31.7.09

பிரபலமாகாத ஒரு வெள்ளந்தித் தோழனுக்கு வீரவணக்கம்

அவரும் கூட எனக்கு ப்ரியா ஸ்டுடியோவின் மூலமே பரிச்சயமானவர். ப்ரியா ஸ்டுடியோ இந்த தேசத்தின் சகல பரிமாணமுள்ள மணிதர்களும் வந்துபோகிற இடம் என்பதைப் பின்னொரு பதிவில் தெளிவு படுத்தலாம். உயர்நிலைப் பள்ளிவரை படித்துவிட்டு வறுமை காரணமாக ஒரு தனியார் முதலாளியிடம் ஓட்டுனராக ஜீவனம் கழித்த அந்த மனிதருக்கும் இந்த வலைப் பக்கத்துக்கும் சம்பந்தமிருக்கிறதா எனத்தெரியவில்லை. தனியார் முதலாளிக்கு ஓட்டுநராக இருந்த அவர் ஒரு தீவிர இடதுசாரி கொள்கை உடையவர் என்பது இங்கே குறிப்பிடப்படவேண்டிய ஒன்று.


நானிருக்கும் நாட்களில் இரண்டொரு வார்த்தை பேசுவார். கூச்சத்தோடு வீட்டுக்குள் வந்து வெறும் தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு ஒருநாள் " இதென்ன தோழர் இண்டெர்நெட்டா என்று கேட்டார் " ஆமாம் என்று சொல்லி வைத்தேன். அந்த ஆமாமில் என்னிடம் ஒரு இளக்காரம் இருந்தது. தொடர்ந்து " ப்ளாக்ஸ்பாட்டுகள் தெரியுமா '' என்று கேட்டார். என்னைத் திருத்திக் கொண்டு " ஆமா நீங்கள் பார்ப்பதுண்டா" எனக்கேட்டேன். " எப்போதாவது ப்ரௌஸிங் செண்டரில் பார்ப்பேன் " என்றார். பின்னர் அவரே எனக்கு சில வலைப்பக்கங்களை சிபாரிசு செய்தார். அந்தப் பக்கங்கள் தமிழ்மணத்தில் கொடிகட்டிப் பறக்கும் பக்கங்கள் என்பதை மட்டும் அவர் அறிந்திருக்கவில்லை.


அந்த மாதப் பத்திரிகையின் விலை வெறும் ஏழு ரூபாய்தான். அவர்தான் ஒவ்வொரு மாதமும் அதைக்கொண்டு வந்த எனக்குத்தருவார். அவர் வீட்டுக்கும் எனது வீட்டுக்குமான தொலைவு குறைந்தது நான்கு கிலோமீட்டர் இருக்கும். அந்த ஒரே ஒரு புத்தகத்துக்காக மெனக்கெட்டு நாலு கிலோமீட்டர் சைக்கிள் மிதிக்கிற அவர், பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் தான் வருவார். பெரும்பாலான எனது ஞாயிற்றுக்கிழமைகள் பொதுச்சோலிகள் அபகரித்துக்கொள்ளும். அதனால் எனது துணைவியாரிடம் புத்தகத்தைக் கொடுத்துவிட்டு பணம் தாருங்கள் எனக்கேட்காமல் நின்று கொண்டே இருப்பாராம். பரஸ்பரம் இரண்டுபேருமே அவ்வளவு வெள்ளந்தி.


கோட்டையிலே எனது கொடி பறக்காவிட்டாலும் எனது வீட்டுக்கூரையில் ஏற்றிவைப்பேன் எனும் நெஞ்சுறுதியில் ஒரு நுறு ஆண்டுகாலம் கழிந்து போனது. அந்த வெள்ளந்திக் கழிவில் தடம் தெரியாமல் தொலைந்துபோன எண்ணற்ற தோழர்களில் ஒருவர் கணேசன். கடந்த 22.7.2009 ல் அகால மரணம் அடைந்த செய்தி மிகத் தாமதமாக அறிந்து அதிர்ந்து போனேன். இழப்பதற்கு ஏதுமற்ற அவரிடம் மீதமிருந்த உயிரும் பறிபோனது.


ஒரு நடுத்தர வர்க்கமான நான் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட போது மீண்டும் மீண்டும் எனது நினைவுகளை அலைக்கழித்தது எனது பையன்களின் எதிர்காலம். இந்தக்கணத்தில் அவர் விட்டுபோன அவரது சின்னஞ்சிறு வாரிசுகள் என்னை அலைக்கழிக்கிறார்கள். அவரோடு சில நேரங்களில் அவரது இரண்டு பையன்களும் வருவார்கள். அவர்களிடம் தோழருக்கு செவ்வணக்கம் சொல்லுங்கள் என்று சொல்லுவார். அவர்களிருவரும் முஷ்டி மடக்கி, கையுயர்த்தி செவ்வணக்கம் தோழரே சொல்லுவார்கள். ,......., .


இப்போது தான் அந்தப் பாழாய்ப்போன தத்துவப்பாடல் என்னைக் கடந்து போகிறது " உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு " . சமுதாய ஏற்றத் தாழ்வுகளை அப்படியே அக்மார்க் மொண்ணையோடு ஜீரணிக்கச் சொல்லுகிற தத்துவம். பாடலை இடைமறித்துவிட்டு, நாளை போய் அந்தக் குடும்பத்தைப் பார்க்கணும். என்னோடு உடன் வருகிறேன் எனச் சொன்ன தம்பி ப்ரியா கார்த்திக்கும் எனக்கும் அந்தக் குடும்பத்தோடு ஒரு பந்தம் இருக்கிறது. வஞ்சிக்கப்பட்டவர்கள் எனும் பந்தம். குறுக்கிடுகிற எல்லாச் சுவர்களையும், கோடுகளையும் உடைத்தெரியும் நாள் வரும்.அந்த நம்பிக்கையோடு நாளை செல்வோம்.

செவ்வணக்கம் சொல்ல.

