31.1.10

பெவிலியனுக்குத் திரும்பிய கனவுகள்.

இரு சக்கரவாகனத்தின் சைகை ஒலிப்பானை அலறவிட்டு தங்க நாற்கரசாலைக்குள் இணையும்போது ஒரு இளைஞன் நடந்துபோனான். நடப்பது மிக மிக விநோதமானதா ?. ஆம் மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் பறக்கிற வாகனங்களுக்கு இடையில் ஏகாந்தமாய் ஒருவன் நடந்துபோவது வித்தியாசமான காட்சி. அவனை ஏறச் சொன்னபோது தயங்கித் தயங்கி ஏறினான். பிறகு நீண்ட இடைவெளி. நான்தான் பேச ஆரம்பித்தேன்.
தனியார் தொண்டு நிறுவணத்தில் வேலை பார்க்கும் அவனுக்கு திடீரென அழைப்பு வந்ததாம். பேருந்து  வர இன்னும் ஆறு மணிநேரம் காத்திருக்கனும் என்பதால் நாலு கிலோமீட்டர் நடந்தே வந்திருக்கிறான். கிடைக்கிற இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயைத் தக்கவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு.என்ன படிச்சிருக்கீங்க என்றுகேட்ட போது எம்மெஸ்ஸி, எம்பில் என்று சொன்னார். அதுவும் பிசிக்ஸ் மேஜர்.

எனது தெருவுக்கு அடுத்த தெருவில் இதே பிசிக்ஸ் மேஜர் படித்த ஒரு பட்டாதாரி ஆசிரியர் தனிப்பாடம் நடத்திக் கோடிசுவரராகிப்  போனார். அவருக்கு கிடைக்கிற அந்த தனிப்பாட வருமாணம், அரசு கொடுக்கும் கைநிறைந்த சம்பளத்தைக் கெக்கலிட்டுக் கேலி செய்யும் தொகை. இந்த வித்தியாசம் பிறகு எனக்கு வண்டி ஓட்டத் தெம்பில்லை. இறங்கி அவனோடு அறை மணி நேரம் பேசினேன்.

சின்ன வயசில் தாயும் தந்தையும் அகாலமரணம் அடைந்துவிட ஒரு ஓட்டு வீடும், ஒரு தம்பியும், மிகப்பெரிய வெட்ட வெளியும் அவனை எதிர்கொண்டது. குடித்தும் குடியாமலும் பாதியில் நின்று போன கல்லூரிப்படிப்பை முடித்தான்.தனி விளையாட்டுக்கான மாவட்ட, மாநில சான்றிதழ்களோடு எம்மெஸ்ஸி பட்டப்படிப்புச் சான்றிதழும் இருந்தது. மிகச்சிறந்த சுழல்பந்து வீச்சாளன்,வசமான பந்து வந்து விழுந்தால் அடிக்கிற அடியில் மூணு ஊர் தாண்டிவிழும் முரட்டு பேட்ஸ்மேன் என்ற அடையாளங்களின் மேல் கிறக்கம் கொண்ட மத்தியகலால் துறை அவனை ஒப்பந்த வீரனாக்கி சுவீகரித்துக் கொண்டது.தொலைக் காட்சியில் ஒருநாளாவது ஒளிர்ந்து விடுவேனென்னும் மிகப்பெரிய கனவோடு சென்னைக்கு போனான். செவக்காட்டுப் புழுதியும்,செருப்பில்லாத காலுமாக இருந்த அவனுக்கு வழுக்கும் விலையாட்டு மைதானமும்,காலுறைகள்,ஷூ எனும் பளபளக்கும் வாய்ப்பு விரிந்துகிடந்தது.

சேப்பாக்கம் மைத்தானத்துக்கு அருகிலே ஒரு விடுதியில் தங்கியிருந்து விளையாட்டு  இல்லாத காலங்களில் எம்பில்லும் முடித்தான். தொண்ணூறுகளின் துவக்கத்தில், தொலை காட்சியின் பரவலாலும், முகச்சவர, பற்பசை வியாபாரிகளின் ஆதரவாலும் கிரிக்கெட் பட்டி தொட்டிகளின் பிரதான விளையாட்டாக மாற்றமாகிக் கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் சென்னையைச் சேர்ந்த பல பிரபல வீரர்களின் அறிமுகத்துக்கும் கடைக்கண் பார்வைக்கும் தவம் கிடந்தான். கிடைத்த பின்னால் அவனுக்கு விளங்காத பல அரசியல் கண்ணா மூச்சியாடியது. எல்லா தகுதிகாண் தேர்விலும் ஜெயித்து வெளியேறும் அவனை அவனது சமூக அடையாளம் ஒவ்வொரு முறையும் பரமபத பாம்பாகி காலைப் பிடித்து கீழே இழுத்துப் போட்டது. இதையும் கூட அவன் அவனுக்கு கடவுளின் அருள் கிடைக்காததால் வந்தது எனத் தேற்றிக்கொண்டு தவம் தொடர்ந்தான். மணமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல இடமிழந்து போனான்.

சான்றிதழ்களின் கடைசியில் இருந்த பள்ளியிறுதி மாறுதல் சான்றிதழைத் திருப்பிப் பார்க்காத தேர்வுக்குழுமம் குதிரைக் கொம்பாகவே இருந்தது.அப்போதைய கிரிக்கெட் கேப்டன் திரு அசாருதின் அவர்களைìܼப்
பலமுறை சென்னையில் சந்தித்திருக்கிறான்.பின்புலம் இல்லாமல் இங்கே நுழையச் சத்தியமாகச் சாத்தியம் இல்லை என்று சொல்லிவிட அவனுக்கிருந்த இறுதி இழையும் அறுந்துபோனது. அதன் பின்னால் வயிறும் மிச்சமிருக்கிற வாழ்வும் பயமுறுத்தியது இரண்டு முறை காவல்துறை ஆய்வாளர் தேர்விலும் உடல் தகுதித் தேர்விலும் வெற்றிபெற்று தோற்றுப்போனான்.தன்னந்தனியே திறமையை மட்டும் வைத்து ஜெயித்துவிடத் துணிந்த அவனது பயணம் நெடுகிலும் ஒரே ஒரு வெற்றி கிடைத்தது. ஆம் அவனது தம்பி ஒரு இடைநிலை ஆசிரியனாகினான் அவனால் மீண்டும் தரையிறங்கியது அவனது கனவு.

தம்பியின் கல்யாணம். அதனால் ஏற்பட்ட வெற்றிடம் . அதை நிறப்ப சொந்தக் கல்யாணம். அப்புறம் குடும்பம். அதை  நிர்வகிக்க  ஒரு வேலை.தொண்டு நிறுவண நிர்வாகியாகி வாழ்க்கை அவனை பெவிலியனுக்கு அனுப்பியது. ஆனாலும் உள்ளே உறைந்து கிடக்கிறது மட்டையும்,பந்தும் எல்லை தாண்டிக் குதிக்கும் சந்தோசமும். அதை லேசாக உசுப்பிவிட அவ்வப்போது கிராமத்து கிரிக்கெட் குழு அவனை நடுவராக்கும். இப்பொதெல்லாம்  விளையாட்டு நுணுக்கங்களை விட சமூக நுணுக்கங்கள் பற்றித்தான் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறான்.

அவனது பெயரைச் சொல்லவில்லையே.
தோற்றவர்களுக்கெல்லாம் என்ன பெயரோ அதுதான்.
அல்லது அவனுக்கு நீங்களே ஒரு பெயர் வைத்துக்கொள்ளுங்கள்.

29.1.10

பணம், பெண், பாசம்.

பணம் எண்ணி வாங்கும்போதே வாடிக்கையாளர் முகம் பாராமல் அவர்களைக் கண்டு பிடித்துவிட முடியும்.ஆயிரம் ஆயிரமாகச் சுருட்டித் தனித் தனியாக கொடுத்தால், எதோ அகாலச் செலவுக்காக இருந்த ஒரே ஒரு நகையை அடகு வைத்து பின் சிறுகச் சிறுகச் சேமித்து நகை மீட்டும் கிராமத்துக்காரர்  எனத் தெரிந்து கொள்ளலாம். அதே நேரம் இங்கே ஏடிஎம் இல்லையா,என்ன இவ்வளவு லேட்டாகுது என்று நூறு ரூபாய் பணம் கட்டிவிட்டு ஆயிரம் கேள்வி கேட்பவர் கட்டாயம் ஒரு படித்தவராகத்தான் இருப்பார்.

நூறு வாடிக்கையாளர்கள் வந்தால் எழுபது பேருக்குமேல் படிக்காத கிராமத்து மனிதர்கள் வரும்வங்கி எங்கள் வங்கி. அவர்களோடு சதாகலமும் சண்டை போட்டுக்கொண்டும் ஏச்சு வாங்கிக்கொண்டும் பார்க்கிற நாட்கள் ஒவ்வொன்றும் ஒரு ஏக்கர் நிலத்தை உழுதுபோட்ட கலைப்பும் திருப்தியும் ஒருசேரக்கிடைக்கும்.எல்லோரிடமும் மறக்காமல் ஒன்றைச்சொல்லுவது வழக்கம் உங்க பிள்ளைகளையாவது படிக்கவையுங்கள்.அவர்கள் பல வருடங்கள் கழித்து எங்காவது பர்த்தால் எழுந்து இடம் கொடுப்பாதும் பையன் எஞ்சினீரிங் காலேஜ் படிக்கான் என்று சொல்லுவதும் சங்கோஜமும் சந்தோசமும் கொடுக்கிற நிமிஷங்கள்.சாத்தூர் கேஷியர் வல்லையா என்று நான் இல்லாத நேரங்களில் கேட்கும் கிராமத்து வாடிக்கையாளர்கள்தான் இந்த வங்கியில் இதுவரை சேர்த்து வைத்த சேமிப்புக்கணக்கு.

பெரும்பாலும் நகைகள் அடகு வைப்பதுவும்,அதை மீட்பதுவுமே பிரதானத் தொழிலாகவும்,மகளிர் சுய உதவிக்குழுக்கள் இரண்டாமிடத்திலும் இருக்கிறதால் அன்புக்கும் அந்நியோன்யத்துக்கும் குறையிருக்காது. பிடிக்காதவர்களை மூஞ்சுக்கு நேரே பார்த்து சண்டை போடுவதும் பிடித்தவர்கள்மேல் திகட்டத்திகட்ட வாஞ்சை கொள்வதுமான மானாவரி மனிதர்கள்.

தகப்பானார் படிப்புக்கு நகையை அடகு வைத்துவிட்டு இறந்துபோக அதை மீட்க ஒரு தாயும் மூன்று பெண்மக்களும் தாலுகா ஆபீஸ்,வக்கீல்,வங்கி என அலையாய் அலைந்தார்கள். இப்படியான தருணங்கள் இந்த ஏற்பாடுகள் மேலே அநியாயக் கோபம் வரவைக்கும்.ஆனால் ஆறுதல் சொல்லுவதைத் தவிர வேறு ஏதும் செய்ய முடியாது.ஆறுமாதம் அலைந்த பிறகு ஒருநாள். அந்த நகை முறைப்படி தாயாருக்கு கொடுக்கப்பட்டது. அதற்கு  ஏனைய வாரிசுகள் ஒப்புதல் கையெழுத்துப் போடவேண்டும். மூன்று மகள்களும் வந்திருந்தார்கள். யாருக்கும் மணமாகவில்லை போலத்தெரிந்தது.அவர்கள் வந்துபோகிற ஒவ்வொரு தருணமும் அந்தக் கிளையில் ஒரு அசாதாரண இருள் கவ்விக்கொள்ளும்.

