22.4.12

வலைப்பதிவர் அறிமுகம்


சாத்தூரிலிருந்து இன்னொரு வலைப்பதிவர்.

தோழன் மாதவராஜ் தொடங்கிவைத்த வலைக்கலாச்சாரத்தில் அவனால் நுழைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம். இதோ, இந்தக்குட்டியூண்டு சாத்தூரிலிருந்து கிட்டத்தட்ட எட்டாவது வலைப்பதிவராக அறிமுகமாகிறார் தம்பி ஆண்டனி.

ஓவியம்,புகைப்படம்,வீடியோ, ஆகியவற்றில் தொழில்முறைக்கலைஞனாக இருக்கும் தம்பி ஆண்டனி.மிகச்சிறந்த இயற்கை சம்பந்தமான புகைப்படக் கலைஞன். அதற்கென தனது ஓய்வு நேரங்களையெல்லாம் செலவுசெய்வபவர்.
அப்படிச்செலவழித்துப்பதிவு செய்த புகைப்படங்களையும் அனுபவங்களையும் ’தூரிகை நிழல்’ பக்கம் வழியே வலையில் பகிர்ந்து கொள்ளவருகிறார்.

வரவேற்போம்.

அவரது வலை விலாசம்

www.denilantony.blogspot.in

19.4.12

எதைத் தேடுகிறது நீதியின் தராசு ? ( எஸ். வி. வேணுகோபாலன் )

கைக்குழந்தைகளும் பெண்களும்
அய்யகோ என்று
அலறிய சத்தம்
பெருகிய குருதி
சாதிய வெறியோடு
சாய்க்கப்பட்ட உடல்களும்
மாய்க்கப்பட்ட உயிர்களும்
எல்லாம் பொய் என்று அறிவிக்கப்படுகிறது
நீதியின் மேடையிலிருந்து

அடங்காத ஆண்டைகளின்
அடியாட்கள் கும்பல் வெளியேறுகிறது
வெற்றிப் புன்னகையோடு சிறைகளிலிருந்து

சாட்சியங்கள் போதவில்லையாம்

காலகாலமான வன்கொடுமைக்கும்
தீண்டாமைக்கும்
அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும்
உறைந்து போன இரத்தத்தின் மீதே
நிறைந்து பெருகும் புதிய குருதியும்
சரிந்த இதயங்களும்
குலைந்தே போன நம்பிக்கைகளும்
பற்றுறுதியும் இன்ன பிறவுமாய்
தேசத்தின் சேரிகளெங்கும்  
பரவி விரவி இருக்கும் காட்சிகளுக்குச்
சாட்சிகளாய்
கையாலாகாத அரசுகளே இருக்க

வேறெதைத் தேடுகிறது நீதியின் தராசு,
வெறித்துப் போன தெருக்களில்
பொறித்திருக்கும் சாதிய வன்மத்தின்
தடயங்களுக்குக் கண்களை மூடிக் கொண்டு ?

***********

1996 ஜூலை 11 அன்று பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டம் பெதானி தோலா என்ற கிராமத்தில் நிலச் சுவான்தார்களின் ரணவீர் சேனை என்றழைக்கப் படும் குண்டர்படை தலித் குடும்பங்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதில் பெண்கள், கைக் குழந்தைகள் உள்பட 21 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

 பெரிய முயற்சிகளுக்குப் பிறகு மறு நாள் பதிவு செயயப்பட்ட முதல் தகவல் அறிக்கை, நீண்ட நெடிய வழக்கு இவற்றுக்குப் பிறகு ஆரா செஷன்ஸ் நீதிமன்றம் மே 2010 ல் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனையும், மீதி இருபது பேருக்கு வெவ்வேறு கால அளவில்  சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பு வழங்கியிருந்தது.

மேல் முறையீட்டை அடுத்து,  ஏப்ரல் 16, 2012 அன்று  பாட்னா உயர்நீதிமன்றம்,  'குறைபாடுள்ள சாட்சியங்கள்' என்ற அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த
அத்தனை பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துவிட்டது.

 0
கவிதையும்,தகவலும்,கோபமும் 
தோழர். எஸ் . வி .வேணுகோபாலன்

16.4.12

காவல் பரண் நிழலில் ஒதுங்கிய திருடர்கள்.