30.7.09

ஒரு பேனாக் கத்திகூட காட்சி படுத்தப்படாத புரட்சிக்காரனைப் பற்றிய திரைப்படம்
என்பதுகளில் அவரைப்பற்றிக் கேள்விப்பட்ட போது அதென்ன பெயர் ' சே ' என்றுதான் எல்லோரையும் போலக் கிண்டலடித்தேன். அவர் ஒரு புரட்சிக்காரன் என்று கேல்விப்பட்டபோது இன்னும் அதிகமாகக் கிண்டலடித்தேன் ஏனென்றால் அப்போதும் எனக்கு எம்ஜிஆரைப் பிடிக்காது. இங்கு எல்லாமே தலைகீழாக அறிமுகப்படுத்தப் பட்டிருக்கிறது. அவன் தான் பிறந்த நாட்டுக்காகப் போராடாமல் இன்னொரு நாட்டுக்காகப் போரடியவன் என்பதையும், வெற்றியடைந்து ஒரு அரசமைத்து அதில் முக்கிய மந்திரியாக இருந்து அதையும் உதறிவிட்டு வேறு ஒரு நாட்டு விடுதலைக்காக காட்டுக்குப் போனான் என்பதைக் கேள்விப்பட்டதும் கொஞ்சம் ஆர்வம் கூடியது. அப்படி ஒரு நிஜப் புரட்சிக்காரனப் பற்றிய படம் தான் '' மோட்டார் சைக்கிள் டைரீஸ்".ஒரு பழைய்ய நார்ட்டன் 500 இருசக்கர வகனம், கொஞ்சம் உடமைகள், நிறைய்ய உற்சாகத்தோடு இரண்டு இழஞர்கள் புறப்படுகிறார்கள். இடம் அர்ஜெண்டினாவின் ஃபூனோ ஏர்ஸ், வருசம் 1953 ஜனவரி மாதம். இரண்டுபேரின் குடும்பத்தாரும் விடைகொடுக்க கிளம்புகிற வாகனம் தாய் தந்தையரின் கண்ணெதிரே ஒரு நான்குசக்கர வாகனத்தோடு மோத இருந்து பதற வைத்து, நொடியில் சமாளித்து தப்பித்து கிளம்புகிறது. வழிநெடுக கும்மாளமும் உற்சாகமும் நிறைந்த பயணம். வாகனப்பயணத்தின் விதி மாறாமல் அந்தப்பழய்ய நார்ட்டன் பைக் பல இடங்களில் அவர்களின் காலை வாறுகிறது. நமது எதிர்பார்ப்பையும் சேர்த்து.முதலில் உலகம் முழுக்க இப்போது பார்த்துக் கொண்டிருக்கிற நட்சத்திரம் பொறிக்கப்பட்ட தொப்பி, இளம் தாடி, தோளில் புரளும் முடியோடு சேகுவேரா காண்பிக்கப்படவேயில்லை. இரண்டாவது புரட்சிக்காரனின் மேலிருக்கிற இறுக்கமான மற்றும் மரியாதை கலந்த பிம்பமும் இல்லை. மொழு மொழுவென இருக்கும் சே வழிநெடுக பெண்களுக்காக அலைகிறான். குடிக்கிறான் பகடி செய்கிறான். மெக்கானிக்கின் மனைவியை மோகித்து பிடிபட்டு விரட்டப்பட்டு ஓடுகிறான். கப்பலில் சீட்டு விளயாண்டு பணம் சம்பாதித்து அந்தப்பணத்தில் விபச்சாரியோடு பொழுது கழிக்கிறான். படம் முழுக்க மோட்டார் சைக்கிளும் பயணமும் மையக்கருவாக வரப்போவதில்லை என்பதை நாம் யூகிக்க முடிந்தாலும் நமது எதிர்பார்ப்பை உடைக்கிற கதை அமைப்புதான் அந்தப்படத்தின் வித்தியாசம். ஆமாம் ஒரு புரட்சிக்காரனைப் பற்றிய கதையில் எதாவதொரு இடத்தில் ஒரு சின்ன வன்முறைகூட காட்டப்படவேயில்லை. அட ஒரு பேனா கத்தி கூட காட்டப்படவேயில்லை என்றால் பாருங்களேன்.சரிசெய்ய முடியாத அளவுக்கு பழுதான மோட்டார்சைக்கிளை உதறிவிட்டு தென் அமெரிக்காவின் வறுமையை ஊடறுத்துக்கொண்டு தொடர்கிறது பயணம். சிலி, பெரு அட்டகாமா பாலைவனம், அனகோண்டா சுரங்க கழகம் அங்கே ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்த காரனத்துக்காக வீடு உடமைகள் பறிக்கப்பட்ட குடும்பத்தின் வறுமை. அங்கிருந்து மாச்சு பிச்சு,கூழ்க்கோ, இறுதியில் லிமா போய்ச்சேருகிறார்கள் அங்கேதான் மருத்துவர் ஒருவரின் சிபாரிசின் பேரில் சான் பாப்லோ தொழுநோய் மையத்துக்கு இருவரும் அனுப்பப்படுகிறார்கள். அமேசான் நதிக்கரையில் ஒரு கரையில் வசதியும், சுத்தமும், தொழுகையும் கட்டுப்பாடும் நிறைந்த மருத்துவர் மற்றும் செவிலியரின் இருப்பிடம். இன்னொரு கரையில் வறுமையும்,அசுத்தமும், ஒழுங்குமற்ற கருப்பு தொழு நோயாளிகள் புகழிடம்.ஆனால் இந்த இருவரும் மருத்துவ விதிகளையும், மத விதிகளையும் மீறுகிறார்கள். ஆம் கையுறை இல்லாமல் நோயளிகளை அனுகுவது பிரார்த்தனைக்குச் செல்லாமல் சாப்பிடுவது போலான மீறல்களுக்காக மூத்த மருத்துவர்களால் கண்டிக்கப் படுகிறார்கள். ஆனால் கன்னியாஸ்திரிகளாலும் நோயாளிகளாலும் வெகுவாக நேசிக்கப்படுகிறார்கள். எர்னஸ்டோ சேகுவாராவின் 24 வது பிறந்த நாள் கொண்டாட்ட ஏற்புறையில் மெலிய குரலில் பேசுகிறான். கிறிஸ்தவ மத தொண்டு நிறுவன ஊழியர்கள் கன்னியாஸ்திரிகள் நிறைந்த அந்த சபையில் இந்த உலகம் பிளவு பட்டுக்கிடக்கிற அசமத்துவங்கள் குறித்துப்பேசுகிறான். தனது வாழ்நாளின் எஞ்சிய பகுதியை அந்த சமூகத் தொழுநோயிலிருந்த விடுவிக்கிற மருத்துவம் செய்யப்போவதாக அறிவிக்கிறான் பலத்த கரகோசத்துக்கும் வரவேற்புக்கும் மத்தியில். சே அங்கிருந்து கிளம்புகிற கட்சிகளோடு படம் முடிகிறது.அவனது நண்பன் சேகுவேராவை அதற்குப்பிறகு ஹவானாவில் ஒரு மந்திரியாகத்தான் பார்த்தேன் என்று பிண்ணனியில்சொல்லிக்கொண்டிருக்கும் போதே இந்த உண்மைப்பயணத்தின் கருப்பு வெள்ளைப்புகைப்படங்களும் இந்தப்படத்தின் காட்சிகளும்மாறி மாறிக்காட்டப்படுகிறது.2002 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் விவாதங்களைக்கிளப்பிய படமான ' தி சிட்டி ஆஃப் காட்' எனும் படத்தை இயக்கியவால்டர் சேல்ஸ் தான் இந்தப்படத்தின் இயக்குனர். முன்னதாக சேகுவேராவும் அவரது நண்பர் அல்பெடோ க்ரெனடாவும் எழுதிய நாவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படத்தின் கதைவசனம் ஜோஸ் ரிவேரா. சின்னத்திரையில் பிடல் காஸ்ட்ரோவாக நடித்த காயல் கார்சியா பெர்னல் சேகுவேரா வாகவும், நிஜவழ்க்கையில் மைத்துனரான ரோட்ரிகோ லா செர்னா நண்பனாகவும் நடித்து வெளிவந்த ஸ்பானியத்திரைப்படம்." மோட்டார் சைக்கிள் டைரீஸ் "

28.7.09

நீர்வீழ்ச்சி - கண்காட்சி
பாசிகளைத் தொங்கவிட்டபடி

நாடோடி மக்கள் வாழ்க்கை

தங்கச்சங்கிலி தவழவிட்டபடி

நகரவாசிகள் பொழுதுகடத்துவார்கள்


பேரீச்சம்பழ இறுக்கத்தில் கூட்டம் உரசும்

ஆணுடல்களிலிருந்துசீமைச்சாராய

நெடி மேல்நோக்கி கிளம்பும்

விதிமாறாத நெரிசல் அவச்தைகளிருந்தாலும்


தெரிந்த குரங்குகளிடமிருந்து

தின்பண்டங்களைப் பாதுகாப்பதும்

தெரியாத திருடர்களிடமிருந்துபயத்தை

பதுகாப்பதும் சாகசம்.


மலைமுழுக்க சேலை உடுத்திக்கொண்ட

பசிய காடுகளை பார்ப்பதுஆனந்தம்.

சேலையை ஏற்றிக்கட்டியஈர யுவதிகளைப்

பார்த்துக்கொண்டு தலைதுவட்டுவதும். ஆனந்தம்.


