Showing posts with label முழுஅடைப்பு. Show all posts
Showing posts with label முழுஅடைப்பு. Show all posts

7.7.10

தேங்கிக்கிடந்த மந்தத்தை உடைப்பெடுத்த முழு அடைப்பு.

இந்த முழு அடைப்பைப் பற்றிப் பேசியே ஆக வேண்டும்.

முன்னமெல்லாம்,ஆளுங்கட்சி,எதிர்க் கட்சி, அடிக்கடி கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இந்த நிகழ்வில் பெரிதாய் ஏதும் தாக்கமிருக்காது.ஒன்றிரண்டு மாநிலங்கள் வெறிசோடிக்கிடக்க தமிழகம் அதுபாட்டுக்கு எனக்கென்னேன்னு இயல்பாக இருக்கும். ஆனால் இந்த முறை ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தபிறகும்,ஓசித்தொலைக் காட்சிப் பெட்டிவாங்கிக்கொண்டபிறகும்,அதில் செம்மொழி மாநாடுகளைப்பார்த்த பிறகும்,அரசு கடுமையாக எச்சரித்த பிறகும் மக்கள் மௌனமாக ஒரு எதிர்ப்பைப் பதிவாக்கி இருக்கிறார்கள்.தமிழகத்திலுள்ள அத்துணை நகரங்களிலும் தேர்வு நிலைப் பேரூராட்சிகளும் கூட கடைதிறக்காமல் சாத்திக்கிடந்தது கவனம் பெறக்கூடிய நிகழ்வு.வீட்டுக்குள்ளே ஈரத்துணியைச் சுத்திக்கிட்டு சுருண்டுகிடந்தால் தமிழர்களுக்கு எந்தச்செலவும் இல்லை.எழுந்து வெளியே வாசலுக்கு வந்தால்தான் எல்லா வினைகளும் வந்துசேரும்.அங்கே காற்றுக்கூட கல்லாப்பெட்டி வைத்துக்கொண்டு காத்திருக்கிறது துட்டுப்புடுங்க.

தொலைக்காட்சியை வெறும் ஊடகமாக கற்பிதம் செய்துகொள்வதைப்போலொரு முட்டாள்தனம் ஏதும் இல்லை.
அது கட்சிகளின் (காட்சிகளின் அல்ல) வழியே வில்லாததை எல்லாம் விற்றுத் தீர்க்கிற வியாபாரிகளின் ஊது குழலாகிப்போனது யருக்கும் தெரியாமல்.அரிசியில் கல்பொருக்குவதை விட்டுவிட்டு மணலுக்குள் அரிசிபொறுக்குகிறது தமிழகம்.விளம்பரம் நீக்கி செய்தி,விளம்பரம் நீக்கி,சினிமா,விளம்பரம் நீக்கி விமர்சனம் தேடுவது மணலுள் அரிசி பொறுக்குகிற விளையாட்டாகிவிடும்.

ஆமாம் நண்பர்களே..

நாளெல்லாம் தொலைக்காட்சி பார்க்கிற சனங்களின் மண்டைக்குள் ஏற்றப்படுவது விளம்பரப் படங்களும்,பொருட்களின் ஆடம்பரமும் தான் என்பதை கூர்ந்து கவனித்தே ஆகவேண்டும்.அங்கிருந்து தப்பித்து வெளியேறும் கனவான்கள் பளபளக்கிற பல்பொருள் அங்காடிகளுக்குள்ளும்,சாமான்யர்கள் பச்சைக்கலர் டாஸ்மாக்குக்குள்ளும் தொலைந்து போவதுதான் இயல்பாகிப்போனது.

இப்படித்தொலைந்து போவது தெரிகிறபோதும்,மயங்கிக்கிடப்பது தெளிகிறபோதும்தான் துவரம்பருப்பு ஒருகிலோ 75 ரூபாய் என்பது சுள்ளென்று உறைக்கும்.தேசம் முழுக்க உறைத்ததால் தான் இந்த முழுஅடைப்பு கொஞ்சம் கலக்கத்தைக் கொடுத்திருக்கிறது.அதனால்தான் மாண்புமிகு முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள் முழு அடைப்பைப்பற்றி சொந்தத் தொலைக்காட்சியில்  அடிக்கடி விளக்கம் அளிக்கிறார்.ஒரு ரூபாய்க்கு அரிசி கொடுத்தது மிகப்பெரும் சாதனை என்பதை ஒத்துக்கொள்கிற அதே நேரத்தில்,அரிசி வெளியில் 45 ரூபாய்க்குமேல் விற்கப்படுவது வேதனை என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.இதைப் பரவலாகப் பேசுகிற ஊடகம் இல்லை,இதைப்பரவலாகப் பேசுகிற அரசியல் இல்லை.காரணம் ஜாதிகளின் எண்ணிக்கையோடு போட்டிபோடுகிறது கட்சிகளின் எண்ணிக்கை.எல்லாச் சாதிக்காரர்களுக்கும் எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் வயிறு ஒரே மாதிரித்தான் இருக்கிறதென்பதைகேட்கிற பொதுக் காதுகள் குறைந்துபோயிருக்கிறது.

இந்த முழு அடைப்பை வாக்குச் சீட்டாக மாற்றுகிற உத்திகளோடுதான் கட்சிகள் களம் இறங்கும். மருத்துவம் முடிந்தபிறகும் தீராத தலைவலி அது.தலையணைகள் மாற்றப்படுவதால் தலைவலி தீராது என்பதை சோல்லிக்கொடுக்கிற பாடம் இந்தியாவில் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.கட்சிபேதமில்லாமல் மக்கள் கவனம் விலைவாசியின் பக்கம் திரும்பியிருக்கிறது.இது ஒரு சரியான திருப்புமுனை.