அந்த ஊருக்கு ஏழெட்டுப்பாதைகள் இருப்பதுபோலவே அதனோடு எனக்கும் ஏழெட்டு வகையான உணர்வுகள் இருக்கிறது. அது எங்கள் ஊரிலிருந்து ஒரு கிலோமீட்டர்த் தொலைவிலிருக்கிறது.அங்கிருந்துதான் பேருந்திலேறி அயலூர்களுக்குப்போகவேண்டும். ஒவ்வொருமுறை நடந்துபோகும் போதும் இடையிலே வந்துபோகும் காடு கட்டாயம் ஒரு கதை வைத்திருக்கும்.கோடை காலமான இந்த தை முதல் ஆடிவரையிலான காலங்களில் அது செக்கச் செவே லென விரித்துக் கிடக்கும் பெரிய்ய பாய்போல இருக்கும்.ஆடியில் விதைக்க ஆரம்பித்ததும் நிலக் கடலை,பாசிப்பயறு,கம்புசோளம்,குதிரைவாலி இப்படியான பலவகை செடிகள் நிறைந்த பச்சைமரகதப் போர்வை யாகிவிடும்.வெறும் கரட்டான்களும்,சில்லான்களும் ஓடித்திரிந்த அந்த செவக்காட்டில் ஒரு நூறுவகை பூச்சி புழுக்கள் பறவைகள் வந்துசேரும்.வண்ணத்துப் பூச்சிகளையும்,ரயில்தட்டாம்பூசிகளையும் பிடிக்க கைவிரல் களைக்குவித்துக்கொண்டு அதன் பின்னாடி அலைந்த காலம் முதல்,அணில் ஆபீசுக்கு வேலைக்குப் போகும் அவளைத் தொடர்ந்து நடந்த காலங்கள் வரை இன்னும் பசேலென அப்பிக் கிடக்கிறது செவக்காட்டு நினைவுகள்.

பிஞ்சைகள் பூக்க ஆரம்பித்ததும் இரண்டு ஊருக்கும் இடையில் காவல் பரண் கட்டப்படும். அதிலேறிக்கொண்டு பார்த்தால் நான்கு ஊர்களின் காடுகளும் தெரியும்.பரம்பரை பரம்பரையாக எங்கள் குடும்பத்து பெரியாம்பளைகள் தான் காவல்காரராக இருப்பார்கள்.அப்போதெல்லாம் மதியக்கஞ்சி கொண்டுபோக நான் நீ என்று போட்டி வரும். என்னை மட்டும் வரவேண்டாம் என்று கண்டிப்பார் தாத்தா. காரணம் உண்டு. நான் தனியே போனதில்லை குறைந்தது மூன்றுபேராவது போவோம்.அப்புறம் எங்கள் வீட்டின் மற்ற பிள்ளைகளைப் போல நான் அவரது காவல் கம்புக்கும் மீசைக்கும் பயப்படுவதில்லை.சாயங்காலம் வீடுதிரும்பும்போது என்னால் அவருக்கொரு பிராது கட்டாயம் வந்துசேரும். சித்திரச்சுழி இந்த செம்பட்டப் பயல அணுப்பாத மரியசெல்வம் என்று என்  பாட்டியைச் சொல்லுவார்.’அவன் வராட்டி,பின்னே எவா கொண்டு வருவா’ என்பாள் ’இவா’ என்று பாட்டியைக்கை காட்டுவார், ’கெடக்கமாட்டயோ கெழட்டு லொள்ளி’ என்று அவர்கள் பேசுவது சண்டையென நினத்துக் கொண்டிருந் தகாலம் அது.