வீட்டுக்கு வந்தவுடன்

மொட்டை வெயில் முறைக்கும்

மினரல்வாட்டர் தீர்ந்து விட்டதும் உறைக்கும்.

25.7.09

ஒரு போராட்டம் நட்பை அடர்த்தியாக்கியது.

கனத்துக்கிடந்த அந்தநான்கு நாட்களை
நட்பு எனும் வளையம் இலகுவாக்கியது.
துளியிடமில்லாமல் தனித்து விடப்படாதவாறு
தோழமை எனைச் சூழ்ந்து கொண்டது.

தூரம், காலம், அடர்த்தி
எனும் அளவைகளைத் தாண்டி
கரங்கள் என்தோள்மீது கிடந்தது.
ஒரு போராட்டத்தின் வெற்றியை
இசங்களோடு இணைந்து
அந்த நட்பே பகிர்ந்து கொண்டது.

பக்கத்தில் அமர்ந்து உழைக்கும் தற்காலிக ஊழியர்களின் கண்ணில் தேங்கிக்கிடக்கும் ஏக்கத்தை திரட்டி ஒரு கோரிக்கையாக்கினோம். காலடியில் கிடக்கும் அசமத்துவத்தைத் துடைக்க ஒரு போராட்டத்தை அறிவித்தோம். அதைத்துவக்கிய நாட்களிலிருந்தே பழிவாங்கும் குறி படர்ந்தது. இறுதியில் இரண்டு பேர் இலக்கானோம். அண்டோவும் நானும். இதை எனது தோழன் மாது தனது வலைப்பக்கத்தில் எழுதிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினான். சுமார் முப்பது தோழர்கள். " அந்த இரண்டுபேர் வேலைக்குப் போகாமல் நாங்களும் வேலைக்குப்போவதில்லை " என அறிவித்து தங்களைத் தாங்களே தற்காலிக பணிநீக்கம் செய்து கொண்டார்கள்.
போராட்டமும் நீதிமன்ற வழக்கும் ஒரு சேர நடத்தப்பட்டது ஒரு நாவலுக்கான பெரும் செய்தி. அதை அண்டோ மற்றும் மதவராஜ் வலைப்பக்கங்கள் சொல்லியிருக்கிறது. விருதுநகர், மதுரை, சென்னை, டெல்லி ஆகிய இடங்களிலிருந்தும் வங்கி சார்ந்த தொழிற்சங்கத் தலைவர்கள் இதைச்சரிசெய்ய முயற்சியெடுத்தார்கள். இரண்டு சங்க செயற்குழு உறுப்பினர்கள் ஓயது பாடுபட்டார்கள். விருதுநகர் காவல் துறையின் அணைத்து மட்டங்களிலும் எங்களின் நியாயம் அணுசரணையாக்கப்பட்டது. காக்கிசட்டைக்காரர்கள் மேல் இருக்கிற விமர்சனங்களைத் தாண்டிய நிகழ்வு இது. 24.7.2009 அன்று ஏழாயிரம்பண்ணைக் கிளையில் மீண்டும் கையெழுத்திட்டேன்.

குலதெய்வம் கோவிலுக்கு போக இருந்த குடும்பத்தை, தனியே அனுப்பிவிட்டு எங்களோடு சங்க அலுவலகத்தில் படுத்துக் கிடந்தார் சங்கரசீனிவாசன் எனும் பெயர்கொண்ட எங்கள் முதலாளி. சங்கரும், நாசரும் வேலை என்ன வேலை என்று சொல்லிக்கொண்டே என்னை ஆற்றுப்படுத்தினர்கள். தோழர்மூர்த்தி, தம்பிஅருண், அண்ணன் சங்கரலிங்கம் இப்படி எண்ணற்றதோழர்கள் சங்க அலுவலகத்திலேயே தங்கிவிட்டார்கள். ஒருவர் கிண்டலடித்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் வேலை ஏவிக்கொண்டும் அந்த அலுவலகம் ஒரு பேச்சலர் அறையாகி குலுங்கியது.

தோழர் சோலைமாணிக்கமும் போஸ்பாண்டியனும் அலைபேசியை காதிலிருந்து எடுக்காமல் நான்கு நாட்களைக் கழித்தார்கள். அந்த நான்கு நாட்களில் பிஎஸ்என்எல் அலைவரிசை சற்று, சற்றென்ன நிறைய்யவே தடுமாறியிருக்கவேண்டும். ஒரு நாள் காலை ஒதுக்கமான அறையில் தனியே உட்கார்ந்து கொண்டு தனக்குத்தானே இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டிருந்த தோழர் செல்வக்குமார் திலகராஜைப் பார்த்த எனக்கு அழுகையை அடக்க முடியவில்லை. இரவுத்தூக்கத்தில் பற்களை நற நறவெனக்கடித்துக்கொண்டு, பகலிலும் அதைச் செயல்களால் காட்டிக் கொண்டும் மாது அலைந்தான்.

இந்த சுய வருத்தல் சங்கத்துக்காகவா எனக்காகவா எனும் கேள்விக்களுக்கு அதிக விழுக்காடுகளை விழுங்கிக்கொண்ட பதில் நட்பாகத்தானிருக்கும். அதுபோலவே தூரமான இடங்களிலிருந்து தொலைபேசியில் அழைத்த தோழர்கள் தங்கள் துணைவியர்களையும் என்னோடு பேசப்பணித்தார்கள். அவர்களின் ஆறுதல் வார்த்தை என்கண்கள் பனிப்பதை மேலும் மேலும் அதிகமாக்கியது. இவை எல்லாமே அசைபோட அசைபோட செரிக்காத பெருமிதங்கள். ஒரு இருபத்தைந்தாண்டுகால தொழிற்சங்க வாழ்க்கையின் இந்தச்சேமிப்பை ஒரு நூறு ஆண்டுகள் கூட செலவழித்தும் கரைக்க இயலாது.

எனது அருமைத்தம்பி ப்ரியா கார்த்தியைப்போல இந்தத்துறையோடு சம்பந்தமில்லாத பல தோழர்கள் நேரடியாகப் பங்கு கொண்டார்கள். தோழன் மாது எழுதியதும் துடிதுடித்து பின்னூட்டமிட்ட வலையுலக நண்பர்கள். தொலைபேசியில் தொடர்புகொண்டவர்கள். நேரில் எங்களைப்பார்க்க வந்த எங்கள் மண்ணின் மைந்தன் " வெயிலான் " வரும்போது வழக்கு சாதகமான மகிழ்ச்சியை பலமடங்காக்கினார். கஷ்டகாலத்தில் மட்டுமே நண்பர்களின் முழு முகவரியும் தெரியும். அந்த முகவரிகள் மிக நீளமான பாடியலைக் கொடுத்திருக்கிறது.