ஒவ்வொருவருத்தராகக் கையெழுத்துப் போடும்போது குமுறிகுமுறி அழுதார்கள்.கடைசிப்பெண் 'எம்மா எதுக்கும்மா இது பாக்கும்போதெல்லாம் அப்பா நெனப்பு வருமே வேண்டாம்மா வித்துரு' என்று சொன்ன போது வங்கி ஸ்தம்பித்து விட்டது.ஆனால் அந்தத்தாய் இன்னும், இன்னும் அடர்த்தியான இறுக்கத்தை  உள் வாங்கிக் கொண்டு,அந்த நகைகளை வாங்கிக்கொண்டு உறுதியாக மூன்று பேரோடு வெளியேறினார்கள்.

ஒரு வருடம் கழித்து இதே போல இன்னொரு தந்தை. இரண்டு மகன்களையும், மூன்று மகள்களையும் நிறையச் சொத்துக்களையும் சேமிப்புக் கணக்கையும் விட்டுச்சென்றிருந்தார். அவர்களுக்கான சேமிப்புத்தொகையும் பணமும் ஒரு வாரத்துக்கு முன்னாள் பட்டுவாடா ஆகியது.அவர்கள் வந்து போன எல்லா நாளும் ஒரே சிரிப்பு,ஸ்நாக்ஸ்.

இது எனக்கு, அது உனக்கு, என்னும் பங்கு பாவனையில் தான் குறியாய் இருந்தார்கள். ஒருவருக் கொருவர்  மிகச் சிநேகமாக பேசிக் கொண்டார்கள். ஒருவரில்லாத போது மற்றொருவர் வந்து விபரம் கேட்டு விட்டு சொல்ல வேண்டாம் எனச் சொல்லிவிட்டுப் போனார்கள். வாங்கிய பணம் நகை எல்லாம் வங்கி வாசலிலேயே பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒவ்வொருத்தராய் காரிலும்,இருசக்கர வாகனத்திலும் பறந்தார்கள்.கடைசியில் அந்தத் தாய் மலங்க மலங்க முழித்துக்கொண்டு புளியமர நிழலில் நின்றார்கள். அடுத்த பஸ் எப்பவரும் என்று கேட்டபடி.   

27.1.10

குடியரசுக் கொண்டாட்டமும் சில செய்திகளும். 200வது பதிவு.

பனி சூழ்ந்த காலை நேரத்தில்  டெல்லி செங்கோட்டை தொடங்கி உள்ளூர் கம்மவார் நாயுடு பெண்கள் மேநிலைபள்ளி வரை கம்பத்தில் கீழ்நிற்றல் பாரீர் காணரும் வீரர் திருக்கூட்டம் எனத்தேசியக் கொடியை அண்ணாந்து பார்த்துக்கொடிருந்தது இன்னொரு இந்தியா. பின்னர் மாநிலம் தோறும் சாதனை அணிவகுப்பு நடந்தது அதை அரசுத்தொலைக்காட்சி நேரடியாக ஒலிபரப்பயது.அரசின் அணுமதிபெற்று நடத்தும் தனியார் தொலைக்காட்சிகள் ஒரு வரிச் செய்தியாகக் கடந்துபோயின.

அதே அதிகாலையிலே கலை கட்டிவிட்டது தொலைக்காட்சி அலை வரிசைகள்.நேற்றுவந்த காம்பியரிலிருந்து இசங்கள் பற்றிப்பேசும் கோபிநாத் வரை சினிமாவுக்குள் சிக்கிக்கொண்டு மீளமுடியாமல் கிடந்தார்கள்.எல்லா அலை வரிசையிலும் தமிழ்த் தெரியாத ஒரு பதுமை உட்கார்ந்துகொண்டு அணிச்சையாக சிரித்துக் கொண்டும் அணிச்சையாக விரித்துப்போட்ட கூந்தலை ஒதுக்கிக்கொண்டும் இருந்தது.திரைப்படம் எனும் ஊடகம் எப்படியெல்லாம் சீரழிக்கப்படுகிறது என்பதை அறிவார்ந்த பேட்டிகள் விளங்கப்பண்ணியது. தங்களுக்குள் பரிமாறிக்கொண்ட கிண்டலும்,கேலியும் உண்மையில் பார்வையாளர்களைப் பார்த்து வக்கணம் காட்டுவதாகவே தெரிகிறது.

சோப்பு சீப்பு கண்ணாடிக் காரர்களோடு சேர்ந்து வேலம்மாள் கல்வி நிறுவணமும் விளம்பரத்தில் போட்டி போட்டது. பெயர் மட்டும்தான் வேலம்மாள். கட்டணம் எல்லாம் டாடா - பிர்லாம்மாள். எங்காவது இரைச்சலான சத்தம் கேட்டால் என்ன இங்க சந்தக்கடையா நடக்கு என்று ஒரு விமரிசனம் வரும்.அந்த இரைச்சலை ஐந்து நிமிடத்துக் கொருதரம் ஓய்வில்லாமல் வழங்கியது விளம்பரங்கள்.இடையிடையே குடியரசைக் கொண்டாடுவோம் என்கிற சத்தமும் கேட்டது அதுவும் அந்த பதுமைகள் அணிச்சையாக முடியை ஒதுக்குவதுபோலவே இருந்தது.

பிரபலமாகாத ஒரு அலைவரிசையில் பொதுமக்கள் ஒரு  பேட்டியில்,மாணவி ஒருத்தி வேற்றுமையில் ஒற்றுமை என்று மணப்பாடப்பகுதியை ஒப்பித்தாள். அதே நேரம் தான் மீண்டும் கர்நாடகத்தில் மைசூர் மாவட்டம் ஹின்கலில் ஒரு கிறிஸ்தவ வழிபாட்டுத்தலம் சூறையாடப்பட்டிருக்கிறது. சாலையோர வியாபாரி ஒருவர் சின்னவெங்காயத்தை நிறுத்துப் போட்டுக் கொண்டே 'குடியரசுண்ணா என்னன்னு தெரியலீங்க' என்று அப்பாவியாகச் சொன்னார்.அவர் உண்மையில் எல்லோரையும் விட நியாயமானவர்.பசியோடிருப்பவனுக்கு உணவு தெய்வம் என்று சொன்னார் புரட்சித்துறவி விவேகானந்தர்.ஒரிஸ்ஸாவில் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை அபாயமாக அதிகரிக்கிறது. இது வரை பசிக்கிறையானோர் எண்ணிக்கை 400 என்பது புள்ளிவிபரத் தகவலல்ல அவமானத் தகவல்.

இருபத்துநான்கு மணிநேர இரைச்சலில் இந்த செய்திகள் காணாமல் போய்விடுகின்றன.மாய்மால விளம்பரத்தில் வளர்ந்து வரும் வறுமை கவனப்படுத்தப் படாமல் போகிறது.இது விதிவிலக்கல்ல,இது ஒதுக்கிவிடக்கூடிய அல்லது கடந்துவிடக்கூடிய செய்திகளும் அல்ல அரசு கொஞ்சம் உற்றுக் கவனிக்க வேண்டிய தகவல்கள்.குடியரசு
மக்களால் ஆனது.


நண்பர்கள்,பார்வையாளர்கள்,தொடர்ந்து பின்னூட்டம் வழியே என்னை ஊக்குவிக்கும், பின்தொடர்பவர்கள் மற்றும் தமிழ்மணம்,தமிழிஷ் குழுமம் அணைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. இது எனது 200 வது பதிவு.

25.1.10

ஆங்கோர் பெண்ணுக்கு அறிவொளி கையில் கொடுப்போம்


ஏழுமுதல் பணிரெண்டு வயதுவரையுள்ள குழந்தைகளுக்கு இலவச சிறப்பு பாடம் சொல்லித்தர ஏற்பாடு செய்திருந்தோம். அந்த ஊரில் படித்துவிட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் இளைஞர்களிந்த முயற்சிக்கு ஆதரவு தந்தார்கள்.என்னைப்போல இன்னும் பத்திருபதுபேர் பொருளுதவிக்கு கரம் நீட்டினாகள். அந்த துணிச்சலில் ஒரு சின்ன நிகழ்ச்சி.

இதோ நூற்றி ஐம்பது பூக்கள். குதூகலம் குறையாத இரைச்சல். எல்லோரது பால்யகாலத்தியும் சட்டென இழுத்துவரும் இரைச்சல். 'சார் என்ன அடிக்கா, சார் இங்க பாருங்க டவுசர் பட்டணப்போடாம, சார் இவஞ் சினிமாப் பாட்டுப் படிக்கான் இப்படியான குற்றச்சாட்டுக்கள் கேட்டுக் கொண்டேயிருக்க எங்களை அது பின்னிழுத்துக் கொண்டு போனது. லூர்துமேரியின் கருப்புக் கண்கள் அவள் கொண்டு வரும் ஜவ்வு மிட்டாய், கல்கோனா, கடல்குச்சி, எச்சிதுப்பி அழித்த சிலேட்டுவாசம், அதில் எழுதிய அழியாத எழுத்துக்கள் மறுரூபம் எடுத்துத் திரிந்தது அந்தக் கூட்டத்துக்குள்.

அப்போதெல்லாம் ஐந்து பையன்கள் இருந்தால் ஒரே ஒரு பெண் படிக்கவருவாள்.அவளே எல்லாப்பாடத்திலும் முதலாவதாக வருவாள். 'ஒரு பொம்பளப்பிள்ள இத்தன மார்க் வாங்குறா,வெக்கமாயில்ல' வாத்தியார் பழைய்ய பண்ணையாராகி உசுப்பேத்துவார்.கடும்போட்டி நிலவும்.எட்டுவரை இந்தப் போட்டி நீடிக்க ஒன்பதாம் வகுப்புக்கு போகும்போது எதாவது ஒரு உருவத்தில் அவளை வறுமை முதலை இழுத்துக் கொண்டு போய்விடும். பதினாறு பதினேழு வயதிலே குடும்ப பாரம் சுமக்கப் போய்விடுவாள்.பிறகு பார்க்கும் போது ஒரு குழந்தையைக் கையில் துக்கிக்கொண்டு வந்து நமக்கு அறிவுசொல்லும் பெரிய மனுஷியாகிவிடுவாள்.முப்பத்தைந்து வயதில் பாட்டியாகிப் போகிற அவர்கள் காலத்தை முந்திக்கடந்து போவார்கள்.

