்தமில்லாத ஒரு பெண் அங்கு வந்துபோகிற எல்லோரோடும் மிக இயல்பாகப் பேசுகிற லாவகம் கற்றுக் கொண்டதும், வியப்பானவை. இன்னும் சில சாவகாசமான பொழுதுகளில் புகைப்பட நிலையத்தின் நடுக்கூடத்தில் செந்தில், மாடன், சூரியா, இன்னும்சில இளவட்டங்கள் உட்கார்ந்திருக்க நடுவில் உட்கார்ந்து கொண்டு வலமை பேசிக்கொண்டிருப்பாள் சச்சி. அந்த சச்சி யார் என்கிற ஒரு கேள்வி புதிதாய் நுழைகிற எல்லோருக்குள்ளும் எழுந்து அடங்கும்.


சரஸ்வதி என்கிற சச்சி.


மேட்டமலையில் ஒரு ஒதுக்குப்புறத்தில் பத்து வீடுகளுக்கும் குறைவாக இருந்தது அருந்ததியக் குடிசைகள். அதில் ஒரு குடிசையில் நாள், பொழுது, நட்சத்திர தேதிகளுக்குள்ளும் பஞ்சாயத்து ஜனனப்பதிவேடுகளிலும் பிடிபடாமலும் பதிவாகாமலும் பிறந்த சரசுவுக்கு ஒரு குடும்பம் இருந்தது. ரெண்டு வேளைச்சோறு சாப்பிடுவதற்கு ஊரின் ஒட்டு மொத்த அழுக்கைச் சரிசெய்ய வேண்டும். வெயிலோடும், புழுதியோடும், பசியோடும் கடந்துபோன பால்யப்பருவத்து பசுமை நினைவுகளில் மிக அறிதாக விளையாட்டும், மழையும், சில இனிப்புகளும் தவிர வேறு ஏதும் பிரமாதமாக இல்லை. மானம் பார்த்த இந்த கந்தக பூமியில் விவசாயம் காய்ந்து போனது. மத்தியில் ஆட்சி செய்த ஜனதா அரசு தீப்பெட்டிக்கான உற்பத்தி வரியைக்குறைத்து, குடிசைத்தொழிலாக அறிவித்தது அந்த எழுபதுகளில்தான் பருத்தி, மிளகாய் விளைந்த கிராமங்களில் தீப்பெட்டிகள் முளைக்கத் தொடங்கியது. விவசாயம் செய்த பண்ணையார்கள் தீப்பெட்டி முதலாளிகளானார்கள். அபோது எல்லா பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட குடும்பத்து குழந்தைகளைப் போலவே இலவசக்கல்வி, இலவச உணவு எலாவற்றையும் தாண்டிய வறுமையை எதிர்கொள்ள உழைக்கப்போகிறாள் சச்சி.

கட்டை அடுக்குவதற்கும், தீப்பெட்டி ஒட்டுவதற்கும் கச்சாப்பொருள்களை வீடுகளில் கொண்டுவந்து கொடுத்துவிட்டு, அதைத்தயாரித்து முடித்த பின்னால் எடுத்துக் கொள்வதற்குமான ஏற்பாடுகள் இருந்தது. ஆனால் அப்படி உட்கார்ந்து

வேலை பார்க்கக்கூட இடவசதியில்லாத வீடுகளில் உள்ள பெண்களும், பெண் குழந்தைகளும் சிறிய, நடுத்தர, மற்றும் பெரிய தீபெட்டி ஆலைகளுக்கு உழைக்கப்போவார்கள். காமராஜர் மாவட்டத்து பெண்களின் சந்தோசம் துக்கம் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் கொட்டிக் குவிக்கப்பட்ட இடங்களாக தீப்பெட்டி ஆபீசுகள் மாறிக்கொண்டிருந்த காலம் அது.

ஒரே ஒரு ஆரம்பக் கல்வி நிலையம் இருக்கிற ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தீப்பெட்டி ஆபீசுகள் இருக்கிற வினோதம் உண்டு. புலர்ந்தும் புலராத இளங்காலையில் எழுந்து முகம் துடைத்து தீப்பெட்டி வாசத்துக்குள் நுழையும் அவர்கள் பொழுது சாயும் போதுதான் வீடு வரமுடியும். ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் விடுமுறை. அன்றுதான் ஓடுகிறகிற பம்ப்செட் தேடி அலைவார்கள். மொத்தமிருக்கிற ரெண்டு அல்லது மூன்று ஜோடி உடைகளை துவைப்பார்கள், குளிப்பார்கள். பாதி கந்தக வாசமும் பாதி சோப்பு வாசமுமாக திங்கள் கிழமை வந்துவிடும். வீடு என்பது தூங்குவதற்கும் உணவு தயாரிப்பதற்குமான இடம் மட்டும் தான். மற்றபடி கனவு, காதல் துக்கம், சந்தோசம், சண்டை எல்லாவற்றையும் உள்ளடக்கிய உலகமாக தீப்பெட்டி ஆபீஸ் மட்டும் தான் இருக்கும்.

ரெண்டு பெண்களின் துணையோடு மத்தியான வேலைகளில் ஒருத்தி வீடு திரும்பினால், ஒரு கந்தகப்பூ மலர்ந்துவிட்டது என்பது கோனார் நோட்ஸ் இல்லாமல் புரிகிற விசயமாகும். இதுகூட புரியாத சச்சிக்கு ராக் ரூம் இருட்டே இரவாகியது. பொதுவாக ஊர் சுத்தம் செய்யும் குடும்பத்து குழந்தைகளும் சுத்தம்செய்கிற வேலைக்கு நிர்ப்பந்திக்கப் படுவார்கள். எல்லோரும் போன பிறகு ''ஏத்தா சச்சி நீ இரு'' என்று முதலாளி அவளை இருக்கச்சொன்னதற்கு அதுதான் காரணம் என்று நினைத்தாள். போகும் போது அலாதியாக கொஞ்சம் பணம் கிடைக்கலாம் என்னும் எதிர்பார்ப்பிமேல் மண் விழுந்தது. ராக் ரூமில் அந்த கணத்த எண்பது கிலோ உருவம் அவள் மேல் கிடந்தபோது அது காமம் என்று அறியாத பருவத்திலிருந்தாள். எதிர்க்க வலுவற்ற சமூகத்தில் பிறந்த அவளுக்கு அந்தக்கொடுமை கூட முதலாளிகளுக்கு செய்கிற ஒரு ஊழியமென்று நினைத்திருந்தாள். அது போலவே பல முறை அது நடந்தது. சாக்கடை சுமக்கிற, மலம் அள்ளுகிற, பொறுமையோடு சகித்துக்கொண்டாள். அதன்பின்னாள் முதலாளி மிளகாய்த் தோட்டத்துக்கு வேலைக்கு வரச்சொன்னார் அங்கேயும் கூட அவளுக்காக காமவெறி காத்துக்கிடந்தது. கால மாற்றமும் உடல் மாற்றமும் அவளுக்கும் கூட இச்சைகளை உண்டுபண்ணுகிற வேலையைக்காட்டியது. இப்போது முதலாளி எப்போது கூப்பிடுவார் என்கிற எண்ணம் உருவானது. அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று கந்தக வாசமும், கழிவு, குப்பை வாசமும் சூழ வேலை பார்க்கிற நிர்ப்பந்தம் அவளுக்கில்லாமல் போனது. இரண்டு அந்த வேலைகள் இல்லாத போதும் கூட அவளுக்குத் தேவையான எல்லாம் கிடைத்தது. மகள் கெட்டுப்போன சேதியைக் கடைசியில் தெரிந்துகொள்கிறவர்கள் பெற்றோர்கள் தான் என்பது கிராமத்து சொலவடை. கடைசியாகத் தெரிந்த போது அவள் கருவுற்றிருந்தாள். அடுத்த சாதிக்காரன் கிண்டல் பண்ணினால் கூட போட்டுத் தள்ளுகிற சமூகக் கட்டமைப்புள்ள இந்த பூமியில் ஒரு பெரிய பாலியல் பலாத்காரம் அதுவும் அறியாத வயசில் நடந்திருக்கிறது அதுகுறித்துக் கோபப்பட வேண்டிய குடும்பம், மாற்று யோசனை மட்டுமே யோசிக்க முடிந்தது. கருவைக்கலைக்க சொந்தக்காரர்கள் ஊருக்கு அனுப்பினார்கள். அங்கேயும் ஆண்டைகளும், ஆதிக்கமும் குறைவில்லாமல் இருந்தது. எனவே மிகக்குறுகிய காலத்தில் அவள் அங்கேயும் ஆதிக்க சாதிப்பையன்களுக்கும் பெரியவர்களுக்கும் பொழுது போக்க கிடைத்த சாவடிபோல், பாஞ்சாம்புலி போலாகிப்போனாள். மீண்டும் பழைய ஊருக்கு வந்த போது இருந்த கொஞ்ச நஞ்ச மானமாவது மிஞ்சட்டும் என்று பெற்றோர்களே பிராது கொடுத்து விபச்சார வழக்கில் சிறைக்கு அணுப்பினார்கள். சட்டி சுடுகிறது என்று தப்பித்துக் குதித்து அடுப்பில் விழுந்த கதையாகியது சச்சியின் பொழப்பு. சிறைவாசம் எழுந்துவரமுடியாத புதைகுழியானது. அங்கிருந்து வெளி வரும்போது ஒரு புடம் போட்ட தங்கமாக வருவாள், மறு வாழ்வு வாழ வைக்கலாம் என்ற இன்னொரு மூட நம்பிக்கையும் தகர்ந்து பெற்றோருக்கு. மீண்டும் பழைய வாழ்க்கைக்கு திரும்பினாள்.

1985 வருசம் முதல் 1990 வரை ஒரு ஐந்தாண்டுகள் நகரத்தின் பிரபலங்களில் ஒன்றாகிப்போனாள். அவளைப்பற்றியதான தகவல்கள் எந்த சுவரொட்டியிலும், எந்த ஊடகத்திலும் விளம்பரப் படுத்தப் படவில்லை எல்லோருக்கும் அவளைப்பற்றித் தெரிந்திருந்தது. அவளைக்கடந்து போகிற யாரும் எளிதில் தவிர்க்க முடியாத வசீகர தோற்றம், இருபத்து நான்கு மணிநேரமும் வாடாத வரம் வாங்கியது போலவே அவள் சடையேறும் மல்லிகைப்பூ, என வளைய வளைய வந்தாள். அந்தக்காலத்தில்தான் எம்ஜியார் இறந்துபோனார். அப்போது மூன்று நாட்கள் தமிழகத்து நகரங்கள் சகஜ வாழ்கை இழந்து வெறிச்சோடிக் கிடந்தன. ஜனங்கள் போக்கிடமில்லாமல் வீடுகளுக்குள் அடைந்துகிடந்தார்கள். கடைகள் மூடிக்கிடந்தன. மூடிய கடைகளின் முதலாளி நான்கு பேர் ஒரு காரில் அவளை எங்கெங்கோ கூட்டிக்கொண்டு போனார்கள். அவர்களில் மூன்றுபேர் நல்ல குடிகாரர்கள் அப்படியான நேரங்களில் அவளும் குடிப்பது தவிர்க்க இயலாததாகிவிடும்.

குடிப்பழக்கம் ஒரு புது அனுபவமாகவும், தாங்கும் சக்திக்கான மாற்று மருந்தாகவும் அவளுக்கு அறிமுகமாகியது. அதை

அறிமுகப்படுத்திய மாரிக்கிழவி சரக்குச் சாப்பிடுவது பார்க்கப் பார்க்கப் பொறாமையாக இருக்கும். சும்மா பச்சத்தண்ணி குடிக்கிற மாதிரிக்குடித்துவிட்டு ஒரு செருமல் கூட இல்லாமல் இயல்பாகிவிடுவாள். குடித்த சரக்கின் வாசனை தவிர குடித்ததற்க்கான் எந்த தடயமும் அவளிடம் இருக்காது. முதலில் கொமட்டிக்கொண்டு வந்தாலும் பின்னர் கொஞ்சநாளில் சச்சியும் பழகிக்கொண்டாள். அப்போது கேட்ட சரக்கு கேட்ட துணிமணி, வாரியிறைக்கிற பித்துப்பிடித்த பணக்காரர்களாக அவள் பின்னாலே அலைந்தார்கள். ஆனால் யாரிடமும் பணம் கேட்டு வாங்க வேண்டும் என்கிற யோசனை அப்போது அவளுக்குத் தோன்றவேயில்லை. இந்த உடல், அதன் வசீகரம், அதன் மேலுள்ள ஈர்ப்பு எல்லாம் ஒரு காலத்தில் அழிந்துபோகும். அப்போது வயிறும் வாழ்கையும் வழிமறிக்குமே என்கிற தூரத்து சிந்தனை இல்லாதவளாக காலம் கடத்தினாள். நகரத்து பிரமுகர்களும் அவர்களது மகன்களும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் அவளைத்தேடி வந்துபோகிற நாட்களில் அவளுக்கு கர்வம் கலந்த புன்னகை குடிகொண்டிருக்கும். அதை மாரிக்கிழவியிடம் சொல்லிச் சிரித்திருப்பாள். தன்னைக்கடந்து போகிற யாரும் உற்றுப்பார்த்தாலோ அசடு வழிந்தாலோ ''இங்க என்ன தொறந்தா கெடக்கு நாரக்கருவாட்ட பூன பாக்குற மாறி பாக்கான்'' என்று எடுத்தெறிந்து பேசுவாள். பார்த்தவன் தூரத்தில் போனதும் கெக்கலிட்டுச்சிரிப்பாள். அப்போது இந்த உலகம் தன் காலுக்கு கீழே கிடக்கும் ஆங்காரத்தோடு அலைவாள். குண்டு மஞ்சள் அறைத்துக் குளிக்கிற போதும் வாசனைச்சோப்புப் போடுக் குளிக்கிறபோதும் அவளே ரசிக்கிற இளமை மீது இன்னும் கூடுதல் கர்வம் மேலோங்கும். தெருவுக்குள் யாரேனும் நடத்தை பற்றிப்பேசினால் காளியாட்டம் ஆடி எதிராளியை நிலைகுலையச்செய்வாள். அந்தச் சொல் மீண்டும் ஒரு முறை தன்னை நோக்கி வராதபடி வேலி போட்டுக்கொள்கிற உத்தி அது.

ஒரு நாள் திருச்செந்தூர் முருகன் கோவில் காட்டேஜுக்கு கூட்டிக்கொண்டு போயிருந்தார்கள். மூன்று நான்கு பிரமுகர்களோடு இரவு குடியும் கூத்துமாகக் கழிந்தது. விடிகிற நேரம் மிகையான போதையில் தூங்கிப்போய்விட்டாள் கண்விழித்தபோது மீண்டும் இருட்டியிருந்தது. எவ்வளவு குடித்தோம் யார் யார் கூட இருந்தார்கள் என்கிற எதுவும் மனசில் இல்லை. ஊரின் மிகப்பெரிய புள்ளி ஒருவரின் மூஞ்சியில் காரித்துப்பியது மட்டும் நினைவிலிருந்தது. உடல் முழுக்க அடிபட்ட காயமும், நகப்பிராண்டல்களுமாக வலித்தது. அதோடு தலைவலியும், பசியும் கலந்த கிரக்கத்தில் நீண்ட நேரம் காத்திருந்தாள். உடன் வந்த யாரும் இல்லை. முதல் நாள் இரவோடு இரவாக அவர்கள் ஊர்போய்ச் சேர்ந்துவிட்டார்கள். நெடுநேரம் அழுகையும் வேதனையுமாக உட்கார்ந்திருந்தாள். கைபிடித்தபடியே நடந்து வரும் அய்யாவும், மடிக்குள் வைத்து பேன்பார்க்கிற அம்மாவும், காரணமில்லாமல் நினைவில் வந்து மீண்டும் மீண்டும் கண்ணீர் வந்தது. அங்கிருந்து பேருந்து நிறுத்தம் வந்து சில பேரிடம் சொல்லிப் பணம் கேட்டாள் பலனில்லை. பிறகு ஒரு குதிரை வண்டிக்காரர் எந்தப்பிரதி உபகாரமும் இல்லாமல் அவளுக்கு சாப்பாடும், பஸ் செலவுக்குப்பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார். திருச்செந்தூரிலிருந்து திரும்பி வருகிற போது இவ்வளவு நாள் தேக்கி வைத்த வீராப்பும் வைராக்கியமும் உடைந்தது. அப்போது ஒரு ஆண் துணை தேவை என்று உணர்ந்தாள். அதுவும் தாட்டிக்கமான ஆண் துணை.

அந்தக் காலங்களில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த அம்மாசி தான் அவளுக்கு துணையாளாகவந்தான். முதலாளிமார்கள் கூப்பிடும் இடத்துக்கு கூட்டிக்கொண்டு போவதற்கும். திரும்பக்கூப்பிட்டு வருவதற்கும் அவனுக்கு சரக்கும் சம்பளமும் உண்டு. அவள் வைக்காத விலை, அவள் கேட்காத பணம், இரண்டுமே மறைமுகமாக அவனுக்குச் சாதகமாகியது. சச்சிக்கோ அது குறித்து ஏதும் தெரியாது. ஆனால் முதல் முதலில் அவளுக்காக ஒரு ஆண் மெனக்கிடுவதை, சாப்பாடு வாங்கித்தருவதை, டிக்கட் போட்டு கூட்டிப்போவதை. பயணங்களில் அருகிருந்து, தூங்கும் நேரங்களில் தோள் தருவதை ஒரு வித்தியாசமாக உணர்ந்தாள். காலம் கடந்து , காமம் கடந்து ஒரு சிநேகம் முளைக்கத் தொடங்கியது அப்போது தான் எல்லோருக்கும் வருகிற குடும்ப ஆசை அவளுக்கும் வந்து வந்து போனது. ஆனால் அம்மாசிக்கோ கல்யாணம் ஆகி வயசுக்கு வருகிற பருவத்தில் பெண்ணிருந்தது.