மீண்டும் பணிக்குச்சேர்ந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்றுதான் கிராமத்திலிருக்கிற எனது தாயார் பொதுத் தொலைபேசியிலிருந்து அழைத்து மனைவியிடம் " நோட்டீசுல பேரு போட்ருக்காமே, என்ன ஆச்சு எம்பிள்ளைக்கு " எனப்பதறி அழுதார்களாம். சங்கம் சாதித்தது, கவலை வேண்டாமென பதில் சொன்னாளாம்.
நேரில் போய் பார்க்கவேண்டும்.அப்போது அந்தக்கண்ணீர் ஆயுதமாகலாம்.
கோவலன் சாதாரண வணிகன், கோப்பெருஞ்சோழன் சர்வவல்லமை படைத்த அரசன்

17.7.09

கெட்டவார்த்தைகளாலும் இதழ் விரியும் ஃபாண்டசிப்பூக்கள்


விடுமுறைநாட்களை தேடிக்காத்திருக்கும் அவர்களுக்காக ஊரின் பொப்துப்பிரதேசங்கள் பல காத்திருப்பது தெரியுமா?. பொட்டல்கள், குட்டிச்சுவர், ஆலமரம், பிள்ளையார் கோவில் கல்மண்டபம், கண்மாய்த் தண்ணீர் எல்லாமே குழந்தைகள்தங்கள் மேல் புரண்டு விளையாடத் திறந்துகிடக்கும். பொங்கல், பூஜை, கொடை தவிர்த்த நாட்களிலும், நேரங்களிலும்கோவில் பிரகாரங்கள் வெறிச்சோடிக்கிடப்பது இவர்களைத்தேடித்தான்.மொட்டைப் பொட்டலில் பூவும், பிஞ்சும், காயும் கனியும், விளைந்து கிடப்பது விளையாட்டுக் காலங்களில் மட்டும் தான். நிற்கக்கூட இடமில்லாத சைக்கிள் ரிக்சாவில் குழுமியிருக்கிற அவர்களைப் பார்த்துக் கண்ணீர்வடிக்காத கவிதை இல்லை ஆனால் அந்த நகரும் புதருக்குள் இருந்து கொண்டு குதூகலாமாய் கத்திக்கொண்டு போகிற அவர்களிடம் இந்த தேசத்தின் காயங்களுக்கெல்லாவற்றிற்கும் மருந்திருக்கிறது.மறைந்த எழுத்தாளர் தணுஷ்கோடி ராமசாமி " கிராமத்து ஏழைச் சிறுவர்களுக்கென்று யாரும் விளையாட்டுப்பொருள் வாங்கித் தருவதில்லை. அதனால் அவர்கள் கண்ணில் காண்கிற எல்லாவற்றையுமே விளையாட்டுப்பொருளாக மாற்றுகிறார்கள்". என்று தனது தோழர் நாவலில் குறிப்பிடுகிறார். இதையே UNICEF நிறுவணமும் தனது ஆய்வில் உறுதிசெய்கிறது. வண்னத்துப் பூச்சியின் இறகை பிய்த்துப் போடாத குழந்தைப்பருவம் இல்லையென்று சமயவேலின் கவிதை சொல்லுகிறது.


சோளத்தட்டையின் நுணியில் மாட்டியிருக்கும்

மயிராலான சுறுக்குக் கயிற்றில்

மட்டிக்கொண்டுசாமியாடக்காத்திருக்கும்

வேலியோரக்கரட்டாண்டி.இப்படிக் காமராஜும் கூட கவிதை செய்யலாம். விளையாட்டுப் பருவத்தை நினைவில் சுமந்தபடி. ஃபாண்டசிப்பூக்கள் பூக்கிற அனதப் பருவத்திலிருந்து தான் உலகமகா இலக்கியத்துக்கான, விதைகள் துளிர்க்கிறது. மாரிச்செல்வியின் வீட்டுக்கொல்லையில் பல கனவுமரங்கள் கிளைவிட்டுக்கிடக்கும், அதில் பூத்துக்கிடக்கிற பூவில் அதிகமாக விளையாட்டுப் பொருளும் கொஞ்சம் நெல்லுச்சோறும், ரொம்பவே கெட்டவார்த்தைகளும் கிடைக்கும். அவளை நாங்கள் " கேமராக்காரி " என்றுதான் கூப்பிடுவோம். ஆரம்பப்பள்ளியின் பதிவேட்டில் மட்டுமே அவளுக்கு மாரிச்செல்வியெனும் பெயர் இருக்கிறது அடுத்து கல்யாணப்பத்திரிகையில் தான் அவள் திரும்பப்பார்த்தாள். அவளை நாம் அடுத்த பதிவில் பார்ப்போம்.

16.7.09

நிஜத்தின் காலில் மிதிபடும் மாயபிமபங்கள்.நேற்றிரவு சாப்பிடும் நேரத்தில் அபிக்கும், ஆதிக்கும் சண்டை நடந்தது. இதோடு சேத்து 127 வது முறையாக பொய் வழக்குப் போட்டு சிறைக்குத்தள்ள எத்தனித்துவிட்டான் ஆதி. பால்ய காலத்து கள்ளம் போலீஸ் விளையாட்டில் கூட சில வரம்புகளும் விதிமுறைகளும் உண்டு. உண்டா இல்லையா ?. இந்த திருச்செல்வம் ஏன் இப்படிக் கஷ்டப்படுகிறார் என்று தெரியவில்லை.


ஒரு பெண் வாழ்வை எதிர்த்துப் போராடுகிறாள் என்பதை வலிந்து, வழிந்து, வலியுறுத்துகிறார். சொல்லவேண்டும், அந்த வகையில் ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனால் அபியை சிரிப்புப் போராளியாக்கி விடுவதுதான் ரொம்பப் பாவமாக இருக்கிறது. அப்றம் செந்தமிழரசி ஐபிஎஸ். இரண்டையும் பார்க்கையில் பழைய்ய ராமாயணப்படம் பார்த்த அலுப்பு மேலிடுகிறது.


லீனா மணிமேகலையின் ஆவணப்படம் " தேவதைகள் " SIGNS2007 ஆம் ஆண்டுக்கான விருதுபெற்றபடம். எங்காவது கிடைத்தால் பார்க்கவேண்டும். மூன்று பெண்கள் பற்றிய காத்திரமான பதிவு அது. நடுக்கடல் போய் மீன்பிடிக்கும் ராமேஸ்வரம் பெண்கள். கணவனை இழந்த பின் பிழைப்புக்கு இறைச்சியை தலைச்சுமையாய் விற்கிற இரண்டாவது பெண், வெள்ளிசெவ்வாயில் சாமியாடிக்குறி சொல்வார். மூன்றாவதை பார்க்க கொஞ்சம் மனதை திடப்படுத்திக்கொள்ள வேண்டும் பாண்டிச்சேரி அரசு மருத்துவமனையில் அனாதைப் பிணங்களை வாங்கிப் புதைக்கும் ஒரு பெண் பற்றிய பதிவு அது. அடிக்கடி அவள் பணியிடத்துக்கு வரும் ஆடவன் மித மிஞ்சிய போதையில் பினாத்துவதும், அதை அவள் கையாள்வதுமானகாட்சிகள் மாயபிம்பங்களை சுக்குநூறாக்கும். ஆனால் எந்தக்காலத்திலும் இந்த காட்சிகள் இரவு ஒண்பது மணிக்கு தொலைக்காட்சியில் இடம்பெறாது. அதுவரை நமது மனைவிமார்களும் தாய்மார்களும் கண்கலங்கியபடி ஆதியைச்சபிப்பதை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.


திருப்பரங்குன்றத்துக்கு அருகில், திருநகரில், தேசிய நெடுஞ்சலையோரம் ஒரு இருசக்கரவாகன பஞ்சர் கடை இருக்கும்.அது செய்தியல்ல. அதை நிர்வகிக்கிறவர் பெண் அதுவும் கூட செய்தியல்ல. அந்த பஞ்சர் தொழில் பார்ப்பவர் கடையின் முதலாளியான ஒரு பெண் என்பதும், சக்கரங்களைக் கழற்றாமலே பஞ்சர் பார்க்கும் வல்லமை படைத்தவர் என்பதையும் தெரிந்து கொண்டால் செந்தமிழரசியும், அபியும் வருஷக்கணக்கில் நம்மைக் கிச்சனங்காட்டுவது தெரியும்.

15.7.09

சாமக்கோடாங்கி.

