Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

17.9.11

நிறுவணங்கள் எந்திரத்தாலானது. (அக்கம்பக்கம் பராக்குப்பார்த்தல்)


ஒரு ஐந்து நாட்கள் மறைமலை நகரில் நடந்த பயிற்சிவகுப்பில் கலந்துகொள்ள நேந்தது. பசுமையான சூழலும்,ஒழுங்குபடுத்தப்பட்ட பராமரிப்பும் அதிக இறைச்சல் இல்லாத அமைதியும் அது அலுவலர்களுக்கானதென்பதை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. புதிய புதிய மனிதர்கள் புதிய புதிய புரிதல்கள் அதிலேற்படும் நெருக்கம் நட்பு என இன்னொரு கதவு திறந்துவிடப்பட்டிருந்தது. இதுவரை ஏற்றி வைத்திருந்த பாரத்தை இறக்காமல் பயணிக்க சிரமாமமாக இருந்தாலும் தொடர்கிறது பயணம்.

பிஜய்குமார் ஸ்வைன் என்கிற பயிற்சியாளர் மூன்று நாட்கள் எங்களோடு இருந்தார் அறுபது வயதை நெருங்கும் அந்த ஒரியாக்கார மனிதர் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பட்டம் படித்து பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி இடையில் இன்னொரு கம்பெனிக் குத்தாவி இப்போது national institute of rural development பயிற்சி நிறுவணத்தின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கிறார். ஒரியாவும் ஆங்கிலமும் கலந்த அவரது வார்த்தைகளில் ஒரு மிதமிஞ்சிய வேகம் இருக்கும். மிகக்கராறான நேரம் தவறாமையும், சின்னசின்ன ஒழுங்கீனங்களின் மேல் அவர் வைத்திருக்கிற துவேசமும் வியப்பானதாக இருக்கிறது.

நாட்டில் பெருகிவரும் பட்டினி வயிறுகளைக் கண்டு கொள்ளாமல் நாம் நமது   செலுத்துவோமானால் நமது சோறு பறித்துக்கொள்ளப் படும் என்று சொல்லுகிறார்.ஒரே நாள் இரண்டுவேளை சாப்பிட முடியாமல் போனால் கண் சொருகுகிறது நடை சோர்வடைகிறது, நாவரட்சியாகிறது ஆனால் பதின்மூன்று நாட்கள் பட்டினியாய்க் கிடந்த மனிதர் ஒருவர் எழுந்து கையை சுறுசுறுப்பாய் ஆட்டிக் கொண்டு பொது மக்களுக்கு போஸ் கொடுப்பது எப்படி என்கிற எள்ளல் இருக்கிறது அவரிடம். ஆனால் அதே வேளையில் இருக்கிற அத்துணை பொதுத்துறை நிறுவணங்களின் மீதும் துவேசம் வைத்திருக்கிறார்.

லாபம் ஈட்டாத நிலைமைகளுக்கு பணியாளர்கள் மட்டுமே காரணம் என்கிற ஆணித்தரமான கருத்தும் இருக்கிறது. முன்னதை மனிதாபி மானத்தோடு சேர்ந்த அறிவென்றும் பின்னதை தொழில் பக்தி என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம். மாலை நேரங்களில் அப்படியே காலாற நடந்து நால்வழிசாலைக்குப் போனால்  நோக்கியா நிறுவணத்தின்  மிகநெடிய தனிச் சாலையும் பார்த்தவுடன் பயம் பிடித்து ஆட்டுகிற தொழிற்சாலையும் தூரத்தில் தெரிகிறது.அங்கிருந்து வெளியே வரும் இளம் யுவதிகளின் கழுத்தில் தொங்குகிற அடையாள அட்டையும் அவர்கள் கண்களில் தங்கி  இருக்கிற சோர்வும் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. வேலை முடித்துவருகிற களைப்பும் திருப்தியுமில்லை அது. உழைக்கிற போது வெளியேறுகிற வியர்வைமேல் வெளிக் காற்று பட்டவுடன் ஒரு பரவசம் வருமே? அதுவும் இல்லை. பிஜய்குமார் ஸ்வைனைப்போல ஒரு கடைந்தெடுத்த பயிற்சியாளனிடம் மேலாண்மை பயின்ற ஒரு மேலாளரின் மனித உழைப்பைப் பிழிந்தெடுக்கிற தந்திரத்தில் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் சாயல் அது.

