Showing posts with label இளையராஜா. Show all posts
Showing posts with label இளையராஜா. Show all posts

27.12.15

உலோகங்களை விட அடர்த்தியான துரு





சாமி கும்பிடாததால் அரச இலையை வைத்து பிள்ளையார் உருவம் செய்த க்ராபிக்சை ரசிக்கமுடியாத மரபில் வளர்ந்தவன்.
ஆனால் இளையராஜாவைப்பிடிக்கும் என்பதற்காக ஏனைய இசையமைப் பாளர்களை கிள்ளுக்கீரையாகப்பார்க்கிற மேனாமினுக்கித்தனம் துளியும் கிடையாது. சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி பாடலை எங்கு கேட்டாலும் நெக்குருகிப்போகிற இசைக்கிறுக்கு.
 பிரம வதனம் வேண்டும் என்கிற மலையாளப்பாடலையும், கபி கபி இந்திப் பாடலையும் தரவிறக்கம் செய்வதற்காக இரண்டு இரவுகள் செலவழித்த பயித்தியம். இந்த வலையுலககத்திலும் கூட இளையராஜவை சிலாகிக்கிற யாரும் எம் எஸ் வியையோ, ரஹ்மானையோ விமர்சித்து எழுதியதாக ஞாபகமில்லை.

ஆனால் இங்கு பல பிரபல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். எம் எஸ் வியை பேசுகிற பொழுதெல்லாம் லைட்டா இளையராஜாவை ஒரு தட்டு தட்டாமல் கடந்து போக முடியாது அவர்களால். போனால் அன்று தூக்கம் வராது. இளையராஜாவுக்கு சளிப்பிடித்தாலும் போதும் அவரை வாங்கு வாங்கு என்று வாங்கிவிடுவார்கள்.அப்போழுதெல்லாம் மனுநீதிச்சோழனின் மறுபதிப் பைப்போல தங்களைத் தாங்களே தராசாக்கிக் கொள்வார்கள். கவுரவக் கொலைகள் குறித்தோ, இளவரசன் படுகொலை குறித்தோ, பாடகி சின்மயியின் இட ஒதுக்கீட்டு தேற்றம் குறித்தோ கருத்து ஏதும் சொல்லாத கந்தசாமிகள் அவர்கள். இந்த இரண்டு நாளில் ஞாயயம்டா, நீதிடா என்று பெருங்குரலெடுத்து சொம்பில்லாத நாட்டாமையாகிவிட்டார்கள்.

நீண்ட நாட்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சியில் ஒரு பிரச்சினை குறித்து திருமாவளவனிடம் கேள்விகேட்கிறார்கள். அதற்கு அவரும் சிரத்தையாக பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார். அப்போது ஒரு காட்சியை திரும்பத் திரும்ப ஒளிபரப்புகிறார்கள்.  வியர்வையையோ அழுக்கையோ  சொரிந்து அதை பார்த்துவிட்டு பின் உதறுகிறார். இதை ஒரு நான்கு தரம்  காட்டுகிற அருவருப்பை என்ன பெயர் சொல்லி அழைப்பது ஊடகதர்மம் என்றா.
ஒரு காமிரா எவ்வளவு உன்னதமானது. மூன்றாவது கண்ணில்லையா அது?.பேட்டியோடு தொடர்புடைய ஆயிரம் காட்சிகளில் எதவதொன்றை காண்பிக்கலாம். அல்லது அதற்கு எதிர்மறையான காட்சிகளைக்கூட வைக்கலாம். இந்த இரண்டையும் விட்டு விட்டு சொரிவதையும் அழுக் கெடுப்பதையும் காட்டுகிற அந்த ஊடகத்தின் மூளையில் எவ்வளவு அழுக்கு இருக்கும்?.

நீயா நானா நிகழ்சியில் ஒருத்தர் எங்க ஜாதிப்பிள்ளைகளை காதலித்தால் வெட்டுவம் குத்துவம் என்று கொக்கரிக்கிறார். திருவாளர் ஊடகம் அப்படி யெல்லாம் பேசப்படாது என்று செல்லமாய்க் கண்டிக்கிறார். அடடே எவ்வளவு காத்திரமாக தனது அறச்சீற்றத்தை முன்வைக்கிறார் என்று வியந்து முடிப் பதற்குள் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. விகழ்பமில்லாமல் கருத்துச் சொன்னதற் காக வெட்டுவோம் குத்துவோம் என்று சொன்ன பங்கேற்பாளருக்கு பரிசு கொடுத்து முடித்தார்.

நல்ல வேளை அருவாளைப் பரிசாகக்கொடுக்கவில்லை.