ஒற்றை நாயின் குறைப்புச்சத்தம் தூக்கத்தைக் கெடுக்கும். ஆளரவமற்ற நடு இரவில் காற்சலங்கைச்சத்தம் குலைநடுக்கும். ச்சூ ச்சூ வென நாய்களை அதட்டும் சத்தம் கேட்கும். கையில் இருக்கும் காண்டா விளக்கும் பெரிய மணியும் ஊருக்குள் சாமக்கோடாங்கி வந்துவிட்டாரென சங்கேத மொழியில் அறிவிக்கும். ஊரெல்லாம் முழித்தாலும் ஒரு வீட்டுக்கதவும் திறக்காது அடைந்துகிடக்கும். எதோவொரு மொழிபோலிருக்கும் தமிழில் குறிசொற்கள் இருக்கும். அந்த இரவை ஒரு அமானுஷ்யம்வந்து ஆக்ரமிக்கும்.

சாமக்கோடாங்கி பற்றி இன்னும் விடுபடாத புதிர்களை கிராமங்கள் அடைக்காக்கின்றன. அவர் நேராக சுடுகாட்டிலிருந்து தான் வருவார். மண்டையோடுகளில் மாந்த்ரீகம் செய்து அதை மாலையாக்கி அணிந்திருப்பார். அவர் ஊரில் நடமாடும்போது யாரும் எதிர்ப்படக்கூடது, அவர்கண்ணில் படுவது மகாப்பாவம். தப்பித்தவறி யாரும் எதிர்ப்பட்டு விட்டாலோ ச்சூ ச்சூ வெனச் சொல்லிக்கொண்டு தன்னை மறைத்துக் கொள்வார். இப்படி ஊரிலுள்ள ஒட்டு மொத்த மக்களுக்குமான பூசாண்டியாக அவர் உருவகப்படுத்தப்படுவார். எதிர்க்கேள்வி கேட்கும் இளவட்டங்களை அதட்ட ஊரே ஒட்டுமொத்தமாக திரண்டுவரும். வழிபடத் தகுந்தவராக இல்லாமல் வழிவிட்டு ஒதுங்குக்கிற ஒரு பயம் அவர்மேல் கவ்வி இருக்கும். காலபைரவன் என்னும் பெயர் கொண்ட சாமக்கோடாங்கி.


இந்த பயமும் அறியாமையும் மட்டும்தான் இன்னும் கூட கிராமங்களில் சாமக்கோடாங்கிகள் புழங்குவதற்கான சூழலை ஏற்படுத்தித்தருகிறது. ஒரு இருபத்தைந்து வருடம் வாழ்ந்த போது வந்துபோன சாமக்கோடாங்கிகள், நகர வாசம் வந்த பிறகு அவர்கள் ஒரு இரவைக்கூட அலைக்கழிக்க முயலவில்லை. இங்கே அலைக்கழிக்கப் படுவதற்கு வேறு வேறு காரணங்கள் ஆயிரம் இருக்கின்றன.


முழித்துக்கிடக்கும் ஜோடிகள் சபித்துக்கொள்ளும். முழித்துவிட்ட ஜோடிகள் வழ்த்திக்கொள்ளும். இடம் மாறி வகையறாக்கள் பதட்டம் கொள்ளும். சிறுவர்களுக்கு பயமும் ஆர்வமும் முளைத்துக்கொள்ளும். ஒரு மனிதனின் வரவால் ஒரு இரவே தலை கீழாக்கப்படும். அந்த இரவின் ஒரு சிறு பகுதியை எடுத்துக்கொண்டு அவர் திரும்பிவிடுவார். அதற்குப்பிறகான இரவு இருள் கவிழ்ந்த பகலாகிவிடும்.


பகலில் திரும்ப வரும் போது, இரவில் அவர் சொன்ன அருள்வாக்குளின் பதவுறை பொழிப்புறை கேட்டுத்தெரிந்து கொள்வார்கள். பெரும்பாலும் கெட்டவைகள் எதிர்வரும் என்கிற எச்சரிக்கை மட்டுமே அவரது அருள் வாக்காக இருக்கும். அப்படி சொன்ன வீடுகள் அதற்கான பரிகாரம் செய்தே தீரவேண்டும். பசியும் வறுமையும் மிகுந்த அந்த மனிதன் பரிகாரப்பொருள்களை வாங்கிக்கொண்டு திரும்பிப்பாரமல் போய்விடுவார்.எதிர்முனையில் காத்திருக்கும் சாமக்கோடாங்கியின் குடும்பத்துக்கு கொஞ்ச நாள் பசியில்லாமல் கழியும்.

12.7.09

அறிவியலால் இடமிழந்த பெண்ணும், இயற்கையும் - வந்தனா சிவாவின் " உயிரோடு உலாவ "
வேட்டைக்கு போவதும் விலங்குகளைக் கொள்வதுமான கற்காலத்தில் பேறுகாலத்துக்கென வீட்டிலிருந்தவள். உணவு சேகரித்தாள். கொல்லப்பட்ட உயிர்களிடம் மன்னிப்புக்கேட்க அதன் குட்டிகளை வளர்த்தாள். குட்டிகளுக்கு உணவுகொடுக்க பயிச்செடிகளை வளர்த்தாள். பயிச்செடிகளிலிருக்கும் தாணியம் உண்பதற்காணதென்பதைக்கண்டு பிடித்தாள். ஆதிபெண் அவளே கண்டுபிடிப்புகளின் தாய்.விலங்குகள் கிடைக்காதபோழ்தில் தாணியம் சேகரிக்க பயிர்கள் விளைவித்தாள். அதன் வளர்ச்சிக்குத் தேவையான நீரை கொண்டு வர ஓடை, ஆறுகளின் திசைமாற்றினாள். தாணிய உற்பத்திகான 23 க்கும் மேற்பட்ட கருவிகள் கண்டுபிடித்ததும் அவளே. குகைய வீடாக்கியதும் வீட்டை ஊராக்கியதும் பெண்ணாளே ஆனது.


இப்படி எல்லவற்றுக்கும் மூலகர்த்தாவான பெண்ணின் ஆளுமையைக்கீழே தள்ளியது யார் ? எப்போது?