இவள் என்னோட க்ளாஸ் மேட் என்று சொன்னால் யாரும் நம்பமுடியாத முதுமையை வலிய வாங்கிக்கொண்ட ஔவையார்கள் கிராமங்கள் தோறும் நிறைந்திருக்கிறார்கள். கல்வி அவர்களுக்கு சொகுசுக் கனவுகளைக் கொடுக்காது. ஆனால் கொடுக்கப்பட்ட வாழ்க்கையை கடைசிவரை வாழ்ந்து தீர்க்கிற அனுபவத்தையாவது தரும். இந்தக்கல்வி புத்தகத்தின் வாசனையை உள்ளிழுக்க,எழுத்தின் பலதரப்பட்ட சுவையை ருசிக்க கற்றுக் கொடுக்கும். உலகை ஓரளவு உணர்ந்து கொள்ள வாய்ப்புக் கொடுக்கும் என்கிற நம்பிக்கையின் ஒரு துவக்கம்.

அங்கே பாதிக்குமேலே பெண்பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களின் கண்களில் மிளிரும் நம்பிக்கையை முன்னெடுத்துக் கொண்டுபோக,அவர்கள் தேக்கிவைத்த கனவுக்கு வடிகால் கொடுக்க ஒரு அமைப்பு உருவாக்கியிருக்கிறோம். அதைச் செயல்படுத்தி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிப்போம்.

23.1.10

பதிவர் சந்திப்பு அவர்களுக்கு இன்று இறுதி நிகழ்ச்சி!


சந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு அஞ்சலி செலுத்தி தோழர். எஸ்.வி.வேணுகோபாலன் அவர்கள் எழுதிய நினைவலைகள் அவரைப்பற்றி நம்மோடு பகிர்ந்துகொள்கிறது. நெஞ்சை உருக்குகிறது.

தோழர்.செல்வபெருமாள்

என்னவோ தெரியவில்லை, அண்மைக்காலமாக மிக நெருக்கமாக பாதிப்பு ஏற்படுத்திய நண்பர்கள், தோழர்களை மிகக் குறைந்த இடைவெளியில் இழக்க நேரிட்டிருக்கிறது.  இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் துணைப் பொதுச் செயலாளர் அசோகன் கடந்த செப்டம்பர் 2ம் தேதியன்று மாரடைப்பில் விடைபெற்றிருந்தார்.  அதற்கு இரண்டே தினங்களுக்குமுன் தான் அவரது திருமணம் நடந்திருந்தது. 47 வயது அவருக்கு என்பது நெருங்கிப் பழகிய பலருக்கு வியப்பளித்தது. அத்தனை இளமையும் துள்ளலுமாகச் செயலாற்றியவர்.  அடுத்தது, தூங்காமல் தூங்கி (சந்தியா பதிப்பகம்) என்ற அற்புதமான நூலை எழுதிய மயக்க இயல் மருத்துவர் மாணிக்கவாசகம்.  60 வயதுவரை அறுவை சிகிச்சை மேசைக்கருகில் நோயாளிகளின் புனர்வாழ்விற்கு வரமளிக்கத் தக்க ஆற்றலோடும், அது மறுக்கப்பட்ட வேளைகளில் உறவினர்களுக்கு ஆறுதல் மொழிகளோடும் வளையவந்த அவரே அறுவை சிகிச்சை மேசை மீது படுக்க நேர்ந்த கணத்தில் உரமழிந்து தவித்தவர்.  புற்றுநோய் அவரை அதிகம் தவிக்கவிடாது நான்கைந்து மாதங்களுக்குள் விடுதலை கொடுத்துவிட்ட நிகழ்வு சென்ற அக்டோபர் 23ல் நடந்தது.  இளம்வயதில் செயலூக்கப் போராளியாக தெருவீதியில் மட்டுமின்றி, இணையவீதிகளிலும் முழங்கிய வித்தியாசமான தோழன் செல்வபெருமாள் தான் நேற்று (22 01 2010) இரவு  நம்மைப் பிரிந்தது.  மனிதகுல நேயர் என்பதுதான் மேற்சொன்ன மூவருக்கும் பொதுவான முகவரி.  தொழிற்சங்க மேடையிலோ, மருத்துவர் உருவிலோ, களப் போராளியாகவோ வாழ்வின் சாரத்தை நேசித்தவர்கள், மற்றவர்களுக்காக வாழத் துடிப்பவர்கள் விரைந்து மரித்துவிடுவது கொடுமையிலும் கொடுமையானது.

செல்வபெருமாளின் எழுத்துக்களில் (http://santhipu.blogspot.com )ஒளிரும் நேர்மையும், துணிவும், அழுத்தமும் இயக்க இலட்சியத்தின்பால் அவர் கொண்டிருந்த விசுவாசத்தின் செம்மாந்த மேடையிலிருந்தே வெளிப்பட்டது.  இதன் சுவடுகள் எதுவும் தெரியாத எளிய மனிதராக அவர் சக தோழர்களிடம் பழக முடிந்தது ஒரு ஆகச் சிறந்த கம்யூனிச குணாம்சம் இன்றி வேறென்ன....

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகம் செல்ல வாய்த்த தருணங்கள் ஒவ்வொன்றின்போதும் கடந்த காலங்களில் அவரைப் பார்க்கும் நேரங்களின் தோழமை வினவல்கள் உணர்ச்சி பெருக்குபவை. முக்கிய தலைவர்கள், தொழிற்சங்க அமைப்புகளின் தொலைபேசி எண் தேவைப்படும் நேரங்களில் அந்த அலுவலகத்திற்கு அழைத்தால் எதிர்முனையில் அவர் கிடைக்கும்போது தேவையான விவரங்களோடு, அப்போதைய அரசியல், சமூக நடப்பு ஏதும் பற்றிய கருத்து பரிமாற்றங்கள் இல்லாது அந்த அழைப்பு நிறைவு பெற்றதில்லை.

இ-மெயில் நதியில் நான் தயங்கித் தயங்கிக் காலை நனைக்கத் துவங்கிய பொழுதுகளில் சடாரென்று, அவரது பெயரோடு வலப்பக்கத்தில் ஒரு செவ்வக உரையாடல் பெட்டி கண் திறந்தபோது நான் திடுக்கிட்டுப் போனேன்.  இதை வாசித்தீர்களா, அதைப் படித்தீர்களா, எதிர்வினை செய்யக் கூடாதா என்பதாக இருக்கும் அவரது கேள்விகள்.  எனது கட்டுரையை சிலாகித்தும், ஏன் Bank Workers Unity இதழ் கைக்கு வரவில்லை என்றும் இருக்கும் வேறு நேரத்து பிரஸ்தாபங்கள்.  அவருக்கென்று பிரத்தியேகமா இதழ் சேருவதை மாதாமாதம் உறுதிசெய்வதை எனது முக்கிய வேலைகளில் ஒன்றாகக் கொண்டிருந்தேன்.

ஒருமுறை அவரது மெயிலிலிருந்து வந்திருந்த உரையாடல் குறித்து அறிந்துகொள்ள அடுத்தநாள் அழைத்தபோது அவர் அலுவலகம் வந்திருக்கவில்லை. அலைபேசியில் அழைத்துக் கேட்டபோது, 'அது நானில்லை தோழா, உ.ரா. வரதராசன் தான் எனது மெயிலிலிருந்து உங்களை உரையாட அழைத்திருந்திருப்பார்' என்றார்.  அது மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை அகில இந்திய மாநாட்டு ஆவணம் ஒன்றை மொழிபெயர்க்கும் வேலை தொடர்பான உரையாடல். இப்படி முக்கியப் பணிகளுக்காகத் திறந்து வைத்த குடிலாக இருந்தது அவரது மின்னஞ்சல் உலகம்.

சந்திப்பு வலைப்பூவில், அவரது ஆவேசமான எழுத்துக்களைப் போலவே, அழகியல் பரிமளிக்கும் பதிவுகளும் மின்னும். சென்னை மத்திய சிறைச்சாலை புழலுக்குக் குடி பெயர்ந்துபோகவும், பழைய சிறைச்சாலையை இடிப்பதற்குமுன் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து கொடுத்தபோது, செல்வபெருமாள் சென்றுவந்த அனுபவத்தின் பதிவை நாட்டு மக்கள் அனைவரும் வாசிக்கவேண்டும் என்று தோன்றும். அதிகாரத்தின் பிரம்புகள் வரலாறு நெடுக செய்துவரும் தவறுகள், குற்றங்கள், அராஜகங்கள், அயோக்கியத்தனங்கள் எல்லாவற்றையும் விசாரிக்கும் இடமாகப் பழைய சிறைச்சாலைகளை மாற்றினால்தான் என்ன என்று தோன்றும்.

வலைப்பூவில் புதிய வரவுகளற்றுப் போன ஒரு சோதனையான காலத்தில் அவரது திடீர் உடல் நலிவு தெரியவந்தது.  அவரைப் பார்க்கும் துணிவற்றுப்போகச் செய்தன அவர் கடக்கத் துவங்கிய நோயின் கட்டங்கள்.  அவரது இருப்பின்போதே அவரது பிரிவின் விளைவுகள் பற்றிப் பேசவைக்கக் கூடிய கொடியவனாக வந்து தொலைந்திருந்தது புற்றுநோய்.

'சிங்காரவேலர் சிந்தனையாளர் மன்றம்' துவங்கி அரிய கூட்டங்கள் நடத்திக் கொண்டிருந்ததில் அவர் பங்களிப்பு அதிகம்.  சிவப்பின் உவப்பில், சிந்தை நிரம்ப சித்தாந்தங்களே பெருகியிருந்த இந்தச் சின்னச் சிங்காரவேலர் இன்னுமின்னும் கருத்தியல் தளத்தில், தத்துவார்த்த விவாதத்தில், பண்பாட்டின் செவ்விய மொழியில் என்னென்னவோ சாதிக்கும் ஆற்றலும், கனவுகளும் கொண்டிருந்தவர் என்பதே இந்த மரணத்தின் துயரத்தைக் கூட்டுகிறது.

இரந்துகோள் தக்கதுடைத்தான சாக்காட்டைத் தேர்ந்தெடுத்துச் சென்றவரே, செல்வப்பெருமாள் தோழா, செவ்வணக்கம் உனது வசீகரிக்கும் ஆவேச நினைவுகளுக்கு............விலாசம்

2/3, ஐயாபிள்ளை கார்டன் தெரு
காலடிப்பேட்டை
திருவொற்றியூர்
சென்னைஇன்று (23.1.2010) மாலை 4 மணிக்கு திருவொற்றியூரில் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெறும்.

21.1.10

கானமயிலாட...

மனதுக்கிசைந்த பாடலோடு
இணைந்து பாடத் தோன்றும்.

கடைசிப்  பையனைத்  தாண்டி
குதித்து வரும் பந்தைப்  பார்த்து
கால்கள் குறு குறுக்கும்.

நறுக்கெனத்  தைக்கும்  ஒரு
குறுங் கவிதையின்  நீட்சியாய்
உள்ளிருக்கும்  மொழி  ஊற்றெடுக்கும்

பூ, சந்தனம், குதூகலம்,
குழைந்து கிடக்கும் மணவீட்டிலிருந்து
திரும்பியதும் திடீரென ரெக்கைவிரிக்கும்
ச்சீய் எனும் சிணுங்கலைத் தாண்டி.

எல்லாத்துக்கும் வேணும்
ஒரு கிரியா ஊக்கி.

20.1.10

கருசக் காட்டுக்குப் போனேன்.


