Showing posts with label கவிதை.. Show all posts
Showing posts with label கவிதை.. Show all posts

29.12.10

இடப் பெயர்வு...

மூன்றாவது இடம் மாறிய போதும்
நிலைகொள்ளாது அலைகிறது
வேகம் குறையாத குறுவாலணில் ஒன்று.

அடர்ந்த பெரு மரத்தின் மறைசலைப்போல
பிறிதொன்று இல்லாது சுற்றுச்சுவரில் நின்று
மயிருணர்த்தி அலகுரசிக்கொள்கின்றன
காதற் குருவி ரெண்டு.

சுவர்தாண்டி விழுந்த நிழலில் அமர்ந்து கொண்டு
மதியக்கஞ்சி குடித்து இளைப்பாறிய சித்தாள்கள்
இன்னொரு இடம் தேடிப்போகிறார்
திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு  

என்ன ஒரே எறும்புப் பட்டாளமா இருக்கு
என புலம்பிக்கொண்டே துடப்பம் எடுக்கிறாள்.
வெட்டுப்பட்டு சாய்ந்துகிடக்கும் வாதா மரத்தின்
புலம்பல் மொழி கேட்காத வீட்டெஜமானி.

25.12.10

கூறு போட முடியாத குளிர்.

வியர்த்துக் குளிர் நிழல் தேடி
வெயில் அலைந்த தெருக்களில்
நடுக்கும் பனி படுத்துறங்குகிறது.

வெது வெதுப்பான இடம் தேடிவருவோர்க்கு
பீடிக் கங்குகளும் பெருமாள் கடைத் தேநீரும்
கடந்து போகும் வாகனப்புகையும்
இடைக்கால இடம் தருகிறது.

பஜனைப்பாடல்களும் வருகைக்கீதங்களும்,
உறக்கம் கெடுத்தாலும் ஒரேகுரலில்
இழுத்துக்கொண்டு போகிறது
இழந்த இசை நினைவுகளுக்கு.

அண்டை வீடுகளுக்கும் பரவுகிறது
கிழிசலில் சிதறும் கிறிஸ்துமஸ் நட்சத்திர வெளிச்சம்
அங்கே உறங்கும் குழந்தைகள் மீது
குவிந்து கிடக்கிறது ஆலீஸின் அற்புத உலகம்.

வண்ணப் பொடிகளில் உயிர்க்கும்
வட்டவடிவக் கனவுகளைத் தொற்றியபடி
கோல வாசல்களைக் கடந்துபோகிறார்
மார்கழிக் காலைகளின் பாதசரிகள்.

வீடுகள், கோடுகள், வண்ணங்கள்
தாண்டிய இயற்கையின் வீர்யத்தோடு
சிரித்துக் கொண்டிருக்கிறது மார்கழிப்பனி.

11.6.10

பஞ்சாலையிலிருந்து ஒரு மாலை விடுதலை

கூடடையும் குதூகலத்துடன்
சாப்பாட்டுக் கூடையோடு
திரும்புகிறது பொழப்பின் மாலை.

தூக்குவாலியும் வயிறும்
காலியாய்க்கிடக்க ததும்புகிறது
வீட்டுமுற்றத்தில் காத்திருக்கும்
பிஞ்சுவிரலும் பீடிவாசமும்.

தலையில் படர்ந்திருக்கும்
பஞ்சுத்துகள்களை ஒதுக்க மனசில்லாமல்
பேருந்து ஏறுகிறது நூலாம்படை வாழ்க்கை.

பயண நெரிசலில் உரசும்போது
பறக்கிறது தாவணி நாட்களின் பொறி.
நடத்துனரின் விசிலொலியில்
ஒளிந்திருக்கிறது மாரியப்பனின்
சிருங்காரச் சீழ்கையொலி.

பள்ளிக்கூடப் புத்தகமும்
டீச்சர் கனவும் பரணில் கிடக்க
நிகழ்வுகளும் நினைவுகளும்
மாறி மாறிசுழல்கிறது
இரவுபகலெனும் அன்றாடங்களில்.

3.6.10

அதிகாலையிலே ஆரம்பிக்கிறது

சாமக்குருவி கூவியது
அப்புறம் முழித்துக்கொண்ட
ஒற்றைச் சேவலும் கூவியது
சரி இனி விடிந்துவிடும் எனச்
சமாதானத்தோடு தூங்கப்போயின.
சூரியன் சிரித்துக்கொண்டது.

பாக்கெட் பாலை நீரூற்றி
பசும்பாலாக்கினான்
வித்தை தெரிந்த சமத்தன்
பசுமாடு சிரித்துக்கொண்டது.

2.7.09

ஷாஜஹானின் கவிதை.

வலிகளின் கொடுமையை
உரக்கச்சொல்லும்இவை
எழுத்தாளர் ஷாஜஹானின் கவிதை
.

கருப்பும் வெளுப்பும்
---------------------------

கருத்தவன் காணும் உலகு ஒன்றாகவும்
வெளுத்தவன் பார்ப்பது மற்றொன்றாயும்
எதிரெதிர் திசைகளில் ஒரே வாழ்க்கை.


கடலோர வீட்டுக்கு உயிர்பயம் தந்து.
மாடவீதியில் இதம் சுகம் தந்தும்
வெவ்வேறாய் அர்த்தப்படுகிறது
அதேபௌர்ணமி இரவு.


குடிசை வீட்டின் தூக்கம் கெடுத்தும்
வீட்டில் தாலாட்டிக் கொடுத்தும்
மாறு பட்டு நிறம் காட்டுகிறது
அந்திநேர கனமழை.


உரைபனிக் கொடுமையைஒரு போதும்
அறியான் வெப்ப நாட்டான்
பெண்ணின் வலிகளெப்படி
அறிவான் ஆணாய்ப்பிறந்தவன்.


அடங்கிப் போவென நீ போதிப்பதற்கும்
அத்து மீறி அவன் கொதிப்பதற்கும்
ஊருக்குள் உன்வீடும் சேரியில் அவன் வீடுமாய்
பிரிந்துகிடப்பதே காரணம் என்றுணர்.