எனும் கேள்விகளுக்கு விடையாக நவீன அறிவிலின் தந்தை என அழைக்கப்படும் பேக்கனின் ( 1561-1626) கண்டுபிடிப்புகள் பதிலாக இருந்தது. 1951 ல் பாரிங்க்டனால் மொழிபெயர்க்கப்பட்ட அவரது புத்தகத்துக்கு " காலத்தின் ஆண்மை உதயம் " என்ற பெயரிட்டு மகிழ்ந்தது. தனது ஆணவத்தை நிலை நிறுத்திக்கொண்டது ஆண்கள் சமூகம்.காடுகளும் பெண்களும் இணைபிரியாதவர்கள் வனப்பேச்சி, பிருக்ருதி, ரூபேஸ்வரி, பாமனி, வனதேவதை பூமாதா, எல்லாம் காடுகளோடு பெண்ணுக்குள்ள பந்தம் கூறும் ஆதாரப் பெயர்கள். மத்திய இந்தியாவில் உள்ள ஒருவகை மோஹ்வா பூக்கள், உண்பதற்கானது. பச்சையாகவும் வேக வைத்தும் காயவைத்துப் பொடியாக்கியும் சாறு எடுத்தும் என அதற்கு 20 க்கும் மேற்பட்ட பயன்பாடுகளுள்ளது. கர்நாடகப்பழங்குடியினர் 27 வகை இலைத்தாவரங்களை உணவாக உண்கின்றனர். அங்குள்ள 37 வகைத்தாவரங்கள் இருளர் எனும் பழுங்குடியினப் பெயர் கொண்டதகவே இருக்கின்றன.1799 ல் கிழக்கிந்தியக்கம்பெனிக்கு விற்பதற்குமுன்னதாக இந்தியக்காடுகள் மசுபடாமல் கிடந்தது. தண்டவாளங்களுக் காகவும், கப்பல்களுக்காகவும் பிரிடிஷார் ஒரே வருடத்தில் 10000 தெக்குமரங்களை வீழ்த்தினார்கள். அப்போதுகூட அது பொதுவில்தானிருந்தது அதாவது பழங்குடியினரிடம். 1807 நவம்பர் 10 ஆம் தேதி கேப்டன் வாட்சன் இந்தியாவின் முதல் வன அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அப்போது முதல் காடுகளின் காவலரான உள்ளூர் மக்கள் விரட்டப்பட்டு, அரசு காடுகளை அழித்தது. காலனி ஆதிக்கம் அறிவியல் தேவை, நாகரீகம் உலகமயம் என இயற்கை நிமிடத்துக்கு நிமிடம் படுகொலை செய்யப்பட்டது.வராலாறு, வனவியல், பெண்கள், பாலின மேலாதிக்கம் தொடங்கி சிப்காட் வனப்பாதுகாப்பு இயக்கம், பசுமை பாதுகாப்பு இயக்கம் எனவும். இமயமலை தொடங்கி கேரளக்காடுகளில் வசிக்கும் மலை மாந்தர்களின் வாழ்க்கையை பறிக்கும் நீர்த்தேக்கத் திட்டங்கள் அதை எதிர்த்த கிளர்ச்சி எனவும். இந்த நூற்றாண்டின் மறுதலிக்க முடியாத பெயர் மேதா பட்கர் என நீள்கிறது ஒரு புத்தகப்புதையல். வந்தனா சிவா எழுதிய " உயிரோடு உலாவ " என்கிற அந்தப்புத்தகம்.மனது மயக்கும் இசைபோலவோ, ஒரு கவிதைப்புத்தகம் போலவோ, ஒரு சிறுகதை தொகுப்பைப்போலவோ பாக்கென்று உள்ளிழுத்துக்கொண்டு ஓடுகிற புணைவில்லாத கட்டுரைதான் என்றாலும் கூட அவை எல்லவற்றையும் உற்பத்திசெய்துகொடுக்கிற அடர்ந்த வனமாக இந்தப்புத்தகம் விரிகிறது. சின்ன சின்ன சேதிகளில் வியப்பும், அறியாமையும் வந்து நின்று ஒரு புரிதலுக்கான பாதை காட்டுகிறது.படித்துக்கொண்டிருக்கும்போது இடைமறிக்கும் மனைவியின் மேல் வரும் எரிச்சலுக்கு மாறாக மரியாதை கூடுகிறது. துணி துவைக்கயில், காய்நறுக்கையில் வடியும் வேர்வையில் சிறிது பங்கெடுக்க ஆர்வம் வருகிறது." உயிரோடு உலாவ " - வந்தனா சிவா.தமிழில் பூவுலகின் நண்பர்கள்.வெளியீடும் அவர்களே. விநியோகம் சவுத் விசன்

9.7.09

குபேரன் - விளையாட்டுப்பிராயத்தைக் களவுகொடுத்தவன்
அவன் பெயர் குபேரன். வயது எனது இளையமகனின் வயது இருக்கலாம். அதாவது பத்து அல்லது பதினொன்று. அழுக்கேறிய பெரிய மேல்சட்டை. அவனது வயதுக்கு மீறிய அணுபவத்தின் குறியீடு. ஒரு தேனீர்க்கடையின் சிப்பந்தி. எச்சில் குவலைகளைக் கழுவுவான். தாகமெடுத்தவர்களின் பணியிடத்துக்குப்போய் தேனீர் விநியோகிப்பான். அவசரத்தேவைக்கு கடைக்கு போவான். அது இல்லாத நேரங்களில் கடைமுதலாளியிடம் அடியும் உதையும் வாங்குவான். அவனுக்கு கொடுக்கப்படும் ஊதியம் இருபது ரூபாய். ஒவ்வொரு இரவும் மதுவிடுதியில் மித மிஞ்சிய போதையில் திண்ண இயலாமல் கீழே போட்டுவிட்டு வரும் வறுத்த கோழியின் விலையில் நான்கில் ஒரு பங்கு.அருகிருக்கும் அந்த புகைப்பட நிலையம் நிரந்தர வாடிக்கை தளம். தேனீர் கொண்டு வருகிற சாக்கில் அமுங்கிக்கிடக்கும் தனது குழந்தைப்பிராயத்தை தவணை முறையில் வெளியில் எடுத்துவிடுவான். அது அவனது ஆசுவாச நேரம். ஒடிந்துபோன சுழல் நாற்காலியில் உட்கார்ந்து காரோட்டுவான். பிளாஷ் விளக்குகளின் நடுவில் நின்று எதிரே இல்லாத புகைப்படக்கருவிக்கு போஸ் கொடுப்பான். காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிற வண்ணப்புகைப் படங்களுக்குள் புகுந்து வான்காவைப்போல பிரயாணம் செய்வான். குடும்பப்புகைப்படத்துக்குள் தொலைந்து போன தகப்பனின் முகம் தேடுவான்.யாராவது கூப்பிட்டு அவன் தலபுராணம் கேட்டால் "போங்கண்ணே" என்று உதாசினப்படுத்திவிட்டு ஓடிவிடுவான். உரையாடல்களை ஒளித்து வைப்பதுபோலவே சதா நேரமும் அவனது இரண்டு பிஞ்சுக்கைகளை பிரத்தியாருக்கு காண்பிக்காமல் மறைத்துக்கொள்வான். யாரும் பார்க்காத நேரத்தில் எச்சிலைத்துப்பி அவன் விரலிடுக்குகளை செயற்கையாக ஈரப்படுத்திக்கொள்வான். எச்சில் தண்ணீரில் கிடக்கிற விளையாட்டு விரல்களில் நிரந்தரமாகக்குடிகொண்டு விட்டது சேத்துப்புண். இப்போது அதோடும் விளையாடுகிறான். "பொன்மகள் வந்தாள் பொருள்கோடி தந்தாள்" என்று அவனது மானசீக கதாநாயகன் போல பாவனை செய்து பாட்டுப்பாடுவான். அப்போது கெட்டவார்த்தையில் திட்டிக்கொண்டு இழுத்துப்போகும் கடை முதளாலி பொடதியில் சடீரென அடிப்பது அவனுக்கு ஒரு போதும் வலித்ததில்லை.

4.7.09

இரண்டு உண்டியல்கள்.

செருப்பில்லாத கால்களில் இரண்டுமைல் நடந்து டவுன் பஸ்ஸுக்கு காத்திருந்து கல்லூரி வர நெஞ்சுரம் வேண்டும். வண்ண வண்ண டிபன் பாக்ஸ் கொண்டு வரும் பிகாம் வகுப்பில் தூக்குச்சட்டியில் ரசஞ்சோறு கொண்டு வர வலிமை வேண்டும். ஏழெட்டுப்பேர் சேர்ந்து பகிர்ந்து சாப்பிடுகிற போது மர நிழல் தேடி, தனியே சாப்பிடத் துணிச்சல் வேண்டும். சோக்கு உடை தாமோதரனோடு சிரித்துப்பேசிவிட்டு அலட்சியப்பார்வையோடு கடந்துபோகும் பொருளியல் போதகரை சகித்துக்கொள்ள திடக்காத்திரமான மனசு வேண்டும். இவையெல்லாம் ஒருங்கே அமைய வேண்டுமென்றால் கடைக்கோடிக் கிராமத்தில் கூலிக்காரத் தாய் தகப்பனுக்கு மகனாகப் பிறந்தால் மட்டும் போதும்.