அந்தக்காலத்தில் பல முறை கருவேந்திக்கொண்டாள், அதைக்கலைக்க நாட்டு மருத்துவச்சிகளைத் தேடிப்போனாள். அப்போது மாரிக்கிழவிதான் அவளோடு கூட இருப்பாள்.எப்போதுமே துணையாக இருந்தவள் காசில்லாத நேரங்களில் ஒரு டீ வாங்கி பகிர்ந்து சாப்பிடுகிற ஒரே ஜீவன் அவளுக்கு மாரிக்கிழவிதான். சில நேரம் அம்மாசி வந்து செலவுக்கு பணம் தந்துவிட்டுப் போவான். அதிக கருக்கலைப்பினால் அதிக உதிரம் விரயமாகியது. அதிக உதிர விரயத்தால் உடலில் பெலமில்லாமல் போனது. சாப்படும் சாராயமும், அம்மாசியின் தயவால் கிடைத்தது. ஒரு குற்ற வழக்கில் மூன்றுமாதம் சிறைக்குப்போன அம்மாசியில்லாத அந்த நாட்களில் தொழிலும் மந்தப்பட்டுப்போனது. அறைவயிற்றுக்கஞ்சிக்கு கூட அவதிப்பட்டாள். அப்போது நகரில் இவளுக்கு போட்டியாக இன்னும் சில பேர் அறிமுகமானர்கள். வேற்று ஊர்களில் இருந்து தருவிக்கப்பட்ட அவர்கள் தொழில் நிமித்தமாக இரவு வந்து தங்கி பகல் திரும்புகிறவர்களாக இருந்தார்கள். ஒரு நாள் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு தனது போட்டிக்காரியைப் பார்க்க விடிய விடிய கிருஷ்ணன் கோயில் பஸ் நிறுத்தத்தில் காத்துக்கிடந்தாள். வாடிக்கையாகச் சவாரி செய்கிற ஆட்டோ ஓட்டுநரிடம் அவள் எப்படியிருப்பாள் என்று கேட்டாள். நல்ல ஒசரம் நல்ல நெறம் என்று சொன்னதும் வதங்கிப்போனாள். மாரிக்கிழவியிடம் சொல்லிச் சொல்லி புளம்பிக்கொண்டேயிருந்தாள். வயித்துப்பாட்டுக்கு வேறு எதாவது செய்யென்று சொல்லிவிட்டு மாரிக்கிழவியும் செத்துப்போனாள். ''ஆமா அப்பனு ஆத்தாளு ரெண்டு தேட்டரு, ஒரு சாராயக்கடை, நாலு தீப்பெட்டியாபீசு உட்டுட்டு செத்துப்போனாகளாக்கு இந்தத்தொழில விட்டுட்டு வேற தொழில் பாக்க ? திருப்பியு அந்தப் பீயள்ற பொழப்புத்தான த்தூதூ....'' என்று காரித்துப்பி விட்டு விபச்சாரத்துக்குக் கிளம்பினாள்.

மிக உறுதியாக இனி சம்பாதிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு களத்தில் இறங்கினாள். ஆனால் அவளிடம் இருந்த ஒரே மூலதனமான அந்த இளமை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு கடந்து போய்க்கொண்டிருந்தது. கிராக்கியில்லாத எந்தப்பொருளும் லாபம் சம்பாதிக்காது என்பதே வியாபார விதி. அந்த விதியின் பிரகாரம் அவள் மீண்டும் வயிற்றுப்பிழைப்புக்காக மட்டுமே சம்பாதிக்க முடிந்தது. சீனி நாய்க்கர் புரோட்டாக்கடையில் காசைக்காட்டித்தான் சாப்பிட முடிந்தது. சில நாட்கள் அதுவும் இல்லாது பட்டினியாய்க் கழிந்தது. அம்மாசி வரும் வரை நாட்கள் நகருவது வேலிப்புதருக்குள் நடக்கிற மாதிரியே இருந்தது. அம்மாசி வந்தபிறகு மூன்று நாள் வீட்டில் சண்டை நாடந்ததாகவும் அங்கு அவனை வீட்டுக்குள் யாரும் சேர்க்க வில்லையென்றும் சொல்லி இவளிடம் வந்தான். ரெண்டு பேரும் சென்னைக்கு ரயிலேறிப்போனார்கள் அங்கு சரக்கு செல்லுபடியாகாமல், திரும்பி வந்து திருச்சியில் ஒரு புரோக்கர் மூலம் குறி சொல்லப் போவதாக விசா எடுத்து சிங்கப்பூர் அணுப்பி வைக்கப்பட்டாள்.

மூன்று மாதம் கழித்து கைநிறையப் பணத்தோடும் கொஞ்சம் உடல் தேறி மினு மினுப்பாகத் திரும்பி வந்தாள். சாத்தூரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு வாடகை வீடெடுத்து அங்கேயே அம்மாசியும் அவளும் வாழ்ந்தார்கள். பிள்ளை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்ட சேதியைச்சொல்லும் போது தான் அம்மாசி தன்னை அம்மனமாகக் காட்டினான். தனக்கு பிள்ளை பெறுவதற்கும் ரேசன் கார்டில் பேர் போடவும் ஊரில் ஏற்கனவே ஒரு குடும்பம் இருக்கிறது, நீ அதற்கு கிடையாது என்று சொல்லி விட்டான். அதற்குப்பிறகு வாரிசு என்கிற வார்த்தை அவளை நிறையச் சிந்திக்க வைத்தது. ஆண்கள் சேத்தில் மிதித்து ஆத்தில் கால் கழுவுகிறவர்கள். அப்போதும் கூட மிதி படுகிற கேவலப் பொருளாகப் பெண்ணே இருக்கிறாள். இன்னுமொரு சேறு வேண்டாம் எனத்தீர்மானித்து ஒரு நாள் நடு இரவில் காட்டு வழியே இலக்கில்லாமல் நடந்துகொண்டிருந்தாள் நடக்க எசக்கில்லாமல் கால்வலித்து இருக்கங்குடி மரியம்மாளே நீயே கதி என்று போய் கோயிலில் படுத்துவிட்டாள். மாசக்கணக்கில் அங்கேயே இருந்து கோயில் சோறு சாப்பிட்டு காலம் கழித்தாள். வெள்ளி செவ்வாய் விரதமிருந்து குறிசொல்ல ஆரம்பித்து விட்டாள். ஜனங்களின் முகங்களில் தெரிகிற சஞ்சலம் பார்த்து கொஞ்சம் போதாத காலம் என்றும், சந்தோசத்தைப்பார்த்து ஏறுகாலம் என்றும் அவளுக்குத் தெரிந்த வானசாஸ்திரம் சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது தான் மனிதர்களின் முகத்தையும் கையையும் பார்க்கிறாள். இப்பொழுதுதான் குடும்பம், உறவு விரிசல் பணம், வறுமை, ஆதிக்கம், சாதி எல்லாம் மெல்ல மெல்ல அறிமுகமாகிறது. அவளைக்கடந்து போகிற பத்து வயசுக்குழந்தை களைக் கூப்பிட்டுப் பேசவேண்டும் போல் சில நேரங்களில் ஆசை வருகிறது. பழைய இரவுகளில் பழக்கமான அந்த இளகிய ஆண் முகங்கள், இப்போதைய பகலில் மிக இறுக்கமாகத் தெரிகிறது. கோபம் தலைக்கேறி வாயில் கெட்டவார்த்தைகள் வருகிறது. ஆத்தா மேல் பாரத்தைப் போட்டுவிட்டு அடங்கிப்போகிறாள். முதலில் கொஞ்ச நாளாய்த் தூசன வார்த்தைகள் இல்லாத மொழி பழகுவதற்கு நிறையச் சங்கடப்பட்டாள். நெற்றி நிறைய திருநீரு பூசிக்கொண்ட முதல் நாள் திருநீரு ரொம்பக்கணமாகத் தெரிந்தது பழைய ரணங்களின் கணங்களை விட மிக மிக லேசாகிப்போனது. இப்போதும் கூட அவலைக்கடந்து போகிறவர்கள் பார்வை மையம் அவள் பக்கம் திரும்பிப் பின் கடந்து போகிறது.

அவளது வீடு எது, அவளது குடும்பம் எது அவளது கனவு எது, எதிர்காலம் எது என்று தெரியவில்லை. இந்த உலகத்தில் ஜனங்கள் கூட்டம் கூட்டமாகக் காணப்படுகிற இடங்கலுக்குள் தன்னை இருத்திக்கொள்ள நடந்து கொண்டிருக்கிறாள். வெள்ளி செவ்வாய்க்கு கருப்பசாமி வந்து அவள் மேலிறங்குவதாகவும், அந்தக்கருப்பசாமியின் வார்த்தைகள் தான் அவளுக்கு அருள் வாக்கு எனவும் உலகத்துக்குச் சொல்லிக்கொண்டு இருக்கிறாள். தானொரு மானுடப்பிறவியல்ல சாதாரண மனுஷியல்ல என்னும் பிம்பம் ஒன்றை தானே உருவாக்கி அதை அவளே சித்திரமாக்குகிறாள். தொலைந்து போன பால்யகாலம், தொலைந்து போன இளமை, காதல் எல்லாவற்றுக்கும் அவள் மேல் விழுந்த பாறாங்கல் போன்ற சமூகம் என்பது அறியாமல் கருப்பசாமி என்னும் கற்பனையோடு வாழ்கிறாள். கடந்த காலம் மேலெழும்பி வரும்போதெல்லாம் பழைய நினைவுகள் மேலெழும்புகிற நேரமெல்லாம் கிளம்பி சாத்தூர் நகரத்துக்கு வருவதும், ப்ரியா ஸ்டுடியோவில் உட்கார்ந்து பேசிச்சிரிப்பதும். அப்படியே எழுந்து பேருந்து நிலையத்துக்கு அவசர நடை நடப்பதுவும் அவளுக்கு ஆறுதலாக இருக்கிறது.( நன்றி. புதுவிசை ஏப்- 2007 )

சிறுகதை

25.5.10

தொடர் வண்டிப்பயணம். தொடரும் பொதுத்துறைகளைச் சீரழிக்கும் முயற்சி.

தொடர் வண்டிப்பயணம் என்பது எவ்வளவு திட்டமிட்டாலும் சௌகர்யமானதாக அமைய வாய்ப்பில்லை.காலை எட்டுமணிக்கு திறக்கும் முன்பதிவு அறையின் முன்னால் இரவு எட்டுமணிக்கே வந்து காத்துக் கிடந்தால் மட்டுமே சாமான்யர்கள் ரயிலில் பயணம் செய்யமுடியும் என்கிற நிலைமை பொதுவாகிவிட்டது.இது கணினிமற்றும் வியாபாரிகளினால் வந்த இன்னொரு பிரச்சினை. முன்னமெல்லாம் சென்னைக்கோ வேறிடங்களுக்கோபோக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னால் முன்பதிவு செய்தால் கிடைக்குமென்கிற நிலை இருந்தது. இப்போது தொன்னூறு நாட்களுக்கு முன்னாலே எல்லா ஊருக்குமான இருக்கைகள் விற்றுத்தீர்ந்துவிடுகின்றன.

ஒரு ரயில் பயணத்தை தொன்னூறு நாட்களுக்கு முன்னாலேயே திட்டமிடுகிற வாதியும் வாய்ப்பும் இருக்கிறவர்கள்
மட்டுமே பயணம் பற்றிய கனவுகூடக் காணமுடியும் என்பது எழுதாத சட்டமாகிவிட்டது.பெருகிவரும் மக்கள் தொகையைச் சமாளிக்க கூடுதல் வசதிகளையும் பணியாளர்களையும் நியமிப்பதற்குப் பதிலாக அதை ஏலத்திற்கு விடுவதுதான் சிறந்த தீர்வென நம்புகிறது அரசும்,அதன் திட்டமும்.ஒரு டோ ல் கேட்டில் ஆறு பயணச்சீட்டு அலுவலகம் அமைத்து நொடிப்பொழுதில் காசை வசூலிக்கிற வல்லமை மட்டும் இந்தியர்களுக்கு எப்படி வந்தது.பொது ஜனங்களின் மத்தியில் தனியார் துறைகள் சரியாக இயங்குக்கிறது, பொதுத்துறை அப்படியில்லை என்கிற மனநிலையை நஞ்சுபோல் ஏற்றிவைக்கிற சூழ்ச்சி இது. ஒன்றை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும் அரசு அலுவலகத்தில் வேலை செய்வதற்கும்,தனியார் நிறுவணத்தில் வேலை பார்ப்பதற்கும் தனித்தனிப் பிரஜைகளை இந்தியா உருவாக்க வில்லை.ஒரு அரசு நிறுவண ஊழியன் வாங்குகிற காசுக்கு வேலைபார்த்தாலே போதும் அவன் தனியாக தேசப்பற்றை கடையில் போய் காசுகொடுத்து வாங்கவேண்டிய அவசியமில்லை.சம்பளமோ,சொத்தோ,சோறோ,நீதியோ எதுவானாலும் சரி. சரியான விகிதத்தில் பங்கிட முயற்சிகள் நடக்கிற வரை கொஞ்சம் அப்படி இப்படி காலம் கடத்த முடியும்.

எழுபதுகளில் தென்பகுதியிலிருந்து சென்னைக்கு இரண்டு வண்டிகள் இயங்கிக்கொண்டிருந்தது. நாற்பது வருடம் கழித்து ஐந்து வண்டிகளாக உயர்ந்திருக்கிறது. ஜனத்தொகை அடிப்படையிலும் பணப் புழக்கத்தின் அடிப்படியிலும் பார்த்தால் இது யனைப்பசிக்கு சோளப்பொறி.நூத்திப் பத்துக் கோடிக்கு மேலிருக்கும் ஜனத் தொகையிலிருந்து பயணச்சீட்டுக் கொடுக்க போதிய பணியாளர்களை கண்டுபிடிக்க முடியவில்லையா? அவர்கள் என்ன அரிய விலங்குகள் பட்டியலில் சேர்ந்து அழிந்தா போனார்கள்.வெறும் பதினோரு பேர் மட்டும் ஆட அதைப்பார்க்கிற சனங்களின் பாக்கெட்டிலிருந்து காசை உருவும் சூதாட்டம் மாதிரியே பொதுத்துறை நிறுவணங்களிலும் நடக்க வேண்டுமென ஆசைப்படுகிறதா அரசாங்கம். நான்கு வழிச்சாலை எட்டுவழிச்சாலை என்று பளபளக்கும் ஓடுபாதைகளை நாலைந்து வருடங்களில் உருவாக்க முடிகிற அரசுக்கு, ரயில்வே போக்குவரத்துக்கு போதுமான தண்டவாளப் பாதைகளை உருவாக்க முடியாமல் போனதன் சூட்சுமம் என்ன?. இன்னும் லட்சக் கணக்கான மோட்டார் வாகனங்களை தனியார் நிறுவணங்கள் உற்பத்தி செய்வதற்கு அமைக்கிற ராஜபாட்டை அது என்பதை புரிந்துகொள்ளலாம்.அந்த ராஜபாட்டையில் கணினியில் உருவேற்றப்பட்ட தொகையைத் தரமுடியாத யாரும் டோ ல்கேட்டைத்தாண்டிப் பயணம் செய்ய அனுமதிக்கபடுவதில்லை.அப்புறம் கம்பின் நுனியில் ஒரு பொட்டலம் நூடுல்சைக் கட்டிக் கொண்டு காட்டுப் பாதைவழியே பாட்டுப்படிக்கொண்டு மதுரைக்கும் கோவில்பட்டிக்கும் நடப்பதற்கு மக்களைத் தயார்செய்யவேண்டும்.

பல பொதுத்துறை நிறுவணங்களை கள்ள விலைக்கு விற்று விட்ட மாதிரியே ரயில்சேவையை தனியாருக்கு விற்றுவிடத் துடிக்கிறது இப்போதிருக்கும் இந்திய ஜனநாயக அமைப்பு. அதற்கு இடதுசாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.அந்த எதிர்ப்பையெல்லாம் தாண்டி அரசு விற்றவை எராளம்.அந்தப் பட்டியலில் இடம்பெறாதது நாடாளுமன்றமும்,சட்டசபைகளும் மட்டுமே.அதையும் விற்றுவிட்டால்,அம்பானிநாடு, அழகிரிநாடு, லட்சுமி மிட்டல்,நாராயணமூர்த்தி,தயாநிதிநாடுகள் உருவாகி மீண்டும் இது அம்பத்தாறு தேசங்களாக மாறிவிடும்.அப்புறம் அழகிரி சாலையெங்கும் போஸ்டர் நட்டினார்.அம்பானி வீட்டுக்கொரு செல்போன்
வழங்கினார் என்று வரலாறு எழுதலாம்.

அப்போது நாம் இப்படிப் பதிவெழுத முடியுமாவெனத் தெரியவில்லை.