நாங்கள் ஊரைத் தாண்டியதுமே, தாத்தா பரணைவிட்டுக் கீழிறங்கி விடு வார்.அப்படியே நடந்து கனிநாடார்  பம்பு செட்டுக்குப் போய்க் கால்,கை அலம்பிக் கொண்டுவருவார். வரும்போதே விளைந்து முற்றிய கடலைச் செடிகள் அவரது கையில் தொங்கிக் கொண்டுவரும். அதைவாங்கிக் கொண்டு மடமடவென பரண்மேலேறுகிற தருணம் அலாதியானது. ஏணியற்ற பரணில் நான் ஏறும்போதெல்லா கொலைபதறிக்கொண்டு எந்தாத்தா ஏ மெல்லய்யா, இங்கரு..ஏ.ஏ..லே மேல்லடா,ஏய் ஏ செம்பாட்டச்..னிமெல்ல ஏறுடா,இந்தப் பொண்டாட்டியோளி,  சொன்னபிடி கேக்கமாட்டன்’என்பார். தெற்குப்பக்கம் அதிகமாகச்  சோளம் தான் போட்டிருப்பார்கள்.அதற்கு ரெண்டுகாரணம் உண்டு.அந்த பக்கத்து நாயக்கமார்களின் மாடுகளுக்கு  கோடை காலம் தீவனத்துக்கு ஆகும்.ரெண்டு அது ஊரை ஒட்டி இருப்பதால் வேறுவகையான விதைப்பாடுகள் வீடுவந்து சேராது. பாதியை களவாண்டு கொண்டு  போய் விடுவார்கள். இதையெல்லாம் தாண்டி இன்னொரு காரண மும் இருக்கிறது என்பதை ஒரு மதியவேளை  பரணேறிப் பார்த்த போது தெரிந்துகொண்டோம்.

பகல்வேளிகளில் காடுகள் முழுக்க பெண்களே அங்குமிங்கும் அலைந்து திரியும்  செடிகளைப் போலக்கலந்திருப் பார்கள்.ஆண்கள் தலை தட்டுப்படாது.அப்படித் தட்டுப்படுகிற தலைகள் பிஞ்சைக்கார முதலாளிகளாய் இருப்பார் கள். ரெங்காநாயக்கர் மட்டும் எல்லாக்காலங்களிலும் அந்த எள்ளுச்செடிகள் பூத்துக்கிடக்கிற  தனது பிஞ்சையைக் கட்டிக்கொண்டு கிடப் பார். எல்லாச்செடியும் அழிமாண்டமாகும் எள்ளுச்செடி ஒருகாலதுக்கும்   களவு போகாது. அதத்திங்கவும் முடியாது,ஆக்கிப்பொங்கவும் முடியாது. அது போலவே மாடுகண்ணும் உள்ள வராது. ஆனாலும் நாய்க்கரு பிஞ்சையே கதி யென்று கிடப்பார். அதனாலேயே ஆகாத காரியத்துக்கு ஆட்கள்போனால் எள்ளுச்செடிய நாய்க்கர் காத்துக்கெடந்த மாதிரின்னு சொலவட சொல்ல ஆரம்பித்துவிட்டது சனம். தாத்தாவும் ரெங்கா நாய்க்கரும் படு ஸ்நேகம் அதனால் அவர்பக்கம் திரும்பிக்குரல் கொடுக்க மாட்டார்.

பரணேறியதும் நான் எள்ளுகாட்டுப்பக்கம் அவன் எவண்டா எள்ளுச்செடியில சுத்திக்கிட்டு அலையிறது என்பேன் .தாத்தா உயிர்போகிற வேகத்தில் பரணில் ஏறிக்கொண்டே இருக்கிற எல்லாக்கெட்ட வார்த்தையும் வைவார்.நான் பின்னம்பக்கம் இறங்கி ஓடிவிடுவேன்.அப்படி ஓடுகிற ஒரு நாளில் எள்ளுக் காட்டுப்பக்கம் ஓடிக்கொண்டிருந்தேன்.

எள்ளுக்காட்டுக்கு அருகில் ஒசந்து வளர்ந்திருந்த சோளநாத்துக்குள் இருந்து எழுந்து எனக்கு முன்னாடி ரெங்கா நாயக்கர் ஓடிக்கொண்டிருந்தார். பயந்து போய் நின்ற நான் திரும்பிப் பார்த்த போது,அவர் எழுந்து ஓடிய இடத்தில்
சோளநாத்து ஆடியது.பேய்க்கதைகள் நினைவுக்கு வர சிலீரென்று வேர்த்தது. திரும்பப்பரணுக்கு தாத்தாவைத் தேடி ஓடப்போனேன். பச்சை நாத்துக் குள்ளிருந்து வெள்ளை வெளேரென்று ஒரு உருவம் எழுந்தது.

ஆண்டாளம்மா.

15.4.12

இன்னும் கிடைக்கவில்லை வியர்வையின் விலை

வாகனங்களின் வயிற்றை நிரப்பும்
அதே அம்மாவின் வேலை
பெட்ரோல் மணக்கும்
சீருடைதரித்த பங்க் பெண்களுக்கு.

