Showing posts with label அடையாளம். Show all posts
Showing posts with label அடையாளம். Show all posts

31.1.10

பெவிலியனுக்குத் திரும்பிய கனவுகள்.

இரு சக்கரவாகனத்தின் சைகை ஒலிப்பானை அலறவிட்டு தங்க நாற்கரசாலைக்குள் இணையும்போது ஒரு இளைஞன் நடந்துபோனான். நடப்பது மிக மிக விநோதமானதா ?. ஆம் மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் பறக்கிற வாகனங்களுக்கு இடையில் ஏகாந்தமாய் ஒருவன் நடந்துபோவது வித்தியாசமான காட்சி. அவனை ஏறச் சொன்னபோது தயங்கித் தயங்கி ஏறினான். பிறகு நீண்ட இடைவெளி. நான்தான் பேச ஆரம்பித்தேன்.
தனியார் தொண்டு நிறுவணத்தில் வேலை பார்க்கும் அவனுக்கு திடீரென அழைப்பு வந்ததாம். பேருந்து  வர இன்னும் ஆறு மணிநேரம் காத்திருக்கனும் என்பதால் நாலு கிலோமீட்டர் நடந்தே வந்திருக்கிறான். கிடைக்கிற இரண்டாயிரத்து ஐநூறு ரூபாயைத் தக்கவைக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு.என்ன படிச்சிருக்கீங்க என்றுகேட்ட போது எம்மெஸ்ஸி, எம்பில் என்று சொன்னார். அதுவும் பிசிக்ஸ் மேஜர்.

எனது தெருவுக்கு அடுத்த தெருவில் இதே பிசிக்ஸ் மேஜர் படித்த ஒரு பட்டாதாரி ஆசிரியர் தனிப்பாடம் நடத்திக் கோடிசுவரராகிப்  போனார். அவருக்கு கிடைக்கிற அந்த தனிப்பாட வருமாணம், அரசு கொடுக்கும் கைநிறைந்த சம்பளத்தைக் கெக்கலிட்டுக் கேலி செய்யும் தொகை. இந்த வித்தியாசம் பிறகு எனக்கு வண்டி ஓட்டத் தெம்பில்லை. இறங்கி அவனோடு அறை மணி நேரம் பேசினேன்.

சின்ன வயசில் தாயும் தந்தையும் அகாலமரணம் அடைந்துவிட ஒரு ஓட்டு வீடும், ஒரு தம்பியும், மிகப்பெரிய வெட்ட வெளியும் அவனை எதிர்கொண்டது. குடித்தும் குடியாமலும் பாதியில் நின்று போன கல்லூரிப்படிப்பை முடித்தான்.தனி விளையாட்டுக்கான மாவட்ட, மாநில சான்றிதழ்களோடு எம்மெஸ்ஸி பட்டப்படிப்புச் சான்றிதழும் இருந்தது. மிகச்சிறந்த சுழல்பந்து வீச்சாளன்,வசமான பந்து வந்து விழுந்தால் அடிக்கிற அடியில் மூணு ஊர் தாண்டிவிழும் முரட்டு பேட்ஸ்மேன் என்ற அடையாளங்களின் மேல் கிறக்கம் கொண்ட மத்தியகலால் துறை அவனை ஒப்பந்த வீரனாக்கி சுவீகரித்துக் கொண்டது.தொலைக் காட்சியில் ஒருநாளாவது ஒளிர்ந்து விடுவேனென்னும் மிகப்பெரிய கனவோடு சென்னைக்கு போனான். செவக்காட்டுப் புழுதியும்,செருப்பில்லாத காலுமாக இருந்த அவனுக்கு வழுக்கும் விலையாட்டு மைதானமும்,காலுறைகள்,ஷூ எனும் பளபளக்கும் வாய்ப்பு விரிந்துகிடந்தது.