24.5.10

ஒரு பேனாக் கத்திகூட காட்சி படுத்தப்படாத, புரட்சிக்காரனைப் பற்றிய திரைப்படம்


எண்பதுகளில் அவரைப்பற்றிக் கேள்விப்பட்ட போது அதென்ன பெயர் ' சே ' என்றுதான் எல்லோரையும் போலக் கிண்டலடித்தேன். அவர் ஒரு புரட்சிக்காரன் என்று கேல்விப்பட்டபோது இன்னும் அதிகமாகக் கிண்டலடித்தேன் ஏனென்றால் அப்போதும் எனக்கு எம்ஜிஆரைப் பிடிக்காது. இங்கு எல்லாமே தலைகீழாக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. அவன் தான் பிறந்த நாட்டுக்காகப் போராடாமல் இன்னொரு நாட்டுக்காகப் போரடியவன் என்பதையும், வெற்றியடைந்து ஒரு அரசமைத்து அதில் முக்கிய மந்திரியாக இருந்து அதையும் உதறிவிட்டு வேறு ஒரு நாட்டு விடுதலைக்காக காட்டுக்குப் போனான் என்பதைக் கேள்விப்பட்டதும் கொஞ்சம் ஆர்வம் கூடியது. அப்படி ஒரு நிஜப் புரட்சிக்காரனப் பற்றிய படம் தான் '' மோட்டார் சைக்கிள் டைரீஸ்".ஒரு பழைய்ய நார்ட்டன் 500 இருசக்கர வகனம், கொஞ்சம் உடமைகள், நிறைய்ய உற்சாகத்தோடு இரண்டு இழஞர்கள் புறப்படுகிறார்கள். இடம் அர்ஜெண்டினாவின் ஃபூனோ ஏர்ஸ், வருசம் 1953 ஜனவரி மாதம். இரண்டுபேரின் குடும்பத்தாரும் விடைகொடுக்க கிளம்புகிற வாகனம் தாய் தந்தையரின் கண்ணெதிரே ஒரு நான்குசக்கர வாகனத்தோடு மோத இருந்து பதற வைத்து, நொடியில் சமாளித்து தப்பித்து கிளம்புகிறது. வழிநெடுக கும்மாளமும் உற்சாகமும் நிறைந்த பயணம். வாகனப்பயணத்தின் விதி மாறாமல் அந்தப்பழய்ய நார்ட்டன் பைக் பல இடங்களில் அவர்களின் காலை வாறுகிறது. நமது எதிர்பார்ப்பையும் சேர்த்து.

முதலில் உலகம் முழுக்க இப்போது பார்த்துக் கொண்டிருக்கிற நட்சத்திரம் பொறிக்கப்பட்ட தொப்பி, இளம் தாடி, தோளில் புரளும் முடியோடு சேகுவேரா காண்பிக்கப்படவேயில்லை. இரண்டாவது புரட்சிக்காரனின் மேலிருக்கிற இறுக்கமான மற்றும் மரியாதை கலந்த பிம்பமும் இல்லை. மொழு மொழுவென இருக்கும் சே வழிநெடுக பெண்களுக்காக அலைகிறான். குடிக்கிறான் பகடி செய்கிறான். மெக்கானிக்கின் மனைவியை மோகித்து பிடிபட்டு விரட்டப்பட்டு ஓடுகிறான். கப்பலில் சீட்டு விளயாண்டு பணம் சம்பாதித்து அந்தப்பணத்தில் விபச்சாரியோடு பொழுது கழிக்கிறான் 'சே' யின் நண்பன். படம் முழுக்க மோட்டார் சைக்கிளும் பயணமும் மையக்கருவாக வரப்போவதில்லை என்பதை நாம் யூகிக்க முடிந்தாலும் நமது எதிர்பார்ப்பை உடைக்கிற கதை அமைப்புதான் அந்தப்படத்தின் வித்தியாசம். ஆமாம் ஒரு புரட்சிக்காரனைப் பற்றிய கதையில் எதாவதொரு இடத்தில் ஒரு சின்ன வன்முறைகூட காட்டப்படவேயில்லை. அட ஒரு பேனா கத்தி கூட காட்டப்படவேயில்லை என்றால் பாருங்களேன்.

சரிசெய்ய முடியாத அளவுக்கு பழுதான மோட்டார்சைக்கிளை உதறிவிட்டு தென் அமெரிக்காவின் வறுமையை ஊடறுத்துக்கொண்டு தொடர்கிறது பயணம். சிலி, பெரு அட்டகாமா பாலைவனம், அனகோண்டா சுரங்க கழகம் அங்கே ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்த காரனத்துக்காக வீடு உடமைகள் பறிக்கப்பட்ட குடும்பத்தின் வறுமை. அங்கிருந்து மாச்சு பிச்சு,கூழ்க்கோ, இறுதியில் லிமா போய்ச்சேருகிறார்கள் அங்கேதான் மருத்துவர் ஒருவரின் சிபாரிசின் பேரில் சான் பாப்லோ தொழுநோய் மையத்துக்கு இருவரும் அனுப்பப்படுகிறார்கள். அமேசான் நதிக்கரையில் ஒரு கரையில் வசதியும், சுத்தமும், தொழுகையும் கட்டுப்பாடும் நிறைந்த மருத்துவர் மற்றும் செவிலியரின் இருப்பிடம். இன்னொரு கரையில் வறுமையும்,அசுத்தமும், ஒழுங்குமற்ற கருப்பு தொழு நோயாளிகள் புகழிடம்.

ஆனால் இந்த இருவரும் மருத்துவ விதிகளையும், மத விதிகளையும் மீறுகிறார்கள். ஆம் கையுறை இல்லாமல் நோயளிகளை அனுகுவது பிரார்த்தனைக்குச் செல்லாமல் சாப்பிடுவது போலான மீறல்களுக்காக மூத்த மருத்துவர்களால் கண்டிக்கப் படுகிறார்கள். ஆனால் கன்னியாஸ்திரிகளாலும் நோயாளிகளாலும் வெகுவாக நேசிக்கப்படுகிறார்கள். எர்னஸ்டோ சேகுவாராவின் 24 வது பிறந்த நாள் கொண்டாட்ட ஏற்புறையில் மெலிய குரலில் பேசுகிறான். கிறிஸ்தவ மத தொண்டு நிறுவன ஊழியர்கள் கன்னியாஸ்திரிகள் நிறைந்த அந்த சபையில் இந்த உலகம் பிளவு பட்டுக்கிடக்கிற அசமத்துவங்கள் குறித்துப்பேசுகிறான். தனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியை அந்த சமூகத் தொழுநோயிலிருந்த விடுவிக்கிற மருத்துவம் செய்யப்போவதாக அறிவிக்கிறான் பலத்த கரகோசத்துக்கும் வரவேற்புக்கும் மத்தியில். சே அங்கிருந்து கிளம்புகிற கட்சிகளோடு படம் முடிகிறது.

அவனது நண்பன் சேகுவேராவை அதற்குப்பிறகு ஹவானாவில் ஒரு மந்திரியாகத்தான் பார்த்தேன் என்று பிண்ணனியில்சொல்லிக்கொண்டிருக்கும் போதே இந்த உண்மைப்பயணத்தின் கருப்பு வெள்ளைப்புகைப்படங்களும் இந்தப்படத்தின் காட்சிகளும்மாறி மாறிக்காட்டப்படுகிறது.

2002 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் விவாதங்களைக்கிளப்பிய படமான ' தி சிட்டி ஆஃப் காட்' எனும் படத்தை தயாரிப்பாளர் வால்டர் சேல்ஸ் தான் இந்தப்படத்தின் இயக்குனர். முன்னதாக சேகுவேராவும் அவரது நண்பர் அல்பெடோ க்ரெனடாவும் எழுதிய நாவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படத்தின் கதைவசனம் ஜோஸ் ரிவேரா. சின்னத்திரையில் பிடல் காஸ்ட்ரோவாக நடித்த காயல் கார்சியா பெர்னல் சேகுவேரா வாகவும், நிஜவழ்க்கையில் மைத்துனரான ரோட்ரிகோ லா செர்னா நண்பனாகவும் நடித்து வெளிவந்த ஸ்பானியத்திரைப்படம்.

" மோட்டார் சைக்கிள் டைரீஸ் "

இதுவும் கூட ப்ளாக் டைரியிலிருந்து மீளப்பதிவிட்டது

21.5.10

ஒரு நடுத்தர வீடும் பாண்டசிக் கதைகளும்.

சலவைக்கல் தரை.
ஒதுங்குவதற்கும் உள்நாடு,வெளிநாடு.
இருபது குடிசைகள் கட்டலாம்
இந்த இடத்துக்குள்.

சுற்றிச் சுற்றிப் பார்த்தார் பரமுமாமா
கூடவந்த பேரப்பிள்ளைகள்
ஒடித் திரிந்தார்கள் கூடமெங்கும்.
பால்பொங்கியது குலவையிட ஆளில்லை.
பந்திநடந்தது ஓடி ஓடிப் பறிமாறினார்.

விருந்தும்,வெத்திலையும் காலியானதும்
நடுவீட்டில் துண்டை விரித்துப்படுத்தார்
கால்நீட்டத் தட்டுப்படும் ட்ரெங்குப்பெட்டியும்,
கண்முழித்தால் தட்டுப்படும்
கூரை நட்சத்திரங்களும் கனவில் வந்தது.

இருப்புக் கொள்ளவில்லை
ஊருக்குப் போய் ஓய்வுநேரங்களில்
ஊர் மடத்தவிடப் பெரிய ஆக்குபறை
சுச்சப் போட்டாத் தண்ணி உழும்
குளிப்பு ரூம்பு, இப்படிக்
காலமெல்லாம் பெருமை பேச
கதை கிடைத்துவிட்டது அவருக்கு.

20.5.10

காலத்தின் புதைபொருட் சொற்கள்.

பழ மொழிகள் அந்தந்த தேசத்தின் காலத்தையும், கலாச்சார சிந்தனையையும் அரிந்துகொள்ள உதவும் புதை சொற்கள்.நண்பர்களை,காதலை,பணத்தைப் பற்றிப் பேசாத நாடுகள் கிட்டத்தட்ட அழிந்துபோன நாடுகளாகவே இருக்கும்.ஆறுதேசங்களின் பழமொழிகளும்.கியூபாவின் எட்டுப்பழமொழிகளும் பொறுக்கி எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்தியா

நீ நதிக்கரையில் வாழ விரும்பினால். முதலில் முதலைகளின் நண்பனாவதற்கு கற்றுக்கொள்.

சைனா.

பயணமே சிறந்த பரிசு.

இங்கிலாந்து.

அமைதியான கடற்பயணம் ஒரு நல்ல மாலுமியை உருவாக்கமுடியாது.

ஹங்கேரி

குறிக்கோள் முடியும்போது சந்தோசம் ஆரம்பிக்கும்.

ஜெர்மன்.

உலகத்தில் நீவாழப்பழகு,உலகை உன்னோடு வாழப் பழக்காதே.

யூதர்கள்

நீ வெறுக்கிறவற்றை அடுத்தவருக்கு செய்யாதே.அதுதான் பொது விதி மற்றதெல்லாம் அத்தமற்ற விவரணைதான்.


கியூபப்பழமொழிகள்.

பொய் முன்னேறிக்கொண்டே இருக்கும், உண்மை அதை ஜெயிக்காத வரை.

வெண்ணெயும்,மதுவும்,நண்பனும் பழசாக பழசாகத் தித்திக்கும்.

நீதியின்பதையில் நடப்பது நல்லது, அது என் வீட்டிலல்ல,அடுத்தவீட்டில்.

மனிதவாழ்க்கைக்கான காலம் ரொம்பச்சிறியது.ஆனால் ஒரு புன்சிரிப்புக்கான காலம் அதனினும் சிறிது.

ஏழு குழந்தைகளும் ஒரே தாயின் பிள்ளைகளாக இருக்கலாம்.ஏழுபேருக்கும் ஒரே சிந்தனை இருக்காது.

நல்லவேட்டைக்காரன்,அவன் வேட்டையாடியதைக் காட்டிலும் அதிகப்பொய் சொல்லுவான்.

பணம் பேச ஆரம்பித்தால்,மற்றவை மௌனமாகிவிடும்.

சரக்கடித்தவனுக்கும்,கிறுக்குப்பிடித்தவனுக்கும் ஒரு போதும் வித்தியாசம் காணமுடியாது. அவர்கள் தூங்குகிறநேரம்தவிர.

19.5.10

சமன்பாடு.

உச்சி வெயில் தலைப்பாத்துண்டையும் தாண்டி மண்டைக்குள் இறங்கியது.நெடு நெடுவென மஞ்சனத்தி மரத்து நிழலுக்குப் போனான். மரத்திலிருந்த ஊதாக்காடை சடசடவெனப் பறந்தோடியது. கரட் டாண்டி ஒன்று பொத்தென அவனுக்குப் பக்கத்தில் விழுந்து காட்டு வழியே ஓடியது.ரெண்டுமே இவனைக் கெட்டவார்த்தயில் வைதிருக்க வேண்டும்.தலைப்பாகையை அவிழ்த்து உதறினான் அதிலிருந்த பீடிக்கட்டும் தீப்பெட்டியும் விழுந்தது.மண்டைக்குள் வேர்த்து ஈரமாகியிருந்தது அழுத்தி துடைத்துக் கொண்டு அதே துண்டை விரித்து மர நிழலில் உட்கார்ந்தான். தோழில் தொங்கிய வெளிரிப்போன பெப்சிப்பாட்டிலை கழட்டிக்கீழே வைத்தான்  முக்கால்  வாசிப்பாட்டிலில் தண்ணீர் கிடந்து கணத்தது. வீடு திரும்பும் வரை தாகம் தாங்கும்.

ஆடுகள் சப்பாணி நாயக்கரின் பருத்திக் காட்டுக்குள் மேய்ந்து கொண்டி ருந்தது.அதுதான் கடைசியாய் அழிந்த காடு.பூக்கிற பருவத்திலொருநாள் நெத்திவெள்ளை ரெண்டு செடியில் வாய்வைத்துவிட்டது.தூரத்தில் வந்து கொண்டிருந்த சப்பாணிநாயக்கர் ஓடோ டி வந்து கொடுத்த கொடமானம் ஏழு தலைமுறை தாங்கும்.மழை தவறிப் போனதுதான் மாசக்கணக்கா அவர் காட்டுப்பக்கம் வரவில்லை.முந்தாநாள் தான் காடு அழிந்தது பத்து மொய் ஆடும் அங்குதான் கும்மரிச்சம் போட்டது.

எழுந்து பார்த்தான் போரா போட்ட கிடாரி ஒரு ஆட்டையும் மேய விடாமல் கெடுத்தது. கிட்ணக்கோனார்ட்ட வாங்கிய கிடா அவனம்மாதிரியே வேட்டியத்தெரைச்சுக்கிட்டு அலையிது. இங்கிருந்தபடியே 'ட்ர்ர்ர்ர்ர்ரு இம்பெய்..இரு வக்காலி ஒன்யக் காயடிக்கம் பாரு'சத்தங்குடுத்தான். திரும்ப உட்கார்ந்து ஒரு பீடியெடுத்துப் பத்தவைத்தான் சுண்டி எறிந்த தீக்குச்சி விழுந்த இடம் பொசுபொசுவெனத் தீப்பிடித்தது அந்தக்காய்ந்துபோன புல்லுக்கடியில் இருந்து ஒரு கொரண்டிப் பூச்சி ஓடியது 'அடி ஞொஞ்ச இன்னேர வரைக்கு இங்கெயா கெடந்தெ' என்று கல்லெடுத்து வீசினான் அது பக்கத்து பனைமரத்துப் புதருக்குள் மறைந்து போனது.அவனுக்கு காட்டுவிலங்குகள் பத்திப்பயமேதும் இல்லை.எல்லாவற்றின் குணமறிவான்.அந்தப் பொட்டைக் காட்டுக்குள் மிஞ்சி மிஞ்சிப்போனால் கருநாகம்தான் மட்டும் தான் பயமுறுத்துகிற விலங்கு.அதுவும் கூட மனிதர்களைக் கண்டு பயந்தோடும்,மனிதர்கள் அதைக்கண்டு பயந்தோடும்.

இவனுக்குப் பயமெல்லாம் இந்த மழை தான் மூனு மாசமாச்சு ஒரு பொட்டு கீழ விழுகல.கருப்பூரணி வத்திப்போய் ஒரு மாசமாச்சு.பம்பு செட்டுக் கிணறுகளிலும் தரை தெரிகிறது. மணுசனுக்கு குடிக்கத் தண்ணியில்ல.இதில் ஆடுமாடுகளை எங்கே அமத்த.கண்ணுக் கெட்டிய தூரம் வரை பச்சைப் புல்லேதும் இல்லை.திரும்ப எந்திரித்துப்பார்த்தான் மூணு ஆடுகள் கருப்பூரணிப்பக்கம் ஓடியது.செருப்பைப் போட்டுக்கொண்டு ஓடும்போது பெப்சிப் பாட்டில் இடறி விழுந்தது வந்து பார்த்துக்கொள்ளலாமென்று ஓடினான்.அதற்குள் அந்த மூணும் ஊரணிக்குள் நின்னதுகள். கம்பை ஓங்கி எறியப்போனான்.ஏமாந்து நின்ன ஆடுகளைப்பார்த்து நிறுத்திக் கொண்டான்.பாலம் பாலமாய் விரிந்து கிடந்தது வண்டல் மண்.