பாடப் புத்தகத்தில் இருந்த உரல் வாழ்க்கைப் பக்கத்திலிருந்து வீசியெறியப்பட்டது. என் மகனுக்குக் அதைக் காட்ட நான் புதைபொருள் ஆராய்ச்சிக்குத் தான் போகவேண்டும்.உரல் தெரியாத அவனுக்கு உரப்பெட்டியை எப்படி அறிமுகப்படுத்துவேன்.அது நூடுல்ஸ் சிக்கலில் நுனிதேடும்  கதையாகும். அம்மியில் அரைத்த துவையலையும்,அம்மியைச் சுற்றி முளைத்துக் கிடந்த சீரகச் செடியையும் தேடித் திரும்ப ஊருக்குப் போனேன்.பெட்டிக்கடையில் தொங்கிய உடனடிப் புளிக்குளம்பு வாங்கி உடைத்து வைத்தாள் சோத்துக்குப் பக்கத்தில்.

மகன் வந்துவிட்டானென்று மடமடவென வேலைகள் நடந்தது அடுப்பிலிருந்து கோழிவாசம்,நகரத்தில் வீசும் அதே கறிக்கோழி வாசம். வேலை செய்யாம வீட்டில் இருந்து தொந்தி வச்ச எல்லோருக்கும் ஊரில் ஒரு பேருண்டு 'பொந்தாக் கோழி'.ரசத்தை ஊத்தி சாப்பிட்டு விட்டு காட்டுப்பக்கம் போனேன். மக்காச்சோளம்,  நித்தியகல்யாணி எனப்  புதுப் புதுப் பயிர்கள். மனதிலும் உடலிலும் பசியில்லை. பொழுதடையும் வரைத்டேடினேன் அது சிக்கவே இல்லை.

காடைக்கண்ணி.

தினையின் வலசலில் பிறந்த பயிர். கருசக்காட்டுக்கு ஏத்த செடி.கதிர் முத்தி திருகி எடுத்தால் சாக்கு நிமிர எங்கத்த மக கண்தெரியும். எண்ணெய் வழிகிற தலையிலிருந்து இறங்கும் அவள் சடையைப்போலவே கருது.காடுமுழுக்க இப்ப ஷாம்பூ வாடைமட்டும் மிஞ்சிக்கிடக்கு.அவளது கூந்தலில் செருகி மணத்துக்கிடந்த மருக்கொழுந்தை விரட்டிவிட்டு.

மொசைக் தரையைப்போட்டிக்கு இழுக்கும் வழுவழுப்பு காடைக்கண்ணியின் மேலே பூசியிருக்கும்.என்ன இருக்கு நெஞ்சுக்குழிக்குள் என்று கண்டுபிடிக்க முடியாதது போல ஏழு தோல் போர்த்தப்பட்ட வெள்ளைக்கடுகு காடைக்கண்ணி.குதிரைவாலி,சாமை,திணையைத்தெரியுமா உங்களுக்கு எல்லாம் அவளது சோட்டுப்பெண்கள். யாரையும் காணவில்லை இருந்த சுவடும் அங்கில்லை.
திரும்ப வந்தேன்  நூடுல்ஸ் நகரத்துக்குள்.

18.1.10

ஆஸ்திரேலிய NRI அகர்வாலும்,அ.கோவில்பட்டி NRI காளியப்பனும்.

கடந்த சிலமாதங்களாக ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்தபடியே இருக்கிறது. இதற்கு எதிரான மெல்லிய, நடுத்தர,தீவிர,உக்கிர கண்டனங்கள் அரசு அறிவித்த பின்னரும் நின்ற பாடில்லை.அயல் துறை மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாகூட இதைக்காரணம் காட்டி ஒரு பார்வை பார்த்துவிட்டு வந்துவிட்டார். இது தோடர்பான   எதாவதொரு செய்தி நம்ம கூகுளில் தினம்  இடம் பெற்றுவிடுகிறது.

இப்படியான செய்தி இப்போது எல்லா தேசத்திலிருந்தும் வரத் தொடங்கி விட்டது. லண்டனில் படித்துக்கொண்டே உழைக்கப்போன 250 மாணவர்கள் அங்குள்ள குருத்துவாராவில் வழங்கப்படும் ஒருவேளை அன்னதான உணவிற்காக அங்கேயே தங்கிவிட்டார்கள் எனும்செய்தி கூட இந்தவகைதான். இது உலக மயம் தராளமயம் விரித்துவைத்த கவர்ச்சிவலையில் விழுந்த ஹைகிளாஸ் விட்டில்களின் நிலை. உலகமெங்கும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கத் தொடங்கிவிட்ட நிலையில்,சொந்த மண்ணில் உள்ளவர்கள் சோத்துக்குச்சிங்கி அடிக்கையில்  இது நிகழ்கிறது.

கடந்த 16.1.10 அன்றுகூட மெல்போனில் உள்ள டௌண்டவுனில் இருக்கும் மெல்போன் சென்ட்ரல் லயன் மதுக்கடையில் மூன்று இந்திய மாணவர்களை நுழையவிடவில்லை என்று ஒரு செய்திவந்தது.பதிக்கப்பட்ட நபர்களில் ஒருவரான மாணவர் அகர்வால் இது  குறித்து ஆஸ்திரேலிய காவல் துறையிடம் புகார் செய்தும் ஏதும் பலனில்லை என்று இந்திய ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிகை இனவெறி என்று முத்திரை குத்துகிறது.

இந்த தேசத்தில்,வந்தாரை வாழவைத்த இதே தமிழகத்தில் கடந்த 7.1.2010  திண்டுக்கல் மாவட்டம் அ.கோவில்பட்டி என்னும் கிராமத்தில் ஒரு வன்கொடுமை நடந்திருக்கிறதே அதுபற்றி யாருக்காவது தெரியுமா. செருப்புப் போட்டுக்கொண்டு நடந்ததற்காக காளியப்பன் என்கிற 24 வயது இளைஞன் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறான். திண்ணியத்தில் நடந்தது போலவே ஓங்கரிக்கச் செய்யும் இன்னொரு பத்திரிகைச்செய்தி இது. மனித சமூகம் நினைத்துப்பார்க்க முடியாத,இல்லை இல்லை விலங்குகள் கூட்டத்தில் கூட காணமுடியாத நடைமுறை இது. சிறைச்சாலை என்கிற தமிழ்படத்தில் டினுஆனந்தின் வாயில் ஊற்றப்படுகிறபோது கேட்ட நாற்றம் கலந்த  அலறலும், ஓலமும்  இன்னும்  இந்தியக்  கிராமங்களில் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அதைவிடக்கொடூரம் இப்படிப்பட்ட புகார்களை எல்லாம் பத்துப் பதினைந்து நாட்கள் கழித்தேதான் வெளியுலகம் அறிந்துகொள்ள நேர்கிறது. அதையும் தாண்டிய அகோரம் காவல்துறையின் அனுகுமுறை. இதுபோன்ற வழக்கு களைச் சமாளிக்க அவர்கள் முன்கூட்டியே பாதிக்கப்பட்ட தலித்துகள் மீது ஒரு ஒப்பனைப்புகார் மனுவை தயாரித்து வைத்து விடுவதுதான். ஒருவேளை இதை காவல்துறைப் பயிற்சிகாலத்தில் ஒரு பாடத் திட்டமாகவே சேர்த்து விட்டார்களோ எனும் சந்தேகத்தை உருவாக்குகிறமாதிரி தேசம் முழுக்க ஒரே வகையான பாரபட்சம்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டிக்கு அருகில் உள்ள ஒரு ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு துணியை தேய்த்துக் கொடுக்கக் கூடாதென்று ஒரு வன்கொடுமை நடந்தது.அடிபட்டவர்கள் காவல் துறையில் சொல்லிவிடக் கூடதென்று ஊரைச்சுற்றி இரவுபகலாகக் காவல்.அதிலிருந்த தப்பிக்க சேலையை உடுத்திக்கொண்டு தப்பித்து வந்து சொன்ன பின்னும் மாவட்டக் காவல்துறை அசையவில்லை. பல போராட்டங்களுக்குப் பின்னால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விளைவு இப்போது பாதிக்கப்பட்ட மக்கள் ஊரைவிட்டு வெளியே.

இதுபோன்ற குற்றங்கள் ஒவ்வொரு பதினெட்டு நிமிடத்துக்கும் ஒன்று நடக்கிறது.ஒரு நாளைக்கு 27 வன்கொடுமை புகார்கள் பதிவு செய்யப்படுகிறது. ஒரு வருடத்திற்கு சுமார் 32000 குற்றங்கள் தன்னெழுச்சியாக நடக்கிறது. என தேசிய  மனித  உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள கிபி 2000 ஆண்டுப் புள்ளிவிபரம் நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது. இந்த வன்கொடுமையை அனுமதிக்கிற,அல்லது அதைப், பேசாப் பொருளாக விட்டுவிடுகிற,இதெல்லாம் சாதாரணம் என்று வாளாவிருக்கிற, தலித்தல்லாத ஒவ்வொரு இந்தியனுக்கும் மறைமுகத் தொடர்பிருக்கிறது என்று பல மனித உரிமை ஆர்வலர்கள் கருத்துச் சொல்லுகிறார்கள்.

ஆம், எனக்குக் கீழே யாரும் அடிமையில்லை என்பதை உறுதி செய்த பின்னர் மட்டுமே நாம் எழுப்பும் விடுதலைக்குரலுக்கு தார்மீக வலு  இருக்கும். அர்த்தமும் இருக்கும்.எனவே எனது வீட்டில் சலவை செய்யும் மனிதரை,
எனது தெருவை சுத்தம்செய்யும் மக்களை,என்கிராமத்தில் ஒண்டித்திரியும் சகோதரர்களை அவமானப்படுத்தமாட்டேன், அதை அனுமதிக்கவும் மாட்டேன் என்று ஒவ்வொரு படித்தவரும்  நினைக்காதவரை எல்லாம் நீடிக்கும். எப்போதாவது வெடிக்கும்.

17.1.10

தோழர் ஜோதிபாசுவுக்கு செவ்வணக்கம்.


வெஸ்ட் பெங்காலில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியப் பிடிச்சிரிச்சே அதப்பத்தி என்ன நெனக்கிற என்று கமலஹாசன் சரத்பாபுவிடம் கேட்பான்.அந்தக் காட்சிக்கு, அதன் சூழலுக்கு சம்பந்தமில்லாமல் வந்துவிழும் கேள்விக்குப்பதிலேது இல்லாமல் சரத்பாபு முழிப்பதாக ஒரு காட்சிவரும் 'நிழல் நிஜமாகிறது' படத்தில். அந்த எழுபதுகளின் இறுதியில் இந்தக் கேள்வி ஒட்டுமொத்த தமிழகத்தைப் பார்த்துக் கேட்டதாகவே படுகிறது. ஒரு நூற்றாண்டைக் கடந்த பின்னும் இந்தக் கேள்வி இன்னும் முழு இந்தியாவிலும் ஒலிக்க வழியில்லாமலே கழிந்திருக்கிறது.

