Showing posts with label மாட்டுக்கறி. Show all posts
Showing posts with label மாட்டுக்கறி. Show all posts

8.1.12

நக்கீரன் அலுவலகத்தில் எறியப்பட்ட கல்ஆயிரமாயிரம் ஆண்டு பழமையானது.

எதைச் செய்தியாக்குவது எதை இருட்டடிப்பு செய்வது என்பதில் ஒரு சாரார் இன்னும் காலம் கடந்த  விற்பன்னர் களாகவே இருக்கிறார்கள். செப் 11- 2011 ல் ஆறு தமிழர்கள் மன்னிக்கணும் ஆறு சக மனிதர்கள்  கொல்லப் பட்டார்கள். அப்போது தமிழகம் ஒரு கனத்த மௌனத்தோடு கடந்து போனது.இதே சமூக வலைத் தளத்தில் கூட அதைப்பற்றி பேசியவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய சில மனிதாபிகள் மட்டுமே. வாச்சாத்தி  வன்கொடுமை யின் தீர்ப்புகள் வெளியானபோது ஒரு கட்சிமட்டும் அதை செய்தியாக்கியது. அதனோடு  தொடர்புடை யவர்கள் அதுபற்றி எழுதினார்கள். அந்த தீர்ப்பு வெளியான கொஞ்சநாட்களுக்குள் விழுப்புரம் மாவட்ட  மலை மக்கள் அதே பானியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்கள்.

இவையாவும் தமிழகத்து மக்களின் மனிதாபிமானத்தை, இன உணர்வை, புரட்சிசெய்யும் வீரத்தை உசுப்பி விட முடிய வில்லை. தமிழகத்து செய்திக் கலாச்சாரத்துக்கு தீனி போட வும் முடியவில்லை. ஒரு மனிதர் மாட்டுக்கறி சாப்பிட்டார் என்று எழுதிய செய்தியால் தூங்கமுடியாத தமிழகம் கொதித்தெழுந்து வந்து பத்திரிகை அலுவலக த்தை சூறையாடுகிறது. ஆடிவிட்டுப் போகட்டும். ஆனால் என்று சும்மா இருக்க முடியாத  அறிவுத் தமிழகம் தினகரன் அலுவலகம் தாக்கப்பட்டது சரியா என்று எதிரும் புதிருமாக களத்தில் இறங்குகிறது.

இப்பொழுதல்ல இது வரலாற்று நெடுகிலும் கல்வெட்டுக்களால் எழுதப்பட்ட நமது வீரம். நாட்டில் பஞ்சம் பசி பட்டினி,கொலை கொள்ளை நடந்து கொண்டிருப்பதை அறியாத மன்னன் மனைவியின் கூந்தலில் மணம் எப்படி வந்தது என்று மோப்பம் பிடித்துக்கொண்டு அலைந்தான். அதை பட்டிமன்றப் பொருளாக்குவான். பொண்ணுபிறந்து கல்யாண வயதானால் மணம் முடித்து வைப்பதை விட்டுவிட்டு ஊரைக்கூட்டி போட்டிகள் நடாத்துவான்  புற நானூற்றுத் தமிழன். குடும்பம் நடத்த விளையாட்டும் வீரமும் தெரிந்திருந்தால் போதுமென்று நினைத்த அறிவுத் தமிழகம் அடித்துக்கொண்டு சாகும். உலகம் உருண்டை என்று கண்டுபிடித்துக்கொண்டு  விவாதித்துக் கொண் டிருக் கையில் இமயமலையில் கல்யாணக்கூட்டம்.கூட்டத்தின் சுமை தாங்காமல் தென்பகுதி தராசு போலத் தூக்கியது என்று சரடு விட்டுக் கொண்டலைந்தான். பரிணாமக் கண்டுபிடிப்புகள் தர்க்கமாகிக் கொண்டிருக் கையில் உயர்ந்த கடவுள் ஹரியா சிவனா என்று மயிர்பிளந்து மல்லுக்கட்டிக் கொண்டலைந்தான்.