திரும்பி வந்துகொண்டிருந்த போது நாலைந்து குருவிகளும் அந்த ஊதாக்காடையும்  மஞ்சனத்தி மரத்தடியிலிருந்து பறந்தோடின.பெப்சிப் பாட்டில் உடைந்து தண்ணீர் தரையில் ஊறிக்கிடந்தது எறும்புகள் அந்த ஈரத்தின் மேல் அலைந்து கொண்டிருந்தது.ஓடிப்போய் திரும்பி வந்த களைப்பில் நாவரண்டிருந்தது. ஒரு மணிநேரம் எச்சை முழுங்கிக் கொண்டு கடத்தினான் இன்னும் தாகமானது.அப்படியே ஆடுகளை ஒதுக்கிகொண்டு கனைஞ்சா நாயக்கர் பம்புசெட்டுக்குப் போனான்.கிணத்தின் தூரில் கொஞ்சம் போல தண்ணி கிடந்தது. அதிலேயும்கூட ஒரு பாம்பு செத்து மிதந்தது.

ஆடுகளை ஓட்டிக்கொண்டு பொட்டையூரணிக்கு வந்தான்.அங்கே தண்ணியில்லாவிட்டாலும் ஊருக்கு குடி தண்ணி சப்ளை செய்யும் ஆழ்துளைக் கிணறும் பம்புசெட்டும் இருக்கிறது.வெளிக்குழாயின் கசிவில் தண்ணீர் குடிக்கலாம்,அது ஓடி கிடக்கும் குட்டையில் ஆடுகளை அமத்தலாமென்று போனான்.மோட்டார் ரிப்பேராகி மூனுநாள் ஆகியிருந்ததால் தண்ணி கசியவில்லை. இனி ஒரே கதி, ஊருக்கு அருகே ,பேருந்து நிறுத்தத்தில் உள்ள காலணிக்காரங்க அடி பம்புதான்.அதற்கும் ரெண்டு கிலோமீட்டர் போகணும்.ஆடுகளைப் பார்த்தான் இன்னும் வயிறு ஒட்டிக்கிடந்தன. சோர்ந்து போய் ஓடைப் பாலத்து  அடியில் உட்கார்ந்து விட்டான். ஒண்ணுக்கிருந்தான் கடுத்தது.செத்த நேரம் கழித்து ஒரு பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டது எழுந்து வந்து பார்த்தான்.

ஒரு கணத்த சூட்டுப்போட்ட ஆள் இறங்கி சிகரெட் பத்த வைத்தான்.அப்புறம் ஒதுங்கி ஜிப்பை அவிழ்க்கப்போனான்.பிறகு அப்படியே நாலெட்டு நடந்து பம்புசெட்டைத்திறந்து எதோ செய்தான் குடிநீர் வடிகால் வாரியத்து ஆளாயிருக்கவேண்டும்.இவனுக்கு நாக்கு இன்னும் வரண்டிருந்தது கருத்தநிறமுள்ள அந்த பைக்கின் டாங்க் கவருக்கு வெளியே தலையைத் துருத்திக் கொண்டு ஒரு பெப்சிப்பாட்டில் இவணைக் கூப்பிட்டது.எடுத்து வேஷ்டிக்குள் சொருகிக் கொண்டான்.

15.5.10

எம்ஜியார்,குஸ்பூ,எஸ்வி.சேகர்.... திரையிலிருந்து வெளிவரும் சாயங்கள்.

அவர் இந்த தமிழ் மக்களின் நெஞ்சத்தில் கூடு கட்டினார்.
அப்புறம் அந்த மக்கள் அவருக்கு கோயில் கட்டினார்கள்.
கொஞ்சகாலம் கழித்து சுந்தர்சியைக் கட்டிக்கொண்டார்.

இப்படியான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட ஓடுபாதை நடிகைகளுக்கென போடப்பட்டிருக்கிறது.அதன் வழக்கமான தடமாக தொலைக்காட்சித் தொடர்கள் வந்தது. அங்கே கலாச்சாரம் மாறாமல் குடும்ப கௌரவம் குரையாமல் போராடும் பெண் பாத்திரங்கள் அவருக்கு காத்திருந்தது.அப்போது இந்த தமிழகம் தாங்கள் காலங்காலமாய் வடிவமைத்த ஒரு பெண்ணின் விளம்பர சாயலாக அவரை ஏற்றுக்கொண்டது. அவரே மணியம்மை பாத்திரமேற்று நடித்தபோது கொஞ்சம் எதிரும் புதிருமான விமர்சனங்கள் கிளம்பிவந்தது.மதவாதிகள் உஷாரானார்கள்,அதுவரை கண்டுகொள்ளப்படாத பூர்வோத்ரம் பேசப்பட்டது. இந்த நிலையில் கல்யாணத்துக்கு முன்னாள் உறவு வைத்துக்கொள்வது குறித்த அவரது பேட்டி  பெருத்த ஊடக கவனத்துக்கு ஆளானது. சமூகம் கட்டியிருந்த பல பிரம்மைகள் உடைந்துபோனதாக நினைத்து அவர்மேல் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதோ அவர் அரசியலுக்கு வந்து விட்டார். இதுவரை அவரைக் காபந்து பண்ணிக்கொண்டிருந்த ஜெயா டீவியிலிருந்து அதன் நேரெதிர் முகாமான கலைஞர் டீவியின் கம்பெனி ஆளாகவும்,திமுக வின் அரசியலின் அடிப்படை உறுப்பினராகவும் உருமாறுகிறார்.கழுதை கெட்டா குட்டிச்சுவரு என்கிற பழமொழியை நானிங்கு உபயோகப் படுத்தப் போவதில்லை.அது கழுதை குறித்தும் அரசியல் குறித்தும் வைத்திருக்கும் என் அறியாமையின் சாயலாக மாறிப்போகும்.

ஒரு தினத்தந்திப் பேப்பரின் தலைப்பைக் கூடப் படிக்கத் தெரியாதவர்களே இங்கு தமிழ் கலாச்சாரத்தைத் தூக்கிப்பிடிக்கிற பாத்திரமேற்று நடிக்கிறார்கள்.அவர்களுக்கு பூசப்படும் உதட்டுச்சாயம்,அரிதாரம்,அரைகுறை ஆடை போலத்தான் தமிழும்.தமிழ் தெரியாததால் நடிக்கவரக் கூடாதென்கிற வாததமல்ல இது.அந்நிய தேசத்திலிருந்து வந்த கான்ஸ்டாண்டி நோபிள்,கார்டுவெல் ஜியு போப் இன்னும் எத்தனையோபேர் இந்தத் தமிழுக்குச் செய்திருக்கிற கொடை பெரிது.ஆனால் நீங்கள் சுதந்திர மற்றும் பொங்கல் தினங்களில் ஒளிபரப்பப்படும்  பேட்டிகளைக் கவனியுங்கள்.பெண்கள் விரித்துப்போட்ட தலைமுடி ஒதுக்குவதும்,ஆண்கள் எங்கப்பா அந்தக் காலத்தில் என்று தத்துப்பித்தென்று பேசுவதைத் தவிர்த்து வேறு எதுவும் இருக்காது. நாலு அறிவுக்குமேல் தாண்டி யாரும் வருவதில்லை என்பது தெளிவாகும். திரைப்படத்துக்கும் அதுதான் நோக்கம். யாருக்கும் அறிவு வளரக்கூடாது என்கிற மையக்கதை தான் நூறாண்டுகால இந்திய சினிமாவின் கொள்கை. பெரும்பாலான கதைகள்,நடிக நடிகையர்கள் சினிமாவுக்கென வடிவமைக்கப்பட்டவை அவ்வளவுதான். நாசர்,பிரகாஷ்ராஜ்  இன்னும் சொற்ப படங்களை நீங்கள் சுட்டிக்காட்டலாம். அவை விதிவிலக்குகள்.விதிவிலக்குகள் பொதுவிதியாகது எப்போதும்.
 
குஷ்பூவோ,தமண்ணாவோ,விஜய்யோ,அஜித்தோ அரசியலுக்குள் வருவதில் எந்தவிதமான விமரிசனமும் இல்லை.கடந்த காலத்தில் அரசியலுக்குள் வந்த சினிமாப் பிரபலங்களும் சரி,இப்போது அரசியலுக்குள் புழங்குகிறவர்களும் சரி,இனிவரப்போகிறவர்களையும் சேர்த்துக் கணக்கிலெடுத்தால் பெருவாரியான நடிப்புத் துறை சார்ந்தவர்கள் ஆளுங் கட்சியைக் குறிவைத்தே தங்கள் பயணத்தை தொடங்குகிறார்கள்.அப்புறம் ஏற்படும் மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு மீண்டும் ஆளுங்கட்சியாகிவிடுகிறார்கள். திசைகாட்டும் கருவியைப்போல குண்டிகுப்புற வைத்தாலும் கிழக்குப்பக்கமே காட்டுகிற  நூதன அறிவியல் அவர்களுக்குள் பொதிந்து கிடக்கிறது. அந்த அறிவியலுக்கு  சமீபத்திய உதாரணம் உயர்திரு.எஸ்வி.சேகர் அவர்கள். 'மறந்து கொண்டேயிருப்பது மக்களின் இயல்பு' என்று  எழுதி வைத்துவிட்டுப் போன சரித்திரவியலார் 'எரிக் ஹோப்ஸ்வாமின்' எழுத்து காலங்கடந்தும் புதுக்கருக்கு மாறாமல் அப்படியே ஜொலிக்கிறது.இந்த மறதியெனும் புதைசேற்றை மூலதனமாக்கிக்கொண்டு சம்பாதிக்கும் வியாபாரத்தையும் அதை சமர்கொண்டு எதிர்க்கிற தத்துவங்களையும் நாம் அரசியல் என்றே பெயரிடுகிறோம்.

'மனுசன மனுசன் சாப்பிடுறாண்டா தம்பிப்பயலே அது மாறுவதெப்போ தீருவதெப்போ' என்றும்  நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு என்றும் சாட்டை சுழட்டிக்கிளம்பிய எம்ஜியாரிலிருந்து 'ஏழை எங்கள் வாழ்வில் இவனே எங்கள் உதயம்' என்று இப்போது பட்டி'தொட்டிகளில் தூள்'கிளப்பிக் கொண்டிருக்கும் விஜய் வரையிலான எல்லா கதாநாயகர்களும் தங்கள் மீது ஒரு புரட்சிச் சாயம் பூசிக்கொள்வதில் எந்த மாற்றமும் இல்லை. முன்னாள் முதல்வர் எம்ஜியார் ஜார்ஜ் கோட்டை நாற்காலியில் உட்கார்ந்தவுடன் இந்த நாற்காலியின் முன்னிரண்டு கால்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கு சொந்தமானதென்று சொன்னாராம்.அவரே கம்யூனிஸ்ட்டுகள் எந்தக்காலத்திலும் ரெண்டு சீட்டுக்கு மேலே வந்துவிடக் கூடதென்கிற புரட்சிகொள்கையை( hiden agenda வை) சாகிற வரை பாதுகாத்துவந்தார் என்பது செவிவழிச்செய்திகள் அவர் சொன்னதற்கு ஆதரமில்லை,ஆனால் நடைமுறைக்கு என்ன ஆதாரம் வேண்டும்.

கிராமத்தில் பெரும்பாலும் ஒருவருக்கு ரெண்டு ஜதை உடைகள் தான் இருக்கும்.வச்சிக்கிட ஒன்னு,போட்டுக்கிட ஒன்னு.அது இல்லாதவர்களின் கொடுமை.கலையும் இலக்கியமும் காலத்தின் கண்ணாடியென்பதே வாழ்வியலின் தத்துவம்.அப்படிப்பட்ட கண்ணாடி காட்டவேண்டியவற்றை நிஜத்தைத் திரிப்பதும்.கலைஞர்கள் ரெட்டைச்சாயம் பூசிக்கொள்வதும் தான் திரைத்துறையின் சாபக்கேடு.அங்கிருந்து அரிதாரமற்ற நிஜமான மனிதர்களும், உண்மையான மக்கள் தலைவர்களும் வருவதில்லை.இருக்கிற கள்ளச் சொத்துக்களை பாதுகாக்கிற நிப்பந்தத்தில் அவர்கள் திமுகவில் சேர்ந்தாலென்ன,பாமக வில் சேர்ந்தாலென்ன,அமெரிக்காவின் லேபர் பார்ட்டியில் சேர்ந்தாலென்ன ?

14.5.10

முடிந்ததும் முடியாததும்.

நேற்று முன்தினம் போய்
தமிழ்நாட்டின் தலைச்சிறந்த
தொழில் நுட்பக்கல்லூரியில்
துண்டுபோட்டுவிட்டு வந்தாச்சு
நாளைதான் தேர்வு முடிவுகள்.

இருபது வருஷ சம்பாத்யத்தில்
வாங்கிய துண்டின் விலை இரண்டு லட்சம்.
கண்டும் காணாததுக்கு பிஎஃப் இருக்கு
அதுவும் காணாதென்றல் அவளது சங்கிலி
அப்பாட தகப்பனின் கடமை முடிந்துபோனது.

தேர்வுகள் நடக்குமுன் வினாத்தாள்
முடிவுகள் தெரியுமுன் அட்மிஷன்
கட்டணம் நிர்ணயிக்குமுன் பட்டுவாடா
இனி சட்டப்படி கவுன்சிலிங்.
அப்பாட அரசின் கடமை முடிந்தது..

ஆனால்
இந்த பெரும் மதில்களுக்குள்
நுழைய முடியாத ஜனங்களுக்கு
ஒரு சிறு கடமை இருக்கிறது
அது இன்னும் தெரியாமலே இருக்கிறது.13.5.10

மண்ணிலிருந்து வேர்பிடித்த பெண்தலைவர் - CK. ஜாணு

CK. ஜானு, கேரளத்தின் பிரபலப் பெயர்களில் ஒன்று. ஆதிவசி கோத்ரா மாஹா சபாவின் தலைவரான ஜானு அதியா எனும் ஆதிவாசி இனத்திலிருந்து வந்த கலகக்காரர். அதியா என்பதற்கு அடிமைகள் என்று அர்த்தமாம். என்ன பெயரிட்டாலும்பட்டியலினத்தவர்கள் அடிமைகள் என்பதை மறுதலிக்க இந்திய சமூகம் லேசில் தயாராக இல்லை. இயற்கையோடு இயைந்தவாழ்வினால் தங்களை நிலை நிறுத்திக்கொள்ளும் ஆதிவாசிப் பழங்குடியினர். காடுகளில் வசிப்பதனால் ஒரு போதும் காட்டின் இறையான்மை பாதிக்கப்படுவதில்லை. அல்லது அவர்களால் காடு மாசு படாத வாழ்நெறிகள் படைத்தவர்கள். இதை எழுத்தாளரும் வழக்கறிஞரும் ஆதிவாசிகளின் ஆர்வலருமான ச. பாலமுருகனின் சோளகர்தொட்டி நாவல் மிக அருமையாக விவரிக்கிறது.

ஜேம்ஸ்ராப்டனின் மெட்ரிக் முறை நில அளவைக்கு முன்னர். வளமான இந்தியக் காடுகளின் செல்வங்களின் மேல் ஆங்கிலேயக்கண்ணகள் பதிவதற்கு முன். பட்டா முறை கொண்டுவருவதற்கு முன்னர். காடுகள் முழுக்க இயற்கைக்கும், விலங்குகளுக்கும், ஆதிவாசிகளுக்கும் தான் சொந்தமாக இருந்தது. பல நூறு ஆண்டுகள் வாழ்ந்த அவர்களை காட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கை இந்த தேசம் முழுக்க நடந்து வருகிறது. அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட காடுகள் வழிதவறி, தடுமாறி, சரியான முறையில் பெரு முதலாளிகளின் கைகளுக்கு வந்து விடுகிற ஏற்பாடுகள் இங்கே கச்சிதமாக நடைபெறுகிறது. தங்களின் காடுகளை மீண்டும் தங்களுக்கே மறுபங்கீடு செய்து தரவேண்டுமென்கிற போராட்டத்தின் மிகப்பெரிய உந்து சக்தி CK ஜானு.

முறைப்படியான பள்ளிக் கல்வி கிடைக்கப்பெறாத ஜானு கேரள எழுத்தறிவு இயக்கதினால் எழுதப்படிக்கத் தெரிந்துகொண்டார். எழுத்தறிவித்த இயக்கத்தின் வெளிச்சத்தில் கேரள சிபிஎம் கட்சியின் அனுதபியாகிப் பின் உறுப்பினாராகவும் மாறிச் சமூகச் சீர்திருத்த இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டார். அங்கே அவருக்கு மங்களாக இருந்த உலகைப்புரிந்து கொள்ளும் அணுபவம் கிடைத்தது. இருந்தும் பொதுச்சமூகம் விடுபட்டவர்களின் உரிமைக்காகப் போராடும் என்கின்ற நம்பிக்கை இழந்து போனது. கேரள ஜனத்தொகையின் 1.5 விழுக்காடு பங்கு வகிக்கிற தங்களுக்கான தலைமையையும் போராட்டத்தையும் 1982 ல் தாங்களே வகுத்துக்கொண்டார்கள்.

தொண்ணூறுகளின் துவக்கத்தில் மலை சார்ந்த மக்களின் ஒவ்வொரு அசைவிலும் தன்னை நெருக்கப்படுத்திக்கொண்ட ஜானுவுக்கு 1994 ல் அரசு சேவை விருது வழங்கியது. அதை திருப்பி அணுப்பினார். 2001 ஆம் ஆண்டு கேரளத்தை உலுக்கிய நடைபயணங்கள், சாலை மறியல்கள், செயலகம் நோக்கிப்பேரணி போன்ற போராட்டங்களுக்குத் தலைமை வகித்த ஜானு உலகச்செய்திகளின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பினார். இறுதியாக 2003நில மீட்சிப்போராட்டங்கள் மிகப்பெரிய அதிர்வை உண்டாக்கியது. அரசின் தடையை மீறி '' முத்தங்கா '' மலைப்பகுதியில் குடியேற்றம் நடத்திய அவர்களின் மீது வழக்கம்போல காவல்துறை வன்முறையை பிரயோகித்தது. ஒரு காவலர் இறந்து போனார் போராட்டக்காரர்களிலும் பல உயிர்ச்சேதம் உண்டானது. பின்னர் ஆராளம் பண்ணைப் பகுதியில் ஆதிவாசிகளுக்குஇடம் ஒதுக்கித்தர அரசு கொள்கையளவில் ஒத்துக்கொண்டது.