ஆனால் இதே இந்தியாவில், மாபெரும் ஜனநாயக தேசத்தில் அதிக வருடங்கள், அதாவது 23 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்திருப்பது சவால் மிகுந்த சாதனை. அதை சாதித்துக் காட்டியது ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்பது உண்மையில் முரண்பாடானதும்  வியப்பானதுமான சேதி. அவர் தோழர் ஜோதிபாசு. பிரித்தானியாவுக்கு சட்டம் படிக்கப்போய் பொதுவுடமை படித்துத் திரும்பிய அவர், வந்ததும் ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானார்.1964 ல் கட்சி உடைந்தபோது புதிய cpi(m) உருவாகாக்காரணமாக இருந்த ஒன்பதுபேரில் அவர் ஒருவர்.அறுபதுகளில் முதன்முதலாக சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட அவர் 1996 வரை ஒருமுறை கூட தோற்கவில்லை. மக்கள் அவர்மேல் வைத்திருந்த நம்பிக்கை அப்படி.அந்த நம்பிக்கைக்கு நூறு சதவீதம் உண்மையாக இருந்தார்.

இன்னமும் இந்த தேசம் எட்டமுடியாத பலசீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியவர்.நிலச்சீர்திருத்த சட்டத்தின் மூலம் அங்கிருக்கிற அணைத்து மக்களையும் நிலவுடமையாளர்களாக மாற்றியது தோழர் ஜோதிபாசுவின் அரசு.
நிலவுடமைதான் அடித்தட்டுமக்களின் சுயமரியாதைக்கும்,பொருளாதாரப் பிடிமானத்துக்கும் ஆதாரம் என்பதை
நிஜமாக்கியது அந்த அரசு.கையால் மலம் அள்ளுகிற கேவலத்தை சுத்தமாக ஒழித்த அரசு.இன்னும் புதுக்கருக்கு மாறாமல் கூட்டுறவு செயல்பாடுகளை வைத்திருக்கும் மாநிலம்.நவகாளிக்குப் பின் இன்னமும் மதக்கலவரம் துளிர்க்காத மாநிலம். இப்படியே சொல்லிக் கொண்டுபோக பட்டியல் இருக்கிறது போலவே விமர்சனமும் இருக்கும்.

உலகத்திலுள்ள அணைத்து மத போதனைகளும்,இதிகாசங்களும்,நீதிக்கதைகளும் ஒரே புள்ளியில் இருந்து ஆரம்பிக்கும் அல்லது சந்திக்கும்.அணைத்து உயிர்களையும் சமமாகப்பாவிக்க ஆசைப்படுகிற மனிதாபிமானம் தான் அது. அதைச்செயல்படுத்த ஆசைப்படுகிற பொதுவுடமை.கடவுள்,கதாநாயகன் போன்ற பிம்பங்களின் கருத்துக்களை யதார்த்தமாக்க நினைக்கிற தத்துவம் அது. வாலிப காலத்தில் காதலோடு சேர்ந்து ரத்தத்தில் ரோந்து வரும் பொதுவுடமைக்கு மயங்காதோர் இல்லை.

அப்படியான மயக்கத்திற்கு இந்தியப் பெருவெளியில் கிடைத்த சில ஐகான்களில் முக்கியமானவர் தோழர் ஜோதி பாசு.நிறைய்ய நினைவுகளை விட்டுவிட்டு இன்று அவர் மறைகிறார்.செவ்வணக்கம் சொல்லுவோம் தோழருக்கு.

படைப்பிலக்கியத்துக்குள் நுழையமுடியாத வாரிசுச் சாக்கடை.

இந்த மூன்று நாள் விடுமுறை எக்கச்சக்கமான குளிரையும், சோம்பலையும்,நண்பர்களோடு அரட்டையையும் கொஞ்சம், தொலைக்காட்சியையும்,கொடுத்தது.சாத்தூர் மண்ணிலிருந்து கிளம்பிய ஒரு கிராமத்து மனிதன் லட்சுமணப்பெருமாள் நையாண்டிப் பேச்சாளரானார் அவரோடு கூட எங்கள் அன்புத்தம்பி பூபாளம் பிரகதீஸ்வரன்,கவிஞர் தனிக்கொடி ஆகியோரும் பங்கேற்ற பட்டிமன்றம் மெகா தொலைக்காட்சியில் காணநேர்ந்தது.அதுதவிர எல்லாம் சினிமா மயம் தான் திருப்புகிற அலைவரிசையெல்லாம் புதிய படங்களின் நாயகர்கள்.கூடவே தமிழ்த்தெரியாத குல்பி நடிகைகள் உட்கார்ந்து கொண்டு கும்மரிச்சம் போட்டார்கள்.

அமேசிங்,சூப்பர்ப்,ஆக்சுவலி,ஹாரிபிள்,டெரிபிள் என்னும் வர்த்தைகள் அடைத்துவைக்கப்பட்ட பேட்டிகளில் அவர்களின் அறிவு நான்குக்குமேல் ஒருபோதும் வெளிப்பட்டதில்லை. ஒரு கலைஞனுக்குரிய அரிச்சுவடி ஞானம் கூட இல்லாத அவர்கள். மெனக்கெட்டு முடியை முகத்தில் படரவிட்டு பின்னர் அதை ஒதுக்கிவிடும் தொழில்நுட்பம் தவிர ஒரு விரக்கடை கூட எதையும் தேடக் கதியற்றவர்கள். மித மிஞ்சிய ஆணவத்தோடு இந்த பார்வை யாளர்களை வக்கணம் காட்டுவதாகவே நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

கலைக்கு மொழி குறுக்கே நிற்கக் கூடாது.சரி, உச்சரிப்புக்குமா இருக்கக்கூடாது.கண்ணதாசன் எழுதி இளையராஜாவின் இசையில் 'பூவிழி வாசலில் யாரடி வந்தது கிளியே,கிளியே' எனும் பாடலை kj.ஏசுதாஸ் பாடினார்.அவர் ஒரு மலையாளி என்பது உலகம் அறிந்தது ஆனாலும் உதித் நாராயணன் கொலை செய்த அளவு அவர் தமிழைக் கொலை செய்யவில்லை என்றே படுகிறது.ஆனாலும் கூட கவிஞர் கண்ணதாசன், 'நான் கிளியே கிளியே என்று எழுதிருக்கேன் ஒருத்தன் கிழியக்கிழியன்னு பாட்றான்' என்று நக்கலாக விமர்சனம் செய்தார். சன் குழுமம் தயாரித்து,சன் குழுமத்தின் கோலங்கள் மெகாத்தொடர் நாயகி தேவயானியின் தம்பி நகுல் நடித்து வெளிவந்த படம் மாசிலாமணி. அதில் சூப்பரு சூப்பரு என்றொரு பாடல் வரும் அதில் 'ஏனோ நீ தள்ளுரியே' எனும் வார்த்தையை மிகத்தெளிவான ஒரு கெட்ட வார்த்தையாக மாற்றி ஒலிக்க விடுகிறார்கள்.

கிட்டத்தட்ட எல்லாப் பாடல்களும் வார்த்தைகள் புரியாத கண்கட்டி வித்தையாகிப் போனதால் இதை யாரும் அவதானிப்பதில்லை. அப்படியே அவதானித்தாலும்  என்ன செய்துவிட முடியும். நடிகர்களின் வாரிசுகள் மட்டுமே நடிகராகமுடியும், இசையமைப்பாளர்களின் வாரிசுகளே இசையமைப்பாளர்களாக மாறமுடியும்,பாடகர்களின் வாரிசுகள் எல்லோரும் பாடகர்களாகலாம், என்கிற பலமான சுவர்கள் சினிமாவைச் சுற்றி எழும்பி நிற்கிறது. இதை நீங்கள் விழாக்காலச் சிறப்புப் பேட்டிகளில் பட்டவர்த்தனமாக உணரலாம்.அங்கு சாமானியர்கள் நுழைவது சுலபமல்ல. பார்வையாளர் அட்டை மட்டுமே வழங்கப்பட்ட நமக்கு விமர்சனம் பண்ணுவதற்குக் கூடச் சரியான ஊடகங்கள் இல்லை அதுவும் கூட மொனோபலியில் சிக்கிப் பலிகிடா ஆகிப்போனது.

எள்முனையளவுகூட பொதுத்தன்மையை அனுமதிக்காத தனியார் தொலைக்காட்சிகள்.தத்தமது கட்சிகளின் பிரச்சார ஊதுகுழலாக தொடர்வது,அது இல்லாத நேரங்களை சினிமாவோடும் விளம்பரத்தோடும் கழிப்பதென்னும் தீவிர ஊடக சித்தாந்தம் நிலைப்படுத்தப் பட்டு விட்டது.அறிவிக்கப்படாத தடா, பொடா, போன்ற நெருக்கடிகளுக்குள் இருப்பதுபோல நாம் தனித்தனியே அங்கலாய்ப்பதை கொஞ்சம் உயர்த்தி இப்போது  வலையெழுத்து உருவாகியிருக்கிறது. ஒரு வாசல் அடைக்கப்பட்டால்  இன்னொரு  வாசல் திறக்கும்.

திறந்திருக்கும் வாசல் வழியே ஒரு கருத்தை நம்பிக்கையோடு முன்வைக்கலாம்.ஒரு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்தச் சினிமாவில் வாரிசுகள் வந்தது குறைந்த உழைப்புக்கு கோடானகோடி லாபம் கிடைக்கும் நடிப்பு,இசை,பாடகர் போன்ற துறைகளுக்கு மட்டும் தான்.கவிஞர், கதாசிரியர், ஒளிப்பதிவாளர், இயக்குனர் போன்றவற்றிற்குள் இந்த வாரிசுச் சாக்கடை இந்த நிமிடம் வரை நுழையமுடியவில்லை என்பது கவனம் பெறக்கூடிய செய்தி.அதற்குக் காரணம் ஒன்றே ஒன்றாக மட்டும் இருக்கமுடியும். பின்னால் சொன்னவையாவும் படைப்பிலக்கியங்கள். கட்டாடம் சரக்கு இருக்கணும். அது இல்லாமல் ஒப்பேத்த முடியாது.

தக்கது நிற்கும் தகாதது அழியும்.

15.1.10

கவிச்ச வாடை

கோழிக்கடையில்
நெறிபொழிகிறது கூட்டம்.
ஆட்டைக்கண்டு
பயந்தவர்கள் காத்திருக்கிறார்கள்
நீள்வரிசையில்.

பயப்படாமல் காத்திருக்கிறது
வெட்டுப்படாத கோழி.
சட்டைமுழுக்க ரத்தம் மெழுக
வெட்டுப்படுகிறது வெள்ளைக்கோழி.

கல்லாப்பெட்டியைத் திமிருகிறது
காந்தி நோட்டின் வரத்து.
நெடுநேரம் காத்திருந்த
பெண்ணொருத்தி கேட்கிறாள்
'ரெண்டு கோழிக்கால் குடுங்க சாமி'
'எழவு இண்ணைக்கும் ஓசியா'
வீசி எறிகிறான் அகந்தையை.

குப்பைக்கு போகவேண்டியது
குழம்பில் கொதிக்கிறது.
அவள் வீட்டிலும்
கறி மணக்கும் இன்று.