இப்படித்தான் வெள்ளையன் வந்து அறுநூறு ஆண்டுகள் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த போதும் பொழுது போனது. ஒட்டுமொத்த இந்தியாவும் அடிமையாகிக் கிடப்பதை மறந்து அவனவன் மொழி பெரிதா,சாதி பெரிதா சடங்குகள் பெரிதா என்று சண்டையிட்டுக் கொண்டலைந்தார்கள். அப்போதும் டவாலிகளில் இருந்து  ஜில்லாக் கலெக்டர்கள் வரை. சிப்பாய்களில் இருந்து ராணுவ உயரதிகாரிகள் வரை அவனுக்குச் சேவகம்  செய்யப் போட்டி கள் போட்டுக்கொண்டோம். அதற்கு நால்வகை வர்ணக் கோட்பாட்டை துணைக்கழைத்துக்கொண்டோம்.

நான் ஆரியன் எனக்குமட்டும்தான் எல்லாம் தெரியும் எனவே நான் ஆட்சியதிகாரத்துக்கு துணைநிற்கிறேன் என்னைத்தவிர வேறெவனும் அறிவாளியில்லை. நான் வைசியன் எனக்குமட்டுமே வியாபாரம் செய்யத் துப்பிருக் கிறது உனது நாட்டு பொருட்களை என்னிடம் கொடு, நானுனக்கு விற்றுத்தருகிறேன்.நான் சத்திரியன் எனக்கு மட்டுமே சண்டைபோடத்தெரியும் என்னை மட்டும் சிப்பாயாகச் சேர்த்துக்கொள் உனக்காக நான் என்  இந்திய மக்களைக் கொன்று குவிப்பேன் என்று மீசை முறுக்கிக்கொண்டு அலைந்தது இந்தியா.

இதில் என்ன கொடுமை என்றால் அவன் கொண்டுவந்த துப்பாக்கி யாரைக்கொல்ல என்று தெரியாமல் அதன் தொழில் நுட்பத்தில் வியந்து மயங்கிக் கிடந்தான் தமிழன் உட்பட அணைத்து இந்தியனும்.அந்த துப்பாக்கியில் தடவும் கொழுப்பு எதிலிருந்து வந்தது என்று தெரியாமலே அறுநூறு வருடம் பிழைத்துச் செத்தான். இறுதியில் அதில் பன்றிக்கொழுப்பு தடவியிருக்கிறதென்று புரளி கிளப்பிய பிறகு ஒரு பிரிவினர் அடடா என்மதம் இழிவு படுத்தப்பட்டுவிட்டது என்றும். மாட்டுக் கொழுப்பு தடவி இருக்கிறதென்று சொன்ன பிறகு அடடா என் ஜாதி இழிவு படுத்தப்பட்டு விட்டது என இன்னொரு பிரிவும் கலகம் செய்ய ஆரம்பித்தது. சுதந்திரம் அடைந்த பிறகு அண்டை நாடுகளொடு சண்டைவேண்டாம் என்கிற பஞ்சசீலக்கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் உள்ளுக்குள் உள்ளுக்குள் நடக்கும் சாதிமதச்சண்டைகல் உரம்போட்டு வளர்க்கப்பட்டது.

வரலாறு திரும்புகிறது..

ஆம் இப்பொழுதும் கூட மாட்டுக்கறிப் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கிறது. தோழர் சிந்தன் தனது முகநூலில் மாட்டுக்கறி உண்பது ஒரு சமூகத்தின் உணவு முறை என்கிறார். அது பெரிய்ய தகவல் பிழை. இருக்கிற இந்தியப் புலால் உணவுகளில் அது மலிவானது. வரலாற்று வழியான தகவல்களின்படி அது கற்காலத்தோடு மிகத் தொண்மை யானது. கால்நடைகள் பண்டையக் காலத்தில் சாமி கும்பிடுவதற்காக மட்டும் வளர்க்கப்பட்டது என்கிற குறிப்பு எந்தவரலாற்று சுவட்டிலும் இல்லை.வெறும் பாலுக்காகவும் அது கூட்டம் கூட்டமாக  வளர்க்கப் படவில்லை.அப்போது கெலாக்சும்,ஓட்சுக்கஞ்சியும்,நூடுல்சும் அப்போது உணவுப்பழக்கத்தில் இல்லை.
ஆகையால் ஆடு மாடுகள் உணவுக்காகவும்  தோலுக்காகவும், மயிருக் காகவும் மட்டுமே வளர்க்கப்பட்டது. மிகமுந்திய காலத்து யாகங்களில் மாடுகள்தான் யாககுண்டங்களில் பலியிடப்பட்டுப் பின்  பரிமாறப்  பட்டிருக்கிறது என்பது நமது தேவைக்காக மறைக்கப்பட்ட வரலாறு. ஒரு சமுதாய மக்கள் மட்டும்தான்  இதைச் சாப்பிடு கிறார்கள் என்பது பெரும் தவறு. சேரிமக்கள் உழைப்பில் விளைகிற எல்லாம் சேரிமக்கள் மட்டும் உண்பதில்லை. அது போலவே சேரிகளில் வெட்டப்படும் மாடுகள் சேரிகளுக்குமட்டும் உணாவாவதில்லை.