மிகப்பெரிய கல்விபின்புலம், அரசியல் பின்புலம், குடும்பப் பிண்ணனி என ஏதுமில்லாத CK ஜானு நிஜமான மக்கள் தலைவர் என்பதை உலகச் செய்தி ஊடகங்கள் அங்கீகரிக்கின்றன.

12.5.10

நாட்காட்டியை உற்றுக் கவனிக்கிற இன்னொரு நாள்.

பனிரெண்டு மாதங்களின் சுவடுகள் கடற்கரை மணலுள் பொதிந்து கிடக்கிறது. திரும்பிப்போய் தேடிப்பார்க்கிற போது சிப்பிகளும்,வதங்கிய மலர்களும்,சிரிப்பொலியும்,சினிமாப்பாடல்களுமாகவே தட்டுப்படுகிறது.ஒரே ஒரு வெள்ளைக் காகிதப் போட்டலம் மட்டும் பெருத்த மௌனத்தோடு கிடக்கிறது.அது அந்த மூன்று நாள்.ஒரு கட்டுரை எழுதியதற்காக பனியிடை நீக்கம் செய்யப்பட்ட நாட்கள்.எங்கேனும் தனது ஆணவத்தை  ஆடிச் சறுக்கிவிடாமல் பாதுகாக்க மனித உடலை முட்டுக்கொடுக்கும்,அல்லது முயல்குட்டிகளைப் பலிகொடுக்கும் கதைகள் கேட்டால் அந்த மனிதனின் குரூர முகம் மட்டுமே வந்து போகும்.

அதை முறியடிக்கிற வல்லமை மிகுந்த மயிலிறகுக் கைகளோடு அன்பெங்கும் வியாபித்திருப்பதாய் எனைச்செட்டைக்குள் வைத்திருந்தனர் என் தோழர்கள்.மாது,செல்வா,மணியண்ணன்,அண்ணன் சோலை மாணிக்கம், சங்கர்,நாசர்,சங்கரசீனி,அருண்,சுப்ரமணீ எல்லோரும் எங்களைச் சூழ்ந்து கொண்டு ஆதரவு கொட்டினார்கள்.எங்கெங்கெல்லாமிருந்தோ அலைபேசியில் ஆறுதல் வந்தது. ஆபத்துக் காலத்தில்தானே நண்பர்கள்,தோழர்களின் அசல் முகம் காணலாம்.அதற்காகவேணும் தர்மம் தோற்கிறது போல இன்னும் பல தருணம் வேண்டும்.அந்தக்கசப்பு நாட்களிலிருந்து விடுதலையாகி வெளியேற கிடைத்த அருமருந்தானது இந்த வலை.இங்கேயும் சளைத்தவரில்லை எனச்சொல்லி  எங்கள் பாசமிகு தோழர்கள் ஆற்றுப் படுத்தினார் கள். நன்றல்லாதவற்றை தோழர்களின் துணை கொண்டு அன்றே மறந்தேன். 

இந்த வருடத்திற்குள்ளாவது இன்னொரு சிறுகதைத் தொகுப்பை வெளியிடத் தீர்மானித்தவை சோம்பேறித்தனத்தால் சுனங்கிக்கிடக்கிறது. சிலநேரம் அலுவலக,தொழிற்சங்க நெருக்கடிகள் திட்டத்தைப் புரட்டிப் போடுகிறது. இரண்டு கண்களில் எது ப்ரியமானது.நாட்காட்டியின் இதழ்களைக் கிழிக்கத் தேரமில்லாது கழியும் வாழ்க்கைக்குள்ளே எல்லாம் பொதிந்துகிடக்கிறது.ஒரு கால்நூற்றாண்டு காலம் பிரக்ஞையின்றிக்கழிந்த இந்தநாளை என் இல்லத் துணையின் வருகைதான் அடிக் கோடிட்டு நிறுத்தியது. இcபோது குழந்தைகள் சொந்தங்கள்,நண்பர்கள் எல்லாம் குதூகலமாக்குகிறார்கள்.இன்றுதான் நான் பிறந்தேனாம்.

என் தங்கை அன்பின் முல்லை அனுப்பிய இசை வாழ்த்து இத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறது.. அத்தோடு என் அன்பும் தான்.
 http://www.123greetings.com/send/view/05112110104856407826

8.5.10

கைம்மாறு கருதாதது அன்பும், நட்பும்

இன்னும் நினைக்கிற போதெல்லாம் அந்தப்பயணம் ஒரு கனவுபோலே கூடவருகிறது.

எத்தனையோமுறை தோற்றுப்போவதும்.'அப்பிடியா சார் தூங்றாங்க'என்று சொல்லி காம்பவுண்ட் கேட்டிலே திருப்பி அனுப்புகிற பாந்தமும் உலவுகிற இந்த உலகில்.முகந்தெரியாத நபர்கள் அன்புவைப்பதுவும், உபசரிப்பதுமானவை இந்தப்பயணங்கள் ரொம்ப இனிப்பான பொக்கிஷங்கள்.

பெங்களூரில் நேர்முகத்தேர்வு புகைவண்டி இலவச நுழைவுச் சீட்டை முன்பதிவுசெய்ய அப்போது சாத்தூர் நிலையத்துக்குப் போனேன்.மதுரை தாண்டிப்போகிற முதல் தூரப்பயணம் அது.அப்போது நிலைய மேலாளராக இருந்த உயர்திரு மாடசாமி தனது அலுவலக நடைமுறைகளை புறந்தள்ளிவிட்டு என்னை நெருங்கிவந்து தோளில் கைபோட்டார்.படிக்கிற போதே ஒரு மத்திய அரசு ஊழியம் என்னைத்தேடி வந்ததைக்காட்டிலும் அவரின் பரிவு என்னைப்பனியாய் உருகவைத்தது.'பெங்களூர் போயிருக்கியா தம்பி, இல்ல சார்,அங்க யார்னாச்சு தெரிஞ்சவங்க,இல்ல சார், எங்க தங்குவ,தெர்ல சார். சரி இந்தா இந்திரா நகர்ல என் தம்பி வீடிருக்கு அங்க போய் தங்கிக்க,நான் ட் ரங்க் கால் போட்டுச்சொல்லிர்றன்'. அப்போது குகனோடு  ஐவரானோம்.

பெங்களூர் கண்ட்டோ ன்மெண்ட் நிலையத்தில் இறங்கி,இஞ்ச் இஞ்சாக விசாரித்து வீடு சேரும்போது ஹச் ஏ எல்
இஞ்சினியரின் கதவு என்னை இருகரம் நீட்டி ஏந்திக்கொண்டது.தூக்கம் வராத அந்த இரவில் சொர்க்கம் என்பதன் நடைமுறை அர்த்தம் விளங்கிக்கொண்டேன்.மறுநாள் காலை சாப்பிட்ட பூரிக்கிழங்கின் ருசி இந்த இருபது வருடந்தாண்டியும் நாக்கிலும் நினைவிலும் நின்றுபோய்விட்டது.அதன் பின்னர் இரண்டு மூன்று தரம் மரியாதை நிமித்தம் ஐயா மாடசாமியைப்பார்க்க நேர்ந்தது.அவரின் உருவம் கூட அரிச்சலாகத்தான் நிழலாடுகிறது.அவரின் பிரதியுபகாரமற்ற அன்பு ஒரு பெரிய கான்வாஸ் ஓவியமாகி என்னோடு கூட வருகிறது.அவரை தென்னக ரயில்வே வேறு இடத்துக்கு அழைத்துப்போய்விட்டது.

அதேபோலொரு பொக்கிஷம் ஜெய்ப்பூர் பயணம்.தோழர் காஷ்யபன். மாதுவுக்கு கொடுத்த அழைப்பு விலாசம் வழுக்கி எனது கையில் கிடைத்தது.எண்பத்தேழில் பார்த்த ஒரு இலக்கிய வாத்தியார்.எண்பதுகளில் எனது சிறுகதையோடு கூடவந்த அவரது படைப்பு, தமுஎச, எல்லாம் புத்தம் புதிய காப்பியாகியது.ஒரு கைப்பை நிறைய்ய அன்போடு நாக்பூர் நிலையத்தில் காத்திருந்தார்.எழுபது வயது தாண்டிய ஒரு ரிடயர்டு எல் ஐ சி ஊழியர் பலமைல் பயணித்து கைத்தடி ஊன்றிக்கொண்டு ,ரயில் நிலையத்தில் காத்திருந்தார்.தனது ரத்த சொந்தங்களுக்குக்கூட இவ்வளவு சிரத்தையெடுத்திருப்பாரா என்பது ஒரு இடைக்கேள்வி. ஒருவேளை தனது இல்லத்துணைகூட எதுக்குங்க இவ்வளவு ரிஸ்க் என்று  கேட்டிருக்கலாம்.அதையெல்லாம் உதறிவிட்டு வந்து காத்திருத்தலுக்குப்
பின்னாள் எழுத்தின் மீதும், மாதுவின் மீதும், தமுஎச மீதும் அவர் வைத்திருந்த நம்பிக்கை ஒளிந்திருந்தது.

எங்கள் ஆசிரியப் பெருந்தகை அருணா.
நான் வலையெழுத வந்த துவக்ககாலத்தில் எல்லைகள் தாண்டி பயணம் செய்த போது இடர்ப்பட்ட ரெண்டு நட்புத் தளங்கள் அன்புடன் அருணா,தாரணிப்ரியா.இன்னும் கூட வருகிற தோழர்கள் அவர்கள்.ஒரு பின்னூட்டத்தில் நானும் மாதுவும் பாலை மாநிலம் என்று சொன்னதை நினைவுபடுத்தி எங்களை வீட்டுக்கு அழைத்திருந்தார் பிரின்ஸ்பல் அருணா.சாத்தூரிலிருந்து கிளம்பிய நிமிடத்திலிருந்து நிறுத்தம் தவறாமல் குசலம் விசாரித்தார். ஜெய்ப்பூரில் என்னென்ன இடம் பார்க்கவேண்டும் என்கிற டிப்ஸ் கொடுத்தார்.அன்று மாலையே எங்களை வீட்டுக்கு அழைத்திருந்தார்.

நான் தம்பி அருண்,மாப்ள அண்டோ ,தோழன் சங்கர் ஆகிய நான்குபேரும் போனோம்.மார்ச் மாத ஜெய்ப்பூர் குளிரில் அந்த ஆட்டோ வில் பயணமான இடங்கள் அப்படியே நினைவிருக்கிறது.நாங்கள் நால்வரும் சுத்தத்தமிழ்,ஆட்டோ க்காரர் சுத்த ஹிந்தி.ஒவ்வொரு லாண்ட் மார்க்கிலும் நிறுத்தி நான் போன்பண்ணி பேசி அப்றம் அருணா ஆட்டோ க்காரரிடம் பேசி பிரதான சாலையைக்கடந்து இரண்டு தெருக்கள் தேடி,திரும்பவந்து அவரது வீட்டுக்கு பின்னாலுள்ள தெருவில் நின்றுகொண்டு அவரிடம் போன்ல பேசி,வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமானதாக மாறியது. ஒரு மணிநேர தேடலுக்குப்பிறகு சரி திரும்பிவிடலாம் என்கிற யோசனை வந்ததது.அட்டோ க்காரர் இந்தியில் தேட நாங்கள் தந்தியில் தேட அந்த இரவு எட்டு மணி குளிரில் இறுதியில் அருணா வீட்டைக்கண்டு பிடித்துவிட்டோ ம்.

ஒரு துப்பறியும் நவலுக்கான விறுவிறுபோடு தேடிக்கண்டுபிடித்தோம் எழுத்தையும்,நட்பையும்.ஒரு தமிழன்,ஒரு தெக்கத்திக்காரன் என்கிறதையெல்லாம் தாண்டி வலைப்பதிவர் ஒருவரைப்பார்த்து தமிழில் ஒரு ஹலோ,தமிழ்மணக்கிற வெண்பொங்கல்,தமிழ்சூட்டோ டு ஒரு கப்காபி எல்லாமும் ஜெய்ப்பூர் குளிர்,தொலை தூர பயணம்,மரத்துப்போன நாக்கு ஆகியவற்றுக்கு ஆறுதல் தந்தது. இது வலையால் சாத்தியமானது.இது வலை சாதித்தது.

6.5.10

செல்போன் கொலையாளியும்,தெருப்பசுமாடும்.

அந்த மத்தியதரக்குடியிருப்பில் மின்சாரம் தடைபட்டுப்போனது. அவர் சுற்றுசுவர் வாசலுக்கருகில் வந்து புகைபிடித்துக்கொண்டிருந்தார். எதிர்வீட்டு வாசலில் எங்கிருந்தோ வந்த பசுமாடு படுத்திருந்தது.இருளில் புகையின் நெடியெங்கும் பரவிக்கொண்டிருக்க.தூரத்தில் ஒருவர் தனக்குத்தானே புலம்பிக்கொண்டு வந்தார்.ஆமாம் முன்னாளெல்லாம் யாராவது  இடது காதைப்பொத்திக்கொண்டு வலது கையை ஆட்டிக்கொண்டிருந்தால் எதோ பாட்டு ஆலாபனை செய்கிற மாதிரித்தோன்றும். ஒருவன் யாருமற்ற வீதியில் கத்திக்கத்திப்பேசிக்கொண்டு வந்தால் அவனுக்கு எதோ விபரீதம் நடந்துவிட்டது என்று யூக்கிக்கலாம். இல்லை மனப்பிறழ்வாகிவிட்டதென்று யூகிக்கலாம்.இதுமாதிரியானவற்றையும் இன்னும் சொல்லக்கூடாததையெல்லாம் சகஜமாக்கிவிட்டது இந்த அலைபேசியின் வருகை. 

வந்தவன் உரக்கப் பேசிய அலைபேசிக் குரல் தெருவெங்கும் பரவியது. அவ்வளவு அதட்டலான குரல்.' ராஸ்கல் என்ன நெனச்சிக்கிட்ருக்கான்,
நம்மள என்ன பொட்டப்பயகன்னு நெனச்சானா'என்று சொல்லக்கூடிய வார்த்தைகளையும், சொல்லக்கூடாத வார்த்தைகளையும் உபயோகித்தான்.'மாப்ள  யார்ட்ட வந்து வாலாட்றான், ஸ்கெச்சப்போட்டு உடனே அவனத்தூக்கு, இனியும் பொறுக்க முடியாது'.என்று சொன்னபோது கேட்டுக்கொண்டிருந்த இவருக்கு இனந்தெரியாத கலக்கம் வந்தது. ஆஹா அநியாயமாக ஒரு மனித உயிர் பலிபோகப்போகிறதே என்று ஆதங்கப்பட்டார். அந்த அப்பாவி யாரோ என்றெல்லாம் சிந்தித்துக் கொண்டிருக்கும் போது இவர் நின்று கொண்டிருந்த இடத்துக்கருகே வந்துவிட்டான்.எதிர் வீட்டு சுற்றுச்சுவரருகே படுத்துக்கிடந்த மாடு செல்போன் கொலையாளியின் சத்ததைக்கேட்டு மிரண்டு,தடபுடாவென எந்திரிக்கவும்,அந்தானிக்ல, அலறிப்பிடித்து வந்தவழியே ஓடினான். நிக்கல,திரும்பிப்பாக்கல கண்ணிமைக்கும் நேரத்தில் தெருவைக்கடந்து காணாமலே போய் விட்டான். அந்த இடத்தில் அவனது ஒற்றைசெருப்பு மட்டும் தனித்துக்கிடந்தது.

நடந்தவற்றை அனுமானிக்கமுடியாமல் பசுமாடும் அங்கிருந்து கிளம்பியது.அருகருகே இருந்த குடித்தனக்காரர்கள் சினிமா நகைச்சுவையிலோ,அசத்தப்போவது யாரு நிகழ்சியிலோ கிடைக்கமுடியாத இந்த அரிய காட்சியைச் சொல்லிச் சொல்லி சிரித்துக்கொண்டார்கள்.
 
இதுவும் மின்சாரம் தடைபட்டுப்போன ஒரு முன்னிரவின் கதை.எங்கள் அன்புமுதலாளி தோழர்.செல்வக்குமார் திலகராஜ் சொன்னது.

5.5.10

வேரை விரட்டிய மண்

அதோ கண்மாய்த் தண்ணீரில் மூன்று மணி நேரம் கும்மாளம் போடும் ஆறு சிறுவர்களில் ஒருவன் சாலமுத்து. அவன் யார் என்பதை  புதியவர்கள் கண்டுபிடிக்க முடியாது. ஏன் கண்டுபிடிக்க வேண்டும். விளையாண்டு முடித்து எல்லோரும் அவரவர் வீட்டுக்கு சாப்பிடப் போகும்போது சாலமுத்து மட்டும் அங்கேயே உட்கார்ந்து விடுவான். அப்போது நீங்கள் கண்டுகொள்ளலாம். அல்லது தெற்குக்கரையில் முங்கி வடக்குக்கரையில் வந்து எந்திரிக்கக்கூடிய வல்லமை மிக்க இரண்டு மூன்று பேரில் அந்த ஏழு வயது சாலமுத்து ஒருவன் என்பதை வைத்துக் கண்டுபிடிக்கலாம். அவன் தாயும் தந்தையும் இடுப்புக் கயிறு கட்டுகிற போது வைத்த பெயர் சாலமுத்து. அந்த ஊர் அவனுக்கு வைத்த பெயர் கில்லாடி.கிலாடி என்பது சுத்தமான வடமொழிச் சொல் ஆனாலும் அது இந்த தென்தமிழ் நாட்டுக் கடைக்கோடி கிராமத்துக்குள் எப்படி வந்தது. கிடக்கட்டும். சாலமுத்துக்கு எப்படி அந்தப் பெயர் வந்தது.