நூற்றுக்கணக்கில் நுழையும்
வாகன வகைகளில் தம்பி கேட்ட
சைக்கிளின் ஜாடை எதிலும் இல்லை.

பூழுவைக்கடந்து செல்லும் பாவனையில்
விரைந்து வந்து நிரப்பிப்போகும்
பெண் காவலரின் சீருடையில் மணக்கும்
சீமைச்செண்டு வாசனை.

வெறித்த பார்வைகளை உதறிவிட்டு
சுற்றிச்சுழலும் எண்களைத்தொடரும்
கண்களுக்குள் கிடக்கிறது ரொம்பப் பசியும்
கொஞ்சம் கொல்லபட்டி கருப்பசாமியின் நினைவும்.

முப்பதுநாளும் அலுத்து உறங்கிப்போகும் அம்மா
ஒண்ணாம்தேதிமட்டும் கொட்டக்கொட்ட முழித்திருப்பாள்.
அவளை அறிந்தே அருகில் போய் உட்காரும்
முதலாளியின் வசவுக்கு வாங்கிய சன்மாணம்.

எனவே இன்னும் கிடைக்கவில்லை
ஒருமாதம் சிந்திய வியர்வையின் விலை.

14.4.12

சவ்தாக்குளத்தில் கெட்டிதட்டிப்போன சாக்கடை கலந்து கிடக்கிறது.


காற்றும் நீரும் வானும் நிலவும் பொதுவிலிருக்குது,
மனிதன் காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கிடக்குது.

இப்படி ஒரு திரைப்படக்கவிஞன் பாடிவிட்டுப்போனான்.காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே என இன்னொரு திரைப்பாடலும் உண்டு. ஆனால்,கிழக்குப்பக்கத்தில் மட்டுமே தெரு வைத்துக்கொள்வதற்கு அனுமதிக் கப்பட்டார்கள் ஒரு பிரிவினர். காற்றுக்கூட அவர்களை முதலில் தீண்டக் கூடாது எனும் கற்பிதம் ஒளிந்திருக்கும் நடைமுறை அது. ஆறுகள் எல்லாமே கிழக்கு பக்கம் பாய்வதால் முதலில் குளிப்பவன் நானாக மட்டுமே இருக்க வேண்டும் எனும் பெரிய்ய மனசும் கூட இதற்குக் காரணமானது. இதை நீங்கள் india untouched என்கிற ஆவணப் படத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். 

நீர் நிலைகளில் ஆடுமாடுகள் அனுமதிக்கப்பட்ட போதும் ஒருசரார் கடுமையாகத்தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.  சமீப காலம் வரை, அதாவது இருபதாம் நூற்றாண்டின் பாதிவரையில் குற்றாலத்தில் குளிக்க,பிற்படுத்தப் பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் அனுமதிக்கப்படவில்லை என்பது மிகுந்த அதிர்ச்சி தரும் வரலாற்றுச் சேதி.உலகஅதிசயங் களில் ஒன்றாக அறிவிக்கக் கோரி மின்னணு வாக்கு கோரப்பட்ட நமது பெருமை மிகு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தாழத்தப்பட்டவர்கள் மட்டுமல்ல பிற்படுத்தப் பட்டவர்களும் அனுமதிக்கப் படவில்லை. நுழைய முயன்ற மூக்க நாடார் நான்மாடக்கூடலின் ஒரு வாயிலில் வைத்துக் கழுத்தறுக்கப்பட்டார். எனவே புதிதாகப் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசு ஒரு முடிவெடுத்தது. சமுதாயக் கிணறுகள் என்கிற ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனி நீர் நிலைகளை உருவாக்கிக் கொடுத்தது. இதையும் அம்பேத்கர்,பெரியார்  உட்பட பல சாதிமறுப்பாளர்கள் எதிர்த்தார்கள்.அதையும் மீறி சட்டம் செயல்பட்டது. தாழ்த்தப்பட்ட வர்களுக்கென்று ஏற்படுத் தப்பட்ட தனி நீர்நிலைகளில் இரவோடு இரவாக மனிதக் கழிவுகளை அள்ளிப்போட்ட சம்பவங்கள் நடந்தது. 