உழைப்பை,வறுமையைத் தோளில் சுமக்கும் குழந்தை அட்லஸ்.

அவன் மூன்றடி உயரம்தான் இருப்பான்.வயது மிஞ்சி,மிஞ்சிப்போனால் பத்து முதல் பனிரண்டுக்குள் இருக்கலாம். அவனது வயதுக்கும் உயரத்துக்கும் நிகரான காளங்கன்று. அவர்கள் இருவரும் சேர்ந்து இழுத்துப்போவதற்கு ஒரு கையடக்க மாட்டுவண்டி. அதில் கொஞ்சமாகத்தான் ஆற்று மணல். அதைப்பாக்கிற எனக்கு உலக கணம் கனத்தது. அந்த பரபரப்பான காலை எட்டரை  மணிக்கு எதிரே  வருகிற  இருசக்கர  வகனங்களில், சைக்கிளில், பேருந்துப்படிகளில் சீருடை கோர்க்கப்பட்ட ஸ்டாண்டுகளாக அவனையொத்த குழந்தைகள் கடந்துபோவதை சட்டைசெய்யாமல் கடந்து போகிறான்.வண்ண வண்ண நான்கு சக்கர வாகனக்கள், சினிமா ப்ளக்ஸ் பேனர்கள் எதுவுமே அவனைச் சலனப்படுத்த முடியாமல் தோற்றுப்போகிறது. கையிலிருக்கு சாட்டைக் கம்பை சுழற்ற மறந்து எதிரே நீண்டு கிடக்கும் கருப்பான சாலையை வெறித்தபடி பயணிக்கிறான்.

கருப்பசாமி. ஒரு குழந்தைச் சித்தன்.உழைப்பை அதன் வியர்வையை, வறுமையை அதன் கோரவலியை, ஏழைக்  குடும்பத்தை  அது  அழுத்தும்  பாரத்தை  விரும்பி  முதுகில் ஏற்றிக்கொண்ட கோடன கோடி வறிய பிஞ்சுக் கரிகாலர்களின் பிரதிநிதி. தம்பி ப்ரியா கார்த்தி இரண்டு முறை அவனைப் பற்றிச் சொன்னபோது உள் வாங்கிக்கொண்ட அதிர்வு மிகக் கொடூரமான நிஜமாகி என் கண்முன்னே கடந்துபோகிறது. சிந்துபாத்தின் லைலா, சுண்டெலியண்ணன்,கதைகளில் வந்த குள்ள உருவங்கள் கொண்டுவந்து தந்த சிரிப்பை துடைத்து எரிந்து கண்ணீரைக் கொட்டி விட்டுப் போகிற குழந்தைத் தொழிலாளி அவன். நிகழ் தொலைக்காட்சி பாடல்போட்டிகளில் புருவத்தை உயரவைத்த சிறுவர்கள் குளீரூட்டப்பட்ட ஹைகிளாஸ் குழந்தைத் தொழிலாளிகள் என்றால் இவன் அடித்தட்டுக்குப் பிரதிநிதி.

அப்பா ஒரு மண்பானை செய்யும் தொழிலாளியாக இருந்திருக்கலாம்.அது அழிந்து போனபிறகு அவர் தன்னை புரோட்டாக் கடைகளுக்கு அடுப்பு வடிவமைத்து செய்துதரும் மலிவு விலை எஞ்சீனியர் ஆக தகவமைத்துக் கொண்டார்.அந்த வேலை தவிர வேறு ஏதும் தெரியாத அவருக்கு அப்படியே ஏதும் கிடைத்தாலும் அந்தக் குடும்பத்தின் வயிறு நிறைக்கப் போதாது. வயிறு அவர்களுக்கு கடலை விட ஆழமானது, அகலமானது, நீளமானது. விளையாட்டு வண்டி மாடுகள் வைத்துக் கொண்டு தன் சகாக்களோடு அற்புத உலகத்தில் பயணிக்க வேண்டிய கருப்பசாமி அதைப் பறிகொடுத்துவிட்டு நிஜ மாட்டுவண்டியோடும் வெறித்த பார்வையோடும் பயணிக்கும் குட்டி உழைப்பாளி ஆனான். ஒரு அக்கா ரெண்டு தம்பிகளுக்கு இடையில் பிறந்த கருப்பசாமி வண்டிமாடு பத்துகிற நுட்பக்காரனாக மாறி மூன்று வருடமாகிறதாம். கொடிது கொடிது இளமையில் வறுமை.

வைப்பாற்றுக் கரையில் முளைத்துக் கிடக்கும் பல உழைப்பாளிகளின் ஒருபத்திக் குடிசைகளின் வரிசையில் கருப்பசாமிக்கும் ஒரு கூடு இருக்கிறது. அதுவும் கூடச் சின்ன சைசில் இருந்தது இன்னும் கூடுதல் விசாரத்தை உண்டாக்கியது. அந்த வீட்டினுள்ளே கூட இப்போது ஒரு வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி இருக்கிறது. அதன் எதிரே உட்கார்ந்து கொண்டு நடிகர் விஜய் தன் மகனோடு சேர்ந்து நடனமாடுகிற நா அடிச்சா தாங்க மாட்டே என்னும் சினிமாப்பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள் அவனது மூத்த சகோதரி.மூன்றாவது தலைமுறை தயாரான நிம்மதியில் தமிழ்ச்சினிமாவும் சந்திரசேகரன் குடும்பமும் நிம்மதியாக இருக்கிறது. கருப்பசாமியின் குடும்பம் தலைமுறை தலைமுறைக்கும் மீளமுடியாத படுகுழிக்குள் இருந்து அதைப்பார்த்து ஆராவாரிக்கிறது. இந்த அரசும் அதன் கடந்த கால மற்றும் எதிர்காலத் தலைவர்களை உற்பத்தி செய்யும் சினிமாவும் சேர்ந்து வலிதெரியாமல்  சமூகத்தின் மேல் அடித்த ஊமை அடி இது.

அவளிடம் கருப்பசாமி இருக்கும் இடம் கேட்டுத் தேடி வெங்கடாசலபுரத்துக்குப் போனோம். நேற்று தமிழர் திருநாளில்லையா அதனால் அந்த ஊரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் விளையாட்டுப் போட்டிகள் நடத்திக் கொண்டிருந்தது.  இந்த சமூகம் தொலைத்த விலையாட்டுக்களை மீட்டெடுக்கப் புறப்பட்டு அந்த அமைப்பும் கூட இசை நாற்காலி,கரண்டி எலுமிச்சை,நூல் கோர்த்தல் போன்ற ஏமாற்று வேலைகளை கொண்டாடிக் கொண்டிருந்தது.என்ன செய்ய இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரையாம்.ஊரின் ஓரத்தில் ஒரு புரோட்டாக்கடை அதன் உரிமையாளர் ஒரு முன்னாள் விவசாயி.அவரது வாரிசும் சிப்பந்தியுமான ஒரே மகன். ஒட்டுமொத்த குடும்ப உழைப்பாலே. டீக்கடையாக இருந்ததை புரோட்டாக்கடையாக உயர்த்துகிறார்கள்.

நான் தம்பி கார்த்தி தம்பி பாலு மூவரும் போனோதை அங்கிருந்த சூழல் கவனிக்கிறது அந்தக்கருப்பசாமி மண்ணை தண்ணீர் ஊற்றிக்குழைத்துக் கொண்டிருக்கிறான்.எதிரே அந்தச் சின்ன மாட்டுவண்டி. அதனருகே அந்தப் பிஞ்சு மாடு.ஒரு டீ சொல்லிவிட்டுக்காத்திருந்த அரை மனிநேரமும் அவனது முதுகில் வேர்வை  வடிய  வடிய ஈடுபாட்டோடு  மண்வெட்டியச்  சுழற்றுகிறான். வியர்வையை மறைக்கிறது கண்ணில் கோர்த்த நீர். அது அவனுக்கு எந்த உதவியும் செய்யப்போவதில்லை, அதனால் அது இயலாமையின் வெளிப்பாடாகிறது. டீக்கடைப்பெஞ்சில் ஆளும் கட்சிக்கரை வேட்டி உடுத்திய ரெண்டுபேர் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள அவனை அதட்டுகிறார்கள். 'டே அந்த கண்ணுக்குட்டி வெயில்ல எளைக்கில்ல பத்திக் கொண்டு போயி எனல்ல கட்றா'.மூன்று முறை திருப்பி,திருப்பிச் சொன்ன பின்னும் அவன் சட்டை செய்யவில்லை. பதினெட்டுப் பட்டிக்கும் நாட்டாமை வகிக்கும் தோரணையை அவன்மேல் வடியும் வேர்வையை சுண்டுவிரலால் உதறும் பாவனையில் புறந்தள்ளுகிறான். அவன் எதற்குப் பயப்படவேண்டும். மடியில் கணமில்லாதவன் வழியெங்கும் பயமில்லை. அவன் யாராய் மாறுவான்.

நண்பர்களே.குழந்தைகள் இந்த உலகத்தின் இளைய குறுத்து.அவர்களின் மனதும் உடலும் வெளிக்காற்றில் அலைய விடவேண்டும்.கல்லெத்தி முள்குத்தி நண்பனின் தோளில் கைபோட்டபடி உலகை தரிசிக்க அனுமதி வழங்கவேண்டும். அப்படி அணுமதி மறுக்கப்படுகிற குழந்தைகள் ஒருதலைப் பட்சமானவர்களாக மாற அநேக சாத்தியம் இருக்கிறது. பெரும்பணம் செலவழித்து தொலைக்காட்சிகளில் ஏற்றுவதன் மூலமும்,கஞ்சிக்கில்லாமல் தெருவில் அலையவிட்டு கொடுமைப்படுத்துவதின் மூலமும் சமூகம் இரண்டு வகையான சந்ததிகளை எதிரெதிர் நிறுத்துகிறது.நண்பர்களை,விளையாட்டை இழந்தவர்கள் என்னவாக மாறுவார்கள்.

இன்று மாட்டுப்பொங்கல்.
 
மனிதர்கள்,உழைப்பாளிகள்,விவசாயக்கூலிகள்,உதாசினப்படுத்தப்பட்ட

இந்தச்சூழலில்

அந்தச் சின்ன மாட்டையும்,அந்தச்சின்ன வாமனனையும் பார்க்க போகிறோம்.கரிசல் ஆவணப் படக்குழுமத்தோடு.

14.1.10

மரியாதை குறையாத இடைவெளி.