சேப்பாக்கம் மைத்தானத்துக்கு அருகிலே ஒரு விடுதியில் தங்கியிருந்து விளையாட்டு  இல்லாத காலங்களில் எம்பில்லும் முடித்தான். தொண்ணூறுகளின் துவக்கத்தில், தொலை காட்சியின் பரவலாலும், முகச்சவர, பற்பசை வியாபாரிகளின் ஆதரவாலும் கிரிக்கெட் பட்டி தொட்டிகளின் பிரதான விளையாட்டாக மாற்றமாகிக் கொண்டிருந்தது. அந்தக் காலத்தில் சென்னையைச் சேர்ந்த பல பிரபல வீரர்களின் அறிமுகத்துக்கும் கடைக்கண் பார்வைக்கும் தவம் கிடந்தான். கிடைத்த பின்னால் அவனுக்கு விளங்காத பல அரசியல் கண்ணா மூச்சியாடியது. எல்லா தகுதிகாண் தேர்விலும் ஜெயித்து வெளியேறும் அவனை அவனது சமூக அடையாளம் ஒவ்வொரு முறையும் பரமபத பாம்பாகி காலைப் பிடித்து கீழே இழுத்துப் போட்டது. இதையும் கூட அவன் அவனுக்கு கடவுளின் அருள் கிடைக்காததால் வந்தது எனத் தேற்றிக்கொண்டு தவம் தொடர்ந்தான். மணமிருந்தும் ஒரு தாழம்பூவைப்போல இடமிழந்து போனான்.

சான்றிதழ்களின் கடைசியில் இருந்த பள்ளியிறுதி மாறுதல் சான்றிதழைத் திருப்பிப் பார்க்காத தேர்வுக்குழுமம் குதிரைக் கொம்பாகவே இருந்தது.அப்போதைய கிரிக்கெட் கேப்டன் திரு அசாருதின் அவர்களைìܼப்
பலமுறை சென்னையில் சந்தித்திருக்கிறான்.பின்புலம் இல்லாமல் இங்கே நுழையச் சத்தியமாகச் சாத்தியம் இல்லை என்று சொல்லிவிட அவனுக்கிருந்த இறுதி இழையும் அறுந்துபோனது. அதன் பின்னால் வயிறும் மிச்சமிருக்கிற வாழ்வும் பயமுறுத்தியது இரண்டு முறை காவல்துறை ஆய்வாளர் தேர்விலும் உடல் தகுதித் தேர்விலும் வெற்றிபெற்று தோற்றுப்போனான்.தன்னந்தனியே திறமையை மட்டும் வைத்து ஜெயித்துவிடத் துணிந்த அவனது பயணம் நெடுகிலும் ஒரே ஒரு வெற்றி கிடைத்தது. ஆம் அவனது தம்பி ஒரு இடைநிலை ஆசிரியனாகினான் அவனால் மீண்டும் தரையிறங்கியது அவனது கனவு.

தம்பியின் கல்யாணம். அதனால் ஏற்பட்ட வெற்றிடம் . அதை நிறப்ப சொந்தக் கல்யாணம். அப்புறம் குடும்பம். அதை  நிர்வகிக்க  ஒரு வேலை.தொண்டு நிறுவண நிர்வாகியாகி வாழ்க்கை அவனை பெவிலியனுக்கு அனுப்பியது. ஆனாலும் உள்ளே உறைந்து கிடக்கிறது மட்டையும்,பந்தும் எல்லை தாண்டிக் குதிக்கும் சந்தோசமும். அதை லேசாக உசுப்பிவிட அவ்வப்போது கிராமத்து கிரிக்கெட் குழு அவனை நடுவராக்கும். இப்பொதெல்லாம்  விளையாட்டு நுணுக்கங்களை விட சமூக நுணுக்கங்கள் பற்றித்தான் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறான்.

அவனது பெயரைச் சொல்லவில்லையே.
தோற்றவர்களுக்கெல்லாம் என்ன பெயரோ அதுதான்.
அல்லது அவனுக்கு நீங்களே ஒரு பெயர் வைத்துக்கொள்ளுங்கள்.