2006 ஆம் ஆண்டு பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தலில்போது ஆவணப்பட படப்பிடிப்புக்காகப் போயிருந்தோம். பேருந்துநிலையத்தில் கீழே கிடந்த ஒரு பெரிய கல்லில் இருந்து இரண்டடித்தூரம் ஒதுங்கியே நின்றதொரு கூட்டம். விசாரித்தபோது தாழ்த்தப்பட்டவர்கள் அந்தக்கல்லில் உட்கார்வது அங்கிருக் கிற கள்ளர்களின் பெருமைக்கு இழுக்கு என்ற எழுதப்படாத சட்டம் இருக் கிறது.  உத்தப்புரத்தில் இன்னும் கூட ஒரு பயணிகள் நிழற்குடை அமைக்க முடியாமல் சாதிய ஆதிக்கத்தின் கீழ் மண்டியிட்டுக் கிடக்கிறது ஜனநாயகம். கிராமங்களில் கட்டப்படும் பெரும்பாலான நிழற்குடைகள் இரவோடு இரவா கச்  சிதிலமடைந்து போவதற்கு ’கீழத்தெரு பயலுகள்ளாம் நமக்குச் சமதையா உக்காரவா’ என்கிற ஆதிக்க மனோபாவம் தவிர வேறுகாரணங்கள் இருக் கவே முடியாது. இதியத் தொண்மங்களில் மறைந்தும் புதைந்தும் கிடக்கும் அதிர்ச்சியும் அதிலிருந்து மீண்டெழுந்த ஆச்சரியமும் சொல்லப்படாத வரலாறுகளாகும்.

அப்படியொரு பிரபலமான இடம் மராட்டிய மாநிலத்தின் மஹத் எனும் நகரில் உள்ள சவ்தார் குளம். அது நீண்ட நெடிய வரலாற்றுப் பாரம்பரியமும் சுற்றுலா ஈர்ப்பும் கொண்ட நீர்நிலை. நீண்ட நெடுங்காலமாக தாழ்த்தப்பட்ட வர்கள் அதை நெருங்க அனுமதிக்கப்படவில்லை. இதை எதிர்த்து ஒரு மாபெரும் போராட்டத்தை ஒருங்கி ணைத்தார் அம்பேத்கர். 1927 ஆம் ஆண்டு மார்ச் மதம் 20 ஆம் தேதி சுமார் பத்தாயிரம் தாழ்த்தப்பட்டவர்களைத் திரட்டி ஊர்வலமாக அழைத்துப்போனார். ஊர்வலத்துக்கு தடைகோரி நீதிமன்றத்தை நாடினார்கள், ஊர்வலத்தை குலைக்க மறைந்திருந்து கல்லெறிந்தார்கள், பின்னர் நேரடி யாகத் தாக்கினார்கள். என்றாலும் எதிர்த்தாக்குதல் ஏதும் இல்லாத சத்தியாக் கிரஹமாக முடிந்தது அந்தப்போராட்டம். சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்த காலத்தில் நடந்ததால் இரு கோடுகள் தத்துவத்தின் சிறு கோடாய்க் காணாமல் போனது சவ்தார் ஏரிச்சம்பவம் .

இதையெல்லாம் இந்தக் கனிணி யுகத்தில் மீளப்பேசி முகஞ்சுழிக்க வைக்க வேண்டுமா எனும் கேள்வியும் வரும். நகரங்களில்  இருந்து கொஞ்சம் ஒதுங்கி விட்ட இது, இந்த சதுக்க பூதம் இன்னும் கிராமங்களில் புதுக்கருக்கு மாறாமல் வாழ்கிறது என்பதை வெகுமக்களோடு படித்தவர்களும் தெரிந்து கொள்ளவேண்டும். இருநூற்றுக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துக்கள் இருக்கும் மாவட்டத்தில் இரண்டே இரண்டு ஊர்களில் மட்டுமே பொதுமயானம் இருக்கிறது என்று சென்ற ஆண்டு பணிநிறைவு பெற்ற ஒரு கிராம நிர்வாக அலுவலர் சொன்னார்.