நெஞ்சு விடைத்துக் கொண்டு அவர் பேசுகிற வசனங்களை மனப்பாடம் செய்வது அல்வா சாப்பிடுகிற ஆனந்தம்.
அதையே  ஆசிரியர் மாதாந்திரக் கூட்டத்தில் பேசிக்காண்பிப்பது பெரிய சாகசம். மஞ்சுளா,வாணிஸ்ரீ யோடு அவர் இழையும்நேரம் அடிவயிறு முழுக்கக் குறுகுறுக்கும்.டாக்டர் சிவா படத்தை ஒரே நாளில் மூன்று காட்சிகள் பார்த்த உண்மத்தம் நிறைந்த நாட்கள் பள்ளிப்பிராய நாட்கள்.சிவாஜியா குலதெய்வமா என்றால்  குலதெய்வம் தோற்றுப்போகும் கிறுக்கு குடிகொண்டிருந்த நாட்கள்.எம்ஜியார் படங்கள் பார்ப்பது தேசத்துரோகக் குற்றம் என்பது எங்கள் குடும்பத்தின் கட்டுப்பாடு. வேலைக்கு வந்தபிறகும் கூட எனக்கு அந்த வியாதி தொடர்ந்தது.கருப்பான துணிகள் கருப்புக்கோடு,ஊடு இழை இருக்கிற துணிகள் எடுத்தால் கூட கொன்னே போட்டுவிடுவார் எங்க தாத்தா.

ஒரு கிராமம் முழுக்க ஒரே கட்சியின் அடிமைகளாக இருப்பதும் அந்தக்கட்சி தொடர்புடையவர்களே எல்லாவற்றிலும் விருப்பத்தேர்வகளாக மாறுவதும் இந்திய மரபு. அதில் சினிமாவுக்கு மிகப்பெரிய இடத்தை உருவாக்கிக் கொடுத்தது தமிழ் அரசியல். சினிமா சினிமாக்கலைஞர்கள் மோசம் என்பது தவறு.அதே நேரம் எஸ்பி சவுத்ரியாக நடித்த சிவாஜியை தமிழகத்தின் டிஜிபியாக்கவேண்டுமென்று ஆசைப்படுவது அபத்தம். அதே போலத்தான் ஒரு முறை மாரியம்மன் வேசத்தில் நடித்த நடிகை  தனக்கு அம்மனின் அருள் வந்துவிட்டது அதனால் தான் கடுமையான விரதம் இருப்பதாக பேட்டிகொடுத்தார். அது தெரிய நிறைய்ய காலங்கள் ஆனது எனக்கு. தமிழகக்கிராமங்கள் அப்படியே தான் இன்னும் கிடக்கிறது. பிம்பத்தும் நிஜத்துக்குமான வித்தியாசம் தெரியாமல்.

அப்படியொரு நாளில் சிவாஜி கணேசன் தான் ஆரம்பித்த ஒரு தனிக்கட்சியின் பிரச்சாரக் கூட்டத்திற்காக சாத்தூர் வந்திருந்தார். அந்தக்காலத்தில் அரசியலில் ஜெயலலிதாவும்,அரசியலுக்கும் சினிமாவுக்கும் இடையில் ஒரு பெரிய மதில்சுவரில் ரஜினிகாந்தும் இருந்ததால் சிவாஜி யாரையும் ஈர்க்கவில்லை.கொஞ்சம் கூட்டம் இருந்தது. ரெண்டு மூணு போலீஸ்காரர்கள் இருந்தார்கள்.சாத்தூர் எட்வர்டு மேனிலைப் பள்ளியின் முன்னாள் நிற்கும் பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலைபோட வந்தார். அந்த தேசிய நெடுஞ்சாலைப் போக்குவரத்துக்கு அவரது வருகை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.மாலை போட ஆளுயர ஏணியில் ஏறிக்கடக்க பத்து நிமிடம் எடுத்துக்கொண்டாராம். முதுமை. அந்தவழியாக வந்த எனக்கு அந்த இடத்தில் சில நிமிடங்கள் கூட இருக்கப் பிடிக்கவில்லை.

சைக்கிளை மிதித்துக் கிளம்பினேன் வீட்டுக்கு வந்தபோது வீரபாண்டியக்கட்டபொம்மன் திரைப்படம் விசிடியில் ஓடிக்கொண்டிருந்தது. உட்கார்ந்து சாவகாசமாகப் பார்த்தேன். வீரவானிலே செந்நிறக்குழம்பு சுட்டெரிக்கும் செஞ்சுடர் அது.அதுதான் நீ என் நெற்றியில் இட்டிருக்கும் வட்டவடிவ ரத்தம் நிறைப்பொட்டு.அந்த வெற்றிவடு
ஒன்றே போதும் பகைவர்கள் மீது வேலை ஓட்ட வாளைப் பாய்ச்ச. சிவாஜி கர்ஜித்துக் கொண்டிருந்தார்.ஒரு மகாக்கலைஞனின் ஆகிருதியோடு. 

12.1.10

வளர்ந்துவரும் அம்மண அரசியல் எதிர்கொள்ளும் எளிமையான ஆயுதம்.

அவரது முதிய தாயார் தனிக்கட்டையாக விருதுநகரில் குடியிருந்தார். அந்திமக்காலத்தில் கிணற்றிலிருந்து  தண்ணீர் கொண்டு  வர  எசக்கில்லாத உடம்பு. அந்தக்காலத்தில்தான் ஊர் ஊராக, அணைக்கட்டுகள், நீத்தேக்கத்தொட்டிகள், குடிதண்ணீர்  குழாய்கள்  என்று அமல்படுத்திக்கொண்டிருந்தார் அந்த முதலமைச்சர். ஒரு முறை விருதுநகர் வந்த அவர் தாயைப் பார்க்கப் போனார்.அந்த முதிய தாயருக்கு முதலமைச்சரிடம்  சொல்ல  ஒரு  கோரிக்கை  இருந்தது.
தனது  வீட்டுக்கு  தனியாக குடிநீர்க் குழாய் இணைப்பு வேண்டும் என்று. கர்ண கொடூரமாய்  மறுத்து விட்டு அருகிலுள்ள வீட்டுக்காரரிடம் சொல்லி அம்மாவுக்கு ஒத்தாசை செய்யச் சொன்னாராம். பொழைக்கத் தெரியாத  கருப்புக் காந்தி காமராஜர்.அவர் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்.

கக்கன் தனது அந்திமக் காலத்தில் தர்மாஸ்பத்திரியின் தரையில் கோரப்பாய் விரித்து சாகக் கிடந்தாராம்.பதவியிலிருந்து இறங்கியதும் நாலுவேட்டி,நாலுசட்டை,அன்றாயர் கொஞ்சம் புத்தகங்கள் அடங்கிய தனது ஒரே சொத்தான ட்ரெங்குப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு கட்சி அலுவலகத்துப் போனாரம் திரிபுராவின் முன்னாள் முதலமைச்சர் நிரூபன் சக்கரவர்த்தி. அறிஞர் அண்ணா கூட மூக்குப்பொடியும் அதன் காரத்துக்குக் கொஞ்சமும் குறைவில்லாத பேச்சும் இலக்கியமும் தனது சொத்தாக விட்டுவிட்டுப்போனார்.

இந்தக் கதையெல்லாம் எதோ புராணகாலத்து விராட பர்வக்கதைகளோ நாடோ டிப்பாட்டி கதைகளோ இல்லை.
சுதந்திரத்துக்கு பிந்தைய இந்தியாவின் சட்டமன்றம் சந்தித்த மகோன்னத மனிதர்களின் வரலாறு.இதை நாம் இந்த்கால சந்ததிகளுக்கு சொல்லியிருக்கிறோமா, சொல்ல வழியிருக்கிறதா,சொன்னால் செவிமடுப்பார்களா என்னும் கேள்விகள் பெரும் மலைப்பை கொண்டு வந்து முன்னிறுத்துகிறது.

அந்த கவுன்சிலர் மகளின் கல்யாணத்துக்கு நகர் முழுக்க அலங்கார வலைவுகள். அவையாவும் நாகர்கோவிலிலிருந்து தருவிக்கப்பட்டவை. ஒவ்வொரு வளைவும் ஒரு அரசாங்க ஊழியனின் ஒருமாத சம்பளத்தைக்காவு வாங்கிய தொகை.பல்லாயிரக்கணக்கான அழைப்பிதழ்கள் ஒவ்வொரு அழைப்பிதழின் விலையும் ஒரு தனியார் பள்ளி ஆசிரியையின் தினக்கூலி.அல்லது ஒரு பெண் விவசாயக் கூலிக்காரிக்கு ஒரு நாள் அடுப்பெறியும் சன்மானம். குறைந்தது ஒரு கோடி செலவானது ஜாம் ஜாம் என்ற கல்யாணத்தில்.அவரது அகவுன்சிலர் பதவிக்கோ மாதச் சம்பளம் கிடையாது. 

இன்னும் கூட டெல்லி பாராளுமன்ற கட்டிடத்தில் விற்கும் சாப்பாட்டின் விலை ஒண்ணேகால் ரூபாய்.அதேபோல அல்லது கொஞ்சம் முன்னப்பின்னதான் தமிழக அரசின் சட்டமன்ற கேண்டீனும். ஆனால் ஒரு ஐந்தாண்டில் இரண்டு முறை கூட அவர்களுக்குச் சம்பளம் உயர்த்தப்படுகிறது. எனது சிற்றறிவுக்கு எட்டிய வரையில் அந்தச்சமபளத்தை வைத்து எந்த அரசியல்வாதியும் அரிசி பொங்கி வடித்ததில்லை. ஒரு நாள் விடுதிவாடகையாக ஒரு லட்ச ரூபாய் செலவழித்த வரலாறு ஒரு நான்குமாதத்துக்கு முன்னால்தானே ?.

அவர்களின் வாழ்வு முறையும் செலவும், அவர்களின் சொகுசும் பங்களாக்களும்,காரும் ஒண்ணுக்கிருக்கப்போனால் கூட ஆளுயர பேனர் வைப்பதுமான படோ டோ பமும் சாதாரண ஜனங்களை அண்ணாந்து பார்க்கவைக்கிறது.
அப்படிப்பட்டவர்கள் மட்டும் தான் இனி ஆளமுடியும் என்பதை இடைத் தேர்தல்களில் காந்தி நோட்டின் மூலம் வலுவாகச் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தச்சூழலில் நேற்றைய சட்டமன்ற விவாதத்தில்  உறுப்பினர்களுக்கு சம்பளம் உயர்த்தும் தீர்மானத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் எம் எல் ஏ க்கள் விவாதம் நடத்தியிருக்கிறார்கள்.கொஞ்சம் அதீதமாகத்தோன்றும்,அல்லது நகைத்துவிட்டுக்கடந்து போகும் செயலல்ல இது.நாடெங்கும் அம்மணம் தலைவிரித்தாடுகையில் வேட்டிகளை கையிலெடுத்துக்கொண்டு  ஒரு சிலர் களம் இறங்குவது நகைப்பாகவே தோன்றலாம்.சர்வவல்லமை படைத்த,சர்வ ஆயுதந்தரித்த மாமிச மலையான கோலியாத்தை எதிர்கொண்டவன் சின்னஞ்சிறு தாவீது. அவன் கையிலிருந்தது குருவியடிக்கும் வெறும் கவனும் கல்லும்.

11.1.10

வெயில் மனிதர்களும் வெள்ளரியின் ஈரமும்.


