ப்ரைனாவின் அம்மா அழுதுகொண்டிருக்கிறாள்
பள்ளியிலிருந்து வீடுதிரும்பிய செல்லம்
தேம்பலோடு சோகம் கொண்டுவந்தாள்.
அவளது வகுப்பில் இரண்டு ப்ரைனாக்கள் உண்டாம்
ஆதலால் இவளைக் ’கருப்பு ப்ரைனா’ என
அழைப்பதன் மூலம் இனம் கண்டார்களாம்.
இனிமேலும்நான் கருப்பு ப்ரைனாவாக
இருக்கமாட்டேன் அடம்பிடித்தவளுக்காக.
ஏதும்செய்ய இயலாத அம்மாவும்
ஏசுவே நான் என்ன செய்வேன் என்று
நொந்துகொண்டு அழுதாள்
அப்புறம் அவளது பொம்மைகளையும்
கொஞ்சம் கருப்புக் கதைகளையும் தந்தேன்.
அவளுக்கு நான் வேறென்ன சொல்லமுடியும்.
ஐந்து வயதாகுமுன்னே குழந்தைகளுக்கு
சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கிறது
கருப்பு என்பது நிறமல்லவாம்
அது எமது மக்களின் தோல் தானாம்.
= டாய் டெர்ரிக்கோட்