முன்னமிருந்த அடக்குமுறைகள் அளவு இப்போதில்லை என்பதை ஏற்றுக் கொள்ள ஆங்காங்கே ஆதரவுக்கரங்கள் நீளுகின்றது. ஆனாலும் நாளுக்கு நாள் நடைபெறும் திண்ணியங்கள், மேலவளவுகள், கயர்லாஞ்சிகள், சென்ன கரம் பட்டிகள், இருஞ்சிறைகள்,பரமக்குடிகள் ஆதிக்கத்தின் இருப்பைச்  சொல் லுவதற்கு கொத்துக்கொத்தாய் உயிர்ப்பலி கோருகிறது.சாண்ஏறுகிற சதீய வழுக்குமரத்தில் கிலோமீட்டர்க் கணக்கில் பின்னுக்குப்போக வேண்டியிருக் கிறது. அந்த நேரமெல்லாம் அம்பேத்கர் வந்து நின்று என் மக்களை இன்னும் அதே நிலையில் விட்டுப் போகிறேனே என்று சொல்லிய இறுதி வார்த்தைகள்  திரும்பத் திரும்ப ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

ஆகவே அவரது  தேவை இன்னும்  அதிகரிக்கிறது. அவரது செயல்பாட்டாலும் சிந்தனைகளாலும்,தியாகத்தாலும் கிடைத்த புரட்சியாளர் பட்டம் இன்னும் தீராத வன்கொடுமைகளின் பொருட்டு மேலும் மேலும் மதிப்பு மிக்கதாகிக் கொண்டிருக்கிறது.

8.4.12

திரைகடலோடி திரவியம் தேடு. திமிறும் உணர்வுகளைக் கொன்றுபோடு


அலுவலக ஊழியர்களோ,நண்பர் வட்டாரத்திலோ,இல்லை இலக்கிய வட்டாரத்திலோ மரணச்செய்தியென்றால் தவறாமல் போய்விடுவது வழக்கமாகிவிட்டது.கல்லூரி முடிக்கும் வரை ஊரில் துஷ்டியென்றால் எங்காவது காட்டுக்குள் போய் விட்டு எடுத்த பின் வீடு திரும்புகிற சுபாவம் இப்படி மாறிப்போனதற்கு தொழிற் சங்கமே காரணமாக இருந்தது. இன்றும் கூட பணி ஓய்வு பெற்று நான்குவருடம் ஆகிவிட்ட ஒருதோழரின்  மரணச் செய்தி வந்தது. சாயங்காலம் போவதாக உத்தேசித்துக்கொண்டோம். நான்குமணி இருக்கும் மாது வீட்டைப் பார்த்தேன் வண்டி இல்லை.போயிருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டு மற்றொரு தோழர் கணேசனுக்கு போன் பண்ணி அவரும் துஷ்டி வீட்டில் இருப்பதாக சொல்லவே தாமதமாகிவிட்டது என  அடித்துப்பிடித் துக்கொண்டு ஓடினேன்.

தெருவை நெருங்கிய போது ஆட்கள் யாரும் தென்படவில்லை.ஒருவேளை காரியம் முடிந்திருக்குமோ என்கிற கவலை வந்துவிட்டது. நின்று தயங்குவதைப் பார்த்த அந்த தெருக்காரர் துஷ்டி வீடு அடுத்த தெருவில் என்றார். நிம்மதியாக இருந்தது. அங்கேபோன போது ஏழெட்டு அலுவலகத் தோழர்கள் உட்கார்ந்திருந்தார்கள் நான் போனவுடன் எல்லோரும் சென்று இறுதி மரியாதை செய்துவிட்டு வந்தமர்ந்தோம். இறந்தவருக்கு பத்துப்பைசா என்கிற அடைமொழி உண்டு. எண்பதுகளில் பத்துப்பைசாவுக்கு ஒரு ரோஜாப்பாக்குப் பொட்டலம் கிடைக்கும். சிகரெட் குடித்துவிட்டு புகை வாடையைப் போக்க பாக்குப்போடுகிற பழக்கம் எல் லோருக்கும் இருப்பதுபோல அவருக்கும் இருந்தது. அது செய்தியில்லை. ஒருபாக்குப் பொட்டலம் வாங்கி ஒருநாள் முழுக்க குடிக்கிற சிகரெட்டுக்கெல்லாம் அதையே கொஞ்சம் கொஞ்சமாக உபயோகப்படுத்திவிட்டு பத்திரப் படுத்திக் கொள்வார். யாருக்கும் அதிலிருந்து ஒரு துகள் கூடக்கொடுக்கமாட்டார் அப்படிப்பட்ட சிக்கண காரர். அதனாலே அவருக்கு பத்துப்பைசா என்கிற அடைமொழி வந்தது.