அப்புறம் நண்பரோடு மறைமலை நகரில் மதுபாணம் வாங்க டாஸ்மாக் கடைக்குப்போனோம்.  திரையரங்குகளில் நுழைவுச் சீட்டுக் கொடுக்கிற இடம் போல விற்பனையாளருக்கும் வாங்குபவருக்குமிடையில் ஒரு சிறு துளை மட்டுமே இருக்கிறது. முற்றிலும் கம்பி அழி பாய்ச்சப்பட்ட முகப்பில் தொங்கிக்கொண்டு, கூட்டம் அலைமோதுகிறது ஒரு கால் புட்டி மதுவாங்க. எறி திராவகத்தைத் தொண்டை வழி இறக்கி ரத்த நாளங்கள் வழியே சிறுமூளையை தள்ளாட வைக்கிற கிறக்கம் தேவையிருக்கிற மனிதர்கள் லட்சம் லட்சமாய்ப் பெருகிக் கொண்டிருக்கிறார்கள். கூட்டம் கூடுகிற எல்லா இடங்களையும் கட்டுப்படுத்த ஒரு குறுகலான வழி இருக்கிறது.

விருதுநகரைக் கடந்து வரும்பொழுது தமுஎசவின் மாநிலமாநாட்டு பதாகைகள் சுவரெழுத்துக்கள் கண்ணில் தோன்றி பெரும் சலனத்தை உண்டு பண்ணுகிறது. சொந்த சித்தப்பா வீட்டுக்கல்யாணம் ஊரில் நடக்க பங்கேற்கமுடியாத நானும் என் அம்மாவும் எதையெதையோ பேசிக்கொண்டு சாத்தூர் போன நாட்களின் நெருஞ்சி நினைவுகள் மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருக்கிறது.  தமுஎச மாநில மாநாடு குறித்து நடக்கிற சம்பாஷனைகளில் இருந்து விலகி ஒளிந்து கொள்ளவேண்டிய ஒதுக்க நிர்ப்பந்தம் இருக்கிறது. முதல் கலை இலக்கிய இரவுக்காக சாத்தூரின் மூலை முடுக்கெல்லாம் அலைந்து திறவாத கதவையெல்லாம் திறந்து சேமித்த உண்டியலின் சலசலப்பு நிழலாடுகிறது.

தீக்கதிர் செய்தியை வாசித்து தலைதூக்குகிற மனைவியின் கண்களை சந்திக்கமுடியாமல் பின்வாசலுக்கு  போக வேண்டியிருக்கிறது. திரும்பிவரும்போது அவள் கேட்கிற கேள்விக்கு ஒன்றுமில்லை எனச்சொல்லவேண்டியிருக்கிறது. வழிநெடுக சிந்திக்கிடக்கும் இந்த ஒன்றுமில்லை என்கிற வார்த்தைகள் துகள்களாகி வழி நடந்த பாதை மண்ணெங்கும் உரமேறிக் கிடக்கிறது.

29.12.09

இன்னொரு கோயிலும், இன்னொரு தாயும்.

திருச்செந்தூரில் இறங்கும்போது கடல் காற்று சில்லென்று முகத்திலடித்தது. நிறைய சலிச்ச வாசம் வீசுகிற காற்றில் மீன்களின் வாசமும் அடங்கியிருந்தது. எதிர்ப்படுகிற பேருந்தின் பெயர்ப் பலகையினையெல்லாம் உற்றுப்
பார்த்தான்.பெட்டிக்கடையில் சிகரெட் வாங்கிக்கொண்டிருந்த.அவன் அடுத்த பஸ் வர இன்னும் அரைமணி   இருக்கு  வா  தம்மடிப்போம் என்று சொன்னான். யாரோ  உற்றுப்பார்த்து விட்டுபோனார்கள். இந்தப்பெட்டிக்கடையில தான் சிகரெட் வாங்கி ஒளிஞ்சு ஒளிஞ்சு தம்மடிப்போம். அப்ப ரஞ்சன் ஒரு சிகரெட் அடிச்சுட்டு நாலு அசோகாபாக்குப் போடுவான். அவங்க க்றிச்டியன்ஸ், ரஞ்சன் தெரியும்லா. இந்தப் பஸ்டாண்ட், கடக்கரை, ரைல்வே ஸ்டேசன், எல்லாம் எங்க ஆளுகைìகுள் இருந்த பகுதிகள்.அவன் கண்ணுக்குள் எண்பதுகளின் கல்லூரிக்காலம் மினுங்கியது.   ஒரு வலத்தியான பெரியவர் 'எப்ப வந்தெ எப்பிடிப்பூ இருக்கா, நேத்தே வருவேன்னு அம்மா வாசல்லயே உக்காந்திருந்தாங்க' என்று சொல்லிவிட்டு கிளம்பிப் போனார். முதிர்ச்சி வந்தால் போதும் ஊர்ப் பெரியவர்கள் எப்போதும் எல்லோரையும் தன் பிள்ளை, தன் பேரனாக்கிப் பாவிப்பார்கள்.