நானும் அவரும் பனிமுடிந்து உப்பத்தூர் கிளையிலிருந்து இரு சக்கர வாகனத்தில் காட்டுவழியே வந்தோம்.அந்த அந்தி மஞ்சள் வெயிலில் கரிசக்காடெங்கும், கம்புசோளம்,சூரியகாந்தி,கொண்டக் கடலை,மல்லி,உளுந்துப் பயிர்கள் மினுங்கிக் கொண்டிருந்தன.கருத்த மண்ணில் தூவிவிட்ட பச்சை வண்ணம் அழகை கூட்டியது. அவருக்கு
சாத்தூர் தானென்றாலும் அரிசி முளைக்கிற மரம் எது எனக்கேட்கும் சுகவாசி ரகம்.ஓவ்வொரு செடியாக அவருக்கு அறிமுகப்படுத்திக்கொண்டே வந்தேன்.ஒருசில காடுகளில் படர்ந்துகிடந்த அந்தக் கொடியைப்பார்த்து சுரைக்கொடியா என்றுகேட்டார்.இல்லை வெள்ளரிக் கொடியென்று சொன்னதும் ஆர்வம் அடங்காமல் வண்டியை நிறுத்தசொன்னார். நிறுத்தினேன். வெள்ளரிக்காய் பிடுங்கலாமா என்றுகேட்டார் .தோட்டக்காரர்களைப் பற்றிய பயம் நெருடியது,வந்தாலும் சொல்லிக்கொள்ளலாம் எனும் தைரியத்தில் நிறுத்தினேன்.

வெள்ளரி ஏழைகளின் திண்பண்டம்.ஏழைகள் விளைவிக்கும் பண்டம்.நுங்கு போலவே வெயில்காலத்து ஆசுவாசம். கரிசல்காடுகளில் அதுபாட்டுக்கு முளைத்துவரும். பிஞ்சு காய் பழம் எல்லாமே திண்ணத் தகுந்தது.பாட்டி கதைகளில் அண்ணன் வீட்டுக்குப்போய் ஒரு வெள்ளரிவிதையை நக இடுக்குக்குள் மறைத்துக்கொண்டு வருவாள்.அதுவே பின்னாளில் மிகப்பெரிய தொப்பாகுமாம். வாலுபொயி கத்தி வந்தது டுண்டூங் டூங் டூக்கு என்கிற நரிக்கதையும், ஊரான் ஊரன் தோட்டத்துல ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்கா காசுக்கு ரெண்டு விக்கசொல்லி காகிதம் போட்டான் வெள்ளக்காரன் என்று ஏகாதிபாத்தியத்தைக் கேலி செய்யும் நாட்டுப்புறப் பாடலும்.இன்னும் சினிமாப்படல்களிலும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது வெள்ளரி. பாதிகடித்து தூக்கி எறிந்த வெள்ளரிக்காயைப் பார்க்கும் போதெல்லாம் என்னை அய்யா கு.அழகிரிசாமியின் 'திரிபுரம்' சிறுகதை வந்து அழுத்தும்.

சாத்தூரின் பெருமைகளில் ஒன்றான வெள்ளரிக்காய் பெரும்பாலும் பேருந்து நிலையத்தில்,புகைவண்டியில் மட்டுமே விற்பனை செய்யப்படும். வன்னிமடை,போத்திரெட்டிபட்டி,கொல்லபட்டி,இருக்கங்குடி போன்ற பகுதிக்காடுகளில் விளைந்து சாத்தூர் வரும். பேருந்து நிலைய மர நிழலில் கூடையில் அடுக்கி வைத்துக் குத்தவச்சு
விப்பாங்க.தொலைதூரப் பேருந்து வந்ததும் ஓடிப்போய் சின்னப் பிரம்புக் கூடையில் வைத்து ஜன்னல் வழியே
யாவரஞ்செய்வார்கள். அவர்களே அதை விளைவித்தவராகவும் இருப்பார்கள்.

அவர்களைப் பார்க்கிற போதெல்லாம் மாதவராஜின் சொற்சித்திரம் ஒன்று நினைவுக்கு வந்துபோகும். தனக்குத்தெரியாமல் கூடையில் இருந்து எடுத்தது யாரென்று கோபத்தோடு திரும்பி அது குழந்தையெனத் தெரிந்ததும் இன்னொரு வெள்ளரிப்பிஞ்சை அந்தப்பிஞ்சுக்கு கொடுத்து குளிரவைக்கும் சம்பவம்.அதன்கூடவே அந்த பாழாய்போன சாத்தூர் ஜாதிக் கலவரமும் அதன் உக்கிரமும் நினைவுக்கு வந்து பாடாய்ப்படுத்தும்.

போவோர் வருவோரையெல்லாம் அண்ணாச்சி வெள்ளரிக்கா வேணுமா வேணுமா என்று கூவிக்கூவி விற்றபோது. மனிதர்களையும் அவர்களின் கண்ணில் மிணுங்கும் ஆசையையும் மட்டுமே கண்டுபிடிக்கத் தெரிந்தது அவருக்கு.அவர்களது ஜாதி கண்டுபிடிக்கத் தெரியாமல் போனது விசித்திரமில்லை.அன்று மாலையில் ஒரு வெள்ளரிக் கூடையும் சிதறிக்கிடந்த வெள்ளரிப் பிஞ்சுகளும் அதில் படிந்திருந்த ரத்தக்கறையையும்  கலவரத்தின் சுவடுகளாக்கி விட்டு விட்டுப்போனார் அந்த மானாவாரி மனிதர்.

நெடுநேரம் தேடிப்பார்த்துக் கடைசியில் ஒரு காயைக்கண்டு பிடித்தோம். அதே நேரம் தோட்டக்காரரும் ஓடிவந்தார்.
'அட பேங்கு சார் நீங்களா,வேனுமின்னா சொல்லப்பிடாது, கொண்டாந்து தந்திருப்பேன்ல.காலைல தான் பிஞ்சு பரிச்சு சாத்தூருக்கு ஏத்துனோ' என்று சொல்லியபடியே அடுத்த பிஞ்சையில் போய் கை நிறைய்ய வெள்ளரிப் பிஞ்சுகளோடு வந்தார். இந்த மண்ணை மாதிரியே அதன் மனிதர்களிடமும் வற்றாத ஈரம் பேதமில்லாமல் அடிக் கோர்த்துக் கிடக்கிறது. பிறகு எங்கிருந்து வந்தது, எப்படிப் பிரித்தது ?

10.1.10

இடைவெளிகளை நிரப்பும் எழுத்தும் இலக்கியமும் .


ஆறுமாத காலப் போராட்டம் நிறைய்யக் கற்றுக் கொடுத்திருக்கிறது. கஷ்டகாலங்களில் அருகிருக்கும் தூய நட்புகள் இனம் காணப்பட்டிருக்கிறது. நிலமைகள் இன்னும் சீராக வில்லை.இதுவும் கடந்துபோகும்.

இடைப்பட்ட காலத்தில் வலைப்பக்கங்கள் பல படிகளைக் கடந்திருக்கிறது. ஆம், வலையெழுத்துக்களில் இருந்து. அகநாழிகை எனும் இதழ் உருவாகியிருக்கிறது. அதன் வெளியீடுகளாக அன்புத்தங்கை லாவண்யாவின் கவிதைத்திரட்டு
'நீர்க்கோல வாழ்வை நச்சி',
TKB.காந்தி - கூர்தலறம் ,
பாராவின் கருவேல நிழல்,
நர்சிம் - 'அய்யணார் கம்மா'

ஆகிய எழுத்துக்கள் அச்சேறி வந்திருக்கிறது. இது எழுத்துலகின் புதிய பரிமாணம்.

இதன் தொடர் நிகழ்வுகளாக  தீராதபக்கங்கள் மதவராஜ் தொகுத்துவழங்கிய

பெருவெளிச்சலனங்கள்,
மரப்பாச்சியின் சில ஆடைகள்,
கிளிஞ்சல்கள் பறக்கின்றன, மூன்று புத்தகங்களும்,
'குருவிகள் பறந்துவிட்டன பூனைகள் உட்கார்ந்திருக்கிறது'.

அவரது கட்டுரைத் தொகுப்பு ஒன்றும் வம்சி புக்ஸ் வெளியிட்டிருக்கிறது.

கொக்கரக்கொ வலைப் பக்கதுப் பதிவர் மாப்பிள்ளை அண்டோ  கால்பர்ட்டுக்கு ஆண்குழந்தை பிறந்திருக்கிறது.பதிவர் சார்பில் அவருக்கும் அவரது இல்லத் துணைக்கும் வாழ்த்துக்கள் சொல்லலாம்.

எல்லா இடங்களிலும் நல்லதும் கெட்டதும் விரிந்து கிடக்கிறது அதில் தொலைக்காட்சியும் விதிவிலக்கல்ல.
குரங்குகளின் வாழ்வு குறித்த ஆவணம் பார்க்கப் பார்க்க வியப்பளிக்கிறது. இயற்கையையும் இணை விலங்குகளையும் அணுகுகிற அவர்களின் உலகம் ஒரு நொடியில் நம்மை கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துப் போகிறது.தேங்காயை உரித்து உடைக்கிற நுட்பம்,புலிகளை விரட்டி ஓடவைக்கிற வீரமும்,நம்மை அசர வைக்கிறது.

நேற்றைய நாட்ஜியோவில்  இமயமலைப்பகுதியில் வழும் அப்பாசனிகள் எனும் மலை மனிதர்களைப்பற்றிய ஆவணப்படம் ஒளிபரப்பானது. ரசாயன,தொழில்நுட்ப இடையூறுகள் இல்லாத சுத்தமான பழக்கவழக்கங்கள். இயற்கை சார்ந்த வாழ்வில் இம்மியளவும் பிசிறு தட்டாமல் தொடர்கிறது அந்த அப்பாசானியர்களின் நாகரிகம்.ஆறுவருடம் சேர்ந்து வாழ்ந்து மூன்று குழந்தைகளுக்கு பெற்றோரான பின்னர் ஒரு தம்பதிகளுக்கு திருமணம் நடக்கிறது.அவர்களின் வாழ்க்கையோடு எழுதப்படாத சமதர்மமும், மூங்கில்களும், பாலின பேதமில்லாத உழைப்பும் சந்தோசமும் பிணைந்து கிடக்கிறது.கல்யாணத்துக்கு  பரிசுப்பொருட்கள் வழங்காத அவர்கள், இறப்பை அப்படிக் கொண்டாடுகிறார்கள். போகும் போது கொண்டுபோவதற்கு சுற்றம் நட்பின் நினைவுகளும் சிலபரிசுப்பொருட்களும் இருக்கிறது அவர்களிடம். அதையும் சேர்த்துப் புதைக்கிறார்கள்.முகஞ்சுழிக்காமல் அவர்களோடு அமர்ந்து மாட்டுமாமிசம்,பன்றி மாமிசம்,பார்லிபியர் குடிக்கிற இந்தியப்பெண் ஆவணப்பட இயக்குனர் வெகுவாக பாராட்டுக்கு உகந்தவர்.

தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி என்கிற அந்தஸ்த்தை  லத்திகாசரண் பெற்றிருக்கிறார்.இப்போதிருக்கிற சூழலில் காவல் துறை குறித்த மக்களின் அருவருப்பான பார்வை விலகுவதற்கு ஒரு இம்மியளவு அவர் பாடுபட்டால் கூட போதும். ஏகபோகம் சிதைக்கப்படுகிறபோது, பொது தர்மம் வசப்படும்,அது பெண்களால் சாத்தியப்படும்.