இப்படி ஒவ்வொரு காரியத்திற்குப் பின்னாடியும் ஒரு காரணம் வைத்துக்கொள்ளும் இந்த மனிதக்கூட்டம் விசித்திரமானது. இறந்த வீட்டில் வந்து குழுமி,அந்தக் குடும்பத்தார்களின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ளும் மகோன்னதமான பழக்கம் பொதுமைச் செயலால் ஆனது. கிராமம் என்றால் அதில் இன்னும் கூடுதல் பொதுமை இருக்கும். யாரும் வேலைக்குப் போக மாட்டார்கள். அன்று வேலைக்குப் போனால்தான் உலை வைக்கமுடியும் என்கிற வறுமை சூழ்ந்திருக்கும் ஏழைக்கிராமங்களிடம் இது இன்னும் அபரிமிதமாக இருக்கும். செல்போன் இல்லாத அந்தக்காலங்களில் வெளிஊர்களுக்கு செய்தி சொல்ல,அடக்க வேலைகள் பார்க்க, பந்தல்போட, சாப்பாடு தயார்செய்ய, இரவானல் தூங்கவிடாமல் செய்ய கதைப் பாடல் படிக்க பாம்பாட்டிக் காளியப்பத் தாத்தாவைக் கூப்பிட ஒருவர் என, தாங்களாகவே வேலைப்பிரிவு செய்துகொண்டு, அதை சிரமேற்கொண்டு செய்யும் மனிதாபிமானம் கட்டாயம் ஆதிப் பொதுவுடமையால் ஆனது. எவனாவது அதற்கும் மதத்திற்கும் முடிச்சுப்போட எவனாவது நினைத்தால் அவன் தொண்டையில் போடுபோடுங்கள்.

இங்கே ஒரு நடுவயதுக்காரர் ஓடியாடி வேலைகளை ஒருங்கிணைத்துக் கொண்டிருந்தார்.வரவேண்டியவர்கள் எல்லாம் வந்தாச்சா என்று கேட்டார்கள் இளையபையன் மட்டும் வரவில்லை என்று பதில் வந்தது.வெளி நாட்டில் இருக்கும் அவர் வருவதற்கான சூழல் இல்லை. நிறைமாதக் கர்ப்பினியான மணைவியை அழைத் துக்கொண்டும் வரமுடியாது அங்கே அவரைத்தனியே விட்டு விட்டும் வரமுடியாது என்று சொன்னார்கள்.

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து கொஞ்ச நாள் அலுவலகத்தில் வேலை பார்த்த  நமக்கே தாமதமாக வருவது உறுத்தியதே. வரமுடியாத அந்த இளைய பையன் என்னபாடு பட்டுக்கொண்டிருப்பார்.

5.4.12

மௌனத்தை உடைக்கும் முன்கை

பரமக்குடி பேருந்து நிலையத்துக்குள் நுழைந்ததும் திபு திபுவெனக்கூட்டம் முண்டி யடித்துக்கொண்டு  ஏறியது. அதோடு கூடவே பனங்கிழங்கு விற்கிற சிறுவனும்,சுண்டல் விற்கிற நடுத்தர வயதுக்காரரும் ஏறினார்கள்.பத்து ரூபாய்க்கு ஆறு அவிச்ச பனங்கிழங்கு கிடைக்கும்,ஒரு பொட்டலம் சுண்டல் ஐந்து ரூபாய்க்கும் கிடைக்கிறது என்பதே ஆறுதலான விஷயம். ஆனாலும் அந்த சிறுவனிடம் கிழங்கு வாங்க மனம் ஒவ்வவில்லை.அந்த ஒரு நிமிட தாமதிப்பில் குழந்தை உழைப்புக்கு எதிராக செய்கிற கையாலாலாத நடுத்தர வர்க்கத்தின் கைங்கர்யம் அதுமட்டுமே. நடு இருக்கை மட்டுமே காலியாக இருந்தது அதில் உட்காருவதற்காகக் குறிவைத்து வந்த இரண்டு கிராமத் தார்கள் அழிச்சாட்டியம் செய்தார்கள்.பனங்கிழங்கு விற்கிற சிறுவனை கழுத் தைப்பிடித்து தள்ளினார்கள் இருக்கையின் முகப்பில்  உட்கார்ந்திருந்த பீகாரி இளைஞனை விலகச்சொல்லிக் கெட்ட வார்த்தையில் வைதார்கள். அது வரை இயல்பாக வேடிக்கைபார்த்த பேருந்துப்பயணிகள் ஒவ்வொருத்தராய் தங்களை தாங்களே உள்ளிழுக்கும் ஆமைகளானோம். அப்போதிலிருந்து சுமார் ஒருமணிநேரம் ஓயாத கெட்டவார்த்தை ஒவ்வொன்றும் டாஸ்மாக் வீச்சத்தோடு பேருந்து முழுக்க வழிந்து கிடந்தது.