இன்னும்  ஒரு மணி நேரத்தில்   அம்மவைப் பார்க்கப்போகிறோம் என்கிற நினைப்பு வந்ததும் தைப்பொங்கலை, பங்குனிப்பொங்கலை, எதிர்னோக்குகிற அவஸ்தை இருந்தது. கூடவே இன்னொரு சஞ்சலமும் இருந்தது. அதை அப்புறம் சொல்லலாம்.  பால்ய கால நன்பண் இங்க தான் இருக்கான் வா பாப்பொம்'' என்று சொல்லி விட்டு முன்னல் நடந்தான். கோவில் வாசல் போகிற அலங்கார வலைவுக்கு அருகில் சைக்கில் ரிக்சாக்கள் நின்றிருந்த பகுதியில் நின்றான். ரெண்டு மூணு பேர் வந்து கோயிலுக்கா என்று கேட்டார்கள் இல்லை என்று சொல்லிவிட்டு திரும்பி வந்து விட்டான். வீடு ரொம்ப தூரமா என்று கேட்டேன் இல்ல என்று சொல்லிவிட்டு சிரித்தான்.செரி வா பஸ் வந்துருக்கும் திரும்ப நடந்தவேகத்துக்கு ஈடு கொடுக்க நான் ஓடும்படி ஆனது அவன் ரொம்ப உயரம் நான் கொஞ்சம் கம்மி. நகரப்பேருந்தில் மொத்தம் இருபது நபர்கள் மட்டும் இருந்தார்கள். நாங்கள் இருவரும் உட்கார்ந்து கொண்டோ ம். இரண்டு கிலோ மீட்டர் கடந்தவுடன் வாழையும் நெல்லும் சாலையின் இரண்டு புறமும் பொறாமைய்யொடு செழித்துக்கிடந்தது.


நெல்வயல்களைக் கடந்து வந்த காற்று பசிய வாசத்தோடு வந்தது. வாசங்கள் உள்ளூர நினைவுகளை எழுப்பிவிடும். வயல் காற்று வீசும் போதெல்லாம், செல்லிமுத்துநாடார் கிணற்றில் மல்லாக்கமிதந்த ரத்தினத்தாயென்னும் பேரழகின் உருவமும், அந்தச்சாவில், சாதீய வன்மத்தின் கொடூரம் முதன்முதலாய்  உணர்ந்த  ஞாபகங்கள் தவிர்க்கமுடியாது வந்துசேரும். எப்போதுமே இந்தக்காற்று இப்படித்தான் அது பூக்களுக்கென்றும், பீயாங் காட்டுக்கென்றும் விருப்பு வெறுப்பு சுமந்து வீசுவதில்லை.சாலையோரம் ஒரு வாய்க்கால் செருக்கோடு தண்ணீரைக் கடத்திக் கொண்டிருந்தது. ஓடைகளில் சம்பு அடர்த்தியாக முழைத்துக்கிடந்தது அதன் பூக்கள் ஏதோ வேற்று பிரதேசத்து நிலப்பரப்பைப்போல பரவசம் உண்டாக்கியது. இதுக்குள்ள தான் தூக்கனாங்குருவிகள் கூடுகட்டியிருக்கும். உள்ளே போனா கொத்து கொத்தா தொங்கும். முட்டையெடுத்து அவிச்சுத்திம்போம் அப்போ மாரப்பன் எப்போதும் கூடவே இருப்பான்.குரவ மீனெல்லாம் ரொம்ப அனாயசமா பிடிப்பான். குரவ மீன் முள்ளு குத்துச்சுன்னா ரெண்டு நாளைக்கு கடுக்கும்.

இப்படிக்கதைகள் சொல்லிக் கொண்டே வந்தவன் தூங்கிப்போனான். கதை சொல்லிகளைத்தூங்க வைத்த விநோதம் என்னவாக இருக்கும். ஒரு வேளை அந்தக்குளிர் காற்று, அந்தத்தளிர் நிலங்கள் ,பின்னிழுத்துக்
கொண்டுபோய் மீண்டும் அவனைத் தாய் மடியில் கிடத்தியிருக்கும். தூங்கட்டும்.எனக்கு தூக்கம் வரவில்லை நான் அந்தக்காடு,வயல்கள் தண்ணீரோடும்,  காற்றை கிழித்துக் கொண்டு நீச்சலடிக்கும் பறவைகளையும் பார்த்துக் கொண்டு போனேன்.பூச்சிக்காடு வருவதற்கு முன் முழித்துக்கொண்டான். பேருந்தை விட்டு இறங்கியதும் சுற்றும் முற்றும் பார்த்தான் யாரும் இல்லை.வீட்டுக்குபோனா தம்மடிக்க முடியாது இரு ஒரு தம்மடிப்போம் என்று சொல்லிவிட்டு ஒரு பெட்டிக் கடைக்குப் போனான்.