பிறகு தோளில் கை போடுகிறவன் தானே உயிர் நண்பனாவான். அவனுக்கு உலகம் என்ன பெயர் வேண்டுமனாலும் வைக்கட்டும். கர்ணனுக்கு நண்பன். ரோட்டில் பசித்துக்கிடக்கும் பூஞ்சை உடலுக்கொரு ரூபாய் அதுவுமில்லை யென்றால் ஒரு உச்சுக்கொட்டல் கேட்கும் போது அந்தக்குரலோடு இணைந்து நடக்க எனக்கென்ன தடை. இழப்பதற்கெதுவுமற்ற என்னிடம் அள்ள அள்ள குறையாத அன்பிருத்தது. அந்த அன்பிற்குப் பாத்திரமாக அவர்களிடம் எல்லாம் இருந்தது.


தோழர் என்னும் வார்த்தை, தோளில் தொங்கும் ஜோல்னாப்பை, அந்தப்பைக்குள் என் கேள்விகளைத் தீர்த்துவைக்கிற புத்தகப் பக்கங்கள். அந்தச்சிகப்பு நிற தகரத்துக்குள் விழுகிற சில்லறைகளின் சத்தத்தில் ஒரு யுகாந்திரப்பசியைப் போக்கும் ஓசை கேட்டது. அதன் காது வளையத்துக்குள் கை நுழைத்துக் குலுக்க கிடைத்த பாக்கியம் எனக்கு பெரும்பாக்கியம் எனக்காத்துக்கிடந்தேன்.


தனிப்பாடம் என்று நானும், செய்முறை என்றென் தாயும் இருக்கங்குடி மாரியம்மன் கோவிலில் சந்தித்துக்கொண்டபோதுஎனது கையில் சிகப்பு உண்டியல் இருந்தது. அவள் போட்ட காசோடு இரண்டு சொட்டு கண்ணீரும் உள்ளே விழுந்தது." கல்ல ஒடைச்சு கருமலைய நீஞ்சி, வேகாத வெயில்ல வெறகு சொமந்து படிக்க வச்சது இப்படிப் பிச்சயெடுக்கவா" என்று சொல்லிச்சொல்லி அழுத கண்ணீரை நிறுத்த அப்போதில்லை வார்த்தைகள். என்னிடமும் கண்ணீர் தானிருந்தது.தானுண்டு தன் வேலையுண்டு எனும் நியதிக்குள் சிக்காத மாணவர்கள், படிப்பாளிகள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள்தறிகெட்டவர்கள் எனும் மூட நம்பிக்கை திணிக்கப்பட்ட சமூகத்தில் கூலிக்காரத்தாய் எப்படி கார்க்கியின் தாயாக மாற முடியும்.


வங்கியில் வேலை கிடைத்து அதே மாரியம்மன் கோவில் உண்டியல் காசு எண்ணிக்கைக்கு போனேன். என் அம்மாவுக்கு அளவு கடந்த சந்தோசம். பிரபலமான ஒரே ஊர், இரண்டு உண்டியல்களை எனக்கு அறிமுகப்படுத்தியது. காசு போட்டதோடு முடிந்துவிடுகிறது பக்தர்களின் வேலை. அந்த உண்டியல் பணத்தை வங்கியில் போடச்சொல்லி காத்திருந்த வங்கிகள் எத்தனை.அந்த உண்டியல் பணத்தை பராமரிக்க நடந்த போட்டியில் எத்தனை வெட்டுக்குத்து. எத்தனை வருடம் நீதிமன்றம். இங்கேயே இப்டீன்னா ?...


என் அம்மாவிடம் மட்டுமல்ல யாரிடமும் இதைச் சொல்லமுடியாது, அருள் வந்துவிடும்.

ஆராய்ச்சிமணியை இடைமறிக்கும் பாதுகாப்பு

மெட்டல் டிடெக்டர்கள், தானியங்கி ஒளிப்பதிவுக்கருவி, வருகைப்பதிவேடு, இதையெல்லாம் தாண்டி கண்காணிக்கசீருடையிலும், சாதா உடையிலும் காவலர்கள். அதையும் தாண்டிப்போனால் பெண்கள்,ஆண்களைத் தனித்தனியே சோதனை செய்ய காவலர்கள்.
பல அடுக்கு பாதுகாப்பு வளயங்கள் தாண்டிஅடையாள அட்டை வாங்கிப் போனால் தலைமைச் செயலகம்.உள்ளே ரக ரகமான வாகனங்கள் தனியார்களதும், அரசாங்கத்தினதும்.
ஏழு மழைதாண்டி ஏழுகடல் தாண்டிமேலேறிப்போனால் அமைச்சர்கள் அலுவலர்கள்சிப்பந்திகள், கோப்புகள்.கால்கடுக்க காத்திருந்துமனுக்கொடுத்து திரும்பும் சாமான்யகள்

நூறு ஆண்டுகளுக்குமேல் பழமையான மரங்கள்அந்த மரங்களுக்கு மேலே எந்த அடையாள அட்டையுமில்லாமல் வந்துபோகும் பறவைகள்.

2.7.09

ஷாஜஹானின் கவிதை.

வலிகளின் கொடுமையை
உரக்கச்சொல்லும்இவை
எழுத்தாளர் ஷாஜஹானின் கவிதை
.

கருப்பும் வெளுப்பும்
---------------------------

கருத்தவன் காணும் உலகு ஒன்றாகவும்
வெளுத்தவன் பார்ப்பது மற்றொன்றாயும்
எதிரெதிர் திசைகளில் ஒரே வாழ்க்கை.


கடலோர வீட்டுக்கு உயிர்பயம் தந்து.
மாடவீதியில் இதம் சுகம் தந்தும்
வெவ்வேறாய் அர்த்தப்படுகிறது
அதேபௌர்ணமி இரவு.


குடிசை வீட்டின் தூக்கம் கெடுத்தும்
வீட்டில் தாலாட்டிக் கொடுத்தும்
மாறு பட்டு நிறம் காட்டுகிறது
அந்திநேர கனமழை.


உரைபனிக் கொடுமையைஒரு போதும்
அறியான் வெப்ப நாட்டான்
பெண்ணின் வலிகளெப்படி
அறிவான் ஆணாய்ப்பிறந்தவன்.


அடங்கிப் போவென நீ போதிப்பதற்கும்
அத்து மீறி அவன் கொதிப்பதற்கும்
ஊருக்குள் உன்வீடும் சேரியில் அவன் வீடுமாய்
பிரிந்துகிடப்பதே காரணம் என்றுணர்.

1.7.09

திண்ணைப் பேச்சை தெருச் சண்டையாக்கவேண்டாம் - தோழர் தமிழ்நதிக்கு வேண்டுகோள்


எங்கள் அன்புத்தோழர் தமிழ் நதிக்கு வணக்கம்.

கடவு தமிழ்சங்கம் நடத்திய உயர்மட்ட எழுத்தாளர்களின் கூடல் குறித்த இரண்டு பதிவுகளைப் படிக்கும் முன்னாள் உங்கள் நேர்காணல் படிக்க நேர்ந்தது. ஆங்காங்கே உங்கள் கவிதைகளும் கூட வாசக மனதில் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கியவை. அப்புறம் சென்னை எழுத்தாளர்களும் எங்கள் மதிப்பிற்குறிய அய்யா சுபவீ கலந்துகொண்ட இலங்கைப் பிரச்சினைக்கு எதிரான கூட்டம் பற்றிய பதிவு படிக்க நேர்ந்தது. சென்னையில் வைத்து தோழர் மாதவராஜ் சிபாரிசின் பேரில் வீடு விட்டு பிரிந்து வந்தபின்னும் வீடே ஆக்ரமிக்கும் ஒரு பெண்ணின் புழுக்கமான ஒரு பதிவை படித்தேன். சமத்துவ சிந்தனையாளர் எவரும் தங்களின் பிம்பத்தை சத்தியமாக மேலேற்றிகொள்ள நேரும் அறிவார்ந்த பதிவு அது. மிகக் குறுகிய காலத்தில் தமிழ் வாசகப்பரப்பில் ஒரு தீர்க்கமான பெண்ணியச்சிந்தனை கொண்ட தமிழ் நதி கவனம் பெறக்கூடியவர் என்பதை நிராகரிக்க முடியாது.


