கிட்டத்தட்ட பத்து நாட்கள் வலைப்பக்கம் வராமல் வனவாசம் போமாதிரி இருந்தது.நெட் துண்டிக்கப்பட்டு அதை மீளப்பெறுவதற்குள் வருடடத்தின் இறுதிநாளும் அடுத்த ஆண்டின் துவக்க நாளும் கடந்து போய்விட்டது.வலை நண்பர்கள் யாபேர்க்கும் முகமன் சொல்ல
இந்த நாளே கிடைத்திருக்கிறது.தாமதமானாலும் எல்லோர்க்கும் 2011க்கான என் வந்தனம்.
ஒவ்வொரு ஆண்டும் நான் என் தோழனோடே இருந்தது தவிர வேறெதுவும் நினைவில் வரவில்லை கடந்த இரண்டு ஆண்டுகள் அது தூரமாகிக்கொண்டு போகிறது.எனக்கு கல்யாணமான முதலாண்டு நான் அவள் வீட்டில் இருந்தேன். அந்த அடர்ந்த பனியில் புதுக் கனவு களோடு தூங்கிப்போயிருந்த்தேன்.அப்போது மணி பனிரெண்டைத் தாண்டி விட்டது. தேவாலயம் போய்விட்டு வந்த எனது மாமியார் வீடு தூங்க ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது அந்தக் குறுகிய தெருவில் சலசலப்புக் கேட்டது.அந்தத் தெருவுக்கு சம்பந்தமில்லாத மூன்று பேர் நெடு நெடுவென உள்ளே வந்தார்கள். தெரு அவர்களை ஊகிக்க முடியாமல் திணறியது.எங்கள் வீட்டுக்கதவைத்தட்டி எனை விசாரித்து எழுப்பச் சொல்லி வாந்ததும் ஆரத்தழுவிக்கொண்டு புத்தாண்டு வாழ்த்துச் சொன்னார்கள் பீகேயும்,மாதுவும்,பெருமாள்சாமியும்.
அப்படித்தான் அந்த1987 விடிந்தது.அந்தக்கதகப்பான புத்தாண்டு காலங்கடந்தும் நினைவில் நிலைக்கும். அந்தப்புத்தாண்டுப் பரிசை பொக்கிஷமாக்கி வைத்திருக்கிறேன்.
நினையாத நாளிலே தேவதூதனைப்போல வந்த அந்த மூன்றுபேரின் கைகளிலும் தங்கமும் வெள்ளைப்போழமும்,வாசனைத் திரவியமு
மாய் நட்பு இருந்தது. எல்லா புத்தாண்டும் மாதுவோடே பிறந்ததும்,அவனருகில் இல்லாத தருணங்களில் முதல் வாழ்த்தை அவனுக்கென அடைகாத்து வைத்திருந்ததும் சொல்லித் தீராத கணங்கள்.
தென்மேற்குப்பருவக்காற்று பார்க்க நேர்ந்தது.களவின் பெருமை சொல்லும் இன்னொரு படம் இது.வெகு நீளமாக சொல்லவேண்டிய ஒரு கதையை சிகப்புத்துண்டு போட்ட ஒரு பெரியவர் ரெண்டுவரியில் சொல்லிவிட்டுப்போகிறார்.கதைக்கென தனித்து நாயகனும் நாயகியும் இருந்தால்கூட அந்த இரண்டு பாத்திரங்களைச்சேர்த்து விழுங்கிக்கொண்டது சகோதரி சரண்யாதான்.அநியாயத்துக்கு அவரைக்கொன்று போடுவதை ஏற்கமுடியவில்லை. கதைகளிலும்சரி,நிஜத்திலும் சரி அவள் வாழவேண்டும்.
அதீத பிம்பங்களில் இருந்து விலகி இப்படி நிஜத்துக்கு அருகில் வரும் படங்கள் கலைப்படங்களாயிருந்தாலும் ரொம்ப ஸ்லோவாக ஓடினாலும் சரி அது ஒரு படைப்பாகும்.அல்லாதவை சரக்குகளே நல்லா மாசாலா ஏத்திப் போட்ட சரக்குகள்.இதற்குவக்காளத்து வாங்கிய
இயக்குநர்களை நீயா நானாவில் பார்க்க நேரிட்டது.ஆனால் அதற்கு இணையான கூட்டம் எதிரில் உட்கார்ந்திருந்ததும் காரமான நிஜத்தை
எடுத்து வழக்குறைத்ததும் நம்பிக்கையை கொடுக்கிறது.தோழர்கள் ராம்,வசந்த்,மிஸ்கின் ஆகியோரின் குரல்கள் முக்கியமானவை.