வீட்டுக்கு நடந்து போகிற வழியில் ரெண்டொரு பேர் எப்பப்பூ வந்தா,என்று விசாரித்தபடி முகம் மலர்ந்தார்கள்.அவனையொத்த முகஜாடையிருந்த ஒரு பெரியவரைக்காட்டி எங்க சித்தப்பா, கொஞ்சம் சண்ட என்றான் அவரும் ஓரக்கண்ணால் பார்த்தபடி கடந்து போனார். கூரைத்தாழ்வாராமும் ஓட்டுக்கூரையும் நார்க்கட்டிலும்,புராதான மரப்பீரோவும்,ஒரு பப்பாளி மரமும்,அடர்ந்த பிச்சிக் கொடியும் புதிதாய்க்கட்டிய ஒரு கழிப்பறையுமான வீட்டுக்குள் நுழைந்தோம்.முற்றத்தில், நடைபாதையில், புழக்கடையில், நடுவீட்டுக்குள் அம்மா அம்மா அம்மா என்ற வலைச்சொல்லை வீசி வீசி எறிந்து விட்டு திரும்பிவந்தான்.நான் தேடிவந்த அந்த பிம்பம் அடுப்பங்கரையில்  இருந்து பிரசன்னமானது.அவன் ஓடிப்போய் கட்டிப்பிடித்துக் கொண்டான். கொஞ்சம் எட்டத்தில் இருந்தேன். எப்படி அவர்களோடு முகமன் சொல்லிக் கொள்வதென்னும் குழப்பம் என்னை ஆட்டுவித்தது. முதன் முதலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்குள் நுழையும் போது எனக்கிருந்த குழப்பம் இருந்தது.கையெடுத்து கும்பிட்டேன். எனது உடல் தரையில் கிடந்ததுபோல இருந்தது.

12.4.09

கொஞ்சம் பக்தி , நிறய்ய சமயோசிதம்








அவர் குறி சொல்லும் போது ரொம்பப் பயமாக இருக்கும். பற்களை நற நற வெனக்கடித்துக் கொண்டு கூரை முகட்டைப்பார்த்து தலையை ஒரு உலுக்கு உலுக்கி

" தாயே சக்கம்மா என் கொட்டாரடி காத்த புண்ணியவதி தலமேல வந்திறங்கு அடங்காத கருப்பன், கம்பெடுத்தால் அரக்கன் அருவாள கீழபோட்டு கிட்டவாடா
வெள்ளக்குதிர ஏறி வீச்சருவா கையிலேந்தி விளையாட ஓடிவாட சுடலமாடா
அள்ளி முடிச்சு, ஆங்காரம் எறக்கி வச்சி ஈஸ்வரியே எந்தாயீ ஈசானமூலயில வந்து நில்லு
தொட்டது தொலங்கும், தோட்டம் வச்சாக்காய்க்கும் எனப்பெத்த மகராசி முத்தரசி முன்னவாம்மா
மார்மேலும் தோல்மேலும் தூக்கிவளத்து குருவுங்கொலையும் குடுத்த எங்கய்யா எல்லாத்தையு அடக்கி வையி "

இரவு பத்து மணிக்கு சரணமுழக்கம் ஆரம்பிக்கும். எட்டு மணிக்கே ஊரடங்கிப்போகும் கிராமத்தில் குறிசொல்லும் ராசாச்சின்னயாவின் உடுக்கையடி கொலைப்பதற வைக்கும். இருந்தாலும் பூஜை முடிந்து திங்கப்போகும் தேங்காச்சில்லும் வாழைப்பழமும் பயத்தை ஓரங்கட்டும்.
குறிபார்க்க வருபவர் முதல்நாளே சொல்லிவிடவேண்டும். அன்றைக்கு காலையில் இருந்து பச்சைத்தண்ணி பல்லில் படாது விரதமிருப்பார். சாணிமெழுகி சாம்பிராணி புகையவிட்டு வீடு சுத்தப்படுத்த வேண்டும். அணைக்கரைப்பட்டி பொத்தையக்குடும்பனிடம் ரெண்டு பாட்டில் சாராயம் வாங்கிவைக்கச் சொல்லிவிடுவார். பூஜைசாமன்கள் எடுத்து அடுக்கிவைக்க, அருள்வந்து தடுமாறுவார் அப்போது தாங்கிப்பிடிக்க நான்கு எளவட்டங்கள் வேண்டும். பூஜை முடிந்துகொடுக்கும் கூவாத சேவலும் காசும் மறுநாளைக்கு அரிசிச்சோறும் கறிக்குழம்புமாகும்.