இந்தியாவில் மட்டுமல்ல உலக கணக்கெடுப்புகளில் கூட மனிதர்களுக்கிணையான ஜீவராசிகளில் மாடுமட்டும் தான் பெரிய ஜனத் தொகை. அதுபோலவே உலக புலால் உணவில் எண்பது சதமானத்துக்குமேல் பீஃப்  எனப் படுகிற மாட்டுக்கறியே. மாடு சாப்பிடுவதால் மட்டுமே உயர்வு தாழ்வு உண்டாகிறது என்றால் உலகமக்கள் தொகை அணைத்தும் கீழ்சமுதாயம் என்றாகிவிடுமா ?. உணவு முறையால் மேல் கீழ் என்பது வேதாந்திக்கப் படுவது எப்படியோ அதுபோல ஒரு சமுதாயம் மட்டுமே சாப்பிடுகிறதென்பதும் தவறு. ஆயிரக் கணக்கான தானி யங்கள் அழிந்து வெறும் ஒற்றை நெல்லே உணவானதுபோலவே இந்தியாவில் பலதரப்பட்ட புலால் உணவு வகைகளின் உபயோகமும் குறைந்து கறிக்கோழிக்கு மாறி வருகிறது.

அரிசியும் கறிக்கோழியும் திண்ண வக்கில் லாத ஜனத் தொகையை நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. ஏனெனில் அவர்கள் யாரும் கணினி முகநூல் வைத்திருக்கவில்லை. இதுபோன்ற விவாதங் களில் முற்போக்கு சிந்தனையாளர்கள் கூட முகஞ் சுழித்துக்கொண்டு தன்னை ஆட்டுக்கறி மட்டும் தின்னும் மேட்டுக்குடியாக பாவித்துக்கொள்வது தவிர்க்க இயலாததாகிறது. மாட்டைப்போலவே ஆடும்,கோழியும்,பன்றியும் வளர்த்து பின் உணவுக்காக கொல்லப்படுகிறது என்பதை இந்திய அறிவாளிகள் லாவகமாக மறந்துபோகிறார்கள். இந்த மறதி அதை உண்கிற ஜனத்தொகை ஜாஸ்த்தி என்பதால் ஆதலாலே அவை ஒஸ்த்தி வகையாக உருமாற்றம் அடைகிறது. இன்னும் ஒரு காரணம் பெரும்பான்மையைக் கைவைத்தால் எதிர்ப்பு வேறுவகையாக இருக்கும் என்கிற பயத்தாலும் கூட இருக்கலாம்.

கடைந்தெடுத்த முதலாளித்துவ நாடுகளினாலும் சரி ,இன்னும் க்ரீடத்தையும் பழம்பெருமையையும் தூக்கிப் பிடிக்கும் மன்னராட்சி நாடுகளிலும் கூடக்காணமுடியாத மிகப்பிற்போக்குத் தனமானது சாதீய அடுக்குமுறை. அதை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கிற பெரும்பான்மை நிறைந்த இந்தியாவில் இன்னும் ஒரு கோடி ஆண்டுகள் தாண்டினாலும் அறிவியல் பூர்வமான மாற்றம் கனவிலும் நிகழாது. ஆண்டுக்கு நூறு சாதிச் சண்டைகள் வேண்டுமானல் கட்டாயம்  நிகழும். எனில் நக்கீரன் அலுவலகத்தில் வீசப்பட்ட கல் ஆயிரமாயிரம் ஆண்டு பழமையானது. அது, சூது வாது வன்மம் குடிகொண்ட சாதியத்தாலானது.