’எம்மருமயென் ஆறுகெடா வெட்டுனாண்டா,ஒரு சுமோப்பிடிச்சியாந்து கேஸ் கேஸா எறக்கி  பெருமப்படுத்திட் டாண்லொய்’ என்று சொல்ல எதிராளி

 ‘சும்மா கெட வகுத்தெரிச்சலக் கெளப்பாத பெறகு குத்திப்புடுவே எனக்கும் வாச்சானே மருமயென் பேத்தியாளுக்கு சடங்கே வைக்கமாட்டேனுட் டாண்டா, சாதிகெட்டபெய. க்காலி,அதாம் போச்சுண்டா பத்ராவிசுல வேல பாத்துக்கிட்டு ஒத்தப் பைசா வரும்டியில்லாம எம்மவள மூளியா வச்சிறுக் கான் சிருக்கியுள்ள.., 

வயித்தெரிச்சலக் கெளப்பாதடா என்று பேசிக்கொண்டே வந்தார்கள்.காற்று வரவில்லை இறுக்கமாக இருந்தது. ஜன்னல் கண்ணாடி கொக்கியை மடக்கி நிறுத்த தெரியவில்லை இரண்டு மூன்று முறை மடேர் மடேரென்று கண்ணாடி கீழிறங்கியது. தெறக்கத்தெர்லன்னா உடவேண்டிய தானே  கண்ணாடியப் போட்டு ஒடச்சிராதங்கப்பு என்ற பொறுமிய கண்டக் டருக்கும் ரெண்டு வசவு காத்திருந்தது. இனிமையான  பாடல் களாக ஓடிக் கொண்டிருந்தாலும் அதையும் தாண்டிய பேச்சுச் சத்தமும்,வசவுகளும்  ஆக்ரமித்துக்  கொண்டே யிருந்தது.

பின்னாடியிருந்த நடு வயதுப்பெண் எழுந்து ’

என்ன பஸ்ஸா இல்ல சாராயக் கடையா,பொம்பளைங்க  வர்றாங்கண்ணு தெரியல’ என்று குரல் கொடுத்தார்.

’பொட்டமுண்டைக்கி திமிரப்பாரு என்று மீண்டும் கெட்டவார்த்தையில் ஆரம்பித்தான்.

’இனிமே ஒனக்கு மர்யாதயில்ல பேச்ச நிப்பாட்டு’ என்றார்.’நா யார்ன்னு தெர்யுமா’ என்றான்.

அதான் ஒருமணிநேரமாப் பாத்துட்டு வர்ர்றோ மில்ல, நீ மனுஷனே இல்ல என்றார்.

இரண்டு பேரும் வரிந்து  கட்டிக் கொண்டு அவரோடு மல்லுக்கு நின்றார்கள். சன்னம் சன்னமாய் பேருந்துப் பயணிகள் எல்லோரும்  அந்தப் பெண்ணின் பக்கம் வந்தார்கள். பேருந்தும் திருப்புவனத்துக்கு வந்தது. பயணிகள் ஒருமித்த குரலோடு பஸ்ஸ ஸ்டேசனுக்கு விடுங்க ட்ரைவர் சார் என்று கத்தினார்கள். மள மளவென்று ரெண்டுபேரும் இறங்கி இருவரும் கூட்டத்துக்குள் மறைந்து போனார்கள்.

மீண்டும் ஓடத்துவங்கிய பேருந்து தனது இயல்புக்குத் திரும்பியது. எல்லோரும் அவரவர்  ஆலோசனைகளைச் சொல்லிக்கொண்டு வந்தார்கள். மீண்டும் பாடல் தெளிவாக ஒலிக்க ஆரம்பித்தது. அந்தப்பெண் பக்கத்திலிருந்த குழந்தையிடம் வெளியே காட்டி எதோ சொல்லிக் கொண்டிருந்தார்.