சாலமுத்து விளையாட்டுக்கள் மட்டிலுமல்ல பெரியவர்களோடு போட்டிபோட்டு வேலை செய்வதிலும் மிக்கக் கெட்டிக்காரன்.ஆஞ்சான் இழுப்பது அந்தக் காலத்தில் ரொம்பக் கஷ்டமான வேலை. கிணறு தோண்டும்போது உடைபடுகிற கல்லும் ஜல்லியும் வெளியே கொண்டுவர தண்ணீர் இறைக்கிற கமலையில் கூடைகளைக் கட்டிவைத்து மனிதர்கள் மாடுகள் போல முன்னோக்கி கமலைக் குழியில் இழுக்கவேண்டும். கல் ஜல்லிகளை ஒரு நபர் மேலே வாங்கி இறக்கிவைக்க இன்னொருவர் துக்கிசுமந்து கொண்டு போய் தட்ட வேண்டும். இந்த வேலைகளுக்கு வலிமையுள்ள பெண்ணும் ஆணும் மட்டுமே போவார்கள். வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிற நேரங்களில் சாலமுத்து உவந்து வந்து தன்னை மாடாக்கிக் கொள்வான். முரட்டுப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் நிகராக அதை கச்சிதமாகச் செய்துமுடிப்பான். மேலக்குடி சம்முகம் பிள்ளை மனைவி  வீட்டிலிருந்த அந்த வெள்ளிக் குடத்தை கை தவறிக் கிணத்தில் போட்டு விட்டாள். காலையில் விழுந்த அந்தக்குடத்தை பாதாள கரண்டி கொண்டு துழாவி துழாவி எடுக்கவே முடியவில்லை.

 " குதிச்சு கொடத்த எடுடா ஒன்ன கயறு கட்டித் தூக்கிருவோம் "

 என்று  யாரோ சொன்ன மறுகணமே உள்ளே குதித்துவிட்டான் அந்தப் படியில்லாத கிணற்றில். வெள்ளிக்குடம் முதலில் கைக்கு வர இரண்டாவது தன்னை கயிற்றால் கட்டத்தெரியாத சாலமுத்து அந்தக் கயிற்றைப்பிடித்து. உன்னி உன்னி மேலேறிய காட்சி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஊரின் பேசு பொருளானது. மலையகத்தி மரத்தின் உச்சிக்கிளையில் உட்கார்ந்து கொன்டு பறக்கமறந்து கத்திக்கொண்டிருந்த சின்னச்சாமி வீட்டுக் கிளியை பத்திரமாக இறக்கிக்கொண்டு வந்தபோதுதான் கூட்டத்துக்குள்ளிருந்த சன்னாசிக் கிழவன் " எலே நீ கில்லாடிதாண்டா" என்று சொன்னார். மறுகனமே சாலமுத்து என்கிற அவனது பெயர் ஊரின் பதிவுகளில் கில்லாடியாக மாற்றமானது.

தனது ஆறாவது வயதில் ஒரு பழைய மஞ்சள் பையைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடம் போக எத்தனித்த போது அவனை அப்பனும் அம்மையும் வினோதமாகப் பார்த்தார்கள். தனது விளையாட்டுத் தோழன் தேவேந்திரனோடு தானும் படிக்கப் போகவெண்டும் என்னும் அவனது ஆசையைச் சொன்னான். அம்பட்டப்பயலுக்கு படிப்பெதுக்கு, கழுத நெனச்சதாங் கந்தழுங் கதக்களும்  என்று சொலவடையால் மண்ணள்ளிப் போட்டாள் அவனது அம்மை. கஞ்சி தண்ணி குடியாம அன்று முழுக்க அழுத சாலமுத்துவால் எதுவும் சாதிக்கமுடியவில்லை.


தேவேந்திரன் என்றால் சாலமுத்துவுக்கு உசுரு.ரெண்டுபேரும் காட்டுக்குள் போனால் கஞ்சித்தண்ணி மறந்து திரிவார்கள்.பொட்டக்காட்டுக்குப் போய் பனைகளில் ஏறி நுங்கு பறித்துப்போடுவது சாலமுத்துவின் வேலை
அதைச் சீவித் தருவது தெவேந்திரனின் வேலை. கவட்டைக் கல்லடித்து குருவி பிடிப்பது சாலமுத்துவின் வேலை.அதைச்சூட்டாம் போடுவது,மொட்டைக் கிணறுகளில் இறங்கி மைனாக்குஞ்சுகள் எடுத்து  வருவது, புறாக்குஞ்சுகள் எடுத்து வருவது அதற்குக்கூண்டு  தயாரிப்பது தேவேந்திரன்.தேவேந்திரனின் வீட்டில் கடும் பிராதாகிப்போனாது.அவனோடு சேரக்கூடாதென்று கால் கையயெல்லாம் கெட்டிபோட்டுப் பார்த்தார்கள்.அடி உதை சூடெல்லாம் செனாய்க்கல. "எந்த நேரமும் அவங்கூடயே சுத்திக்கிட்டு அலைஅயிறயே நீயு ஊர்க்கஞ்சி ருசி கண்டுக்கிட்டயா" என்றெல்லாம் கேட்டுப்பார்த்தார்கள் நட்பின் ருசியறியாப்பெற்றோர்கள். "அப்புறம் என்னவேனாத் தொலஞ்சி போ அவன வீட்டுக்குள்ள மட்டுங்கூட்டியாறாத " எனும் புரிந்துணவு ஒப்பந்தத்தோடு முடித்துக்கொண்டார்கள்.சாலமுத்துவீட்டில் தேவேந்திரரனைத் தடுக்கிற பெருஞ்சுவரேதும் எழுப்பப்படவில்லை.இருக்கிற பலகஞ்சியில் நல்ல கஞ்சியாக ஒதுக்கியெடுத்து,வட்டப்பிளேட்டை விளக்கிக்கழுவி உப்புத்தண்ணி ஆனம் வச்சு ஒரு சாமிக்குப்படைப்பதுபோலப் படைப்பார்கள்.என்ன பண்டமிருந்தாலும் முதல் பங்கு தேவேந்திரனுக்குத்தான்.

"யெய்யா ஏ சாமி கண்ணுதொறக்காத குஞ்சுகள மட்டும் கொண்டராதீக"
"ஏ லச்சுமிம்மா"
"தாக்குருவி கெடந்து அலையும்யா,பிள்ளயுந்தாயு பிச்ச பாவம் நமக்கு வேண்டா"

சாலமுத்தோட அம்மா சொன்னதுக்கப்புறம் அவர்கள் அப்படிச்செய்யவேயில்லை.ஆனாலும் ஊர் சாலமுத்துவையும்
தேவேந்திரனையும் பிரித்தேவிட்டது.பக்கத்து வீட்டுச் சண்டையில்

"பெத்தபிள்ளய வளக்கத்துப்பில்ல வண்ணாக்குடியில ஊர்க் கஞ்சிகுடிக்க வச்சிக்கிட்டு ரோச.. பாரு"

என்று வஞ்ச வசவு மறுநாளே  பூதமாகிப் பிரித்தது.சாலமுத்து வீட்டுக்குப்போய் தேவேந்திரனின் அம்மை பேயாட்டம் ஆடினாள்.அடிக்க அடிக்க ஓடினாள்,அன்றிலிருந்து  தேவேந்திரனும் அவனும் எதிரெதிர் பார்த்தாலும் சண்டை ஞாபகத்தில் வர விலகிப் போனார்கள்.சாலமுத்துவுக்கு ஒரு வாரம் காய்ச்சலடித்தது.காட்டுக்குள் அலைந்து காத்துக் கருப்பப்பாத்துப் பயந்திருப்பானென்று சுடல மாடசாமி கோயில் திருநீறு போட்டார்கள்.காலம் கறைத்து விட்ட நினைவுகளில்,வயிறு நிறப்புகிற நிர்ப்பந்தத்தில் தேவேந்திரனுக்கான இடம் காலியாகவே கிடந்தது.

எதாவது சினிமாப்பாடலைப் பாடிக்கொண்டும் சீட்டியடித்துக் கொண்டும் அவனுக்கிட்ட வேலைகளில் முழுகிப் போகும் அவனைஅந்த ஊருக்குப்பிடிக்கும். ஆனால் அவன் சோட்டுப் பையன்களுக்குத் தான் பிடிக்கவே பிடிக்காது. ஜெயித்துவிடுவான் என்கிற பயத்தில் அவன் புறந்தள்ளப்படுவான். ஒரு சின்ன முகமாற்றத்துக்குப்
பின் இயல்பாகி இன்னொரு வேலையில் அந்த ஒதுக்குதலை ஒதுக்கிவிடுவான். பங்குனிப்பொங்கல் முடிந்ததும் காடும் ஊரும் கிணறுகளும் கருகிப்போகிற வெயிலடிக்கும்.வெள்ளாமை எடுத்த பின் நிலத்துக்காரர்கள் திரும்பிப் பார்க்காத வெற்றுக் காடுகளில் வெள்ளெலி தேடி மம்பட்டியோடு பயணம் போகிற சாலமுத்துவின் அய்யா மருதய்யாவின் பின்னால் கட்டாயம் அவனிருப்பான். அன்றும்கூட நல்ல பாம்பு எலிப்பொந்துக் குள்ளிருந்து வெளியேறியதும் கையிலிருந்த வேலிக்கம்பால் படக்கென தலையை அமுக்கி தந்தையின் உயிர் காத்த சாலமுத்துக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க யாரும் அவதானிக்கவில்லை. அது அவசியமில்லை என்பதே அந்த ஊரும் அவனது பெற்றோரும் காலம் காலமாக கடைப்பிடித்து வரும் பழக்கம்.

'' சோவிவி....ஏ சோவி....ய்யாங் "

என்று ராகம் பாடிக்கொண்டே பிழிந்து, முறுக்கேறிய அழுக்கற்ற துணிகளை தூக்கி
வீசுகிற அய்யாவின் வேகத்தை கையில் ஏந்திப்பிடித்து, ஓடிப்போய் உதறிக் காயப்போடுகிற லாவகம் கற்றுக்கொண்டான் இளவயதிலேயே. முன்னங்கால்களைக் கட்டிப்போட்டபின் காடுகளில் மேயப்போகும் கழுதைகள் தத்தித் தத்திக் கடந்து போகும். அப்போது அதன் கழுத்தில் சேலையைச்சுற்றி கால்கட்டை அவிழ்த்து விட்டு தாவி ஏறி முதுகில் அமர்ந்து விரட்டி ஒரு சுற்று ஓட்டிவருவான். தனது முப்பது வயது அனுபவத்தில் மருதைய்யாவுக்கு வராத லாவகம் அவனிடம் இருக்கும். ஊரே பொறாமைப்படும் ஒரு ராஜகுமாரனைப் போல கழுதையின் வேகத்துக்கு காலை விரித்துக்கொண்டு குதித்து குதித்துப் பவனி வரும் அவனை ஓரக்கண்ணால் பார்த்து மார்பு குறுகுறுக்க சந்தோசம் எய்துவாள் அவன் அம்மை. அப்படிப்பட்ட ஒரு புத்திக் கூர்மையானவன் இந்த வண்ணாக்குடியில் வந்து பிறந்துவிட்டானே என்று எண்ணியபடி துணியை யய்.. யய் என்று அடிவயிற்றுக் குரலோடு துவைப்பார் மருதய்யா.

பசிக்கிற நேரமெல்லாம் கஞ்சி குடிக்கவும் மீதி நேரங்கள் முழுவதையும் உழைக்கப் பயன்படுத்துகிற அந்தக்குடும்பத்தில் சாலமுத்துவுக்கு அப்பனின் தொழிலே விளையாட்டாக மாறியது.  கழுதை மூத்திர நெடியும், உவர்மண்ணின் வாசமும் கலந்து கிடக்கிற வீட்டின் இருண்ட மூளையில், அழுக்குத்துணிகளின் மேல் ரட்டினக்கால் போட்டுத்தூங்குவான். கரட்டாண்டிகளையும், சில்லான்களையும் அடித்து விரட்டி ஓடுவான். கம்மாக்கரையில் தண்ணீரின் அலம்பலில் கரை ஒதுங்கும் நண்டுகளை விரட்டுவான். நண்டுப் பொந்துக்குள் அனாயசமாகக் கைவிட்டு  பிடிக்கும் போது கடிக்கிற நண்டுகளை அப்பன் அம்மையிடம் காண்பித்துச் சிரிப்பான். வெளுத்த துணிகளைப்பிரித்து வீடுவாரியாக மருதய்யா தரும்போது சிரட்டையில் இருக்கும் கருப்பு மசியால் குறியிடுவது அவனது விளையாட்டாகவும் வேலையாகவும் கடக்கும். இரவு நேரங்களில் கஞ்சியெடுக்கப் போகும் தன் தாயோடு போவதே அவனுக்கு விருப்பமான நேரம்.

இரவென்றால்

'' எம்மா கஞ்..சி போடுங்கம்.....மா ''   என்று பசிக்குரலில் இறைஞ்ச வேண்டும்.

பகலென்றால்

" எம்மா கஞ்சி போடுங்கம்மா, அழுக்கெடுத்துப் போடுங்கம்மா "

என்று மறக்காமல் சொல்லவேண்டும். அழுக்குத்துணிகளை எடுத்து எண்ணி ஒரு மூட்டையாகக் கட்டிப்போட்டு பத்து வீட்டுக்கு இடையில் ஒரு திண்ணையில் வைக்கவேண்டும். இந்த வேலைகளுக் கிடையில் சுடுசோறு போடுகிற வீட்டில் உட்கார்ந்து கொஞ்சம் குழம்பும் கேட்டுவாங்கி சாப்பிட நேர்கிற தருணத்துக்காக சாலமுத்துவின் வயிறு கிடந்து ஏங்கும், இறையும். வாத்தியார் வீடு, சிங்கம்மக்கா வீடு, பிரெசிடெண்ட் வீடு, பூச்சம்மா வீடு என்று ஒரு பத்து வீடு சுடு சோறு கிடைக்கிற வீடுகள். காந்தன் வீட்டிலும், கருப்பன் வீட்டிலும் இவர்களுக்குப் போடுவதற்கென்றே முந்திய நாளின் சலிச்சுப்போன பழய்ய கஞ்சியை எடுத்து வைத்திருப்பார்கள்.

" ஏம்மா ரெண்டுமைல் நடந்து அழுக்குத் துணிகளையும் தீட்டுத்துணிகளையும் தொவச்சித்தர்ர எங்களுக்கு சம்பளமா தாயி குடுக்கீக, இந்த கஞ்சிதானம்மா போடுதிக, பன்னிகூடக் குடிக்காத இந்தக்கஞ்சிய மெனக்கெட்டு எடுத்துவச்சிருக்யே நாச்சியா"

சொன்ன மறுகணமே சண்டை வெடிக்கும்,

 '' மத்தவள மாரி பகுலுக்காக சுடு சோறு போடமிடியாது, இருக்றதத்தாம் போடுவம், இஷ்டமின்னா வாங்கு
இல்லாட்டா ஓடு ",

" ஏம்மா பிச்சயா கேக்காக, வெளுத்ததுக்கு கூலி தானம்மா இந்த எச்சி சோறு''

" எச்சி சோறா என்ன ராங்கியாப்பேசுறா பாரு, எல்லா இந்த தங்கிலியாங் குடுக்கிற தெம்பு, வண்ணாக்.... திமிரப்பாரு"

இப்படித்தினம் ஒரு வீட்டில் எச்சிச்சோத்தோடு அவமானத்தையும் சேர்த்து வாங்கிக்கொண்டு வந்து வயிறு நிறப்பவெண்டும். இது சாலமுத்துவுக்கு புரிந்தும் புரியாமலும் காலம் நடந்தது. பிள்ளைப்பெத்த வீடுகளிலும், பெரிய மனுஷியான வீடுகளிலும் இருந்து மறுநாள் காலை ஒரு ஆள் வரும். வந்து மாத்து துணி எடுத்துட்டுப்போ என்கிற கட்டளையை வாசலில் நின்று பிறப்பித்துவிட்டு திரும்பும். கைவேலைகளைப் போட்டது போட்டபடி விட்டு விட்டுப் போகவேண்டும். அப்படியான நாட்களில் சாலமுத்து தான் அம்மாவோடு போவன் எதாவதொரு மூலையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கும் அந்த வெடவெடத்த சேலையை அம்மாதான் எடுத்து ஒரு வேலிக்குச்சியில் தலைப்பாகை கட்டுவதுபோல சுற்றுவாள்.பார்ப்பதற்கு கருணாகர நாடார் பஞ்சுமிட்டாயை குச்சியில் சுற்றித்தருகிறது போல அவனுக்குத் தோன்றும். அம்மையிடம் அதை நான் சுற்றுகிறேன் என்று கேட்பான்

'' சின்னப்பிளைக இத தொடக்கூடாது ''

'' போன வாரம் கூட இதே வீட்டில் இதே குறி போட்ட சேலையை நாந்தான எடுத்து அழுக்கு கட்டிவச்சே இப்ப ஏ வேண்டாங்க ''

" சின்னப்பிள்ளைக தொடக்கூடாதுன்னா, தொடப்பிடாது, தொனத்தொனன்னுக்கிட்டு, இந்தா போ, வட்ட ரொட்டி வாங்கித்திண்ணு"

என்று சொல்லி பத்துப்பைசாவை சுருக்குப்பையிலிருந்து எடுத்து எறிவாள்.தனது கேள்விகள் திசை திருப்பப் பட்டதறியாமல் கடைக்கு ஓடுவான். வீட்டிலும் அந்த சேலையை  ஒதுக்கி வைத்திருப்பாள். அன்றே சலவைத் துரைக்கு எடுத்துச்செல்லும் அவள் அப்பனையும் தொட விடமாட்டாள். தானே துவைத்து அதை மட்டும்தனியாக எடுத்து வைப்பதன் மர்மம் புரியாமல் அவனது சிறு பிராயம் கழிந்தது.

