Showing posts with label விளையாட்டு. Show all posts
Showing posts with label விளையாட்டு. Show all posts
9.12.10
சண்டக் கோழி, ஜல்லிக்கட்டுக் காளை
'மஹாராஜா தூங்கப்போறார் சட்டுப்புட்டுனு வாத்தியத்த எடுத்துட்டு வந்து வாசிங்கோ'என்று வைத்தி சொல்லுவார்.உடனே வித்வான் சன்முகசுந்தரத்தின் முகத்தில் கோபம் நாதஸ்வரம் வாசிக்கும்.ஒரு கலைஞனின் அறச்சீற்றத்தை ஒரு பாப்புலர் புனைவின் மூலம் அழகாகச் சித்தரித்திருப்பார் இயக்குனர் ஏ.பி.நாகராஜன். கலையும், இலக்கியமும்,வீர விளையாட்டுக்களும் அரச சபைகளின் போதைக்கான ஊறுகாயாய் இருந்த காலத்தினை நாம் வரலாறுகளின் மூலம் மட்டுமே தெரிந்திருந்தோம்.இப்போது இந்த உலகமயமாக்களின் அதியற்புத விநோதமாக அவையெல்லாம் அன்றாடம் கண்முன்னே நடக்கிற காட்சியாகிறது.மீண்டும் கலையிலக்கிய விளையாட்டுக்கள் பெருமுதலைகளின் சொத்துக்களில் ஒன்றாகமாறிவருகிறது.
இந்த கிரிக்கெட் இருக்கிறதே அது பிறப்பிலேயே ராஜாக்களின்,காலனிஆதிக்கவாதிகளின் முதுகு சொறிகிற விளையாட்டாக மட்டுமே இருந்தது.தொலைக் காட்சிகளின் அபரிமிதமான வளர்ச்சியின் மூலம் அது பட்டி தொட்டிகளிலும் புழங்கும் விளையாட்டாக மாறியது.இருந்தாலும் நான் எப்போதும் அரசமாடங்களின் சொத்து என்பதை அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டேதான் வந்திருக்கிறது. வீரர்கள் தங்களின் சட்டை,மட்டைகளில் பொறித்துக்கொண்ட கம்பெனிகளின் இலச்சினை இப்போது அவர்களின் தன்மானத்தின் மேல் குத்தப்பட்டுவிட்டது.விளையாட்டைபெருமுதலைகளிடம் மொத்தமாக குத்தகைக்கு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.இதற்கு....... பெயர்கள் வேறு.
வியாபாரம்,போட்டி,பதவி,உத்தியோகம் போன்றவற்றின் அழுத்தங்களில் இருந்து மனசு தளர்த்த கிடைக்கிற விளையாட்டையும் வியாபாரமாக்கியது கொடுமை, கொடுமையிலும் கொடுமை.திருவிழாக் கூட்டங்களில் பலூன் விற்கலாம்,ஐஸ் விற்கலாம் திருவிழாவையே விற்கமுடியுமா ?. விற்பனை நடக்கிறது.ஓடியா ஓடியா போனா வராது பொழுது போனாக்கிடைக்காது என்று அணிகளைக்கூவி விற்கிற கொடுமையை மடிப்புக் குழையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.என்னசெய்ய ?,ஒரே ஒரு வேண்டுகோள்.தயவு செய்து இந்த சூதாட்ட வியாபாரச் சூத்திரத்தை மக்கள் விளையாட்டுக்களின் பக்கம் திருப்பிவிடவேண்டாம்.பாவம் நூற்றிப்பத்துக்கோடி மக்களுக்கும் அவர்தம் சந்தததிகளுக்கும் அவையாவது மிஞ்சியிருக்கட்டும்.நட்சத்திர வீரர்களே உங்களை நீங்கள் பூஸ்ட், காண்டோம்,உப்புப் போடாத ஊறுகாய்களுக்கு விளம்பரமாக மட்டும் வைத்துக்கொள்ளுங்கள்.எங்கள் லட்சியங்களின் விளம்பரத்தை நாங்கள் சாதாரண ஜனங்களிடமிருந்து எடுத்துக்கொள்வோம்.
15.8.09
வெற்றியின் விளம்பரத்தை கலகமாக்கிய விளையாட்டு வீரன்.

ஒரு குத்தகை விவசாயினுடைய பதினோரு குழந்தைகளில் ஒருவன். நூற்றாண்டு அடிமைகளான ஆப்ரிக்க அமெரிக்க கருப்பின மக்களில் ஒருவன். அந்தப் புறக்கணிக்கப்பட்ட இனத்திலிருந்து வந்த ஜெஸ்ஸி ஓவன். 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் 100,200,400 மற்றும் 4x400 மீட்டர் ஓட்டங்களில் உலகசாதனை படைத்தான். நான்கு பதக்கங்களை அமெரிக்காவுக்கு வாங்கிக்கொடுத்தான். அந்த அமெரிக்கா அவனுக்கு இனவெறியைத் திருப்பிக்கொடுத்தது. ஒரு சமூகம், ஒரு அரசு கொடுத்த கருப்பு வெகுமதி அது. பரிசளிப்பு வைபவத்தில், விழா மேடையிலிருந்த ஜெர்மனியின் அதிபர் ஹிட்லரும், அமெரிக்க ஜனாதிபதி ரூஸ்வெல்ட்டும் மேலைநாட்டு வழக்கப்படி கொடுக்கப்படவேண்டிய மரியாதையை நிராகரித்தார்கள். அதாவது கைகுலுக்குவதைத் தவிர்த்தார்கள். வாழ்வின் கொடிய தடைகளான வறுமை, மற்றும் பற்றாக்குறையால் அடிக்கடி நோய்வாய்ப்பட்டுக் கிடந்த தெருச்சிறுவன் எல்லாவற்றையும் தாண்டி உலக சாதனை படைத்தான். பரிதாபமாக இனவெறியால் உடனே தோற்கடிக்கப்பட்டான். அதுமட்டுமல்ல தொடர்ந்து உள்நாட்டு பந்தயங்களில் சக பந்தய வீரர்கள் ஜெஸ்ஸியோடு போட்டியிட மறுத்தார்கள். இந்தப் புறக்கணிப்பால் நொந்துபோன ஜெஸ்ஸி ஓவன் மனிதர்களோடு போட்டி போடுவதில்லை எனும் புரட்சி முடிவை அறிவித்தான், அமலாக்கினான். ஆம் குதிரைகள் மற்றும் கார்களோடு போட்டியிட்டு ஓடினான். இனவெறிக்கு எதிராக ஒரு விளையாட்டு வீரனின் கலகமானது இந்த நிகழ்வு. நடைமுறைச் சாத்தியங்களற்ற இந்த சாகச அறிவிப்பை நெடுநாள் கடைப்பிடிக்க முடியாமல், வயிறு அவனை உடற்பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளனாக்கியது. ஆனால் அவன் ஆரம்பித்து வைத்த இந்த எதிர்ப்பும் கலகமும் வேர்பிடித்து முளைத்தது. அவன் தொடங்கிய தொடர் ஓட்டத்தில் டாமி ஸ்மித்தும், ஜான் கார்லோசும் இனைந்துகொண்டார்கள் ( 1968 ஒலிம்பிக்) . பின்னாளில் ஓவனுக்கு அமெரிக்க வரலாறு சிலையையும், தபால் தலையையும் செய்துகொடுத்தது. அது மட்டுமா பின்னாளில் ஒரு கருப்பினத்தவனை ஜனாதிபதியுமாக்கியது அமெரிக்கா. |
Subscribe to:
Posts (Atom)