கிடத்தட்ட பதினோரு மாதங்களாக நான் இந்த வலை எழுத்துகளை ஓரளவு கவனித்து வருகிறேன். இங்கே ஜாதியால் அல்ல கருத்தாலும் அல்ல வேறு எதோ ஒருவகையிலான குழு மனப்பாண்மை அதிகரித்து வருவதை எவரும் எளிதில் அவதானிக்க முடியும். அதை நீங்கள் இந்த பதிவின் மூலம் ஆதவன் தீட்சண்யாவுக்கெதிரான குழுவாகத் திருப்பிவிட்ட மாதிரி எனது சிற்றறிவுக்கு படுகிறது. இன்னொன்று மிக மிக மேல்தட்டு, அதாவது ஆளுமை எழுத்தாளர்கள் மட்டும் எழுதினாலேஈழப்பிரச்சினை தீர்ந்து விடும் என்கிற மூட நம்பிக்கை கொண்ட சிந்தனைகொண்டது உங்கள் கேள்விகள்.
வெளியிலும் வலையிலும் ஈழப்பிரச்சினை தொடர்பான மிக அடர்த்தியான மனித நேய பதிவுகள் ஆயிரமாயிரம் வந்து கொண்டிருக்கிறது. அதை மேற்கோள் கூட காட்ட முடியாத ஒரு புறக்கணிப்பை பட்டவர்த்தனமாக்கி விட்டீர்கள் இந்த பதிவின் மூலம். குடித்துவிட்டு சண்டைபோடுவது, நீயா நானா, ஈகோக்களை உரசிக்கொள்வது, தனிமனித ஒழுக்கக்கேட்டை பொதுவாக்குவது எப்படி ஒரு பெண்ணிய வாதியின் காத்திரமான பதிவாக முடியும். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.நீங்கள் ஆதரிப்பதானாலும், ஆதவண் நிராகரிப்பதாக பிம்பத்தை உண்டாக்குவதாம் மட்டுமே ஈழப்பிரச்சினையை தீர்த்துவிடுமா ?


நேற்றுக் கூட புகை வண்டியில் ஒரு நவீன உடையணிந்த பெண்ணொருவர் கரைவேட்டி கட்டிய குடிபோதை அரசியல்வாதிகளால் கேலி பண்ணப்பட்ட சம்பவம் நேர்ந்தது. அது அந்த கனவான்களின் முன்பதிவு இருக்கையின் ஒழுங்குபடுத்தப்பட்ட நடவடிக்கைகளைச் சிறிது கூடச் சலனப்படுத்தவில்லை. தங்களின் நிறுவனத்தின் போர்டு மீட்டிங்குக்குசெல்லுவதற்கான விமான சீட்டுக்குறித்த தகவல் நுணுக்கங்களை மடிப்புக்குலையாமல் பகிர்ந்து கொண்டிருந்தனர்.எனக்கு குலை பதறியது நான் பெண்ணல்ல. எந்தாய், என்மனைவி என் தோழி எல்லாம் பெண்.


பெற்ற தாயை, உடன்பிறந்த தங்கையை வல்லுறவு கொள்ளச்செய்த கொடூரம் இந்த தேசத்தில் நடந்தது. அதை நமது வசதிக்கு ஏற்ப ஒதுக்கிவிடலாம் கனவானகள் போல. அது ஒரு தலித் பிரச்சினையாக வேண்டாம் தலித்துகளின் தலித்துகளான பெண்ணிய நோக்கில் பார்த்தால் உலகம் முழுக்க தேடினாலும் கேள்விப்படாத பெண்னிய குரூரம் அது. எத்தனை பெண்ணிய எழுத்தாளர்களைச் அது சலனப்படுத்தியது சொல்லுங்கள். அது ஒரு 20 சதமான ஒதுக்கப்பட்ட இந்தியர்களில் அதுவும் மராட்டிய தலித்துகளின் பிரசினையாக மட்டுமே அனுகப்பட்டது. ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து வந்து வெள்ளைக்காரன் இந்த தேசத்து மூலைமுடுக்கு இண்டு இடுக்கெல்லாம் ஆக்ரமித்தான். மானமுள்ள இந்தியன் ஆறு நூறு வருடம் அனுமதித்தான். ஆயிரமாயிரம் ஆண்டு பக்கத்து தெருவில் வசித்த தலித்துகளை தெருப்பக்கம் திரும்ப விடாமல் அடக்கிவைத்தான் அதே மானமுள்ள இந்தியன்.


இதை யார் எழுதுவது, எப்பொழுது சொல்லுவது, எப்பொழுது எழுதுவது ? சொல்லுங்கள் தமிழ்நதி.எழுதி விட்டால், அந்த எழுத்துக்களில் இருந்து அப்படியே ஒரு அரைவட்டம் அடித்து ஒதுங்குவதை உணராத அறிவீனரல்ல நாங்கள்.


ஆனால் பட்டியல் வைத்துக்கொண்டு நீ ஏன் எழுதவில்லை என்று கேட்பதோ, இல்லை வீட்டுப்பாடம் எழுதினாயா என்பதுபோல சரிபார்ப்பதோ நல்லதல்ல. இன்னொன்று, இதுபோன்ற கேள்விகளை மூளைகளில் இருந்து அகற்றச் சொல்வதும் அதை மிகச்சிறந்த திறனாய்வாளர்கள் மறைந்திருந்து ஆதரிப்பதும் எதையோ கூர்தீட்டுவது போல இருக்கிறது. யாராவது ஒருவர் பெண்ணிய எழுத்தாளரை கேவலப்படுத்திப் பேசினால் மனது வலிக்கிற உதிரம் துடிக்கிற அதே வருத்தம் மேலிடுகிறது தோழரே. ஆதவன் கேட்ட கேள்விகளை விமர்சிக்கிற சாக்கில் தலித் எழுத்துக்களை எல்லாம் சகட்டுமேனிக்கு கெட்ட வார்த்தையில் திட்டுகிற பின்னூட்டங்களை உங்கள் பதிவு கொண்டாடுகிறது. தயவு செய்து வேண்டாம் தமிழ் நதி. உலகத்து ஒடுக்கப்பட்டவரெல்லாம் எனது என்னும் தோழமை தான் எழுத்து. அதில் ஆண், பெண், ஜாதி பேதம் வேண்டாம்.


உங்களுக்கு வந்த பின்னூட்டங்களில் உள்ள இடைவெளிகள், அதிலிருக்கிற கோபம் தவறானது அதை ஆதரிக்கவோ அணுமதிக்கவோ வேண்டாம் ப்ளீஸ். ஆதவனை கேவலப்படுத்துவதால் மாண்டுபோன எம் தமிழ்சமூக ஆன்மாக்கள் சாந்தியடைந்து விடுவதுபோன்ற பின்னூட்டங்கள். தலித்தியத்தைகேலி செய்வதால் தனி ஈழம் அடைந்துவிட்ட திருப்தி வந்துவிட்ட எழுத்துக்கள், ரொம்பக் கஷ்டமாயிக்கிறது தோழி. சரிசெய்யுங்கள், இல்லாவிட்டாலும் கூட உங்கள் பேரில் உள்ள பெண்ணியவாதிக்குறிய மதிப்பு. உங்கள் எழுத்தின் மீதுள்ள மரியாதை எள் முனையளவும் குறையாது.


அப்படிக் குறைவதற்கு எழுதென்ன டென்னிஸ், கிரிக்கெட், ஷேர் மார்க்கெட் தரவரிசையா சரிவதற்கு ?. இல்லை பண்ணையார் வீட்டு சேவகப்பொருளா புறந் தள்ளுவதற்கு.