" நா தா சின்னப்பிள்ள அப்பனயு தொடவிடமாட்டேங்றே"
" இப்டியெல்லா கேட்டா சாமி கண்ணக்குத்திரு, பேசாமக்கெட "

சாமி பயத்தில் கொஞ்ச நாள் கழிந்தது. ஆனாலும் சுற்றிவைத்திருக்கும் வெடவெடத்த சேலையின் புதிர் புரியாத நமச்சல். நெடுநாள் அவனை சீண்டிக்கொண்டிருந்தது. அப்பனம்மை இல்லாத நாட்களில் இருட்டியபிறகும்கூட சுடுகாட்டுவழியாக கழுதை பத்திக்கொண்டு சாவகாசமாக வரும் அவனுக்குள் சாமி குத்தத்தை சந்தித்துவிடுவதென தீர்மானம் எழுந்தது. ஆளற்ற ஒரு நாளில் கனகமனியம்மா வீட்டில் இருந்து ஆள்வந்து மாத்துத்துணி டுக்க வேண்டுமெனச் சொல்லிப்போக விடுவிடுவென சாலமுத்து பின்னாலே போனான். அன்று சாயங்காலம் கையில் கிடைத்த வேலிக்குச்சியால் செனந்தீரப்போட்டு வெளுத்தாள்.கடைசியில் ." அது தீட்டுத்துணி நீதொடப்பிடாதுன்னு சொன்னாலுங்கேக்க மாட்டுக்யேடா" அவனைக்கட்டிக்கொண்டு அழுதாள். அந்தக்குடும்பத்தின் மீது கவிழ்ந்திருக்கிற யுகாந்திர அழுக்கின் முடைநாற்றம் தெரியத்தொடங்கிய நாள் அது.

இன்னொரு நாள் மழை பெய்து ஓய்ந்த நேரத்தில் செவக்காட்டு தரிசில் அமுக்குச்சண்டை விளையாட்டு நடந்தது. விளையாட்டு விதிப்படி, அடிக்கக்கூடாது, குத்தக்கூடாது, கிள்ளக்கூடாது காலை வாரிவிட்டு விழவைத்து, எதிராளியின் மேல் உட்கார வேண்டும் இதையெல்லாம் கண்கானிக்க தங்கச்சாமி ரெபிரியாக இருந்தார். ஓரத்தில் இருந்து வேடிக்கை பார்த்த சாலமுத்துவை வம்பிழுத்த அவனை விட நான்கு வயது மூத்த சிங்கராஜை மக்காடச் சேத்து தூக்கி அமுக்கிவிட்டான்.சுற்றியிருந்தவர்கள் சிரித்ததில் ரோசப்பட்டு அடித்தான் சிங்கராஜ். அடிபொறுக்காத சாலமுத்து கல்லெடுத்து எறிந்து மண்டையுடைந்து போனதில் நாலு நாள் சண்டை ஊர்க்கூட்டம் என்று அமர்க்கலமானது. இறுதியில் மருதய்யா காலில் விழுந்து அபராதம் கட்டவேண்டியதானது. அன்று இரவு முழுவதும் குடும்பம்  உட்கார்ந்து அவனுக்குச் சில உபாயங்கள் சொல்லித் தந்தார்கள். நிறய்ய விசயங்கள் புரியாமல் போனது. இந்த ஊரு பூராம் வேற, நம்ம வேற. என்று சொன்ன வார்த்தைகள் அவனுக்கெப்படிப் புரியும்.

மறு வாரம் சாத்தூரில் கல்யாணவீட்டுக்குப் போனார்கள். அவனது மாமா வீட்டில் அழுக்குத்துணிகள் இல்லாமல் இருந்தது. இரண்டு மூன்று அறைகள் கொண்ட அந்தவீட்டில் காத்தாடியும், ரேடியோப்பெட்டியும் இருந்தது. மூன்று வேளையும் சோறு பொங்கினார்கள். காலையிலும்   மாலையிலும் டீக்கடையில் பால்காப்பி வாங்கிக் குடிக்கத் தந்தார்கள். ஒரு இரவில் எல்லோருமாகச் சேர்ந்து சினிமாவுக்குப் போனார்கள். மாமாவின் மகன் காக்கிக்கலர் டவுசரும்,வெள்ளைச் சட்டையும் போட்டுக் கொண்டு புத்தகப்பை தூக்கி நடந்து போவதை இவனது குடும்பம் பூரித்துப்போய் பார்த்தது. அங்கேயே தங்கிவிட ஆசைப்பட்டவனை அடித்து இழுத்து மீண்டும் பஸ் ஏறி வீடு வந்து சேர்ந்தார்கள். பின்னர் வருசம் ஒரு தரமாவது கல்யாணம் பொங்கல் என சாத்தூர் போவதே அவனது கனவாகவும் வாழ்நாள் சாதனையாகவும் கடந்தது.

மூக்குக்குகீழே உதட்டில் ரோமங்கள் வளர ஆரம்பித்தநாட்களில் வெகு நேரம் கண்ணாடியில் அதைப் பார்த்துப் பூரித்துக் கிடந்தான். எட்டாத உயரத்தில் இருந்த வீட்டு ஜன்னல் இப்போது எட்டியது. அதன் வழியே அன்னாமலைச்சாமிநாடார் பம்புசெட்டில் குளிக்கிற பெண்களை பார்க்கிற தருணங்கள் வாய்த்தது. திருத்தங்கல்லிலிருந்து  வருசாவருசம் குலசாமி கும்பிட வரும் முனியாண்டிமகள் காளியம்மா இப்போதெல்லாம் அவனிடமிருந்து எட்ட நின்றே பேசினாள். டவுசர் பாவாடை இல்லாமல் இருவரும் கம்மாத் தண்ணியில் குதியாட்டம் போட்டது, அவளுக்கு இவன் நீச்சல் சொல்லிக் கொடுத்ததெல்லாம் பழைய காலங்களானது. அவளது கழுத்துக்குக் கீழே நிலைத்து விடுகிற இவனது பார்வை அப்போது இவனுக்குள் வெப்பம் படரும். தனியாக பீடி வாங்கிப் பதுக்கி வைத்துக் குடிக்கிற சாலமுத்துவின் கனவில் எப்படியும் ஒரு பெண் வந்தே தீருவாள்.

இப்போதெல்லாம் அவன் கஞ்சி வாங்கப்போவதில்லை. குமரிப்பிள்ளைகள் இருக்கிற வீடுகளின் முன்னாள் நின்று எம்மா கஞ்சிபோடுங்கம்மா என்று குரலெழுப்புவது லாஞ்சனையான விஷயமாகக் கருதினான்.அம்மையும் அப்பனும் இல்லாத ஒரு நாளில்  கஞ்சி வாங்கப்போய்விட்டு, திரும்ப வந்து

 " இந்தப்பொழப்புக்கு மருந்தக்குடிச்சி செத்துப்போகலாம் "

என்றுசொல்லி நங் என்று கஞ்சிப் பானையைகீழே வைத்தான். துறைக்குப்போவது துணி வெளுக்கிற வேலைகளில் ஒத்தாசனையாக இருப்பது எல்லாம் இனி தன்னால் செய்யமுடியாது என்று சொன்னபோது.

 " பின்னெ அங்கெ ஒனக்கு கலெக்டர் வேல காத்திருக்காக்கும், வண்ணாக்குடில பெறந்துட்டு நீ என்ன பெரிய்ய அய்யரு வீட்டு பிள்ள மாதிரிப் பவுசு பாக்கெ''

மருதய்யா அவனை அடிக்க ஓடினார். தடுத்த அம்மையின் மேல் விழுந்த அடியில் மனம் வெதும்பி அன்று மட்டும் துறைக்குப் போனான். அன்று இரவு வெள்ளாவிக்கு முன்னாள் உட்கார்ந்து தீவிர சிந்தனை கொண்டான்.

மறுநாள் அனந்தபுரி துரித வண்டியில் நெரிசலுக்கு மத்தியில் ஒற்றைக்காலில் நின்று கொண்டிருந்தான். நின்றிருந்த பயணி ஒருவர் உட்கார்ந்திருந்தவரோடு சண்டைபோட்டார். பக்கத்தில் இருந்த கனவான் அவனை ஒதுங்கி நிற்கச் சொன்னார். அவன் ஒற்றைக் காலில் நிற்பதைச் சொன்னான்.ரொம்ப நேரம் சலித்துக்கொண்டு வந்தார். இன்னும் கூடுதலாக இரண்டு வண்டி விடலாமே என்னும் தனது  யோசனயையும் சொன்னார்.  இப்படி ஆளாலுக்கு குரைபட்டுக்கொண்டு வந்தார்கள். ஆனால் அந்த நெரிசல் அவனுக்கு உலகச் சந்தோசமாக இருந்தது. அவனுக்குப் பின்னால் நின்றிருந்த பெண்ணின் கை அவன் மேல் பட்டது ஒதுங்கிக் கொண்டான்.அதனால் என்னப்பா நா ஒங்கம்மா போல என்று சொன்னாள் அவனுக்கு கண்ணில் நீர் கோர்த்தது.

மதுரையில் இறங்கி ஒரு தண்ணீர் பாட்டில் வாங்கி வந்து தந்தான். அப்போதிருந்து அந்தப்பெண் அவனோடு பேச ஆரம்பித்தது. சென்னையில் அவனுக்கு யாரும் தெரியாது, சென்னையே தெரியாது என்பதைச் சொனான். செங்கல்பட்டில் வண்டி நிற்கும்போது காலை மணி எட்டாகி விட்டிருந்தது. அந்த அம்மாவுக்கு இட்லிப் பொட்டலம் வாங்கிக் கொடுத்தான்.கூட்டம் குறைந்து உட்காரும் இருக்கைகள் காலியாகக்கிடந்தது."வாப்பா தம்பி ..ஏ தம்பி, முத்து ஒன்யத்தான் வந்து இங்க உக்காரு" அந்தம்மா கூப்பிட்டார்கள்.நெளிந்தான்."வா ஏம்பையம் மாதிரி" சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் உட்காரச் சொன்னார்கள்.அவனுக்குப் பயமாக இருந்தது.ஒரு ஒதுக்குப்புறத்தில் அறைப்பிருஷ்டம் பதிய உட்கார்ந்தான்."நல்லா ஒக்காரு இந்தா நீ ரெண்டு இட்லி திண்ணு" மைனாக் குஞ்சுச் சத்தம் ஒலித்தது.இனி ஊர் திரும்புவதில்லை என்கிற தீர்க்கமான முடிவோடு செங்கல்ப்பட்டிலிருந்து ரயில் நகர்ந்தது.

4.5.10

ஆண்டாள்கோவில் பூசுபொடியின் சுகந்தம் மணக்கும் 'ஒரு பிடி கோதுமை'

'அவன் வந்துவிட்டான் நான் கட்டிலில் கவிழ்ந்து படுத்து கண்ணை இறுக்கி மூடிக்கொண்டேன்.கத்தியால் ஒரு குத்து,இலன்னா லாடம் பதித்த பூட்சுக்காலால் ஒரு மிதிபோதும்,வேறெதையும் நான் எதிர்பார்க்கவில்லை'

மிசோரம் காட்டுக்குள் என்சிசி பயிற்சிக்குப்போனவனுக்கு காய்ச்சல் வந்து  சென்ட் ரி டூட்டி வாங்கி கொட்டகையில் படுத்திருக்கிறான்.அடுத்த கொட்டகையில் இருக்கும் கனத்த உருவமுள்ள பஞ்சாபியைப்  பார்க்கவே பயப்படுகிறான். வழியனுப்புகிற போது அம்மா சொன்ன  'பஞ்சாபிக் காரங்ககிட்டயும் , காஷ்மீரிகளிடம் பேசாதே அவர்கள் தீவிரவாதியாகக் கூட இருக்கலாம்' என்கிற அம்மாவின் எச்சரிப்பு  நிமிடத்துக்கு  நிமிடம் கூடவருகிறது. வாந்தியெடுக்கும் இவனுக்காக வெண்ணீரும் மாத்திரையும் கொண்டுவந்து தருகிறான்.அது விஷமாகக்கூட இருக்கலாம் என்று பயந்த படியே விழுங்குகிறான்.காய்ச்சல் குறைந்ததும் பேச்சு ஆரம்பமாகிறது.'நீ காடு பாக்கப்போகலையா' என்றுகேட்கிறான்.இல்லை பிடிக்கலை,வந்ததிலிருந்து எதிரி எதிரி என்று ஆயிரம் தரம் சொல்லுகிறார்களே யார் எதிரி என்று சொல்லவில்லை என்கிறான் பஞ்சாபி.சப்பாத்தியும் பருப்பும் வாங்கிவந்து இவனுக்கு ஊட்டிவிடுகிறான். சந்தேகம் கண்ணீராய்க் கரைகிறது.

"நடுவில் அவன் ஒரு பஞ்சாபிப்பாடல் பாடுகிறான் பூத்திருக்கும்கோதுமை வயல்களும் லட்சியமின்றிபாடிப்பறந்து திரியும் பறவைகளும் நிறைந்திருந்தன" அப்புறம் காய்ச்சல் பஞ்சாபியைத் தொற்றிக்கொள்ள கேம்ப் முடிகிற வரை மேலும் மேலும் இறுக்கமாகிறார்கள். பிரிகிற போது ஒரே படுக்கையில் படுத்துக்கொண்டு பஞ்சாபி கிராமியப்பாடல்களைக் கேட்டுக்கொண்டே வருகிறார்கள்.வீடுவந்து சேர்ந்த ரெண்டு நாளைக்கு பஞ்சாபியின் நினைவாகவே இருக்கிறது.கடிதம் எழுத தாளெடுத்த போதுதான் பெயரும்,விலாசமும் கேட்காதது தட்டுப்படுகிறது. உறக்கம் வராமல் தவிக்கிறான். தானியங்கள் இருக்கும் அறைக்குப்போய் ஒரு கைபிடி கோதுமை எடுத்து வந்து கண்ணாடிக்குடுவைக்குள் போடுகிறான்.

'நிலவொளிபோல் நித்திரை என் மீது பொழியும் போது குளிர்காற்று வீசும் கோதுமை வயல்கலில் இருந்து  அவன் பாடும் ஒற்றைக்குரல் எனக்குக்கேட்கிறது....'
'அப்பாடல் என் நெல்வயல்கலைத்தேடிக் காற்றில் மிதந்து வந்துகொண்டிருக்கிறது'

ஒரு பயணக்குறிப்பு போல சொல்லப்பட்டதாகினும்,ஆண்டாள்கோயில் பூசுபொடியின் சுகந்ததோடு நெடுநாட்கள் கூடவரும் கதை.நினைத்த நேரமெல்லாம் கோதுமை வயலின் வாசம் வீசும். டமால் அதிர்வுகளோ,தத்துவ விசாரங்களோ இல்லையானாலும் அந்த மேலோட்டமான வார்த்தைகளில் நட்பின் ஆணிவேர் காணலாம்.ஒருபிடி கோதுமை என்கிற கதை. மலையாளத்தில் சந்தோஷ் ஏச்சிக்கானம் எழுதிய 'ஒற்றைக்கதவு' தொகுப்பை தமிழில் தோழர் கே.வி.ஜெயஸ்ரீ மொழி பெயர்த்திருக்கிறார்.அதற்கான விமரிசனத்திலிருந்து  ஒரு பகுதி.

3.5.10

மீண்டும் லார்டு ரிப்பன் எங்கப்பன்


00  அந்நியப் பல்கலைக்கழகங்களுக்கு  திறக்கும் கதவு.
      உயர்கல்வி ‘சீர்திருத்த’ மசோதா மக்களவையில் இன்று தாக்கல்  ...

00  பயங்கரவாதிகள் ஊடுருவல்: பாக். அதிகாரிகளிடம் பி.எஸ்.எப். புகார்...


தீக்கதிர் நாளிதழில் அடுத்தடுத்த செய்தியாக வருகிறது இந்த இரண்டும் .

இந்த இரண்டு செய்திகளுக்கும் பெரிதாக வித்தியாசம் இருப்பதாகத் தெரியவில்லை.ஒன்று  வெல்லம் கொடுத்துக் கொள்வது,இன்னொன்று  விஷம் கொடுத்துக் கொள்வது.  இரண்டுமே தேசத்துக்கு அச்சுறுத்தலானவைதான். ஒன்றைத்தடுக்க ராணுவ பலத்தைப் பிரயோகிப்பதும்.இன்னொன்றை மக்களவையில் மசோதா தாக்கல் செய்து எதிர்ப்பயும் மீறி  ஜெயிக்க வைப்பதுமான ரெட்டை அணுகுமுறைதான் இந்திய அரசியலின் கைதேர்ந்த நிகழ் அரசியல்.