தாட்டிக்கமான சாதிக்காரர் வீடுகளுக்கு கடவுள்கள் கூட டோர்டெலிவரிதான். ராசாச்சின்னையா கீழ்ச்சாதி வேறு. சிலநேரம் வெளியூர் போய் குறிசொல்லுவார் லீவு நாட்களில் நானும் போவேன். பெத்துரெட்டிபட்டி ராமசாமி நாயக்கரின் வண்டிச்சக்கரம் காணாமல்போனது. அவர்கள் அதைச் சொல்லமல் விடுகதையை போல ஒரு பொருள் களவு போய்விட்டது குறி பார்க்கவேணுமென்று சொல்லி மூணு நாளாச்சு. அத்தனை சாமிகளுக்கும் சேர்ந்து முக்கி முக்கி உடுக்கடிச்சாலும் களவுபோன பொருள் என்னவெனக் கண்டுபிடிக்கமுடியாமல் திணறலெடுத்துவிட்டது ராசாச் சித்தப்பாவுக்கு. பெத்து ரெட்டிபட்டி, ஓடைப்பட்டி, கம்மாப்பட்டி, கரிசல்பட்டி, செவல்பட்டி, மேட்டுப்பட்டி, ஒத்தையால் போன்ற ஊர்கள் கரிசல் விவசாயம் பெருத்த நாயக்கமார்களின் ஊர்கள். இங்கு குறி தோத்துப் போனால் பிறகு வருசம் முழுக்க குண்டிவழியா வேர்வை வடிய கல்லுடைக்க, கருதறுக்க லோல் படவேண்டும். மூன்று தலை முறையாய் பார்த்த சோசியத் தொழில் கெட்டுப் போகும். இது அவருக்கு வாழ்வா சாவா பிரச்சினை.
மூன்றாம் நாள் ஒரு பீடியைப்பத்த வைத்துக்கொண்டு காலாற நடந்து போய் படப்படியில் ஒண்ணுக்கிருந்தார். திரும்ப விறு விறுவென வந்தார். தீர்மானமாக உட்கார்ந்தார். ஒரு பத்துநிமிடம் காட்டப்பத்தி கரையப்பத்தி பாட்டுப் பாடினார், பிறகு '' யாரப்பாத்து சோதன பண்றீங்க இந்தச் சொடல மாடங்கிட்டயா வெளாட்டுக் காற்றீங்க ன்னு " ஒரு அதட்டுபோட்டார். " காணாமல் போனது வலது பக்க வண்டிச்சக்கரம், எடுத்துட்டுப் போன கொம்பனுக்கு மேல்திசையில ஊரு, மேலே ஏதுங் கேள்வி இருந்தாக் கேளு " சொல்லி முடித்ததும் ஆடிப்போனார் ராமாசாமி நாயக்கர். கூடப்போன நாங்களூம் ஆடிப்போனோம்.
ஊரு வந்து ஒரு வாரம் சாராயம்தான், வெடக்கோழி தான். ஆவல் அடங்காமல் ஒருநாள் கேட்டபோது,தொழில் ரகசியம் வெளியே சொல்லாதே என்ற பீடிகையோடு சொன்னார். வைக்கோல் படப்புக்கு மறுபக்கம் பேன் பார்த்துக் கொண்டிருந்த உள்ளூர்ப் பெண்களிருவர் பேசிக்கொண்டது அவரது காதில் விழுந்ததாம். " சாமி சுத்து சுத்து ண்ணுதா, செப்பும் வண்டிச்சக்கர ண்ட்டா செப்பும் "
காலச்சக்கரத்தின் அடியில் சிக்கிக்கொண்டு நசிந்துபோனது விவசாயத்தொழில் மட்டுமல்ல, பண்ணையடிமை முறையும். தீப்பெட்டி ஆலையின் காவலராகிக்காலம் தள்ளும் ராசாசித்தப்பாவின் முகதைச்சுற்றி வட்டமிடும் பீடிப்புகையில் என்னநினைவுகள் மிதக்கும். இந்த வாரம் பங்குனிப் பொங்கலுக்கு ஊருக்குப் போகையில் ராசாச் சித்தப்பாவைப் பார்க்க வேண்டும்.