பெப்சி கொக்கக்கோலா,அனுமதிக்கப்படுவதால் இந்தியாவின் குடிசைத்தொழில்கள் பாதிக்கப்படாது என்று சத்தியம் செய்யப்பட்டது.ஆனால் இப்போது நிலைமை என்ன.ஒரு நாளைக்கு ரெண்டு முறை மட்டும் பேருந்துவரும் பொட்டக்காட்டில் ஒரு பொட்டிக்கடை இருக்கிறது.அங்கு தான் கோலிச்சோடா,ஜிஞ்சர்பீர்,கருப்புக்கலரெல்லாம் கிடைக்கும். ஐம்பது காசு ஒரு ரூபாய் செலவில் வயித்துவலி, வாயுத்தொல்லைகளை ஜிஞ்சர்பீர், கோலிச்சோடாக்  குடித்து தீர்த்துக் கொண்டிருந்தார்கள் கிராமத்து மக்கள். இப்போது அந்தப் பெட்டிக்கடை ஒரு பளபளக்கும் ரெப்ரிஜிரேட்டரும், 'சந்தோசக்கனி கூல்டிரிங்ஸ்'என்கிற விளம்பரப் பலகையுமாக பந்தா வாகிவிட்டது. அங்கு சோடாப்போட்டுக்  கொண்டிருந்த லோக்கல் முதலாளி, காடு வீடுகளை விற்றுவிட்டு இரவோடு  இரவாக தலை மறை வாகிவிட்டார்.

குடிக்க, குண்டிகழுவத் தண்ணியில்லாத ராமநாதபுரத்துக் கிராமங்களில் அக்வாபீனா இல்லாத பொட்டிக்கடை இல்லையென்றாகிப்போனது.ஒரு லிட்டர் பாலும் ஒருலிட்டர் தண்ணீரும் ஒரே விலையாகிப் போனது. இந்த லட்சணத்தில் தான் அந்நிய  பல்கலைக்கழகங்கள்  உள்ளே வரப்போகிறது, இல்லை கிட்டத்தட்ட வந்துவிட்டது. அனுமதி பெற அரசுக்கு 50 கோடி கட்டணம் செலுத்தவேண்டும். இதுபோக பலகலைக்கழக மான்யக்குழு, உயர்கல்வித்துறை ஆகியவற்றில் ஒப்புதல் வாங்கவேண்டும்.இப்போதே இதன் உயர் அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர் வரை சட்டைப்பையைத் திறந்து வைத்துக்கொண்டு தயாராகிவிடுவார்கள்.

அடுத்ததாக உள்ளே வர வெளிநாட்டு வழக்கறிஞர் குழுமம்,வெளிநாட்டு பத்திரிகை குழுமம் எல்லாம் சூட்கேசுடன் தயாராக வரிசையில் நிற்கிறது.பிறகென்ன  'india wholly owned by abroad'. மீண்டும் ஆரம்பாப் பாடசாலைகளில் லார்டு ரிப்பன் எங்கப்பன் என்று தேசபக்திப் பாடல் பாடவேண்டியதுதான்.

2.5.10

மட்டஹாரி முதல் மாதுரிகுப்தா வரை.

ரகசிய போலீஸ் 115,சிஐடி சங்கர், இப்படித்திரைப்படங்கள் அறிமுகப்படுத்திய உளவுத்துறை மனிதர்களின் பிம்பம் இருட்டுக்குள் ஒரு சின்ன சூட்கேசுடன் பதுங்கிப்பதுங்கி அலைகிற மாதிரிப் பொதுப் புத்தியில் நிலைத்துவிட்டது.
பின்னர் தொன்னூறுகளில் பார்த்த சிபிஐ யின் டைரிக்குறிப்பு மம்மூட்டியின் வழியே மேதாவிலாசத்தைக்காட்டியது.அப்புறம் திருடா திருடா எஸ்பி பாலசுப்ரமணியன், இந்தியன் நெடுமுடிவேனு பாத்திரங்களும் கூட வித்தியாசமான உருவங்களில் உளவுத்துறையின் மேண்மை சொல்லும் மனிதர்களாகச் சித்தரிக்கப்பட்டனர்.

raw போன்ற நிறுவணங்களுக்கு ஆள் எடுக்கும் போது விண்ணப்பதாரரின் ஏழு தலைமுறைக் கதைகளும் தோண்டித்துருவப்படும் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.அப்படித் துருவப்படும்போது தட்டுப்படுகிற காவல்துறை வழக்குகள்,விடுதலைப் போராட்டத் தொடர்பு, இன்னும் சில அரசுக்கு ஒவ்வாத குணங்கள் அவரை தகுதியற்றவராக்கிவிடுமாம்.இன்னும் கூடுதலாக ஒரு கதை சொன்னார்கள் அந்த எழுதலைமுறைத் தேடலில் விண்ணப்ப தாரருடைய ரத்தசம்பந்த உரவுகள் யாருக்காவது எதாவது சிவப்பு சித்தாந்த தொடர்பு இருக்குமேயானால், அதோகதிதானாம். இப்படித்தான்  இந்திய அல்லது தமிழ் சினிமாத்துறைக்கும் ஆள் எடுக்கிறார்கள் என்று பிரபல எழுத்தாளர் ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார்.

உளவுத்துறைக்கோ அல்லது ராணுவ உயர் அதிகாரத்துக்கோ, இல்லை ஆட்சிப்பணிக்கோ ஆள் எடுக்கும்போது ஒரு  காலனி  அரசு இப்படி அடிமைகளைத்தெரிவு செய்யலாம் ஒரு சுதந்திர அரசுக்கு அப்படி நிர்ப்பந்தம் இருக்குமா என்பது தெரியவில்லை.ஆனால் இவர்களையெல்லாம் ஆட்டிப்படைக்கிற ஆட்சியாளர்கள் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம் அவர்களைத்தேர்வு செய்கிற அதிகாரம் சாமான்யர்களின் ஆட்காட்டி விரலில் இருக்கிறது. இன்னும் சரியான உபயோகமில்லாமல்.

மாதுரி குப்தா இப்படி சல்லடைபோட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய தூதரக இரண்டாம் நிலை அதிகாரி.இஸ்லாமாபாத்திந் தூதரகத்தில் பணிபுரியும் அவர் இந்தியாவின் ரகசியங்களை விற்றார் என்கிற குற்றச்சாட்டுக்கு ஆளாகி பதினைந்து நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.அவரும் அவரது வழக்கறிஞரும் இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்.செய்திகளின் பரபரப்பை விழுங்கிக்கொண்டு முதலிடத்துக்கு வந்துகொண்டிருக்கிறார் மாதுரி குப்தா.இந்தியாவின் பிரதமர் அலுவலகம் இதுவரை சோரம் போனவர்களின் பட்டியலை பிரிதமருக்கு சமர்ப்பித்திருக்கிறது.மாதுரி குப்தா பத்தாவது ஆளாக வரிசையின் கடைசியில் நிற்கிறார்.இதில் எத்தனைபேருக்கு தண்டனை கிடைத்தது எத்தனை பேர் கள்ளத்தொடர்பு வைத்துக்கொண்ட நாட்டுக்கு குடிபோனார்கள் என்கிற தகவல் இல்லை.தேடினால் கிடைக்கலாம்.ஆனால் மாதுரி குறித்த தொடர் செய்திகளில் அனுமானங்களில்,விமர்சனங்களில் அவர் இஸ்லாத்தைத் தழுவிக்கொண்டதாக ஒரு தகவல்  சொல்லப்   பபட்டிருக்கிறது.

அதுமட்டும் அவரால் ஒப்புக்கொள்ளப்பட்டு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

அவர் ஏன் இஸ்லாத்துக்கு மாறினார் என்றகேள்விக்கு அதன் சியா தத்துவம் அவரை ஈர்த்தது எனப்பதில் சொல்லுகிறார்.அதை விவரிக்கிற செய்தியாளர் 'honey trap' என்கிற பதத்தை உபயோகப்படுத்துகிறார்.மீண்டும் நாம் தமிழ் சினிமாவுக்குள்ளே போகலாம். புதிய பறவை படத்தில் சிவாஜியைக் காதலித்த சரோஜா தேவி ஒரு பெண் உளவாளி என்கிற அதிர்ச்சித் திருப்பம் சினிமாக்கதைகளுக்கு பெருந்தீனியையும்,தயாரிப்பாளர்களுக்கு கட்டுக்கட்டாய் பணத்தையும் பாமரஜனங்களுக்கு ஒரு புதிய இலக்கியத்தையும் விட்டுசென்றது.மதம், ஜாதி, இசங்கள், இலக்கியம்,கல்வி,கலவி என எல்லாவற்றிற்கும் உடனடி விளம்பரதாரராக மனிதனே இருக்கிறான்.அவன் நெருக்கமான நண்பனாக,உருக்கமான தாயாக,உயிர்குடிக்கும் காதலனாக இருப்பதில் வியப்பேதுமில்லை.எதுவும் சுயம்புவாகத்தோன்றி வளர்வதில்லை,வளரவே முடியாது. அப்படிப்பட்ட  தேன் தடவிய பொறிக்குள் சிக்கிக்கொண்ட மாதுரியை விட்டுவிட்டு இதே போன்ற பொறியில் சிக்கிய உலகின் முதல் பெண் உளவாளி மட்டா ஹரியை நாம் பின்தொடராலாம்.


மட்டா ஹாரி முதல் உலகப்போரின் முடிவில் பலிகொடுக்கப்பட்ட விலையுயர்ந்த அழகுப்பெட்டகம்.1917 ஆம் ஆண்டு அக்டோ பர் மாதம் பதினைந்தாம் நாளின் இளங் காலைப்பொழுதில் தனக்குப்பிடித்தமான நீள நிற கவுனை தேர்ந்தெடுக்கிறாள்.க்ரீடம் போலிருக்கும் முக்கோண தலைமாட்டியை அணிந்துகொள்கிறாள். பனிரெண்டு காவலர்களோடு புறப்படுமுன் தனக்கு ஆறுதல் சொல்ல வந்த இரண்டு கன்னியாஸ்திரிகளுக்கும்,தனது வழக்கறிஞனும் கடைசிக்காதலனுமான வுக்கும் முத்தங்களைக் கொடுக்கிறாள்.  ராணுவ வாகனத்தில் ஏறி தான் நேசித்த அந்த நகரத்து வீதிகளின் காலைத்தென்றலை ஆழ்ந்து உள்ளிழுத்துக்கொண்டு பயணமாகிறாள் 'மார்க்கரெதா கீர்த்ருய்டா செல்லி'. அவளுக்குத்தெரியும் அது உயிரோடு போகும்  அவளது கடைசி ஊர்வலமென்று.

நெதர்லாந்தில் பிறந்து தாயும் தந்தையும் கைவிட்டு காலமானதும் எதிர்கொண்ட வறுமையையும் வாழ்க்கையையும் வெற்றிகொள்ள தனது அழகை ஈடுவைத்தாள் மர்க்கரெதா. தனது பதினாறாவது வயதில் உடலின் அதிர்வுகளை மீட்டிவிட்ட  தலைமை ஆசிரியன் தான் முதல் ஆடவன்.அங்கிருந்து தனது மாமன் வீட்டுக்கு இடம்பெயர்ந்த போது மணமகள் தேவை விளம்பரத்துக்கு விண்ணப்பித்து 45 வயதான டச் காலனி அரசின் ராணுவ அதிகாரியான ரூடால்புக்கு மனைவியானாள். மிகுந்த சந்தோஷமான குடும்பவாழ்வுதானென்றாலும் ராணுவக்குடியிருப்பில் இருந்த
ஏனைய அதிகாரிகளும் அவளது சந்தோஷப்பார்வையில் விழுந்தார்கள். இன்னொரு அதிகாரியோடு ஆறுமாதங்கள் வாழ்ந்த பின்னர் இந்தோனேசியக் கலாச்சரத்தைப் படிக்க ஆரம்பித்தாள். அங்கிருந்த நடனக்குழுவில் சேர்ந்து
அந்த ஈர்ப்பில் தனது பெயரை மட்டா ஹாரி என மாற்றிக்கொண்டாள். இந்தோனேசிய மொழியில் கண் என்று
பொருள்படும் மட்டா ஹரிக்கு 'பகலின் கண்' என்பது தான்  கவிதைப்பெயர்.

நடனத்தில் ஆடைக்குறைப்புடன் கவர்ச்சியை உலகுக்கு அறிமுகப்படுத்தியது அவளது மேடைகள்.அதோடு ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பயணமானாள்.1905 ஆம் ஆண்டு மார்ச் 13 அவள் ஏறிய மேடை ஒரே இரவில் உலகுபுகழ் நடனகாரியாக மாற்றியது. ஆதரவும் எதிர்ப்புமான விமர்சனங்களின் மூலம் புகழின் உச்சானிக் கொம்புக்கு ஏறிப் போனாள்.அவளது கவர்ச்சியும்,அழகும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ராணுவ உயர் அதிகாரிகள்,அரசர்கள்,மந்திரிகள்,தொழிலதிபர்கள்,பிரபலங்களின் கனவைக்கெடுத்தது.ஆள் அம்பு சேனை,சொத்து,அடிமைகள்,வெற்றி இவற்றோடு மட்டா ஹரியின் இரவுகளும் பெருந்தனக்காரர்களின் பெருமிதங்களின் பட்டியலில் இடம் பெற்றது. இப்படி நாடு விட்டு நாடு பறக்கும் பயணங்களை தடையற்றதாக்க அப்போதைய ராணுவ அதிகாரிகளின் படுக்கை அறையே அவளுக்கு, விசா, எமிக்ரேசன், அலுவலகங்கள் ஆனது.அதுவே அவளது  பயணங்களுக்கு மட்டுமல்ல உயிருக்கும் முற்றுப்புள்ளியானது.

முதல் உலகப்போர் உச்சக்கட்டத்திலிருந்தபோது,லடசக்கணக்கான வீரர்களின் உயிர்கள் பலியிடப்பட்ட குருதி ஆறாமல் கிடந்த அந்த நேரத்தில்  ஜெர்மன்,பிரான்ஸ் இரண்டு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும்
தங்களின் சதைப்பசியைத் தீர்த்துக் கொள்ள மட்டா ஹரியை நாடினார்கள்.இந்த போக்கு வரத்தில் இரண்டு நாட்டு ராணுவ ரகசியங்களை உளவு பார்க்கலாம் என்று ஆசைப்பட்டன. பிரான்ஸ் நாட்டு ராணுவ உயர் அதிகாரி  ஜார்கெஸ் லடாக்ஸ் தனது ராஜீய உளவாளியாக  ஒரு நடனக்கரியான மட்டா ஹரியை நியமித்தான்.தனது கடைசிக்கதலன் 23 வயது நிறம்பிய ரஸ்ஸிய நாட்டு இளம் ராணுவ அதிகாரியின் படுக்கையைப் பகிர்ந்துகொள்ள துடித்துக்கொண்டிருந்தாள் அதுவும் நிரைவேறியது. அவனோடு தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டாள் உளவு பார்க்கப்போன இடத்தில் பிரான்சின் ராணுவ ரகசியங்களை கசிய விட்டதாகவும் அதானால் ஏறபட்ட ராணுவ இழப்புக்கும் அவளே காரணம் எனக்குற்றம் சாட்டி மரணதண்டனை விதித்தது.

ஆனால் மட்டா ஹரி சாகும் வரை தான் ராணுவ அதிகாரிகளுக்கு தனது ரகசியங்களை மட்டிலும் தெரியப்படுத்தியதாகவும், ஒருபோதும் ராணுவ ரகசியத்தை காட்டிக்கொடுக்கவில்லையென்றும் சொல்லிக்கொண்டே இருந்தாள்.ஆனால் அவளிடம் சராணாகதியான ராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்படவே இல்லை.அன்றும் சரி இன்றும் சரி இது போன்ற குற்றங்களில் பலிகொடுப்பதற்கென ஒருவர் குறிவைக்கப்படுவதும். அதில் மறைந்து போன நிஜக் குற்றவாளிகள் தைரியமாய் வெளிவந்து அடுத்தகுற்றத்துக்கு நகர்வதும் வாடிக்கையாகிறது.

'ஒரு வீட்டின் சுவர்களுக்குச் சொந்தமானவளல்ல,சூரிய ஒளியில் சிறகசைக்கும்  வண்ணத்துப்பூச்சி  நான்'அவளே சொன்னதுபோல கண்டங்கள் தாண்டிய வண்ணத்துப்பூச்சி சுட்டுப் பொசுக்கப்பட்டது.கண்டங்கள் ஆளும் வெறியில் நடந்த சண்டையில் கொட்டியது குருதி. அந்தக்குருதியின் சாபத்தை அப்பாவி நடனக்கரியின் உயிர்ப்பலியிமூலம் பரிகாரம் தேடிக்கொண்டது  பிரான்ஸ் ராணுவம். அரசு உயர் அதிகாரிகள் தாங்கள் கொறிக்கும்கொழுத்த முந்திரிக்கும்,விலை உயர்ந்த மதுவுக்கும்,விலை உயர்ந்த விலைமாதுவுக்கும் விற்றவை ஏராளம்.

ஆனால் அப்பாவி ஜனங்களின் உயிர்ப்பலியிலும் தேச,பிரதேச வெறியிலும் அவை காலங்காலமாய் கரைந்துபோய்க்கொண்டே இருக்கிறது.